தஷுரி 13



சம்பவம் நடந்து ஒரு வாரமாகிவிட்டது. இப்போதுதான் தஷுரியை வைத்தியசாலையிலிருந்து விக்டரின் வீட்டிற்கு அழைத்து வந்திருக்க, அனைத்தும் வசதிகளும் உள்ள அறையில் அவளை இருக்க வைத்தான் விக்டர்.


அவ்வப்போது அவள் உறங்கும் சமயமாக வந்து சிறிதுநேரம் அவளையே வெறித்துப் பார்த்திருப்பவன், அவள் விழித்திருக்கும் போது முடிந்தளவு வருவதைக் குறைத்துக்கொண்டான். ஆனால், பெண்ணவள்தான் அவனைக் காணாது தவித்துப் போயிருந்தாள் என்று சொல்ல வேண்டும். 


ஹெலனே தஷுரிக்குத் தேவையானதைப் பார்த்துப் பார்த்து செய்ய, நன்றாகவே தேறியிருந்தாள் அவள். சில நாட்கள் கழிந்த நிலையில் அன்று...


கட்டிலில் அமர்ந்தவாறு அறை ஜன்னலில்  அமர்ந்திருக்கும் புறாவை வெறித்துப் பார்த்தவாறு இருந்த தஷுரிக்கு திடீரென தன் அம்மாவின் நினைவு. அன்று கடைசிய விக்டரிடம் பிடிபட்ட போது பேசியவள்தான், அதன் பிறகு பேசவும் இல்லை, பேசுவதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை.


அவளுடைய சிந்தனையைக் கலைப்பது போல, "இப்படியே எத்தனை நாள் இருக்குறதா உத்தேசம், இன்னும் ஏதோ பேஷன்ட் மாதிரி ஆக்ட் பண்ணிக்கிட்டு இருக்க" என்ற விக்டரின் குரல் கேட்க, திடுக்கிட்டுத் திரும்பியவளுக்கு அவனைக் காணாது கண்டதில் உள்ளுக்குள் ஒருவித பரவசத்தோடு சேர்ந்து விழிகளும் கலங்கின.


"எனக்கும் இந்த இடம் பிடிக்கல" அவள் கொடுப்புக்குள் சிரித்தவாறுச் சொல்ல, கேள்வியாக விழிகளை இவன் சுருக்கியதும் அவனுடைய கேள்விக்கோ பதில் சொல்லாது, "நீங்க எப்போவும் இப்படிதானா, கண்ணாலேயே பேசுவீங்களா?" என்று கேட்டாள் தஷுரி சிரிப்போடு.


விக்டரோ அவளை ஒற்றைப் புருவத்தைத் தூக்கி முறைக்க, "சரி சரி, அது... எனக்கு இந்த மாதிரி இருந்து பழக்கம் இல்ல. இந்த துள்ளிப் பாயுற மெத்தை, அறைக்குள்ள இருக்குற சோஃபா செட், பாத்ரூம்ல இருக்குற குழந்தைங்க குளிக்கிற பெரிய வாலி. இது எதுவுமே பிடிக்கல" என்று முகத்தைத் தொங்கப் போட்டவள், "ஒருவேள, நான் உங்க அளவுக்கு வசதியா இல்லாததாலதான் உங்களுக்கோ என் மேல காதல் வருதில்லையா?" என்று கேட்டாள் ஒருமாதிரிக் குரலில்.


"புல்ஷீட்!" என்று விழிகளை சலிப்பாக உருட்டியவன், "திஸ் இஸ் இம்போஸிபள்" என்றான் அழுத்தமான குரலில். ஆனால், அதெல்லாம் பெண்ணவளின் செவிகளில் விழவே இல்லை.


"லவ் யூ!" என்று பட்டென சொல்லிவிட்டு வெட்கத்தில் அவள் தலை குனிந்துக்கொள்ள, விக்டருக்கோ அவளின் செயலில் சுவற்றில் மோதிக்கொள்ளலாம் போலிருந்தது. 


கோபத்தை முயன்று அடக்கி 'ஊஃப்ப்...' என்று பெருமூச்சுவிட்டவன், "இனாஃப் தஷுரி!" என்றுக்கொண்டே அவளை நோக்கி வந்து அவளை நெருங்க, "அய்யய்யோ! கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்புங்க" என்று அலறியபடி விழிகளை மூடிக்கொண்டாள் அவள்.


அவனோ அவள் பின்னே இருந்த ஏசி ரிமோட்டை கையிலெடுத்து ஒருகணம் அதே நிலையில் இருந்தவாறு புரியாது விழித்தவன், பின்னரே அவள் அலறியதன் காரணம் உணர்ந்து தன்னை மறந்து சிரித்துக்கொண்டே அவளை மேலும் நெருங்க, அவனுடைய பிரத்யேக மணத்தை உணர்ந்தவளுக்கு விழிகளை திறப்பதில் அத்தனை வெட்கம்.


ஆனால், அவளுடைய உணர்ச்சிகள் பாதித்ததோ என்னவோ, இந்த ஆடவனின் உணர்ச்சிகள் ஏனோ பெண்ணவளை நெருங்கியதும் தாறுமாறாக தடுமாற ஆரம்பித்தன. 


அவளின் விழிகளிலிருந்த பார்வை மெல்ல மெல்ல அவனையும் மீறி மூக்கு, கன்னம், இதழ்கள் என இடம் மாற, நாவால் தன்னிதழ்களை ஈரமாக்கியவாறு அவளை மேலும் நெருங்கினான் விக்டர்.


கொஞ்சமும் எதிர்பார்க்காது அவனிதழ்கள் அழுத்தமாக அவளுடைய பலூன் கன்னத்தில் பதியவும், அதிர்ந்துப்போய் விழிகளைத் திறந்தவளுக்கு உடல் அவனுடைய ஒரு முத்தத்தில் சிலிர்த்தடங்கியது. ஏனோ அவளுடைய மனம் மீண்டும் ஏக்கமாக அவளை நோக்க, இப்போது அவளிதழ்களை நெருங்கியவனின் வன்மையான இதழ்கள் அவளிதழில் பதிந்து உரசத் தொடங்க, இருவரின் உடலும் சூடேறின.


ஆனால், இருவரின் மோனநிலையை கலைப்பது போல் 'படார்' என கதவு திறக்கும் சத்தம். நடப்புக்கு வந்தவன் தான் செய்யும் காரியம் உணர்ந்தவனாய், "ஷீட்!" என்று தன்னைத்தானே கடிந்தவாறு எழுந்து நிற்க, உள்ளே வேகமாக வந்தாள் லாரா. 


வந்தவள் இடம், பொருள் பாராது ஓடிச் சென்று விக்டரை அணைத்திருக்க, இத்தனை நேரம் தன்னவனின் இதழ் முத்தம் கொடுத்த அதிர்ச்சியில் சிலையாக சமைந்தவளுக்கு இருவரும் தன் கண் முன்னே ஒருவரையொருவர் அணைத்திருப்பதைப் பார்த்ததும் உலகமே சூனியமான உணர்வு.


விக்டரை அவனின் அனுமதியின்றி அவ்வளவு இலவாக எந்த பெண்ணும் நெருங்கிட முடியாது. ஆனால், அவனுடனான இவளின் நெருக்கம்! 


சில கணங்களில் தஷுரியின் மூளை ஏதேதோ யோசிக்கத் துவங்கியது. அவளுக்குத் தோன்றியதை ஒருபக்கம் மனம் மறுத்தாலும் மூளை ஆமென்று அடித்துச் சொல்லியது. அதுவாக இருக்கக் கூடாதென்ற வேண்டுதலோடு தன்னவனையே இமைக்காது தஷுரி பார்த்திருக்க,


"ஆர் யூ ஓகே, மோர்னிங்தான் லண்டன்லயிருந்து வந்தேன். அங்க பிஸ்னஸ் விஷயமா இருந்ததால எந்த டென்ஷனும் இருக்கக் கூடாதுன்னு மாம் எதுவும் சொல்லல்ல. இப்போ தெரிஞ்சிக்கிட்டதும் உங்களை பார்க்காம இருக்க முடியல விக்டர்" என்றாள் லாரா பதற்றமாக. ஆனால், விக்டரிடத்தில் வெறும் அமைதியே!


"உங்களுக்கு எதுவும் இல்லல்ல, தேங்க் கோட்! ஆமா... உங்க சர்வன்ட் யாருக்கோ அடிபட்டிருக்குன்னு சொன்னாங்க, இஷ் ஷீ ரைட்?" என்று அவளே பதிலையும் சொல்லி அவளே கேள்வியையும் கேட்டு, "ஹவ் இஸ் யூவர் ஹெல்த்?" என்று கேட்டு தஷுரியை குறுகுறுவெனப் பார்க்க, தன் முன் நடப்பதோ புரியாது வரவழைக்கப்பட்ட புன்னகையோடு தலையை ஆட்டி வைத்தாள் அவள்.


சரியாக, ரோயும் விக்டரைத் தேடி உள்ளே வர, விக்டரை அணைத்த நிலையில் நின்றுக்கொண்டிருந்த லாராவைப் பார்த்தவனின் பார்வையில், தஷுரியைப் பார்க்கும் போது சற்று அதிர்ச்சி கலந்திருந்தது. 


"ஆங்... விக்டர், மீட்டிங்கு நேரமாச்சு, இப்போ போனாதான் கரெக்டா இருக்கும்" என்று ரோய் சொல்ல, எதுவும் பேசாமல் அதற்குமேல் அங்கு நிற்கத் தோன்றாது விறுவிறுவென அவன் அறையிலிருந்து வெளியேறியிருக்க, அவன் பின்னே ஹீல்ஸ்ஸை தரையில் அடித்தவாறு கிட்டத்தட்ட ஓடினாள் லாரா.


அவளைப் பார்த்து சலிப்பாகத் தலையாட்டியவாறு வெளியேறப் போன ரோய், "ரோய் சார்!" என்ற தஷுரியின் அழைப்பில் சட்டென நிற்க, "அந்த பொண்ணு யாரு, விக்டர் சாரோட சொந்தக்கார பொண்ணா என்ன, ரொம்ப நெருக்கமா இருக்காங்கல்ல அதான்..." என்று தயக்கமாக தன் சந்தேகத்தை அவள் கேட்டுவிட, ரோயிற்கு தர்மசங்கடமாக போய்விட்டது.


விக்டரின் மீதான தஷுரியின் காதலை அறிந்தவனாயிற்றே!


"அது... அது விக்டரோட ஃபியான்சி. ஐ மீன் அவன கல்யாணம் பண்ணிக்க போறவ" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ரோயும் நகர்ந்திருக்க, ஒற்றை விழியிலிருந்து விழிநீரோடி தரையைத் தொட, உணர்ச்சிகள் மரத்துப்போன பொம்மைப் போல் உறைந்துவிட்டாள் தஷுரி.


இதயத்தை ஈட்டியால் குத்துவது போன்ற வலி. விழிகளிலிருந்து விடாது கண்ணீர் சிந்திக்கொண்டிருக்க, அதை அழுந்தத் துடைத்தவள், அதன் பின் அந்த அறையில் இருக்கப் பிடிக்காது இதற்கு முன்னிருந்த அறைக்கே சென்றிருக்க, அப்போதுதான் வேலை முடித்து அறைக்கு வந்திருந்தாள் ஹெலன்.


தன் தோழியைக் கண்டவளுக்கு உற்சாகம் பெருக்கெடுக்க, ஓடிச் சென்று இவள் அணைத்த மறுகணம் ஹெலனை இறுக்கிப் பிடித்துக்கொண்டவள் உடல் குலுங்க கவலை வெடித்து அழத் தொடங்கிவிட்டாள்.


மற்றவளுக்கோ அதிர்ச்சி! 


"என்னாச்சு தஷு, ஏன் அழுற? ப்ளீஸ், ஸ்டாப் க்ரையிங்!" என்று அவளின் முதுகை ஆறுதலாக வருடியவாறு ஹெலன் அவளுடைய அழுகைக்கான காரணம் புரியாது பதற்றப்பட, "அக்கா... என்னால முடியல, நா..நான் யாருக்கு என்ன பாவம் பண்ணேன்னு தெரியல. என் வாழ்க்கையில எதுவுமே சரியா அமையல. பெத்த அப்பா கூட இல்லை, அம்மாதான் எல்லாமே! இப்போ இந்த ஊருக்கு வந்து அம்மாகிட்ட போக முடியாம எடுத்த கடனையும் அடைக்க முடியாம இங்க சிக்கிக்கொண்டு... இதுல நான் இப்படி இருக்க யாரு காரணமோ அவன் மேல காதல் வேற! என்னை மீறி ஏதேதோ நடக்குது. இப்போ, அந்த காதலும் கைவிட்டு போச்சு" என்று சொல்லி விம்மி விம்மி அழுதாள் தஷுரி.


அவளிடமிருந்து விலகி அவளுடைய கன்னத்தைத் தாங்கியவள், "என்னாச்சு தஷு, விக்டர் சார் ஏதாச்சும் சொன்னாரா?" என்று சந்தேகமாகக் கேட்க, நடந்ததை முழுதாகச் சொல்லி முடித்தவளுக்கு மீண்டும் மீண்டும் இருவரும் அணைத்திருந்த காட்சி ஞாபகத்திற்கு வந்து அவளை கொல்லாமல் கொன்றது.


ஹெலனுக்கோ அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றுக் கூடத் தெரியவில்லை. "அதான் முன்னாடியே வேணாம்னு சொன்னேனே, நீதான் கேக்கல. சரி விடு, அழாத தஷு! பழைய மாதிரி சீக்கிரம் இங்கயிருந்து போக ட்ரை பண்ணு, உன் அம்மாக்கிட்ட போ!" என்றுவிட்டு ஆறுதலாக தலையை வருடிவிட, அழுது அழுதே களைத்துப்போய் சிவந்து வீங்கிய விழிகளோடு ஹெலனின் மடியிலேயே உறங்கிவிட்டாள் தஷுரி.


இங்கு இவ்வாறு இருக்க, அதேநேரம் தஷுரியின் சொந்த ஊரில், 


"ஏம்மா ராதா... ராதா..." என்று வாசலிலிருந்து ஒருவர் குரல் கொடுக்க, சமையலறையிலிருந்து வாடிய முகத்தோடு வாசலுக்கு வந்த ராதாவுக்கு, அங்கு நின்றிருந்த மனிதரைப் பார்த்ததும் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.


"சரவண அண்ணா!" என்று அதிர்ந்த குரலில் அழைத்தவள், "உள்ள வாங்க" என்று தயங்கியபடிச் சொல்ல, "நான் ஒன்னு உக்கார்ந்து பேச வரல, எப்போ ஏன் காச கொடுக்கப் போறேன்னு கேட்டுட்டு போக வந்தேன். மாசக் கணக்காகிருச்சு. இன்னும் பணம் வந்தபாடில்ல" என்றார் அவர் கோபத்தோடு.


தஷுரியை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக சில செலவுகளுக்கென அவரிடம் கடன் வாங்கியிருந்தவர், அவள் வெளிநாடு சென்று பணத்தை அனுப்பியதும் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்று எண்ணியிருக்க, ஆனால், மொத்தமும் தலைகீழாகிவிட்டது.


"அது அண்ணா... தஷுரி போய் இன்னும் பணம் அனுப்பல்ல, ஏதோ பிரச்சினைன்னு சொல்லிட்டு இருந்தா. நான் சீக்கிரம் பணத்தை கொடுத்துடுறேன். தயவு பண்ணி கொஞ்சம் நிலைமைய புரிஞ்சு பொறுமையா இருங்க!" என்று கைகளைப் பிசைந்தவாறு தயங்கித் தயங்கி ராதா கெஞ்ச, அவருக்கோ ஏற்கனவே பணம் திருப்பிக் கிடைக்காத கோபத்தோடு இன்னும் பொறுமையாக இருக்கச் சொல்வதில் மேலும் பிபி எகிறியது.


"என்னம்மா சொல்லுற, இன்னும் பொறுமைன்னா என்ன அர்த்தம்? உன் பொண்ணு வெளிநாட்டுல போய் சம்பாதிச்சு வட்டியும் முதலுமா தந்துடுவான்னு சொல்லிதானே பணம் வாங்கின, இப்போ பொறுமையா இருக்க சொல்லுற!" என்று சுற்றிமுற்றி இருப்பவர்களை எல்லாம் கண்டுகொள்ளாது வீதியில் போவோர் வருவோர் பார்க்க அவர் கத்த, இங்கு ராதாவுக்குதான் சங்கடமாக போய்விட்டது.


"அண்ணே, எதுவா இருந்தாலும் உள்ள வந்து பேசுவாங்க. எல்லாரும் நம்மளதான் பார்க்குறாங்க" என்று ராதா சங்கடத்தோடு சொல்ல, "பார்த்தா என்ன, இழிச்சுக்கிட்டே காசு வாங்க தெரியுதுல்ல, அப்போ பணத்தையும் கொடுக்க தெரிஞ்சிருக்கணும்" என்றவர், "ஒருவேள, உன் பொண்ணு வெளிநாட்டுக்கு உனக்காக வேலை பார்க்க போனாளா, இல்லைன்னா அவளுக்காக வேலை பார்க்க போனாளா?" என்று உள்ளர்த்தத்தோடு நாக்கில் விஷத்தைத் தடவியது போல் பேச, அழுதேவிட்டார் அந்த பெரியவர்.


அந்த மனிதரும் எதிரிலிருப்பவளின் மனதை கொஞ்சமும் யோசிக்காது வாயிற்கு வந்தபடி பேசிவிட்டு, அங்கிருந்து நகர்ந்திருக்க, அவமானத்தில் அழுதுக்கொண்டிருந்த ராதாவின் விழிகளுக்கு இத்தனைநேரம் காரில் அமர்ந்தபடி நடப்பதை கைக்கட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சுப்ரமணி தென்பட்டார்.


அவரோ இவர் பார்த்ததுமே எதுவுமே தெரியாதது போல காரை உயிர்ப்பித்து அங்கிருந்து ஓடியே இருக்க, அந்த இடத்திலேயே மடிந்து அமர்ந்த ராதாவுக்கு அழுகை நிற்கவேயில்லை.


அடுத்தநாள், பாரிஸில் நீண்ட நாட்கள் கழித்து தன் தந்தை வில்லியம் லோரன்ட்டின் வீட்டின் முன் விக்டரின் கார் நிறுத்தப்பட்டது. வாசலிலே இருந்த பெரிய நான்கைந்து படிகளை இரண்டே எட்டுக்களில் கடந்து வீட்டுக்குள் நுழைந்தவன், முன்னே ஹாலில் பெரிதாக மாட்டியிருந்த வில்லியம் மற்றும் மரியாவின் திருமணப் புகைப்படத்தைப் பார்த்து விழிகளை சலிப்பாக உருட்டினான்.


'பொண்டாட்டியே இல்லை, இதுல கல்யாண ஃபோட்டோ' என்று முணுமுணுத்தவன், "ஹேய், ரிமூவ் திஸ்!" என்று அங்கு வேலைப் பார்த்துக்கொண்டிருந்த வேலையாளிடம் கட்டளையாகச் சொல்ல, அவனோ விக்டருக்கே பின்னே தயக்கமாக எட்டிப் பார்த்தான். 


அவனுடைய பார்வை செல்லும் திசையை ஒருகணம் கேள்வி தாங்கிய விழிகளோடுப் பார்த்தவனுக்கு பின் காரணம் புரிய, "டாட்!" என்றழைத்தவாறு விக்டர் திரும்ப, பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை இட்டவாறு அவனைப் பார்த்திருந்தார் வில்லியம்.


"வெல்கம் மை பாய்" என்று வரவேற்றவர், "என் வீட்டுல என் வைஃப் கூட இருக்குற என் ஃபோட்டோவ நீ எப்படி ரிமூவ் பண்ண சொல்லலாம்?" என்று கேட்டார் கொடுப்புக்குள் சிரித்தவாறு.


"இப்போ அவங்க வேறொருத்தன் பொண்டாட்டி" என்று பற்களைக் கடித்துச் சொன்னவாறு அங்கிருந்த சோஃபாவில் அவன் அமர, அவனுக்கெதிரே அமர்ந்து "சோ வாட்! அவ அவளுக்குப் பிடிச்ச வாழ்க்கைய வாழுறா. நான் எனக்கு பிடிச்ச மாதிரி அவளோட மெமரீஸோட வாழுறேன், தட்ஸ் இட்" என்றார் வில்லியம் தன் மனைவியின் படத்தைப் பார்த்தபடி.


"ரொம்ப சில்லித்தனமா இருக்கு. நீங்க பிரிஞ்ச கொஞ்சநாள்லயே அவங்க வேற கல்யாணம் பண்ணிட்டாங்க. பட், நீங்க?" என்று இருபக்கமும் விக்டர் சலிப்பாக தலையாட்டிச் சிரிக்க, "உனக்கு இது புரியாது மை பாய், நீயும் ஒரு பொண்ண காதலிப்பல்ல, அந்த காதல் படுத்துற பாட்டை நீ அனுபவிக்கும் போது இந்த அப்பாவ உனக்கு ஞாபகம் வரும்" என்று சொல்லிவிட்டு அர்த்தம் பொதிந்த பார்வைப் பார்த்தார்.


விக்டருக்கோ எதுவும் புரியவில்லை. "வில் சீ!" என்று அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கியவன், எதேர்ச்சையாகத் திரும்ப அப்போதுதான் முதலாளி சொன்ன வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார் அஃப்ரிம்.


விக்டரைக் கண்டதும் அவருடைய முகம் பளிச்சிட, "அஃப்ரிம்..." என்றழைத்தவாறு எழுந்தவன், "எனக்கு என்கேஜ்மென்ட் ஆக போகுது, கண்டிப்பா நீங்க வரணும்" என்று பட்டென உண்மையை சொல்லிவிட, அவனை நோக்கி வந்துக்கொண்டிருந்தவர் அப்படியே நடையை நிறுத்தி அதிர்ந்து நின்றார் என்றால், வில்லியமோ இரு புருவங்களை ஆச்சரியமாக ஏற்றி இறக்கினார்.


"பெத்த அப்பன் இங்க குத்துக்கல்லாட்டம் இருக்கேன், என்னை கூப்பிடணும்னு தோனல்லையா?" என்று வில்லியம் சலித்துக்கொள்ள, "சாரி டாட், நீங்களும் வந்துடுங்க" என்று தன் இடது கையிலிருந்த ரொலேக்ஸ் கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறுச் சொன்னவன், "அஃப்ரிம், நீங்க என் கூட வாங்க, ஐ ஹேவ் டூ டோக் டூ யூ" என்று அழைத்தவாறு முன்னே சென்றான்.


அஃப்ரிபோ வில்லியமை அதிர்ச்சி குறையாமல் ஒரூ பார்வைப் பார்த்துவிட்டு விக்டரின் பின்னே சென்று பின்சீட்டில் அவனோடு ஏறிக்கொள்ள, சில நிமிடங்கள் இருவரிடத்தே எந்த பேச்சு வார்த்தைகளும் இல்லை.


காரும் சிறிதுநேரம் சென்றுவிட்டது. தானே ஆரம்பிக்கலாம் என்று அஃப்ரிம் நினைத்தார் போலும்!


"நீ ஒரு பொண்ண டேட் பண்ணியிருக்கன்னு என்னால நம்பவே முடியல. உண்மைய சொல்லு விக்டர், இது காதல் கல்யாணம்தானா, இல்லைன்னா..." என்று சந்தேகமாக இழுக்க, "காதலா... இம்பாஸிபள்! இட்ஸ் அ வன் கைன்ட் ஆஃப் பிஸ்னஸ் டீலிங்" என்று சாதாரணமாகச் சொல்ல, அதிர்ந்துவிட்டார் அவர்.


"வாட்! விக்டர் அதூ..." என்று அதிர்ந்த குரலில் அஃப்ரிம் ஏதோ கேட்க வர, அவரை இடைவெட்டி "இது இப்போ நான் கேள்வி கேக்குறதுக்கான நேரம்" என்றவன், "தஷோரியோட அப்பா இந்த அஃப்ரிம்தான்னு எனக்கு தெரிஞ்ச மாதிரி உங்க பொண்ணுக்கு தெரியுமா?" என்று பட்டென்று கேட்டுவிட்டான்.


மேலும் திகைத்தவராய் அவர் தடுமாறியபடி அவனைப் பார்க்க, விழிகளைக் கூர்மையாக்கி அவரை ஆழ்ந்து நோக்கினான் விக்டர்.


 *******************

தஷுரி 14>>>

https://agnitamilnovels.blogspot.com/2024/06/14.html


தஷுரி கதையை கிண்டலில் படிக்க 👇

https://www.amazon.in/dp/B0CN39JKBC?binding=kindle_edition&ref=dbs_dp_awt_sb_pc_tkin


மற்ற கதைகளைப் படிக்க 🏃🏃

India link 👇

https://www.amazon.in/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%95%E0%AE%BF/e/B08ZYCHG6C/ref=dp_byline_cont_ebooks_1

USA link 👇

https://www.amazon.com/%25E0%25AE%25B7%25E0%25AF%2587%25E0%25AE%25B9%25E0%25AE%25BE-%25E0%25AE%25B8%25E0%25AE%2595%25E0%25AE%25BF/e/B08ZYCHG6C%3Fref=dbs_a_mng_rwt_scns_share?ref_=d6k_applink_bb_dls



Comments

Popular posts

தஷுரி 10