தஷுரி 22

 



அன்றைய இரவு முழுக்க தஷுரிக்கு தூக்கமே இல்லை. அவன் சிந்தனை முழுவதும் இன்று காலை விக்டர் காதலை அடாவடியாகச் சொன்னதையே சுற்றி வந்தது.

ஆனால், அவன் மேல் அளவு கடந்த காதலிருந்தாலும் ஏனோ மனம் ஏற்க மறுத்தது. விழிகளை அழுந்த மூடி அவள் திறக்க, அவள் விழிகளிலிருந்து விழிநீர் வழிந்தோடியது. ஒரு முடிவெடுத்தவளாக கண்ணீரை அழுந்தத் துடைத்தவள், எப்போது உறங்கினாளென்று அந்த கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

அடுத்தநாள் அறையிலிருந்து வெளியே வந்ததிலிருந்து தன்னவனின் முகத்தைப் பார்ப்பதை முழுவதுமாகத் தவிர்த்தாள் தஷுரி. அதை விக்டர் மட்டுமல்ல, ராதாவும் கவனிக்காமலில்லை.

விக்டருக்கோ தஷுரியின் தவிர்ப்பு அத்தனை கோபத்தை உண்டாக்க, அவளுடன் பேச முயற்சித்தவனுக்கு அவள் அந்த வாய்ப்பையும் கொடுக்காமல் போக, தன்னவளையே அடிக்கடி முறைத்த வண்ணமிருந்தான் அவன்.

"ஹேய் தஷு, இந்த சேலை நல்லாயிருக்குல்ல! ராதாம்மா எனக்கும் எடுத்து கொடுத்தாங்க, அவங்களுக்கு கல்யாணம்னு ஊருக்கு தெரிஞ்சதும் ஒரே பொறாமையில வெந்து சாவுதுங்கலே, என்ன பேச்சு பேசியிருப்பாங்க அவங்களுக்கு" என்று துர்கா ராதா கொடுத்த சேலையை திருப்பித் திருப்பிப் பார்த்தவாறு பேசிக்கொண்டு செல்ல, அதெல்லாம் தஷுரியின் காதில் விழவேயில்லை.

முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாது தன் கையிலிருந்த சேலையை வருடியவள், "ம்ம்... நல்லாயிருக்கு" என்று சுரத்தே இல்லாத குரலில் சொல்லிவிட்டு நகர, தன் தோழியின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த துர்காவுக்கு ஒரே குழப்பம்.

அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டு அதில் சாய்ந்துக்கொண்ட தஷுரியின் விழிகள் கலங்கிப் போயிருந்தன. அத்தனை காதல் அவன்மேல், ஆனால் அன்று அவன் செய்த காரியம் அவளை மீண்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

அதேநேரம் அறை ஜன்னல் வழியே வெளியே பெய்ந்துக்கொண்டிருந்த தூறலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த விக்டரின் மனமோ ஒரு நிலையிலில்லை. அவனுக்கு அவளின் மறுப்பிற்கான காரணம் சுத்தமாகத் தெரியவில்லை.

பணம், வேலை என காலில் பம்பரத்தைக் கட்டியது போல ஓடிக்கொண்டிருந்தவனின் வாழ்வில் புயலாக வந்தாள் தஷுரி. கல்யாணம் காதலில் ஈடுபாடில்லாதவனை காதல் எனும் வலையில் சிக்க வைத்தவள், அவனின் ஒதுக்கலை அப்போது ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை.

அந்த சிறு பெண்ணின் வெகுளித்தனமான காதலில் இவன் தன்னை இழக்கத் தயாராக, இப்போது அவளோ ஏற்க மறுக்கிறாள். காதலில் கண்ணாம்பூச்சி ஆட்டம் போலல்லவா இருக்கிறது!

அவள் தன்னை இப்போது மறுப்பதற்கு பல காரணங்கள் அவனின் மனதில் தோன்றின. ஆனால், அவனே அறியாத காரணத்தை அல்லவா அவள் தூக்கிப் பிடித்துக்கொண்டு நிற்கிறாள்!

விழிகளை அழுந்த மூடித் திறந்தவனின் இதழ்கள், "இடியட்!" என வழக்கம் போல் தன்னவளை திட்டிக்கொண்டது.

அடுத்தநாள், இத்தனை வருடங்கள் ராதா எதற்காகக் காத்திருந்தாரோ, அது நிறைவேறிவிட்டது. அவருடைய கழுத்தில் மங்களநாணை அஃப்ரிம் கட்டிவிட, கண்களிலிருந்து கண்ணீர் வழிய, அவரை நிமிர்ந்துப் பார்த்தார் அவர்.

அதிகளவான ஆட்கள் இல்லாமல் சில அக்கம்பக்கத்தவர்களும் இளசுகளும் மட்டுமே சுற்றியிருக்க, திடீரென "ராதா..." என்ற அழைப்பு. பல வருடங்களின் பின் மீண்டும் அந்த குரல் அவர் காதில் ஒலிக்கிறது.

அதிர்ந்த விழிகளோடு அவர் திரும்பிப் பார்க்க, எதிரே அவரின் தந்தை தாமோதிரன். எத்தனை வருடங்கள் ஆயிற்று! இன்று நிற்கக் கூட முடியாது இருந்தவரை கைத்தாங்கலாக அவருடைய அண்ணன் சரவணன் பிடித்திருக்க, இவருக்கு தான் காண்பது கனவா நிஜமா என்றே தெரியவில்லை.

"அப்பா..." அவருடைய இதழ்கள் அதிர்ந்துப்போய் முணுமுணுக்க, கடகடவென கண்ணீர் மட்டும் விழிகளிலிருந்து ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பது அவரின் அதிர்ந்த முகமே அப்பட்டமாகக் காட்ட, அவரின் தோளைத் தொட்டு, "அப்பாக்கிட்ட போ ராதா" என்றார் அஃப்ரிம் மென்மையாக.

அதிர்ந்துப்போய் தன்னவளைத் திரும்பிப் பார்த்தவருக்கு அப்போதுதான் மூளைக்கு உரைத்தது, இது தன்னவரின் செயல் என்று. தாமோதிரனோ அந்த நிலையிலும் கையெடுத்துக் கும்பிடட்டு, "என்னை மன்னிச்சிரும்மா!" என்று மகளை இத்தனை வருடங்கள் பிரித்து வைத்ததற்கு மன்னிப்பு வேண்ட, ஓடிச் சென்று தந்தையை அணைத்துக்கொண்டவரோ ஏதோ சிறு குழந்தைப் போல் விம்மி விம்மி அழத் தொடங்கினார்.

சுற்றியிருந்தவர்கள் சிறு புன்னகையோடும் கலங்கிய விழிகளோடும் இதைப் பார்த்துக்கொண்டீருக்க, "தஷு... தஷுரி... இங்க வாடீ!" என்று தன் மகளை அழைத்த ராதா, "அப்பா, உங்க பேத்தி" என்று அவளின் கரத்தையெடுத்து அவரின் கரத்தின் மேல் வைக்க, "உன்னையும் உன் அம்மாவையும் நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ம்மா, நீயும் என்னை மன்னிச்சி..." என்று அவளிடம் மன்னிப்புக் கேட்ட வந்தவரின் கரத்தை சற்று அழுத்தமாகப் பற்றினாள் தஷுரி.

"வேண்டாம் தாத்தா, பழைச எப்போதும் மாத்த முடியாது. ஆனா, நடந்ததையே நினைச்சுட்டு இருந்தா உறவுகளுக்குள்ள சந்தோஷம் இருக்காது, நடந்தது முடிஞ்சதா இருக்கட்டும். என் அம்மாவோட சந்தோஷம் எனக்கு முக்கியம், இப்போவாச்சும் ஏத்துக்கிட்டீங்களே அது போதும்" என்று பேசிய தஷுரிக்கு சிறு கோபம் மனதில் தன் அம்மாவின் குடும்பத்தின் மீது இல்லாமலில்லை. எத்தனை வருடங்கள் உறவுகளில்லாமல் வளர்ந்திருக்கிறாள்!

தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டால் அவளின் வலி, வேதனை இல்லாமல் போய்விடுமா என்ன!

அவரோ சிறு புன்னகையோடு அவளின் தலையை வருட, விழிகளைத் துடைத்தவறு திரும்பியவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் விக்டர்.

ஏனோ இன்று காலையிலிருந்து அவனின் பார்வை தன்னவளையே தொடர, முயன்று அவனிடமிருந்து பார்வையைத் திருப்ப முயற்சித்தவளுக்கு வெறும் தோல்விதான். ராதா அணியச் சொல்லி வற்புறுத்திய பட்டு வேஷ்டி சட்டையில் சிக்ஸ்பேக் செதுக்கிய உடலோடு ஆணழகனாக நின்றிருந்தவனின் தோற்றத்தில் தன்னை இழந்துப்போய் நின்றிருந்தாள் அவள்.

கூடவே, அந்த காந்தப்பார்வை அவளை ஈர்த்து அவளையும் மீறி அவன் விழிகளை காணச் செய்ய, 'மானங்கெட்ட மனசு!' என்று தனக்குள்ளேயே தஷுரி திட்டிக்கொள்ள, விக்டரின் விழிகளோ தேவதையென இருக்கும் அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் படமெடுத்துக்கொண்டன.

பார்க்க பார்க்க சகிக்காத அவளின் அழகு மேலும் அவனை போதையேற்ற, தன்னவளை விக்டர் நெருங்க வரும் அதேசமயம் அவளோ மனம் விரும்பவில்லை என்றாலும் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு விலக முயற்சித்தாள் தஷுரி.

ஆனால், இன்று விக்டரிடமிருந்து தப்பிக்க முடியாது. பேசியே ஆக வேண்டுமென்ற முடிவில் அவனிருக்க, இங்கு இன்னொரு ஜோடியோ மொழி புரியாவிடினும் விழிகளாலேயே காதலை பரிமாற்றிக்கொண்டிருந்தது.

அது வேறு யாருமல்ல, ரோயும் துர்காவும்தான். இதுவரை நிறத்தை வைத்து அவளை பல ஆண்கள் ஒதுக்கியிருக்க, அதையெல்லாம் தகர்த்தெறிவது போல் அவளின் நிறமே அவனின் விழிகளுக்கு அத்தனை அழகாகத் தெரிந்தது. அதுவும், ஒவ்வொரு தடவை அவளைக் காணும் போது ரோயின் பார்வையில் தெரியும் மின்னலை அவள் உணராமலில்லை.

அன்று காலையே திருமணம் முடிந்தவுடன் மொத்தப் பேரும் வீட்டிற்கு வந்திருக்க, அதன்பிறகு தடல்புடலாக தஷுரியும் துர்காவும் சேர்ந்து விருந்து ஏற்பாடு செய்ய, அதை சாப்பிட்ட மூன்று வெளிநாட்டவர்களுக்கு காதில் வாயிலும் புகை வராத குறைதான்.

"ஏன்டீ, உன்னை காரமா சமைக்க வேண்டாம்னுதானே சொன்னேன், பாரு மூனு பேரோட கண்ணும் கலங்கிப் போயிருக்கு" என்று ராதா கத்த, "அவ்வளவு காரமே இல்லைம்மா" என்ற தஷுரி, "இதுக்குதான் புளிகாரமெல்மாம் சப்பிட்டு வளரணும்னு சொல்லுறது!" என்று அங்கலாய்த்துச் சொன்னாள் அவள்.

அஃப்ரிமின் விழிகள் லேசாக கலங்க, அதை தன் சேலை முந்தானையால் ராதா துடைத்துவிட, அவர்களைப் பார்த்திருந்த விக்டரின் விழிகளோ ஏக்கத்தோடு தஷுரியின் மேல் பதிந்தது. இத்தனைநேரம் அவன் வாயை குவித்து வியர்க்க வியர்க்க சாப்பிட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டீருந்தவள், அவன் பார்வை தன் மீது படிந்ததுமே உடனே திரும்பிக்கொள்ள, இவனின் முகமோ இருண்டுப் போனது.

அன்றிரவு,

சமையலறையில் அனைத்தையும் சுத்தம் செய்துவிட்டு முகத்தையும் கைக்கால்களையும் அலசியவள், தனதறைக்குச் செல்ல, யாரோ பின்னால் பின்தொடர்வது போல் ஒரு உணர்வு.

முதலில் திரும்பியவள், யாரும் இல்லாததைப் பார்த்துவிட்டு, மீண்டும் திரும்பி தனதறையை நோக்கி நடந்தாள். அறைக்குள்ளே நுழைந்தவள், கதவு தாளிடாததை உணர்ந்து கதவை தாளிட என மீண்டும் திரும்ப, வாசலை அடைத்து முழு உயரத்திற்கு கதவில் சாய்ந்தவாறு நின்றிருந்த விக்டர், கொஞ்சமும் யோசிக்காது உடனே அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட, விதிர்த்துப்போய் நின்றிருந்தாள் தஷுரி.

"நீங்..நீங்க ஏன் உள்ள வந்தீங்க? யாராச்சும் பார்த்தா என்னாகுறது? மொதல்ல இங்கயிருந்து போயிடுங்க" என்று படபடவென அவள் கத்தத் தொடங்க, ஓடிச் சென்று அவளுடைய வாயை ஒரு கரத்தால் மூடியவன், "ஷ்ஷ்... ஷட் அப் இடியட்! ரொம்பதான் ஓவரா போற, உன்னோட லிமிட்ட நீ க்ரோஸ் பண்ற தஷுரி" என்று மிரட்டலாகச் சொன்னான்.

இவளுக்கோ இப்போது கோபம் எகிற, அவனின் கரத்தை உதறிவிட்டவள், "நீங்கதான் அதிகபிரசங்கித்தனமா பேசுறீங்க, அதான் வேணாம்னு சொல்றேன்ல, அப்பறம் என்ன? தயவு செஞ்சு நீங்க உங்க ஊருக்கே போயிருங்க" என்று கத்த, அவளைத் தீப்பார்வைப் பார்த்தான் விக்டர்.

"நான் இதுவரைக்கும் எந்த பொண்ணுக்கிட்டேயும் இப்படி பேசினது கிடையாது, நீ எனக்கு வேணும் அந்த ஒரே காரணத்துக்காகத்தான் இப்படி பேசிக்கிட்டு இருக்கேன் தஷுரி. ஏன்டீ உனக்கு புரிய மாட்டேங்குது? ஐ லவ் யூ, எனக்கு கொஞ்சி பேச எல்லாம் தெரியாது இப்படிதான் என் காதலை எனக்கு வெளிப்படுத்த தெரியும். டோன்ட் யூ அன்டர்ஸ்டேன்ட்!" என்ற அவனின் வார்த்தைகள் ஆதங்கத்தில் வெளிவர, கீழுட்டைக் கடித்து அழுகையை அடக்க முயன்றவள் கலங்கிய விழிகளை மறைக்க குனிந்துக்கொள்ள, அவளிள் தாடையைப் பற்றி தன் முகம் நோக்கி நிமிர்த்தினான் அவன்.

தன் வசீகரிக்கும் நீலநிற பூனை விழிகளால் அவளுடைய விழிகளை ஆழ்ந்துப் பார்த்தவனின் மனம், 'இன்னும் என் காதலை உணரவில்லையாடீ நீ?' என்று ஏக்கத்தோடுப் பார்க்க, அவளுடைய உதடுகள் துடித்தாலும் மனம் தான் அவனுக்கு ஈடானவள் இல்லையென்று தகுதியை எண்ணி வார்த்தைகளை மென்று விழுங்கியதது.

அவள் பதில் பேசாததில் இவனுக்குக் கடுப்பாக, கோபத்தில் அவளை உதறிவிட்டவன் அவளுக்கு எதிரே குறுக்கும் நெடுக்கும் நடக்க, புரியாமல் அவனையே பார்த்திருந்தாள் தஷுரி.

ஆனால், இங்கு இவனின் மனதில் கடல் போல் பல குழப்பங்கள் ஓடிக்கொண்டிருந்தன. இத்தனைநாள் காதல் என்று தன் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருந்தள் இன்று மறுப்பதற்கான காரணம் அவனுக்கு சுத்தமாகத் தெரியவில்லை.

அவன் அங்கிருந்து அனுப்பியதுதான் அவள் மறுப்பிற்கான காரணம் என்றால் அது கோபமாகத்தான் வெளிப்பட்டிருக்குமே தவிர, இத்தனை வலியை விழிகளில் பிரதிபலித்திருக்காது. வேறு ஏதோ அவள் மனதில் ஓட, அதையெல்லாம் விக்டர் தெரிந்துக்கொள்ள எண்ணவேயில்லை.

அது என்ன காரணமாக இருக்கட்டும். தஷுரி அவனுடையவள், அது மட்டுமே அவனின் சிந்தனைக்குள் ஓட, அவனின் எண்ணமோ நிலைத் தடுமாறி தறிக்கெட்டு ஓடியது.

தன்னவளைத் திரும்பிப் பார்த்தவன், அவள் சுதாகரிப்பதற்குற் மின்னல் வேகத்தில் அவளை நெருங்கி அவளிதழை தன் வன்னிதழால் கவ்வியிருக்க, இதை கொஞ்சமும் அவள் எதிர்பார்க்கவில்லை.

தன் பிஞ்சு கரங்களைக் கொண்டு அவனின் இரும்பு மார்பில் அவள் கை வைத்துத் தள்ள, அந்த முரட்டு ஆடவன் சற்று அசைந்தால்தானே!

'எங்கு அவளை இழந்துவிடுவோம்' என்ற பயத்தில் அவன் மெலும் மேலும் அவளுக்குள் புதைந்துகொண்டே போக, அவனின் கரமோ அவளிடையை கசக்கிப் பிழிந்தது.

அது கொடுத்த வலியை தாங்க முடியாதவளாய் அவனின் சட்டையை அவள் இறுகப் பற்றிக்கொள்ள, ஏனோ அவளின் பற்றலில் அவனின் வேகம் சற்று குறைந்து இப்போது அவனின் இதழ்களும் கரங்களும் மென்மையைத் தத்தெடுத்துக்கொண்டன.

ஏனோ இப்போது அவனை தள்ளி நிறுத்த தோன்றவில்லை அவளுக்கு. இருக்கும் மனநிலைக்கு அவனுடைய இந்த ஸ்பரிசமும் நெருக்கமும் அவளுக்கு வேண்டுமெனத் தோன்ற, அவனின் சட்டையைப் பற்றியிருந்த அவளின் கரங்கள் இப்போது அவனை தன்னோடு அணைத்துக்கொண்டன.

அதேநேரம் ஆடவனின் கரங்கள் அவளின் வளைவு நெளிவுகளில் அத்து மீற,  அவனின் முகமோ அவளின் கழுத்துவளைவில் புதைந்திருந்தது. அது கொடுத்த சுகத்தில் பெண்ணவள் முணங்கத் தொடங்க, அதுவோ ஏற்கனவே உணர்ச்சிகளின் வேகத்தில் சிக்கியிருந்தவனை பித்தம் கொள்ளச் செய்தது.

இதற்குமேல் தாங்க முடியாதென அவளை முழுமையாக ஆட்கொள்ள எண்ணி கரங்களில் ஏந்திக்கொண்ட விக்டர், மஞ்சத்தில் சரித்து அவளின் பெண்மையை மறைத்திருந்த முந்தானையை விலக்க, மீண்டும் அந்த சம்பவம் ஞாபகத்திற்கு வர, நடப்பை உணர்ந்து மோன நிலை அறுபட்ட நிலையில் அதிர்ந்நு விழித்தாள் தஷுரி.

அவனோ அவள் தடுப்பதற்குள் அவள் மேலே படரியிருக்க, "தயவு செஞ்சு என்னை விடுங்க, என் விருப்பமில்லாம என்னை தொட்டீங்கன்னா பலாத்காரம் பண்றவங்களுக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை" என்று சட்டென சொல்லிவிட, அவனின் மொத்த உணர்ச்சிகளும் வழிந்தோட, தீ சுட்டது போல் படாரென விலகி நின்றுக்கொண்டான் விக்டர்.

தஷுரியும் வேகமாக எழுந்து நின்று முந்தானையை போட்டுக்கொள்ள, ஆனால் விக்டரின் முகமோ உச்சகட்ட கோபத்தில் சிவந்துப்போயிருந்தது. நெற்றி நரம்புகள் புடைத்து கை முஷ்டியை இறுக்கிய நிலையில் அவன் நின்றிருந்த விதத்தில் அவளுக்கே பயம் தொற்றிக்கொள்ள, "ஏங்க..." என்று அவள் பேச ஒரு அடி முன்னே வைக்கும் முன் அங்கிருந்த சிறு ஃப்ரேமை தரையில் போட்டுடைத்தான் அவன்.

தஷுரி பயந்துப்போய் பின்னே நகர, வேகமாக அவளை நெருங்கி அவளின் தாடையைப் பற்றி தன்னை நோக்கி நிமிர்த்தியவன், "யூ ப்ளடி டேஷ்! விருப்பமில்லாம எந்த பொண்ணையும் நான் படுக்கைக்கு அழைச்சதில்ல, யூ நோ வாட்! என்னோட யெஸ்னு ஒரு வார்த்தைக்கு பல பொண்ணுங்க காத்துக்கிட்டு இருக்காங்க. நான் காதலோடு நெருங்கின முதல் பொண்ணு நீ! பட் யூ..." என்று பற்களைக் கடிக்க, எச்சிலை விழுங்கிக்கொண்டாள் தஷுரி.

"விக்கு... நா..நான் தப்பா எதுவும் சொல்லல்ல, என்னை விடு..விடுங்க ப்ளீஸ் வலிக்குது..." என்று அவன் தன் தாடையில் கொடுத்த அழுத்தத்தில் அவள் வலியில் தூடிக்க, அதையெல்லாம் உணராதவன், "என்னதான்டீ உன் பிரச்சனை? என்னன்னு சொல்லித் தொலையேன்!" என்று காட்டுக் கத்து கத்த, இப்போது  அவனை பதிலுக்கு தீப்பார்வைப் பார்த்தாள் அவள்.

"அன்னைக்கு வினோத்தோட என்னை பார்க்கும் போது உங்களுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும், உண்மையா காதலிச்சிருந்தா கண்டிப்பா வலிச்சிருக்கும். அதே வலியதானே அன்னைக்கு நானும் அனுபவிச்சேன்!" என்று குற்றம் சுமத்தும் பார்வையோடுச் சொல்ல, இப்போது விழிப்பது அவனின் முறையாயிற்று.

"புரியல" என்ற விக்டரின் புருவங்கள் யோசனையில் முடிச்சிட, "அன்னைக்கு... அன்னைக்கு நீங்களும் லாராவு..." என்று கீழுதட்டைக் கடித்து அழுதுக்கொண்டே அவள் தான் பார்த்ததைச் சொல்லி முடிக்க, "ஹாஹாஹா..." என்றொரு சத்தம்.

அவனின் முகத்தைப் பார்க்காது தரையை வெறித்திருந்தவள், அவனின் சிரிப்பு சத்தத்திலேயே சடாரென நிமிர்ந்தப் பார்க்க, இதுவரை அவனிடத்தில் பார்க்காத ஒன்றை கண்டுவிட்ட ஆச்சரியம் அவளுக்குள். இவள் வரும் வரை மருந்துக்கும் முகத்தில் சிரிப்பில்லாது இருந்தவன், பின்னரே மெல்லிய சிரிப்பை உதிர்க்க, இப்போது தன்னை மறந்த நிலையில் அவன் கத்தி சிரித்துக்கொண்டிருந்தான்.

தஷுரியோ மலங்க மலங்க அவனின் சிரிப்பிற்கான காரணம் புரியாது விழிக்க, தன்னவளின்  முட்டை விழிகளை ரசித்துக்கொண்டே தன் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த அந்த அரிய வகை மாணிக்கக் கலல்லை வெளியே எடுக்க, இவளோ குழப்பத்தோடு அவனை நோக்கினாள்.


*******************

தஷுரி 23 >>>

https://agnitamilnovels.blogspot.com/2024/07/23.html

மற்ற கதைகளைப் படிக்க 🏃🏃

India link 👇

https://www.amazon.in/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%95%E0%AE%BF/e/B08ZYCHG6C/ref=dp_byline_cont_ebooks_1

USA link 👇

https://www.amazon.com/%25E0%25AE%25B7%25E0%25AF%2587%25E0%25AE%25B9%25E0%25AE%25BE-%25E0%25AE%25B8%25E0%25AE%2595%25E0%25AE%25BF/e/B08ZYCHG6C%3Fref=dbs_a_mng_rwt_scns_share?ref_=d6k_applink_bb_dls




Comments

  1. அடப்பாவி..! வைரக்கல்லுக்காக அந்த லாரா கூட இருந்தானா...? அப்ப அவனுக்கு வேண்டியதை எடுக்க என்ன வேணாலும் செய்வான் போல.

    CRVS (or) CRVS 2797

    ReplyDelete

Post a Comment

Popular posts

தஷுரி 10