தஷுரி 12




உள்ளே நுழைந்ததுமே காவலாளர்களிடம் கண்ணீரோடு சண்டையிட்டுக்கொண்டிருந்த ஹெலனே இவன் விழிகளுக்குச் சிக்க, விக்டரைப் பார்த்ததும், "சார்..." என்று கத்திவிட்டாள் அவள். 


கேள்வியோடு புருவத்தை நெறித்தவாறு அவன் சொடக்கிட, காவலாளர்களின் பார்வை தன் மீது படிந்ததுமே, ஆள்காட்டி விரலால் அவர்களை போகும்படி சைகை செய்தவன், அவளை வரும்படி சொன்னான்.


ஹெலனோ வேகமாக வந்தவள், "சா..சார், தஷுரிய காணோம்" என்று பதற்றமாகச் சொல்ல, ஒருகணம் அதிர்ந்தவன் அடுத்தகணமே முகபாவனையை மாற்றி, "என்னாச்சு?" என்று கேட்டான் அழுத்தமாக.


"அது வந்து... நானும் தஷுரியும் க்ளீன் பண்ணிக்கிட்டு இருக்கும் போதே இவங்கள்ல ஒருத்தர் வந்து தஷுரிய கார்டன க்ளீன் பண்ண கூப்பிட்டாரு. பட், அவன் முகம் ரொம்ப புதுசா இருந்துச்சு. அப்போ அவன் கூட்டிட்டு போகும் போதுதான் நான் கடைசியா தஷுரிய பார்த்தது. அதுக்கப்றம் அந்த கார்டையும் பார்க்கல, தஷுரியையும் பார்க்கல. ரொம்ப நேரமாச்சு, என்ன நடந்..நடந்துச்சுன்னு தெரியல சார்" என்று அவள் நடந்ததை சொல்லி முடிக்க, மேல் அணிந்திருந்த கோட்டைக் கழற்றியவாறு முன்னே நடந்தவன், "அவள கடைசியா பார்த்த நேரம் ஞாபமிருக்கா?" என்று கேட்டான் இறுகிய குரலில்.


"அது ஒரு நாலு இல்லைன்னா நாலரை இருக்கும்" என்று அவளும் சொல்லிக்கொண்டே கிட்டதட்ட அவனுடைய வேக நடைக்கு ஈடுக் கொடுத்து ஓட, விக்டரோ அனைத்து சிசிடீவி கேமராக்களையும் இயக்கும் பிரதான அறைக்குச் சென்றான்.


உள்ளே இவன் நுழைய, சற்றும் இவன் வரவை எதிர்பார்க்காத வேலையாட்கள் அடித்துப் பிடித்து எழுந்து, "சார்..." என்று பதற்றமாக நிற்க, அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாது "மூனு மணிக்கு அப்பறம் நடந்ததை பார்க்கணும், அதுக்கப்பறமான எல்லா சிசிடீவி ஃபுடேஜஸ்ஸயும் எடுங்க" என்று அந்த அறையே அதிரும் வண்ணம் கத்த, அங்கிருந்த வேலையாட்கள் பயம் கலந்த பதற்றத்தோடு வேகமாக அவன் சொன்ன வேலைகளை செய்யத் தொடங்கினர்.


அடுத்த சில கணங்களிலேயே அவன் சொன்ன சிசிடீவி காணொளிப் பதிவுகளை அவர்கள் எடுத்துக் கொடுக்க, இமைக்காது தொடர்ந்து காணொளிகளைப் பார்க்கத் துவங்கினான் விக்டர். நிமிடங்கள் கடக்க கடக்க தஷுரியை அந்த காவலாளி அழைத்துச் செல்லும் காட்சிகள் விக்டரின் விழிகளுக்குச் சிக்க, "சார், இவன்தான்" என்றாள் ஹெலன் வேகமாக.


வீட்டிலிருந்து வெளியேறும் வரைதான் காட்சிகள் இருக்க, அதைக் கவனித்தவன் "கார்டனோட சிசிடீவி ஃபுடேஜஸ் எங்க?" என்று கர்ஜிக்கும் குரலில் கேட்க, "அது சார்... அது... கார்டனோட சிசிடீவி கேமரா ரிபேயர் சார்" என்று திக்கித்திணறி அங்கிருந்த காவளாளி சொல்ல, "ஷிட்!" என்று அங்கிருந்த மேசையில் கைகளைக் கோபமாகக் குத்தினான் விக்டர்.


"ஜேக்கப்!" கோபத்தில் முகம் சிவந்து அவன் பற்களைக் கடிக்க, நெற்றி நரம்புகள் புடைத்து கை முஷ்டிகள் இறுகிப் போயிருந்தன. அங்கிருந்தவர்களுக்கே அவனின் தோற்றத்தைப் பார்த்து கைக்கால்கள் பயத்தில் உதற, சரியாக அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது.


திரையைப் பார்த்தவன், அதில் தெரிந்த எண்ணைப் பார்த்ததும் விழிகளை அழுந்த மூடித் திறந்து தன்னை ஆசுவாசப்படுத்திவிட்டு அழைப்பையேற்றான். 


விக்டர் அழைப்பையேற்றதுமே மறுமுனையில், "ஹெலோ மிஸ்டர்.விக்டர் லோரன்ட், இப்போ நீ எப்படி இருக்கன்னு தெரிஞ்சிக்கலாமா?" என்று விஷம சிரிப்போடு அவனை வெறுப்பேற்றும் வகையில் கேட்க, சில கணங்கள் மௌனமாக இருந்தவன், "இப்போ நான் என்ன பண்ணணும்?" என்று கேட்டான் அழுத்தமாக.


"தட் இஸ் அ கரெக்ட் கொஷன்! ஹாஹாஹா..." என்று கத்திச் சிரித்த ஜேக்கப், "டயமன்ட்ஸ்ஸோட நான் சொல்ற இடத்துக்கு வா" என்று இடத்தைச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்திருக்க, நெற்றியை நீவிவிட்டவாறு சில கணங்கள் யோசித்தவன், விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறினான்.


சில நிமிடங்களிலேயே ஜேக்கப் சொன்ன இடத்திற்கு முன் காரை 'கிரீச்' என்ற சத்தத்தோடு புழுதி பறக்க நிறுத்தியிருந்தான் விக்டர். 


அது ஜேக்கப்பின் சொந்த ஹெலிபேட். அந்த பெரிய மைதானத்தின் நடுவே அவனின் சொந்த விமானம் நிறுத்தப்பட்டிருக்க, அதைப் பார்த்தவாறே விக்டர் காரிலிருந்து இறங்க, விமான படிகளுக்கருகே நின்றிருந்த ஜேக்கப்பின்  காவலாளிகள் தங்களின் பிஸ்டலை தயார் நிலையில் வைத்துக்கொண்டு விக்டரை நெருங்கி அவனை விமானத்திற்குள் அனுப்பி வைத்தனர்.


விமானத்திற்குள் விக்டர் நுழைய, முகமெல்லாம் அழுததில் சிவந்துப்போய் சுற்றி தன்னை நோக்கி குறி வைத்திருக்கும் பிஸ்டலைப் பார்த்து நடுங்கிய நிலையில் தஷுரி உள்ளே அமர்ந்திருக்க, அவளுக்கெதிரே செஸ் விளையாட்டில் காய்களை நகர்த்தியவாறு அமர்ந்திருந்தான் ஜேக்கப்.


விக்டரோ அப்படியே நின்றவன், இத்தனை நேரம் ஏதோ உயிரைக் கையில் பிடித்திருந்தது போல் ஒரு பெருமூச்சைவிட்டு தஷுரியையே பார்த்திருந்தான். அவனுடைய சட்டை வியர்வையில் நனைந்திருக்க, ஏனோ இதுவரை இல்லாத பதற்றம் அவனுக்குள்.


இங்கு ஜேக்கப்போ, "வெல்கம் விக்டர், உன் ஹீரோயினுக்கு விளையாடவே தெரியல. அதான் அவ விளையாட்டையும் சேர்த்து நான் விளையாடிட்டு இருக்கேன்" என்று கேலியாகச் சொல்லி தஷுரியின் கரத்தை மெல்லத் தடவ, அவனோ அடங்க மாட்டாத கோபத்தில் விழிகளை அழுந்த மூடித் திறக்க, தஷுரியோ அவனைக் கண்டதும், "என்னங்க..." என்று அழைத்து விம்மத் தொடங்கிவிட்டாள்.


அவளுடைய கை அங்கிருந்த இருக்கையில் சங்கிலியால் கட்டப்பட்டிருக்க, முன்கோபம் கொண்டு காரியத்தை இழப்பவன் அல்ல அவன். 


கோபத்தை முயன்று அடக்கிக்கொண்டு நிதானமாக சந்தர்ப்பத்தை கையாள நினைத்தவன், ஜேக்கப்புக்கு அருகில் சென்று அமர்ந்து செஸ் போர்ட்டை தன் பக்கம் இழுத்து "இந்த மாதிரி விளையாட்டை எல்லாம் நீ என் கூட விளையாடியிருக்கணும் மிஸ்டர் ஜேக்கப், என் வீட்டு சர்வன்ட் கூட இல்ல" என்றான் அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு.


"இஸ் இட்!" என்ற மற்றவன் காய்களை நகர்த்தத் தொடங்க, விக்டரின் கவனமோ ஒருபக்கம் தஷுரியின் மேலும் இன்னொருபுறம் விளையாட்டிலும் இருந்தது. 


எங்கு தன்னவன் தன்னை அழைத்துச் செல்ல மாட்டானா என்ற ஏக்கத்தோடு தஷுரி விக்டரையே பார்த்திருக்க, சில நிமிடங்களிலேயே "செக் மேட்" என்று ஒரு காயை வீழ்த்தி விளையாட்டை முடித்தான் அவளவன். அவனுடைய இதழ்களில் வெற்றிப் புன்னகை மின்ன, ஜேக்கப்பின் விழிகளோ சிவந்துப்போய் குரூரமாக தன்னெதிரே இருந்தவனைப் பார்த்தன.


"டயமன்ட்ஸ் எங்க?" ஜேக்கப் கூரிய விழிகளோடுக் கேட்க, தன் பாக்கெட்டிலிருந்த சிறிய பையை செஸ் போர்டின் மேலே வைத்த விக்டர், "தஷுரிய விடு!" என்றான் அழுத்தமாக.


"வெயிட்!" என்ற மற்றவன், பையை சரிக்க அதிலிரூந்த அந்த அரிய வகை டயமென்ட் கல் போர்டில் விழுந்து மின்ன, அதைப் பார்த்தவனதும் விழிகள் அதை அடைந்த சந்தோஷத்தில் மின்னின.


விக்டரை ஏளனமாக ஒரு பார்வைப் பார்த்தவாறு, "நீ மொதல்ல போ, உன் ஹீரோயின் உன் பின்னாடியே வருவா" என்றுவிட்டு தன் காவலாளிகளிடம் கண்ணால் சைகை செய்ய, அவனும் எதுவும் பேசாமல் எழுந்து வெளியேறப் போக, "என்னையும் கூடவே கூட்டிட்டு போங்க, பயமா இருக்குங்க எனக்கு" என்று அழ ஆரம்பித்துவிட்டாள் தஷுரி.


அவனோ சற்று நின்று அவளை ஒரு பார்வைப் பார்த்தவன், விறுவிறுவென விமானத்திலிருந்து கீழே இறங்கி தன் காரை நோக்கி நடக்க, அவன் பத்தடி நடந்த பிறகு விமானத்திலிருந்து காவலாளிகளின் பிடியில் வெளியே வந்தாள் அவள். 


அவள் வந்ததை உணர்ந்ததுமே நின்ற இடத்திலிருந்து திரும்பியவன், அவளை நோக்கி வரும்படி சைகை செய்ய, தன்னைப் பிடித்திருந்த காவலாளியின் கரத்தை உதறிவிட்டு விக்டரை நோக்கி ஓடிய தஷுரி அவனை தாவி அணைத்திருந்தாள். பயத்தில் அவளுடைய அணைப்பின் நெருக்கம் கூடிக்கொண்டே போக, தன்னை மீறி அவளை அணைக்கவென கைகளைக் கொண்டு சென்றவன், சட்டென என்ன உணர்ந்தானோ!


கைகளை மீண்டும் இழுத்து தன்னைத்தானே கட்டுப்படுத்தியவாறு அவளை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தினான். தஷுரியோ உதட்டைப் பிதுக்கி பாவமாகப் பார்த்து, "என்னால நீங்க அந்த கல்ல கொடுக்க வேண்டியதா போச்சுல்ல!" என்று குற்றவுணர்வோடுச் சொல்ல, இப்போது விக்டரின் இதழ்களோ விஷமமாகப் புன்னகைத்தன.


"அவ்வளவு சீக்கிரம் யாரும் எனக்கு பிடிச்ச பொருள என்கிட்டயிருந்து பறிச்சிட முடியாது தஷுரி" என்று இங்கு விக்டர் சொல்ல, அங்கு விமானத்திற்குள் தான் கைப்பற்றியதாக நினைத்த வைரக் கல்லை விழிகள் மின்ன பார்த்துக்கொண்டிருந்த ஜேக்கப்பிற்கு திடீரென ஒரு சந்தேகம். 


ஏதோ ஒரு மணிக்கூட்டு சத்தம் போல் அவன் காதுகளுக்கு நீண்ட நேரமாக ஒலித்துக்கொண்டிருக்க, சந்தேகத்தில் தன் கையிலிருந்த வைரக்கல்லை செவிகளுக்கு அருகில் வைத்து சத்தத்தை கவனிக்க ஆரம்பித்தான். 


அப்போதுதான் அவனுடைய மூளைக்கு உரைத்தது. வேகமாக அந்தக் கல்லை அதே இடத்தில் போட்டுவிட்டு விமானத்திலிருந்து தாவி குதித்தவன், "எல்லாரும் ஓடுங்கடா!" என்று கத்திக்கொண்டு முன்னே ஓட, அங்கிருந்து சில காவலாளிகளோ இவனின் அலறல் புரியாது பின்னே ஓடினர்.


ஜேக்கப் நினைத்தது போல் அவன் அங்கிருந்து ஓடிய சில கணங்களிலேயே அந்த கல் வெடித்து விமானத்தின் நடுப்பகுதி முழுவதும் சிதறியிருக்க, அங்கிருந்த மொத்த பேருக்குமே அதிர்ச்சி. ஆனால், ஒருவனைத் தவிர.


அது சாட்சாத் விக்டர்தான்!


பயத்திலும் ஓடி வந்ததிலும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியவாறு தரையில் விழுந்திருந்த ஜேக்கப்பிற்கு முன்னிருந்த விக்டரைக் கவனித்ததும் அத்தனை ஆத்திரம். அவனுக்கு அவனை கொல்லும் அளவிற்கு வெறி உண்டாக, "ஷூட் ஹிம்!" என்று கத்த, அவனுடைய காவலாளிகள் தங்களுடைய பிஸ்டலை எடுத்து அவனை நோக்கி குறி வைத்தவாறு ஓடத் தொடங்கினார்.


ஆனால், அத்தனை சீக்கிரம் விக்டரை நெருங்க முடியுமா என்ன!


தஷுரியின் கரத்தை இறுகப் பற்றி காரை நோக்கி வேகமாக ஓடியவன், காரிற்குள் புகுந்து கதவை மூடி வேகமாக வண்டியை உயிர்ப்பித்து செலுத்தத் தொடங்க, அவர்களின் துப்பாக்கியிலிருந்து வரும் தோட்டாக்கள் யாவும் அவனுடைய விலையுயர்ந்த காரின் புல்லட் ப்ரூஃப் கண்ணாடியில் பட்டு சிதறின. 


தோல்வி தந்த வலியைத் தாங்க முடியாது, "ஆஆ..." என்று ஜேக்கப் கோபத்தில் கத்தினான் என்றால், குறிப்பிட்ட தூரம் வந்த பிறகு காரை ஓரமாக நிறுத்திய விக்டர் அப்போதுதான் தஷுரியை கவனித்தான். 


அவளோ ஏதோ மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டுக்கொண்டிருப்பது போல் விழிகளிலிருந்து விழிநீரோட வலி நிறைந்தப் பார்வையோடு தன்னவனைப் பார்க்க, புரியாது விழிகளைச் சுருக்கி "தஷுரி..." என்று விக்டர் அழைத்ததும்தான் தாமதம், அவன் மேலேயே சரிந்துவிட்டாள் அவள்.


அப்போதுதான் அவளுடைய முதுகில் இறங்கியிருந்த தோட்டாவைக் கவனித்தான் அவன். அவளுடைய கன்னத்தை பதற்றத்தோடு தட்டியவனுக்கு ஏனோ இதயம் நின்று போனது போலாகி மூளை வேலை நிறுத்தம் செய்தது போலிருந்தது. 


சுயநினைவில்லாது கிடப்பவளைப் பார்த்தவனுக்கு மொத்தமும் சூனியமானது போலிருக்க, அடுத்தகணம் முயன்று தன்னை மீட்டி அலைப்பேசி வழியே வைத்தியசாலைக்கு தகவலை சொன்னவன், "எல்லாமே ரெடியா இருக்கணும், கொட் இட்!" என்று கத்திவிட்டு அழைப்பைத் துண்டித்து காரை படுவேகமாகச் செலுத்தினான். 


அவன் சென்ற வேகத்திற்கு சில நிமிடங்களிலேயே கார் வைத்தியசாலையை அடைந்திருக்க, அவனுக்காகவே காத்திருந்த தாதிகள் அவன் நிறுத்திய மறுகணம் அவனுடைய கத்தலுக்கு பயந்தே அவசர அவசரமாக தஷுரியை வைத்தியசாலைக்குள் அழைத்துச் சென்று சிகிச்சைக்கான வேலைகளை ஆரம்பித்தனர்.


சிகிச்சை அறையில் கூட விக்டர் அவளை விட்டு விலகவில்லை. தஷுரிக்கு நேரே முட்டியில் இரு கைகளை சேர்த்து ஊன்றி அமர்ந்திருந்தவன், இம்மியளவும் அவள் மேலிருந்து தன் பார்வையை அகற்றவில்லை.


சிவந்த விழிகளில் லேசாக விழிநீர் எட்டிப் பார்ப்பது போலிருக்க, அதை இமை சிமிட்டி அவன் உள்ளிழுக்க முயற்சித்துக்கொண்டிருக்க, கலைந்த தலைமுடி கசங்கிய சட்டை என பைத்தியக்காரன் போல் விக்டர் இருந்த தோற்றம் அங்கிருந்தவர்களுக்கே புதிதுதான். ஆச்சரியத்தில் அவர்களுக்குள்ளே தஷுரி யாரென்ற கிசுகிசுக்கள் கூட தோன்ற, அவனோ மற்றவர்களின் பார்வையை எல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.


விடயம் தெரிந்து ரோயும் வைத்தியசாலைக்கு வந்து சேர, அப்போதுதான் சிகிச்சை முடிந்து வெளியே வந்தவனைப் பார்த்த ரோய், ஓடிச் சென்று தன் தோழனை அணைத்து, "யூ ஓகே விக்டர்?" என்று கேட்டான் பதற்றமாக.


"ஐ..ஐ அம் ஓகே ரோய், தஷுரிதான்..." என்று விக்டர் சோர்ந்த குரலில் வார்த்தைகளை நிறுத்திவிட, "கேள்விப்பட்டேன், நீ மொதல்ல இங்கயிருந்து வீட்டுக்கு போ, தஷுரிய பார்த்துக்க நான் ஆளுங்கள ஏற்பாடு பண்ணிட்டேன்" என்றான் ரோய் விக்டரின் முகத்தை கூர்ந்துப் பார்த்தபடி.


ஒருகணம் அதிர்நதவன் பின், "இல்லை இருக்கட்டும், அவ மொதல்ல கண்ணு முழிச்சதும் நான் இங்கயிருந்து வரேன்" என்று சொல்ல, "நோ விக்டர், ஆர் யூ ஜோக்கிங்? இதெல்லாம் உனக்கு சேஃபான ப்ளேஸ் கிடையாது. உன்னால மத்தவங்களோட உயிருக்கும் ஆபத்தாகிற கூடாது. சோ..." என்று மற்றவன் புரிய வைக்க முயல, இவன் கேட்டால்தானே!


"ஸ்டாப் ரோய்! என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும், பட், அந்த ஜேக்கப்ப விடக் கூடாது. டூ வாட் ஐ சே!" என்று கறாராகச் சொல்லிவிட்டு தன் திட்டத்தைச் சொன்னவன், அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்துக்கொள்ள, ரோயிற்கு இதெல்லாம் புதிதாகத் தோன்றியது. கூடவே, அத்தனை ஆச்சரியம் அவனுக்குள்.


சில மணித்தியாலங்கள் கழிந்த பின், தஷுரி மெல்ல விழிகளைத் திறக்க, அவளெதிரே பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டவாறு நின்றிருந்தான் விக்டர். 


அவனைப் பார்த்ததுமே அவளுடைய விழிகளிலிருந்து விழிநீரோட, "உங்க..உங்களுக்கு ஒன்னு ஆகலல்ல?" என்று வார்த்தைகளை கஷ்டப்பட்டுக் கோர்த்து அவள் கேட்க, ஒருகணம் விக்டரின் இதயம் அசைவற்று நின்றது, 'தான் இருக்கும் நிலையை யோசிக்காது இப்போதும் தன்னைப் பற்றி கேட்கிறாளே!' என்று.


மெல்ல அவளருகில் வந்தவன், "ஆர் யூ ஓகே?" என்று காற்றுக்கே வலித்துடுமோ என்ற குரலில் மெதுவாகக் கேட்க, "ம்ம்..." என்றவள், "நீங்க என்னை காப்பாத்த வந்ததுக்கு நான் நன்றி சொல்ல போறது கிடையாது. ஐ லவ் யூ!" என்று சொல்லிவிட்டு விழிகளை மூடிக்கொள்ள, அவளை முறைத்துப் பார்த்து "இடியட்!" என்று திட்டியவன், விறுவிறுவென அறையிலிருந்து வெளியேறியிருந்தான்.


அவன் சென்றதை உணர்ந்தவளாய் ஒற்றை விழியைத் திறந்துப் பார்த்தவள், பின் இரு விழிகளையும் முழுதாகத் திறந்து விரக்திப் புன்னகைப் புரிய, வெளியே வந்தவனோ இத்தனை நேரமிருந்த மனநிலையை ஓரங்கட்டி வைத்துவிட்டு உடனே ஜேக்கப்பிற்கு அழைத்தான்.


அப்போதுதான் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்து சோஃபாவில் விழிகளை மூடி அமர்ந்த நிலையில் சாய்ந்திருந்தவனுக்கு விக்டரிடமிருந்து அழைப்பு வர, திரையைப் பார்த்துவிட்டு பற்களைக் கடித்துக்கொண்டு அழைப்பை ஏற்றான்.


"ஹெலோ மிஸ்டர்.ஜேக்கப், எப்படி இருக்கன்னு கேக்க மாட்டேன். அதான் தெரியுமே, நடந்த சம்பவத்தால நீ கண்டிப்பா நல்லா இருக்க மாட்டேன்னு. இருந்தாலும் எனக்கு இது போதாது மேன்" என்று விக்டர் கேலி கலந்த விஷமத்தோடுச் சொல்ல, ஒருகணம் சாய்ந்திருந்த நிலையிலிருந்து வேகமாக எழுந்தமர்ந்த ஜேக்கப்பிற்கு பக்கென்று இருந்தது.


அவன் ஏதோ செய்திருக்கிறான் என்று மட்டும் அவனுடைய மூளைக்கு உரைக்க, "விக்டர், உன்னை சும்மா விட மாட்டேன்டா, என்ன பண்ண?" என்று கிட்டத்தட்ட அவனுடைய வீடே அதிரும் வண்ணம் கத்த, "நான் பண்ணதை நானே எப்படி சொல்றது ஜேக்கப் சார், நியூஸ் உன்னை தேடி வந்துட்டு இருக்கு" என்று இவன் அழைப்பைத் துண்டித்த மறுநொடி அவனுடைய செயலாளரிடமிருந்து அழைப்பு வந்தது ஜேக்கப்பிற்கு.


வேகமாக அழைப்பையேற்றவன், "ஹெலோ..." என்று கூட சொல்லவில்லை, அதற்குள் மறுமுனையில் "சா..சார், உங்க மெய்ன் கெமிக்கல் ஃபேக்டரி ப்ளாஸ்ட் ஆகிட்டு. உள்ள இருந்த மொத்தமும் கருகிட்டு சார்" என்று பதற்றமாகச் சொல்ல, கேள்விப்பட்ட செய்தியால் உண்டான அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப்போய் நின்றவனுக்கு நடப்பு புரிந்ததும் தலையை பிய்த்துக்கொள்ளலாம் போலிருந்தது.


கட்டுக்கடங்காத கோபம், ஆத்திரத்தில் கையிலிருந்த அலைப்பேசியை தரையில் எறிய, அதுவோ சுக்குநூறாக சிதறிக் கிடக்க, இவனுடைய விழிகளோ கோபத்தில் சிவந்து, "விக்டர்!" என்று கொலைவெறியோடு முணுமுணுத்தன.


***************

தஷுரி 13>>>

https://agnitamilnovels.blogspot.com/2024/06/13.html


தஷுரி கதையை கிண்டலில் படிக்க 👇

https://www.amazon.in/dp/B0CN39JKBC?binding=kindle_edition&ref=dbs_dp_awt_sb_pc_tkin


மற்ற கதைகளைப் படிக்க 🏃🏃

India link 👇

https://www.amazon.in/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%95%E0%AE%BF/e/B08ZYCHG6C/ref=dp_byline_cont_ebooks_1

USA link 👇

https://www.amazon.com/%25E0%25AE%25B7%25E0%25AF%2587%25E0%25AE%25B9%25E0%25AE%25BE-%25E0%25AE%25B8%25E0%25AE%2595%25E0%25AE%25BF/e/B08ZYCHG6C%3Fref=dbs_a_mng_rwt_scns_share?ref_=d6k_applink_bb_dls




Comments

Popular posts

தஷுரி 10