தஷுரி 18




வேகமாக அறைக்குள் சென்று ராதா கதவை சாத்திக்கொள்ள, என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று தெரியாமல் அதிர்ந்துப்போய் விக்டரையே பார்த்தவாறு நின்றிருந்தாள் தஷுரி.


"நீங்...நீங்க இங்க? என்ன நடக்குது இங்க?" என்று தஷுரி நடப்பது புரியாமல் பதற்றத்தோடுக் கேட்க, "யூ ப்ளடி..." என்று ஒரு அடி முன்னே வைத்து திட்டச் சென்றவனின் கரத்தைப் பற்றினான் ரோய்.


அவளோ திருதிருவென விழிக்க, ரோயின் கரத்தைத் தட்டிவிட்டு தஷுரியை நோக்கி விறுவிறுவெச் சென்ற விக்டர், அவளின் கரத்தைப் பற்றி அங்கிருந்த ஒரு அறைக்குள் இழுத்துச் சென்று கதவை சாத்திக்கொண்டான். 


அஃப்ரிமோ தன்னவள் சென்ற அறையின் பூட்டிய கதவை கலங்கிய விழிகளோடு வெறித்துப் பார்த்தவர், அதற்குமேல் அங்கு நிற்காது காரில் சென்று அமர்ந்திருக்க, நடு ஹாலில் எங்கு செல்வதென்றுத் தெரியாது மலங்க மலங்க விழித்தவாறு நின்றிருந்தான் ரோய்.


இங்கு தான் பிடித்திருந்த கரத்தில் அழுத்தத்தைக் கூட்டியவன், தன் முன் வலியில் முகத்தைச் சுருக்கிக்கொண்டு நின்றிருந்தவளை முறைத்துப் பார்க்க, "ஸ்ஸ்... விடுங்க! இங்க எதுக்கு வந்தீங்க, நீங்கதானே என்னை துரத்திவிட்டீங்க, இப்போ என்ன?" என்று பதிலுக்கு முறைத்தவாறுக் கடுகடுத்தாள் தஷுரி.


"உன்னை துரத்தியிருக்கவே கூடாது, கொன்னிருக்கணும்" என்று அவன் பற்களைக் கடிக்க, "நா..நான் என்ன பண்ணேன்? சும்மா என்னை திட்டிட்டே இருக்காதீங்க. அதுக்கு முன்னாடி அஃப்ரிம் ஏன் ஒரு மாதிரி இருக்காரு, அம்மா ஏன் உள்ள அழுதுட்டே போச்சு?" என்று தெரியாதுக் கேட்டாள் அவள்.


"பல வருஷம் கழிச்சு அவங்களோட காதலன பார்த்தாங்கல்ல, அதான்..." என பட்டென்று அவன் சொல்வும், "ஓஹோ..." என சாதாரணமாக விட்டவள், பின்னே அவனின் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து, "எதே?" என்று காத்தினாள் அதிர்ச்சி தாங்காமல்.


"உன் ஃபேமிலி மேட்டர நீ அப்பறம் பார்த்துக்க, ஐ ஜஸ்ட் டோன்ட் கெயார். என்னோட பொருள் எங்க?" என்று அழுத்தமாக விக்டர் கேட்க, "என்..என்ன பொருள், உங்க சாமான் எதுவும் என்கிட்ட இல்லை. சும்மா சும்மா என்மேல பழிய போடாதீங்க" என்றாள் அவனின் கூரிய பார்வையைப் பார்க்க முடியாமல் தடுமாறியபடி.


அவனோ அவளைக் கூர்ந்துப் பார்த்தவன், "ப்ளடி தீஃப்!" என்று பற்களைக் கடிக்க, தடுமாற்றத்தை மறைக்க முயன்று தோற்றுப் போனவள், 'ஊஃப்ப்...' என பெருமூச்சுவிட்டு தன் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த செயினை வெளியே எடுக்க, அதில் கோர்த்திருந்ததைப் பார்த்ததும் அவளைத் தீப்பார்வைப் பார்த்தான் அவன்.


தஷுரியோ திருதிருவென விழிக்க,  தன்னிடமிருந்து அவள் திருடிய லாராவின் வைரக்கல்லை  செயினிலிருந்து பிய்த்தெடுத்தான் அவன். 


அவன் பிய்த்தெடுக்கவும் இவளுக்கு வலியெடுக்க, "ஸ்ஸ்... ஆஆ..." என்று முகத்தைச் சுளித்தவள், அவனை ஏகத்துக்கும் முறைத்துப் பார்க்க, அதைக் கையிலெடுத்து பாக்கெட்டுக்குள் இட்டவன், அவளை ஏளனப் பார்வைப் பார்த்தான்.


அதில் மேலும் இவளுக்கு பிபி எகிற, "நான் ஒன்னும் உங்க பொருள திருடல, கடைசியா உங்களுக்கு டாடா சொல்லிட்டு ரூம்லயிருந்து கிளம்பும் போது இது என் கண்ணுக்கு பட்டுச்சு. என்னை வெளியூருக்கு அனுப்புறதுக்காக அம்மா ஏகப்பட்ட கடன் வாங்கியிருந்துச்சு, அந்த பணத்தை திருப்பி கொடுக்க வேணாமா என்ன! இத்தனை நாள் வேலை பார்த்ததுக்கு என் சம்பளம் இது" என்று அவள் விறைப்பாகச் சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்ள, மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டி ஒற்றைப் புருவத்தைத் தூக்கிய வண்ணம் ஒரு பார்வைப் பார்த்தான் விக்டர்.


அவளும் அவனின் பார்வையை நேருக்கு நேராக சந்திக்க, ஏனோ அவனின் பார்வையை மட்டும் அவளால் சந்திக்க முடியவில்லை. அவனின் ஆழ்ந்த பார்வை அவளுக்குள் ஏதோ செய்ய, விழிகள் அலைபாய, முகத்தைப் பட்டென்று திருப்பிக்கொண்டவளுக்கு அப்போதுதான் ஒன்று மனதை வதைத்தது.


'இந்த கல்லுக்காகத்தான் என்னை தேடி வந்தானா?' என அவள் மனம் கேட்டுக்கொள்ள, அடுத்தகணம் கொஞ்சமும் யோசிக்காது, "இதுக்..இதுக்காகதான் என்னை தேடி வந்தீங்களா?" என்று கேட்டுவிட்டாள் தஷுரி. 


அந்த கேள்வியில் விக்டரின் விழிகள் இடுங்க, அவளின் குரலிலிருந்த வலி அவனுக்குப் புரியாமல் இல்லை. ஆனால், இதற்கான பதில் அவனுக்கே தெரியாதல்லவா!


'நிஜமாகவே இந்த ஒரு கல்லுக்காகத்தான் இவளைத் தேடி வந்தோமா?' தன்னைத்தானே கேள்விக் கேட்டுக்கொண்டது அவன் மனசாட்சி.


ஆனால், இதற்கான பதில் மட்டும் அவனுக்கு சுத்தமாகத் தெரியவில்லை. அவளோ பதில் வராததில் அவனை திரும்பிப் பார்க்க, அவளுடைய விழிகள் ஒருகணம் அதிர்ச்சியில் விரிந்து சுருங்கின. ஏனோ அவனுடைய பார்வையில் தெரிந்த ஏதோ ஒன்று அவள் மனதை அசைத்துப் பார்க்க, தஷுரியின் விழிகள் சட்டெனக் கலங்கின.


இங்கு இவ்வாறு இருக்க, ஹாலில் தனியாக நின்றிருந்த ரோய், சட்டெனக் கேட்ட கொலுசு சத்தத்தில் வேகமாக பின்னே திரும்பிப் பார்த்தான். அவனெதிரே வாசலில் மூச்சு வாங்கியவாறு நின்றிருந்த துர்கா, 'யார் இந்த வெள்ளைக்காரன்?' என்று உள்ளுக்குள் நினைத்த வண்ணம் அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க, ரோயின் புருவங்களோ யோசனையில் சுருங்கின.


"தஷு..தஷுரி... பார்க்கணும். அய்யோ இவனுக்கு தமிழ் தெரியுமோ தெரியாதே... ஐ சீ தஷுரி... யூ... வெயார்..." என்று என்ன பேசுவதென்றுத் தெரியாமல் அவள் ஆங்கிலத்தைக் கொல்ல, ரோயிற்கு ஏனோ அவளின் உளறலில் சிரிப்புதான் வந்தது. 


அவன் சிரிப்பை அடக்க முயல, அவனின் லேசான இதழ் விரிப்பில் அவன் தன்னைப் பார்த்து சிரிப்பதை கண்டுகொண்டவளின் முகம் கறுக்க, கீழட்டைக் கடித்து அவள் குனிந்துகொள்ள, ரோயிற்கு ஏனோ ஒரு மாதிரி ஆகிவிட்டது. 


சரியாக, இறுகிய முகத்தோடு தஷுரி ஹோலுக்கு வர, பின்னே வந்த விக்டர், "ராதாம்மா, இன்னும் கதவ திறக்கல்லயா என்ட் அஃப்ரிம் எங்க?" என்று சுற்றிமுற்றிப் பார்த்தவாறுக் கேட்க, மற்றவனோ அலட்சியமாகத் தோளைக் குலுக்கிக்கொண்டான் என்றால், துர்காவோ நடப்பது புரியாமல் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தாள்.


திடீரென உள்ளே வந்த அஃப்ரிம், "நாம கெளம்பலாம், நான் பண்ண தப்புக்கு இந்த தண்டனை போதும்" என்றுவிட்டு வெளியேறப் போக, சட்டெனக் கதவைத் திறந்த ராதா, "உங்க கூட கொஞ்சம் பேசணும்" என்றார் அழுது வீங்கிய முகத்தோடு.


இளசுகள் நால்வரும் அமைதியாக இருக்க, தலை குனிந்தவாறு அறைக்குள் அஃப்ரிம் நுழைய, தஷுரியைப் பார்த்தவாறு கதவை சாத்தினார் ராதா. 


ஏனோ அஃப்ரிமுக்கு தன்னவளின் விழிகளைக் கூட நேருக்கு நேர் காண முடியவில்லை. ராதா கட்டியிருந்த புடவையும் மழைக்கு ஒழுகும் வீடும் அவரின் முகத்தில் தெரிந்த களைப்புமே அவரின் இன்றைய கஷ்டத்தை அப்பட்டமாகக் காட்ட, எத்தனை பெரிய தவறு செய்துவிட்டோம் என்று அவரின் இதயத்தைக் குத்திக் கிழித்தது அவரின் மனசாட்சி.


தன்னவளின் முன் தலை குனிந்த வண்ணம் அவர் நின்றிருக்க, "இப்போதான் என் ஞாபகம் வந்துச்சா அஃப்ரிம், ஏன் இத்தனைநாள் என்னை தேடி வரலன்னு நான் கேக்க மாட்டேன். நீங்க உயிரோட இருக்கீங்கன்னாச்சும் எனக்கு தெரியப்படுத்தியிருக்கலாம். தினமும் அழுகாம நிம்மதியா தூங்கியிருப்பேன்" என்று ராதா அழுகையை அடக்கிய குரலோடுச் சொல்ல, இவரோ ஒருகணம் ஸ்தம்பித்து நின்றுவிட்டார்.


விழிகளிலிருந்து விழிநீர் அவரையும் மீறி கன்னத்தின் வழியே வழிந்தோட, "அன்னைக்கு ஆக்சிடென்ட் ஆகி சுயநினைவில்லாம ரொம்பநாள் கிடந்தேன். கண் முழிச்சதுமே உன்னை பார்க்கணும்னு மட்டுந்தான் என் மனசு சொல்லிச்சு, ஆனா நீ ஃப்ரான்ஸ்ஸ விட்டு போயிட்டேன்னு சொன்னதும் என்னால என்ன பண்றதுன்னு தெரியல. எங்க போய் உன்னை தேடுறதுன்னு தெரியல. என்னை மன்னிச்சிரு ராதா!" என்று சொன்னவாறு ராதாவின் கரத்தைப் பற்றி கண்களில் ஒற்றி அழத் தொடங்க, அவரையே அழுத்தமாகப் பார்த்திருந்தார் மற்றவர்.


"நா..நான் உங்க குழந்தைய சுமக்குறேன்னு தெரிஞ்சும் என்னை தேடி வரணும்னு உங்களுக்கு தோனல்லையா அஃப்ரிம்?" என்று ராதா கேட்கும் போதே அவரின் தொண்டைக்குழி அழுகையில் அடக்க, பதறிப்போனவராக அஃப்ரிம், "ஒவ்வொரு நாளும் தோனிச்சு ராதா, ஒவ்வொரு நாளும்.... ஆனா, அப்போ நான் பார்த்த வேலையால உனக்கும் குழந்தைக்கும் ஆபத்தாகிறக் கூடாதுன்னு யோசிச்சேன். வில்லியம் சாரோட இருந்ததால என்னை கொலை பண்ண கூட ஆளுங்க சுத்திட்டு இருந்தாங்க, அப்போ நாட்டை விட்டு  வெளில போக முடியல. நாட்களும் ஓடிருச்சு, கண்டிப்பா குழந்தைக்காக உனக்கொரு வாழ்க்கைய அமைச்சிருப்பன்னு நினைச்சி..." என்று பேசிக்கொண்டே சென்றவர், தன்னவள் முறைப்பதைப் பார்த்து அப்படியே பேச்சை நிறுத்தினார்.


அஃப்ரிமைத் தீப்பார்வைப் பார்த்தவர், "ஓஹோ! அப்படி கூட தோனிச்சா உங்களுக்கு?" என்று கேட்க, "அது... அது வந்து... நான்... அப்படி நினைச்சிருக்க கூடாது. மன்னிப்பு கேக்குறதை தவிர என்ன பண்றதுன்னு எனக்கு தெரியலம்மா" என்றார் அஃப்ரிம் அப்படியே தரையில் முட்டி போட்டு அமர்ந்தவாறு.


சில கணங்கள் ராதாவிடத்தில் மௌனம். விழிகளில் தேங்கியிருந்த நீரை இழுத்துப்பிடித்து வைத்தவாறு இறுகிய முகத்தோடு தரையில் பார்வையை பதித்த வண்ணம் நின்றிருந்தார். அஃப்ரிமுக்கு தன் காதலை எப்படி புரிய வைப்பதென்றுக் கூட தெரியவில்லை. தன்னவளின் குற்றம் சுமட்டும் பார்வையும் வார்த்தைகளும் அவரை கொல்லாமல் கொன்றது.


சில கணங்களின் பின், தன் கரத்தைப் பற்றியிருந்த அஃப்ரிமின் கரத்தை உதறிவிட்டவாறு அவர் அறைக்கதவை நோக்கி நடக்க, ஒரு பெருமூச்சுவிட்டு விழிகளை அழுந்தத் துடைத்தவாறு "ராதா..." என்று அழைத்தார் அஃப்ரிம்.


மற்றவர் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால், நடையை நிறுத்திவிட்டு அதே இடத்தில் அமைதியாக அவர் நிற்க, "நாம கல்யாணம் பண்ணிப்போமா?" என சட்டெனக் கேட்டுவிட்டார் அந்த பெரியவர். ராதாவுக்கு தன் காதில் சரியாகத்தான் கேட்டதா என்ற குழப்பம் வேறு.


வேகமாகத் திரும்பியவர், "அஃப்ரிம்!" என்று அதிர்ந்த குரலில் அழைக்க, எழுந்து நின்றவர், "நிஜமாதான் கேக்குறேன், இத்தனை வருஷத்துக்கு அப்பறம் கேக்க ஒரு மாதிரியாதான் இருக்கு. பட், இருந்தாலும்.... வில் யூ மேர்ரி மீ?" என்று மீண்டும் விழிகளில் காதலோடுக் கேட்க, ராதாவோ முகத்தை மூடி அழ ஆரம்பித்துவிட்டார்.


அஃப்ரிம் பதறியபடி நெருங்கி அவரின் கரத்தைப் பற்றி முகத்திலிருந்த கரங்களை விலக்க, "கண்டிப்பா" என்றுக்கொண்டே தன்னவரின் மார்பில் முகத்தைப் புதைத்தவர், "இதை கேக்க இவ்வளவு நேரமாச்சா உங்களுக்கு?" என்று கேட்டுக்கொண்டே மேலும் தன் அணைப்பில் நெருக்கத்தைக் கூட்ட, இதை விட வேறென்ன வேண்டும் அந்த பெரியவருக்கு!


இத்தனை வருடங்கள் மனதிலிருந்த பாரம் இறங்கி, இதுவரை அனுபவித்திராத சந்தோஷத்தை அவர் அனுபவிக்க, ஏதோ இருபத்தைந்து வருடங்கள் குறைந்தது போன்ற உணர்வு அவருக்குள்.


இங்கு இளசுகள் நால்வரும் வாசலில் காத்திருக்க, திடீரென கதவு திறக்கப்படும் சத்தம். மொத்தப் பேரின் பார்வையும் அறைப் பக்கம் திரும்ப, புன்னகையோடு வெளியே வந்த இருவரின் கரமும் கோர்க்கப்பட்டிருக்க, தஷுரியோ கோர்த்திருந்த கரத்தை இறுகிய முகத்தோடுப் பார்த்தாள்.


"அஃப்ரிம்..." என்றழைத்து விக்டர் கேள்வியாக அவரை நோக்க, "ஆல் குட் கண்ணா, என்ட் ஹேப்பி நியூஸ். நானும் ராதாவும் கல்யாணம் பண்ணிக்க போறோம்" என்று அஃப்ரிம் சொன்னதும், விக்டரும் ரோயும் ஒருவரையொருவர் திகைத்துப் பார்த்துக்கொள்ள, தஷுரியின் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை. 


துர்காவின் நிலையை சொல்லவா வேண்டும்! அந்த வெளிநாட்டவரோடு ராதா கைக்கோர்த்திருப்பதை தலை சுற்றாத குறையாக அவள் பார்த்திருக்க, ராதாவோ தஷுரியை புன்னகையோடு பார்த்தார். ஆனால், தஷுரி தரையில் பார்வையைப் பதித்தவாறு நின்றிருந்தவள், எல்லாருடைய பார்வையும் தன்மேல் படிவதை உணர்ந்து அதற்குமேல் அங்கு நிற்காது விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறியிருக்க, "தஷு..." என செல்லப் போன ராதாவின் கரத்தை அழுத்தமாகப் பற்றினார் அஃப்ரிம்.


அவரோ அதிர்ச்சியோடு தன்னவரைப் பார்க்க, "நான் அவகிட்ட பேசுறேன் ராதா" என்று உறுதியாகச் சொல்ல, துர்கா தஷுரியின் பின்னே ஓடினாள் என்றால், ரோயின் பார்வையோ தாவணியைத் தூக்கிக்கொண்டு ஓடிய துர்காவை ரசனையோடுப் பார்த்தது.


"நாங்க வந்த வேலை முடிஞ்சது. டாட் கூட நான் பேசிக்கிறேன் அஃப்ரிம், நீங்க இங்கேயே இருக்கலாம். நீங்க வரணும்னாலும் நோ ப்ராப்ளம். என்ட்.... அப்போ நாங்..நாங்க கிளம்புறோம்" என்ற விக்டருக்கு செல்லப் போவதை சொல்லக் கூட வார்த்தைகள் தடுமாற, அவனுடைய மனமோ 'போக வேணாம்னு சொல்லுங்க' என்று அவனையும் மீறி படபடவென அடித்துக்கொண்டது.


"ஏன் விக்டர், கொஞ்சநாள் இங்க இருந்துட்டே போகலாமே! ஊரையும் சுத்தி பார்க்கலாம் கூடவே எங்க கல்யாணத்தையும்" என்றார் ராதா கெஞ்சலாக.


"இல்லை ராதாம்மா... அது வந்து...  ஐ ஹேவ் டூ கோ" என்று அவன் தடுமாற, "நோ விக்டர், கொஞ்ச நாளாச்சும் நீ இங்கதான் இருக்கணும். மை கைன்ட்லி ரிக்வஸ்ட்" என்றார் அஃப்ரிம் முடிவாக.


எப்போதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசும் விக்டருக்கு ஏனோ இந்த முறை அப்படிப் பேச தோன்றவில்லை. புருவத்தை நெறித்து யோசித்தவாறு அவன் ரோயைப் பார்க்க, அவனோ முப்பத்திரெண்டு பற்களையும் காட்டி இழித்துக்கொண்டு விக்டரைப் பார்த்தான். 


தன் நண்பனின் பாவனையின் அர்த்தம் புரியாது விழித்தவன், பின் என்ன யோசித்தானோ "ஓகே" என்றுவிட்டு சுற்றிமுற்றிப் பார்க்க, "உன்னோட வசதிக்கேத்த மாதிரி இந்த இடம் இருக்காது, என்னை மன்னிச்சிருப்பா!" என்று சற்று தயக்கத்தோடு சொன்னார் ராதா.


"நோ... அப்படியெல்லாம் இல்லை. நான் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்" என்றுவிட்டு விக்டர், "எக்ஸ்கியூஸ் மீ!" என்றுக்கொண்டே அங்கிருந்து வெளியேறி பெரிய மூச்சாக இழுத்துவிட்டான். இத்தனை அமைதியை அவன் இதுவரை உணர்ந்ததில்லை. சுற்றி பச்சைப் பசேலென தெரிந்த கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சிகளைப் பார்க்கும் போது அன்று தஷுரி அவளுடைய ஊரைப் பற்றி சொன்னவைதான் அவனுடைய ஞாபகத்திற்கு வந்தது.


சட்டைக்குள் மறைத்திருந்த தஷுரியின் அன்றில் பறவை டோலர் கோர்த்திருந்த செயினை வெளியே எடுத்தவன், அதை லேசாக வருடியவாறு மீண்டும் அமைதியைத் தேடி விழிகளை மூடிக்கொள்ள, இங்கு அரச மரத்தடிக் கோயிலில் கால்களைக் கட்டிக்கொண்டு தரையில் அழுத வண்ணம் அமர்ந்திருந்த தஷுரியை பரிதாபமாகப் பார்த்திருந்தாள் துர்கா.


"அவங்க என்ன பேசினாங்க, நீ ஏன் கோச்சிக்கிட்டு வெளிய வந்தேன்னு புரியல தஷு, ஆனா ராதாம்மாவும் அந்த ஆளும் கைய கோர்த்துக்கிட்டு இருந்ததை பார்த்தா அவருதான் உன்..." என்று இவள் தயக்கமாக இழுக்க, "ஆமா, அந்த ஆளுதான் என் அப்பா" என்றாள் தஷுரி அத்தனை வெறுப்போடு.


அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்த மற்றவள், "என்னால நம்பவே முடியல தஷு, இத்தனை வருஷம் கழிச்சு அவர் உங்களை தேடி வந்திருக்காரா? உன..உனக்கு உன் அப்பா வந்தது பிடிக்கலையாடீ?" என்று கேட்டு அவளின் பதிலை எதிர்பார்க்க, "அது எப்படி துகி, இத்தனை வருஷம் எங்களை தேடி வரணும்னு தோனல்ல இப்போ வந்து மன்னிப்பு கேட்டா எல்லாமே சரியாகிடுமா? இத்தனை வருஷம் அம்மா பட்ட கஷ்டம், அவமானமெல்லாம் இல்லைன்னு ஆகுமா?" என்று மனதிலிருந்ததைக் கேள்விகளாக அவள் கொட்ட, துர்காவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.


"இப்போ ஏதோ வயசு பசங்க மாதிரி கல்யாணம் பண்ணிக்க போறாங்களாம், பண்ணிக்கட்டும் எனக்கென்ன! இனி நான் அம்மாவுக்கு தேவையில்ல, அவங்க காதலன்தான் வந்தாச்சே! இனி நான் தேவையில்ல. அவங்க எல்லாத்தையும் மறந்து முட்டாள் மாதிரி ஏத்துக்கட்டும், நான் ஏத்துக்க மாட்டேன், முடி...முடியாது" என்று தஷுரி மூச்சு வாங்கப் பேசியவாறு ஆத்திரத்தில் பேசிக்கொண்டே செல்ல, அவளை மார்போடு அணைத்துக்கொண்டாள் அவளின் தோழி.


அடுத்தநொடி அவளை அணைத்தவாறு இவள் கதறியழ, துர்கா எதுவும் பேசவில்லை. அவளுடைய முதுகை ஆறுதலாக வருடிவிட, மெல்ல மெல்ல தஷுரியின் அழுகையும் குறைந்தது.


அதை உணர்ந்த துர்கா, "ஆமா... அதுதான் உன் ஆளா தஷு, நீ சொன்ன விக்டர்?" என பட்டென்றுக் கேட்டுவிட, உனே அவளை விட்டு விலகி அவள் முகத்தைப் பார்த்தவள், கீழுதட்டைக் கடித்த வண்ணம் மேலும் கீழும் தலையாட்டி வைத்தாள்.


************************

தஷுரி 19 >>>

https://agnitamilnovels.blogspot.com/2024/07/19.html

 மற்ற கதைகளைப் படிக்க 🏃🏃

India link 👇

https://www.amazon.in/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%95%E0%AE%BF/e/B08ZYCHG6C/ref=dp_byline_cont_ebooks_1

USA link 👇

https://www.amazon.com/%25E0%25AE%25B7%25E0%25AF%2587%25E0%25AE%25B9%25E0%25AE%25BE-%25E0%25AE%25B8%25E0%25AE%2595%25E0%25AE%25BF/e/B08ZYCHG6C%3Fref=dbs_a_mng_rwt_scns_share?ref_=d6k_applink_bb_dls




Comments

  1. அது சரி, அம்மாவும் அப்பாவும் சேர்ந்தாச்சு,.. ஆனா, அவங்களுக்குள்ள காதல் இருந்தது, இத்தனை வருசத்துக்கப்புறமும், அதை வெளிப்படையா ஒத்துக்கிட்டதோட, கல்யாணமும் பண்ணிக்க சம்மதிச்சிருக்காங்க. ஆனா, இங்கொருத்தன் மலைமாடு மாதிரி வளர்ந்திருக்கிறதோட காதலையே ஒத்துக்க மாட்டேங்கிறான், இதுல கல்யாணத்தை எங்கே ஒத்துக்கப் போறான் தெரியலையே...???

    CRVS (or) CRVS 2797

    ReplyDelete

Post a Comment

Popular posts

தஷுரி 10