தஷுரி 17

 



அந்த ஊரிலேயே பெரிய சர்சில், வெள்ளை நிற கற்கள் பதிக்கப்பட்ட தன் திருமண ஆடையில் கையில் பூங்கொத்துடன் லாரா ஃபாதரின் முன்னே நின்றிருக்க, முகம் இறுகிப்போய் நின்றிருந்தான் விக்டர். 


திருமணமென்று அவனுடைய முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை. அதை அவன் பக்கத்திலிருப்பவளும் உணராமலில்லை.


"விக்டர், என்னாச்சு?" என்று புரியாது லாரா கேட்க, "ஹ்ர்ம் ஹ்ர்ம்... நத்திங்" என்றவன், அந்த இடத்தில் வைத்து உடனே அழைப்பொன்றை எடுத்தான்.


முன்னிருந்த ஃபாதரோ, "சார்..." என்று தயக்கமாக அழைக்க, "விக்டர், இப்போ கால் பண்ணணும்னு ரொம்ப அவசியமா?" என்று அவள் சிறு கடுப்போடு கேட்டதும், "வெயிட்!" என்றவன், "ஹெலோ ரோய்!" என்றான் மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும்.


"உடனே இந்தியாவுக்கு போகணும். ப்ரைவேட் ஃப்ளைட் வேணாம், டிக்கெட் போட்டுரு!" என்று கட்டளையாகச் சொல்லிவிட்டு விக்டர் அழைப்பைத் துண்டிக்க, இவளுக்கோ ஒன்றுமே புரியவில்லை.


"வாட்! ஏன்.. ஏன் இந்தியாவுக்கு? பிஸ்னஸ் மேட்டரா?" என்று அவள் திக்கித்திணறிக் கேட்க, "ஒன்ன தொலைச்சிட்டேன், அது இந்தியாவுலதான் இருக்கு. தொலைச்ச பொருள தேடி போறேன்" என்று பொடி வைத்துப் பேசியவன், "ஓகே லாரா, இந்த மேரேஜ்ஜ கொஞ்சம் போஸ்ட்பொன்ட் பண்ணலாம். சீ யூ சூன்!" என்றுவிட்டு வேக எட்டுக்களை வைத்து அங்கிருந்து வெளியேற, லாரா உட்பட சுற்றியிருந்தவர்கள் மொத்தப் பேருக்கும் அதிர்ச்சி. 


இங்கு இந்தியாவுக்கு வந்திறங்கிய தஷுரியை அங்குள்ள விக்டரின் ஆட்களே பாதுகாப்பாக அவளுடைய ஊருக்கு அழைத்துச் செல்ல, இப்போது தன் தாயை நினைத்து விழிகள் கலங்கினாள் அவள். எத்தனை நாட்கள் இல்லை இல்லை மாதங்களுக்குப் பின் சந்திக்கப் போகிறாள்! 


பல நிமிடங்கள் கடந்த பின் அவளுடைய வீட்டு வாசலில் கார் நின்றது. கதவைத் திறந்து தஷுரி இறங்க, அக்கம் பக்கத்திலிருந்தவர்களே அவளை ஆச்சரியமாகப் பார்க்க, இதில் பல கிசுகிசுக்கள் வேறு.


"வெளியூருக்கு போறேன்னு இத்தனை நாளா எவன் கூடவோ இருந்துட்டு வந்திருக்கா போல, உன் பொண்ணு பணம் அனுப்பினாளான்னு கேட்டதுக்கு அந்த ராதா என்னன்ன கதை விட்டா! இப்போ பாரு, இந்த காரு கூட அவனோடதாதான் இருக்கும்"


"அம்மா மாதிரிதான் பொண்ணும் இருக்கா. வெளியூருக்கு போய் நல்லா கூத்தடிச்சிட்டு வந்திருக்கா. புள்ள கிள்ள உண்டாயிருக்காளோ தெரியல, அவ வயித்த எதுக்கும் நல்லா ஊத்து பாருங்கடீ"


இந்த வசனங்கள் எல்லாம் அவள் காரிலிருந்து இறங்கிய சில கணங்களுக்குள் அவளுடைய செவிகளுக்குள் விழுந்தவை. ஆனால், தஷுரி அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை.


"ம்மா..." காற்றுக்கே வலிக்காதது போல் அவளுடைய குரல் வர, உள்ளே சமையலறையிலிருந்த ராதாவுக்கு செவிக்கு எட்டவில்லை என்றாலும், மனம் நெருடத் தொடங்கியது.


என்ன நினைத்தாரோ! கையை சேலை முந்தானையால் துடைத்தவாறு வெளியே எட்டிப் பார்த்தார் அவர். ஒருகணம் அவருடைய விழிகளை அவராலேயே நம்ப முடியவில்லை. 


பார்த்தவுடன் விழிகளிலிருந்து கடகடவென விழிநீர் மட்டும் வழிய, அப்படியே உறைந்துப்போய் அவர் நின்றிருக்க, கையிலிருந்த பையை வாசலில் போட்டுவிட்டு அம்மாவை நோக்கி ஓடி வந்தவள், "ம்மா..." என்ற கதறலோடு தன் தாயை அணைத்தாள். 


அம்மாவின் வாசனையையும் இந்த ஸ்பரிசத்தையும் உணர்ந்து எத்தனை நாட்களாயிற்று, எந்தளவுக்கு ஏங்கியிருப்பாள்!


பிரிவின் வலி அவளுடைய இறுகிய அணைப்பு உணர்த்த, "கடவுளே, என் பொண்ணு என்கிட்ட திரும்பி வந்துட்டாப்பா! என் வேண்டுதல் உன் காதுக்கு எட்டிருச்சாப்பா... தஷு... தஷுரி... அம்மாவ தேடினியா செல்லமே! இனி உன்னை எங்கேயும் அனுப்ப மாட்டேன்டா, என் கைக்குள்ளேயே பொத்தி வச்சிக்க போறேன். நீயும்... நீயும் அம்மாவ விட்டு போயிறாத கண்ணு, என் செல்லமே! என் கண்ணே..." என்று தன் மகளை மார்போடு அணைத்து அந்த தாய் கதற, ஏனோ சிலருக்கு இவர்களின் அழுகையைப் பார்த்தே விழிகள் கலங்கிவிட்டன.


சரியாக, விடயம் கேள்விப்பட்டு ஓடி வந்த துர்காவுக்கு இது கனவா நிஜமா என்றிருந்தது. இதழ்கள் புன்னகைக்க கண்ணீர் ஓட, "தஷு..." என்று ஓடி வந்ததில் மூச்சு வாங்க அவள் அழைத்ததும்தான், உடனே திரும்பியவள் அவளின் மெலே தாவி குதித்து தோழியை தரையிலேயே பிரட்டியிருந்தாள்.


"துகி, என்னை தேடினியாடீ?" என்று தோழியை அணைத்தவாறே அவள் கேட்க, "இல்லை, நீ தொலைஞ்சு போயிட்டேன்னு ரொம்ப சந்தோசமா இருந்தேன்லே" என்றாள் துர்கா கேலியாக.


பதிலுக்கு அவளை பொய்யாக முறைத்தவள், "அப்போ உனக்கு வெளிநாட்டு சாக்லேட் கிடையாது" என்று முறுக்கிக்கொள்ள, இப்போது அவளை தரையில் பிரட்டி அவள்மேல் அமர்ந்துக்கொண்டாள் துர்கா. 


இவர்ளின் கூத்தை கண்ணீரைத் துடைத்தவாறு அத்தனை சந்தோஷத்தோடு பார்த்துக்கொண்டிருந்த ராதாவுக்கு இதற்குமேல் உலகில் எதுவுமே தேவையில்லை என்று மட்டும் தோன்றியது. 


"அடியே துர்கா, சாமான் லிஸ்ட்டு கொடுக்குறேன். முருகண்ணேகிட்ட போய் எழுதியிருக்குற பொருள எல்லாம் எடுத்துட்டு வா, கணக்க பழைய பாக்கியோட போட சொல்லு. இன்னைக்கு சமையல் என் பொண்ணுக்கு பிடிச்சதுதான். பாரு, எம்புட்டு மெலிஞ்சு போயிருக்கான்னு. எடுபட்ட பயலுங்க, என்ன நிலைமைக்கு கொண்டு வந்துட்டானுங்க என் பொண்ண" என்று ராதா கோபத்தில் திட்டிக்கொண்டே போக, தஷுரிக்கோ இப்போது விக்டரின் முகம்தான் சட்டென வந்துச் சென்றது.


"ஏய் தஷு, அங்க என்னதான்டீ ஆச்சு? இந்த சொட்ட சுப்ரமணிய சும்மா விட கூடாது, அவன்தான்டீ எல்லாத்துக்கும் காரணம். காசு இருந்தா என்ன வேணா பண்றானுங்க. சரி அதை விடு, நீ சொல்லு, என்னாச்சு அங்க?" என்று துர்கா ஆர்வமாகக் கேட்க, தஷுரியின் முகமோ இறுகிப் போனது.


"தயவு செஞ்சு அதை பத்தி எதுவும் பேசாதீங்க!" என்று சட்டென சொன்னவள் விழிகளை மூடி தன் தாயின் மடியிலேயே சாய்ந்துக்கொள்ள, விழிகளால் வேண்டாமென துர்காவிடம் சொல்லிவிட்டு மகளின் தலையை வருட ஆரம்பித்தார் ராதா. ஆனால், விழிகளை மூடியிருந்தாலும் அவளுடைய நினைவுகள் மொத்தமும் அவளவனைதான் சுற்றி வந்தன.


அடுத்தநாள், அந்த ஊரின் மரத்தடி கோயிலில் அமர்ந்திருந்த தஷுரியின் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை. ஏதோ பறிகொடுத்தது போல் அமர்ந்திருந்த தோழியை சிறிதுநேரம் கவனித்துக்கொண்டிருந்த துர்கா, "தஷு..." என்று மெல்ல தட்ட, அவளோ "ஆங்...!" என்று தூக்கத்திலிருந்து விழித்தது போல் மலங்க மலங்க விழித்தாள்.


அதில் விழிகளைக் கூர்மையாக்கியவள், "ஏதோ ஒன்னு இல்லை புள்ள உன்கிட்ட, நீ இங்கயிருந்து போறதுக்கு முன்னாடி இருந்த மாதிரி இப்போ சுத்தமா இல்லை, வீட்டுக்கு வந்துட்டோம்னு சந்தோஷம் உன் முகத்துல இல்லை. என்னாச்சு தஷு, ஏதாச்சும் பிரச்சனையா? என்கிட்ட சொல்ல தயக்கமா இருக்கா, அப்படின்னா வேணாம்" என்று தன் தோழியின் வாடிய முகத்தை எண்ணி மனவருத்தத்தோடு சொல்ல, "ச்சே! அப்படியெல்லாம் இல்லை துகி. அது.. அது வந்து... நான்..." என்று தடுமாறத் தொடங்கினாள் மற்றவள்.


ஏனோ தோழியின் தடுமாற்றம் துர்காவுக்கு சரியாகத் தோன்றவில்லை. அவளுடைய இதயம் வேகமாக படபடத்ததோடு சந்தேகமும் அதிகரிக்க, தஷுரியோ எச்சிலை விழுங்கி பெருமூச்சைவிட்டு நடந்ததை சொல்லி முடித்தாள்.


கேட்டதும் துர்காவுக்கு வாயைப் பிளக்காமல் இருக்க முடியவில்லை. "என்னடீ சொல்லுற?" என்றவளின் குரல் அதிர்ந்துப்போய் வெளிவர, தலையை ஆட்டியவாறு குனிந்தவளுக்கு தன் தோழியின் விழிகளைப் பார்க்கவே தயக்கமாக இருந்தது.


சில கணங்கள் மௌனத்தில் கழிய, மெல்ல சுதாகரித்து தஷுரியின் நாடியை நிமிர்த்தி தன் விழிகளைப் பார்க்கச் செய்த துர்கா, "இது உனக்கு சரிவரும்னு தோனுதா தஷு? எட்டாக் கனிக்கு ஆசைப்படுற மாதிரி இருக்குல்ல எனக்கு" என்று கேட்டாள் கலங்கிய குரலில்.


"அந்த எட்டாக்கனின்னு நீயே சொல்லிட்டியே, இதுக்கப்பறம் என்ன? என் மனசுக்குள்ள அவருதான் இருக்காரு, மறக்க முடியல துகி, என்னதான் பண்ண? ஆனா, அதுக்காக கட்டிக்காம இருக்க மாட்டேன், அம்மா கொஞ்சநாள்ல எப்படியும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிடும், அது யாரை சொல்லுதோ அவங்களை கட்டிக்கிறேன். இப்போதைக்கு என் மனசுல அவ்வளவுதான் இருக்கு" என்றுவிட்டு அவள் நகரப் போக, "ஒருவேளை, நீ காதலிக்கிறவங்க திரும்பி வந்தா என்னலே பண்ணுவ?" என்று ஒருவித ஆர்வத்தோடுக் கேட்டாள் மற்றவள்.


இப்போது சட்டென அவளுடைய மனக்கண் முன் விக்டரும் லாராவும் முத்தமிட்ட காட்சியே ஞாபகத்திற்கு வர, "எல்லாமே முடிஞ்சு போச்சு துகி, இதுக்கப்பறம் வாய்ப்பேயில்ல" என்று தஷுரி உறுதியாகச் சொல்ல, கடவுளோ அவனுடைய விதி எனும் திருவிளையாடலை எப்போதோ ஆரம்பித்திருந்தான். 


அடுத்த ஒருவாரம் கழிந்த நிலையில், பாதுகாவலர்களோடு காரிலிருந்து இறங்கி விமானநிலையத்திற்குள் நுழைந்த விக்டர் லோரன்ட், அங்கு நின்றிருந்த இருவரையும் புருவத்தை நெறித்துப் பார்த்தவாறு கூலர்ஸை கழற்றினான். 


அந்த இருவரின் முன்னே ஒற்றை புருவத்தைத் துக்கியவாறு சென்று நின்று, "நீங்க இரண்டு பேரும் லக்கேஜ்ஜோட இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?" என்று அவன் அழுத்தமாகக் கேட்க, எங்கோ பார்ப்பது போல் பாவனை செய்துக்கொண்டிருந்த அஃப்ரிமும் ரோயும் அப்பட்டமாக அசடுவழிந்தனர்.


"நானும் ஒரு தமிழ் பொண்ண தேடி கல்யாணம் பண்ண போறேன், அதான் இந்தியாவுக்கு வரலாமேன்னு..." என்று ரோய் முப்பத்திரெண்டு பற்களையும் காட்டி இழித்து வைக்க, "நானும் தொலைச்ச பொருள தேட வேணாமா விக்டர் கண்ணா?" என்று சிரித்தவாறுக் கேட்டார் அஃப்ரிம்.


அவர் கூறுவதன் அர்த்தம் புரிந்து இருவரையும் மாறி மாறிப் பார்த்தவன், "ஓ கோட்! ஏதோ பண்ணுங்க" என்று விழிகளை சுழற்றி சலித்தவாறு முன்னே செல்ல, தோள்களை அசால்ட்டாகக் குலுக்கிக்கொண்டு அவன் பின்னே எதுவும் நடவாதது போல் சென்றனர் இருவரும்.


விமானத்தில் தனக்கான இருக்கையில் அமர்ந்திருந்தவனோ, தன்னுடன்னிருந்த இருவரின் கவனமும் தன்மேல் இல்லை என்பதை உறுதி செய்தவனாக மெல்ல தன் சட்டைக்குள் மறைத்திருந்த அந்த செயினை வெளியே எடுத்தான். அது அன்று அவளுடனான கடைசி சந்திப்பில் அவனுடைய அறையில் அவள் விட்டுச் சென்றது. 


அதிலிருந்த டோலரை மெல்ல வருடியவனுக்கு ஏனோ மனம் ஒன்று சொல்ல மூளை ஒன்று சொல்ல, இரண்டுக்குமிடையில் சிக்கித் தவித்தான் அவன். ஒருகட்டத்திற்குமேல் தாங்க முடியாது செயினை தனக்குள்ளேயே மறைத்து வைத்தவன், ஒரு பெருமூச்சுவிட்டு வெளியே வெறிக்கத் தொடங்கினான்.


அடுத்த பல மணித்தியாலங்கள் கழித்து, சென்னையில் விமானம் தரையிறங்க, மனதில் ஒருசில குழப்பங்களோடு இந்தியாவில் காலடியை எடுத்து வைத்தான் விக்டர். 


அங்கு அவனை அழைத்துச் செல்லவென ஏற்பாடு செய்திருந்த அவனுடைய ஆட்கள் அவனுக்காகக் காத்திருக்க, விமானநிலைய வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீண்ட பென்ஸ் காரில் கூலர்ஸை அணிந்தவாறு ஏறி அமர்ந்தான் அவன். ஏனோ அவனுடைய விழிகள் தெரியும் தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் பக்கத்திலிருப்பவர்கள் கண்டுவிடக் கூடாதென நினைத்தான் போலும்!


தன்னவளைத் தேடி அவன் செல்ல, அவளுடைய இடத்தை நெருங்க நெருங்க அவனுக்குள் பல இரசாயன மாற்றங்கள். இது என்ன வகையான உணர்வென்று அவனுக்கே தெரியவில்லை. 


அவன் தேடிச் செல்வது ஒரு பொருள் ஆனால், அவன் மட்டுமே அறிவான் தான் எதைத் தேடிச் செல்கிறோம் என்று.


சில நிமிடங்கள் கடக்க, சரியாக தஷுரியின் வீட்டின் முன் கார் நிற்கவும் இறங்க எத்தனித்தவன், கலங்கிய முகத்தோடு அப்படியே அமர்ந்திருந்த அஃப்ரிமைப் பார்த்து, "என்னாச்சு அஃப்ரிம்?" என்று கேட்டான் அவரின் கரத்தின் மேல் தன் கரத்தை வைத்து.


"என..எனக்கு ரொம்ப படபடன்னு இருக்கு விக்டர், அவ என்மேல ரொம்ப கோபத்துல இருப்பால்ல! ஒருவேள, என்னை ஏத்துக்கலன்னா நா..நான் என்ன பண்ணுவேன்?" என்று அவர் பதறியபடிக் கேட்க, அவர் கரத்தில் அழுத்தத்தைக் கொடுத்து "லுக் அஃப்ரிம், அவங்க கண்டிப்பா உங்கள புரிஞ்சுப்பாங்க. எதுவா இருந்தாலும் ஒரு ஸ்டெப் எடுக்காம முடிவு பண்ணிரக் கூடாது. கம் வித் மீ!" என்றான் அவன் ஆறுதலாக.


ஆனால், அஃப்ரிமின் மனநிலை அப்போதும் ஒரு நிலையிலில்லை. "நீ போ விக்டர், நா..நான் வரேன்" என்று அவனை போகச் சொல்லி இவர் சொல்ல, ரோய் எப்போதோ காரிலிருந்து இறங்கி சுற்றிமுற்றி பார்த்துக்கொண்டிருந்தான்.


ராதாவின் வீட்டு வாசலில் இந்த கார் நிறுத்தப்பட்டதைக் கவனித்த பக்கத்து வீட்டிலுள்ள பூங்குடி, தஷுரியைந் தேடி ஓட, அவளோ வயலில் துர்காவுடன் சேர்ந்து களைப் பிடிங்கிக்கொண்டிருந்தாள்.


அங்கு ஓடி வந்த பூங்குடி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியவாறு, "யக்கோவ், உன் வீட்டு வாசல்ல அம்புட்டு பெரிய கார் நிக்குது. அதுலயிருந்து வெள்ளைக்காரங்க இறங்கி ஏதோ குசுகுசுன்னு பேசிக்கிறாய்ங்க" என்று அங்கலாய்த்துச் சொல்ல, கையிலிருந்ததை அப்படியே கீழே போட்டுவிட்டு, "எதே!" என்றுக்கொண்டே அதிர்ந்து நிமிர்ந்தவள், கால் பிடறியில் பட வீட்டை நோக்கி ஓட, "ஏய், இருடீ..." என்று கத்தியவாறு அவள் பின்னே தலைத் தெறிக்க ஓடினாள் துர்கா.


அதேநேரம், காரிலிருந்து கூலர்ஸை கழற்றியவாறு ஸ்டைலாக இறங்கிய விக்டர் மெல்ல வீட்டினுள் நுழைய, ஹாலிலிருந்து காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருந்த ராதா அரவம் உணர்ந்து நிமிர்ந்துப் பார்த்தார். 


பல வருடங்கள் கழித்து ராதாவை சந்தித்ததில் விக்டரின் மனம் உள்ளுக்குள் பிசைய, வார்த்தைகள் கூட வரவில்லை. ராதாவோ எதிரிலிருந்தவனைக் கண்டதும் வேகமாக எழுந்து நின்று, நெற்றியிலிருந்த வியர்வையைத் துடைத்தவாறு "யாருங்க நீங்க?" என்று கேட்க, "அது.. நா.. நான்..." என்று தடுமாறத் தொடங்கினான் அவன்.


ஒருகணம் அதிர்ந்து விழித்தார் ராதா. 'பார்க்க வெள்ளைகாரன் மாதிரி இருக்கான், ஆனா தமிழ்ல திணறுறான்' என உள்ளுக்குள் நினைத்தவாறு அவர் அவனையே தெறித்துவிடுமளவிற்கு விழிகளை விரித்து பார்த்துக்கொண்டிருக்க, எப்படியோ வார்த்தைகளைக் கோர்த்து "ராதாம்மா..." என்று அழைத்துவிட்டான் விக்டர்.


இப்போது அவருடைய விழிகள் மேலும் விரிந்தன. அவரால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை. விழிகள் கலங்கி கண்ணீர் ஓட, "விக்டர்..." என்று அவர் அழைத்ததும்தான், கலங்கிய விழிகளை மறைக்க அரும்பாடுபட்டான் அவன்.


அவனுடைய சிறுவயதில் அவன் பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்ல, ராதாதான் எல்லாமுமாக இருந்து அவனைக் கவனித்ததே. அப்போதே தாய் யாரென்றுக் கேட்டால் ராதைக் கைக் காட்டுபவனுக்கு எப்படி இவரின் முகம் மறந்துப் போகும்?


அஃப்ரிமுக்கு அடுத்தபடியாக ராதாவை சந்திக்க ஏங்கித் தவித்தது என்னவோ விக்டர்தான். அவன் என்று அறிந்த மறுநொடி ஓடிச் சென்று அவனின் மார்பில் புதைந்துக்கொண்டவர், "கண்ணா, எப்படிப்பா இருக்க? உன் ராதாம்மாவ இப்போதான் பார்க்க தோனுச்சா?" என்று கேட்டு கதறியழ, அவனுக்கு எப்படி ஆறுதல் கூறுவதென்றுக் கூடத் தெரியவில்லை.


சரியாக, வீட்டிற்குள் நுழைந்த தஷுரி நடப்பதைத் திகைத்துப்போய் பார்க்க, மனதைத் திடப்படுத்திக்கொண்டு உள்ளே நுழைந்தார் அஃப்ரிம். அவரைக் கண்டதுமே விக்டர், "அஃப்ரிம்..." என்று ராதாவைப் பார்த்தபடி அழைக்க, விக்டரை விருட்டென்று நிமிர்த்துப் பார்த்தவர், மெல்ல அவன் சொன்ன திசைக்குத் திரும்பினார்.


எத்தனை வருடங்கள்! எத்தனை இரவுகள் தன்னவனை நினைத்து அழுதிருப்பார்! எத்தனை அவமானங்கள்!


ஒவ்வொன்றாக அவரின் நினைவலைகளுக்குள் ஓட, வேகமாக அறைக்குள் சென்று ராதா கதவை சாத்திக்கொண்டார் என்றால், என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று தெரியாமல் அதிந்துப்போய் விக்டரையே பார்த்தவாறு நின்றிருந்தாள் தஷுரி.


******************

தஷுரி 18 >>>

https://agnitamilnovels.blogspot.com/2024/06/18.html


மற்ற கதைகளைப் படிக்க 🏃🏃

India link 👇

https://www.amazon.in/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%95%E0%AE%BF/e/B08ZYCHG6C/ref=dp_byline_cont_ebooks_1

USA link 👇

https://www.amazon.com/%25E0%25AE%25B7%25E0%25AF%2587%25E0%25AE%25B9%25E0%25AE%25BE-%25E0%25AE%25B8%25E0%25AE%2595%25E0%25AE%25BF/e/B08ZYCHG6C%3Fref=dbs_a_mng_rwt_scns_share?ref_=d6k_applink_bb_dls




Comments

  1. ஆஹா... இவன் இப்ப எதுக்காக வந்திருக்கிறான்னு தெரியலையே..?
    ஒருவேளை, அந்த டைமன்ட்டை தஷுரி தூக்கிட்டு வந்திருக்கிறாளா ? இல்லை, அவளையே தூக்கிட்டுப் போக இந்த விக்டர் வந்திருக்கிறானோ தெரியலையே..?

    CRVS (or) CRVS 2797

    ReplyDelete

Post a Comment

Popular posts

தஷுரி 10