தஷுரி 24


 


அவர்கள் செல்வதை புரியாமல் பார்த்த தஷுரி, தாவணி முந்தானையை இடுப்பில் சொருகிக்கொண்டு  மெல்ல அவர்களின் பின்னே செல்ல, அந்த இருவரும் சென்று நின்றது என்னவோ துர்காவின் வீட்டின் முன்னே.

விக்டரோ கதவைத் தட்டிவிட்டு உள்ளே செல்ல, எச்சிலை விழுங்கியவாறு ரோயும் பின்னே செல்ல, அங்கு துர்காவின் வீட்டிலோ ஆட்கள் நிரம்பி இருந்தனர்.

சில பெண்கள் நின்றுக்கொண்டிருக்க, சில பேர் அமர்ந்திருக்க, அவர்களுக்கு முன் முழு அலங்காரத்தோடு முகத்தில் மருந்துக்கும் சிரிப்பே இல்லாமல் அமர்ந்திருந்தாள் துர்கா. அவளைப் பார்த்ததும் ரோயிற்கு விழிகளை அவளிடமிருந்து அகற்ற முடியவில்லை. ஏனோ அத்தனை அழகாகத் தெரிந்தாள் அவள்.

அங்கு அவளை பார்க்க வந்த மாப்பிள்ளைக்கு அவளைப் பிடித்திருந்தாலும் அந்த மாப்பிள்ளையின் அம்மாவோ, "இரண்டு ஏக்கர் காணி, என் மவனுக்கு வண்டி, இருபது சவரண் நகை போடுறீங்க சரி, ஆனா... எனக்கு நிறம்தான் பிரச்சனை என்ன பண்ண என் பையனுக்கு பிடிச்சிருக்கே! இருட்டுல உக்கார்ந்தா தெரிய மாட்டா போலயே உங்க மகள்" என்று கேலியாகச் சொன்னார்.

துர்காவோ கீழுதட்டைக் கடித்து அழுகையை அடக்க, துர்காவின் தாய் தேவியோ ஏதோ அவமானத்தில் முகம் கறுத்து தலையை குனிந்துக்கொண்டார்.

இதை வாசலில் நின்றுக்கொண்டு பார்த்திருந்த தஷுரிக்கு அத்தனை கோபம் வந்தது. கோபத்தோடு அவள் ஒரு அடி முன்னே வைத்து பேச வர, அதற்குள் "உங்களுக்கு எதுக்கு ஆன்ட்டி ப்ராப்ளம்? உங்க மகனுக்கு பிடிச்சிருக்கு அப்படிங்குறதுக்காக நீங்க கஷ்டப்பட்டு சம்மதிக்க வேணாம்" என்று ஒரு குரல் அந்த இடத்தையே நிரப்ப, மொத்தப் பேரும் திரும்பிப் பார்த்தனர்.

அங்கு ஆறடிக்கும் மேலான உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் பாக்கெட்டில் கையை இட்டு ஸ்டைலாக விக்டர் நின்றுக்கொண்டிருக்க, ரோய்யோ அவர்கள் பேசும் மொழி புரியாவிடினும் விக்டர் நிற்கும் தோரணையைப் பார்த்து அவனும் நெஞ்சை நிமிர்த்தி விறைப்பாக நின்றுக்கொண்டிருந்தான்.

சத்தம் வந்த திசையை நோக்கிய துர்காவுக்கு ரோயைப் பார்த்ததும் மனதில் அத்தனை நிம்மதி பரவியது. ஏனோ ஓடிச் சென்று அவனை அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. ஆனால், இருவரும் இன்று வரை ஒருவருக்கொருவர் காதலை சொல்லிக் கொள்ளவில்லையே!

ஆனால், மொழி நாடு கடந்து அவர்களுக்கிடையே காதல் வேரூன்றி விருட்சமாக வளர்ந்திருந்தது. ரோயும் துர்காவையே பார்த்திருந்தான். அவனுக்கு ஒன்று மட்டும் தெரிந்திருந்தது, கண்டிப்பாக அவளை விட்டுக்கொடுக்க முடியாது என்று.

சுற்றியிருந்தவர்களுக்கோ அத்தனை அதிர்ச்சி. 'யார் இந்த வெள்ளைக்காரங்க, நிஜமா இந்த வெள்ளைக்காரன்தான் தமிழ் பேசினதா?' என்ற அதிர்ச்சியில் அவர்களையே சுற்றி எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க, தஷுரியோ ஓடிச் சென்று துர்காவின் அருகே அமர்ந்து அவளின் கரத்தை ஆறுதலாகப் பற்றிக்கொண்டாள்.

இங்கு விக்டரோ மெல்ல ரோயின் காதருகே குனிந்து, "டியூட், எப்படியும் நாங்க பேச போறது உனக்கு புரிய போறது இல்லை, ஒரு ஃப்ளோல பேசும் போது உனக்கு செப்பரேட்டா என்னால ட்ரான்ஸ்லேட் பண்ணிக்கிட்டு இருக்க முடியாது. சோ, நான் எப்போ எல்லாம் உன்னை பார்த்து ரைட் ரோய் அப்படின்னு கேக்குறேனோ, அப்போ எல்லாம் நீ மேலயும் கீழேயும் மண்டைய யெஸ்னு ஆட்டு, அது போதும்" என்று சொல்ல, இவனோ பூம்பூம் மாடு போல் எல்லா பக்கமும் தலையாட்டி வைத்தான்.

விக்டரோ, "கொஞ்சம் எழுந்தீங்கன்னா நாங்க எங்க மேட்டர பேசுவோம்" என்றுக்கொண்டே அங்கு அமர்ந்திருந்த இருவரை எழுப்ப, அந்த மாப்பிள்ளை வீட்டு சொந்தக்காரர்களோ தேவியை திகைத்துப் போய் பார்த்தவாறு எழுந்து நிற்க, அவர்களின் இடத்தில் அமர்ந்துக்கொண்டனர் இந்த இருவரும்.

தேவியோ துர்காவைப் பார்த்துவிட்டு விக்டரை கேள்வியாக நோக்க, "ஆன்ட்டி, அது... ஃப்ரான்ஸ்ல எனக்கு சொந்தமா பிஸ்னஸ் இருக்கு. அது சாதாரண பிஸ்னன்னனு சொல்றதை விட அது ஒரு சாம்ராஜ்யம்னு சொல்லலாம். என் கூட  அந்த சம்ராஜ்யத்துல என்னோட ரோயும் இருக்கான். பணத்துக்கு எந்த குறையும் இல்லை..." என்று பேசிக்கொண்டே சென்ற விக்டரை, சட்டென தடுத்து நிறுத்தினார் தேவி.

"கொஞ்சம் இருங்கப்பா, இப்போ எதுக்கு இதை எல்லாம் நீங்க என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கீங்க?" என்று ஒன்றை யூகித்திருந்தாலும் உறுதிப்படுத்தவென அவர் சந்தேகமாகக் கேட்க, "அது... உங்க பொண்ணயும் என் ஃப்ரென்ட் நல்லா பார்த்துப்பான். எந்த குறையும் இருக்காது. நீங்க ஏதாச்சும் எதிர்பார்த்தா நாங்க வேணா டவுரி கொடுக்குறோம். அதுக்கெல்லாம் இவனுக்கு எந்த ஆப்ஜெக்ஷனும் இல்லை. ரைட் ரோய்?" என்று கேட்க, அவனோ சரியான மாணவனைப் போல் அவன் சொன்னபடி தலையை மேலும் கீழும் ஆட்டி வைத்தான்.

பெரியவரோ வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருக்க, சுற்றி இருந்தவர்கள் தங்களுக்குள்ளே 'இவளுக்கு இப்படி ஒரு சம்பந்தமா!' என்ற ஆச்சரியத்தில் கிசுகிசுவென பேசத் தொடங்கினர்.

தேவிக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. அவரோ துர்காவை, 'என்னடீ இது?' என்ற ரீதியில் திரும்பி ஒரு பார்வைப் பார்க்க, அவளோ வெட்கத்தில் புன்னகையோடு தலை குனிந்திருந்தாள்.

அவள் சிரிப்பே அவளின் விருப்பத்தை தெளிவாகக் காட்ட, தேவிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. கூடவே, தயக்கம் வேறு.

"இல்லை தம்பி, அது சரியாகாது. நீங்க வெளியூரை சேர்ந்தவங்க, அதுமட்டுமில்லாம வேற ஜாதி வேற, அப்பறம் எப்படி... உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்" என்று எப்படி சொல்வதென்றுத் தெரியாது தடுமாற, விக்டரோ ரோயை புருவத்தை நெறித்தவாறு திரும்பிப் பார்த்தான்.

ரோயோ தலையாட்டுவதற்காகக் காத்திருந்து இரு புருவங்களை உயர்த்தி என்ன என்றுக் கேட்க, மற்றவனோ 'ஊஃப்...' என பெருமூச்சுவிட்டு, அவர் சொன்னதை அவனுக்கு புரியும் படி ஃப்ரென்ச்சில் சொல்லி "நீதான் பேசணும் ரோய், இது உன் லைஃப்" என்றான் முடிவாக.

ரோயோ தேவியைப் பார்த்தவன், துர்காவைப் பார்த்து "எவ்ரிதிங் ஃபோர் யூ டுர்கா" என்றுவிட்டு, "நான் வேற நாட்டை சேர்ந்தவன்தான், வேற கலாச்சாரத்தை சேர்ந்தவன்தான். ஆனா... என் கலாச்சாரத்துல ஒருத்தருக்காக ஒருத்தர்னு வாழ மாட்டாங்களா என்ன! ஆயிரம் பேருல ஒருத்தன்தான்னு நீங்க நினைச்சீங்கன்னா அது நானா இருந்துட்டு போறேன். ட்ரஸ்ட் மீ! டுர்காவ நான் நல்லா பார்த்துப்பேன், அதுமட்டுமில்லாம நீங்களும் என் கூடவே வந்துருங்க. உங்களையும் நான் நல்லா பார்த்துப்பேன்" என்று சொல்ல, விக்டரோ அவன் பேசியதை தேவிக்கு மொழி பெயர்ப்பு செய்தான்.

அதில் கடைசியாக சொன்ன வசனத்தில் தேவி வாயில் கையை வைத்துவிட, தஷுரியும் துர்காவும் சிரித்துவிட்டனர்.

"இதெல்லாம் சரி வராதுப்பா, வேறொரு ஜாதிகார பையனுக்கே நாம கொடுக்க மாட்டோம், நீங்க எல்லாம் எம்மாத்திரம்! ஒழுங்கு மரியாதையா இந்த ஊரை விட்டு போயிடுங்க" என்று அங்கிருந்த ஊர்க்காரன் ஒருவன் கத்த, கால் மேல் கால் போட்டு இருக்கையில் கம்பீரமாக சாய்ந்தமர்ந்த விக்டர், "ஓஹோ! உங்களுக்கு இத்தனை நல்ல மனசா? அவளோட நிறத்தை வச்சு அவங்க பேசும் சும்மா நின்னு பார்த்துக்கிட்டுதானே இருந்தீங்க, இதுல சில பேருக்கு சிரிப்பு கூட. அப்படி இருக்கும் போது வீ ஆர் பெட்டர் தென் யூ காய்ஸ்" என்று குத்திக் காட்டிச் சொன்னான்.

"நீங்க உங்க முடிவ சொல்லுங்க, உங்களுக்கு விருப்பமா ஆன்ட்டி?" என்று விக்டர் மீண்டும் கேட்க, "தஷுரி கூட அவர தான் கட்டிக்க போறாம்மா, என் கூடவே இருப்பா" என்று துர்கா சொல்ல, ஒருசேர அதிர்ந்துப் போய் துர்காவைப் பார்த்தனர் விக்டரும் தஷுரியும்.

"நா... நான்... அது வந்து..." என்று அவள் தடுமாற, மெல்ல முழங்கையால் தோழியை இடித்து ஆமென்று சொல்லுமாறு சைகைக் காட்டினாள்.

அவளை முறைத்த தஷுரி, "ஹிஹிஹி... ஆமா தேவிம்மா" என்று அப்பட்டமாக அசடுவழிய, அவரோ புருவத்தை நெறித்து யோசிக்கத் தொடங்கினார். மூவரும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்க, ஊர் மக்களோ ஒருசிலர் வேண்டாமென்றும் இன்னும் சிலர் தங்களுக்குள்ளேயே கிசுகிசுத்துக் கொண்டும் இருந்தனர்.

ஊரை விட்டு ஒதுக்கி வைப்போம் என்கிற அளவுக்கெல்லாம் பேச்சு போக, தேவியோ மகளின் புறம் திரும்பியவர், "உனக்கும் அவர பிடிச்சிருக்கா துர்கா?" என்று கேட்க, அவளோ தலை குனிந்து மெல்ல மேலும் கீழும் தலையசைத்தாள்.

"இது உனக்கு சரின்னு தோனுதா, ஏன்னா யார் வாய மூடினாலும் ஊர் வாய மூட முடியாதுன்னு சொல்லுவாங்க. நீ இந்த வெளிநாட்டு பையன கல்யாணம் பண்ணா என்ன நடக்கும்னு உனக்கே தெரியும்" என்று சூழ்நிலையை தெளிவாக அவர் சொல்ல, துர்காவோ ரோயை ஒரு பார்வைப் பார்த்தாள்.

அவனுக்கு அவர்கள் பேசுவது புரியாவிடினும் ஏதோ ஒன்று தவறாக நடக்கிறது என்று மட்டும் தெரிந்தது. விழிகளில் ஏக்கத்தோடு அவன் அவளையே பார்க்க, விழிகளை மூடி பெருமூச்சொன்றை இழுத்து விட்டவள் தன் அம்மாவை தீர்க்கமாக ஒரு பார்வைப் பார்த்தாள்.

"அம்மா, இத்தனை நாளா என் நிறத்தை வச்சு வந்த மாப்பிள்ளை எல்லாருமே என்னை வேணாம்னு தான் சொன்னாங்க. ஒருகட்டத்துல என் முகத்தை கண்ணாடில பார்க்கவே எனக்கு பிடிக்கல. ஆனா, இவரு எனக்கே என்னை அழகா காமிச்சாரு. இவரோட கண்ணுக்கு நான் அழகா தெரியுறேன்னு நினைக்கும் போது அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. மொதல்ல நமக்கு நம்மள பிடிக்கணும் அப்பறம் எல்லாமே நமக்கு கிடைக்கும் அப்படின்னு இவர்தான் எனக்கு புரிய வச்சாரும்மா. இரண்டு பேரும் வாய் வார்த்தையே பேசிக்கல, பார்வையால மட்டுமே பேசிக்கிட்டோம். காதலிச்சிட்டோம். இன்னும் ஒருத்தருக்கொருத்தர் காதல கூட சொல்லல்ல. இப்போ எனக்காக இங்க வந்து பேசுறாரு. நான் இவரோட இருந்தா சந்தோஷமா இருப்பேன்னு தோனுதும்மா"

என்று துர்கா தன் மனதிலுள்ளதை வெளிப்படையாக பேசி முடிக்க, விக்டரோ அவள் பேசியதை ரோயிற்கு மொழி பெயர்ப்பு செய்ததும், ரோயின் விழிகளோ சற்று கலங்கிய நிலையில் காதலோடு தன்னவளின் மேல் பதிந்தது.

தேவியோ தன் மகளை மெச்சுதலாகப் பார்த்தவர், "எப்போ கல்யாணத்தை வச்சிக்கலாம் தம்பி, நானும் உங்க கூடவே வெளியூருக்கு வந்துரலாம்ல?" என்று கேட்க, "ரோய்.... யூ கொட் இட்!" என்று உற்சாகமாகச் சொல்லி, "கங்கிராட்ஸ் டியூட்!" என்று தோழனை கட்டியணைத்தான் விக்டர்.

தஷுரியோ துர்காவை அணைத்து, "எனக்கு வெளியூர் மாப்பிள்ளை வேணாம்னு சொல்லி அன்னைக்கு வழியனுப்பிட்டு இப்போ மேடம் வெளியூரு மாப்பிள்ளையா பிடிச்சிட்டீங்க" என்று கேலி செய்ய, அவளோ "உனக்கும் வெளியூரு மாப்பிள்ளைதான்" என்றாள் துர்கா விழிகளால் விக்டரைக் காட்டி.

இப்போது தஷுரியின் முகம் லேசாக வெட்கத்தில் சிவக்க, ஓரக்கண்ணால் விக்டரைப் பார்த்தாள். ஆனால் அவனோ இவளை திரும்பியும் பார்க்கவில்லை.

அங்கிருந்த ஊர்க்காரர்களோ, "என்ன தேவி இது, நம்ம கலச்சாராம் தெரியாத ஏதோ வெள்ளைக்காரனுக்கு நம்ம ஊர் புள்ளய கட்டி வைக்கிற, இது சரியில்ல பார்த்துக்க!" என்று மிரட்டலாகச் சொல்ல, "என் பொண்ணுக்கு எது சரி, எது தப்புன்னு எனக்கு தெரியும், நீங்க தலையிடாததீங்க!" என்று பதிலுக்கு அழுத்தமாக சொன்னார் தேவி.

துர்காவோ தன் அம்மாவை புன்னகையோடு நோக்க, திடீரென அவள் முன் வந்து நின்ற ரோய், "தேங்க்ஸ் டுர்கா, ட்ரஸ்ட் மீ! ஐ வில் டேக் கெயார் ஆஃப் யூ" என்று உறுதியாகச் சொல்லி சுற்றி இருப்பவர்கள் எவரையும் கண்டுகொள்ளாது அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்து அவளிதழில் அழுந்த முத்தத்தைப் பதித்திருக்க, சுற்றியிருந்த மொத்தப்பேரும் அதிர்ச்சியில் வாயில் கை வைத்துவிட்டனர்.

தேவியோ சங்கடத்தோடு முகத்தைத் திருப்பிக் கொள்ள, வேகமாக அவனிடமிருந்து பிரிந்தவள் சுற்றியிருந்தவர்களை பதறிபடி பார்த்துவிட்டு ரோயை விழிகளால் முறைத்தாள். அவனோ கையிலிருந்து மிட்டாயை பறித்த குழந்தைப் போல் உதட்டைப் பிதுக்கி அவளை பாவமாகப் பார்க்க, "இது தப்பு" என்று சைகையில் சொல்ல, "ஹிஹிஹி... சாரி!" என்று அசடுவழிந்தவானு தலையை சொரிந்தான் ரோய்.

சில நிமிடங்கள் அங்கு நேரத்தைக் கழித்துவிட்டு வீடு திரும்பினர் மூவரும். வரும் வழியில் விக்டரையே ஓரக்கண்ணால் பார்த்தவாறு வந்த தஷுரி, "ரொம்ப நன்றிங்க" என்று சொல்ல, காதில் விழுந்தாலும் கேட்காதது போல் சென்றான் விக்டர்.

அதில் கடுப்பானவள் அவன் முன்னே வந்து நின்று, "நன்றின்னு சொன்னேன்" என்று அழுத்தமாகச் சொல்ல, "வாட் எவர்!" என்று அலட்சியமாக விழிகளை உருட்டினான் அவன்.

'ரொம்பத்தான் இவன்!' என்று மனதிற்குள் சலித்தவாறு, "துர்காவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு. என் அம்மாவுக்கு அடுத்து எனக்கு எல்லாமுமா அவதான் இருந்தா, நீங்க பேசினதால தான் எல்லாமே நல்லபடியா நடந்திருக்கு. அதான்..." என்று தயங்கியபடி அவள் பேசிக்கொண்டு இருக்கும் போதே, அவளை கொஞ்சமும் மதிக்காதது போல் அவளைக் கடந்து அவன் செல்ல, "ஆஆ..." என்று கத்தியவாறு கோபத்தில் காலை தரையில் உதைத்துக்கொண்டாள் அவள்.

அடுத்த இரண்டு நாட்கள் கழிந்த நிலையில், அங்கே இருக்கும் விக்டரின் ஆட்கள் மூலமாக இவர்கள் செல்வதற்கான ஏற்பாடுகள்  படுவேகமாக நடந்தது. தஷுரிக்கோ  புதைந்த காதல் அவனின் ஒவ்வொரு செயலாலும் மீண்டும் துளிர்விட, அவனோ இப்போதெல்லாம் அவளை கண்டுகொள்வதே இல்லை.

அவனை வேண்டாம் என்று மறுத்ததிலிருந்து அவனுக்குள் அத்தனை ஆத்திரம். அவளாக வரட்டும் என விக்டர் தன் வேலைகளில் இறங்க, அங்கு பாரிஸில் இவர்களின் வருகைக்கென இரைக்காகக் காத்திருக்கும் கழுகு பொல் காத்திருந்தனர் சிலர்.

நடக்கப் போகும் விபரீதங்களை அறியாது இரண்டே வாரத்தில் செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தாயிற்று. ராதாவும் தஷுரியும் உடைகளை பெட்டியில் எடுத்து வைக்க, இங்கு ரோயின் முகமோ சரியே இல்லை.

காரணம், துர்காவை இப்போது அழைத்துச் செல்ல முடியாத நிலை. எதையோ பறிகொடுத்தது போல் அவன் அமர்ந்திருக்க, நாளை செல்லவிருப்பதால் உதவி செய்ய செல்கிறேன் என்று சாக்கை சொல்லிவிட்டு ரோயைப் பார்க்க ஒடி வந்தாள் துர்கா.

தன்னவன் அமர்ந்திருக்கும் நிலையைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவள், மெல்ல அவனருகே சென்று அமர்ந்து குரலை செரும, அரவம் உணர்ந்து திரீம்பிப் பார்த்தவன் பாவமாக உதட்டைப் பிதுக்கினான்.

"என்னாச்சு?" அவள் இரு புருவங்களை ஏற்றி இறக்க, "இல்லை, உன்னை பிரிஞ்சு போகணுமே டுர்கா அதான்... சில ஃபார்மலிட்டீஸ் இருக்கு, பிஸ்னஸ் விஷயமா விக்டருக்கு அர்ஜென்ட்டா போகணும். அதனாலதான் நானும் போக வேண்டியதா இருக்கு" என்று பாதி கொஞ்சும் தமிழ் பாதி ஆங்கிலம் என அவளுக்கு புரியும் படி சொல்ல முயற்சிக்க, தன்னவனின் முயற்சியை நினைத்து மெல்ல புன்னகைத்தாள் துர்கா.

"அதுக்கென்ன இப்போ, நீங்க மொதல்ல போங்க அப்பறம் என்னையும் அம்மாவையும் அங்க வரவழைக்குறதுக்கான ஏற்பாட பண்ணுங்க" என்று துர்கா சொல்லிக்கொண்டே அவனின் கரத்தைப் பற்ற, பதிலுக்கு அவளின் கரத்தை அழுந்த பற்றிக்கொண்ட ரோய், "யூ நோ வாட், நான் நம்மள கல்யாணத்த ஐஃபில் டவருக்கு முன்னால பண்ண போறேன், எல்லாரும் அசந்து போக போறாங்க" என்றான் அத்தனைக் காதலை விழிகளில் தேக்கிக்கொண்டு.

அவன் சொன்னது புரியாது விழிகளை சுருக்கியவள், "அதென்ன இடம் கோயிலா?" என்று கேட்க, இத்தனை நேரம் இவர்கள் பேசுவது காதில் விழுந்தும் விழாதது போலிருந்த மற்றவர்கள் துர்கா இவ்வாறு கேட்டதும் பக்கென்று சிரித்துவிட்டனர்.

ரோயோ இருபக்கமும் சலிப்பாக தலையாட்டி, "வெர்ரி ஃபன்னி" என்று விழிகளை உருட்ட, "நான் என்ன அப்படி தப்பா சொல்லிட்டேன்னு என்னை பன்னின்னு திட்டுறீங்க, போங்க நான் என் வீட்டுக்கே போறேன். உங்க பேச்சு கா" என்று அவன் திட்டியதாக நினைத்துக்கொண்டு முறுக்கியவாறு அவள் சென்றுவிட, இந்த ஆடவன் தான் 'ஙே' என அவளை புரியாதுப் பார்த்தான்.

அடுத்தநாள், விக்டர், ரோய், தஷுரி, ராதா மற்றும் அஃப்ரிம் அனைவருமே பாரிஸுக்குச் செல்வதற்கான விமானத்தில் அமர்ந்திருக்க, அங்கு இவர்கள் வரும் செய்தி ஜேக்கப்பின் அலைப்பேசி குறுஞ்செய்தியில் தகவலாக வந்திருந்தது.


*******************

தஷுரி 25 >>>

https://agnitamilnovels.blogspot.com/2024/08/25.html


தஷுரி முழு நாவலைப் படிக்க 👇

India link

https://www.amazon.in/dp/B0CN39JKBC?binding=kindle_edition&ref=dbs_dp_awt_sb_pc_tkin

USA link

https://www.amazon.com/dp/B0CN39JKBC?binding=kindle_edition&ref=dbs_dp_awt_sb_pc_tkin

Comments

Popular posts

தஷுரி 10