தஷுரி 10

 




நடந்த சம்பவத்தை நினைத்தவாறு சுவற்றில் சாய்ந்து விழிகளை மூடி தரையில் அமர்ந்திருந்தாள் தஷுரி. 


'ச்சே! என் வாழ்க்கையில நடக்குறதை என்னாலயே தடுக்க முடியல. போயும் போயும் இவனதான் நாம காதலிச்சு தொலைக்கணுமா! கடவுளே...' என்று புலம்பித் தள்ளியவள், 'இருந்தாலும் கொஞ்சோண்டு நல்லவனாதான் இருக்கான், நம்மள கட்டிக்கிட்டு இவன் என்ன பாடுபட போறானோ! அதை நினைச்சாலே அய்யோ அய்யோ!' என்று தன்னவனின் நினைவில் சிரித்துக்கொண்டாள்.


ஆனால், மீண்டும் சட்டென அவளுடைய முகம் சுருங்கியது. 'இல்லை தஷு, இந்த காதல் சரியா இருக்காது. அவனோட உலகம் வேற, உன்னோட உலகம் வேற. அதுவும் உன்னை மாதிரி ஒருத்தி மேல அவனுக்கு காதல் வர போறதும் இல்லை. பணக்காரங்களாச்சே! அதுவும் நம்ம கலாசாரத்தை பத்தி தெரியாத வெளிநாட்டுக்காரன். சும்மா நீயே உனக்குள்ள ஆசைய வளர்த்துட்டு ஏமாறாத! இதோட இதை விட்டுரு! இதுக்கப்பறம் அவனோட ரூம்ம க்ளீன் பண்ண அவனே உன்னை கூப்பிட்டாலும், நீ போக கூடாது. அவன ஏறெடுத்தும் பார்க்க கூடாது. பார்க்கவே கூடாது' 


என்று சபதமெடுத்தவள், அன்று மதியமே விக்டரின் அறை முன்னால் சுத்தம் செய்யும் பொருட்களோடு நின்றிருந்தாள். 


'மானங்கெட்ட மனசு' தன்னைத்தானே திட்டிக்கொண்டவள், அறைக்குள் சென்று சுத்தம் செய்ய ஆரம்பிக்க, அவளுடைய பார்வையோ அவளையும் மீறி சுவற்றில் பொருத்தியிருக்கும் அவனுடைய ஆளுயர புகைப்படத்தின் மீதே அடிக்கடி பதிந்தது. ஆனாலும், கவனத்தை சுத்தம் செய்வதில் திருப்பி, பார்வையை வேறு புறம் திருப்ப அவள் முயற்சிக்க, அது நடந்தால்தானே!


எப்படியோ அறையில் சில வேலைகளை முடித்து 'ஊஃப்ப்...' என்று பெருமூச்சுவிட்டவளின் விழிகளுக்கு சிக்கியது விக்டரின் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்த புக் ஷெல்ஃப்.


புருவங்களைச் சுருக்கியவாறு அதனை நோக்கிச் சென்றவளின் இதழ்கள், அதில் வைக்கப்பட்டிருந்த குட்டி ஃப்ரேமிலிருந்த குழந்தை விக்டர் மற்றும் அவனுடைய தாய் தந்தையைப் பார்த்ததும் லேசாக முறுவலித்தன. 


'சின்ன வயசுல நம்ம ஆளு அழகாதான்யா இருந்திருக்கான்' என்று இதழை குவித்து பறக்கும் முத்தமொன்றை வழங்கியவள், அந்த ஃப்ரேமை கையிலெடுக்கப் போக அதுவோ இவள் தொட்டதும் தானாகத் திரும்பிக்கொண்டது.  அதை அதிர்ந்துப் பார்த்தவள், ஷெல்ஃபுக்கு பக்கத்து சுவற்றில் தொங்கவிட்டிருந்த விக்டரின் ஆளுயர புகைப்படம் நகர்ந்து சிறிய வழியொன்று உருவானதும் மேலும் திகைத்துத்தான் போனாள்.


'ஆத்தாடி ஆத்தா! இங்லீசு படத்துல வார மாதிரி பெரிய டிவிஸ்ட்டால இருக்கு. இவன் இங்க என்ன மறைச்சு ஒரு வழிய தோண்டி வச்சிருக்கான்? போய்தான் பார்ப்போமா...' என்று யோசித்தவாறு மெல்ல ஒவ்வொரு அடிகளாக வைத்து அந்த வழிக்குள் நுழைய, அங்கோ கீழே இறங்குவதற்காக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன.


வயிற்றில் பயபந்து உருண்டாலும் உள்ளுக்குள் தோன்றிய ஆர்வத்தில் அவள் படிக்கட்டு வழியே கீழே செல்ல, அங்கோ இன்னுமொரு கதவு. அந்த கதவுக்குப் பக்கத்தில் செல்லும் போதே கெட்ட மணம் வீச, முகத்தை அஷ்டகோணலாக்கி மூக்கைப் பொத்திக்கொண்டவளுக்கு ஒருபுறம் மனம் எச்சரிக்கை செய்வது போலிருந்தது.


இருந்தும் அதை ஒதுக்கி கதவைத் திறந்ததுமே அந்த கெட்ட மணம் அதிகரிக்க, ஏதோ புதுவித சத்தமும் சேர்ந்து கேட்பது போலான உணர்வு. வாசலில் வைத்தே அதை உணர்ந்தவளுக்கு இப்போது பயத்தில் இதயம் படுவேகமாக அடிக்கத் தொடங்கியது. 


மெதுவாக அவள் உள்ளே நுழைய, சில அடிகள் முன்னே வைத்துச் சென்றிருப்பாள், அடுத்தகணம் காணும் காட்சியில் தெறித்துவிடுமளவிற்கு விழிகள் விரிந்து அதிர்ச்சியில் வாயைப் பொத்திக்கொண்டாள் தஷுரி. அவளுடைய கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை.


ஃப்ரான்ஸில் குறைந்துக்கொண்டு வரும் அரிய வகை விலங்குகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு மயக்க நிலையில் கிடக்க, அங்குமிங்கும் ஏகப்பட்ட வெக்சின் மற்றும் மருந்துகள் மேசைகளில் குவிக்கப்பட்டிருந்தன. கூடவே, ஒருபக்கம் விலங்குகளின் தோல்கள் தொங்கவிடப்பட்டு காய வைக்கப்பட்டிருந்தன.


இதில் ஒரு விலங்குக்கு மயக்கம் தெளிந்திருக்க, அதுவே சிறு முணங்கலிட்டுக்கொண்டிருந்தது. இதைப் பார்த்தவளுக்கு தலையே சுற்றிவிட்டது. தலையைத் தாங்கியவாறு விழிகளை அழுந்த மூடிக்கொண்டாள். 


சில கணங்கள் கடந்திருக்கும். சட்டென, "இங்க என்ன பண்ணிட்டு இருக்க தஷுரி?" என்ற கணீர் குரல் அந்த இடத்தையே அதிரச் செய்ய, விழிகளைப் பட்டெனத் திறந்து வேகமாகத் திரும்பியவள் விக்கித்துப்போய் நின்றுவிட்டாள். 


அவளுடைய அதிர்ச்சி வழக்கம் போல் விக்டரைக் கண்டதற்காக அல்ல. கேள்வியானது விக்டரிடமிருந்து அவளுடைய தாய் மொழியான தமிழில் வந்ததே அதிர்ச்சிக்கான காரணம். 


"இவன் நிஜமாவே தமிழ்லதான் கேட்டானா, இல்லைன்னா என் பிரம்மையோ?" வாய்விட்டே அவள் கேட்டுவிட, "தமிழ்லதான் கேக்குறேன், இங்க என்ன பண்ற?" என்று மீண்டும் கேட்டான் அவன் அதிரடியாக.


ஏற்கனவே தலை சுற்றலாக இருக்க, இத்தனைநாள் ஃப்ரென்சில் பேசிக்கொண்டிருந்த இந்த ஃப்ரென்ச்காரன் வேறு திடீரென தமிழில் பேசவும் உண்மையாகவே தலை சுற்றி விழுந்துவிட்டாள் பெண்ணவள்.


சில நிமிடங்கள் கழித்து, மயக்கம் தெளிந்து மெல்ல விழிகளைத் திறந்தவளின் மங்கலான பார்வையில் முறைத்துக்கொண்டு நின்றிருந்த விக்டரே தெரிய, முழு விழிகளையும் பட்டென திறந்துவிட்டாள் அவள்.


ஏற்கனவே ஏகப்பட்ட எச்சரிக்கை அவனிடமிருந்து. இப்போது இது வேறு. எச்சிலை விழுங்கிக்கொண்டு, "ஹிஹிஹி..." என தஷுரி அசடுவழிய, "கெட் அப்!" என்று அந்த அறையே அதிரக் கத்தினான் விக்டர்.


இவளும் பதறியடித்துக்கொண்டு எழுந்து நின்றவள், ஏனோ தான் பார்த்த காட்சியில் உண்டான கோபத்தில் நேருக்கு நேர் அவனை முறைக்க, இதுவரை தன்னை எவரும் எதிர்த்து நிற்காத வேளை இந்தப் பெண் நேருக்கு நேர் கோபமாகப் பார்க்கிறாளே என அவனுக்கு ஆத்திரம் தலைக்கேறியது.


மின்னல் வேகத்தில் அவளை மூச்சுக்காற்று படும் தூரத்திற்கு நெருங்கியவன், "என்ன முறைக்குற, இதெல்லாம் என்கிட்ட வச்சிக்காத!" என்று ஃப்ரென்சில் கத்த, ஏளனமாக இதழை வளைத்தவள், "தமிழ்ல பேசு, அதான் தெரியுமே!" என்றாள் தைரியத்தை வரவழைத்து.


முதலில் விழிகளைச் சுருக்கி அவளைக் கூர்ந்துப் பார்த்தவன், பின் மெல்ல விலகி நின்று "நீ பார்த்தது யாருக்கும் தெரிய கூடாது. தெரிஞ்சது... நீ மட்டுமில்ல உன் அம்மாவும் உயிரோட இருக்க மாட்டாங்க. கொட் இட்?" என்று தமிழிலேயே மிரட்டலாகச் சொல்ல, ஒருகணம் ஆடிப்போய்விட்டாள் தஷுரி.


விழிகள் சற்று கலங்க, "இது ரொம்ப தப்பில்லையா?" என்று அவள் தழுதழுத்த குரலில் கேட்க, மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டி, "எது?" என்று கேட்டான் அவன் அலட்சியமாக.


"உங்க நாட்டுக்கு சொந்தமானதை சட்டத்துக்கு விரோதமா வெளிநாடுகளுக்கு விக்கிறது" என்று அவள் விளக்கியதும், இதழை வளைத்து ஏளனமாகச் சிரித்த விக்டர், "இட்ஸ் ஆல் பிஸ்னஸ். என்ட், இதுல நீ தலையிடாத! என்கிட்டயிருந்து தப்பிக்க மொதல்ல நீ முயற்சி பண்ணு, இதெல்லாம் உனக்கு தேவையில்லாதது" என்றான் அலட்சியமாக.


தஷுரிக்கு ஏனோ மனம் கனத்தது. தான் காதலிப்பவன் இத்தனை தவறான காரியங்களை செய்கிறானே! ஏனோ அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 


விழிகளை ஒருதரம் அழுந்த மூடித் திறந்தாள். மெல்ல ஒவ்வொரு அடிகளை வைத்து அவனை நெருங்கியவள், அவனின் பின்னந்தலையைப் பற்றி தன் முகம் நோக்கி குனியச் செய்ய, விக்டருக்கோ ஒன்றும் புரியவில்லை. 


'என்னதான் செய்கிறாளென பார்ப்போம்' என்ற ரீதியில் அவன் அமைதியாக நிற்க, கொஞ்சமும் யோசிக்காது அவனிதழில் தன்னிதழைப் பதித்திருந்தாள் பெண்ணவள். இவளின் எதிர்பார்க்காத செயலில் விக்டரின் விழிகள் கூட அதிர்ச்சியில் விரிந்தன. 


சில கணங்கள்தான். இதழைப் பிரித்தெடுத்தவள், "நான் உங்களை காதலிக்கிறேன். ஃப்ரென்ச்ல சொல்லணும்னா ஜு டெய்ம்" என்று தன் காதலை பட்டென்று உடைத்துவிட்டு, "நான் காதலிக்கிறவன் இந்த மாதிரி தப்பு பண்றது எனக்கு பிடிக்கல. கொஞ்சநாள்தான், சீக்கிரம் இதெல்லாம் விட்டுட்டு என்னை கட்டிக்கிற வழிய பாருங்க" என்று முடித்து விலகி நின்றாள்.


விக்டருக்கு வெறும் திகைப்பு மட்டுமே. இதுவரை யாரும் அவனிடம் இவ்வாறு பேசியது கிடையாது. முதல் தடவை ஒரு பெண்ணவள் தைரியமாக காதலைச் சொல்லி முத்தமும் கொடுத்திருக்கிறாள். 


அவன் உறைந்துப்போய் நிற்க, அதற்குமேல் தஷுரியும் அங்கு நிற்கவில்லை. அங்கிருந்து தனதறைக்கு ஓடி வந்து கதவை சாத்தி அதில் சாய்ந்து நின்றவளுக்கு, பயத்தில் இதயம் படுவேகமாகத் துடிக்க, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.


சில நிமிடங்களில் எங்கிருந்து வந்ததோ தைரியம்! பட்டென்று காதலை சொல்லிவிட்டாள். ஆனால், இனி அவனை எப்படி சந்திப்பது, அதுவும் த க்ரேட் விக்டர் இவள் செய்த காரியத்துக்கு இவளை சும்மா விடுவானா என்ன?


தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவே அவளுக்கு அதிக நேரம் தேவைப்பட, நிதானமானதும் தான் செய்த காரியத்தை நினைத்து சிரித்துவிட்டாள் தஷுரி. 


அடுத்தநாள், தோட்டத்தை சுத்தப்படுத்தியவாறு, "யக்கோவ்! நம்ம பாஸுக்கு எங்க ஊர் பாஷை தெரியுமா? அதான் தமிழு" என்று அவள் பக்கத்திலிருந்த ஹெலனிடம் கேட்க, "உன் ஊர் லங்குவேஜ் மட்டுமில்ல, விக்டருக்கு மொத்தமா செவன் லங்குவேஜஸ் தெரியும். அதாவது, ஏழு மொழிகள் தெரியும்" என்று சொல்ல, ஆச்சரியத்தில் விழிகளை விரித்தாள் மற்றவள்.


"ஃப்ரென்ச், இங்லீஷ், தமிழ், அரபிக், சைனீஸ், இட்டாலியன், ஹிந்தி" என்று ஒவ்வொரு விரலாகக் காண்பித்து விக்டருக்குத் தெரிந்த ஏழு மொழிகளையும் அவள் சொல்லி, "இவங்களோட பிஸ்னஸ் உலகம் பூரா இருக்கு தஷு. சோ, அதுக்காகவே அவங்க கத்து வச்சிருப்பாங்க" என்று முடிக்க, தஷுரிக்கு தலை சுற்றாத குறைதான். 


கூடவே, அவனுக்கு தமிழ் தெரியாது என்ற தைரியத்தில் அவள் பேசியவை வேறு ஞாபகத்திற்கு வர, 'இருக்கு. ஒரு சம்பவம் இருக்கு' என்று நினைத்து பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டாள் தஷுரி.


இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே விக்டரின் ரோல்ஸ் ரொய்ஸ் கார் பெரிய ராட்சத கதவுகளைத் தாண்டி உள்ளே நுழைந்து போர்டிகாவில் நிற்க, காரிலிருந்து இறங்கியவனைப் பார்த்ததும் ஹெலனின் பின்னால் மெல்ல இவள் பதுங்கிக்கொண்டாள் என்றால், காரிலிருந்தே அவளைக் கண்டுகொண்டான் விக்டர்.


ஹெலனோ இதைக் கவனித்தவள், "என்னாச்சு?" என்று கேட்டு விழிக்க, "அது வந்துக்கா..." என்று தான் காதலை சொன்னதை மட்டும் தஷுரி சொல்ல, அவ்வளவுதான். ஹெலனுக்கு மூச்சே அடைத்துவிட்டது.


"யூ... ஆர் யூ மேட், யூ டோன்ட் ஹேவ் எனி சென்ஸ்? ஹவ் மெனி டைம்ஸ் ஐ டோல்ட் யூ அகைன் என்ட் அகைன்.. பட் யூ..." என்று தஷுரிக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை மறந்து தான் கற்றிருந்த தமிழையும் மறந்து ஆங்கிலத்தில் திட்டத் தொடங்கிவிட்டாள் அவள். தஷுரியோ இரு புருவங்களை உயர்த்தி, "என்னை திட்டுறீங்கன்னு புரியுது. ஆனா, என்ன சொல்றீங்கன்னுதான் தெரியல" என்று பாவம் போல் சொல்ல, ஹெலனுக்கு 'அய்யோ!' என்றானது.


"திட்டுறேன்னு சரி புரிஞ்சதே, அதுவே போதும்" என்று சொல்லி ஹெலன் முறைக்க, சரியாக அங்கு வந்த காவலாளி ஒருவன், "சார் உங்க இரண்டு பேரையும் கூப்பிடுறாரு" என்று சொல்லிவிட்டு செல்ல, தஷுரி அதிர்ந்தாளோ, இல்லையோ 'இவளோட பழகின பாவத்துக்கு நமக்கும் சேர்த்துல்ல ஆப்பு வைப்பாங்க' என்று வயிறு கலங்க நின்றாள் மற்றவள்.


அடுத்தநிமிடமே இருவரும் விக்டரின் முன் நிற்க, அவனின் முகமோ பாறைப் போல் இறுகிப் போயிருக்க, அவனின் கூர் விழிகளோ தஷுரியையே வெறித்துக்கொண்டிருந்தன. பெண்ணவளுக்குதான் அவன் விழிகளைப் பார்க்க முடியவில்லை.


"உங்க இரண்டு பேரை நானும் நோட் பண்ணிட்டுதான் இருக்கேன். வேலை பார்க்குற மாதிரி எனக்கு தெரியல. நீங்க இரண்டு பேரும் பண்ண காரியத்துக்கு ரொம்ப லோவஸ்ட் பனிஷ்மென்ட்டா இதை கொடுத்தேன். ஆனா நீங்க..." என்று விக்டர் நாடியை நீவி விட்டவாறுச் சொல்ல, "நோ சாரு, நாங்க கரெக்டா வேலை பார்க்கதான் செய்றோம். ஆனா, நீங்கதான் அதை பார்க்க மாட்டேங்குறீங்க" என்றாள் தஷுரி தீவிரமாக.


ஹெலனோ முட்டியால் அவளை குத்தி, 'வாய மூடு!' என்பது போல் சைகை செய்ய, தஷுரியை முறைத்துப் பார்த்தவன், தன் அலைப்பேசியிலிருந்த காணொளியை இருவருக்கும் போட்டுக் காண்பிக்க, இரு பெண்களோ காணும் காணொளியில் 'ஆஆ...' என வாயைப் பிளந்துவிட்டனர்.


அது சில நாட்களுக்கு முன் சமையலறையில் விக்டருக்கு சமைக்கப்பட்டு அடுக்கப்பட்டிருந்த பாத்திரங்களிலிருந்து தஷுரியும் ஹெலனும் உணவை திருடி உண்டு, நடனமாடும் காட்சியே சமையலறையில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவில் சிக்கியிருக்க, அந்த ஏசி குளிரிலும் இருவருக்கும் வியர்த்துவிட்டது.


"அது நாங்க... அது வந்து..." என்று இருவரும் தடுமாற, "இதுக்கு உங்களுக்கு பனிஷ்மென்ட் இருக்கு" என்று விக்டர் சொன்ன அடுத்த பத்தாவது நிமிடம் தொடர்ந்து வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த விக்டரின் கார்களை துடைத்துக்கொண்டிருந்தனர் இருவரும்.


"கொழுப்பெடுத்தவன்! நமக்கு பனிஷ்மென்ட் தரணுங்குறதுக்காகவே தினமும் கம்பனிக்கு கொடுத்து க்ளீன் பண்ணி எடுக்குற வண்டிய துடைக்க விட்டிருக்கான் பாவி! கல்யாணம் முடியட்டும், அப்றம் இருக்கு இவனுக்கு" என்று கார் கண்ணாடியை துடைத்துக்கொண்டே தஷுரி தன்னவனைத் திட்டித் தீர்க்க, "க்கும்! உனக்கு அவன் உன்னை கல்யாணம் பண்ணுவான்னு நினைப்பு வேற இருக்கா?" என்று நக்கலாகக் கேட்டாள் ஹெலன்.


தஷுரியோ தோழியை முறைத்துத் தள்ள, சரியாக ரோயின் கார் உள்ளே வருவதைக் கண்டவர்கள் வேலை செய்வதை நிறுத்தி மெல்ல அவனை நோட்டம் விடத் தொடங்கினர். அவனும் போர்டிகாவில் காரை நிறுத்தியவன், காரிலிருந்து இறங்க, அவனோடு சேர்ந்து இரண்டு கோட் மேக்கப் போட்டவாறு யுவதியொருத்தியும் இறங்கினாள்.


அவளைப் பார்த்ததுமே, "ஹேய் தஷு, கண்டிப்பா இது உன் ஆளுக்காகத்தான்" என்று ஹெலன் சொல்ல, "ச்சே! இவன் சரியான மாமாவா இருக்கான் அக்கா, இதை நான் இன்னைக்கு சும்மா விட போறதில்ல" என்ற தஷுரி விறுவிறுவென அந்த யுவதியை நோக்கிச் சென்றாள்.


"வெயிட் ரியா" என்றுவிட்டு தனக்கு வந்த அழைப்பை ஏற்றவாறு ரோய் அவளிடமிருந்து நகர்ந்து செல்ல, அவன் வரும் வரை ஹாலில் ரியா காத்துக்கொண்டிருக்க, "ஏய்..." என்ற சொடக்கிடும் சத்தம்.


சத்தம் வந்த திசையை நோக்கிய ரியா, இடுப்பில் கைக்குற்றி தன்னை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தவளை புரியாது நோக்க, அங்கு ரியாவை முறைத்துக்கொண்டு நின்றிருந்த தஷுரி விறுவிறுவென அவள் முன்னால் வந்து, "யாருக்காக வெயிட்டிங் மேடம்?" என்று தெனாவெட்டாகக் கேட்டாள்.


தஷுரியை மேலும் கீழும் பார்த்தவள், "யார் நீ?" என்று கேட்டு அவளை மேலிருந்து கீழ் ஒரு மார்கமாகப் பார்க்க, 'என்ன நம்மள ஏதோ அசிங்கத்த பார்க்குற மாதிரி பார்க்குறா' என்று உள்ளுக்குள் நினைத்தவள், "நான் விக்டர் சாரோட லவ்வரு" என்று சொல்லி கோலரைத் தூக்கி விட்டுக்கொண்டாள்.


அவ்வளவுதான். "வாட்!" என்று அதிர்ந்து நின்றது அந்த யுவதி மட்டுமல்ல, அவளுக்குப் பின்னால் நின்றிருந்த விக்டரும் ரோயும்தான்.


*****************

தஷுரி 11 >>>

https://agnitamilnovels.blogspot.com/2024/05/11.html


தஷுரி கதையை கிண்டலில் படிக்க 👇

https://www.amazon.in/dp/B0CN39JKBC?binding=kindle_edition&ref=dbs_dp_awt_sb_pc_tkin


மற்ற கதைகளைப் படிக்க 🏃🏃

India link 👇

https://www.amazon.in/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%95%E0%AE%BF/e/B08ZYCHG6C/ref=dp_byline_cont_ebooks_1

USA link 👇

https://www.amazon.com/%25E0%25AE%25B7%25E0%25AF%2587%25E0%25AE%25B9%25E0%25AE%25BE-%25E0%25AE%25B8%25E0%25AE%2595%25E0%25AE%25BF/e/B08ZYCHG6C%3Fref=dbs_a_mng_rwt_scns_share?ref_=d6k_applink_bb_dls


Comments

  1. இவளுக்கு..... ஆனாலும் வாய் கொழுப்பு ரொம்ப அதிகம் தான்.

    ReplyDelete

Post a Comment