அதிரூபன் 07

 



ஹரியின் வீட்டில்,


"மேம் இந்த கலர் ரொம்ப நல்லா இருக்கும்.. என்ட் இந்த மாதிரியான டெகரேஷன்ஸ் உங்க ஃபங்ஷன்லதான் நாங்க மொதல் தடவை ட்ரை பண்ண போறோம். ட்ரஸ்ட் மீ ரொம்ப அழகா இருக்கும், வர கெஸ்ட்டுக்கு ரொம்ப பிடிக்கும்" என்று மது சொல்லிக்கொண்டிருக்க, அவள் காட்டிய அலங்காரங்களை அவள் சொல்வதைக் கேட்டவாறு ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் ராதிகா.


"இதை விட பெட்டரா பண்ண முடியாதா மது?" என்று அவர் கேட்க, 'ஙே' என அவரை மலங்க மலங்க விழித்துக்கொண்டு ஒரு பார்வைப் பார்த்தவள், "மேம், இது பர்த்டே ஃபங்ஷன்தானே, இதுக்கு மேல டெகரேஷன்னா கல்யாணத்துக்கு பண்ற அலங்காரம்தான் பண்ணணும்" என்று சிரித்தவாறு சொன்னாள் அவள்.


அதைக் கேட்டு பதிலுக்கு சிரித்த ராதிகா, "அப்போ கல்யாணத்துக்கு பண்ற அலங்காரமே பண்ணிடுங்க, அதானே எனக்கும் வேணும்" என்று பட்டென சொல்ல, "வாட்!" என்று அதிர்ந்துப் பார்த்தாள் மது.


"என்ன மேம் சொல்றீங்க, திஸ் இஸ் அ ஜஸ்ட் அ பர்த்டே ஃபங்ஷன், இதுக்கு போய் எப்படி கல்யாணத்துக்கான அலங்காரம்?" என்று அவள் திருதிருவென விழிக்க, "நோ மது, என் பையனோட பர்த்டே ஃபங்ஷன் மட்டுமில்ல, அவனோட என்கேஜ்மென்ட்டும் அப்போவே நடத்தலாம்னு முடிவு பண்ணிட்டேன், அது அவனுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும். இதை நான் உன்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கணும், சாரி!" என்று அவர் கெஞ்சலாக சொல்லி முடிக்க, அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது.


'ஓஹோ... இதுதான் சங்கதியோ?' என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டவள், "தட்ஸ் ஓகே மேம், அதெல்லாம் நீங்க சொல்ற மாதிரி பண்ணிடலாம். பையனோட என்கேஜ்மென்ட்ட சர்ப்ரைஸா பர்த்டே கிஃப்ட்டா பண்ற அம்மாவ இப்போதான் பார்க்குறேன், சூப்பர் மேம்" என்று புன்னகையோடு சொல்ல, "அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சாலே போதும், கீர்த்தி அவனுக்கு ரொம்ப பொருத்தமான பொண்ணு" என்றார் அவரும் புன்னகையோடு.


"மேம், எதுக்கும் ஹரி சார் கலர்ஸ் டிசைன்ஸ்ஸ ஒரு தடவை பார்த்து பிடிச்சிருக்குன்னு சொன்னா நாங்க ஆர்டர் கொடுத்துடுவோம்" என்று மது சொல்லவும், "கண்டிப்பா அவனோட விருப்பம் ரொம்ப முக்கியம்ல! ஹரி பின்னாடி கார்டன்லதான் இருக்கான். நீ போய் பேசிட்டு வா, பட் வன்திங் என்கேஜ்மென்ட் விஷயத்தை மட்டும் அவன்கிட்ட சொல்லிராத!" என்று அழுத்தமாகச் சொன்னார் அவர்.


"கண்டிப்பா சொல்ல மாட்டேன்" என்றுவிட்டு ஹரியை தேடி அவள் பின்னாலிருக்கும் தோட்டத்து பக்கம் செல்ல, அங்கு சென்ற மறுகணம் அவளுடைய விழிகளோ ஆச்சரியத்தில் விரிந்தன.


செயற்கை நீர்வீழ்ச்சி அழகாக அமைக்கப்பட்டிருக்க, தோட்டத்தில் விருந்தினர்கள் அமர்ந்து பேசும் வகையில் வெளிநாட்டு பாணியிலான மேசையும் கதிரைகளும் போடப்பட்டிருந்தன. பல வகையான பூ செடிகளிலிருந்து அலங்காரத்திற்காக வைக்கப்பட்டுள்ள செடிகள் வரை அத்தனை அழகாக நேர்த்தியாக தோட்டக்காரர்கள் பராமரிக்க, கண்ணைக் கவரும் அந்த காட்சியில் தன்னை மறந்து அவள் பாட்டிற்கு தோட்டத்திற்குள் நுழைந்தாள் மது.


'வாவ் மது இதையெல்லாம் உனக்காகவே நட்டு வச்சது மாதிரி இருக்கே, எவ்வளவு அழகா இருக்கு. அலீக்கு இதையெல்லாம் பார்க்க கொடுத்து வைக்கல' உள்ளுக்குள் நினைத்து வெளியில் துள்ளிக் குதிக்காத குறையாக அவள் ஒவ்வொன்றையும் ஆசையாகப் பார்த்துக்கொண்டிருக்க, சரியாக அவளுடைய விழிகளில் சிக்கியது ரோஜா செடி.


அதை நோக்கி ஓடியவள் ரோஜாப் பூவை பறிக்க செல்வதும் பின் தயக்கமாக கரத்தை இழுத்துக் கொள்வதுமாக தடுமாறிக்கொண்டிருக்க,திடீரென அவளைத் தாண்டி வந்த ஒரு வலிய கரம் அந்த ரோஜா செடியில் அழகாக பூத்திருந்த ஒரு ரோஜாவை பறித்துக்கொள்ள, வேகமாக திரும்பிப் பார்த்தாள் மது.


எதிரே சாட்சாத் ஹரியே தான். முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல் கையில் ரோஜாப் பூவோடு நின்றிருந்தவன், சட்டென அவளே எதிர்பார்க்காது அவளையே பார்த்தவாறு அவளுடைய தலையில் பூவை வைத்து விட, மேலும் திகைத்துப் போனாள் பெண்ணவள்.


அவளோ வாயைப் பிளந்த வண்ணம் அவனையே பார்த்திருக்க, நாடியில் கை வைத்து அவளுடைய வாயை மூடிவிட்டவன், "ஒரு பொருள் பிடிச்சிருக்குன்னா அதை தைரியமா சொந்தமாக்கிக்கணும். அங்க தயக்கம் இருக்கக் கூடாது, இல்லன்னா அந்த பொருள் நம்ம கைய விட்டு போயிரும்" என்று சொல்ல, விழிகளை சுருக்கி அவனைப் பார்த்தாள் மது.


"ஆனா... ஒரு பொருள் நமக்கு சொந்தமில்லாம இருக்கும் போது அதை எப்படி தைரியமா எடுக்க முடியும்? உரிமை இருக்குறவங்க விட்டுக் கொடுப்பாங்களான்னு தயக்கம் இருந்துட்டே இருக்கும். இப்போ நடந்த மாதிரிதான். எனக்கு சொந்தமில்லாத பூவை பறிக்க நான் யோசிக்கதானே வேணும்?" என்று அவள்  பதிலுக்கு சொல்ல, ஆச்சரியமாக விழிகளை விரித்தவன் பின் தன் முத்துப் பற்கள் தெரிய சிரிக்க, அவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தவளுக்கு ஏனோ அவனின் சிரிப்பை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.


அதை உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு, "நா..நான் உங்களதான் தேடிட்டு இருந்தேன் சார், உங்க பர்த்டே ஃபங்ஷன் உங்களுக்கு பிடிச்ச மாதிரி தானே இருக்கணும்! சோ... நீங்களே கலர் என்ட் டிசைன்ஸ் செலக்ட் பண்ணிடுங்க சார்" என்று மது சொல்ல, விழிகளை சலிப்பாக உருட்டினான் ஹரி.


"நான் என்ன குழந்தையா, பலூன்ஸ் கட்டி கேக்க கட் பண்ண? ஓ காட்! இந்த அம்மாவுக்கு சொன்னா ஒன்னுமே புரியாது, பிஸ்னஸ் பார்ட்டீ வைக்க வேண்டிய இடத்துல நான் பர்த்டே செலப்ரேட் பண்ணிக்கிட்டு இருக்கேன்" என்று அவன் பேச, மதுவோ அமைதியாகவே இருந்தாளே தவிர எதுவும் பேசவில்லை.


அவனும் மதுவின் முகத்தைப் பார்த்துவிட்டு அவளின் கையில் இருந்த ஃபோட்டோக்களை வாங்கி அலட்சியமாக புரட்டிப் பார்த்தான்.


"உனக்கு இதுல எது நல்லா இருக்கும்னு தோனுதோ, அதையே ஃபிக்ஸ் பண்ணு" என்று அவன் சாதாரணமாக சொல்ல, "எதே! நானா... அது... அதெப்படி சார்? நா.. நான் எப்படி?" என்று தடுமாறியவள், பின்னர் ஹரி அழுத்தமாக பார்த்திருப்பதை உணர்ந்து அமைதியாகிட, ஏனோ உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான் ஹரி.


அதேநேரம் ஆஃபீஸில்,


தன் இருக்கையில் அமர்ந்திருந்த அலிஷாவுக்கு ஊரிலிருக்கும் தன் குடும்பத்தின் நினைவுதான். அன்றுதான் தன் அம்மாவோடு அவள் கடைசியாக பேசியது.


தன் குடும்ப கஷ்டங்களை நினைத்தவாறு அமர்ந்திருந்தவள் ஏதோ ஞாபகம் வந்தவளாக தன் பையிலிருந்த டாலரைத் தேட, அதைதான் ஏற்கனவே ருத்ரன் எடுத்திருந்தானே!


'அய்யோ டாலர் எங்க, அது என் லக்கி டாலராச்சே! எங்க போச்சுன்னு தெரியல. ச்சே மிஸ் பண்ணிட்டேனே...' என்று உள்ளுக்குள் யோசித்த வண்ணம் அவள் தன் மேசையில் தேடிக் கொண்டிருக்க, "என்ன அலீ தேடிக்கிட்டு இருக்க, ஏதாச்சும் முக்கியமான பொருளா என்ன?" என்று புரியாமல் கேட்டாள் வைஷாலி.


"ஆமா அக்கா, ரொம்ப முக்கியமான பொருள். என்னோட லக்கி டாலர். ரொம்ப வருஷமா என்கிட்டதான் இருக்கு. பையிலயேதான் வச்சிருப்பேன். ஆனா இப்போ எங்கன்னு தெரியல. அதான்..." என்றுக்கொண்டே அவள் தேட, வைஷாலியும் அவளுடைய மேசையில் தேடியவாறு, "எப்படி இருக்கும்னு சொன்னா நானும் ஹெல்ப் பண்ணுவேன்ல..." என்று சொன்னாள்.


உடனே அலிஷா தன் அலைப்பேசியிலிருந்த அந்த டாலரின் புகைப்படத்தைக் காட்டி, "இதுதான் என்னோட லக்கி சார்ம்" என்று சொல்ல, வைஷாலியோடு சேர்ந்து அப்போதுதான் அலிஷாவுடன் பேச எண்ணி அங்கு வந்த டேஸியும் பார்த்து விட, அவளால் கொஞ்சம் கூட நம்பவே முடியவில்லை.


'இது... இது ஆதிராவோட கழுத்துல இருந்த டாலராச்சே! அப்படின்னா கன்ஃபார்ம் இது ஆதிராதான். இதை இப்போவே போய் ஹரிகிட்ட சொல்லணும்' என்று உள்ளுக்குள் நினைத்து குத்தாட்டம் போட்டவாறு டேஸி ஹரியின் அறையை நோக்கி ஓட, இங்கு தூரத்தில் நின்று அலிஷாவைப் பார்த்துக்கொண்டிருந்த ருத்ரனோ, "ஆதி..." என்று அழைத்தான்.


யாருமே திரும்பாத நிலையில் அலிஷா மாத்திரம் ருத்ரனை நோக்கித் திரும்பிப் பார்க்க, அவளை வரும்படி விழிகளால் சைகை செய்தான் ருத்ரன். அதைப் பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு.


'ஆத்தாடி ஆத்தா... இவன் எதுக்கு நம்மள கூப்பிடுறான்? இது சரியில்லையே... நாம வேணா பார்த்தும் பார்க்காத மாதிரி இருப்போம்' என்று தன்னைத்தானே எச்சரிக்கை  செய்தவாறு அவள் தேடுவது போல் பாவனை செய்துக்கொண்டிருக்க, அவனோ மீண்டும் ஊரே கேட்கக் கைத் தட்ட, இப்போது அந்த தளத்திலிருந்த மொத்தப் பேரின் பார்வையும் ருத்ரன் மேல்தான்.


அவனோ அலிஷாவை ஒற்றை விரலால் அழைக்க, இப்போது ருத்ரனை பார்த்திருந்தவர்கள் அப்படியே திரும்பி அவளைப் பார்க்க, அவளுக்கோ ஒரே வெட்கமாகிப் போய் விட்டது.


'இதுக்கு மேல இங்கேயே நின்னா மானமே போயிரும். மொதல்ல இந்த மாங்கா மடையனுக்கு என்னதான் பிரச்சனைன்னு கேட்டுட்டு வரலாம்' என உள்ளுக்குள் நினைத்த அவள் விறுவிறுவென்று ருத்ரனை நோக்கிச் செல்ல, அவனோ தன் அறைக்குள் நுழைந்தான்.


மேசையில் ஒற்றைக் காலை மடக்கி சாய்ந்து மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டியவாறு அவன் அவளுக்காகக் காத்திருக்க, உள்ளே வேகமாக நுழைந்தவளுக்கு அவன் நின்றிருந்த தோரணை கோபத்தைதான் தூண்டியது.


"நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்ல. இப்படி எல்லார் முன்னாடியும் கைத் தட்டி கூப்பிடுவீங்களா? ஆஃபீஸ் மேட்டர்னா அதான் இன்டர்காம் இருக்குல்ல, அதுல கூப்பிட வேண்டியதுதானே, நீ.. நீங்க..." என்று ஒற்றை விரலை நீட்டிக்கொண்டு அவள் மேலும் ஏதோ பேச வர, அவனோ தன் லேசர் விழிகளால் அவளை ஆராச்சியாகப் பார்த்தபடி ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்க, அப்படியே பேச வந்ததை மறந்து திணற ஆரம்பித்துவிட்டாள் அவள்.


"அது... நான்... என்ன சொல்ல வந்தேன்னா..." என்று அவள் தடுமாறிக்கொண்டிருக்க, "இது உன் டாலரா ஆதி?" என்று அவள் முன் செயினோடு கோர்க்கப்பட்டிருந்த அந்த டாலரை தூக்கிக் காண்பித்தான் ருத்ரன்.


'ஆதியா... யாருங்க அது நம்ம பின்னாடி இருக்காங்களோ?' என உள்ளுக்குள் யோசித்தவாறு அவன் கையில் வைத்திருந்த டாலரை கூர்ந்துப் பார்த்தவளுக்கு அது தன்னுடைய டாலர் என தெரிந்ததும் விழிகள் மின்னின.


"அது என்னோடது, உங்ககிட்ட எப்படி?" என்று அவள் கையை நீட்டிக்கொண்டுக் கேட்க, "நிஜமாவே இது உன்னோடதுதானா?" என்று மெல்ல அவளை நோக்கி ஒவ்வொரு அடியாக வைத்தபடி ஒரு மாதிரிக் குரலில் கேட்டான் ருத்ரன்.


அவன் நெருங்குவதோ அவன் தன்னை அழைக்கும் பெயரோ அவளுடைய மூளைக்கு எட்டவே இல்லை. அவள் பாட்டிற்கு டாலரையே பார்த்தபடி கையை நீட்டிக்கொண்டிருக்க, அவளோடு நூலிடைவெளிக்கு நெருங்கி இருந்தான் ருத்ரன்.


"ஆதி, உனக்கு இது ஞாபகம் இருக்கா?" என்று அவன் ஹஸ்கி குரலில் கேட்க, அப்போதுதான் எதையோ உணர்ந்தவளாக அவன் புறம் வேகமாகத் திரும்பிப் பார்த்தாள் அலிஷா. மூச்சு காற்று படும் தூரத்திற்கு அவன் நெருங்கி நின்றதில் இவளுக்கு மூச்சே அடைத்து விட, உடனே பாய்ந்து விலகப் போனவள் கால் இடறி கீழே விழச் சென்றாள்.


ஆனால், அதற்குள் அவளின் முழங்கையைப் பற்றி அவன் தன்னை நோக்கி இழுத்திருக்க, அவன் மார்பில் முட்டி நின்ற அலிஷாவோ அவனுடைய விழிகளைதான் இமை மூடாமல் பார்த்திருந்தாள்.


அனைவரையும் வசீகரிக்கும் அந்த பழுப்பு நிற விழிகள் அவளையும் கவர்ந்திருக்க வேண்டும். அந்த விழிகளிலேயே மயங்கி அவள் அப்படியே உறைந்துப் போய் நிற்க, தன் கையிலிருந்த செயினை அவளுடைய கழுத்தில் போட்டுவிட்டவன், மெல்ல குனிந்து அவள் இதழோரத்தில் அழுந்த முத்தமொன்றைப் பதித்தான்.


சரியாக, டேஸியும் கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே வர, ஏற்கனவே அவன் முத்தமிட்டதுமே நடப்புக்கு வந்தவள் இப்போது கதவு திறக்கப்பட்ட சத்தத்தில் அதிர்ந்துப் போய் அவனைப் பார்த்தவாறு அப்படியே மயங்கி சரிந்திருக்க, தலையில் கை வைத்துக்கொண்டாள் டேஸி.


"எதையுமே அதிரடியாதான் பண்ணுவியா! இவ வேற பொசுக்கு பொசுக்குன்னு மயங்கி விழுந்துருவா, உங்க இரண்டு பேர வச்சிக்கிட்டு..." என்றுக்கொண்டே அவள் அலிஷாவின் முகத்தில் தண்ணீரை தெளித்து கன்னத்தைத் தட்ட, மெல்ல கண் விழித்தவள் அதற்கு மேல் அங்கு இருக்கவில்லை.


ஆஜானுபாகுவான தோற்றத்தில் நின்றிருந்த ருத்ரனைப் பார்த்ததும் அவள் அங்கிருந்து ஓடி விட, அவனோ சலிப்பாக விழிகளை உருட்டிக்கொண்டான்.


"அவ உன்னை பார்த்து ரொம்ப பயப்படுறா" என்று டேஸி சொல்ல, "அதான் என்னால தாங்க முடியல டேஸ், அவ ஒவ்வொரு தடவையும் என்னை பார்த்து பயப்படும் போதும் கன்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு கோபம் வருது. அதனால நான் அவளையே காயப்படுத்துறேன். ஆதிக்கு எப்படி புரிய வைக்குறதுன்னு தெரியல" என்று இயலாமையோடு சொன்னான் ருத்ரன்.


அவனை பாவமாகப் பார்த்தவளுக்கு அவனின் மனநிலை நன்றாகப் புரிந்தது. ஒரு பெருமூச்சு விட்டவாறு அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தவள், "அலிஷாதான் ஆதின்னு நீ கன்ஃபார்மா சொல்றியா ருத்ரா, ஒருவேள... இது ஆதி இல்லன்னா?" என்று அவள் சந்தேகமாகக் கேட்க, அவளை நிதானமாகத் திரும்பிப் பார்த்தான் அவன்.


"கம் அகைன்?" என்று அவன் கேட்டதும், உள்ளுக்குள் குளிர் எடுத்தாலும் மீண்டும் அதே கேள்வியை அவள் கேட்க, ருத்ரனின் நெற்றி நரம்புகள் புடைக்க விழிகள் சிவந்தன.


"டேஸி, நான் மறுபடியும் மறுபடியும் சொல்ல மாட்டேன். அவ என்னோட ஆதி.. என் ஆதிரா. மறுபடியும் அவள என்னை விட்டு யாரும் பிரிக்க முடியாது. நான் விடவும் மாட்டேன், ஒருதடவை  அவள பிரிஞ்சு இத்தனை வருஷம் நான் அனுபவிச்ச கஷ்டம் போதும், இதுக்கப்பறம் அவளே நினைச்சாலும் என்னை விட்டு போக விட மாட்டேன்" என்று அவன் வெளியே கேட்கும் அளவிற்கு அடித் தொண்டையிலிருந்து கத்த, ஒருகணம் டேஸிக்கே உடல் உதறிவிட்டது.


ருத்ரனிடத்தில் இப்படியொரு ஆக்ரோஷத்தையும் கோபத்தையும் அவள் பார்த்ததே இல்லை. 'இதுக்கு மேல பொறுமையா இருக்குறது சரியா இருக்காது டேஸி, ஹரிகிட்ட பேசி ப்ளான சீக்கிரம் எக்ஸ்கியூட் பண்ணிடணும்' என உள்ளுக்குள் உறுதியாக நினைத்துக்கொண்டாள் அவள்.


********************

அதிரூபன் 08 >>>

https://agnitamilnovels.blogspot.com/2024/10/08.html


மற்ற கதைகளைப் படிக்க 🏃🏃

India link 👇

https://www.amazon.in/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%95%E0%AE%BF/e/B08ZYCHG6C/ref=dp_byline_cont_ebooks_1

USA link 👇

https://www.amazon.com/%25E0%25AE%25B7%25E0%25AF%2587%25E0%25AE%25B9%25E0%25AE%25BE-%25E0%25AE%25B8%25E0%25AE%2595%25E0%25AE%25BF/e/B08ZYCHG6C%3Fref=dbs_a_mng_rwt_scns_share?ref_=d6k_applink_bb_dls



Comments

Popular posts

தஷுரி 10