அதிரூபன் 09

 



அலிஷா ஆஃபீஸிலிருந்து வெளியே வர, வழக்கம் போல் அவள் எதிரே வந்து நின்றான் ரோஷன்.


"ஹாய் பேபி" என்றுக் கொண்டே அவன் சட்டென வந்து நின்றதும், அதிர்ந்துப் பார்த்தவள் ஒரு பெருமூச்சை விட்டு கண்டுகொள்ளாதது போல் நகரப் போக, அவனோ அவளுடனே சேர்ந்து நடந்தவாறு பேசத் தொடங்கினான்.


"இப்போ உனக்கு என்ன பிரச்சனை?" என்று அலிஷா எரிச்சலாகக் கேட்க, "நீதான் பேபி பிரச்சனை, எனக்கு ஓகே சொல்ல மாட்டேங்குறியே அதான்..." என்று அவன் சொல்ல, அவனை முறைத்துப் பார்த்தாள் அவள்.


"நான் ஏற்கனவே டென்ஷனா இருக்கேன், நீ அதுக்கு மேல என்னை டோர்ச்சர் பண்ணாத, அதான் பிடிக்கலன்னு சொல்லிட்டேனே விட வேண்டியது தானே!" என்று அவள் சொல்லிக் கொண்டே ஆஃபீஸிற்கு பக்கத்திலுள்ள ஒரு காஃபி ஷாப்பிற்குள் புகுந்து அங்கிருந்த ஒரு மேசையில் அமர்ந்துக்கொள்ள, இவனும் அவளுக்கெதிரே அமர்ந்துக்கொண்டான்.


"ஓ காட்!" இவள் தலையைத் தாங்கியவாறு மேசையில் சாய, "வெயிட்டர் ஸ்ட்ரோங்கா ஒரு காப்பசினோ, சீக்கிரம் கொண்டு வாங்க, மேடமுக்கு ரொம்ப தலை வலிக்குது" என்று ரோஷன் தீவிரமாக சொல்ல, இவளோ ஒற்றைப் புருவத்தை தூக்கிய வண்ணம் அவனை ஒரு பார்வைப் பார்த்தாள்.


"லுக் ரோஷன் நான் உனக்கு செட் ஆக மாட்டேன், என் பின்னாடி அலைஞ்சு உன் டைம்ம வேஸ்ட் பண்ணாம நீ வேற யாரையாச்சும் ட்ரை பண்றது பெட்டர்!" என்று அலிஷா அவனுக்கு புரிய வைக்க, அலட்சியமாக தோளைக் குலுக்கினான் அவன்.


"உன்னைதான் பிடிச்சிருக்கு, வாட் டு டூ? நேத்து கூட அம்மா எனக்கு பொண்ணு பார்க்க போறதா பேசிக்கிட்டாங்க. நீங்க கஷ்டப்படாதீங்க, அழகான பொண்ணா நானே அழைச்சுட்டு வரேன்னு அவங்க கிட்ட சொன்னேன். என்னை ஏமாத்திறாதம்மா!" என்று அவன் பாவம் போல் சொல்ல, இவளுக்கோ யாரைக் கேட்டு இவன் இவ்வாறு செய்கிறான் என்றுதான் நினைக்கத் தோன்றியது.


"ரோ.. ரோஷன்  நான் என்ன சொல்ல வரேன்னா..." என்று மீண்டும் அலிஷா ஆரம்பிக்க, "அதை நான் சொல்லவா ஸ்வீட்ஹார்ட்?" என்றுக்கொண்டே அலீஷாவின் பக்கத்தில் திடீரென ருத்ரன் அமர, ஸ்தம்பித்துப் போய் விட்டாள் அவள்.


ரோஷனும் அங்கு ருத்ரனை எதிர்பார்க்கவில்லை. அதுவும் உரிமையாக அவன் அலிஷாவின் பக்கத்தில் அமர்ந்திருப்பதைப் பார்க்க அவனுக்கு எரிச்சலாக இருக்க, "சார் நீங்க..." என்று பதற்றமாக அழைத்தான் அவன்.


"நான்தான் ரோஷன், பதட்டப்பட வேணாம், பீ ச்சில்!" என்றவன் அலிஷாவுக்காக வெயிட்டர் கொண்டு வந்து வைத்த காஃபியை குடிக்க, அவளோ வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தாள் என்றால், ரோஷனுக்கு இங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.


பக்கவாட்டாகத் திரும்பி அலிஷாவின் விழிகளைப் பார்த்த ருத்ரன், "நீ சொல்லலயா ஆதி, நீ என்னை காதலிக்கிறேன்னு" என்று கேட்டவன், "அவ என்னை காதலிக்கிறா ரோஷன், அதான் அவளால உங்க காதல ஏத்துக்க முடியல" என்று சொல்ல, ரோஷனோ அலிஷாவை திகைத்துப் பார்த்தான்.


"சா.. சார் உங்க கம்பனியிலதான் வேலை பார்க்குறேன், உங்க மேல பெரிய மரியாதை இருக்கு. அதுக்காக நீங்க சொல்றதை எல்லாம் நான் நம்பணும்னு இல்லை. நான் அலிஷா கூட தனியா பேசணும், இஃப் யூ டோன்ட் மைன்ட்..." என்று ரோஷன் இழுக்க, ருத்ரனின் விழிகள் அவனை அடுத்து பார்த்த பார்வையில் ஒருகணம் விக்கித்துப் போய் விட்டான் அவன்.


அலிஷாவுக்கு ருத்ரனின் அதிரடியில் என்ன எதிர்வினை காட்டுவது என்று கூடத் தெரியவில்லை.


'யேசப்பா! என்னதான் நடக்குது இங்க, இவ... இவர் என்ன பேசிக்கிட்டு இருக்காரு, அவர் பாட்டுக்கு ஏதேதோ சொல்றாரு. எனக்கு மயக்கம் வர மாதிரி இருக்கே!' என உள்ளுக்குள் அவள் புலம்பித் தள்ள, ரோஷனோ அலிஷாவைதான் பார்த்திருந்தான்.


"அலீ, அவ சொல்றது உண்மைதானா?" என்று அவன் கோபமாகக் கேட்க, ருத்ரனோ உரிமையாக அவளுடைய கழுத்தை சுற்றி கைப் போட்டு தன்னோடு அணைத்துக்கொண்டவன், அவள் விழிகளை நேருக்கு நேராகப் பார்த்தான்.


அந்த விழிகள் அவளின் விழிகளோடு நிறைய கதைகள் பேச, அத்தனை காதல் மிதந்தது அவனுடைய விழிகளில். ஏனோ அந்த அளவில்லா காதலில் திக்குமுக்காடிப் போனவள், தன்னைத்தானே தொலைத்தாள்.


"பதில் சொல்லு ஆதி, நீ என்னை லவ் பண்றேன்னு" என்று ருத்ரன் மெல்லிய குரலில் சொல்ல, ஏதோ மந்திரித்து விட்டது தலையை ஆட்டியவள், ருத்ரனின் விழிகளையே உறைந்துப் போய் பார்த்திருந்தாள்.


"அதான் பதில் தெரிஞ்சுட்டுல்ல, கெளம்புங்க மிஸ்டர் ரோஷன்" என்று அவன் அழுத்தமாக சொல்ல, ரோஷனோ கோபமாக இருவரையும் பார்த்தவன் மேசையில் ஓங்கிக் குத்தி விட்டு அங்கிருந்து விறுவிறுவென்று வெளியேறி இருக்க, மேசை அதிர்ந்ததில் நடப்புக்கு வந்த அலிஷா, ருத்ரன் தன்னை அணைத்திருப்பதைப் பார்த்து சட்டென தள்ளி அமர்ந்தாள்.


"ஆதி..."  தலையை சரித்து அவன் அழைத்த விதம் அவளுக்குள் ஏதோ ஒன்றை பிசைவது போல் தோன்ற, சரியாக ருத்ரனின் ஆஃபீஸ் அறையில் பார்த்த அந்த சிறிய புகைப்படமும் அவளுக்கு ஞாபகத்திற்கு வர, தன் பையை எடுத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து ஓடி விட்டாள் அலிஷா.


இவள் வெளியே வர, சரியாக அதே காஃபி ஷாப் வாசலில் தோழிக்காக காத்திருந்து நின்றுக்கொண்டிருந்தாள் மது.


"ஏய் அலீ, இந்த காஃபி ஷாப் உள்ளேயா இருந்த, நான் உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு இங்க வெயிட் பண்ணிட்டு இருந்தா நீ எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்குற. சரி வா, நாம காஃபி சாப்பிட்டு போகலாம்" என்று மது சொல்லிக்கொண்டே வண்டியிலிருந்து இறங்கப் போக, வேகமாக சென்று அவளை தடுத்து நிறுத்தினாள் அலிஷா.


"நாளைக்கு வந்து நாம காஃபி சாப்பிடலாம், இன்னைக்கு எனக்கு அர்ஜென்ட்டா வீட்டுக்கு போயே ஆகணும்  வண்டிய எடு!" என்று அவள் பதற்றமாக சொல்ல, "அப்படி என்ன மேடமுக்கு அர்ஜென்ட்" என்று மது கேட்டதும், உடனே சிறுவிரலை மட்டும் தூக்கிக் காண்பித்தாள் அவள்.


"ரொம்ப நேரமா இயற்கை அழைக்குது. நான் போயே ஆகணும், சீக்கிரம் வண்டிய எடு!" என்று அவள் அவசரப்படுத்த, மதுவும் சிரித்தவாறு வண்டியை உயிர்ப்பித்து செலுத்தினாள்.


சில அடிகள் முன்னே சென்றதும் இவள் மெல்ல திரும்பிப் பார்க்க, அதே காஃபி ஷாப் வாசலில் பேன்ட் பாக்கெட்டில் கையை இட்டு இறுகிய முகமாக செல்லும் தன்னவளையே வெறித்துப் பார்த்திருந்தான் ருத்ரதேவ்.


அன்றிரவு,


"ஏய் அலீ, சாப்பிட வராம இங்க நின்னு என்னடீ யோசிச்சிட்டு இருக்க?" என்று கேட்டுக்கொண்டே பால்கனியில் நிலவை வெறித்திருந்த அவிஷாவின் அருகே வந்து மது நிற்க, "அது.. ஆஃபீஸ் டென்ஷன் மது" என்றாள் அவள் திரும்பிப் பார்க்காமல்.


"அலீ, நீ இந்த வேலைய விட்டுட்டு என்னோட ஈவென்ட் கம்பனியில ஜாய்ன் பண்ணிக்கிறியா, நான் பாஸ்கிட்ட பேசுறேன்" என்று மது சொல்ல, விருட்டென தன் தோழியைத் திரும்பிப் பார்த்தாள் மற்றவள்.


"வாட்!" என்று அதிர்ந்த குரலில் கேட்டவள், "அது... அது வந்து... இருக்கட்டும் மது, இந்த கம்பனியில எடுக்குற சம்பளம் வேற எங்க கிடைக்க போகுது?" என்று சமாளிக்க, "அதுக்காக அவ்வளவு கஷ்டப்பட்டு ஒன்னும் நீ அங்க வேலை பார்க்க தேவையில்ல" என்றாள் மது கறாராக.


ஏனோ அலிஷாவுக்கு ருத்ரனின் கம்பனியிலிருந்து விலக மனமே இல்லை. "இருக்கட்டும் மது, வாழ்க்கையில கஷ்டங்கள் இருக்கத்தானே செய்யும்!" என்று அவள் சொல்ல, "அதுக்காக கஷ்டமே வாழ்க்கையா இருக்கக் கூடாது மகளே!" என்றாள் மற்றவள் சிரித்துக்கொண்டே.


"ஹிஹிஹி... அதை விடு அதெல்லாம் பழகிப் போச்சு! ஆமா... மது நீ யாரையும் லவ் பண்ணதில்லையா?" என்று சட்டென அலிஷா கேட்டதும், இவளோ பேந்த பேந்த விழித்தாள்.


"லவ்வா... அதுக்கெல்லாம் எங்க நமக்கு நேரமிருக்கு. ஆனா அலீ, ஸ்கூல் படிக்கும் போது ஒரு லவ் இருந்துச்சு அது அப்போவே புட்டிக்கிச்சு. அதுக்கப்பறம் லவ் எல்லாம் நினைச்சும் பார்க்கல. இதை எல்லாம் விட ஒரு முக்கியமான பாய்ன்ட் என்னன்னா...  எவனாச்சும் என்கிட்ட லவ்வ சொல்லியிருந்தா கொஞ்சமாச்சும் அதை பத்தி யோசிச்சிருப்பேன், ஆனா எங்க... அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை மது" என்று மது சலித்துக்கொள்ள, அலிஷாவோ வாய்விட்டு சிரித்தாள்.


"சரி, ஒருவேள உன்கிட்ட யாராச்சும் லவ்வ சொன்னா நீ என்ன பதில் சொல்லுவ மது?" என்று அவள் ஒரு ஆர்வத்தோடுக் கேட்க, மதுவின் முகம் அதை நினைக்கும் போதே தானாக வெட்கத்தில் சிவந்தது.


"பிடிச்சிருந்தா ஓகேதான் அலீ, எனக்கு என்ன அம்மா அப்பாவா இருக்காங்க,  அவன் ஒத்துப்பாங்களா இவங்க ஒத்துப்பாங்களான்னு நான் யோசிக்கிறதுக்கு. பாட்டியும் முன்னாடி மாதிரி இல்லை. இப்போ என் வாழ்க்கையில எல்லாமே நானே முடிவெடுக்க வேண்டியதா இருக்கு. சோ... வாட் டு டூ? எவனாச்சும் வந்து லவ்வ சொல்லட்டும், அப்பறம் பார்க்கலாம்" என்று மது சொல்ல, அலிஷாவுக்கோ ருத்ரனின் முகம்தான் கண் முன்னே தோன்றியது.


அதேநேரம் தன் அலைப்பேசியிலிருந்த புகைப்படத்தை தன் தாய் புவனாவிடம் காண்பித்தான் விக்னேஷ்.


"அம்மா, இந்த பொண்ணதான் லவ் பண்றேன். என்னோட ஸ்டாஃப்தான், ரொம்ப டேலன்ட்" என்று அவன் மதுவின் புகழைப் பாட, அவரும் மதுவின் முகத்தை கூர்ந்துப் பார்த்தார்.


"இந்த பொண்ண எங்கேயோ பார்த்த மாதிரி தோனுது... ஆனா எங்கன்னுதான் தெரியல. ரொம்ப பழக்கப்பட்ட முகமா இருக்கு விக்கி கண்ணா" என்று புவனா சந்தேகமாக இழுக்க, "அப்படியாம்மா, பார்த்தீங்களா உங்களுக்கே மதுவ பார்த்ததும் இப்படி தோனுது. சோ, இந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்லுறீங்க?" என்று விக்னேஷ் சொல்ல, புன்னகையோடு தலையசைத்தார் அவர்.


"எனக்கு சம்மதம்தான் கண்ணா, ஆமா... உனக்கு அவள பிடிச்சிருக்குன்னு அந்த பொண்ணுகிட்ட சொல்லிட்டியா?" என்று புவனா கேட்க, "நோ நோ... இனிமேதான்" என்று அவன் சொன்னதும், மகனை முறைத்துப் பார்த்தார் அவர்.


"மொதல்ல என்கிட்ட சொல்றத விட்டுட்டு நீ அவகிட்டதான் சொல்லி இருக்கணும். போய் அவகிட்ட உன் லவ்வ சொல்லு, அப்பறம் அவ வீட்டுல போய் பேசலாம்" என்று அவர் தெளிவாக சொல்ல, விக்னேஷிற்கு தன் தாய் சம்மதித்ததே அத்தனை சந்தோஷமாக இருந்தது.


ஆனால், மதுவின் மனதைக் கொள்ளையடிக்கப் போகிறவனோ தன் நண்பனைப் பற்றிய ஆழ்ந்த யோசனையில் இருந்தான். சாப்பிடாது உணவுத் தட்டை அளந்துக்கொண்டிருந்த தன் மகனைப் பார்த்த ராதிகா, "ஹரி..." என்று அவனை உலுக்க, திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான் அவன்.


"வாட் மாம்?" என்று அவன் அலட்சியமாகக் கேட்க, "ஹரி ஆர் யூ ஓகே? எதுக்கு இப்போ சாப்பாட்டை அளந்துட்டு இருக்க, நாளைக்கு வீட்டுல ஃபங்ஷன் இருக்கு. நல்லா சாப்பிட்டு போய் தூங்கு, நாளைக்கு நீ ஃப்ரெஷ்ஷா இருக்கணும்" என்று அவர் நிதானமாக சொல்ல,


"இல்லை மாம் அது... நான் ருத்ரன பத்திதான் யோசிச்சிட்டு இருக்கேன். அவன எப்படியாச்சும் சரி பண்ணணும், அதுக்கு எங்களுக்கு ஒரு வழி கிடைச்சிருக்கு. ஆனா அது எந்தளவுக்கு வர்க்அவுட் ஆகும்னு தெரியல" என்று யோசனையோடு சொன்னான் அவன்.


'கடவுளே அந்த லூசுப்பயல் இருக்குற வரைக்கும் என் மகன் நிம்மதியா இருக்க மாட்டான். இவனுக்கு ஒரு நல்ல காரியத்தை பண்ணலாம்னு பார்த்தா இவன் என்னடான்னா அவன பத்தி யோசிச்சிட்டு இருக்கான்' என உள்ளுக்குள் எரிச்சலாக புலம்பியவர், "அதெல்லாம் நல்லதாவே நடக்கும். நீ அதை பத்தி யோசிக்காத, நாளைக்கு நீ ஃப்ரெஷ்ஷா இருக்கணும் ஹரி. போய் தூங்கு" என்றார் ராதிகா போலிப் புன்னகையோடு.


ஹரியும் மூன்று வாய்களை சாப்பிட்டு விட்டு அப்படியே எழுந்து சென்று விட, ராதிகாவுக்கு நாளை நடக்கவிருக்கும் நிச்சயதார்த்தம் பற்றிதான் சிந்தனை முழுதும் இருந்தது.


அடுத்தநாள் காலை,


"என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா போற, அப்போ என்னை ட்ரோப் பண்ண மாட்டியா?" என்று அப்போதுதான் தூக்கத்திலிருந்து விழித்த அலிஷா கண்களை கசக்கியவாறுக் கேட்க, "நோ, ஆஃபீஸ்ல நிறைய வேலை இருக்கு. ஏர்லியா போகணும். இன்னைக்கு ஒருநாள் பஸ்ல இல்லைன்னா ஆட்டோவுல போயிக்கோ!" என்ற மதுவுக்கு அப்போதுதான் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.


"ஏய் அலீ, இன்னைக்கு ராத்திரி ஒரு ஃபங்ஷன் இருக்கு, அதை எங்க கம்பனியாலதான் அர்ரேன்ஜ் பண்றோம். வேலைக்கு ஆளுங்க தேவை, நீ வரீயா நானும் இருப்பேன். வேலை பார்த்தா பேமன்ட் இருக்கு. நான் உன் விருப்பத்தைதான் கேக்குறேன், உன்னோட இஷ்டம்" என்று அவள் கேட்க, மற்றவளோ விழிகள் மின்ன பார்த்தாள்.


"நிஜமாதான் சொல்றியா, இதுக்கு ஏன் நான் முடியாதுன்னு சொல்ல போறேன் மது! வீட்டுல சும்மா இருக்குறதுக்கு இப்படி வந்து ஏதாச்சும் சம்பாதிக்கலாம், நீயும் இருப்பல்ல சோ... நான் கண்டிப்பா வருவேன். நீ லொகேஷன் மட்டும் சென்ட் பண்ணிக்கோ!" என்று அவள் சொன்னதும், "ஓகேடீ, நீ வரும் போது ட்ரெஸ் கோட் மட்டும் கரெக்டா போட்டுக்கோ. ப்ளக் கலர் பேன்ட், என்ட் வைட் ஷர்ட்... லொகேஷனுக்கு வந்துட்டு எனக்கு கால் பண்ணு" என்றுவிட்டு வெளியேறி விட்டாள் மது.


அலிஷாவோ மீண்டும் அப்படியே கட்டிலில் விழுந்தவள், ஒரு அரைமணி நேரம் அப்படியே அலைப்பேசியை நோண்டியவாறு உருண்டு விட்டு எழுந்து குளிக்கச் சென்றாள்.


காலை ஆஃபீஸிற்குள் நுழைந்தவளுக்கு வழக்கம் போல் ருத்ரனை நினைத்து பயம் இருக்கத்தான் செய்தது. 'அய்யோ இன்னைக்கு கொஞ்சம் ஏர்லியா போக பர்மிஷன் வாங்கணுமே, கண்டிப்பா இன்னொரு வேலைக்கு போறேன்னு சொன்னா விட மாட்டாங்க. வேற ஏதாச்சும் காரணம்தான் சொல்லணும்' என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டவள், பக்கத்திலிருந்த வைஷாலியின் புறம் திரும்பினாள்.


"வைஷு, ஹரி சார்தானே உள்ள இருக்காரு?" என்று சந்தேகமாக அவள் கேட்க, "இல்லை அலீ, ஹரி சார் இன்னைக்கு வரல, இன்னைக்கு அவரோட பர்த்டே. ஹோட்டல்ல ஏதோ ஃபங்ஷன் இருக்குறதா கேள்விப்பட்டேன். ருத்ரா சார்தான் வந்திருக்காரு" என்று இவள் சொன்னதும், எச்சிலை விழுங்கிக்கொண்டாள் அலிஷா.


'இன்னைக்கு சோலி முடிஞ்சிருச்சு' என்று பயந்தபடி நினைத்தவாறு மெல்ல எழுந்து கதவைத் தட்டி விட்டு ருத்ரனின் ஆஃபீஸ் அறைக்குள் இவள் நுழைய,  அவனோ இமை மூடாமல் தன் முன் நின்றிருந்தவளையே வெறித்துப் பார்த்திருந்தான்.


******************

அதிரூப அணங்கன் 10>>>

https://agnitamilnovels.blogspot.com/2024/10/10.html


மற்ற கதைகளைப் படிக்க 🏃🏃

India link 👇

https://www.amazon.in/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%95%E0%AE%BF/e/B08ZYCHG6C/ref=dp_byline_cont_ebooks_1

USA link 👇

https://www.amazon.com/%25E0%25AE%25B7%25E0%25AF%2587%25E0%25AE%25B9%25E0%25AE%25BE-%25E0%25AE%25B8%25E0%25AE%2595%25E0%25AE%25BF/e/B08ZYCHG6C%3Fref=dbs_a_mng_rwt_scns_share?ref_=d6k_applink_bb_dls





Comments

Popular posts

தஷுரி 10