தஷுரி 16




தன் கோட் பாக்கெட்டில் வைத்திருந்த தஷுரியின் பாஸ்போர்ட்டையும் நாளை மறுநாள் அவள் இந்தியா செல்வதற்கான டிக்கெட்டையும் ரோய் கொடுக்க, அதிர்ச்சியில் சிலையாக சமைந்துவிட்டாள் தஷுரி.


"அப்போ எல்லாம் அவ்வளவுதானா? அவருக்கு என் மேல கொஞ்சோண்டு கூட காதல் இல்லையா? எல்லாமே முடிஞ்சு போச்சுல்ல..." என்று புலம்பிய வண்ணம் சுவற்றோடு சாய்ந்தமர்ந்தவாறு தஷுரி இருக்க, அவளைப் பார்த்துக்கொண்டிருந்த ஹெலனுக்கு பிபி எகிறிக்கொண்டிருந்தது.


"அவனவன் எங்க இங்கயிருந்து தப்பிக்கலாம்னு இருக்கான், நீ என்னடான்னா போறதை நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்க. ஆர் யூ மேட்?" என்று கத்தியவள், "லுக் தஷு, நீ விக்டர காதலிக்கிற கதை எனக்கு ஏதோ ஃபேன்டஸி ஸ்டோரி கேக்குற மாதிரிதான் இருக்கு. அதெல்லாம் நடக்க வாய்ப்பேயில்லை. என்ட், அவன் எல்லாம் எப்போ சாவான்னு சொல்லவே முடியாது. இந்த பைத்தியக்கார காதல்ல மூழ்கி உன் வாழ்க்கைய நீயே அழிச்சிக்க போறியா?" என்று கேட்க, தஷுரியோ தரையை வெறித்திருந்தாளே தவிர, பதில் எதுவும் கூறவில்லை.


"ஏன் தஷு, இத்தனை நாளா அம்மா அம்மான்னு இருந்த. அகைன் உன் குடும்பத்தை பார்க்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. அது உனக்கு சந்தோஷமா இல்லையா?" என்று ஹெலன் கேட்டதும், விருட்டென்று நிமிர்ந்து தோழியைப் பார்த்தவள், "யக்கோவ், அது எப்படி எனக்கு சந்தோஷம் இல்லாம இருக்கும்! ஆனா... என்னால என் காதல விட்டுட்டும் போக முடியல்லையே, காதலே ஒரு அவஸ்தைதான்" என்றாள் வலி நிறைந்த புன்னகையோடு.


ஹெலனுக்கு தோழியின் நிலை புரியாமலில்லை. ஆனால், அவள் ஆசைப்படும் விடயத்திற்கு ஒத்து ஊதவும் முடியவில்லை. சிங்கத்தின் குகைக்குள் தானாக தலையை விட நினைப்பவளை என்ன செய்தால் தகும் என்றுதான் இருந்தது அவளுக்கு.


இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே சரியாக அறைக் கதவு தட்டப்பட, ஓடிச் சென்று கதவைத் திறந்த ஹெலன் முன்னே கையில் பார்சலோடு நின்றிருந்த காவலாளியை புரியாதுப் பார்த்தாள். அவனோ அவளின் கேள்வி பொதிந்த பார்வையை உணர்ந்து கையிலிருந்த பார்சலை அவளை நோக்கி நீட்டியவன், "இன்னைக்கு ஈவினிங் நடக்க போற சாரோட என்கேஜ்மென்ட் பார்ட்டீக்கு இந்த யூனிஃபார்ம்தான் போட்டுக்கணும், டைமுக்கு வேலைய ஆரம்பிச்சிடுங்க. எதுவும் சொதப்பக் கூடாது" என்று சொல்ல, தஷுரிக்கோ சட்டென விழிகள் கலங்கிவிட்டன.


"ஆனா... இதுல ஒரு ட்ரெஸ்தானே இருக்கு, தஷுரிக்கு?" என்று இவள் தன் சந்தேகத்தைக் கேட்டுவிட, "ஒரு முக்கியமான இன்ஃபார்மேஷன்! தஷுரி இந்த பார்ட்டீக்கு வர கூடாது. இங்கயிருந்து கிளம்புற வரைக்கும் ரூமுக்குள்ளதான் இருக்கணும். நாளைக்கு காலையில இந்த ஃப்ளோருக்கு பொறுப்பா இருக்குற கார்ட் உங்களைப பாதுகாப்பா கொண்டு போய் ஏயார்போர்ட்ல விடுவாரு. இது விக்டர் சாரோட ஆர்டர்" என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான் அவன்.


ஹெலனோ வாயைப் பொத்திச் சிரிக்க, தஷுரிக்கு அத்தனை ஆத்திரம். "நான் வரக் கூடாதுன்னு அவன் எப்படி சொல்லுவான், ச்சே! இதை நான் சும்மா விடப் போறதில்ல" என்று அவள் கோபத்தில் தரையை காலால் உதைக்க, "இப்போவாச்சும் புரிஞ்சு நடந்துக்க!" என்றாள் மற்றவள் குத்தலாக.


ஆனால், இப்போது தஷுரியின் இதழ்கள் மர்மப்புன்னகைப் புரிந்தன. அதைப் பார்த்ததும் ஹெலனுக்கோ தோழி ஏதோ திட்டமிட்டுள்ளாள் என்பது புரிய, அதிர்ந்துப்போய் அவளைப் பார்க்க, தஷுரி தன் திட்டத்தைச் சொன்னதும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அவளுக்கு.


"நோ தஷு, இது சரியா வராது. இரண்டு பேரும் மாட்டிக்குவோம்" என்று இவள் புரிய வைக்க, அவள் கேட்டால்தானே!


அன்று மாலை, மொத்த மாளிகையும் நடக்கப் போகும் நிச்சயதார்த்த கேளிக்கை விருந்துக்காக அலங்காரத்தில் மின்ன, விக்டரின் தொழில்துறை நண்பர்களிலிருந்து ஏகப்பட்ட முக்கிய புள்ளிகள் மற்றும் பணக்காரர்கள் வருகைத் தரத் தொடங்கினர்.


அங்கு நின்றிருந்த அஃப்ரிமும் தஷுரி செல்லப் போவதைத் தெரிந்து மொத்தமாக உடைந்துப்போய் அப்படியே நிற்க, ரோய்க்கு விக்டரின் மனதை அறிய முடியாது நடப்பதைப் பற்றி யோசித்து யோசித்து தலை வலியே வந்துவிட்டது.


அப்போதுதான் கையில் வைன் மற்றும் குளிர்பான க்ளாஸ்களை அடுக்கிய தட்டை எடுத்துக்கொண்டு வந்த ஹெலனிற்கு அந்த ஏசியிலும் பயத்தில் முகமெல்லாம் வியர்க்க, அவளுடைய பார்வையோ அங்கு ஓரமாக விழிகள் மட்டும் தெரியுமளவிற்கு முகத்தை மூடிக்கொண்டு நின்றிருந்தவளின் மீது பதிந்தது.


தஷுரிக்கும் உள்ளுக்குள் பயபந்து உருளத்தான் செய்தது. ஆனால், தன்னவன் சொல்கிறானென்று அறைக்குள் அடைந்துக்கிடக்க முடியுமா என்ன?


காவலர்களின் கண்ணுக்குத் தெரியாமல் ஒவ்வொரு தூணிற்குப் பின்னால் ஒளிந்து ஒளிந்து அவள் செல்ல, சரியாக அங்கிருந்த ஒரு காவலாளியின் விழிகளுக்குச் சரியாகச் சிக்கினாள் தஷுரி.


அவனோ முகத்தை மூடியிருந்த அவளைக் கண்டதுமே, "ஏய்... நில்லு... யாரு நீ?" என்றுக்கொண்டே அவளை நோக்கி வர, தஷுரியின் நல்ல நேரமோ என்னவோ! சட்டென மொத்த விளக்குகளும் அணைக்கப்பட்டு மாடிப்படிகளுக்கு மட்டும் வெளிச்சம் படக்கூடியவாறு ஒரே ஒரு விளக்கு மட்டும் எரிந்தது.


இதுதான் சந்தர்ப்பமென அவனின் விழிகளிலிருந்து மறைந்து அவள் ஒளிந்துவிட, 'ஷீட்!' என்று எரிச்சல்பட்டுக்கொண்ட காவலாளி உடனே மற்ற காவலாளிகளுக்கும் இதைப் பற்றிச் சொல்லி தேடச் சொல்ல, இங்கு ஹாலிலிருந்த மொத்தப் பேரின் விழிகளும் மாடிப்படியைதான் பார்த்துக்கொண்டிருந்தன.


அங்கு வெள்ளை நிற கற்கள் பதிக்கப்பட்ட சிவப்பு நிற  நீண்ட பார்ட்டீ கவுனில் ஒப்பனையுடன் தேவதைப் போல் லாரா வந்து நிற்க, பலுப்பு நிற கோட் சூட்டில் அவனுக்கே உரித்த அக்மார்க் புன்னகையுடன் வந்து நின்றான் விக்டர். இருவரும் கைக் கோர்த்த வண்ணம் மாடியிலிருந்து இறங்கி கீழே வர, காவலாளிக்குத் தெரியாது மேசைக்குக் கீழ் மறைந்திருந்த தஷுரியின் ஒற்றை விழியிலிருந்து வலி நிறைந்த விழிநீர் கன்னத்தினூடே வழிந்து தரையைத் தொட்டது.


அத்தனை வலி அவளுக்குள். தான் காதலிப்பவன் இன்னொருவளுடன் திருமணமென கைக்கோர்த்து நின்றாள் எந்தப் பெண்தான் தாங்குவாள்!


அழுகையை அடக்கிக்கொண்டு அவள் மறைந்திருக்க, கீழே இறங்கி வந்தவர்கள் அத்தனை பேருக்கு முன்னிலையில் மோதிரம் மாற்றிக்கொண்டனர். ரியோவின் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை. ஏனோ திருமணத்தைக் கூட வியாபாரமாகச் செய்யும் தன் நண்பனை நினைத்து அவனுக்குள் அத்தனை வருத்தம்.


இவர்கள் மோதிரத்தை மாற்றியதுமே சுற்றியிருந்தவர்கள் கைத்தட்டி கரகோஷம் போட்டு வாழ்த்த, சரியாக நடனம் ஆடுவதற்கென பாடல் ஒலிக்கப்பட்டு மேடை அமைக்கப்பட்டது. 


வந்தவர்கள் தங்களுக்கென துணைகளை அமைத்துக்கொண்டு பாடலுக்கேற்ப ஆட, லாராவும் விக்டரை இழுத்துக்கொண்டு மேடைக்கு நடுவே சென்று நின்று அவனின் இடது கரத்தோடு தன் வலக் கரத்தைக் கோர்த்துக்கொண்டாள்.


விக்டரும் அவளிடையை தன் மற்ற கரத்தால் வளைத்து பாடலுக்கேற்ப அசையத் தொடங்க, அவனுடலோடு ஒட்டி நெருங்கியவாறு ஆடினாள் லாரா. ஆனால், இங்கு தஷுரிக்குதான் உரிமை உணர்வு அதிகரித்து கோபம் ஏகத்துக்கும் எகிறத் தொடங்கியது. 


ஒருகட்டத்திற்கு மேல் முடியாமல் மறைந்திருந்த இடத்திலிருந்த எழுந்து நின்றவள், கண்ணிமைக்காமல் விழிகளில் நீர் தேங்கி நிற்க அவர்களையே பார்த்திருக்க, வந்தவர்களைக் கவனித்துக்கொண்டிருந்த ஹெலனுக்கு தஷுரியைப் பார்த்ததும் பக்கென்று இருந்தது. 


'ஓ ஷீட்! இவ எதுக்கு இப்படி நின்னுக்கிட்டு இருக்கா, கார்ட்ஸ்கிட்ட நல்லா மாட்டிக்க போறா. இடியட்!' என்று உள்ளுக்குள் நினைத்து ஹெலன் அலற, அடுத்தநிமிடம் அவளைத் தேடிக்கொண்டிருந்த காவலாளியிடம் வசமாக சிக்கிக்கொண்டாள் தஷுரி. 


அதேநேரம் லாராவுடன் நடனமாடிக்கொண்டிருந்த விக்டரின் மனமோ ஒரு நிலையிலில்லை. உள்ளுக்குள் அவனையும் மீறி தஷுரியின் விம்பம் வந்துச் செல்ல, அவன் சற்று தடுமாறுவதை உணர்ந்து, "ஆர் யூ ஓகே விக்டர்?" என்று கேட்டாள் லாரா.


"யெ..யெஸ், ஐ அம் ஓகே" என்றவனின் பார்வை சட்டென மனம் சொன்ன திசைக்குத் திரும்ப, அங்கு முகத்தை மறைத்தவாறு தன்னையே பார்க்கும் விழிகளில் சிக்கிக்கொண்டான் விக்டர். அந்த பார்வை அவனுக்குள் ஏதோ செய்ய, லாராவிடமிருந்து மெல்ல விலகியவன் ஒவ்வொரு அடியாக வைத்து அவளை நோக்கிச் சென்றான்.


இருவருக்கும் நடுவே சிறு இடைவெளிதான். கூட்டத்திற்கு நடுவே இவள் நின்றிருக்க, சுற்றியிருந்த ஆட்களை நகர்த்தி இவன் அவளை நோக்கி வர, லாராவுக்கு ஒருகணம் எதுவுமே புரியவில்லை.


"தஷுரி..." தன்னவளின் பார்வையை உணர்ந்தவனாய் அவனுடைய இதழ்கள் அவளின் பெயரை முணுமுணுக்க, விக்டர் நெருங்க நெருங்க இவளின் இதயத்துடிப்பின் சத்தம் இவளுக்கே கேட்கத் தொடங்கியது.


சரியாக, தஷுரியைத் தேடிக்கொண்டிருந்த காவலாளியின் விழிகளுக்கு இவள் சிக்க, அவளுடைய கரத்தைப் பற்றியவன், "ஏய், வூ ஆர் யூ?" என்று அவள் முகத்தை மூடியிருந்ததில் யாரென்றுத் தெரியாது கத்தியவாறு அவளை இழுக்க, எந்த உணர்வுமில்லாத ஜடம் போல் தன்னவனையே பார்த்தவாறு நின்றிருந்தாள் பெண்ணவள்.


அந்த காவலாளியோ அவளை இழுத்துக்கொண்டுச் செல்ல, அதிர்ந்துப்போய் நின்று நடப்பதை விழிகளைச் சுருக்கிப் பார்த்த விக்டர், "ஹேய் ஸ்டாப்!" என்றுக்கொண்டே அவர்ளை நோக்கி வேகமாகச் சென்றான். 


அந்த காவலாளியோ விக்டர் கத்தியதுமே உடனே நடையை நிறுத்தி அதே இடத்தில் பணிவாக நிற்க, அவர்களின் முன்னே வந்தவன் தஷுரியின் முகத்திலிருந்த துணியை எடுத்து தூர வீசியெறிந்தான். ஹெலனுக்கோ இப்போது கைகால்கள் நடுங்கத் தொடங்க, தஷுரிக்கோ நிலத்திற்குள் புதைந்துவிடலாம் போலிருந்தது.


ஆனால், விக்டரின் முகத்தில் கோபத்திற்கான எந்த சாயலும் இல்லை. அவளை சில கணங்கள் அமைதியாகப் பார்த்தவன், "லெட் ஹெர் கோ!" என்றுவிட்டு நகர்ந்திருக்க, தஷுரிக்கு தன்னவனின் இந்த அமைதி புதிதுதான். 


அன்றிரவு, பட்டென்று விழிகளைத் திறந்தவளுக்கு தூக்கம் வருவதாகயில்லை. காலையில் இந்தியாவுக்கான விமானம் வேறு, ஆனால் தன்னவனை விட்டுச் செல்ல மனம் இடம் கொடுக்கவில்லை. தூக்கம் வராது எழுந்தமர்ந்தவள், பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்த தோழியை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு மெல்ல அறைக் கதவைத் திறந்து வெளியே சென்றாள். 


ஏனோ இறுதியாக தன்னவனுடன் பேச வேண்டுமென்று மனம் துடிக்க, வழக்கம் போல் பதுங்கி ஒளிந்து அவனுடைய தளத்திற்கு வந்தவள், அவனுடைய அறையை நோக்கிச் செல்ல, திடீரென அவனின் அறைக் கதவுகள் திறக்கப்பட்டு உள்ளே இருந்து வெளியே வந்தனர் விக்டரும் லாராவும். 


அதைப் பார்த்ததுமே அங்கிருந்த சுவரொன்றின் பின்னே ஒளிந்துக்கொண்டவள், நடப்பதை வேடிக்கைப் பார்க்க, அவர்கள் இருவரோ ஏதோ பேசியவாறு நடந்துச் சென்று வராண்டாவில் சட்டென நின்றுக்கொண்டனர். 


விக்டர் ஏதோ சொல்ல, லாரா ஏதோ சொல்ல என பேச்சு வார்த்தை நடக்க, சட்டென விக்டர் அவளை நெருங்க, அவனின் இதழில் அழுந்த முத்தத்தைப் பதித்தாள் லாரா. ஆழ்ந்த மூத்தம் அது. சுவற்றோடு ஒன்றி இருவரும் முத்தப் போராட்டத்தில் மாறி மாறி ஈடுபட, இதைப் பார்த்துக்கொண்டிருந்த தஷுரிக்கு இதயத்தை ஈட்டியால் குத்திக் கிழிப்பது போன்ற உணர்வு. அத்தனை வலி. 


அவன் ஒன்றும் ராமன் இல்லை. ஆனால், அவளின் கண்ணெதிரே அவன் வேறு பெண்ணுடன் இருப்பதை அவளால் கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை. வெடித்தழ வேண்டும் போல் தோன்ற, அவர்களின் நெருக்கத்தை காண முடியாது திரும்பி நின்றுக்கொண்டு வாயைப் பொத்தி அழ ஆரம்பித்தாள் தஷுரி.


ஏனோ இத்தனை நாட்கள் அவளுக்குள்ளிருந்த காதல் அனைத்தும் பொய்யாய் போன உணர்வு. சில நிமிடங்கள் அழுது தன்னைத் தானே தேற்றி அவள் திரும்ப, இப்போது அந்த இடத்தில் இருவருமே இல்லை. கண்ணீரால் நனைந்த முகத்தை புறங்கையால் அரக்கப் பறக்கத் துடைத்தவள், ஒரு முடிவெடுத்தவளாக அவனின் அறையை நோக்கி விறுவிறுவெனச் சென்றாள்.


கதவு லேசாகத் திறந்திருக்க, படாரென திறந்துக்கொண்டு இவள் உள்ளே நுழைய, அங்கு சோஃபாவில் அமர்ந்தவாறு க்ளாஸில் மதுவை ஊற்றி வாயிற்குள் மூச்சு விடாது சரித்தான் விக்டர். லாராவிடமிருந்து எடுத்த அந்த வைரக்கல்லை வெறித்துப் பார்த்திருத்தவனுக்கு ஏனோ இப்போது அதை சொந்தமாக்கியும் சந்தோஷம் துளியளவு இல்லை. 


திடீரென கதவு திறக்கப்படவும் அந்த சத்தத்தில் நிதானமாக நிமிர்ந்துப் பார்த்தான் அவன். எதிரே அவனவள்தான். 


புருவத்தை நெறித்து யோசித்தவாறு அவன் எழுந்து நிற்க, வேகமாக வந்த தஷுரி அழுது சிவந்த விழிகளோடு, "சின்ன பொண்ணுதானே, விளையாட்டுக்கு காதலிக்கிறான்னு நினைச்சிட்டீங்கல்ல! என் காதல் உங்களுக்கு புரியலல்ல? போதுங்க, இதோட எல்லாமே போதும்" என்றவள், அவனே எதிர்பார்க்காது அவனை அணைத்து அவனிதழை கவ்வியிருக்க, ஸ்தம்பித்துப்போய் நின்றுவிட்டான் அவன். 


சில கணங்கள்தான். அவனிதழிலிருந்து தன்னிதழைப் பிரித்தெடுத்து, "இதுவே நம்ம கடைசி சந்திப்பா இருக்கட்டும்" என்ற தஷுரி அவனின் அதிர்ந்த முகத்தையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுக்காது அங்கிருந்து விறுவிறுவென சென்றிருக்க, தன்னை சுதாகரிக்கவே விக்டருக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டன.


அங்கிருந்து தனதறைக்குள் நுழைந்தவளுக்கு தான் பார்த்த காட்சியில் அழுகையை அடக்க முடியவில்லை. தாங்க மாட்டாது அவள் வெடித்து அழ, விசும்பல் சத்தத்தில் கண் விழித்த ஹெலன் தோழி அழுவதைப் பார்த்ததும் பதறித்தான் போனாள். 


உடனே ஓடிச் சென்று தோழியை அணைத்துக்கொண்டவள், "என்னாச்சு தஷு, ப்ளீஸ் அழாத! என்னாச்சுன்னு சொல்லு" என்று பதறியபடிக் கேட்க, அவளும் நடந்ததை அழுதபடியே சொல்ல, ஹெலனுக்கு இதற்கு எப்படி ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை.


என்ன சொல்வதென்றுத் தெரியாது அவளை மார்போடு அணைத்து அவள் தோழியின் தலையை வருடிவிட, அப்படியே உறங்கியவள் அடுத்தநாள் அவளுக்காகக் காத்திருக்கும் கார் ஓட்டுனர் கதவை தட்டும் சத்தத்திலேயே விழிகளைத் திறந்தாள்.


உடனே பதறியபடி ஹெலன் அவளை குளியலறைக்கு அனுப்பி வைத்துவிட்டு செய்ய வேண்டிய ஏற்பாடுகளை செய்ய, நேரத்திற்கு தயாராகி ஹாலில் நின்றாள் தஷுரி. அங்கு அவளுக்கென்று இருந்த ஒரே சொந்தம் ஹெலன்தான். 


அவளைக் கட்டியணைத்து, "ரொம்ப நன்றிக்கா" என்று இவள் பிரியப் போகும் வலியில் அழுதபடி சொல்ல, இப்போது தஷுரியை விட விம்மி விம்மி அழ ஆரம்பித்துவிட்டாள் மற்றவள். இதுவரை தனிமையில் வளர்ந்தவளுக்கு 'அக்கா... அக்கா...' என்று பின்னாலே திரியும் தஷுரியின் மேல் அத்தனை பிரியம்.


எப்படியோ அடுத்த சில நிமிடங்களிலேயே வீட்டிலிருந்து தஷுரி வெளியேற, அமரவென கார் கதவைத் திறந்தவளின் விழிகள் தன்னவனை மீண்டும் ஒரு முறை பார்த்துவிட மாட்டோமா என ஏக்கத்தோடு வீட்டினுள்ளேயே பார்த்துக்கொண்டிருந்தன. ஆனால், அப்போதும் அவளுக்கு மிஞ்சியது ஏமாற்றமே!


கீழுதட்டைக் கடித்து அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டவள், அதற்குமேல் நின்று நேரத்தை வீணடிக்காது காரிற்குள் ஏறி அமர, அடுத்த அரைமணி நேரத்தில் விமானநிலையத்தின் முன்னே கார் நின்றது.


விமானத்தில் ஏறி அமர்ந்தவளுக்கு நிலைக்கொள்ள முடியவில்லை. காரணம், இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த ஊரிலேயே பெரிய சர்சில் விக்டர் லோராவின் திருமணம். 


விழியோரம் கசிந்த விழிநீரை துடைத்தெறித்து விழிகளை மூடி அவள் சாய்ந்துக்கொள்ள, அதேநேரம் விக்டரின் முகமோ பாறை போன்று இறுகியிருக்க, அறை முழுக்க மொத்தப் பொருட்களும் சிதறியிருந்தன.


அவனுடைய நெற்றி நரம்புகள் புடைத்திருக்க, "தஷுரி..." என்று கடுங்கோபத்தில் பற்களை நரநரவென கடித்தான் அவன்.


*******************

தஷுரி 17>>>

https://agnitamilnovels.blogspot.com/2024/06/17.html


தஷுரி கதையை கிண்டலில் படிக்க 👇

https://www.amazon.in/dp/B0CN39JKBC?binding=kindle_edition&ref=dbs_dp_awt_sb_pc_tkin


மற்ற கதைகளைப் படிக்க 🏃🏃

India link 👇

https://www.amazon.in/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%95%E0%AE%BF/e/B08ZYCHG6C/ref=dp_byline_cont_ebooks_1

USA link 👇

https://www.amazon.com/%25E0%25AE%25B7%25E0%25AF%2587%25E0%25AE%25B9%25E0%25AE%25BE-%25E0%25AE%25B8%25E0%25AE%2595%25E0%25AE%25BF/e/B08ZYCHG6C%3Fref=dbs_a_mng_rwt_scns_share?ref_=d6k_applink_bb_dls



Comments

Popular posts

தஷுரி 10