தஷுரி 21

 



தஷுரி தவறை உணர்ந்து அஃப்ரிமை ஏற்றுக்கொள்ள, ஆனந்தத்தில் மொத்த குடும்பமும் திளைத்திருக்க, இத்தனை நேரம் ஏக்கமும் காதலும் கலந்து தன்னவளையே பார்த்திருந்தவனின் தலைமேல் இடியை இறக்கியது போல் அடுத்து நடந்த சம்பவம் அமைய, இதை தஷுரி கூட எதிர்பார்க்கவில்லை.

மொத்தப் பேரும் ஹாலில் இருக்க, "ராதாம்மா..." என்று வாசலிலிருந்து ஒரு குரல். உடனே வாசலை எட்டிப் பார்த்த ராதா, "வாங்க கணபதி அண்ணே!" என்று சிரித்தவாறு அழைக்க, அவர் உள்ளே வரவும் அவருக்குப் பின்னே இரு ஆடவர்களும் ஒரு பெரியவரும் வர, அஃப்ரிமும் ராதாவும் அவர்களைப் புரியாதுப் பார்த்தனர்.

கணபதியோ அஃப்ரிமைப் பார்த்து, "தஷுரியோட அப்பா வெளியூருக்காரரு, திடீர்னு வந்திருக்காருன்னு ஊருல பேசிக்கிறாய்ங்க. ஓஹோ! அது இவருதானா?" என்று அஃப்ரிமைக் காட்டிக் கேட்க, ராதாவும் தயக்கத்தோடு மேலும் கீழும் தலையாட்டி வைத்தார்.

அவரும் அஃப்ரிமை மேலிருந்து கீழ் பார்த்துவிட்டு, "உனக்கு ஒரு நல்ல செய்தி கொண்டு வந்திருக்கேன்" என்று சொல்ல, ராதாவோ என்னவென்று கேள்வியாக நோக்கினார்.

வந்தவர்களைக் காட்டி, "இந்த பையன் பேரு வினோத், லண்டன்ல வேலை பார்க்குறான், எங்கேயோ தஷுரிய பார்த்திருப்பான் போல, ரொம்ப பிடிச்சு போய் எனக்கு தெரிஞ்சவங்ககிட்ட சொல்லிருக்காங்க, விஷயம் என் காதுக்கு வந்திருக்கு. அம்மா இல்லை, அப்பா மட்டும்தான்" என்று சொல்லி அங்கு அமர்ந்திருந்தவரைக் காட்டிச் சொன்னவர், "இது தம்பி, அமெரிக்கா போக முயற்சி பண்றானாமாம்" என்று அங்கலாய்த்துச் சொன்னார்.

ராதாவுக்கு என்ன பதில் சொல்வதென்றுத் தெரியவில்லை. வினோத் என்ற அந்த ஆடவனோ, "கல்யாணத்துக்கு அப்பறம் லண்டன் கூட்டிட்டு போயிருவேன், அப்பா இங்கேயே சொந்தவீட்டுல இருக்கேன்னு சொல்லுறாரு. அவங்களுக்கு விருப்பம்னா அவங்க அம்மா அப்பாவையும் எங்க கூடவே தங்க வச்சிக்கலாம். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல" என்று தஷுரியைப் பார்த்தவாறே பெருந்தன்மையாகச் சொன்னான்.

"உங்க பொண்ணோட சம்மதம்தான் ரொம்ப முக்கியம்" என்று வினோத்தின் தந்தை சொல்ல, "என்னம்மா சொல்லுற நீ?" என்று கணபதி கேட்டு ராதாவின் பதிலை ஆவலாக எதிர்பார்க்க, அவருக்கோ அத்தனை சந்தோஷம்.

அந்த சந்தோஷத்தோடே அஃப்ரிமுக்கு அவர் தெளிவாகச் சொல்ல, ஆனால் அஃப்ரிமோ வரவழைக்கப்பட்ட புன்னகைப் புரிந்தாரே தவிர ஏனோ அவருடைய மனம் வேறொன்றை யோசித்துக்கொண்டிருந்தது. அவரின் பார்வை பக்கத்திலிருக்கும் தஷுரியின் மேல் பதிய, அவளுடைய முகமோ இருண்டுப் போயிருந்தது.

"தஷு... தஷுரி..." என்று ராதா அவளின் தோளைத் தொட, தன் அம்மாவை நிமிர்த்துப் பார்த்தவளுக்கு அவரின் விழிகளில் தெரிந்த சந்தோஷத்தை கலைக்கத் தோன்றவில்லை.

"மொதல்ல மாப்பிள்ளைய பாரும்மா, பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசுவாங்க" என்று கணபதி சொல்லவும், "நல்ல வரனா இருக்குடீ, உனக்கு சம்மந்தமா?" என கேட்டு ராதா தஷுரியின் முகத்தைப் பார்த்தார்.

'மனதில் ஒருவனை வைத்துக்கொண்டு இன்னொருவனுடன் எப்படி வாழ்வது!' அவளுடைய மனம் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள, அன்று லாராவும் விக்டரும் முத்தமிட்ட காட்சி வேறு நினைவலைகளுக்குள் வந்துச் செல்ல, பெருமூச்சொன்றை இழுத்துவிட்டாள் அவள்.

வராத புன்னகையை கஷ்டப்பட்டு வரவழைத்து "எனக்கு சம்மதம்மா" என்றாள் தஷுரி இறுகிய குரலில்.

அளவு கடந்த சந்தோஷத்தில் மூழ்கியிருந்த ராதாவுக்கு தன் மகளின் முகத்திலும் குரலிலும் தெரிந்த மாற்றத்தை உணர முடியவில்லை போலும்! ஆனால், அஃப்ரிம் கண்டுகொண்டார்.

அதேநேரம், மாடிப்படிகளில் நின்று நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த விக்டருக்கு இதுவரை அனுபவித்திராத வலி. தாய் தந்தையரின் பிரிவு கூட இத்தனை வலியை அவனுக்குள் ஏற்படுத்தவில்லை. அதுவும் தஷுரியின் சம்மதம் அவனுக்குள் சுள்ளென்ற ஒரு வலியை ஏற்படுத்த, விழிகள் கூட சட்டெனக் கலங்கின.

உடனே முகத்தைத் திருப்பிக்கொண்டவனுக்கு இந்த உணர்வு சுத்தமாகப் பிடிக்கவில்லை. காதல் இத்தனை வலியைக் கொடுக்குமென்று இன்றுதான் அறிகிறான், அதுவும் அவள் மேலிருக்கும் காதலை உணர்ந்து முழுதாக ஒருநாள் கூட முடியாத நிலையில்.

"ஐ ஹேட் திஸ் ஃபீலிங், ஐ ஹேட்!" என்று பற்களைக் கடித்தவன், உடனே அங்கிருந்து மாடியிலிருக்கும் தங்களது அறைக்குச் சென்று, அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நகத்தைக் கடித்தவாறு பதற்றமாக நடக்க, பலகையால் கட்டிய வீட்டில் அவன் நடந்த நடையில் இத்தனை நேரம் தீவிரமாக தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்த ரோயே பதறிவிட்டான்.

"டியூட் ஸ்டாப்! நீ நடக்குறதுல பலகை உடைஞ்சு க்ரௌன்ட் ஃப்ளாருக்கு விழுந்துடுவோம் போல!" என்று ரோய் பதற, அவனை முறைத்தவன், "வில் யூ ஷட் அப்... ஷட் அப் யூ ப்ளடி ****..." என்று கெட்ட வார்த்தையில் திட்டிய விக்டர், "நானே கடுப்புல இருக்கேன், என்னை டென்ஷன் பண்ணாத!" என்று கத்த, அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டான் மற்றவன்.

"நான் பாட்டுக்கு டுர்காவ கரெக்ட் பண்ண தமிழ் கத்துக்கிட்டு இருக்கேன், நீயா வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டு என்னை திட்டுறியா?" என்று பதிலுக்கு ரோய் கத்த, 'ஊஃப்ப்...' என பெருமூச்சுவிட்டுக்கொண்டவன், நடந்ததை முழுதாக சொல்லி முடித்தான்.

"அவ யாரை கல்யாணம் பண்ணா உனக்கென்ன, நீதான் லவ் பண்ணல்லையே! இட்ஸ் ஐஸ்ட் லஸ்ட், யூ நோ?" என்று கடைசி வசனத்தை விக்டரைப் போல் விறைப்பாகப் பேசிக் காட்டி ரோய் சிரிக்க, இவனோ விட்டால் எரித்துவிடுவேன் என்கிற ரீதியில் அவனை தீப்பார்வைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அத்தோடு கப்சிப்பென்று ரோய் வாயை மூடிக்கொள்ள, இடதுபக்க புருவத்தை நீவிவிட்டவாறு யோசித்தவனுக்கு தஷுரியிடம் பேசுவதைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை.

"இடியட்! ஹவ் டேர் இஷ் ஷீ! அவ எப்படி இன்னொருத்தன மேரேஜ் பண்ண சம்மதிப்பா, வேலை பணம்னு ஓடிட்டிருந்த என் லைஃப்ல புயல் மாதிரி வந்து எல்லாத்தையும் மாத்திட்டு இப்போ போறான்னா என்ன அர்த்தம்? நோ... ஐ நெவர் கிவ் அப்! உன்னை நான் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன் தஷுரி" என்று அறைக்குள் நடந்தவாறு விக்டர் படபடவென பேசிக்கொண்டே செல்ல, இதைப் பார்த்த அவனின் தோழனுக்கு சிரிப்பை அடக்கைவே முடியவில்லை.

அன்று மதிய உணவை முடித்ததுமே, "ஹ்ர்ம் ஹ்ர்ம்... எனக்கு கொஞ்சம் ஊரை சுத்தி பார்க்கணும். தஷுரி என் கூட வர்றீயா?" என்று விக்டர் கேட்க, அஃப்ரிம் வரவழைத்த சேலைகளை ராதாவோடு அப்போதுதான் பார்க்க அமர்ந்த தஷுரி விருட்டென அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

ரோய்யும் துர்காவைப் பார்ப்பதற்காகவே டிப்டாப்பாகத் தயாராகி விக்டரோடு வந்து நிற்க, இப்போது கலக்கம் தஷுரிக்கல்ல, ராதாவுக்கு.

"அது விக்டர் கண்ணா... அது வந்து..." என்று எப்படி மறுப்பதென்றுத் தெரியாமல் அவர் தடுமாற, தன்னவளின் தடுமாற்றத்தை புருவத்தை நெறித்துப் பார்த்த அஃப்ரிமுக்கு அதற்கான காரணம் புரியவேயில்லை.

"ராதா, அவங்க போயிட்டு வரட்டும்" என்றவர், "தஷுரி..." என்றழைத்து விழிகளால் போகும் படிச் சொல்ல, அவளும் ஒரு தலையசைப்போடு எழுந்து விக்டரின் முகத்தைக் காணாது முன்னே சென்றாள்.

விக்டரோ, "வெயிட்!" என்று அங்கிருந்த ஒரு அறைக்குள் புகுந்தவன், அங்கிருந்த ஒரு கண்ணாடியில் தலைமுடியை சிலுப்பிவிடுவதும் கலைத்துவிடுவதும் மீண்டும் சரிசெய்வதுமாக இருக்க, "ஹ்ர்ம் ஹ்ர்ம்..." என்று குரலை செருமிய ரோயுக்கு நண்பனின் புது அவதாரத்தில் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

விக்டருக்கே தன்னை நினைத்து ஆச்சரியம்தான். 'என்னை இப்படி மாத்திட்டியேடீ!' என தனக்குள் செல்லமாக தன்னவளை திட்டிக்கொண்டவன், "ஹிஹிஹி..." என அசடீவழிந்தவாறு மெல்ல முகத்தைத் திருப்பிக்கொண்டு அவனை கடந்துச் செல்ல, வாசலில் நின்றிருந்த தஷுரியோ அவனை திரும்பியும் பார்க்கவில்லை.

ஆனால், இதன்பிறகு அவளை விக்டர் விடுவதாகயில்லை. அவளருகே நெருங்கியவாறு வந்து நின்றவன், "மொதல்ல எங்க போகலாம் ஸ்வீட்ஹார்ட்?" என்று கேட்க, அவனின் கேள்வியில் அதிர்ந்தவள் அப்போதும் நிமிர்ந்துப் பார்க்காது சற்று அவனைவிட்டு தள்ளி நின்று, "ஒரு பக்திவாய்ந்த ஒரு அம்மன் கோயீல் இருக்கு, நிறைய வெளிநாட்டுக்காரங்க அங்க வந்து சாமி கும்பிட்டுட்டு போவாங்க, அங்க போகலாம்" என்றாள் குரலில் சுரத்தே இல்லாமல்.

அவளின் மாற்றம் விக்டருக்கு தெரியமால் இல்லை. இதழை கேலியாக வளைத்தவன், "போகலாமே!" என்றுக்கொண்டே முன்னே செல்ல, "டுர்காவயும் கூப்பிடலாமே!" என்றான் ரோய் முப்பத்திரெண்டு பற்களையும் காட்டியவாறு.

சரியாக, ஆயுசு நூறு என்பது போல், "தஷு..." என்றுக்கொண்டே துர்கா ஓடி வர, தஷுரி ரோயை சிரிப்பை அடக்கியவாறு பார்த்தாள் என்றால், ரோயின் பார்வையில் தஷுரியை புரியாமல் பார்த்தாள் துர்கா.

"ஹ்ர்ம் ஹ்ர்ம்... கோயிலுக்கு இவங்கள கூட்டிட்டு போறேன். எங் கூட வா" என்றுகொண்டே துர்காவின் கரத்தைப் பற்றியவாறு தஷுரி முன்னே செல்ல, 'தஷுரியின் கரத்தோடு கோர்த்த கரங்கள் தன் கரங்களாக இருக்கக் கூடாதா?' என ஏங்கிய வண்ணம் விக்டர் பின்னே சென்றால் என்றால், துர்காவை ஓரக்கண்ணால் பார்த்தவாறு சென்றான் ரோய்.

அதேநேரம், அவர்கள் சென்றதுமே சமையலறைக்குள் செல்லப் போன ராதாவை நிறுத்திய அஃப்ரிம், "ஏன் ராதா, இந்த தயக்கம்?" என்று அழுத்தமாகக் கேட்க, அவர் கேட்பதன் அர்த்தம் புரிந்து, "இங்க உங்க நாட்டு கலாச்சாரம் மாதிரி இல்லைங்க, சாதாரணமா ஒரு பையனும் பொண்ணும் பேசினாலே ஊர் வாய மூட முடியாது. இப்போதான் என் பொண்ணுக்கு ஒரு நல்ல வரன் கூடி வந்திருக்கு. விக்டரோட அங்க இங்கன்னு சுத்துறத பார்த்தா ஏதாச்சும் அசம்பாவிதம் ஆகிரும்னு..." என்று தயக்கமாக இழுத்தார் ராதா.

அஃப்ரிமோ அவரை முறைத்துப் பார்க்க, தயங்கியபடி பார்வையைத் திருப்பிக்கொண்ட ராதா, "உங்களுக்கு இது சொன்னா புரியாது, கழுத்துல தாலி இல்லாம தஷுரிய பெத்து வளர்க்குறதுக்குள்ள என்னென்ன வார்த்தைகள நான் கேட்டேன்னு எனக்குதான் தெரியும், என்னை மாதிரி பொம்பளைங்களுக்கு இதை சாதாரணமா கடந்து போக முடியாது அஃப்ரிம்" என்று சொல்ல, மற்றவரோ சில கணங்கள் யோசித்தார்.

ஒரு முடிவெடுத்தவராக 'ஊஃப்...' என பெருமூச்சுவிட்டுக்கொண்டவர், ஒரு விடயத்தை சொல்லி முடித்து சிரிக்க, அதிர்ச்சியில் பிதுங்கிவிடுமளவிற்கு விழிகளை விரித்திருந்த ராதாவிற்கு வாயில் வார்த்தைகள் வந்தால்தானே!

இங்கு கோயில் வாசப்படிகளுக்கு அருகே வந்த இளசுகளோ கணக்கிட முடியாத அந்த படிகளில் மெல்ல மெல்ல ஏறத் தொடங்க, தஷுரியின் பின்னே சென்றவாறு "உன்கிட்ட பேசணும்" என்றான் விக்டர். அவளோ காதில் விழுந்தும் விழாதது போல் விறுவிறுவென்று படிகளில் ஏற, "பேசணும்னு சொன்னேன்" என்றான் அவன் அழுத்தமாக.

அவன் வார்த்தைகளில் கொடுத்த அழுத்தத்தில் சில கணங்கள் நின்றவள் வேகத்தைக் குறைத்து நடக்கத் தொடங்க, பக்கவாட்டாகத் திரும்பி அவளையே பார்த்தவாறு படிகளில் ஏறிக்கொண்டு "ஏன் அந்த மேரேஜுக்கு சம்மதிச்ச?" என்று கேட்டான் அவன்.

அந்த கேள்வியில் சட்டென்று இருண்டுப் போனது தஷுரியின் முகம். "ஏன் சம்மதிச்ச தஷுரி, உன..உனக்கு அவன பிடிச்சிருக்கா என்ன?" என்ற விக்டரின் வார்த்தைகளில் லேசான தடுமாற்றம் தெரிய, "பிடிச்சிருக்குன்னு இல்லை, கல்யாணத்துக்கு சம்மதம். கட்டிக்கிட்ட அப்பறம் போக போக பிடிக்கலாம்" என்றாள் தஷுரி உணர்ச்சியே இல்லாத முகத்துடன் இறுகிய குரலில்.

"இது என்ன விளையாட்டா, இல்லைன்னா ஏதாச்சும் படம்னு நினைச்சுட்டு இருக்கியா? இது லைஃப் மேட்டர் தஷுரி, தட்ஸ் இம்போஸிபள்" என்று ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அவன் அழுத்தம் கொடுத்துப் பேச, "இங்க எல்லாரும் விருப்பப்பட்டு கட்டிக்கிட்டு சந்தோஷமா புள்ளைய பெத்து வாழல்லையா, எல்லாம் பழகிடும்" என்று சாதாரணமாகச் சொன்னவள், அவனுடைய கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியாது வேகமாக படிகளில் பாய்ந்து ஓடினாள்.

விக்டரோ சில கணங்கள் ஓடும் தன்னவளை வெறித்துப் பார்த்தவன், எரிச்சலில் காலை தரையில் உதைத்துவிட்டு அவளுக்கும் மேலான வேகத்தோடு அவளை நெருங்கியவன், கடைசிப் படியில் தஷுரி காலை வைக்கும் அதேசமயம் அவளுடைய கரத்தைப் பற்றினான்.

இவளோ விருட்டென திரும்பிப் பார்க்க, "ஐ லவ் யூ!" என்றதோடு விக்டர், அவள் கரத்தைப் பற்றியிழுத்து அவளுடைய நுதலில் அழுந்த முத்தத்தைப் பதித்திருக்க, தெறித்துவிடுமளவிற்கு விழிகளை விரித்து திகைத்துப்போய் நின்றுக்கொண்டிருந்தாள் தஷுரி.

அங்கிருந்த ஒருசில பேர் இதைக் கண்டு தங்களுக்குள் குசுகுசுவெனப் பேசிக்கொள்ள, உடனே சுதாகரித்து சுற்றிமுற்றிப் பார்த்தவள் விக்டரை முறைத்தவாறு கையை உதறிவிட்டு கோயிலுக்குள் நுழைய, பின்னே மெல்ல மெல்ல வந்துக்கொண்டிருந்த ரோயிற்கும் துர்காவிற்கும் சுத்த சூனியம்தான்.

"அவங்களுக்குள்ள என்னதான் நடக்குது?" என்று துர்கா இவனுக்குப் புரியாது என்பதை மறந்து வாய்விட்டே கேட்டுவிட, "ஐ டோன்ட் நோ" என்று ரோய் சட்டென சொல்ல, தோளை அலட்சியமாகக் குலுக்கிக்கொண்டவள், அப்போதுதான் தன் கேள்விக்கு அவன் பதில் சொன்னதை உணர்ந்து, வேகமாகத் திரும்பிப் பார்த்தாள்.

"ஐ டோன்ட் நோ ன்னா அர்த்தம் தெரியாதுன்னுதானே! அது... அது எப்படி? நான் என்ன கேட்டேன்னு உங்களுக்கு புரிஞ்சுதா?" துர்காவுக்கு ஆச்சரியம் தாங்காமல் வார்த்தைகள் தந்தியடிக்க, "ஹேய் டுர்கா ஸ்லோவ் ஸ்லோவ்! ஸ்லோவா சொல்லு, ஸ்பீடா சொன்னா தெரியாது" என்று சிரித்தவாறு ரோய் சொல்ல, மழலைப் பேசுவது போல் அவன் பேசுவதில் சிரித்துவிட்டாள் துர்கா.

இங்கு விக்டரைக் கண்டுகொள்ளாதது போல் தஷுரி அங்குமிங்கும் கூட்டத்திற்கு நடுவே அலைய, இவனும் விடாது அவள் பின்னாலேயே அலைய என ஒரே கூத்தாக இருக்க, திடீரென தஷுரியின் தோளை ஒரு கரம் தொட, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் அவள்.

அவள் எதிரே சாட்சாத் வினோத்.

"ஹாய்ங்க, உங்கள இங்க பார்ப்பேன்னு எதிர்பார்க்கவே இல்லைங்க. சப்ரைஸ்ஸிங்கா இருக்கு" என்று சற்று வெட்கப்பட்டவாறே அவன் பேசிக்கொண்டு செல்ல, "ஹிஹிஹி... இல்லை சும்மாதான் வந்தேன்... வந்தவங்களுக்கு ஊரை சுத்திக் காட்டலாமேன்னு..." என்று தயங்கியபடி அவள் சொல்ல, வினோத்தின் புருவங்களோ யோசனையில் சுருங்கின.

"அன்னைக்கு நான் வரும் போது மாடிப்படியில ஒருத்தங்க நின்னுட்டு இருந்தாங்க, பார்க்க ஃபாரினர் மாதிரி இருந்தாரு. வந்திருக்காரா என்ன!" என்று வினோத் கேட்கவும், "ஹ்ர்ம் ஹ்ர்ம்..." என குரலை செருமியவாறு விக்டர் அவர்களுக்கருகே வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

விக்டரின் பார்வையோ வினோத்தை இரையாகக் கொள்வது போல் அவனையே ஆழ்ந்துப் பார்க்க, அதில் சற்று பயந்த மற்றவன், "நா..நான் கிளம்புறேன் தஷுரி, அப்பா வெளில எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க" என்று திக்கித்திணறி சொல்லிவிட்டு வெளியேறியிருந்தான்.

அவனின் முகத்தில் தெரிந்த பதற்றத்தை புரியாதுப் பார்த்தவள், 'இவன் மூஞ்சு ஏன் பேயறைஞ்ச மாதிரி இருக்கு?' என்று நினைத்த வண்ணம் விக்டரின் பக்கம் திரும்ப, அப்போதுதான் வினோத் பயந்து ஓடுவதற்கான காரணம் புரிந்தது அவளுக்கு.

விக்டரை முறைத்தவள், "இப்போ எதுக்கு உங்க பூனைக் கண்ணால அவன புலிப் பார்வை பார்த்து பயமுறுத்துனீங்க, அவர் என்ன நினைச்சிருப்பாரு?" என்று கடுப்பாகச் சொல்ல, ஒற்றைப் புருவத்தைத் தூக்கி தஷுரியை 'ஆஹான்!' என்ற ரீதியில் நக்கல் பார்வைப் பார்த்தான் விக்டர்.

அவளோ கண்டுகொள்ளாதது போல் செல்லப் போக, சட்டென அவளின் கரத்தைப் பற்றி தன்னை நோக்கி இழுத்து, "லுக், இதுவரைக்கும் எனக்கு பிடிச்சது எதையும் நான் விட்டுக்கொடுத்தது இல்லை. அது பொருளா இருந்தாலும் சரி உறவா இருந்தாலுமே சரி" என்று ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்தமாகச் சொன்னவான், "எனக்கு இப்போ உன்னை பிடிச்சு போச்சு தஷுரி, ஐ லவ் யூ தட்ஸ் இட். இனி உனக்கு பிடிக்குதோ இல்லையோ இந்த விக்டர்கிட்டயிருந்து நீ தப்பிக்க முடியாது. கொட் இட்!" என அமைதியாக சொன்னாலும் சிங்கத்தின் கர்ஜனை அடங்கியிருத்தது அவனுடைய வார்த்தைகளில்.

ஆடவன் அவளுடைய விழிகளை பிடிவாதம் கலந்த காதலோடு நோக்க, அவனின் காதல் மிரட்டலில் திகைத்துப்போய் நின்றுவிட்டாள் தஷுரி.


********************

தஷுரி 22>>>

https://agnitamilnovels.blogspot.com/2024/07/22.html


மற்ற கதைகளைப் படிக்க 🏃🏃

India link 👇

https://www.amazon.in/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%95%E0%AE%BF/e/B08ZYCHG6C/ref=dp_byline_cont_ebooks_1

USA link 👇

https://www.amazon.com/%25E0%25AE%25B7%25E0%25AF%2587%25E0%25AE%25B9%25E0%25AE%25BE-%25E0%25AE%25B8%25E0%25AE%2595%25E0%25AE%25BF/e/B08ZYCHG6C%3Fref=dbs_a_mng_rwt_scns_share?ref_=d6k_applink_bb_dls



Comments

Popular posts

தஷுரி 10