யாத்ரன் 23
EPISODE 23
"அதான் ஊரை விட்டு துரத்தியாச்சுல்ல, இவ எப்படி ஊருக்குள்ள வந்திருக்கா? அவள இங்கயிருந்து துரத்திவிடுங்க!"
"ஆமா ஆமா... அந்த மானங்கெட்டவளுக்கு எம்புட்டு தைரியம் இருக்கணும்! ஊரை விட்டு ஒதுக்கி வச்சும் தைரியமா ஊருக்குள்ள நுழைஞ்சிருக்கா"
"அவள யாராச்சும் ஊரை விட்டே அடிச்சு துரத்துங்கடா..."
காரிலிருந்து இறங்கிய ஜான்சியைப் பார்த்ததும் ஆளாளுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர் ஊர் மக்கள்.
"நாம வந்திருக்க கூடாதோ?" என்று ஜான்சி கலங்கிய குரலில் கேட்டவாறு பின்னோக்கி நகர, ஒருசில ஊர்க்காரர்களோ வேகமாக அவர்களை நோக்கி வந்தனர்.
ஆனால், எதற்கும் அசரவில்லை யாத்ரன். ஏற்கனவே இந்த ஊர் மக்கள் மீது கொலைவெறியில் இருப்பவனுக்கு இவர்களை புரட்டியெடுக்க வாய்ப்பு கிடைக்காதா என்றுதான் இருந்தது.
சட்டைக் கையை மடித்து விட்டவாறு அவன் அவர்களை நோக்கிச் செல்லப் போக, "கொஞ்சம் நிறுத்துறீங்களா!" என்ற கத்தல் அந்த இடத்தையே நிரப்பியது.
மொத்தப் பேரும் சத்தம் வந்த திசையை நோக்க, அங்கு நின்றிருந்தார் அர்ச்சனா.
திருமணமாகி இந்த ஊரிற்கு வந்து இத்தனை வருடங்களில் இன்றுதான் வெடித்துக் கத்தியிருக்கிறார் அவர். சொல்லப்போனால் அவர் பேசி கூட சிலபேர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
அந்தளவுக்கு அமைதியாக இருப்பவர் இன்று குரலை உயர்த்தி கத்தியிருக்க, அத்தனை பேருக்கும் அதிர்ச்சிதான்.
"நானும் பார்த்துட்டே இருக்கேன், என்ன நினைச்சுட்டு இருக்கீங்க எல்லாரும்? இவ்வளவு நடந்தும் யாருக்கும் இன்னும் புத்தி வரல்லையா? ச்சீ... உங்களாலதான் என் பொண்ண இத்தனைநாள் பிரிஞ்சிந்தேன், உங்களாலதான் என் புருஷனுக்கும் இந்த நிலைமை" என்று நிறுத்தியவர் அழுகையை அடக்கிக்கொண்டு மீண்டும் பேச்சை தொடர்ந்தார்.
"ஆரம்பத்துலயே இதுக்கான சிகிச்சைய பண்ணியிருந்தா இந்நேரம் பொழைக்கவாச்சும் வாய்ப்பு இருந்திருக்கும். ஆனா பூசாரி பேச்ச கேட்டு மூட நம்பிக்கையால பரிகாரம் அதுஇதுன்னு நேரத்தை கடத்தினதால இப்போ.. காப்பாத்த முடியாத நிலைமைக்கு வந்துருச்சு. இதுக்குமேல என்ன வேணும் உங்களுக்கு? என் குடும்பம் மொத்தமும் நாசமா போனா சும்மா இருப்பீங்களா?"
அவர் மடை திறந்த வெள்ளம் போல் மனதிலிருப்பதை கொட்டித் தீர்க்க, ஊர் மக்களோ அதிர்ச்சியிருந்தே மீளாதவர்களாய் அவரையே பார்த்திருந்தனர்.
"உங்க மூடநம்பிக்கைய இனி உங்க கூடவே வச்சுக்கோங்க, யாராச்சும் ஏதாச்சும் சொன்னீங்கன்னா அவ்வளவுதான்" அவருடைய வார்த்தைகளில் பொதிருந்த அழுத்தமும் ஆக்ரோஷமும் எவரையும் எதிர்பேச்சு பேச விடவில்லை.
சுற்றியிருந்த ஊர் மக்கள் அமைதியாக நின்றிருக்க, விழிகளில் விழிநீரோடு மகளை அணைத்துக்கொண்டவர் ஒரு மூச்சு தன் மனதின் பாரத்தை குறைக்கவென அழுதுத் தீர்த்தார்.
ஜான்சிக்கு தாயின் கதறலை கேட்க முடியவில்லை. மனம் வேதனையில் துடிக்க, "அப்பா எங்கம்மா?" என்று கேட்டாள் வார்த்தைகளைக் கஷ்டப்பட்டு கோர்த்தபடி.
"வா ஜான்சி" என்றவர் அப்போதுதான் யாத்ரனைக் கண்டு, "வாங்க மாப்பிள்ளை" என்றழைத்துச் செல்ல, அவனோ பதிலெதுவும் பேசாமல் அவர் பின்னால் அமைதியாகச் சென்றான்.
அறைக்குள் ஒடுங்கி மெலிந்துப் போய் இருமிக்கொண்டே கட்டிலில் படுத்திருந்த தன் தந்தையைப் பார்த்தவளுக்கு இதயம் வேதனையில் துடித்தது.
"அப்பா..." அவளுடைய குரல் அவரின் காதில் விழுந்ததும் மெல்ல தலையை மட்டும் திருப்பிப் பார்த்தார்.
முதல் தடவை அவருடைய இதழ்கள் மகளைப் பார்த்ததும் புன்னகைத்தன.
முன்பு போல் அவரால் பேச முடியவில்லை. ஆனால் அவருடைய விழிகளிலிருந்த விழிநீரும் வலி நிறைந்த பார்வையும் அவளிடம் மன்னிப்பை வேண்டுவது போல் அவளுக்குத் தோன்றியது.
அருகில் சென்று அவர் கரத்தைப் பற்றிக்கொண்டவளுக்கும் வார்த்தைகள் வர மறுக்க, அழுகை தொண்டையை அடைத்தது.
அத்தருணம் யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அந்த அறை முழுக்க அழுகையும் வலியும் மட்டுமே.
திடீரென சுபாஷ் வேகமாக இருமி இரத்தத்தைக் கக்க, அர்ச்சனாதான் அவரை சுத்தப்படுத்தியது தொடக்கம் அனைத்தையும் செய்தார்.
யாத்ரனோ ஹால் சோஃபாவில் அமர்ந்திருக்க, தண்ணீர் க்ளாஸை கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள் ஜான்சி.
விழிகளை மட்டும் நிமிர்த்தி பார்த்தவன் தன்னை மறந்து தன்னவளையே விழி மூடாமல் பார்த்துக்கொண்டிருக்க, அவனுடைய பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை அவளால்.
உடனே முகத்தைத் திருப்பிக்கொண்டவளுக்கு எங்கு மீண்டும் தன் காதலை அவனிடம் காண்பித்து விடுவேனோ இல்லை அவனுக்கு பிரச்சனையாக இருந்துவிடுவேனோ என்ற தன்னை மீறிய ஒரு பயம் வேறு.
ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு அவள் ஏதோ சொல்ல வர, "ஜானு..." என்ற ருக்மணியின் குரலில் வேகமாகத் திரும்பிப் பார்த்தாள்.
மனதிலிருந்த காயத்திற்கு சிறு மருந்து போட்டுவிட்ட உணர்வு அவளுக்கு..
"ருக்கு..." என்று அழைத்துக்கொண்டு வேகமாக தோழியின் அருகே சென்றவள் அவளை சந்தோஷத்தோடு அணைத்துக்கொள்ள, ஜான்சியை அணைத்து விடுவித்தவள் யாத்ரனை புன்சிரிப்போடு பார்த்தாள்.
"எப்படி இருக்கீங்க அண்ணா?" பழகிய அக்கறையில் அவள் கேட்க, அவன் தலையசைத்ததும் ருக்மணியின் கரத்தைப் பற்றி வெளியே இழுத்துக்கொண்டு சென்றாள் ஜான்சி.
"ஏன்டீ இழுத்துட்டு வர்ற? அவர் என்ன நினைப்பாரு?" என்று ருக்மணி பதற்றமாக சொல்ல, "அதை விடு ருக்கு, இன்னைக்கு அம்மா ரொம்ப கோபமா ஊர்க்காரங்க கிட்ட பேசினாங்க தெரியுமா? எனக்கே ஆச்சரியமா இருந்துச்சு. இங்க என்னதான் நடக்குது?" என்று பதிலுக்கு புரியாமல் கேட்டாள் மற்றவள்.
ருக்மணியோ தோழியை சிறு தயக்கத்தோடு பார்த்துவிட்டு பேச ஆரம்பித்தாள்.
"அது ஜானு... நீ இங்கயிருந்து போன மூனே நள்ல தொடர்ந்து ஒரு வாரமா ஊர்ல மழைதான். அதுமட்டுமில்லாம உங்க அப்பாவ சிகிச்சை எடுக்க விடாம பரிகாரம்னு நேரத்த கடத்தி அந்த வியாதிய முத்த வச்சிருக்கான் அந்த பூசாரி. இதை வச்சே அவன் சொன்னதெல்லா பொய்னு எல்லாருக்குமே தெரிஞ்சு போச்சு. ஏற்கனவே அவனால பழி கொடுத்த ரெண்டு பொண்ணுங்களோட குடும்பமும் அந்த பூசாரி மேல கேஸ் கொடுத்தாங்க.
ஆனா... போலீஸ்காரங்க வந்து பார்க்குறப்போ அவரு தற்கொலை பண்ணிக்கிட்டாரு. என்ன நடந்துச்சுன்னு எதுவுமே தெரியல. இப்போ எல்லா ஊர் முன்ன மாதிரி இல்லடீ, நிறையவே மாறியிருக்கு. இருந்தாலும் சிலர் அப்படியேதான் இருக்காங்க. என்ன பண்றது!"
ஒரூ பெரூமூச்சோடு அவள் நடந்தது மொத்தத்தையும் சொல்லி முடிக்க, ஜான்சியின் மனதிலிருந்த பாரமே குறைந்த உணர்வு.
அடுத்த இரண்டு நாட்கள் தன் தந்தையின் அருகிலேயே இருந்தாள் ஜான்சி.
யாத்ரன் இருக்கும் திசை பக்கமே முடிந்தளவு செல்வதை தவிர்த்தவள் ஒதுங்கியே இருக்க, அதை அவன் மட்டுமல்ல அர்ச்சனாவும் உணரத்தான் செய்தார்.
இரண்டு நாட்கள் கழிந்த நிலையில், "என்னங்க..." என்ற அர்ச்சனாவின் கதறல் அந்த வீட்டையே அதிர வைக்க, அறைக்குள் உறங்கிக்கொண்டிருந்த இருவரும் அடித்துப் பிடித்தெழுந்து சென்று பார்த்தனர்.
சுபாஷோ உயிரற்ற நிலையில் கண்கள் சொருகிப் போய் கிடக்க, யாத்ரனுக்கு புரிந்து போனது.
என்னதான் தந்தை பாசம் காட்டாவிட்டாலும் அவரின் பிரிவு ஜான்சியை சுக்கு நூறாக சிதைத்திருக்க, உச்சகட்ட அதிர்ச்சியில் தளர்ந்து விழப் போனவளை தாங்கிக்கொண்டவன் தன்னோடு அவளை அணைத்துக்கொண்டான்.
அடுத்தடுத்து அவருக்கான காரியங்கள் நடக்க, மொத்த ஊர் மக்களும் அவர்களின் வீட்டு வளாகத்தை சுற்றிதான் நின்றிருந்தனர்.
அர்ச்சனாவும் ஜான்சியும் கண்ணீர் தடங்களோடு சுவற்றோடு சாய்ந்து அமர்ந்திருக்க, அத்தனை காரியங்களையும் வனஜாவிடம் கேட்டு நடத்தி முடித்தான் யாத்ரன்.
அதை வீட்டு பெண்கள் உணர்ந்தார்களோ இல்லையோ ஊர் மக்களுக்கு பெரும் ஆச்சரியம்தான்.
நோய்வாய்ப்பட்டு இறந்ததால் நீண்டநாட்கள் உடலை வைக்காமல் அடுத்தநாள் காலையிலேயே அவருக்கான இறுதி கிரியைகளை முடித்தனர் அனைவரும்.
காரியங்கள் முடிய, கொஞ்சம் கொஞ்சமாக ஊர்மக்களும் சொந்தங்களும் அந்த இடத்தை விட்டு நகர, இப்போது வீடே மயான அமைதி.
யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை, இரண்டு பெண்களும் ஒரு மூலையைப் பிடித்து அமர்ந்திருக்க, யாத்ரனுக்கு என்ன பேசி எப்படி தேற்றுவதென்றே தெரியவில்லை.
அதுவும் ஜான்சியின் விடயத்தில் அவனுக்கு என்ன முடிவுவெடுப்பது என்று கூட தெரியவில்லை.
இப்படியே நான்கைந்து நாட்கள் கழிந்திருக்க அன்று...
சமையலறையில் அர்ச்சனாவும் ஜான்சியும் நின்றுக்கொண்டிருக்க, சப்பாத்தி மாவை பிசைந்தவாறு மகளை கூர்மையாகப் பார்த்தார் பெரியவர்.
"ஜான்சி..." தாயின் அழைப்பில் நிமிர்ந்து என்னவென்று கேள்வியாக அவள் பார்க்க, "நான் ஒன்னு கேக்கட்டுமா?" என்று கேட்டார் அர்ச்சனா.
"என்னம்மா?" ஜான்சிக்கு என்ன கேட்கப் போகிறார் என சுத்தமாகத் தெரியவில்லை.
அவளுடைய புருவங்கள் யோசனையில் முடிச்சிட, "மாப்பிள்ள உன்ன சந்தோஷமா வச்சிருக்காரா, உங்களுக்குள்ள எல்லாமே நல்லாதானே இருக்கு?" என்று கேட்டதும், தூக்கி வாரிப்போட்டது அவளுக்கு.
"ஏ.. ஏன்ம்மா இப்படி கேக்குறீங்க?" ஜான்சியின் வார்த்தைகள் தடுமாறியது. அவள் இந்த கேள்வியை தாயிடம் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
"இல்லம்மா, உங்க கல்யாணம் எந்த சூழ்நிலையில நடந்துச்சுன்னு எனக்கு நல்லாவே தெரியும். மாப்பிள்ளைக்கு இதுல சுத்தமா விருப்பம் இல்ல. போகப் போக எல்லாமே சரியாகிரும்னு நம்பிக்கையிலதான் நானும் உன் திட்டத்துக்கு துணை வந்தேன். ஆனா இப்போ... நீ சந்தோஷமா இல்லயோன்னு தோனுது"
அர்ச்சனாவின் வார்த்தைகளில் அடங்கியிருந்த வலியை ஜான்சி உணராமல் இல்லை.
உடனே அதிர்ச்சியிலிருந்து புன்னகை முகத்திற்கு மாறியவள், "அய்யோ என்னம்மா நீ! அவர் என்னை எவ்வளவு சந்தோஷமா வச்சிருக்காரு தெரியுமா, டுபாய்க்கு போன கொஞ்சநாள்லயே அவர் என்னை ஏத்துக்கிட்டாரும்மா, அத்தை மாமாக்கு கூட என்னை ரொம்ப புடிக்கும். தினமும் நாங்க வெளியில சுத்திட்டே இருப்போம். டுபாய்ல நான் போகாத இடமே இல்லை தெரியுமா? அம்மணியோட மவுசு அப்படி! இது தெரியாம நீ வேற..." என்று வாயிற்கு வந்த பொய்யை அழுகையை அடக்கிக்கொண்டு சொல்லி முடித்தாள்.
மகளின் வார்த்தைகளைக் கேட்டதும் அந்த தாயின் மனமே குளிர்ந்துப் போனது.
"நெஜமாவா ஜானு? ரொம்ப சந்தோஷமா இருக்குடீ, நான்தான் என் வாழ்க்கையில சந்தோஷமா இல்ல, நீயாச்சும் நான் அனுபவிக்காத சந்தோஷத்தையும் சேர்த்து சந்தோஷமா இருக்கணும். அதான்டீ எனக்கு வேணும்"அவர் மனதார சொல்லி முடிக்க, "ஹ்ர்ம் ஹ்ர்ம்.. ஜான்சி" என்ற யாத்ரனின் குரலில் இரு பெண்களும் திரும்பிப் பார்த்தனர்.
அர்ச்சனாவோ ஒதுங்கிக்கொள்ள, வேகமாக அவனைத் தாண்டிச் சென்று ஜான்சி அறைக்குள் நுழைந்துக்கொண்டதும், யாத்ரனும் பின்னாலயே சென்றான்.
"ஜான்சி அது... நான் உன்ன ரொம்ப.." அவன் இத்தனை நாட்களிலிருந்த குற்றவுணர்ச்சியில் தயங்கித் தயங்கி மன்னிப்பு கேட்க வர, அவனை குறுக்கிட்டாள் அவள்.
"நீங்க இந்த ஊரை விட்டு கெளம்புங்க" பட்டென்று அவள் சொல்லவும் முதலில் புரியாது விழித்தவன், "என்ன சொன்ன?" என்ற சந்தேகத்தில் மீண்டும் கேட்டான்.
"உங்க ஊருக்கே உங்கள போக சொல்றேங்க, இனி என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. அதுமட்டுமில்ல நீங்க.. நீங்க தாராளமா எனக்கு விவாகரத்து கொடுக்கலாம்"
இந்த வார்த்தைகளை சொல்லும் போது அவளுடைய குரல் தழுதழுத்தது. முயன்று அழுகையை அடக்கிக்கொண்டாள் ஜான்சி.
யாத்ரனுக்கும் இது அதிர்ச்சிதான். அவளிடத்தில் இத்தகைய முடிவை அவன் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
"அப்போ நீ?" என்று தன் மனதில் எழுந்த கேள்வியை அவன் கேட்டுவிட, "நா.. நான் அம்மா கூட இங்கேயே இருந்துருவேன். இப்போதைக்கு அவங்களுக்கு எதுவும் தெரிய வேணாம், கொஞ்சநாள்ல நானே அவங்களுக்கு எல்லா உண்மையும் சொல்லுவேன். நீங்க நாளைக்கே கெளம்புறதுன்னாலும் எனக்.. எனக்கு சம்மதம்தான். கட்டாயப்படுத்தி எந்த உறவுலயும் யாரையும் இணைக்க முடியாதுன்னு இப்போ புரிஞ்சுக்கிட்டேன். உங்கள கஷ்டப்படுத்தினதுக்கு என்.. என்னை மன்னிச்சிடுங்க" என்று முடித்தவள் கண்ணீரோடு கைக்கூப்பினாள்.
யாத்ரன் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்தோடு அவளையே வெறித்துப் பார்த்திருந்தவனுக்கு தன் மனதின் ஓரத்தில் தோன்றிய வலிக்கு காரணம்தான் தெரியவில்லை.
ஏதோ அடி வயிற்றிலிருந்து கிளம்பி தொண்டையை அடைப்பது போலிருக்க, அந்த உணர்வின் தாக்கத்தை தாங்க முடியாதவனாய் வேகமாக அங்கிருந்து வெளியேறி வேக மூச்சுக்களை எடுத்துவிட்டான்.
அவன் சென்றதுமே அறையிலிருந்த ஜான்சியின் விழிகளிலிருந்து அருவியாய் விழிநீர் ஓட, அப்படியே மண்டியிட்டு அமர்ந்தவள் தன் வலியை போக்கிக்கொள்ள குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
ஆனால், காதல் வலி அழுகையை கூட்டியதே தவிர கொஞ்சமும் அவளின் வலியை குறைக்கவில்லை.
அன்றைய நாள் முழுக்க யாத்ரனும் ஜான்சியும் பார்த்துக்கொள்வதையே தவிர்த்திருக்க, அடுத்தநாளும் விடிந்தது.
***********
யாவும் நின் யாத்ரனாய்.. EPISODE 24
👇👇
https://agnitamilnovels.blogspot.com/2026/05/24.html
🍁 என்னோட நான்கு ஆன்டி ஹீரோ கதைகளான தஷுரி, ரதியின் ரணதீரன்,
கனவுகள் கனலாய் மாறுமா, வேல்விழி மொழிகள் Papr space தளத்துல இருக்கு..
Here's the link 👇
https://papr.space/sheha-zaki/696e0bb131a61076ffe69ad4
🍁என்னோட கதைகள ஆடியோ வடிவுல கேக்கணும்னா இதோ என்னோட யூடியூப் சேனலுக்கான லிங்க்.. (இப்போ காதல்போதையடா நீ எனக்கு நாவல் ஆடியோ வடிவுல போயிக்கிட்டு இருக்கு)
Channel name - kadhaikulla polaama
channel link 👇
https://youtube.com/@kadhaikullapolaama99?si=ZIbEQ6qPd-b7cg-b
🍁கதைகள் பற்றிய அப்டேட்ஸ்ஸ உடனே தெரிஞ்சுக்கணும்னா என்னோட wtsapp channel link
👇
https://whatsapp.com/channel/0029Va4TuVo17En3RyHQMj2v
-Shehazaki 🙌

Comments
Post a Comment