தஷுரி 26

 



அடுத்த இரண்டு நாட்கள் விக்டருக்கு தீவிர சிகிச்சை நடைப்பெற்றது. தஷுரி பேசிவிட்டுச் சென்றும் அன்றைய நாள் முழுக்க எந்த முன்னேற்றமும் இல்லை அவனிடம். அடுத்தநாள், ரோய் தன் நண்பனின் அருகில் அமர்ந்திருக்க, திடீரென விக்டரிடத்தில் சிறு அசைவு தெரிந்தது.

ரோய்யோ தன் நண்பனை கூர்ந்துப் பார்க்க, மூடியிருந்த அவனுடைய விழிகளில் மெல்ல கருமணிகளின் அசைவுத் தெரிய, தான் காண்பது கனவா என்று அதிர்ச்சியில் "விக்டர்..." என்று மெல்ல அழைத்தான் ரோய்.

கஷ்டப்பட்டு விழிகளைத் திறந்த விக்டர், சுற்றி முற்றி விழிகளை சுழலவிட்டு தான் இருக்கும் இடத்தைப் பார்க்க, அதிர்ந்துப் போய் அவனையே பார்த்துக் கொண்டிருந்த மற்றவனுக்கு அப்போதுதான் நடப்பு புரிய, அவனுக்கோ கை கால் புரியவில்லை.

சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்காத குறையாக அவன், "டாக்டர்... டாக்டர்..." என்று கத்த, டாக்டர் வருவதற்குள் இவனோ வலியை பொறுத்துக் கொண்டு எழுந்து அமர்ந்தேவிட்டான்.

"உனக்கெல்லாம் பொறுமையே இல்லையா?" என்று கேட்டவாறு அவனை சென்று ரோய் பிடித்துக்கொள்ள, விக்டரின் விழிகளோ கோபத்தில் சிவப்பேறி இருந்தன. அந்த கோபத்திற்கான காரணத்தை இவன் உணராமலில்லை.

"ஜேக்கப்ப விடக் கூடாது ரோய்" என்று கர்ஜனையோடு அவனுடைய குரல் ஒலிக்க, அவனுடைய கோபத்தின் அளவு அதிகரித்துக்கொண்டு செல்வதை உணர்ந்த மற்றவன், "சில் விக்டர், கண்டிப்பா ஏதாச்சும் செய்வோம். ஆனா, அதுக்கான நேரம் இது இல்லை" என்றான் அழுத்தமாக.

அடுத்தகணம் வைத்தியரும் அறைக்குள் நுழைந்து விக்டரை பரிசோதிக்க, அப்போது தான் தஷுரியின் முகம் அவனுடைய மனக்கண் முன் வந்தது. அத்தோடு அவள் பேசிய போல சில வசனங்களும் அவனின் மனதிற்குள் ஓட, அது கனவாக இருக்குமோ என்று நினைத்துக்கொண்டான் விக்டர்.

அடுத்த இரண்டு நாட்கள் வைத்தியசாலையிலேயே விக்டர் இருக்க, மூன்றாவது நாள் காலையிலேயே டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தான் ரோய்.

தன் அறைக்கு அவன் வந்ததுமே பதறிக்கொண்டு வந்தனர் அஃப்ரிமும் ராதாவும்.

"என்னாச்சு கண்ணா, இப்போ பரவாயில்லயே! ரொம்ப வலிக்குதா என்ன? எல்லாமே கண் இமைக்குற நேரத்துல நடந்துருச்சு" என்று விக்டரின் அருகே அமர்ந்து அவனுடைய தலையை வருடியவாறு சொன்ன ராதா, "தம்பி, நான் விக்டருக்கு கசாயம் பண்ணியிருந்தேன். அதை கொஞ்சம் கொண்டு வர சொல்றீங்களா?" என்று ரோயிடம் கேட்டார்.

"வேணாம் ராதா, அவனே இப்போ தான் நல்லா இருக்கான். இப்போ அதை சாப்பிட்டான்னா அவ்வளவு தான். அதுமட்டுமில்லாம நான் இதுக்கெல்லாம் பதற மாட்டேன், வில்லியம் சாருக்கும் விக்டருக்கும் இதெல்லாம் புதுசில்ல. சும்மா விடு, தானா சரியாகிடும்" என்ற அஃப்ரிம், "அந்த ஜேக்கப்ப என்ன பண்றதா இருக்க விக்டர்?" என்று கேட்டார் தன் மகனுக்கு அவன் செய்ததை நினைத்து கடும் ஆத்திரத்தில்.

விக்டருக்கும் விழிகள் கோபத்தில் கொந்தளிக்க, "மொதல்ல துரோகிங்கள கொல்லணும், அப்பறம் என் எதிரிய கவனிக்கிறேன்" என்றான் பற்களைக் கடித்துக்கொண்டு.

சரியாக "ஹ்ர்ம்... ஹ்ர்ம்..." என்ற செருமல் சத்தம்.

வேகமாகத் திரும்பிப் பார்த்தவன் வாசலில் தயக்கமாக நின்றிருந்தவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க, கைகளைப் பிசைந்தவாறு முட்டிக்கொண்டு வந்த அழுகையை கீழுதட்டைக் கடித்து அடக்கி கலங்கிய விழிகளை மறைக்க அரும்பாடு பட்டவாறு மெல்ல நடந்து வந்தாள் தஷுரி.

அவளின் ஒவ்வொரு முக மாற்றத்தையும் அவன் கவனிக்காமல் இல்லை. "தஷு, பேசு..." என்று ராதா மெல்ல சொல்லி விழிகளால் காட்ட, எச்சிலை விழுங்கிக் கொண்டு, "என்னங்க... அது..." என்று ஏதொ ஒன்று பேச வந்தவள் அடுத்தகணம், "விக்டர்..." என்று கதவை படாரெனத் திறந்துக்கொண்டு ஓடி வந்து தன்னவனை அணைத்த லாராவைப் பார்த்து அதிர்ந்துப் போய் நின்றாள்.

இதை விக்டர் மட்டுமல்ல சுற்றி இருந்தவர்கள் கூட எதிர்பார்க்கவில்லை. அவனை இறுக அணைத்திருந்தவள், "உன்னை ஷூட் பண்ணிட்டாங்கன்னு கேள்விப்பட்டதுல இருந்து என்னால தாங்கிக்கவே முடியல. எப்போ உன்னை பார்க்க மாட்டோமான்னு இருந்தேன். நீ அன்னைக்கு கல்யாணத்தை தள்ளி வச்சிக்கலாம்னு சொல்லிட்டோ போயிட்ட, பட் ஸ்டில் ஐ லவ் யூ என்ட் ஐ அம் வெயிட்டிங் ஃபார் யூ!" என்று சொல்லிக் கொண்டே போக, இத்தனை நேரம் விழிகளில் தேங்கியிருந்த கண்ணீர் கன்னத்தின் வழியே ஓடி தரையைத் தொட்டது.

'இவ எங்கயிருந்து வந்தா...' என்று நினைத்த வண்ணம் ரோயும் அஃப்ரிமும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, ராதாவோ அது யாரென்று தெரியாமல் அவள் விக்டரை அணைத்திருப்பதை எரிச்சலாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.

தஷுரிக்கோ இப்போது அழுகை நிற்க, கோபமும் ஆத்திரமும் தான் பெருகியது. உதட்டை சுழித்துவிட்டு அவள் விறுவிறுவென்று வெளியேறி இருக்க, வாசலை எட்டிப் பார்த்துவிட்டு லாராவை தன்னிடமிருந்து பிரித்தான் விக்டர்.

"தேங்க்ஸ் லாரா, பட் எனக்கு இப்போ நிறைய வேலை இருக்கு. ஏற்கனவே ஹாஸ்பிடல்ல இருந்ததால எல்லாமே பெண்டிங்ல இருக்க. சோ... ஷெல் வீ கேட்ச்அப் டுமோர்ரோ நைட் அட் ஹோட்டல் டிசோசா நம்பர் ***..." என்று அவன் கேட்க, "ஷூவர் மை லவ்" என்றுக்கொண்டே அவனின் இதழில் அழுந்த முத்தத்தைப் பதித்தாள் லாரா.

உடனே விக்டர் முகத்தைத் திருப்பிக்கொள்ள, இவளுடைய இதழோ மறைமுகமாக விஷமப் புன்னகை புரிந்தன.

சுற்றி இருப்பவர்கள் அவன் நடந்துக்கொள்ளும் விதத்தில் அதிர்ந்துப் போய் புரியாது நோக்க, மீண்டும் அறைக்குள் நுழையப் போன தஷுரி விக்டரை பேசியதைக் கேட்டு அப்படியே நின்றுவிட்டாள்.

'நான்தான் முட்டாள், ஒவ்வொரு முறையும் இவன்கிட்ட ஏமாந்துட்டே இருக்கேன். ஒரே காதல்ல பல தடவை தோத்துப் போயிட்டேன். போதும் தஷு, இனி வேணாம்' என்று மனம் தாங்காமல் அழுதுக்கொண்டே நகரப் போனவள், அறையிலிருந்து உற்சாகமாக வெளியே வந்த லாராவின் விழிகளுக்குத் தென்பட, "ஏய் செர்வன்ட்..." என்று கத்தி அழைத்தாள் அவள்.

தஷுரியின் கால்கள் அப்படியே நிற்க, விழிநீரைத் துடைத்தெறிந்து லாராவை திரும்பிப் பார்த்தாள். தன் முன் நின்றிருந்தவளை ஏளனமாகப் பார்த்தவாறு நடந்து வந்தவள், "இங்க இருந்து தொலைஞ்சு போயிட்டேன்னு நினைச்சா மறுபடியும் என் முன்னாடியே வந்து நிக்குற, ஆமா... அது யாரு உன் அம்மாவா! இரண்டு பேரும் ரொம்ம க்ளெவரா தான் இருக்கீங்க" என்று குத்திக் காட்டிப் பேச, அவளை முறைத்துப் பார்த்தாள் தஷுரி.

"விக்டர மேடம் காதலிக்கிறீங்கல்ல, பட் அவன் என்னோடது தஷுரி. எனக்கு சொந்தமானவன். ஆசைப்படுறது தப்பில்ல, தகுதி தெரிஞ்சு ஆசைப்படணும் புரியுதா?" என்று அத்தனை வன்மத்தோடு லாரா வார்த்தைகளைக் கொட்ட, விழிகளை அழுந்த மூடித் திறந்தவள், "ஆஹான்!" என்று நீட்டி முழக்கினாள் நக்கலாக.

மற்றவளோ புரியாது நோக்க, "அத்தனை பேர் முன்னாடி கல்யாண உடுப்புல நீ நின்னுட்டு இருக்குறப்போ கல்யாணத்தை தள்ளி வச்சிக்கலாம்னு சொல்லிட்டு போனாரே அவரு, அப்போ நீ அனுபவிச்ச அந்த அவமானத்த விடவா நான் உன்கிட்ட அவமானப்பட்டு போயிட்டேன்னு நினைக்கும் போது கொஞ்சம் சந்தோஷமா தான் இருக்கு" என்று நக்கலாக சொன்னாலும் தஷுரி அவளை குத்திக் காட்டி சொல்லிச் செல்ல,  லாராவுக்கு முகமே கறுத்துவிட்டது.

அவமானத்தில் அவளுடைய கோபம் கொந்தளிக்க, "ஏய்..." என்று பற்களைக் கடித்துக்கொண்டு அவள் ஒரு அடி முன்னே வைக்க, இரண்டடி முன்னே வைத்து, "முடிஞ்சா கை வைச்சு பாரு!" என்றாள் தஷுரி கெத்தாக.

ஒருகணம் லாராவுக்கு தூக்கி வாரிப்போட்டது. எச்சிலை விழுங்கிக்கொண்டவள், அதற்கு மேல் அங்கு நிற்கப் பிடிக்காது அங்கிருந்து விறுவிறுவென செல்ல, அவள் சென்ற இடத்தை வெறித்துப் பார்த்தவள் அங்கிருந்து தனதறைக்கு வந்து சேர்ந்தாள்.

அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டிய தஷுரிக்கு ஏனோ அழுகையை அடக்க முடியவில்லை. விழிகளிலிருந்து கண்ணீர் ஓட, கதவில் சாய்ந்தவாறு அப்படியே தரையில் அமர்ந்தவளுக்கு லாரா விக்டரை அணைத்தது மட்டுமல்லாமல் இருவரும் முத்தமிட்டது கூட மீண்டும் ஞாபகத்திற்கு வர, முகத்தை மூடி அழுதேவிட்டாள் அவள்.

அன்று மதியம் வரை அறையிலிருந்து வெளியே வரவில்லை தஷுரி. மதியம் கதவு தட்டப்படவும் கதவைத் திறந்தவள், முன்னே இருந்த வேலைக்காரி ஒருத்தி சொன்ன செய்தியில் உடனே ஹெலனின் அறையை நோக்கி ஓடினாள். அறைக்குள் நுழையும் போதே விசில் சத்தம்.

உள்ளே நுழைந்து கதவில் சாய்ந்தவாறு தன் தோழியைப் பார்த்திருந்த தஷுரியின் இதழ்கள் மெல்ல புன்னகைத்தன. அங்கு சூட்கேஸில் சந்தோஷத்தில் விசிலடித்தவாறு ஹெலன் உடைகளை அடுக்கிக்கொண்டிருந்தாள்.

"யக்கோவ், இங்க இருந்து கெளம்ப போறீங்கன்னு ரொம்ப ஹேப்பி போல!" என்று தஷுரி சொன்னதும், தன் தோழியின் குரலில் சட்டெனத் திரும்பியவள், "பின்ன, இல்லாம இருக்குமா என்ன! எத்தனை மாசத்துக்கு அப்பறம் வெளில போறேன். என்னோட ஃப்ரென்ட்ஸ், ஃபேமிலி எல்லாரையும் பார்க்க போறேன் தஷு. ரொம்ப ஹேப்பியா இருக்கு, எல்லமே உன்னால தான்" என்று அத்தனை சந்தோஷத்தோடு சொன்னாள் ஹெலன்.

அப்போது தான் தஷுரியின் அழுது வீங்கிய முகத்தையும் விழிகளையும் கவனித்தாள் அவள். "என்னாச்சு தஷு?" என்றுக்கொண்டே அவளருகில் வர, "ஒன்.. ஒன்னு இல்லை அக்கா" என்றாள் அவள் தயங்கியபடி.

ஹெலனோ தஷுரியை உள்ளே இழுத்து கதவை சாத்தியவள், "என்னன்னு சொல்லு தஷு, ஏன் ஒரு மாதிரி இருக்க? ஏதாச்சும் பிரச்சனையா?" என்று பதற்றமாகக் கேட்க,

"நா.. நான் ராசியே இல்லாதவ அக்கா. நான் ஆசைப்படுறது ஒன்னும் நடந்ததில்ல. நான் அவர ரொம்ப  காதலிச்சேன். அவர் ஏத்துக்கல. அப்பறம் அவர் என்னை புரிஞ்சிக்கிட்டு என்னை காதலிக்கிறாரு. ஆனா என்னால ஏத்துக்க முடியல. அவர் பக்கத்துல நான் எல்லாம் ஒன்னுமே இல்லன்னு தோனுச்சு. அவருக்கு நான் பொருத்தமில்லாதவன்னு நினைச்சு ஒதுங்கி போனேன். ஆனா, காதல்ல அதெல்லாம் ஒன்னுமே இல்லைன்னு புரிஞ்சு போச்சு. மறுபடியும் என் காதல சொல்லலாமேன்னு நினைக்கும் போது என் வாழ்க்கையில மறுபடி ஒரு தடை" என்று தஷுரி சொல்லி முடிக்க, 'மீண்டும் என்ன?' என்ற ரீதியில் அதிர்ந்துப் போய் பார்த்தாள் மற்றவள்.

தஷுரியும் இன்று நடந்ததை முழுதாக சொல்லி முடிக்க, ஹெலனின் விழிகளோ திகைப்பில் விரிந்தன.

"இல்லை தஷு, நீ ஏதோ தப்பா அன்டர்ஸ்டேன்ட் பண்ணியிருக்கன்னு நினைக்கிறேன். விக்டர் சார் கண்டிப்பா உன்னை தான் லவ் பண்ணாரு, லவ் பண்ணிக்கிட்டு இருக்காரு. அவர் அந்த லாராவ தான் காதலிக்கிறாருன்னா அப்போவே அவள கல்யாணம் பண்ணியிருப்பாரு. இதுல ஏதோ ஒரு சீக்ரெட் இருக்கு தஷுரி" என்று நாடியை நீவி விட்டவாறு ஹெலன் சொல்ல, தஷுரியின் புருவங்களும் யோசனையில் முடிச்சிட்டன.

"என்னக்கா சொல்லுறீங்க, எனக்கு எதுவுமே புரியல" என்று அவள் சொல்ல, ஹெலனோ அன்று தான் பார்த்த ஒரு சம்பவத்தைச் சொன்னாள்.

"அன்னைக்கு அந்த லாரா இங்க விக்டர் சார தேடி வந்திருந்தா, அப்போ சார் இந்தியாவுல. தெரிஞ்சு வந்தாளா தெரியாம வந்தாளான்னு தெரியல. ஆனா, அன்னைக்கு அவ யார் கூடவோ கால் பேசிக்கிட்டு இருந்தா. விக்டர் சார பத்தியும் சீக்கிரம் அவன கொல்லணும் அப்படிங்குற மாதிரி கொஞ்சம் என் காதுல விழுந்துச்சு. ஏதோ தப்பா நடக்குற மாதிரி தோனுச்சு. நீ வந்ததுமே உன்கிட்ட சொல்லலாமேன்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா... சூழ்நிலை சொல்ல முடியல" என்று அவள் சொல்லி முடிக்க, லாரா ஏதோ திட்டமிடுகிறாள் என்று மட்டும் தஷுரிக்குப் புரிந்தது.

"யக்கோவ், அவ்வளவு சீக்கிரம் யாரும் அவர எதுவும் பண்ணிர முடியாது. எனக்கு நம்பிக்கை இருக்கு" என்று தஷுரி உறுதியாகச் சொல்ல, தன் அறையில் விழிகளை மூடி தலையை பின்னே சாய்த்து ஆழ்ந்த யோசனையில் இருந்த விக்டரின் மனக்கண் முன் தஷுரியின் முகம் தான்.

தான் என்ன செய்கிறோம் என்று அவன் அறிவான். ஆனால், தஷுரி அதை புரிந்துக் கொள்வாளா என்பது அவனுக்கு சந்தேகமே. அதுவும், இன்று லாரா நடந்துக்கொண்ட விதத்தைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தவள் அவன் மீது எந்தளவு கோபத்தில் இருப்பாள் என்பது அவன் அறிந்த ஒன்றே.

இவ்வாறு ஏதேதோ யோசித்தவாறு விக்டர் தனதறையில் அமர்ந்திருக்க, கதவைத் தட்டி உள்ளே வந்த ரோய், "டியூட், ஏதோ முக்கியமான விஷயம் பத்தி பேசணும்னு சொன்ன. அதுவும் பிஸ்னஸ் மேட்டர்" என்று சொல்ல, விழிகளால் தன் எதிரே அமரும் படி சொன்னான் விக்டர்.

ரோயும் அவனெதிரே வந்து அமர, அடுத்து விக்டர் சொன்ன செய்தியைக் கேட்டவனுக்கு அதிர்ச்சியில் விழிகள் விரிய, "வாட்! ஆர் யூ சீரியஸ்?" என்று அதே அதிர்ச்சி குறையாமல் கேட்டே விட்டான் ரோய்.


**********************

தஷுரி 27>>>

https://agnitamilnovels.blogspot.com/2024/08/27.html


தஷுரி முழு நாவலைப் படிக்க 👇

India link

https://www.amazon.in/dp/B0CN39JKBC?binding=kindle_edition&ref=dbs_dp_awt_sb_pc_tkin

USA link

https://www.amazon.com/dp/B0CN39JKBC?binding=kindle_edition&ref=dbs_dp_awt_sb_pc_tkin


Comments

  1. என்ன திரும்ப லாராவோட மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணுன்னு சொல்றானோ...? இருக்கலாம், ஏன்னா அப்படித்தான் லாரா & ஜேக்கப்பை லாக் பண்ண முடியும். ரெண்டு பேரும் கூட்டு களவாணிங்க.

    CRVS (or) CRVS 2797

    ReplyDelete

Post a Comment

Popular posts

தஷுரி 10