யாத்ரன் 04
ஜான்சி படபடவென பொரிந்துக்கொண்டே போக, அவளை அதிர்ந்துப் போய் பார்த்து நின்றான் யாத்ரன்.
இதுவரை சோஷியல் மீடியாவில் அரைகுறை ஆடைகளோடு இல்லையென்றால் கிட்டத்தட்ட நிர்வாணமான நிலையில் புகைப்படங்களை பகிரும் பெண்களையே பார்த்து வளர்ந்தவனுக்கு இவளின் பதற்றம் புதிதாகத்தான் தெரிந்தது.
அதுவும் அவளுடைய விழிகள் மட்டுமே அந்த புகைப்படத்தில் தெரிய, யாத்ரனுக்கு ஆச்சரியத்தோடு லேசான சிரிப்பும் இதழில் எட்டிப் பார்த்தது.
"ஓகே வெயிட்! நா.. நான் டிலீட் பண்றேன்" என்று உடனே அந்த புகைப்படத்தை அழித்தவன், "டிலீட் பண்ணிட்டேன், யூ ரிலாக்ஸ்!" என்றுவிட்டு நகரப் போக, பெண்ணவளோ அவனை நம்பாத பார்வைப் பார்த்தாள்.
"ஊஃப்ப்..." என்று பெருமூச்சை இழுத்துவிட்டு, "உனக்கு சந்தேகம்னா நீயே செக் பண்ணிக்கோ!" என்று அவனிடம் அலைப்பேசியை நீட்ட, அதை வாங்கிக்கொண்ட ஜான்சியோ எதற்காக எடுத்தோம் என்பதையே மறந்து அந்த புதுமாடல் ஐஃபோனை திருப்பித் திருப்பி வருடிப் பார்த்தாள்.
"ரொம்ப அழகா இருக்கு" என்று விழிகள் மின்ன சொல்லிக்கொண்டே அவள் ஆச்சரியத்தோடு காதில் வைப்பதும் எடுப்பதுமாக அவனுடைய அலைப்பேசியை விளையாட்டுப் பொருளாக மாற்றிவிட, அதை புருவ முடிச்சுகளோடு பார்த்தவனுக்கு தன்னை மீறி அவளை ரசிக்கத் தான் தோன்றியது.
"என்ன இதுவரைக்கும் ஃபோனே பார்த்ததில்லயா நீ! காணாத ஒன்ன கண்ட மாதிரி ரியேக்ட் பண்ற" என்று யாத்ரன் கேலியாக சொல்லி சிரிக்க, அப்போதுதான் நடப்பை உணர்ந்து அதை அவனிடம் நீட்டினாள் ஜான்சி.
"நிஜமாவே நான் இந்த மாதிரியான ஃபோன டீவி விளம்பரத்துலதான் பார்த்திருக்கேன். ஒரு ரெண்டு தடவை ஊர்த்தலைவரோட பையன் கையில இருக்குறத தூரத்துலயிருந்து பார்த்திருக்கேன். தொட்டு பார்த்தது கூட இல்ல, என் அப்பாகிட்ட ஃபோன் இருக்கு.. ஆனா... அது சாதாரண பட்டன் ஃபோன். அதுல இருக்குற பாம்பு விளையாட்ட விளையாட கூட அவர் தர மாட்டாரு"
என்று சிறுபிள்ளை போல் உதட்டைப் பிதுக்கியவாறு சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து நகர, ஏனோ யாத்ரனுக்கு அவளின் முகத்தில் தெரிந்த ஏக்கத்தை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
"ஓய்..." என்று அழைத்தவன் அவள் உடனே திரும்பிப் பார்த்ததும், "நீ வேணா இதை வச்சுக்குறியா?" என்று தாராள பிரபு போல் கேட்க, விழி விரித்தவள் அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்.
"இப்போ நான் என்ன கேட்டேன்னு இப்படி ஓடுறா?" என்று வாய்விட்டு கேட்டவாறு அவள் போன திசையை யாத்ரன் பார்த்துக்கொண்டு நின்றிருக்க, "ஏன் இதோட நிறுத்திட்ட, உன் சொத்து பூரா எழுதி வைக்கலாமே!" என்றான் வரதன் முறைப்போடு.
"அட நீ இங்கதான் இருக்கியா? சும்மா அந்த பொண்ணு கூட விளையாடினேன் மச்சான் ஹிஹிஹி..." என அசடுவழிந்தவாறு தோழனை பார்த்தவன், "லுக் யாத்ரா, இது உன் ஊர் இல்ல. நீ சாதாரணமா பேசினாலே உன்னை பிடிச்சு அவளுக்கு கட்டி வச்சிடுவாங்க புரியுதா?" என்ற வரதனின் வார்த்தைகளில் திகைத்துப் போனான்.
"என்னடா சொல்ற! பேசினதுக்குலாம் பிடிச்சு கல்யாணம் பண்ணி வைப்பாங்களா? அப்படி பார்த்தா பல பொண்ணுங்களுக்கு நான் புருஷனா இருக்கணும் ஹாஹாஹா.. " என்று கேலியாக சொல்லி அவன் வாய்விட்டு சிரிக்க, 'இவன...' என்று பற்களைக் கடித்தான் மற்றவன்.
"நீ இந்த பழைய கிராமத்து படம்லாம் பார்த்தது இல்லயா, கைய பிடிச்சு இழுத்தாளே கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க அது மாதிரிதான் இங்கேயும். நீ நினைக்கிறத மாதிரி இல்ல யாத்ரா புரிஞ்சுக்கோ!" என்று எச்சரிக்கும் குரலில் வரதன் சொல்ல, யாத்ரனுக்கு அதிர்ச்சியோடு சேர்த்து ஆச்சரியமாகவும் இருந்தது.
"என்னடா இது, இந்த சென்ச்சரிலயும் இப்படி ஒரு ப்ளேஸா, அன்பிளீவபிள்!" என்று அவன் வாயைப் பிளக்காத குறையாக சொல்ல, "அதான் சொல்றேன். என்ட் இங்க நீ எதை பார்த்தாலும் உன் ஊர் போய் சேருற வரைக்கும் இந்த மூனையும் மூடிக்கிட்டு இரு!" என்று கண், காது மற்றும் வாயைக் காட்டி கிட்டத்த மிரட்டுவது போல் சொன்னான் மற்றவன்.
யாத்ரனுக்கு அதற்கான அர்த்தம் சுத்தமாகப் புரியவில்லை.
"ஏன்..." என்று கேட்டவனின் புருவங்கள் கேள்வியாக முடிச்சிட, "போக போக தெரியும்" என்ற வரதன் அங்கிருந்து நகர்ந்துச் சென்ற மறுநிமிடம் யாத்ரனின் எதிரே வந்து நின்றார் கணபதி.
"ஏம்ப்பா தம்பி, ஊருக்கு புதுசா என்ன!" என்று அவர் அவனின் ஆறடி உயர்த்திற்கு அண்ணாந்துப் பார்த்து கேட்டதும், "ம்ம்.." என்று மட்டும் சொன்னவன் அவரை கண்டுகொள்ளாதது போல் நகரப் போனான்.
அதில் கடுப்பான கணபதி, "ஏம்ப்பா கொஞ்சம் நில்லு, அதான் பேசிட்டு இருக்கேன்ல கண்டுக்காம போற" என்று சற்று குரலை உயர்த்தி பேசியவர், "இங்க பாருப்பா, நானும் உன்ன கவனிச்சிட்டு இருந்தேன் அந்த ஃபோன வச்சுக்கிட்டு சுத்தி சுத்தி படமா பிடிச்சிட்டு இருக்க. அதிகமா படம் பிடிக்கிறது எங்க ஊருக்கு நல்லதில்ல. ஊர்க்காரங்களோட ஆயுசு குறையும். இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்குறது இல்லயா அய்யோ அய்யோ! அத உள்ள வச்சுட்டு போய் உன் வேலைய பாரு" என்றுவிட்டு நகர்ந்தார்.
போகும் அவரை 'ஙே' என வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருந்த யாத்ரனுக்கு அவர் பேசியதை கிரகிக்கவே சில நிமிடங்கள் தேவைப்பட்டன.
அன்றைய நாள் கழிந்து அடுத்தநாளும் விடிந்தது.
குளியலறையில் நீர் நிரப்பப்பட்ட பக்கெட்டில் தன் முகத்தையே இமை சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் ஜான்சி
"பரவாயில்ல, நானும் பார்க்க அழகாதான் இருக்கேன்" என்று சிறு சிரிப்போடு சொன்னவளுக்கு யாத்ரனோடு பேசியதுதான் மீண்டும் மீண்டும் ஞாபகத்திற்கு வந்தது.
"பார்க்க அழகா இருக்காரு, எங்க ஊர் ஆம்பிளைங்கள விட நல்லவரா இருக்காரே!" என்று யோசித்தவள் பின்னரே தான் செய்யும் காரியத்தை உணர்ந்து, "ச்சே!" என்று தன் பின்னந்தலையில் அடித்துக்கொண்டாள்.
"இது மட்டும் ருக்குக்கு தெரிஞ்சது அவ்வளவுதான், வேணாம் ஜானு வீணா ஆசைய வளர்த்துக்காத. தண்ணில என் முகம் தெரியுற மாதிரிதான் என்னோட ஆசைகளும்" என தனக்குத்தானே கண்ணாடியைப் பார்த்து சொல்லிக்கொண்ட ஜான்சி அந்த நீரை அள்ளி தலையில் ஊற்ற, இங்கு வரதனின் வீட்டில்...
"அதெல்லா கனவுடா யாத்ரா, இதையெல்லா சீரியஸா எடுத்துக்கிட்டு..." என்று அலட்சியமாக சொன்னவாறு உணவுத்தட்டோடு வரதன் அமர்ந்திருக்க, "நோ வரதா, எனக்கு இது வெறும் ட்ரீமா தெரியல. தெயார் இஸ் சம்திங் பிஹைன்ட் தட்" என்றான் யாத்ரன் யோசனையோடு.
"என்னை மூடநம்பிக்கைன்னு கிண்டல் பண்ணிட்டு நீ தூக்கத்துல வந்த கனவ சீரியஸா எடுத்திருக்க. இதுக்குதான் சொல்வாங்க, வினை விதைத்தவன் வினை அறுப்பான்னு" என்று தீவிர முகபாவனையோடு சொன்னவன், "வினையா... நான் அப்படி எதையும் கட் பண்ணலயேடா. இஸ் தட் எனி வெஜிடபிள்" என்று பதிலுக்கு கேட்ட தோழனை 'வெட்டவா குத்தவா' எனும் தோரணையோடு ஒரு பார்வைப் பார்த்தான்.
"உன்கிட்டலாம் பழமொழி சொன்னேன் பாரு, எனக்கு தேவைதான்!" என்று நெற்றியில் அடித்துக்கொள்ளாத குறையாக வரதன் பொறுமிக்கொள்ள, ருக்மணியோ இருவருக்கும் உணவை பரிமாறினாள்.
யாத்ரனை சிறு வெட்கத்தோடு பார்த்தவள் அவனுக்கு மேலதிகமாக சப்பாத்தியையும் கறித் துண்டுகளையும் அவனுடைய தட்டில் வைக்க, அதைக் கவனித்த வரதனுக்கு அய்யோ என்றிருந்தது.
"மொத்தத்தையும் அவன் தட்டுலயே கொட்டுங்க மேடம், நான் இந்த தட்ட சாப்பிட்டுட்டு இருக்கேன்" என்று அவன் கடுப்பில் கத்த, தன் அண்ணனின் தட்டில் வேகமாக உணவை வைத்தவள், "வீட்டுக்கு வந்தவங்கள நாமதானே கவனிக்கணும்" என்றாள் போலி பொறுப்புணர்ச்சியோடு.
தங்கையை முறைத்துப் பார்த்தவன், "நானும் கெஸ்ட்டு மாதிரிதான் வீட்டுக்கு வந்திருக்கேன்" என வெடக்கென்று சொல்லிவிட்டு, 'பொய்யு பொய்யு வாய திறந்தாலே பொய்யு' என உள்ளுக்குள் முணங்கியவாறு சாப்பிட, ருக்மணியை நிமிர்ந்துப் பார்த்த யாத்ரனுக்கு அவளுடைய பார்வையில் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
சரியாக சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த வனஜா, "டேய் இன்னைக்கு ராத்திரி கோயில்ல பூஜை இருக்கு, சுத்தபத்தமா குளிச்சு தயாரா இரு, உன் ஃப்ரென்டுகிட்டயும் சொல்லிக்கோ" என்று குரல் கொடுக்க, "பூஜைன்னா என்னடா?" என்று சாப்பிட்டவாறுக் கேட்டான் யாத்ரன்.
"அது ரிச்சுவல்ஸ் மாதிரின்னு வச்சுக்கோயேன், இந்த ஊர்ல அடிக்கடி நடக்கும். இன்னைக்கு கொஞ்சம் ஸ்பெஷல். சுத்தியிருக்குற எல்லா ஊர் மக்களும் வருவாங்க. பார்க்க நல்லா இருக்கும். டான்ஸ்லாம் கூட ஆடுவாங்க" என்று மற்றவன் சொல்ல, "ஓஹோ..." என்றவனின் முகம் அப்போதும் கேள்வியை தத்தெடுத்திருந்தது.
"உங்களுக்கு எதுவுமே தெரியல, ஆனா கவலைப்படாதீங்க. நான் சொல்லி கொடுக்குறேன்" என்ற ருக்மணி யாத்ரனின் அருகே அமர்ந்து, "ராணி ஜோதிக்காக பண்ற பூஜைதான் இது. அந்த காலத்துல அவங்க நம்ம மக்களுக்கு நிறைய நல்லது பண்ணி இருக்காங்களாம். அப்போலாம் பொண்ணுங்க போருக்கு போகவே முடியாது. ஆனா ராணி ஜோதி தளபதிக்கு ஈடா எதிரிகள எதிர்த்து நின்னிருக்காங்க. எதிரிநாட்டு மன்னன் ராஜ்ஜியத்த கைப்பற்றினப்போ அவங்க உயிர விட்டதா சொல்றாங்க. அவங்களுக்காகதான் இந்த கொண்டாட்டம்" என்று பொறுமையாக விளக்கப்படுத்தினாள்.
"ஜோதி..." என்று அவனையும் மீறி அவன் மனம் அந்தப் பெயரை முணுமுணுக்க, என்னவென்று புரியாத ஒரு உணர்வு நொடிக்குள் அவனுடலில் ஊடுருவியது போலிருந்தது.
உணவை அளந்தவாறு யாத்ரன் அமர்ந்திருக்க, "பூஜைன்னாலே என்னன்னு தெரியாம இருக்க, உங்க வீட்டுல இதெல்லா பண்ண மாட்டாங்களா?" என்று சந்தேகமாகக் கேட்டார் வனஜா.
"பண்ண மாட்டாங்கம்மா, அவங்க க்ரிஸ்டியன். அதுமட்டுமில்லாம அவங்க வீட்டுல யாருக்குமே கடவுள் நம்பிக்கை அவ்வளவா இல்ல" என்று வரதன் சாதாரணமாக சொல்லிவிட்டு தன் வேலையைப் பார்க்க, யாத்ரனை ஒருவித அதிருப்தியோடு பார்த்தார் பெரியவர்.
அவன் வேறு மதம் என்று தெரிந்ததுமே ருக்மணி, 'க்கும்!' என்று நொடிந்துக்கொண்டவாறு எழுந்து சென்றுவிட, இருவரின் மாற்றத்தை வரதன் கவனித்தானோ இல்லையோ யாத்ரன் கண்டுகொண்டான்.
ஆனால் அவன் அமைதியாக கடந்துவிட, நேரம் வேகமாக ஓடி சூரியன் அஸ்தமிக்கும் நேரமும் வந்துவிட்டது.
பூஜைக்காக மொத்த ஊர் மக்களும் தயாராகி கோயிலை நோக்கிச் செல்ல, வனஜாவின் வீட்டில் வாசற்கதவை பிடித்துக்கொண்டு பாவம் போல் நின்றிருந்தனர் வரதனும் யாத்ரனும்.
"அந்த பல்லி எப்போ சிக்னல் கொடுத்து நாம எப்போ கெளம்புறது" என்று வரதன் இயலாமையோடுக் கேட்க, அவனுடைய பேச்சையெல்லாம் கண்டுகொள்ளாது சுவற்றிலிருந்த பல்லியை பக்தியோடு பார்த்துக்கொண்டிருந்தனர் வனஜாவும் ருக்மணியும்.
"சீக்கிரம் உன் உத்தரவ கொடு கடவுளே!" என்று அவர் கெஞ்சாத குறையாகக் கேட்க, யாத்ரனுக்கு நடக்கும் கூத்துகளைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.
"உன் மொத்த ஊரையும் கொண்டு போய் மியூசம்லதான்டா வைக்கணும்" என்று அவன் சிரிப்பை அடக்கிக்கொண்டு சொல்லிவிட்டு அவன் பாட்டிற்கு வெளியேறிச் செல்ல, யாத்ரனை வனஜா முறைத்துப் பார்க்க, சரியாக அந்த பல்லியும் சிக்னல் கொடுத்தது.
"கடவுள் உத்தரவு கிடைச்சிருச்சு, வாங்க வாங்க சீக்கிரம் போகலாம்" என்று வனஜா மகளை இழுத்துக்கொண்டு கோயிலை நோக்கி முன்னே ஓட, யாத்ரனோ ஊர் அலங்காரங்களையும் அந்த மக்களின் கலாச்சார ஆடையையும் ஆச்சரியமாகப் பார்த்த வண்ணம் கோயில் இருக்கும் பகுதிக்கு நடந்து சென்றான்.
பல கிராமங்களை சேர்ந்த மக்கள் அங்கு கூடியிருக்க, கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் கூட்டம் அலை மோதியது.
கோயிலுக்குள்ளே இருந்த பெரிய கடவுள் சிலைகளையும் நடுவில் அமைத்திருந்த பெரிய ஹோமகுண்டத்தையும் பார்த்தவன், "வாவ்!" என்றுக்கொண்டே அதை படம்பிடிக்கப் போக, உடனே அதை தடுத்தான் வரதன்.
"வேணாம் யாத்ரா, யாராச்சும் பார்த்தாங்கன்னா அவ்வளவுதான்" என்று அவன் பதற்றமாக சொல்லிக்கொண்டிருக்கும் போதே, "அண்ணா அம்மா உங்களதான் தேடிட்டு இருக்காங்க. சீக்கிரம் போங்க" என்று ஓடி வந்து மூச்சிறைக்க சொன்னாள் ருக்மணி.
வரதனும் யாத்ரனும் அங்கு செல்ல, "ரெண்டு பேரும் எங்க போயிட்டீங்க? தேவிய நினைச்சு பிரார்த்தனை பண்ணிட்டு இங்கேயே நின்னுக்கோங்க. அப்போதான் நடக்குற சடங்கையெல்லா தெளிவா பார்க்க மூடியும். தம்பி உனக்கும்தான்" என்றுவிட்டு தன் குடும்பப் பெண்களின் பட்டாளத்தோடு இணைந்துக்கொண்டார் பெரியவர்.
அடுத்த கொஞ்ச நேரத்திலேயே சடங்குகளும் ஆரம்பிக்கப்பட்டன
********
படிச்சுட்டு மறக்காம உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க..
யாவும் நின் யாத்ரனாய்..
Episode 05 >>>
https://agnitamilnovels.blogspot.com/2026/02/05.html
என்ட் என்னோட மூன்று ஆன்டி ஹீரோ கதைகளான
தஷுரி
ரதியின் ரணதீரன்
கனவுகள் கனலாய் மாறுமா
இந்த கதைகள Papr space Website appல April மாதம் வரைக்கும் ஃப்ரீயா படிக்கலாம்.. சோ மறக்காம ரீட் பண்ணிக்கோங்க..
Here's the link 👇
https://papr.space/sheha-zaki/696e0bb131a61076ffe69ad4
என்னோட கதைகள ஆடியோ நாவலா கேக்கணும்னா...
Channel name - kadhaikulla polaama
Channel link 👇
https://youtube.com/@kadhaikullapolaama7612?si=BwNNnPMl514OHY2Y

Comments
Post a Comment