யாத்ரன் 07

யாவும் நின் யாத்ரனாய்.. 

EPISODE 07
 



தன்னெதிரே நின்றிருந்தவனைப் பார்த்ததும் முதலில் அதிர்ந்த யாத்ரன் பின் கோபத்தைக் கக்க, அவனுக்கு குறையாத கோபத்தோடு நின்றிருந்தான் வரதன்.


"வரதா நீ..." என்று அவன் ஏதோ சொல்ல வர, "எதுவும் பேசாத, மொதல்ல வீட்டுக்கு போகலாம்" என்று குறுக்கிட்டு ஒவ்வொரு வார்த்தைகளாக அழுத்தி சொன்னவன் வந்த வழியே யார் கண்ணிலும் சிக்காமல் வீட்டிற்கு சென்றான்.


உள்ளே நுழைந்து கதவைக் கூட தாளிடவில்லை, அதற்குள் தாம்தூம்மென்று கத்த ஆரம்பித்துவிட்டான் யாத்ரன்.


"என்ன நடக்குது இங்க, உனக்கு.. உனக்கு எல்லா தெரிஞ்சிருக்கு ரைட்! ஆனா நீ எதுவுமே தெரியாத மாதிரி என்கிட்ட நடிச்சிருக்க. அந்த பொண்ண.. அந்த பொண்ண கொன்னுட்டாங்க. மொத்த ஊரும் சேர்ந்து கொன்னுட்டாங்க. வை... ஹவ் கென் யூ டூ தட்? இதை நான் விடப் போறதில்ல, இப்போவே போலீஸ்க்கு போய்..." 


என்று படபடவென பொரிந்துவிட்டு வாசலை நோக்கிச் சென்றவனின் கால்கள் வரதனின் அலட்சியமான பார்வையில் சட்டென நின்றன.


வரதனோ உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகமாக தோழனைப் பார்த்தவன், "போ.. தாரளமா போய் சொல்லு.. உன்ன எல்லா கண்டுக்கவே மாட்டாங்க. யூ நோ வாட் யாத்ரா, அந்த பூசாரி ஒருத்தரோட பையன்தான் இந்த ஊரு போலீஸ் ஸ்டேஷன்ல எஸ்.ஐ ஆ இருக்கான். போய் சொல்லு.." என்று சொல்ல, யாத்ரனின் அதிர்ச்சி எல்லாம் ஒருசில கணங்கள்தான்.


"ஓஹோ... அப்போ எல்லாரும் கூட்டுக்களவாணியா! இதை அவ்வளவு சீக்கிரம் நான் விட்டுர மாட்டேன். ச்சீ.. ஊராடா இது, கொலைகாரங்க" என்று யாத்ரன் ஆத்திரத்தில் வெடிக்க, இருபக்கமும் சலிப்பாக தலையாட்டினான் மற்றவன்.


"யாத்ரா, இதெல்லா உனக்கு புரியாது. ரொம்ப வருஷமா இந்த ஊர் பஞ்சத்துல இருக்கு. மூனு கன்னி பொண்ணுங்கள பழி கொடுத்தா பஞ்சம் தீரும்னு பூசாரி சொல்லியிருக்காரு. அவர் வாக்கு பழிக்காம இருந்ததில்ல. இப்போ பழி கொடுத்தாங்களே, அந்த பொண்ணே இதை விரும்பி ஏத்துக்கிட்டுதான் பண்ணியிருக்கா. உன்னால இதையெல்லா புரிஞ்சுக்க முடியாது. இதனாலதான் உன்ன இங்க வர வேணாம்னு சொன்னேன். ப்ளீஸ் யாத்ரா, நீ என்னோட ஃப்ரென்ட், இந்த ஊர் மக்களால உனக்கு எதுவும் நடக்க கூடாது. டுபாய் போய் சேருற வரைக்கும் அமைதியா இரு" 


என்று இறுதி வசனத்தை குரலை உயர்த்தி அழுத்திச் சொல்ல, அவன் பேசியதை உள்வாங்கிக்கொண்டவனோ 'இப்படியும் ஒரு ஊரா?' என்று ஆச்சரியத்தில் வியக்காமல் இல்லை.


ஆனால், மூடநம்பிக்கைக்காக வாழ வேண்டிய உயிர்களை கொல்லும் இந்த கிராம மக்கள் மீது எக்குத்தப்பாக கோபம் எகிறியிருக்க, அதை கட்டுப்படுத்த முடியாமல் சுவற்றில் ஓங்கிக் குத்தினான் யாத்ரன்.


சரியாக வீட்டிற்குள் நுழைந்த ருக்மணியும் வனஜாவும் யாத்ரனை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. 


சொந்த வீட்டிலேயே நுழைய முடியாமல் வாசலிலேயே விக்கித்துப் போய் அவர்கள் நிற்க, அவனோ இருவரையும் எரிப்பது போல் பார்த்து வைத்தான்.


"என்.. என்னாச்சு தம்பி, இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டீங்க"  வனஜாவின் வார்த்தைகள் தந்தியடிக்க, ருக்மணியோ தாயின் பின்னே ஒளிந்துக்கொண்டாள்.


"அம்மா, ருக்மணிய கூட்டிட்டு உள்ள போங்க, யாத்ரனுக்கு நான் புரிய வைக்கிறேன்" என்று வரதன் தீவிரமான குரலில் சொல்ல, விட்டால் போதுமென்று தங்களுடைய அறைக்குள் நுழைந்து கதவை சாற்றிக்கொண்டனர் இரு பெண்களும்.


"இந்த ஊர்ல நடக்குற எதுலயும் அனாவசியமா தலையிடாத! அதோட விளைவு உன்ன மட்டுமில்ல யாத்ரா உனக்கு தங்க இடம் கொடுத்த என்னையும் என் வீட்டாளுங்களையும் பாதிக்கும். புரியும்னு நினைக்கிறேன்" 


தான் பேச வேண்டியதை கறாராக சொல்லிவிட்டு அவன் அறைக்குள் நுழைந்துக்கொள்ள, கைகளைக் கோர்த்து முட்டியில் ஊன்றி சோஃபாவில் அமர்ந்திருந்த யாத்ரனுக்கு அன்றைய இரவு தூங்கா இரவாகித்தான் போனது.


அடுத்தநாள் காலை விடிந்ததும், யாத்ரனை தவிர மற்ற மூவரும் எதுவுமே நடவாதது போல் சாதாரணமாக தத்தமது வேலையில் மூழ்கியிருக்க, நேற்றிரவு பார்த்த காட்சியிலிருந்து மீள முடியாமல் தவித்தது என்னவோ இவன்தான்.


'கொலைகார பாவிகளா! எதுவுமே தெரியாத மாதிரி இருக்குதுங்க. ச்சே!' என்று முணுமுணுத்தவாறு அமர்ந்திருந்தவன், "ருக்மணி..." என்று சற்று குரலை உயர்த்தி அழைத்தான்.


மாவு பிசைந்துக்கொண்டிருந்தவளோ அவனின் கர்ஜிக்கும் குரலில் சட்டென நிமிர்ந்துப் பார்க்க, "இது உங்க ஊரோட எத்தனையாவது கொலை?" எனக் கேட்டான் வெடுக்கென்று.


"கொலையா...?' என்று திகைத்துப் போய் கேட்டவளுக்கு வார்த்தைகள் சிக்குண்டு நிற்க, "தம்பி கொலை கிலன்னு தப்பா பேசாதீங்க, இது ஒரு பரிகாரம். வெளிநாட்டுல வளர்ந்த புள்ள, உங்களுக்கு சொன்னா புரியாது" என்று அவனுக்கு ஈடாக சற்று குரலை உயர்த்திச் சொன்னார் வனஜா.


"ஒரு பலகாரத்துக்காக கொலை பண்ணுவீங்களா" என்று பதிலுக்கு இவன் கத்த, "அது பரிகாரம் வெண்ண, அதையே சொல்ல தெரியல. புரட்சி பண்ண போறாராம்" என்றுக்கொண்டே குளியலறையிலிருந்து தலையைத் துவட்டியவாறு வெளியே வந்தான் வரதன்.


ருக்மணியோ தப்பினேன் பிழைத்தேன் என வீட்டிற்கு பின்னாலிருக்கும் கொள்ளை புறத்துக்கு ஓடி ஒளிந்திருக்க, அந்த வீட்டில் சாப்பிடக் கூட மனமில்லாமல் வெளியேறினான் யாத்ரன்.


அதேநேரம் ஜான்சியின் வீட்டில், 


அன்று யாத்ரன் அணைத்ததை நினைத்துப் பார்த்தவாறு காய்கறிகளை வெட்டிக்கொண்டிருந்தாள் ஜான்சி. 


ஏனோ அன்று நடந்ததை இப்போது நினைக்கும் போதே அவளுடல் சிலிர்த்தடங்க, அவளையும் மீறி ஒரு சிறு புன்னகை அவளிதழில் கீற்றாகத் தோன்றியது.


'படத்துல வர்ற ஹீரோ கணக்கா இருக்காரு, நல்ல படிச்சிருக்காரு தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்லீசு பேசுறாரு. வெளிநாட்டுலயே பொறந்து வளர்ந்தவரு. அவரு.. அவரு என்னை பயந்து போய் கட்டிபுடிச்சாரு. அய்யோ... நினைக்கும் போதே நல்லா இருக்கே' 


என தனக்குள்ளேயே குதூகலமாய் பேசிக்கொண்டு அவள் கனவில் மிதக்க, முதுகில் ஓங்கி உதைத்தார் சுபாஷ்.


"ஆஆ.. அம்மா..." என்று நெளிந்தவாறு பெண்ணவள் வலியில் கத்த, "ஏன்டீ, வேலைய பார்க்காம என்னடீ பகல் கனவு கண்டுக்கிட்டு இருக்க, வேலைய பாருடீ பொட்டக் கழுதை" என்று பேய் போல் கத்தினார் அவர்.


அர்ச்சனாவோ வழக்கமாக நடப்பதுதான் என்பது போல கண்டுகொள்ளாமல் சமையலில் மூழ்கியிருக்க, கண்ணீரைத் துடைத்துவிட்டு சிறு குழந்தைப் போல் விம்மியவாறு மீண்டும் விட்ட வேலையைத் தொடர்ந்தாள் ஜான்சி. 


அன்று மாலை, பார்த்த காட்சியின் தாக்கத்தை குறைக்க முயற்சித்தவாறு யாத்ரன் ஊருக்குள் சுற்றித் திரிந்துக்கொண்டிருக்க, சரியாக அரச மரத்தடிக்கு கீழ் தன் ஆட்களோடு ஊர்க்கதை பேசிக்கொண்டிருந்த கணபதியோ அவனை கண்டுகொண்டார்.


உடனே எழுந்து, "தம்பி..." என்று வெத்தலையை சப்பிக்கொண்டே அவனெதிரே சென்று நின்றவர், "என்ன தம்பி, ஊரெல்லா சுத்தி பார்த்தீங்களா, எப்படி இருக்கு எங்க ஊரு?" என்று கேட்டு இழித்து வைக்க, அவனுக்கோ அது மேலும் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல்தான் இருந்தது.


நாக்கு நுனி வரை வந்த கெட்ட வார்த்தைகளை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டவன், அவரை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல, பெரியவருக்கு அவன் பார்வைக்கான அர்த்தம் சுத்தமாகப் புரியவில்லை.


"பெரிய மனுஷன்னு பார்க்குறேன், இல்லன்னா... ச்சே! இதுவே டுபாயா இருந்திருந்தா இவனுங்க இப்படியெல்லா யோசிக்க கூட பயப்படுவானுங்க"


வாய்விட்டு முணுமுணுத்தவாறு சென்றுக்கொண்டிருந்தவனின் பார்வை எதேர்ச்சையாக தூரத்தில் வந்துக்கொண்டிருந்த ருக்மணி மற்றும் ஜான்சியின் மீது பதிந்தது.


"அட என்ன சொல்ற, அந்த சீரியல்ல ஹீரோ அந்த பொண்ணுக்கு முத்தம் கொடுத்தாரா, அப்போ இந்நேரத்துக்கு..." என்று  ஜான்சி யோசனையோடு இழுக்க, "அய்யோ ஜானு, உனக்கு ஒன்னுமே தெரியலடீ. சீரியல்ல உண்மையா முத்தம் கொடுத்துக்க மாட்டாங்க. அதுவும் அவர் கன்னத்துலதானே கொடுத்தாரு. அதனால ஒன்னும் ஆகாதுடீ" என்று தீவிர முகபாவனையோடு சொன்னாள் மற்றவள்.


சட்டென "ஹ்ர்ம் ஹ்ர்ம்..." என்ற செருமல் சத்தம் கேட்க, பேச்சை நிறுத்திவிட்டு வேகமாக திரும்பிப் பார்த்தனர் இரு பெண்களும்.


அவனைப் பார்த்ததும் ருக்மணிக்கு தூக்கி வாரிப்போட, ஜான்சியோ அவளுக்கு அவள் பிரச்சனை என்பது போல உடனே சுற்றிமுற்றி பார்த்தாள்.


"அப்பாடா யாரும் இல்ல, இல்லன்னா அவ்வளவுதான்" என்று அவள் நிம்மதி பெருமூச்சு விட, "இல்லன்னா என்ன?" என்று முகத்திற்கு அடித்தாற் போல கத்தினான் யாத்ரன்.


அந்த குரலும் அவன் கேட்ட விதத்திலும் ஏதோ தவறாக இருப்பது போல் ஜான்சிக்கு தோன்ற, அவளுடைய புருவங்கள் கேள்வியாக முடிச்சிட்டன.


"அது... அது வந்து.. தப்பா பேசுவாங்களே அத.. அதை சொன்னேன்" அவனின் அவளுடைய வார்த்தைகள் தந்தியடித்தன.


ஆனால் அடுத்தகணம் அவள் சற்றும் எதிர்பார்க்காதது போல அவள் முழங்கையைப் பற்றி தன்னருகே இழுத்தான் அவன்.


கிட்டத்தட்ட நூலிடைவெளியில் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு அவனோடு நெருங்கி நின்றிருந்தாள் ஜான்சி. 


இதற்கே அவளுக்கு மயக்கம் வருவது போலிருக்க, அடுத்த அவன் பேசிய பேச்சில் அவளுக்கு மூச்சே ஒருகணம் நின்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.


"பண்ண கொலைய விடவா இது பெரிய தப்பு?" ஒவ்வொரு வார்த்தைகளாக அழுத்தி அவன் கேட்ட விதத்தில், "என்ன... கொலையா?" என்று மிரண்டுவிட்டாள் அந்த பேதை.


"தயவு செஞ்சு அவள விட்டுருங்க, இதை பெருசு பண்ண வேணாம். அதான் அண்ணாவே சொன்னாருல்ல.. " என்று தோழயின் மற்ற கரத்தைப் பற்றி பதற்றமாக பேசிச் சென்ற ருக்மணியின் இதழ்கள் யாத்ரன் பார்த்த பார்வையில் கப்சிப்பென்று மூடிக்கொள்ள, கரங்கள் தானாக விலகிக்கொண்டன.


"அந்த இடத்துல நீயும் இருந்த ஜான்சி. இந்த கொலையில உனக்கும் சம்மந்தம் இருக்கு" அழுத்திச் சொன்னவன் அவளை உதறித்தள்ள, அவன் அழுத்திப் பிடித்திருந்த இடத்தில் உண்டான வலியை தேய்த்து விட்டுக்கொண்டவாறு, "நீ.. நீங்க நேத்து நடந்த சடங்க பார்த்தீங்களா?" என்று கேட்டாள் திக்கித்திணறி.


"ஜானு, அது நம்ம பரிகாரம்னு சொன்னா கேக்க மாட்டேங்குறாரு. கொலை அது இதுன்னு ஏதேதோ பேசுறாரு. மொதல்ல வா, நாம இங்கயிருந்து போகலாம்" 


என்று ருக்மணி தோழியை அழைத்துக்கொண்டு செல்லப் போக, யாத்ரனுடைய இதழ்களோ ஏளனமாக வளைந்தன.


"பேருதான் ஜான்சி.. ஆனா இதை போய் நம்பிக்கிட்டு ச்சே! நீ எவ்வளவு பெரிய முட்டாளா இருக்கேன்னு புரியலயா உனக்கு? பட்டிக்காடு" என்று அவன் அடித்தொண்டையிலிருந்து உறும, தோழியின் கரத்தை விட்டவள் அவனை முறைத்துப் பார்த்தாள்.


"நான் படிக்காத பட்டிக்காடாவே இருக்கேன். இது எங்களோட கடவுள் நம்பிக்கை, இதை பத்தி உங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது" என வராத தைரியத்தை வரவழைத்து ஜான்சி பதிலுக்கு பேச, யாத்ரனோ அடிப்பது போல் கரத்தை ஓங்கிக்கொண்டு ஒரு அடி முன்னே வைத்தான்.


அதில் இரு பெண்களுக்கும் ஒருகணம் பக்கென்று இருந்தது.


"அது கடவுள் நம்பிக்கை இல்ல, மூட நம்பிக்கை" என்று அடக்கப்பட்ட கோபத்தோடு சொன்னவன், "அதானே உன்ன பழி கொடுக்குறேன்னு சொல்லியிருந்தா அதோட வலி புரிஞ்சிருக்கும், ஏதோ ஒரு பொண்ணுதானே! அப்போ பரிகாரமாதான் தெரியும்" என்று ஏளனக் குரலில் சொல்ல, ருக்மணியோ தன் தோழியை பரிதாபமாகப் பார்த்தாள்.


ஆனால், அவனுடைய வார்த்தைகளைக் கேட்ட ஜான்சியின் முகமும் உடலும் இறுகிப் போனது.


விழிகளில் தீர்க்கத்தோடு அவனைப் பார்த்தவள், "அந்த வலி எனக்கு நல்லாவே தெரியும்" என்று குரல் தழுதழுக்க சொல்லிவிட்டு திரும்பியும் பார்க்காது சென்றுவிட, போகும் அவளை விழிகளில் கேள்வியைத் தாங்கிய வண்ணம் பார்த்துக்கொண்டிருந்தான் யாத்ரன்.


அவள் சொல்லிவிட்டு சென்றதற்கான அர்த்தம் அவனுக்கு கொஞ்சமும் புரியவில்லை. 


ஆனால்,


"அடுத்த பௌர்ணமில பழி கொடுக்க போறதே ஜான்சியதான். எங்களோட நம்பிக்கைய பத்தி உங்களுக்கு புரியாது" 


என்ற ருக்மணியின் வார்த்தைகளை உள்வாங்கிக் கொள்ளவே அவனுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட, மூளை உணர்ந்த மறுகணம் ஸ்தம்பித்துப் போய்விட்டான் அவன்.


**********

யாவும் நின் யாத்ரனாய்.. EPISODE 08 >>>

https://agnitamilnovels.blogspot.com/2026/03/08.html


என்னோட பத்தாவது நாவல் தொலைந்தேன் தெளிந்தேன் கதை இங்க நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும்.. மே பீ தெரியாமலும் இருக்கலாம்.. 


அந்த கதை இப்போ 'ராகம் தேடும் ரதியவளோ..' அப்படிங்குற பேருல புத்தகமாக வெளிவந்திருக்கு 😃😃😃


பிரபல பாடகன் ரிஷிதேவ் ரௌடி பொண்ணு சாணக்கியா இப்போ புத்தக வடிவில்.. ❤ முக்கோண காதல் கதை.. அவனோட பிடிவாதமான காதல் சாணக்கியாவ எப்படியெல்லா பாடா படுத்துதுன்னு கதைய வாசிச்சு தெரிஞ்சுக்கோங்க... 😄


புத்தகம் வாங்க தொடர்புகொள்ள வேண்டிய எண் 👉 9952076258 / 7200308492

Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚