யாத்ரன் 03
அந்த வெள்ளை நிற கேப் ஊர் எல்லையைத் தாண்டி உள்ளே நுழைய, கார் ஜன்னல் வழியே வெளியே வெறித்திருந்த யாத்ரனுக்கு மனம் என்றும் இல்லாத ஒரு படபடப்போடு இருந்தது.
"இதுதான் நான் பொறந்து வளர்ந்த ஊரு யாத்ரா" என்ற வரதன், "டேய் ஒன்னு மட்டும் சொல்லிக்குறேன், இந்த இடமோ இந்த ஆளுங்களோ எல்லாமே உனக்கு புதுசு. அதனால டுபாய்க்கு திரும்ப போற வரைக்கும் இதோ இதை கொஞ்சம் மூடிட்டு இரு! அது போதும்..." என்று கெஞ்சாத குறையாக வாயைக் காட்ட, அலட்சியமாக தோளைக் குலுக்கினான் மற்றவன்.
நிஜமாகவே இந்த கிராமத்து வாசனையும் இந்த சூழலும் அவன் பார்த்திராத ஒன்று. ஏதோ அதிசயத்தைப் பார்ப்பது போல் அவன் விழிகள் மின்ன ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருக்க, சரியாக அவனுடைய அலைப்பேசி அலறியது.
திரையில் தெரிந்த தன் தாயின் எண்ணை புருவ முடிச்சுகளோடு பார்த்தவன், அலைப்பேசியை அணைத்துவிட்டு மீண்டும் வெளியே வெறிக்கத் தொடங்க, சுற்றியிருந்த ஊர் மக்களோ ஊருக்குள் புதிதாக நுழையும் வாகனத்தை ஆர்வத்தோடு பார்த்திருந்தனர்.
"யாரா இருக்கும்?"
"யாரோட கார் அது..?"
என்ற கேள்விகள் சுற்றி எழ, சரியாக அந்த கார் சென்று நின்றது என்னவோ ருக்மணியின் வீட்டு வாசலின் முன்தான்.
ருக்மணியின் அம்மா வனஜாவோ வாசலில் கேட்ட வாகனத்தின் சத்தத்தில், "அடியே ருக்மணி போய் யாருன்னு பாரு!" என்று குரல் கொடுக்க, காய்கறிகளை வெட்டிக்கொண்டிருந்தவளோ, "ஏதோ வயசான மாதிரி இருக்கு, தரையில உக்கார்ந்தா எழுந்திருக்கவே முடியல" என்று புலம்பிக்கொண்டே எழுந்து சென்று வெளியே பார்த்தாள்.
அடுத்தகணம் அவளுடைய விழிகள் விரிய, "அம்மா... அண்ணா வந்துட்டான்" என்று கத்திக்கொண்டே வரதனை நோக்கி ஓடிச் சென்று அவனை அணைத்துக்கொள்ள, நீண்ட நாட்கள் கழித்து சந்தித்த தன் தங்கையை அணைத்துக்கொண்டவனுக்கு கண்கள் கூட லேசாக கலங்கிவிட்டன.
தன் மகள் சொன்னதைக் கேட்ட வனஜாவுக்கு அந்த வார்த்தைகளை கிரகிக்கவே சில நிமிடங்கள் எடுத்தன.
அதை உணர்ந்து அவர் ஓடி வருவதற்குள் தாயின் அருகே நான்கே எட்டுகளில் ஓடி வந்தவன் அவரை அணைத்து அழுதேவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.
"வரதா... வரதா..." என்று பெரியவர் பிரிவின் வலியிலும் எதிர்பாராது இப்போது கண்டுகொண்ட சந்தோஷத்திலும் வாய்விட்டு அழ, நடப்பதை ஓரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்தான் யாத்ரன்.
இந்த இடம் மட்டுமல்ல இந்த அணைப்பும் பாசமும் அழுகையும் கூட அவனுக்கு புதிதுதான்.
தன் பெற்றோரின் விழிகளில் அவன் இத்தகைய அன்பை கண்டதே இல்லை. ஏனோ இந்த குடும்பத்தில் தானும் ஒருத்தராக இருந்திருக்கலாம் என்று கூட அவனுக்கு நினைக்கத் தோன்றியது.
"அம்மா இது யாத்ரன், என் ஃப்ரென்ட். இந்தியாவுக்கே அவன் புதுசு" என்றுவிட்டு ஆசிர்வாதம் வாங்க சொல்லி வரதன் சைகையில் சொல்ல, அவன் சொல்வது போல் செய்தவனின் தலையை வாஞ்சையோடு வருடினார் பெரியவர்.
இரு ஆடவர்களும் குளித்து உடை மாற்றி வருவதற்குள் கறியை வாங்கி சமைத்து தடல்புடலாக ஒரு விருந்தையே அவர் தயார்படுத்தி வைத்திருக்க, அதை உண்ட யாத்ரனுக்கு ஒருபக்கம் காரத்தை தாங்க முடியாமல் விழிகளிலிருந்து விழிநீர் ஓடினாலும் ருசிக்காக தட்டிலிருந்த மொத்தத்தையும் விடாமல் உண்டு முடித்தான்.
"தேங்க் யூ சோ மச், ஐ ஹேவ் நெவர் டேஸ்ட் லைக் திஸ் பிஃபார்" என்று தண்ணீர் க்ளாஸை நீட்டிய ருக்மணியிடம் அவன் சொல்ல, "அட இங்லீசு.." என்று வாயைப் பிளந்துக்கொண்டு அவனைப் பார்த்தவள், "டேய் அவ ஸ்கூலுக்கே போனதில்ல, அவகிட்ட போய்..." என்று கிண்டல் செய்த சகோதரனை மூக்கு விடைக்க முறைத்துப் பார்த்தாள்.
"அவர் உன்கிட்ட கேட்டாரா..." என்று அவள் ஒற்றைப் புருவத்தை தூக்கிய வண்ணம் கேட்க, "என்ன சொல்லுற, படிக்கலன்னா..." என்ற யாத்ரனின் வார்த்தைகள், "ருக்கு... ஃபர்ஸ்ட் நைட்ல..." என்று கத்தியவாறு உள்ளே ஓடி வந்த ஜான்சியைப் பார்த்ததும் அப்படியே நின்றன.
ஜான்சியோ தோழியின் வீட்டில் அந்த ஆடவர்களை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. விழி விரித்தபடி மூச்சு வாங்கியவாறு அவர்களை அவள் பார்த்தபடி சிலை போல் நிற்க, வனஜாவோ ருக்மணியை முட்டியால் தட்டி முறைத்து அவளை விழிகளால் காட்டினார்.
"ஜா.. ஜானு, அது வரதன் அண்ணாடீ உனக்கு தெரியும்ல, நாங்களே எதிர்பார்க்கல. திடீர்னு வந்திருக்காரு" என்ற ருக்மணி தோழியை இழுத்துக்கொண்டு வெளியே செல்ல, அவளை எட்டிப் பார்த்தான் யாத்ரன்.
"அடியே பாதகி, ஃபர்ஸ்ட் நைட்டுன்னு கத்தி என்னை எங்கொம்மாட்ட போட்டு கொடுத்துட்டியே! உன்ன..." என்று அவள் பற்களைக் கடிக்க, "இல்லடீ ருக்கு அது.. ஏதோ ஒரு ஆர்வத்துல உள்ள வந்துட்டேன். ஆமா... யார் அது?" என்று கேட்டாள் ஹஸ்கி குரலில்.
"அதான் சொன்னேனே வரதன் அண்..." என்று ருக்மணி முடிப்பதற்குள், "அது இல்லடீ, அவருக்கு பக்கத்துல நம்மள குறுகுறுன்னு பார்த்துட்டு இருந்தாரே!" என்று சொல்லிக்கொண்டே வீட்டினுள் பார்க்க அவனோ வரதனோடு பேசிக்கொண்டே மீண்டும் வாசல்புறம் பார்வையைத் திருப்பினான்.
உடனே, "அதோ அதோ.. அவரேதான்" என்று பதற்றமாக சொன்னவாறு அவள் தூணிற்கு பின்னே மறைந்துக்கொள்ள, "அவர் பேரு யாத்ரன், அண்ணாவோட ஃப்ரென்டு" என்ற ருக்மணி, வனஜாவின் கத்தலில், "நாம அப்பறமா பார்க்கலாம், ஆனா இன்னொரு விஷயம் இருக்கு. அவர் இப்போதிலிருந்து என் ஆளு" என்றுவிட்டு உள்ளே ஒரே ஓட்டமாக ஓடினாள்.
போகும் அவளை 'ஙே' என ஒரு மார்கமாகப் பார்த்துக்கொண்டு நின்றவள், "எனக்கு தேவையே இல்ல போடீ" என்று வாய்விட்டு முணுமுணுத்தவாறு தன் வீட்டை நோக்கி நடை கட்டினாள்.
அன்றிரவு, படுக்கையில் சாய்ந்திருந்த ஜான்சியின் பார்வையோ வழக்கம் போல் சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த கேலண்டர் மீதே பதிந்திருந்தது.
"என்ன பார்த்துட்டு இருக்க?" என்று மகளின் பக்கத்தில் படுத்திருந்த அர்ச்சனா புரியாமல் கேட்க, "அடுத்த பௌர்ணமி எப்போன்னு பார்க்குறேன்ம்மா" என்றவளின் குரலில் மறைந்திருந்த வலியை உணர்ந்துக்கொண்டார் பெரியவர்.
அவருக்குமே ஒரு தாயாக மனம் கனக்க, விழிகளிலிருந்து கசிந்த விழிநீரை துடைத்துக்கொண்டவர், "நான் ஒன்னு சொல்லட்டுமா ஜானு, சென்னையில உன் உறவுக்காரங்க நிறைய பேர் இருக்காங்க. என் மேலதான் அவங்களுக்கு கோபமே தவிர உன்ன ஏத்துப்பாங்க. அங்க போயிடுறியா, உன் அப்பாவையும் இந்த ஊர்காரங்களையும் நான் பார்த்துக்குறேன்" என்று ஆர்வத்தோடுக் கேட்க, "அம்மா..." என்று அதிர்ந்து விழித்தாள் ஜான்சி.
பெரியவர் சொல்ல வருவது அவளுக்கு நன்றாகவே புரிந்தது. ஆனால் மனம் ஏற்றால்தானே!
"எதுக்கும்மா நான் போகணும், இந்த ஊர் பஞ்சத்த தீர்க்க எனக்கு ஒரு வழி கிடைச்சிருக்கு. அப்படியாச்சும் நான் பிரயோஜனமா இருக்க போறேன்னு சந்தோஷமா இருக்கு. உங்களுக்கொன்னு தெரியுமா, எனக்கான பௌர்ணமி எப்போ வரும்னுதான் நான் ஆர்வமா இருக்கேன். நீங்க என்னடான்னா..."
என்ற அவளின் வார்த்தைகளில், அர்ச்சனாவுக்கு 'இவளை என்ன செய்தால் தகும்' என்றுதான் நினைக்கத் தோன்றியது.
அதேநேரம்,
"இளவரசிய காதலிக்கிறியா ஹாஹாஹா... இதெல்லா சாத்தியமா யாத்ரா?" என்று அந்த ஆடவனோ தன்னெதிரெ நின்றிருந்தவனை மேலிருந்து கீழ் நக்கலாகப் பார்த்தவாறு கேட்க, அவனுடைய இதழ்கள் புன்னகையில் விரிந்திருந்தன.
அங்குமிங்கும் சற்று கிழிந்த பழைய ஆடையில் மண்ணும் சுண்ணாம்பும் அவனுடலில் ஒட்டியிருக்க, விற்பனைக்கான குட்டி சிலைகளை கொண்ட கூடையை தலைமேல் வைத்துக்கொண்டு என இருப்பவன் இளவரசியை காதலிப்பதாக சொன்னால் யாருக்குதான் வேடிக்கையாக இருக்காது!
ஆனால் அந்த ஆண்மகனோ அதற்கெல்லாம் அசரவில்லை.
"இளவரசியோட ஒரு கடைக்கண் பார்வை போதும், அவங்க என்னை பதிலுக்கு காதலிக்கணும்னு அவசியமில்ல. இப்படியே அவங்கள பார்த்துக்கிட்டு நான் என் வாழ்நாள கழிச்சிருவேன்" என்றான் யாத்ரன் விழிகளில் ஒரு தீட்சத்தோடு.
சரியாக, "இளவரசி வருகிறார்... இளவரசி வருகிறார்..." என்றொரு குரல் கேட்க, தலை மேலிருந்த கூடையை ஓரமாக வைத்துட்டு ஏதோ அதிசயத்தை காணுவது போல் கால் பிடறியில் பட ஓடினான் அவன்.
அந்த சந்தையைத் தாண்டி காவலர்களோடு குதிரையில் செல்லும் இளவரசியின் முதுகு பக்கமே அவனுக்குத் தெரிய, அவள் முகம் காண வேகமாக ஓடிய யாத்ரன் சற்றும் எதிர்பாராதவனாய் கால் தடுக்கி மண்ணில் விழுந்தான்.
அவன் விழுந்த வேகத்தில் தலையில் பலமான அடி விழ, அந்த வலியில் கத்தியவன் இங்கு மொத்த கனவும் கலைந்தவனாய் மீண்டும் அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தான்.
அவனின் இதயத்துடிப்பு அவன் காதுகளுக்கே கேட்க, ஏனோ உண்மையாகவே தலையில் அடிபட்டது போல வலியை உணர்ந்தான் யாத்ரன்.
நெற்றியில் பூத்த வியர்வையை புறங்கையால் துடைத்துக்கொண்டவன், பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்த வரதனைப் பார்த்துவிட்டு அறை ஜன்னலருகே சென்று வெளியே வெறித்தான்.
அந்த நடுநிசி நேரத்தில் ஆட்களே இல்லாமல் அந்த கிராமமே வெறிச்சோடி போயிருக்க, சுற்றி பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு உள்ளுக்குள் எழுந்த கேள்விக்கு பதில் மட்டும் கிடைக்கவே இல்லை.
"யார் அந்த இளவரசி, ஏன்.. ஏன் அவளோட முகம் எனக்கு தெரிய மாட்டேங்குது? சம்திங் ஃபிஷி"
என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டவனுக்கு அந்த கிராமத்தில் அவனுடைய முதல்நாள் இரவு தூங்கா இரவாகித்தான் போனது.
அடுத்தநாள், முகத்தில் பட்ட நீர்துளியில் மெல்ல விழிகளைத் திறந்த வரதன் தன் முன்னே டிப்டாப்பாக தயாராகி நின்றுக்கொண்டிருக்கும் தோழனை புரியாத பார்வைப் பார்த்தான்.
"அடிக்குற வெயில்ல ஜாக்கெட் எதுக்குடா?" என்று தூக்கக் கலக்கத்தில் விழிகளை கசக்கியவாறு அவன் கேட்க, "காலையில ஊர் சுத்தி பார்க்க போகலாம்னு சொன்ன, இன்னும் கொஞ்ச நேரத்துல லன்ச்சே வந்துடும், எழுந்துருடா!" என்றான் யாத்ரன் கடுப்பாக.
"இன்னும் ஃபைவ் மினிட்ஸ்..." என்று பள்ளிக்கூட மாணவன் போல சொல்லிக்கொண்டே மீண்டும் உறங்கப் போன தோழனை புரட்டியெடுத்து குளியலறைக்குள் தள்ளினான் மற்றவன்.
எப்படியோ போராடி மதிய உணவிற்கு பிறகே யாத்ரனுக்கு ஊரை சுற்றிக் காண்பிப்பதற்காக வரதன் வெளியில் அழைத்துச் செல்ல, யாத்ரனோ தன் புது மாடல் ஐஃபோனால் அந்த ஊர் அழகு மொத்தத்தையும் படம் பிடித்துக்கொண்டான்.
அந்த ஊர் வழக்கத்திற்கு ஏற்றாற் போல சில பெண்கள் முக்காடு போட்டு கூட்டமாக செல்ல, "வாவ்! ரெண்டு கோட் மேக்கப் போட்டாதான் பொண்ணுங்க அழகுன்னு நினைச்சேன். ஆனா இங்க மேக்கப்பே இல்லாம ஏன்ஜல்ஸ் மாதிரி இருக்காங்களே!" என்று வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டே அவர்களை படம் பிடித்துக்கொண்டவன் அலைப்பேசியை ஒரு திசைக்குத் திருப்பினான்.
அடுத்தகணம் அவனுடைய விழிகள் பெரிதாக விரிய, அலைப்பேசி திரையிலிருந்து பார்வையை விலக்கி தலையை சரித்து தன்னெதிரே வந்துக்கொண்டிருந்தவளை பார்த்தான்.
தலையில் முண்டாசும் தோட்டத்தில் பறித்த காய்கறிகள் அடங்கிய கூடையோடும் நடந்து வந்துக்கொண்டிருந்த ஜான்சி, தன்னை நோக்கி படம்பிடிப்பது போல் அவன் அலைப்பேசியை பிடித்திருப்பதை விழிகளை சுருக்கிப் பார்த்தாள்.
யாத்ரனின் இதழ்கள் மெல்ல வளைய, உடனே சுதாகரித்து ஜான்சி முகத்தை மறைத்துக்கொள்ளவும் அவன் கேமராவை க்ளிக் செய்யவும் நேரம் சரியாக இருந்தது.
விழிகள் மட்டும் தெரிவது போல அந்த புகைப்படத்தில் இருக்க, "ஓ ஷீட்! இட்ஸ் நொட் க்ளியர்" என்று சலிப்பாக சொன்னவன் அவளைப் பார்த்து அலட்சியமாக தோளைக் குலுக்கிவிட்டு நகரப் போக, வேக நடைபோட்டு அவனெதிரே முறைத்தவாறு வந்து நின்றாள் ஜான்சி.
மூக்கு விடைக்க முறைத்து நின்றவளை அவன் புருவ முடிச்சுகளோடு கேள்வியாகப் பார்க்க, "அதை மொதல்ல அழிச்சிருங்க, இல்லன்னா..." என்று அவளோ மிரட்டுவது போல் ஒற்றை விரலை நீட்டிச் சொன்னாள்.
யாத்ரனோ திரையைப் பார்த்தவன், "இதுல உன் முகமே தெரியல, சோ ச்சில்!" என்று தான் எடுத்த புகைப்படத்தை அவளுக்குக் காட்ட, அதைப் பார்த்தவளுக்கு பக்கென்று இருந்தது.
"தெரியலன்னாலும் பரவாயில்ல அதை மொதல்ல அழிச்சிருங்க. இல்லன்னா பெரிய பிரச்சனையாகும். அதுமட்டுமில்லாம நீங்க அந்த பேஸ்.. ஆங் பேஸ்புக்ல போட்டீங்கன்னா அவ்வளவுதான்.. என்னைக்கோ சாக வேண்டிய என்னை என் அப்பா இப்போவே கொன்னு புதைச்சிருவாரு"
என்ற ஜான்சியின் படபட பேச்சில், யாத்ரனோ அவளை வாயடைத்துப் போய் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.
*******
படிச்சுட்டு மறக்காம உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க..
யாத்ரன் 04 >>>
https://agnitamilnovels.blogspot.com/2026/02/04.html
என்ட் என்னோட மூன்று ஆன்டி ஹீரோ கதைகளான
தஷுரி
ரதியின் ரணதீரன்
கனவுகள் கனலாய் மாறுமா
இந்த கதைகள Papr space Website appல April மாதம் வரைக்கும் ஃப்ரீயா படிக்கலாம்.. சோ மறக்காம ரீட் பண்ணிக்கோங்க..
Here's the link 👇
https://papr.space/sheha-zaki/696e0bb131a61076ffe69ad4
என்னோட கதைகள ஆடியோ நாவலா கேக்கணும்னா...
Channel name - kadhaikulla polaama
Channel link 👇
https://youtube.com/@kadhaikullapolaama7612?si=BwNNnPMl514OHY2Y

Comments
Post a Comment