தஷுரி 14



"தஷுரியோட அப்பா இந்த அஃப்ரிம்தான்னு எனக்கு தெரிஞ்ச மாதிரி உங்க பொண்ணுக்கு தெரியுமா?" என்று பட்டென்று கேட்டுவிட்டான் விக்டர்.


மேலும் திகைத்தவராய் அவர் தடுமாறியபடி அவனைப் பார்க்க, விழிகளைக் கூர்மையாக்கி அவரை ஆழ்ந்து நோக்கினான் அவன். 


"உனக்கு எப்படி..." என்று அவர் அதிர்ந்த குரலில் கேட்க, "என் வீட்டுல என் கூட  இருக்குற எதை பத்தியும் அக்கு வேறு ஆணி வேறா தெரிஞ்சிப்பேன் என்னோட பாதுகாப்புக்காக. அதுவும் தஷுரிய பத்தி தெரிஞ்சிக்காம இருப்பேன்னு நீங்க நினைச்சீங்களா என்ன? என்ட், யூ நோ வாட், நானா சிவனேன்னு இருந்திருந்தாலும் உங்க கண்ணே காட்டி கொடுத்திருக்கும். அப்பட்டமா பாசம் வழிஞ்சு ஓடிச்சு அஃப்ரிம்" என்றான் அவன் கொடுப்புக்குள் சிரித்தபடி.


அவரோ நாக்கைக் கடித்துக்கொண்டவர், "தஷுரிக்கு தெரியாது, நீயும் சொல்லாத!" என்று கலங்கிய குரலில் சொல்ல, "பட் வை!" என்று திகைத்துப்போய் கேட்டவனுக்கு அவர் பெற்ற மகளிடம் உண்மையை மறைப்பதற்கான காரணம் சுத்தமாகத் தெரியவில்லை.


"இல்லை, வேணாம் விக்டர், அவளுக்கு தெரிய கூடாது" என்று அஃப்ரிமின் வார்த்தைகள் அழுத்தமாக வர, "அதைதான் ஏன்னு நானும் கேக்குறேன்  அஃப்ரிம், இது அவளுக்கு தெரிய வேண்டியது" என்று அவரை விடவும் வார்த்தைகளை அழுத்தி நிதானமாகச் சொன்னான் விக்டர்.


"ராதாவ தன்னந்தனியா அம்போன்னு விட்டுட்டேன். தஷுரி இங்க சர்வன்ட்டா வேலை பார்க்க வந்திருக்கான்னா அப்போ ராதா அவ ஊருல ரொம்ப கஷ்டப்படுறான்னு அர்த்தம். தப்பெல்லாம் என் மேலதான். தேவையில்லாம அவள காதலிச்சு அவளுக்கு பிரச்சினைன்னு வரும் போது கூட இல்லாம நான் ஏமாத்திட்டேன். இத்தனை வருஷத்துல நான் அவள தேடி போயிருக்கணும், அதையும் நான் பண்ணல. இத்தனை தப்ப பண்ணிட்டு எப்படி விக்டர் நான்தான் உன் அப்பான்னு அவகிட்ட போய் சொல்ல முடியும்?" என்று இத்தனைநாள் தன் மனதிலிருந்த பாரத்தைக் கொட்டிச் சென்றவரின் விழிகள் கலங்கிப் போயிருக்க, அவனோ 'ஊஃப்' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டான்.


"நீங்க தப்பு பண்ணிட்டீங்க, ஏமாத்திட்டீங்கன்னு அவங்க அம்மா நினைச்சிருந்தா நீங்க ஆசைப்பட்ட பேர வச்சிருப்பாங்களா என்ன?" என்று சட்டெனக் கேட்டவன், "தஷுரி" என்று அழுத்தமாகச் சொல்லிக் காட்ட, "இது கூட தெரிஞ்சு வச்சிருக்க" என்று கேட்டு வலி நிறைந்த புன்னகை சிந்தினார் அஃப்ரிம்.


"தஷுரி ஒருதடவை பேசும் போது என் காதுல விழுந்தது. தஷுரின்னா அல்பீனீயன் லங்குவேஜ்ல காதல்னு அர்த்தம். என்ட், எனக்கு தெரிஞ்ச அல்பீனியன சார்ந்த பர்சன் நீங்கதான்" என்று விக்டர் தோள்களைக் குலுக்க, "தஷுரி அவளோட பெயர சொல்லும் போதே புரிஞ்சிக்கிட்டேன், ராதா என்னை ரொம்ப காதலிக்கிறா. யூ நோ வாட் விக்டர், தஷுரி அப்படியே என் நிறம் ஆனா உன் வயசுல நான் ராதாவ பார்த்த மாதிரி இருக்கா என் பொண்ணு" என்றார் அவர் விழிகளில் காதலோடு.


"என்ட் ஆல்சோ, நீங்களும் இன்னும் காதலிக்கிறீங்க. போய் தஷுரிட்ட நீங்க யாருன்னு சொல்லுங்க, கண்டிப்பா ஏத்துப்பா, நீங்க உங்க ராதாகிட்டயே போகலாம்" என்று விக்டர் அஃப்ரிமை கூர்ந்துப் பார்த்தவாறுச் சொல்ல, அவரின் விழிகளில் தெரிந்த பயத்தில் அவனுக்கு சிரிப்பு வர, அவரை நினைத்து சற்று ஆச்சரியமாகவும் இருந்தது.


சிறுவயதிலிருந்து அஃப்ரிமை பார்க்கிறான் அவன். மன்னனை காக்கும் தளபதி போன்றே வில்லியமுக்கு அஃப்ரிம். இளம் வயதில் ஒற்றை ஆளாக பல பேரை பந்தாடியதை அவனும் பார்த்துதான் இருக்கிறான். ஊருக்கே சூரன் என்றாலும் குடும்பம் என்று வரும் பொழுது புதுப் பாத்திரத்தையே தத்தெடுத்துக்கொள்கின்றனர் ஆண்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.


"சொல்ல ட்ரை பண்றேன்" என்றுவிட்டு அங்கிருந்த ரெஸ்டோரன்ட்டுக்கு அருகில் காரை நிறுத்தச் சொன்னவர், காரை நிறுத்தியதும் வண்டியிலிருந்து இறங்கி நகரப் போக, "அஃப்ரிம்..." என்று அழைத்து அவரை நிறுத்தினான் விக்டர்.


அவரோ கேள்வி தாங்கிய விழிகளோடு திரும்பிப் பார்க்க, "இத்தனை வருஷமாச்சு, அவங்கள நீங்க பார்க்கவே இல்லை. உங்கள பல பொண்ணுங்க கடந்து போயிருப்பாங்க, அப்படி இருந்தும் அப்போ இருந்த காதல் இப்போவும் அதே மாதிரி உங்களுக்குள்ள இருக்கா?" என்று விக்டர் ஆர்வம் கவந்த சந்தேகத்தோடே கேட்க,


"காதல் ஒரு முடிவில்லாத பயணம் மை பாய், அவ மேல உருவான காதல் என்ட்லெஸ், ஒவ்வொரு நாளும் பிரிவோட வலியில அதிகமாச்சே தவிர கொஞ்சமும் குறையல்ல. நீயும் காதலிப்பல்ல, அப்போ புரியும்" என்ற பெரியவரின் வார்த்தைகளிவ் ஒருகணம் அசந்துப்போய் விட்டான் அவன்.


ஏனோ அவனுக்குள் தஷுரியின் முகம் மின்னால் வேகத்தில் வந்துச் செல்ல, மனதிற்குள் ஏதோ ஒரு குறுகுறுப்பு. இத்தனைநாள் இந்த காதல் மேல் அவனுக்கு நம்பிக்கையில்லை, ஆனால் இப்போது?


விழிகளை அழுந்த மூடித் திறந்து தன்னை ஆசுவாசப்படுத்தியவாறு பெரிய மூச்சுக்களை இட்டான். பட்டென்று விழிகளைத் திறந்தவன், அடுத்து அழைத்தது ரோயிற்குதான். 


அவன் அழைப்பை ஏற்றதும் அவனை 'ஹெலோ' என்று கூட சொல்ல விடவில்லை. தான் சொல்ல வந்ததைப படபடவென இறுகிய குரலில் விக்டர் சொல்லி முடித்துவிட்டு அழைப்பைத் துண்டித்திருக்க, மறுமுனையிலிருந்த ரோயிற்கு தன் தோழனின் மனதைப் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை.


அடுத்தநாள் அறையிலிருந்து வெளியே வந்த தஷுரியின் மனம் வலியில் துடித்துக்கொண்டிருந்தது. அன்றுதான் இரண்டே நாட்களில் நடக்கவிருக்கும் விக்டர் லாராவின் நிச்சயதார்த்தத்திற்காக அலங்கார ஏற்பாடுகள் ஆரம்பாகியிருக்க, இன்னொருத்தியுடனான தன்னவனின் நிச்சயதார்த்தத்திற்காக தான் வேலைப் பார்ப்பதை நினைத்து நொந்துக்கொண்டாள் அவள்.


மனம் கனத்ததுப் போயிருக்க, அழுகை தொண்டையை அடைக்க, ஏனோ மூச்சுக்கே சிரமப்படுவது போல் துடிக்க ஆரம்பித்துவிட்டாள் பெண்ணவள். உடனே வீட்டில் நடக்கும் அலங்காரங்களைப் பார்க்க முடியாது சுத்தம் செய்யும் பொருட்களை எடுத்துக்கொண்டு தோட்டத்தை சுத்தப்படுத்தச் செல்வதாகக் கூறி அங்கு சென்றவள், விழிகளை சிமிட்டி அழுகையை அடக்கியவாறு செயற்கை நீர்வீழ்ச்சியில் ஓடும் தண்ணீரையே வெறித்துப் பார்த்திருந்தாள்.


திடீரென, "தஷுரி..." என்றொரு அழைப்பு. திடுக்கிட்டு நிமிர்ந்தவள் கலங்கிய விழிகளை மெல்லத் துடைத்து திரும்பிப் பார்க்க, அங்கு நின்றிருந்தார் அஃப்ரிம். 


"போன்ஜூர் சார்" என்று மெல்லிய புன்னகையோடு அவள் சொல்ல, அவளின் சிவந்திருந்த விழிகளைப் பார்த்து புருவத்தை நெறித்தவர், "வீட்டு ஞாபகமா தஷுரி?" என்று கேட்டார் அவள் அழுவதற்கான காரணம் புரியாது.


அவளும் உண்மையை வெளிப்படையாகச் சொல்ல முடியாது, "ம்ம், ஆமா சார்" என்று வரவழைக்கப்பட்டப் புன்னகையோடுச் சொல்ல, "ஓஹோ!" என்று யோசனையோடு இழுத்தவர், "நான் விக்டர்கிட்ட பேசி பார்க்குறேன், நீ சீக்கிரம் உன் சொந்த ஊருக்கு போயிடுவ" என்றார் ஆறுதலாக.


ஏனோ அவனை விட்டு செல்வதா என்ற ஒரு வலி அவளை முள்ளாய் குத்த, அதை மறைத்த வண்ணம் "விக்டர் சார் அனுப்பினா சரிதான்" என்றாள் சாதாரணமாக. அதில் இரு பக்கமும் சலிப்பாகத் தலையாட்டியவாறு சிரித்த அஃப்ரிம், "அவன் ஒன்னும் கெட்டவன் கிடையாதும்மா, சூழ்நிலை அப்படி மாத்திருச்சு" என்றார் சற்று வருத்தத்தோடு.


"ஏன், என்னாச்சு?" என்று தன்னவனைப் பற்றித் தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தோடு தஷுரி கேட்க, பெரியவரிடமோ நடந்ததை நினைத்து பெருமூச்சு வெளியானது.


"சின்னவயசுலயே அம்மா அப்பா இரண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்க. வில்லியம் லோரன்ட் அவனோட அப்பா இப்போ வரைக்கும் கல்யாணமே பண்ணிக்கல, அவனோட அம்மா மரியா வேறொரு கல்யாணத்தை பண்ணிக்கிட்டாங்க. ஆரம்பத்துல அம்மா கூடதான் இருந்தான், ஆனா மரியாவோட செகன்ட் ஹஸ்பன்ட் ஜோனுக்கு விக்டர பிடிக்கல, அது விக்டருக்கு தெரியாம இல்லை. ஏன்னா, அவர் நடந்துக்குற விதம் அப்படி" என்றவர் சற்று நிறுத்திவிட்டு மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.


"அவங்களோட அப்பாகிட்ட அடியாளா வேலை பார்த்தவன் நான். ஆனா, தராதரம் பார்க்காம  சின்ன வயசுல விக்டர் அதிகமா என் கூடதான் இருப்பான். அதனாலதான் நான் வில்லியம் சாருக்காக வேலை பார்த்தாலும் அப்பப்போ மரியா மேடத்தோட இருக்குற விக்டரை தேடி போவேன். அப்போ ஒருநாள் ஜோன் கோபத்துல விக்டரோட முதுகுல சூடு வைக்கிறதை பார்த்தேன், அதுல நான் ஜோன அடிச்சு கலவரமாகி விக்டர பார்க்கவே முடியல" என்று சொன்ன அஃப்ரிமின் முகம் தான் பார்த்த காட்சியை நினைத்து இன்றும் கோபத்தில் சிவந்தது.


"பெத்தவங்க பாசம் கிடையாது, கூட பழகின நண்பர்கள் செய்த துரோகம், காதலிச்ச பொண்ணு செய்த துரோகம்..." என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, "பொண்ணா?" என்று ஆச்சரியமாகக் கேட்டாள் அவள்.


சுற்றிமுற்றிப் பார்த்து, "அது விக்டரோட முதல் காதல்," என்று ஹஸ்கி குரலில் சொன்னவார், "இவன காதலிச்சிக்கிட்டே கூட இருந்த இவன் ஃப்ரென்ட்ட காதலிச்சிருக்கா. இது தெரிஞ்சதும் அவ்வளவுதான், சும்மாவே பெத்தவங்களோட வாழ்க்கைய பார்த்து காதல வெறுத்திருந்தவன், அவ பண்ண காரியத்தால வெறும் உடல் தேவைக்காக மட்டுமே பொண்ணுங்கன்னு பார்க்க ஆரம்பிச்சிட்டான்" என்று முடிக்க, "ஓ..." என்று நீட்டி முழக்கினாள் தஷுரி.


"அப்றம் பிஸ்னஸ்னு ஆரம்பிச்சதும் கூட இருந்த அவன் பெஸ்ட் ஃப்ரென்ட் ஜேக்கப் பண்ண தூரோகம்" என்று அஃப்ரிம் சொல்லும் போது, "ஜேக்கப்!" என்று அந்த பெயரில் அவள் அதிர்ந்து விழிக்க, "யெஸ், ஜேக்கப்தான்" என்றார் அவர் பெருமூச்சோடு.


"அவன் எப்படி..." என்று கேட்ட தஷுரிக்கு அப்படியோர் அதிர்ச்சி, இப்போது எதிரிகளாக இருப்பவர்கள், ஒருகாலத்தில் நெருங்கிய நண்பர்களா என்று. 


"ஹை ஸ்கூல்லயிருந்து இரண்டு பேருமே நெருங்கிய நண்பர்கள்தான். விக்டர் யுனிவெர்சிட்டி முடிச்சு பிஸ்னஸ் ஆரம்பிச்சதுமே அவனோட பிஸ்னஸ் பார்ட்னரா ஜேக்கப்பும் இருந்தான். பட், பணத்துக்காக சொந்த கம்பனியோட ரகசியங்களையே வெளியிட்டான்" என்று பெரியவர் நடந்ததைச் சொல்ல, ஏனோ தஷுரிக்கு தன்னவனை நினைத்து அத்தனை பரிதாபம். 


பெற்றவர்கள், நண்பன், காதல் இந்த மூன்றும் சிறப்பாக அமைந்தாலே வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆனால், இந்த மூன்றிலுமே துரோகத்தையும் ஏமாற்றத்தையும் கண்டவன் அல்லவா விக்டர்!


"இதெல்லாம் நடந்ததுக்கு அப்றம் தனக்குள்ள ரொம்ப இறுகிட்டான் அவன். பேசுறதை கூட குறைச்சிக்கிட்டான். தனக்குன்னு ஒரு வட்டத்தை உருவாக்கி அதுக்குள்ள தன்னை சுருக்கிகிட்டான். கூடவே, அவனுக்குள்ள இருக்குற குற்றவுணர்ச்சி, அது கூட குடிபோதையில ஒருதடவை அவன் சொல்லும் போதுதான் தெரிஞ்சிக்கிட்டேன்" என்று அவர் சொன்னதுமே, "என்ன குற்றவுணர்ச்சி?" என்று தஷுரி புரியாமல் கேட்க, 'ஷீட்!' என்று தான் உளறியதை நினைத்து நெற்றியை நீவி விட்டுக்கொண்டார் அஃப்ரிம்.


"அது... அது ஒன்னுமில்ல, இப்போ இத்தனை தப்பு பண்றானே, அந்த குற்றவுணர்ச்சிதான்" என்று அவர் சமாளிக்க, பெரியவர் மறைத்துப் பேசுவதை உணர்ந்தாலும் அதைத் தோண்டித் துருவிக் கேட்க விரும்பவில்லை அவள்.


தன்னவனைப் பற்றிய யோசனையில் அவள் தரையை வெறித்திருக்க, இங்கு தன்னைப் பற்றி சொல்லத் தயாராகி தைரியத்தை வரவழைத்துக்கொண்டிருந்தார் அவர். ஆனால், திடீரென ஒரு சந்தேகம் கலந்த ஆர்வம்.


"தஷுரி, உன் அப்பா என்ன பண்றாருன்னு தெரிஞ்சிக்கலாமா?" என்று அவர் கேட்க, சட்டென அவளுடைய முகம் சிவந்து முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது அவளின் எரிச்சலும் கோபமும்.


"அந்த மனுஷனுக்கென்ன, நல்லா இருக்காரா இருக்கும் அவரோட குடும்பத்தோட" என்று தஷுரி சொல்ல, அதிர்ந்து விழித்தவர், "ஏ..ஏன் அப்படி சொல்லுறம்மா, எதையும் பார்க்காம பேச கூடாதுல்ல!" என்று சற்று தடுமாறியபடிச் சொல்ல, விரக்தியாகப் புன்னகைத்தாள் தஷுரி.


"என்ன சார் சொல்லுறீங்க, அந்த மனுஷன் காதலிச்சு ஏமாத்தி என்னை அவங்க வயித்துல கொடுத்துட்டு கடைசியில அவங்கள தேடி கூட வரல. வீட்டாளுங்க துரத்திவிட்டு ஊரு விட்டு ஊரு போய் தனியாளா என்னை வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டாங்க தெரியுமா? இத்தனை வருஷம் அந்த மனுஷன் எங்கம்மாவ தேடி வரல, அப்போ வேற குடும்பம் இருக்குன்னுதானே அர்த்தம்! " என்று ஆதங்கத்தோடு கேட்டவளின் விழிகள் கலங்கியிருக்க, அஃப்ரிமின் மனமோ சுக்கு நூறாக சிதறியது.


'தான் இத்தனை கஷ்டத்தைக் கொடுத்துவிட்டோமா?' என்ற மனவேதனையில் அவருடைய இதயம் வேகமாகத் துடித்து அவருடைய கைகால்கள் நடுங்கத் தொடங்க, தன்னை மீறி சமநிலையில்லாது தடுமாறிவிட்டார் அவர். 


உடனே அவரைத் தாங்கிப் பிடித்தவள், "என்னாச்சு சாரு, உடம்புக்கு ஏதும் முடியல்லையா?" என்று அதிர்ந்த குரலில் கேட்க, "தெரி..தெரியல, நான் அப்பறமா உன்னை பார்க்குறேன்" என்றுவிட்டு அங்கிருந்த காவலாளி ஒருவனோட வீட்டிற்குள் நுழைய, சரியாக விக்டரின் ரோல் ரொய்ஸ் கார் பெரிய ராட்சத வாசற் கதவுகளைத் தாண்டி உள்ளே வந்து போர்டிகாவில் வந்து நின்றது.


தன்னவன் வருவதைப் பார்த்ததும் அவளுடைய மற்ற சிந்தனைகள் கலைந்து அவனிடத்தில் வந்து நிற்க, விக்டரோ அணிந்திருந்த கூலரைக் கழற்றியவாறு காரிலிருந்து இறங்கியவன் தன் அட்மினிடம் படபடவென ஏதோ சொன்னவாறு வீட்டிற்குள் நுழைந்தான். 


அவனுடைய பார்வை தன்மேல் விழாதா என்ற ஏக்கத்தோடு பார்த்திருந்தவளுக்கு சிறு ஏமாற்றம்தான். இருந்தும் பெருமூச்சை வெளியிட்டு அவள் தன்னை ஆசுவாசப்படுத்துவதற்குள் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல் வந்து நின்றது லாராவின் கார்.


உடலிலிருக்கும் அங்கங்களை வெளிச்சம் போட்டு காட்டுவது போலான இறுக்கமான ஆடையில் வந்திறங்கியவள், அவள் பாட்டிற்கு உள்ளே செல்ல, தஷுரிக்கோ அத்தனை ஆத்திரம்.


கொண்டையிட்டிருந்த தலைமூடியை மீண்டும் கழற்றி, "வாடி என் சக்காளத்தி..." என்று பற்களைக் கடித்தவாறு மீண்டும் கொண்டையிட்டு வீட்டுக்குள் நுழைந்தவள், மேலிருக்கும் விக்டரின் அறைக்குச் செல்லவென லிஃப்டுக்காகக் காத்திருப்பவளை, "ஏய்!" என்று சொடக்கிட்டு அழைத்தாள்.


முதலில் திரும்பியவள் இடுப்பில் கைக்குற்றி முறைத்துக்கொண்டிருந்த தஷுரியைப் பார்த்துவிட்டு 'இதற்கும் தனக்கும் சம்மந்தமேயில்லை' என  கண்டுகொள்ளாதது போல திரும்பிக்கொள்ள, அதில் மேலும் கடுப்பானவள், விறுவிறுவென நடந்துச் சென்று, "கூப்பிடுறேன்ல தெரியல்லையா?" என்று அதட்டலாகக் கேட்க, "எக்ஸ்கியூஸ் மீ!" எனறாள் லாரா அதிர்ச்சி கலந்த கோபத்தோடு.


"யக்கோவ், நீ இங்கேயே பொறந்து வளர்ந்தவ, இதெல்லாம் உனக்கு சகஜம். ஆனா, எங்க ஊருல அப்படியில்ல. சொந்த புருஷன எவளாச்சும் திருட வந்தான்னா பொண்ணுங்க கூட அருவாள தூக்குவோம். புரியுதா?" என்று கிட்டத்தட்ட தஷுரி அவளை மிரட்ட, லாராவுக்கு அவள் பேசுவது சுத்தமாகப் புரியவில்லை.


மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டியவாறு, "இங்க வேலை செய்ற சாதாரண சர்வன்ட் நீ, என்னை மிரட்டுற. தட்ஸ் ஓகே, பட் நீ எதை பத்தி பேசுறன்னு எனக்கு புரியல மிஸ்..." என்று பெயர் தெரியாது புருவத்தைச் சுருக்கியவாறு இழுக்க, "தஷுரி" என்று அழுத்தமாகச் சொன்னவள், "நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, நான் விக்டர் சார லவ் பண்றேன். அதனால இந்த கல்யாணத்தை நீயே நிறுத்திடு, காதலிப்பவங்கள பிரிச்சா நல்ல சாவே வராதாம், எங்க ஆத்தா சொல்லும்" என்று தீவிர முகபாவனையோடுச் சொன்னாள்.


ஏனோ லாராவுக்கு சிரிப்புதான் வந்தது. ஏளனமாக இதழை வளைத்தவள், "ஆசைப்படுறதுக்கும் ஒரு எல்லை இருக்கு மிஸ்.தஷுரி, உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன். சோ, உங்க லவ் அதோ மூலையில இருக்குற அந்த டஸ்பின் மேல இருக்கணும். மேல பறக்குற ஃப்ளைட் மேல கிடையாது, புரியுதா?" என்று சொல்லிவிட்டு நகரப் போக, "யக்கோவ், நான் விளையாட்டுக்கு பேசல. நா..நான் நிஜமாவே அவர ரொம்ப காதலிக்கிறேன் நீங்களே இதை நிறுத்திடுங்க!" என்றாள் சற்று பயத்தோடு.


அவளை கூர்ந்துப் பார்த்தவாறு, "விக்டர் உன்னை லவ் பண்றாரா?" என்று லாரா கேட்க, இப்போது தஷுரியின் விழிகளோ சட்டென கலங்கின.


இதற்கான பதிலை சொல்ல தயக்கப்பட்டவாறு, "அது... அது இல்லை" என்று முகத்தை வேறுபுறம் திருப்பி அவள் தழுதழுத்த குரலில் சொல்ல, இப்போது கத்தியே சிரித்துவிட்டாள் மற்றவள்.


"ஹாஹாஹா... அப்போ வன்சைட் லவ்வா! இதுக்குதான் மேடம் என்னை மிரட்டுறீங்களா! தட்ஸ் ஓகே, போய் டொய்லட்ஸ்ஸ க்ளீன் பண்ணு, இந்த இம்போஸிபளான கனவ மறந்துட்டு" என்று அவளை மட்டந்தட்டிவிட்டு அவள் பாட்டிற்கு நகர்ந்துவிட, தன்னை குனிந்துப் பார்த்தவளுக்கு தன் நிலையை நினைத்து இரண்டு விழிகளில் இருந்தும் கண்ணீர் சொரிந்தது.


கண்ணீரைக் கூட துடைக்க மனமின்றி  சமையலறைக்குள் நுழைந்தவளின் விழிகளுக்கு சிக்கியது பாதி குடித்து வைக்கப்பட்டிருந்த பெரிய மது போத்தல். அதைப் பார்த்தவள், அடுத்தகணம் கொஞ்சமும் யோசிக்கவில்லை. மடமடவென போத்தலைத் திறந்து அதில் இருந்ததை அவளுக்குள் இறக்கியிருக்க, நடக்கப் போவது தெரியாது லாராவுடன் வெளியே சென்றிருந்தான் விக்டர்.


******************

தஷுரி 15>>>

https://agnitamilnovels.blogspot.com/2024/06/15.html


தஷுரி கதையை கிண்டலில் படிக்க 👇

https://www.amazon.in/dp/B0CN39JKBC?binding=kindle_edition&ref=dbs_dp_awt_sb_pc_tkin


மற்ற கதைகளைப் படிக்க 🏃🏃

India link 👇

https://www.amazon.in/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%95%E0%AE%BF/e/B08ZYCHG6C/ref=dp_byline_cont_ebooks_1

USA link 👇

https://www.amazon.com/%25E0%25AE%25B7%25E0%25AF%2587%25E0%25AE%25B9%25E0%25AE%25BE-%25E0%25AE%25B8%25E0%25AE%2595%25E0%25AE%25BF/e/B08ZYCHG6C%3Fref=dbs_a_mng_rwt_scns_share?ref_=d6k_applink_bb_dls


Comments

Popular posts

தஷுரி 10