கனவுகள் 18

"இன்னும் ஒரு நாலு நாள்ல தேர்தல், ஆனா நீ எல்லாத்தையும் உதறி தள்ளிட்டு இங்கயிருந்து போறேன்னு சொல்லுற... என்ன விளையாடுறியா தஷ்வந்த்?" என்று ரகுவீர் நடு ஹாலில் கத்த, தஷ்வந்தோ இறுகிய முகமாக தரையை வெறித்தவாறு நின்றிருந்தான். ஆதிரனோ அங்கிருந்த சோஃபாவில் அலைப்பேசியை நோண்டியவாறு அமர்ந்திருக்க, மாடியிலிருந்து நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கௌரி "பதில் சொல்லு தஷ்வந்த்" என்று பெரியவர் கத்தியதும், "எனக்கு இங்க இருக்க பிடிக்கலப்பா, லண்டன்லயே செட்ல் ஆகலாம்னு யோசிக்கிறேன். என்னை மன்னிச்சிருங்க" என்று நிமிர்ந்தும் பார்க்காமல் பதில் சொன்னான் அவன். ரகுவீரோ உச்சகட்ட கோபத்தோடு தன் மகனை எரிப்பது போல் பார்த்தவர், "அப்போ நம்ம வீட்டுல இருக்கே அந்த பொண்ணு?" என்று கேட்க, எச்சிலை விழுங்கிக்கொண்டவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. "அது.. அது வந்து... அண்ணாதானே கூட்டிட்டு வந்தான், நான் ஒன்னும் அழைச்சுட்டு வரல்லையே!" என்ற அலட்சியமான அவனின் பதிலில், கிட்டத்தட்ட ரகுவீர் அடிப்பது போல் தன் கரத்தை ஓங்க, அப்போதும் மரம் போல் நின்றுக்கொண்டிருந்தான் தஷ்வந்த். ...