தஷுரி 20

 



'என்ன பேச ஏது பேசன்னு ஒன்னும் புரியல்லையே! அமைதியா போய் தஷு சொன்ன இடத்துல விட்டுருவோம், அதான் நமக்கு நல்லது' என உள்ளுக்குள் நினைத்தவாறு துர்கா திரும்பியும் பார்க்காது முன்னே செல்ல, அவளையே பார்த்தவாறு பின்னே நடந்து வந்தான் ரோய்.


ஏனோ அவளின் மிரண்ட பார்வையும் பதட்டம் நிறைந்த முகமும் பயமும் இவனுக்குள் ஏதோ ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்த, "ஹாய்..." என்றான் மெலிதானக் குரலில். அவன் அழைத்தது கேட்காமல் நடந்துக்கொண்டு சென்றவள், மீண்டும் அவன் அழைக்கத் திரும்பிப் பார்த்தாள்.


அவனோ, "மே ஐ நோ யூவர் நேம்?" என்று கேட்டு அவளை ஆர்வமாகப் பார்க்க, 'அய்யய்யோ பேசுறானே! இவன் வாந்தி எடுக்குற மாதிரி பேசுற விதத்துல நமக்கு ஒரு மண்ணும் புரிய மாட்டேங்குது. நேம்னு ஏதோ சொல்றான் அப்படின்னா நம்ம பெயரா கேக்குறான் போல!' என உள்ளுக்குள் தனக்குத்தானே பேசிப் புலம்பியவள், "ஹிஹிஹி... மை நேம் இஸ் துர்கா" என்று இழித்து வைக்க, "டுர்கா" என்று அந்த பெயரை சொல்லிப் பார்த்தான் ரோய்.


உடனே இவள், "டுர்கா இல்லை துர்கா" என்று திருத்தப் போக, அவனுக்கு அது வாயில் நுழைந்தால்தானே! 


"டுர்கா... டுர்கா..." என்றே திரும்பத் திரும்ப அவன் சொல்ல, இவளுக்கு அய்யோ என்றாகிவிட்டது. 


"எப்படியோ சொல்லித் தொலைங்க!" என்று அவனுக்குப் புரியாது என்பதை மறந்து அவள் தமிழில் திட்டிவிட்டுச் செல்ல, ரோய்க்கு ஏனோ அவளின் முகபாவனையில் சிரிப்பை அடக்க முடியவில்லை.


அதேநேரம், இத்தனைநாள் தஷுரியிடமிருந்து காணாமல் போன அவள் தேடிக்கொண்டிருந்த அவளுடைய அம்மாவின் டோலர் விக்டரின் கழுத்தில். அவளுடைய விழிகள் மின்ன, இவனுடைய விழிகளோ முதல் தடவை அவளிடத்தில் தடுமாறத் தொடங்கின.


"என்னோட டோலர் எப்படி பாஸ் உங்ககிட்ட?" என்று தஷுரி கேலிக்குரலில் கேட்க, உடனே தன் தடுமாற்றத்தை மறைத்துக்கொண்ட விக்டர் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, "இது உன்னோடதுன்னு எப்படி சொல்லுற, உன்கிட்ட மட்டும்தான் இருக்கணுமா?" என்று கேட்டான் முறைப்போடு.


அதில் குறும்பாகச் சிரித்தவள், அந்த டோலரின் மறுபக்கத்தைத் திருப்பி அதிலிருந்த நீலநிற சிறு கீற்றைக் காட்டி, "அம்மா நான் இதை தொலைச்சிடாம இருக்கணும்னு அடையாளத்துக்கு இப்படி கோடு போட்டிச்சு, அப்போ புரியல இப்போ புரியுது" என்று சொல்லிச் சிரிக்க, அவளுடைய கரத்தைத் தட்டிவிட்டவன், "வாட் ரப்பிஷ்!" என்று மாட்டிக்கொண்டதை சமாளிக்கவெனத் திட்டியவாறு செயினை கழற்றி அவள் கரத்தில் திணித்தான்.


"அன்னைக்கு கடைசியா என்னை கிஸ் பண்ணிட்டு மேடம் என் ரூம்லயே விட்டுட்டு போயிட்டீங்க. சோ, ஒரு சோஷியல் சர்வீஸ்ஸா உன்கிட்ட கொடுக்கலாமேன்னு வச்சிருந்தேன். தட்ஸ் இட்!" என்றுவிட்டு விக்டர் நகரப் போக, அவனுடைய கரத்தைப் பற்றிக்கொண்டவள், "லாரா மேடம் நல்லா இருக்காங்களா?" என்று கேட்டாள் இறுகிய குரலில்.


விழிகளை சுருக்கியவனுக்கு அப்போதுதான் தஷுரிக்கு நடந்தது தெரியாது எனப் புரிய, "யாஹ்... ஷீ இஸ் குட். இங்கயிருந்து போனதுமே லண்டனுக்கு ஹனிமூன் போறதா இருக்கோம்" என்று சிரிப்பை அடக்கியவாறுச் சொல்ல, அவனைப் பற்றியிருந்த கரத்தைவிட்டவள் முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை அடக்கியவாறு அங்கிருந்து விறுவிறுவென நடந்தாள்.


அன்று மாலை, அஃப்ரிமின் அருகில் அமர்ந்த ராதா, "இன்னும் ஒரு வாரத்துல இங்க பக்கத்து கோயில்லயே கல்யாணத்தை பண்ணிப்போம், உங்களுக்கு பிடிக்..பிடிக்கலன்னா உங்க முறைப்படிதான் பண்ணணும்னாலும் எனக்கு சம்மதம்தான்" என்று தயங்கியபடிச் சொல்ல, "உன் விருப்பம் ராதா" என்ற பெரியவர், இத்தனை வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் தன்னவளின் கன்ன சிவப்பை ரசித்தே அவரை மேலும் வெட்கப்பட வைத்தார்.


இதை முன்னிருந்த இளசுகளோ ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருக்க, தஷுரியோ எதையும் கண்டுகொள்ளாதது போலிருந்தவள், திடீரென பதறியபடி ஓடி வந்த துர்காவின் சத்தத்தில் திடுக்கிட்டு நிமிர்ந்துப் பார்த்தாள்.


"ராதாம்மா, சுப்ரமணி ஐய்யாவ போலீஸ்காரங்க பிடிச்சிட்டு போறாய்ங்க, அவரு ஏதோ போதை மருந்து பதுக்கி வச்சிருக்குறதா என்னன்னவோ சொல்லுறாய்ங்க" என்று பதறிக்கொண்டு சொல்ல, ராதாவும் தஷுரியும் வேகமாக தெருவுக்கு ஓட, அஃப்ரிமும் ரோயும் புரியாமல் அவர்களின் பின்னே சென்றார்கள் என்றால், விக்டரோ நிதானமாக ஒருவித மர்மச் சிரிப்போடு பின்னே சென்றான்.


அங்கு கையில் விலங்கை மாட்டி தரதரவென போலீஸார் சுப்ரமணியை இழுத்துச் செல்லும் காட்சித் தென்பட, ராதாவோ பாவமாகப் பார்த்தார் என்றால் தஷுரிக்கு உள்ளுக்குள் அத்தனை குஷி. 


"நல்லா வேணும் இவனுக்கு!" என்று கருவிக்கொண்டவள், "ஆனா, இவனுங்க எல்லாம் இன்னைக்கு போனா அடுத்தநாளே பணத்தை வச்சு வெளியில வந்து கெத்தா திரிவானுங்க" என்று கடுப்பாகச் சொல்ல, "இஸ் இட்!" என்று ஒற்றைப் புருவத்தை ஏளனமாகத் தூக்கி இறக்கியவன், "யூ நோ வெல் அபௌட் மீ தஷுரி" என்றான் அழுத்தமாக.


இவளுக்கு ஒருகணம் ஒன்றும் புரியவில்லை. ரோய்யோ விக்டர் சொன்னதைக் கேட்டுச் சிரிக்க, "விக்டர்!" என்று அதிர்ந்துப்போய் கத்தினார் அஃப்ரிம்


ராதாவோ இவர்களுக்குள் நடப்பது புரியாது திருதிருவென விழிக்க, இப்போதுதான் தஷுரியின் மூளைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக உரைக்க ஆரம்பித்தது. அவளுடைய விழிகள்  அதிர்ச்சியில் தானாக விரிய, பிளந்திருந்த அவளின் வாயை நாடியில் கை வைத்து மூடிவிட்டான் அவன்.


அன்றிரவு, உணவை முடித்துவிட்டு பாத்திரங்களைக் கழுவி வைத்த தஷுரி, சமையலறையிலிருந்து வெளியே வர, ராதாவோ அஃப்ரிம் அலைப்பேசியில் காட்டும் அலங்கார சேலைகளை அவருடன் பேசிச் சிரித்தவாறு பார்த்துக்கொண்டிருந்தார்.


'ஓஹோ! இப்போதானே இரண்டு பேருக்கும் இருபது வயசு. முகூர்த்த சேலை பார்க்குறாங்களாக்கும்' என்று உள்ளுக்குள் பொறுமிக்கொண்டவள், அவர்களைக் கடந்து செல்லப் போக, "தஷு, இங்க பாருடீ, அம்புட்டு அழகான சேலைங்க. நீயும் உனக்கொன்னு எடுத்துக்க" என்று ராதா ஆசையாகக் கூப்பிட, "இதுக்கெல்லாம் நீங்க ஏமாறலாம், நான் ஏமாற மாட்டேன்" என்று முகத்திற்கடித்தது போல் சொன்னவள், அங்கிருந்து மொட்டை மாடிக்குச் செல்ல, அஃப்ரிமின் முகமோ சோர்ந்துவிட்டது.


"நான் அவ கூட பேச ரொம்ப ட்ரை பண்றேன். ஆனா, என்னை திரும்பி கூட பார்க்க மாட்டேங்குறா" என்று அவர் மனவருத்தத்தோடுச் சொல்ல, ராதாவுக்கு தன் மகளை எப்படி சமாதானப்படுத்துவதென்று கூடத் தெரியவில்லை. 'ஒருவேள தப்பு பண்ணிட்டோமோ?' என்று கூட நினைக்க வைத்தது அவருடைய மனசாட்சி.


அதேநேரம் அறையிலிருந்து இதைப் பார்த்துக்கொண்டிருந்த விக்டருக்கு பல சிந்தனைகள் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தன. மாடியைப் பார்த்தவன், ஒரு முடிவெடுத்தவனாக தஷுரியைத் தேடி மாடிக்குச் செல்ல, அங்கு கைகளால் முட்டியைக் கட்டிக்கொண்டு தரையில் ஒரு ஓரமாக அமர்ந்து கால்களில் முகத்தைப் புதைத்திருந்தாள் அவள்.


சில கணங்கள் அதே இடத்தில் நின்றிருந்தவன், ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு மெல்ல அவளருகில் சென்றமர, அரவம் உணர்ந்து நிமிர்ந்துப் பார்த்த தஷுரி, தன் முன் அமர்ந்திருந்த விக்டரைப் பார்த்ததும் விழிநீரைத் துடைத்தவாறு முகத்தைத் திருப்பிக்கொண்டாள். 


"ஏன் உனக்கு அஃப்ரிம பிடிக்கல தஷுரி?" என்று அவன் வெறித்த குரலில் கேட்க, அவளோ அவன் புறம் திரும்பாமலேயே "உங்க அப்பா நீங்க பொறந்தப்போ கூட உங்கள தேடி வராம, அவரு தேவைப்படுற நேரங்கள்ல உங்க கூட இருக்காம வருஷக்கணக்கா தனிமையில விட்டுட்டு சட்டுன்னு வந்து உங்க முன்னாடி நின்னு என்னை ஏத்துக்கோன்னா ஏத்துப்பீங்களா, உங்க பாக்கெட்டுல இருக்குற துப்பாக்கியால அவர சுட்டுருக்க மாட்டீங்க?" என்று கேட்க, லேசாக முறுவலித்தான் அவன்.


"அப்படிதானே இருக்கேன், நான் ஷூட் பண்ணல்ல தஷுரி" என்றவனின் வார்த்தைகள் அத்தனை வலிகளோடு வெளிவர, அவனை வேகமாகத் திரும்பிப் பார்த்தவள் கேள்வியாக விழிகளைச் சுருக்கினாள்.


"அஃப்ரிம பார்த்ததுலயிருந்து ராதாம்மா முகத்துல அவ்வளவு சந்தோஷம். அவங்களுக்கு இருக்குற கோபத்தை விடவா உனக்கு இருந்துடப் போகுது! பட், அவங்க புரிஞ்சுக்கிட்டாங்க. ஐ திங் தட் இஸ் லவ். அஃப்ரிம் நினைச்சிருந்தா இன்னொரு கல்யாணத்தை பண்ணியிருக்கலாம், எங்க இடத்துல அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. ஆனா, இத்தனை வருஷம் அவர் வெயிட் பண்ணாரு, ராதாம்மாவும் அவருக்காக வெயிட் பண்ணாங்க. தட் இஸ் லவ்" என்று அவன் விளக்கப்படுத்த, எதுவும் பேசாது அவனையே பார்த்திருந்தாள் பெண்ணவள்.


அவளுடைய விழிகளிலிருந்து விழிநீர் ஓட, அதைத் துடைத்துவிட்டவன், "அவர் உன் அப்பா தஷுரி, அவர் எப்படி உன் அம்மாகிட்டயிருந்து உன்னை பிரிப்பாரு? அவரோட சிட்டுவேஷன் அவரால உங்கள தேடி வர முடியல, பட் உங்கள பத்தி என்கிட்ட சொல்லாத நாளில்ல. என்ட், நான் நினைச்சிருந்தா மூனே நாள்... மூனே நாள்ல உன்னை கண்டுபிடிச்சிருக்கலாம். பட், அஃப்ரிம் விடவேயில்ல. ஒருவேள, நீங்க இருக்குற இடம் தெரிஞ்சா அவரால தேடி வராம இருக்க முடியாது. கூடவே, ராதாம்மாவுக்குன்னு ஒரு வாழ்க்கை இருந்து, அது அவரால ஸ்பொய்ல் ஆகும்னு நினைச்சாரு போல! இட் ஹர்ட்ஸ் தஷுரி" என்றான் வலி நிறைந்த புன்னகையோடு.


தஷுரிக்கு இப்போதுதான் தான் செய்தது தவறென கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்க, கீழுதட்டைக் கடித்து அழுகையை அடக்க முயற்சித்தாள் அவள்.


"யூ நோ வாட், இத்தனை வருஷம் கழிச்சு உன் பேரன்ட்ஸ் சேர்ந்திருக்காங்கன்னு நீ எவ்வளவு ஹேப்பியா இருக்கணும். இப்படியொரு ஹேப்பினெஸ் என் லைஃப்ல என்னைக்கும் நடக்க வாய்ப்பேயில்ல" என்று விக்டர் தழுதழுத்த குரலில் சொல்ல, விருட்டென தன்னவனை நிமிர்ந்துப் பார்த்தாள் அவள்.


"சின்ன வயசுலயே அப்பா அம்மா பிரிஞ்சுட்டாங்க, கொஞ்சநாள்லயே அம்மா வேற மேரேஜ் பண்ணிட்டாங்க. அப்பா பிஸ்னஸ் ப்ராப்ளமால என்னை தேடி வரல. அம்மாவோட ஹஸ்பன்ட்டுக்கு என்னை பிடிக்காது. என்னை அடிப்பான், ரொம்ப வேலை வாங்குவான். பொறுத்தேன், சகிச்சிக்கிட்டேன், கொடுத்ததெல்லாம் வாங்கிகிட்டேன். எனக்குன்னு நேரம் வரும் வரைக்கும் பொறுமையா இருந்தேன். இப்போ... த க்ரேட் விக்டர்!" என்று கர்வத்தோடு சற்று சத்தமாகவே குரலை உயர்த்திச் சொன்னவன், 


"எல்லா இருந்தும் மனசுல ஒரு பாரம், எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லயிருந்து அவங்க சண்டை போட்டதை மட்டுந்தான் பார்த்திருக்கேன். அவங்களோட பாசத்துக்கு ரொம்ப ஏங்கியிருக்கேன். ஆனா... ராதாம்மா உனக்கு அம்மாவா அப்பாவா இருந்திருக்காங்க, உன் அப்பா இத்தனை வருஷம் உன்னையே நினைச்சுட்டு இருந்திருக்காரு, இப்போ இரண்டு பேரும் சேர்ந்து அவங்களோட பாசத்தை கொடுக்க வெயிட் பண்றாங்க. இதுக்குமேல வேற என்ன வேணும் தஷுரி உனக்கு? ஐ அம் ஜெலஸ் ஆன் யூ" என்று வார்த்தைகள் தடுமாற, விழிகள் கலங்க சொல்லி முடித்தான்.


இதுவரை அப்படியொரு தோற்றத்தில் தஷுரி அவனைப் பார்த்ததில்லை. முகத்தில் ஒரு இறுக்கமும் கர்ஜிக்கும் குரலில் மிரட்டுபவனாக தன்னவனைப் பார்த்தவளுக்கு அவனின் வலி நிறைந்த புன்னகையைப் பார்த்ததும் மனதில் சுள்ளென்ற வலி.


மெல்ல நகர்ந்து அவனின் அருகே சென்றவள், குனிந்திருந்த அவனின் முகத்தை நாடியில் விரலை வைத்து நிமிர்த்தி ஒற்றைக் கரத்தால் கன்னத்தைத் தாங்க, அவனோ அவளின் விழிகளைப் பார்க்கவேயில்லை.


"நான் இருக்கேன்" என்று திடீரென அவள் சொன்னதும், வேகமாக அவளைத் திரும்பிப் பார்த்தவனுக்கு விழிகள் சட்டெனக் கலங்கின. எத்தனை ஆறுதல் பொதிந்த வார்த்தைகள் அவை!


இப்போது அவனுடைய மனம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. இதுவரை காமம் என்றே தன்னை தேற்றிக்கொண்டவனுக்கு இது காமம் இல்லை என்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது. இருவருக்குமிடையில் இருக்கும் உறவுக்கான பெயர் தெரிந்த மறுகணம் இச்சிறு பெண்ணிடத்தில் தன்னை இழந்ததை நினைத்து உள்ளுக்குள் வெட்கப்பட்டுச் சிரித்தான் அவன். 


ஆனால், வெளிப்படையாக தன் உணர்வுகளைக் காட்டினால் அந்த விக்டர் அல்லவே!


தஷுரியோ அவனுடைய விழிகளைப் பார்த்திருந்தவள், அதில் தெரிந்த ஏதோ ஒன்றில் கட்டி இழுக்கப்பட்டவளாய் கண்ணிமைக்காமல் அப்படியே இருக்க, அவளை மெல்ல நெருங்கினான் விக்டர்.


இருவருக்குமிடையிலிருந்த கொஞ்சநஞ்ச இடைவெளியும் குறைய, காதலை உணர்ந்ததுமே முதல் முத்தமாய் அவளுடைய நுதலில் தன் இதழை ஒற்றியெடுத்தவன், தன்னவளின் விழிகளைக் காண, விழிகளை மூடியிருந்தவளுக்கோ வேகமாக மூச்சு வாங்கியது. 


அவளுடைய பாவனையில் அவனிதழ் மெல்ல விரிய, "தஷுரி..." என்று அழைத்தவன், அவள் விழிகளைத் திறந்த மறுகணம் அவளுடைய விழிகளைப் பார்த்தவாறு இதழில் அழுந்த முத்தத்தைப் பதித்தான். 


சில கணங்கள் அதிர்ச்சியில் விழிகளை விரித்தவள், பின் அவனோடு இணைந்தவாறு மெல்ல விழிகளை மூடிக்கொண்டாள். இப்போது அவளிருக்கும் மனநிலைக்கு அவனுடைய இதழ் முத்தம் அத்தனை இதத்தைக் கொடுக்க, அதைத் தடுக்கக் கூட மனம் எழவில்லை.


ஆர்ப்பாட்டமில்லாத அழகிய முத்தம் அது. நிதானமாக அவளின் இதழ் தேனை இவன் ருசிக்க, அமைதியாக தேனைப் பருகக் கொடுத்திருந்தாள் பெண்ணவள். கொஞ்சம் கொஞ்சமாக கன்னத்திலிருந்த அவனுடைய கரங்கள் கீழே இறங்கி மெல்ல அவளுடலில் அத்து மீறத் தொடங்க, ஒருபக்கம் சுகம் என்றாலும் இன்னொருபுறம் அன்று அவன் லாராவுக்கு முத்தம் கொடுத்த காட்சி ஞாபகத்திற்கு வந்தது அவளுக்கு.


ஏனோ அதற்குமேல் அவனுடைய தொடுகை அவளுக்கு வெறுப்பைத் தூண்ட, அவனுடைய கரத்தைத் தட்டிவிட்டவள், இதழை கஷ்டப்பட்டு பிரித்தெடுத்து அவனுடைய முகத்தை மூச்சு வாங்கியவாறுப் பார்த்தாள்.


விக்டரோ ஏதோ பொம்மையைப் பறிகொடுத்த குழந்தைப் போல் அவளுடைய இதழை பாவமாகப் பார்க்க, அவனுடைய விழிகளைக் காண முடியாது அங்கிருந்து எழுந்து அவள் விறுவிறுவென சென்றுவிட, இப்போது அவளின் மனதை அறிய முடியாது குழம்பிப் போனது என்னவோ ஆடவன்தான்.


அடுத்தநாள்,


"இது எப்படி பண்ண ராதா, ரொம்ப நல்லா இருக்கு" என்று தன்னவள் செய்துக் கொடுத்த ரவா உப்புமாவை சாப்பிட்டவாறு அஃப்ரிம் சொல்ல, வாய்விட்டு சிரித்தவாறு, "இது மட்டும் தஷுரி காதுல விழுந்துடவே கூடாது, அப்பறம் அவ்வளவுதான்" என்று சொன்ன ராதாவின் முகம் சட்டென வாடியது.


அதைக் கவனித்த பெரியவர், "என்னாச்சு?" என்று பதறியபடிக் கேட்க, "தஷுரி எங்கூட நல்லா பேசி ரொம்ப நாள் ஆகுற மாதிரி இருக்கு, மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குதுங்க" என்று அவர் சொல்லவும், "என்னாலதான் அவ இப்படி இருக்கா, தப்பு என்மேலதான்" என்ற அஃப்ரிமுக்கு அத்தனை குற்றவுணர்ச்சி.


"ச்சே ச்சே! அப்படி இல்லைங்க" என்று ராதா விழிகளைத் துடைத்தபடி அஃப்ரிமை சமாதானப்படுத்த, திடீரென "என்ன, உங்களுக்கும் உப்புமாதானா! இது ரொம்ப தப்பும்மா" என்ற தஷுரியின் குரல்.


உடனே இருவருமே திரும்பிப் பார்க்க, அஃப்ரிமின் முன் வந்து நின்றவள், எப்படி ஆரம்பிப்பதென்றுத் தெரியாது கைகளைப் பிசைந்தவாறு தடுமாறினாள்.


ஆனால், மனதிலிருப்பதை அஃப்ரிமே பேசத் தொடங்கினார். "உனக்..உனக்கு பிடிக்கலன்னா நான் இங்கயிருந்து போயிடுறேன்ம்மா, அம்மாவா மட்டுமில்ல அப்பா ஸ்தானத்துலயிருந்து ராதா உன்னை பார்த்திருக்கா. இனிமேலும் நல்லா பார்த்துப்பா. உங்க இரண்டு பேருக்கிடையில என்னால பிரிவு வேணாம்மா" என்று அவர் விழிகளில் கண்ணீர் தேங்கச் சொல்லி முடிக்க, இவளுக்கோ ஒரு மாதிரியாகிவிட்டது.


"என்னை மன்னிச்சிருங்கப்பா!" என்று சொன்னவாறு உடனே தஷுரி தந்தையை அணைத்துக்கொள்ள, ராதாவுக்கு சந்தோஷத்தில் விழிநீர் ஊற்றெடுத்தது. 


"உன்னை நான் அடிச்சிருக்கக் கூடாது, ஏதோ கோபத்துல..." என்று ராதா தவறு செய்துவிட்ட குழந்தைப்போல் மகளிடத்தில் திக்கித்திணற, அவரை முறைத்துப் பார்த்தவாறு "உன்னை அப்பறம் கவனிச்சிக்கிறேன்" என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு அஃப்ரிமின் தோளில் அவள் சாய்ந்துக்கொள்ள, பெரியவரோ அளவு கடந்த சந்தோஷத்தில் மகளின் நெற்றியில் முத்தத்தைப் பதித்தார்.


இதை மாடிப்படிகளில் நின்றவாறு பார்த்துக்கொண்டிருந்த விக்டருக்கு உள்ளுக்குள் தன்னை மீறி எழும் பொறாமையை தடுக்க முடியவில்லை. அத்தனை ஏக்கம் அவனுடைய விழிகளில். 


'எத்தனை பணம் இருந்து என்ன பயன், இந்த பாசம் கிடைக்கவில்லையே!' என்ற ஏக்கம் அவனுக்குள்.


ஆனால், அந்த ஏக்கம் மொத்தமும் தஷுரியைப் பார்த்ததும் காணாமல் போக, காதலாகப் பார்த்திருந்தவனின் தலைமேல் இடியை இறக்கியது போல் அடுத்து நடந்த சம்பவம் அமைய, இதை தஷுரி கூட எதிர்பார்க்கவில்லை.



தொடரும்....


*******************

தஷுரி 21 >>>

https://agnitamilnovels.blogspot.com/2024/07/21.html


மற்ற கதைகளைப் படிக்க 🏃🏃

India link 👇

https://www.amazon.in/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%95%E0%AE%BF/e/B08ZYCHG6C/ref=dp_byline_cont_ebooks_1

USA link 👇

https://www.amazon.com/%25E0%25AE%25B7%25E0%25AF%2587%25E0%25AE%25B9%25E0%25AE%25BE-%25E0%25AE%25B8%25E0%25AE%2595%25E0%25AE%25BF/e/B08ZYCHG6C%3Fref=dbs_a_mng_rwt_scns_share?ref_=d6k_applink_bb_dls




Comments

Popular posts

தஷுரி 10