அதிரூபன் 06

 


"அண்ணே இதுதான் அவனோட ஆஃபீஸ்" என்று அந்த அடியாள் சொல்ல, ருத்ரனின் கண்ணாடியிலான அந்த பெரிய கட்டிடத்தை விழிகளில் அனல் தெறிக்க பார்த்திருந்தான் சுதாகர்.

"சார் ரொம்ப வசதியாதான் வாழுறாரு போல... ஆனா எல்லாமே கொஞ்ச காலம்தான், கூடிய சீக்கிரம் இவன் கதைய முடிச்சிரணும். இப்போ வண்டிய எடுங்கடா!" என்று சுதாகர் கத்த, ஓட்டுனரும் வண்டியை முன்னே செலுத்த சரியாக அவர்களைக் கடந்து சென்றனர் மதுவும் அலிஷாவும்.

அலிஷாவின் உருவம் மங்கலாகத் தெரிய, "டேய் வண்டிய நிறுத்து!" என்று கத்திய சுதாகர், உடனே ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க, காருக்கு பின்னே மறைந்தவாறு சென்றதில் அவனின் கண்களுக்கு சிக்கவில்லை அவள்.

"அண்ணா என்னாச்சு, ஏன் வண்டிய நிறுத்த சொன்னீங்க?" என்று சுதாகரினுடன் இருந்த அடியாள் கேட்க, "இல்லைடா, பாப்பாவ பார்த்த மாதிரி இருந்துச்சு அதான்..." என்றவன் வண்டியை எடுக்குமாறு சொல்ல, இங்கு அலிஷாவோ பயந்தபடி நிறுவனத்திற்குள் நுழைந்தாள்.

'இன்னைக்கு என்னவெல்லாம் காத்திருக்கோ... நமக்குன்னு வருவீங்களாடா!' என ருத்ரனை நினைத்து உள்ளுக்குள் புலம்பிக் கொண்டவள், அன்று மதியம் வரை ருத்ரனை பார்க்கவே இல்லை.

"ஏய் வைஷு, இன்னைக்கு ருத்ரா சார் வரல்லையா என்ன! இல்லை... ஆளையே காணோமே!" என்று அவனைப் பற்றி தெரிந்துக்கொள்ள இவள் பக்கத்திலிருந்த வைஷாலியிடம் கேட்க, "எனக்கும் தெரியல அலீ, ஆனா அவருக்கு ஏதோ உடம்பு சரியில்லன்னு உழவுத்துறை அமைச்சுல இருந்து தகவல் வந்திச்சு. மே பீ அதனால தான் வரல்லையா இருக்கும். ஆமா... நீ எதுக்கு அவர பத்தி கேக்குற?" என்று சந்தேகமாகக் கேட்டாள் வைஷாலி.

"அது... அது வந்து... சும்மா தெரிஞ்சிக்கலாமேன்னு..." என்று இவள் சற்று தடுமாற்றத்தோடு சொல்ல, "ருத்ராவ பத்தி விசாரிக்கிறியா அலிஷா?" என்று பின்னாலிருந்து ஒரு குரல் கேட்க, திடுக்கிட்டுத் திரும்பினாள் அவள்.

அங்கு அவளின் எதிரே டேஸி நின்றிருக்க, 'ஊஃப்ப்...' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டவள், "நீங்களா அக்கா, இப்போ தான் உசுரே வருது" என்றுக் கொண்டே எழுந்து அவளின் அருகே செல்ல, "பேசிக்கிட்டே காஃபி சாப்பிடலாமா?" என்று கேட்டாள் மற்றவள்.

"எதே! அய்யோ அக்கா வேலை இருக்கு, ஹரி சார் மட்டும் பார்த்தாருன்னா அவ்வளவுதான்" என்று அலிஷா பதற்றமாக சொல்ல, "ஏய் அலீ, இந்த கம்பனியில என்னோட ஷெயார்ஸும் இருக்கு, நானும் ஒருவகையில டிரெக்டர்தான். சோ, வா போகலாம்" என்றுக்கொண்டே அவளை இழுத்துக்கொண்டு செல்ல, அலிஷாவும் அவள் இழுத்த இழுப்பிற்கு சென்றாள்.

"அக்கா நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே, எப்போ பாரு இங்கேயே சுத்திக்கிட்டு இருக்கீங்களே, ஹாஸ்பிடலுக்கு எல்லாம் போக மாட்டீங்களா?" என்று அவள் கேட்க, அவளை போலியாக முறைத்துப் பார்த்த டேஸிக்கும் பக்கென்று சிரிப்பு வந்துவிட்டது.

"ஆதிராவும் இப்படிதான், என் கூட  ரொம்ப ஜாலியா பேசுவா" என்று அவள் சொன்னதுமே இப்போது அலிஷாவின் புருவங்கள் கேள்வியாக முடிச்சிட்டன.

"இந்த பெயர நான் எங்கேயோ கேள்விப்பட்டிருக்கேன், ஆனா எங்கன்னுதான் தெரியல..." என்று அவள் நெற்றியை தட்டியவாறு யோசிக்க, "ருத்ரன் சொல்லி இருப்பான்" என்ற டேஸி, "அலீ, நீ ஒரு உதவி பண்ணணும்" என்று மெல்ல பேச்சை ஆரம்பித்தாள்.

சரியாக, அலிஷாவுக்கு அழைப்பு வர, அலைப்பேசி திரையைப் பார்த்தவள், உடனே அழைப்பை ஏற்று "அம்மா..." என்று அழைத்ததும்தான் தாமதம், மறுமுனையில் அவரின் அழுகை சத்தம் தான் கேட்டது. இவளுக்கோ ஒருகணம் எதுவுமே புரியவில்லை.

"அம்மா, என்னாச்சு ஏன் அழுகுற?" என்று இவள் இங்கு பதற்றப்பட, "அலீ... அலிஷா விஷால போலீஸ் பிடிச்சிட்டு போயிட்டாங்கம்மா. என்ன பண்றதுன்னு தெரியல, பயமா இருக்கு" என்று வளர்மதி அழுகையோடு சொல்ல, அலிஷாவின் முகமோ இறுகிப் போனது.

"அம்மா, என்னால எந்த உதவியும் பண்ண முடியாது, போலீஸ் ஒன்னும் சும்மா பிடிச்சிட்டு போயிருக்க மாட்டாங்க. அதுமட்டுமில்லாம இது ஒன்னும் நமக்கு புதுசில்லையே! இதை பத்தி பேசத்தான் எனக்கு கால் பண்ணுவீங்கன்னா தயவு செஞ்சு கால் பண்ணாதீங்க!" என்று அவள் இறுகிய குரலில் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்திருக்க, டேஸியோ அவளையே தான் அமைதியாகப் பார்த்திருந்தாள்.

"என்னாச்சு அலீ, ஏதாச்சும் ப்ராப்ளமா?" என்று அவள் அக்கறையோடுக் கேட்க, "ஆமா அக்கா, வீட்டுல தான். உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன... தம்பிய போலீஸ் பிடிச்சுட்டு போயிட்டாங்களாம், அதுக்கு நான் என்ன பண்ண? நான் அவங்களோட சொந்த மகளா இல்லன்னாலும் என் குடும்பமா நினைச்சு தான் நான் அவங்களுக்காக மாடா உழைக்கிறேன். ஆனா அந்த அக்கறை என் தம்பிக்கு கொஞ்சம் கூட இல்லை" என்று அலிஷா கலங்கிய விழிகளோடு சொல்ல, ஒருகணம் அதிர்ந்து விழித்தாள் டேஸி.

"வாட்! அது உன்னோட குடும்பம் இல்லையா?" என்று அவள் அதிர்ச்சி குறையாத குரலில் கேட்க, "இல்லை அக்கா, என்னை ஆசிரமத்துல இருந்து தத்தெடுத்ததா சொன்னாங்க. என்ட் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி என் தலையில பலமா அடிபட்டிருச்சு, அதுல முன்னாடி நடந்த விஷயங்கள் கூட எனக்கு மறந்து போயிருச்சு. இதெல்லாம் என் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு. நான் யாருக்கு என்ன பாவம் பண்ணேன்னு தெரியல, மறுபடியும் சுயநினைவுக்கு திரும்பின நாள்லயிருந்து பிரச்சனைதான். அந்த ஆக்சிடன்ட்ல நான் செத்தே போயிருக்கலாம்" என்று பேசிக்கொண்டு சென்ற அலிஷாவின் விழிகளிலிருந்து நீர் கசிந்து தரையைத் தொட்டது.

ஏனோ டேஸிக்கு இப்போது இவளுடைய கதையைக் கேட்டதிலிருந்து பல குழப்பங்கள் சிந்தனைக்குள் ஓட, "அலீ.. அலிஷா நான் மறந்தே போயிட்டேன். முக்கியமான வேலை ஒன்னு இருக்கு. நான் இம்மீடியட்டா போகணும். நீ எதை பத்தியும் யோசிக்காம ரிலாக்ஸா இரு!" என்று அவசர அவசரமாக ஆறுதலை சொல்லி விட்டு அங்கிருந்து ஓட, விழிநீரைத் துடைத்தெறிந்து விட்டு தன் இருக்கைக்கு சென்றாள் மற்றவள்.

இங்கு டேஸியோ அடித்துப் பிடித்து ஹரியின் அறைக்குள் படாரென கதவைத் திறந்துக்கொண்டு நுழைய, ஹரிக்கே ஒருகணம் பக்கென்று இருந்தது.

"வாட்! இப்போ எதுக்கு இப்படி வந்து நிக்குற?" என்று அவன் பதற்றமாகக் கேட்க, "அலிஷாதான் நம்ம ஆதிரா ஹரி..." என்று டேஸி சொன்னதும், தூக்கி வாரிப்போட்டவனாக எழுந்து நின்றுவிட்டான் அவன்.

"வாட்! என்ன சொல்ற... ஆர் யூ மேட்? அது... அது எப்படி சாத்தியம்?" என்று அதிர்ச்சி குறையாமல் ஹரி கேட்க, "என.. எனக்கு அப்படிதான் தோனுது, ஏன்னா..." என்று அலிஷா அவளிடம் சொன்னது அத்தனையையும் சொல்லி முடித்தாள் டேஸி.

அதைக் கேட்டவனுக்கு ஒருபக்கத்தில் அதிர்ச்சியாக இருந்தாலும் இன்னொரு புறம் சந்தேகமாக இருந்தது. "ஆனா டேஸி... அலிஷாதான் ஆதிரான்னு நாம உறுதியா சொல்லிட முடியாது. அவளுக்கு பழைய நியாபகங்கள் இல்லை, ஆதிரா இப்போ உயிரோட இல்லை. என.. எனக்கு குழப்பமா இருக்கு" என்று அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறு ஹரி சொல்ல,

"இதுலயே புரிஞ்சிக்க ஹரி, அவங்க இரண்டு பேரும் ஒன்னுதான். இது எனக்கு ஆரம்பத்துல இருந்தே சந்தேகமா இருந்துச்சு அதனாலதான் அப்பப்போ அலிஷாவுக்கு ஏதாச்சும் ஃபீல் ஆகுதான்னு கேட்டுட்டே இருப்பேன். ஆதிரா இறந்ததா நமக்கு தகவல் வந்திச்சே தவிர அவ இறந்ததுக்கு எந்த ஆதாரமும் இல்லை. கடைசியா அவ வீட்டை விட்டு வெளியில போயிருக்கா. அப்போ தான் அந்த ஆக்சிடென்ட் ஆகியிருக்கு. அவளோட பாடி கூட கிடைக்கலன்னு சொன்னாங்க. அட் த சேம்டைம் அலீஷாவுக்கும் ஆக்சிடன்ட்ல எல்லாமே மறந்து போயிருக்கு. சோ... ஐ அம் டேம்ன் ஷுவர் அது ஆதிராதான்" என்று அவள் உறுதியாக சொல்ல, ஹரிக்கு பைத்தியமே பிடித்து விட்டது.

"ஏய் டேஸி உண்மைய சொல்லு நீ படிச்சு டாக்டர் ஆனியா, இல்லன்னா காசு கட்டி டாக்டர் ஆனியா? பூரா சன்டீவி சீரியல் கதைகளாவே சொல்றியே அதான்..." என்று ஹரி அவளை கூர்ந்துப் பார்த்தவாறு சொல்ல, அடுத்து அவள் முறைத்த முறைப்பில், "எனக்கும் நீ சொல்றதுதான் சரின்னு தோனுது" என்று சரணடைந்துவிட்டான் அவன்.

"அலிஷா கிட்ட கூடிய சீக்கிரம் இதை பத்தி பேசியே ஆகணும் ஹரி, நமக்கு அவ்வளவா நேரம் இல்லை" என்று டேஸி தீவிரமான முகபாவனையோடு சொல்ல, ஹரிக்கும் அதுவே சரியென்று தோன்றியது.

அன்று மாலை ஆஃபீஸ் முடிந்ததுமே வேகவேகமாக தன் பொருட்களை எடுத்து வைத்து ஏதோ பள்ளிக் கூடத்திலிருந்து ஓடும் மாணவி போல் அலிஷா முதல் ஆளாக லிஃப்ட்டுக்குள் ஏறப் போக, சரியாக கதவு திறந்ததும் உள்ளே பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டவாறு நின்றிருந்தான் ருத்ரன்.

அவனைப் பார்த்ததும் இவளோ அப்படியே உறைந்துப் போய் நிற்க, ருத்ரனோ அலிஷாவையே இமை வெட்டாமல் பார்த்திருந்தான். அதேநேரம் மற்றவர்களும் வேகமாக லிஃப்டுக்குள் நுழைய, "ஏய் அலீ, என்னடீ மசமசன்னு நிக்குற... கூட்டம் சேருறதுக்குள்ள சீக்கிரம் லிஃப்ட்ல ஏறு!" என்று கத்திக் கொண்டு வைஷாலி அவளை லிஃப்ட்டுக்குள் தள்ளி தானும் லிஃப்ட்டுக்குள் ஏறிக் கொண்டாள்.

அப்போதுதான் பின்னால் நின்றிருந்த ருத்ரனைக் கண்டாள் வைஷாலி. அவனைப் பார்த்ததும் அவளுடைய விழிகள் மின்ன, "ஏய் அலீ, ருத்ரா சார் பின்னாடி இருக்கு. இன்னைக்கு முழுக்க அவர பார்க்கவே முடியாதுன்னு நினைச்சுட்டேன். தேங்க் கோட்!" என்று துள்ளிக் குதிக்காத குறையாக அவள் சந்தோஷப்பட, அலிஷாவுக்கு தான் இதயம் படுவேகமாக அடித்துக்கொண்டது.

அவனோ அவளையே பார்த்திருக்க, அவனின் ஊசித் துளைக்கும் பார்வையை அவளால் நன்றாகவே உணர முடிந்தது. திரும்பியும் பார்க்காது சிலை போல் அவள் நின்றிருக்க, திடீரென இன்னும் சில பேர் லிஃப்டுக்குள் நுழைய, ஒரு வலிய கரம் அலிஷாவின் முழங்கையைப் பற்றி பின்னால் இழுத்தெடுத்தது.

அவளோ லிஃப்ட்டின் சுவற்றில் சாய்ந்திருக்க, அவளை இரு பக்கமும் அணைக்கட்டுவது போல் நின்றிருந்தான் ருத்ரன். ஆட்கள் அதிகரிக்க அதிகரிக்க இருவருக்கும் இடையிலான இடைவெளி குறைந்துக்கொண்டே போக, அங்கு சுற்றி இருந்தவர்களும் நெரிசலில் இவர்களைக் கவனிக்கவே இல்லை.

ருத்ரனின் பார்வை அலிஷாவை ஊடுருவ, அவளோ பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டாள். கிட்டத்தட்ட இருவரின் இதழுக்கும் நூலிடைவெளிதான். அலிஷாவோ நகர முயற்சிக்க, ஆனால் எங்கும் நகர முடியாத நிலை.

"நா.. நான் போகணும்" என்று அவள் திக்கித்திணறி அவனுடைய விழிகளைப் பார்க்காமல் பேச, "நான் ஒன்னும் உன்னை பிடிச்சுட்டு இருக்கலையே!" என்றான் அவன் சாதாரணமாக.

அவன் சொல்வதும் உண்மைதானே! மற்ற ஆண்களின் மேல் மோதி விடக் கூடாது என்று அவன் அரணாக நிற்கிறானே தவிர அவனின் சுண்டுவிரல் கூட அவள் மேல் படவில்லை.

அதைக் கவனித்தவள் அவனைத் தாண்டி நகரப் போக, சரியாக சில ஆட்கள் வெளியேறி இன்னும் சில பேர் கீழ் தளத்திற்கு செல்வதற்காக லிஃப்ட்டுக்குள் நுழைந்ததில் ருத்ரன் மேலும் முன்னோக்கி வர, இப்போது அலிஷாவின் உடலும் அவனின் உடலும் தாராளமாக உரசிக்கொண்டது.

ஏனோ அவளுக்கு வேகமாக மூச்சு வாங்க, பேச முடியாமல் வார்த்தைகள் தடுமாற அவள் சிரமப்படுவதை உணர்ந்து புருவங்களை நெறித்தவன், ஒரு தளத்தில் லிஃப்ட் நின்றதுமே வேகமாக ஆட்களை நகர்த்திக்கொண்டு அலிஷாவை வெளியே இழுத்துச் சென்றான்.

"மை இன்... இன்ஹெலர்... பே... பேக்" என்று அவள் ருத்ரனின் கையிலிருந்த தன் பேக்கை சுட்டிக்காட்டி சொல்ல முயற்சிக்க, அவளை அந்த தளத்திலிருந்த சோஃபாவில் அமர வைத்தவன், வேகமாக அவளுடைய பையை அலச ஆரம்பித்தான்.

"இடியட் எங்க வச்சிருக்குற உன் இன்ஹெலர.... ஷீட் ஷீட் ஷீட்! எங்க இருக்கு...." என்று பதறியபடி பையை அலசியவனின் கைகளில் அவளுடைய இன்ஹெலர் சிக்க, உடனே அவளுடைய கைகளில் அவன் திணிக்க, அதை உபயோகித்தவளுக்கு அப்போதுதான் மூச்சே வந்தது.

பெரிய மூச்சுக்களை விட்டவாறு அவள் அப்படியே அமர்ந்திருக்க, "எத்தனை நாளா உனக்கு இந்த ப்ராப்ளம் இருக்கு?" என்று ருத்ரன் கேட்டதும், புருவங்களை நெறித்து யோசிக்கத் தொடங்கினாள் அவள்.

"அது... சரியா ஞாபகம் இல்லை... ஐ திங் ஆல்மோஸ்ட் ஃபார் ஆர் ஃபைவ் இயர்ஸ்ஸா எனக்கு இருக்கு" என்று அவள் யோசித்துக்கொண்டே சொல்ல, "ஓ..." என்றதோடு முடித்துக்கொண்ட அவனுடைய முகத்திலோ எந்த உணர்ச்சியும் இல்லை.

அலிஷாவும் மூச்சு வாங்கியவாறு நிமிர்ந்துப் பார்த்தவள், அந்த தளத்தில் யாரும் இல்லாததை உணர்ந்து சட்டென ருத்ரனை திரும்பிப் பார்த்தாள். அவனோ பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டவாறு அவளையே தான் பார்த்துக்கொண்டு நின்றிருக்க, வேகமாக எழுந்து நின்றாள் அலிஷா.

அவனுடைய விழிகள் இப்போது அவளை கூர்மையாக நோக்க, அதற்கு மேல் அங்கு நிற்காமல் வேகமாக அவள் லிஃப்டை நோக்கி ஓட, போகும் அவளை வெறித்துப் பார்த்திருந்தவனின் பார்வை இப்போது தன் கையில் பொத்தி வைத்திருந்த டாலரை நோக்கியது.

அலிஷாவின் பையை அலசும் போது அவளுடைய பையில் இருந்த டோலர்தான் அது. ஒரு இதய வடிவத்திற்குள் ஒரு காதல் ஜோடி இருப்பது போல் இருந்தது அந்த டோலர். அந்த டாலரை இறுகிய முகமாக பார்த்திருந்தவனின் நினைவுகள் அந்த ஒரு சம்பவத்தை மீட்டியது.

"தேவ், எனக்கு என்னவோ இது சரியா தோனல... நாம தப்பு பண்றோமோன்னு இருக்கு... இதெல்லாம் வேணாமே!" என்று ஆதிரா கெஞ்சலாக சொல்ல, "அதெல்லாம் ஒரு தப்பும் இல்லை பேபி, நாம லவ் பண்றோம், என்னைக்கும் நான் உன் கூடத்தான் இருக்க போறேன். அப்பறம் என்ன?" அவளுடைய பக்கத்தில் அமர்ந்து அவள் கரத்தோடு தன் கரத்தை கோர்த்தவாறுக் கேட்டான் ருத்ரன்.

"இருந்தாலும்.... மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு. அம்மா அப்பாவ ஏமாத்துறோமேன்னு..." என்றுக்கொண்டே அவள் படுக்கையில் சரிய, தன் ஷர்ட் பட்டன்களை கழற்றியவாறு அவள் மேல் படர்ந்தவன், "அப்படியே உன்னை கல்யாணம் பண்ணணும்னு கேட்டதும் உங்கப்பன் உன்னை தூக்கி கொடுக்குற மாதிரிதான்!" என்று நொடிந்துக்கொண்டவாறு அவளுடைய கழுத்தில் வளைவில் முகத்தைப் புதைத்தான்.

அப்போதும் ஆதிரா ஒருவித தயக்கத்தோடு அவனோடு ஒன்றாமல் தடுமாற, அதைப் புரிந்துக் கொண்ட ருத்ரன் உடனே நிமிர்ந்து அவளுடைய முகத்தைப் பார்த்து விட்டு விருட்டென எழுந்தமர்ந்தான்.

"சா.. சாரி தேவ்! எனக்கு பயமா இருக்கு.. கல்யாணம் ஆகாம இப்படி பண்ணா தப்புல்ல அதான்..." என்று அவள் தழுதழுத்த குரலில் சொல்ல, அவளை பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்தவன், சட்டென என்ன நினைத்தானோ தன் கழுத்தில் அணிந்திருந்த செயினை கழற்றி அவளுடைய கழுத்தில் போட்டுவிட்டான்.

வேகமாக எழுந்துச் சென்றவன், "கண்டிப்பா மேடம் பேக்ல மினி கோயிலே வச்சிருப்பீங்க" என்றுக்கொண்டே ஆதிராவின் பையை அலச, அதில் அவன் நினைத்தது போல் குங்குமம் இருக்கவும், அதை எடுத்தவன் இரு விரல்களால் குங்குமத்தை அள்ளி அவளுடைய நெற்றி வகுட்டில் வைத்துவிட்டான்.

"இப்போ ஆல்மோஸ்ட் நமக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னே வச்சிக்கோ, இப்போ ஓகேயா?" என்று அவன் குறும்புப் புன்னகையோடுக் கேட்க, ஆதிரோ அழுதுக்கொண்டே அவனுடைய தோள் மேல் சாய்ந்துக்கொண்டாள்.

நடந்ததை நினைத்துப் பார்த்தவனின் விழிகள் கலங்கியிருக்க, "ஆதி..." என்று அவனுடைய இதழ்கள் மெல்ல முணுமுணுத்துக்கொண்டன.


********************

அதிரூபன் 07 >>>

https://agnitamilnovels.blogspot.com/2024/10/07.html


மற்ற கதைகளைப் படிக்க 🏃🏃

India link 👇

https://www.amazon.in/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%95%E0%AE%BF/e/B08ZYCHG6C/ref=dp_byline_cont_ebooks_1

USA link 👇

https://www.amazon.com/%25E0%25AE%25B7%25E0%25AF%2587%25E0%25AE%25B9%25E0%25AE%25BE-%25E0%25AE%25B8%25E0%25AE%2595%25E0%25AE%25BF/e/B08ZYCHG6C%3Fref=dbs_a_mng_rwt_scns_share?ref_=d6k_applink_bb_dls


Comments

  1. அப்படின்னா... அந்த ஆதி தான் இந்த அலிஷா...! ஸோ.. ஆக்சிடன்ட்ல அவளுக்கு நினைவுகள் மறந்துப் போச்சு...
    அப்படித்தானே..?? சூப்பர்..! அப்படின்னா, ருத்ரனோட எதிர்பார்ப்பு பொய்க்கலை
    தாங்க் காட்..!
    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete

Post a Comment

Popular posts

தஷுரி 10