யாத்ரன் 24

யாவும் நின் யாத்ரனாய்..

 EPISODE 24





விடிந்ததுமே ஊரை விட்டு சென்றுவிட்டான் யாத்ரன்.


அவன் முன்னே முடிந்தளவுக்கு அழுகையை அடக்கியிருந்தவள் அவன் அமர்ந்திருந்த கார் கண்ணிலிருந்து மறைந்ததும் அறையை நோக்கி ஓடினாள்.


அர்ச்சனாவுக்கு ஏதோ சரியில்லை என்று மட்டும் நன்றாகத் தெரிந்தது. ஆனால், மகளிடம் கேட்கவில்லை அவர்.


அறையை தாழிட்டு கதவிலேயே சாய்ந்தமர்ந்த ஜான்சி, கால்களை கட்டிக்கொண்டு வாயைப் பொத்தி ஏங்கி ஏங்கி அழுதாள். அவளால் இந்த வலியை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.


காதல் இத்தனை வலியை கொடுக்குமென்று தெரிருந்திருந்தால் அந்த திசை பக்கமே சென்றிருக்க மாட்டாளோ என்னவோ!


அதேநேரம் இங்கு காரில் சென்றுக்கொண்டிருந்த யாத்ரனின் முகம் பாறைப் போல் இறுகிப் போயிருந்தது. 


'அவ என்னை விட்டு போகணும்னுதானே நான் எதிர்பார்த்துட்டு இருந்தேன். இப்போ அவளே என் வாழ்க்கைய விட்டு போயிட்டா, ஆனா நா.. நான் என்ன யோசிச்சிக்கிட்டு இருக்கேன்?' 


தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டவனுக்கு தன் கேள்விகளுக்கான பதில்தான் தெரியவில்லை.


அவனுக்குள் ஏனென்று தெரியாத கோபம் வேறு.. உணர்ச்சிகளை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டு தன் நாட்டிற்கு போய் சேர்ந்தவன் வீட்டிற்குள் நுழைய, சோஃபாவில் அமர்ந்திருந்த விதுஷாவோ மகனை புரியாமல் பார்த்தார்.


ஏதோ ஒரு ஆர்வத்தோடு பின்னால் எட்டிப் பார்த்தவர், "அவ எங்க?" என்று ஜான்சியைத் தேடியவாறுக் கேட்க, சட்டென நின்றவன், தன் தாயை வெறித்துப் பார்த்தான்.


"இனி... இனி அவ வர மாட்டாம்மா, விவாகரத்து தர சொல்லிட்டா. ஐ அம் சோ ஹேப்பீ, அவளே என் லைஃப விட்டு போயிட்டா" 


வராத சிரிப்பை வரவழைத்து மரத்த  குரலில் பேசிவிட்டு அவன் அறைக்குச்  சென்றிருக்க, விதுஷாவுக்கு ஒரு நிமிடம் எதுவுமே புரியவில்லை.


அவன் சொன்ன வார்த்தைகள் இத்தனைநாள் அவன் எதிர்பார்த்ததுதான் என அவர் அறிந்ததே. ஆனால் இப்போது யாத்ரனின் வார்த்தைகளுக்கும் அவனின் விழிகளில் தெரிந்த உணர்ச்சிக்கும் மலையளவு வித்தியாசம் தெரிந்தது அவருக்கு.


தன் அரசாங்க வேலையில் பல குற்றவாளிகளை சந்திப்பவர் அவர், இதை கூட புரிந்துக்கொள்ள மாட்டாரா என்ன!


அடுத்து வந்த நாட்கள் ஏதோ நடை பிணம் போல அலைந்துக்கொண்டிருந்தான் யாத்ரன். 


காலையில் வேலைக்கு செல்பவன் வேலை விட்டு வந்ததுமே அறைக்குள் அடைந்துக்கொள்வான், இப்படியே அவனுடைய நாட்கள் ஓட மகனின் நடவடிக்கையில் விதுஷாவுக்குதான் யோசனையும் குழப்பமும் சூழ்ந்துக்கொண்டது.


கிட்டத்தட்ட ஒரு வாரம் கழிந்திருக்க, தோட்டத்தில் சிகரெட் புகையை ஊதித் தள்ளியவாறு நடந்துக்கொண்டிருந்தான் அவன்.


சில நிமிடங்கள் அவனை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டு நின்றிருந்த விதுஷா, மெல்ல மகனின் அருகில் வந்து "யாத்ரா..." என்றழைத்தார் தயக்கத்தோடு.


உடனே சிகரெட்டை கீழே போட்டு திரும்பி நின்றுக்கொண்டவன், "வாட்?" என்று இறுகிய குரலில் கேட்க, "நீ ஜான்சிய விட்டுட்டு வந்ததுலயிருந்து ஒரு மாதிரியா இருக்க, என்னாச்சு யாத்ரா? என்கிட்ட என்னன்னாலும் சொல்லு" என்று கேட்டார் அக்கறையோடு.


யாத்ரனோ கை முஷ்டியை இறுக்கிக்கொண்டவன் சட்டென திரும்பி விதுஷாவை முறைத்துப் பார்த்தான்.


"அட உங்களுக்கு என்மேல இவ்வளவு பாசமா, இது தெரியாம போச்சே! ஃபர்ஸ் டைம் இன் மை லைஃப், நீங்க என்கிட்ட இவ்வளவு அக்கறையோட பேசுறீங்க" ஏளனப் புன்னகையோடு சொன்னவன், "நான் சந்தோஷமாதான் இருக்கேன், என் லைஃப்ல பர்ஃபெக்டே இல்லாத எதுவுமே எனக்கு வேணாம். அவளும் சரி நீங்களும் சரி. இதுக்கப்பறம் பாசம் இருக்குற மாதிரி நடிக்க ட்ரை பண்ணாதீங்க, செட் ஆகல" என்று நாக்கில் விஷத்தை தடவியது போல பேசினான்.


விதுஷாவோ இதை எதிர்பார்க்காது ஆடிப்போய் நின்றிருக்க, தாயின் முகத்தையும் பார்க்காமல் அங்கிருந்து வெளியேறினான் யாத்ரன்.


மனம் மகனின் வார்த்தைகளால் வேதனையில் துடிக்க, அழுகையை அடக்கிக்கொண்டு அறைக்குச் சென்றவர் விழிகளிலிருந்து வழியும் கண்ணீரைத் துடைத்தபடி அமர்ந்திருந்தார்.


"என்னாச்சு விது, ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்று கேட்டுக்கொண்டே மனைவியின் பக்கத்தில் ராஜ்தீப் அமர்ந்துக்கொள்ள, "ஒன்னு இல்லங்க.." என்று மட்டும் சொன்னவர் கணவனின் தோளில் ஆறுதலாக சாய்ந்துக்கொண்டார்.


வேலை பணம் என்றே எப்போதும் குறியாக இருக்கும் மனைவியிடம் இத்தகைய மாற்றத்தை சில நாட்களாக உணரும் ராஜ்தீப்பிற்கு இதுவே ஆச்சரியமாகத்தான் இருந்தது.


மனைவியின் நாடியில் விரலை வைத்து நிமிர்த்தி தன் முகத்தை காணச் செய்தவர், "நீ எப்போவும் இப்படி இருக்க மாட்டியே, ஸ்ட்ரோங்கா ரொம்ப பால்டா தான் உன்ன நான் அதிகமா பார்த்திருக்கேன். இப்படி பார்க்கும் போது நல்லா இல்ல" என்று மனைவியை தேற்றவென சொல்ல, சிரிக்க முயன்று முடியாமல் வெடித்து அழுதுவிட்டார் அவர்.


"நா.. நான் என்னங்க பாவம் பண்ணேன்? அவன் ஏன் என்னை ஏதோ எதிரி மாதிரி நடத்துறான். அவன் நல்லா இருக்கணும்னுதானே இத்தனையும் பண்ணேன், நான் அவன் வயசுல அனுபவிச்ச கஷ்டத்த அவன் அனுபவிக்க கூடாதுன்னு நினைச்சேன், ஆனா... எல்லாமே தலை கீழா இருக்கு ராஜ்" 


வார்த்தைகளைக் கோர்த்து விம்மி விம்மி அழுதபடி விதுஷா பேசி முடிக்க, ராஜ்தீப்பிற்கு அனைத்தும் புரிந்தது.


"பணம் விஷயத்துல அவனுக்கு நீ எந்த குறையும் வச்சதில்லதான். ஆனா... என்னைக்கும் பாசம் காட்டினதில்லயே விது! அப்போ அவனோட கோபம் நியாயம்தானே" அவர் பட்டென்று கேட்க, கணவனை அதிர்ந்துப் பார்த்தவருக்கு அழுகை தொண்டையை அடைத்தது.


"என்னதான் சம்பாதிச்சாலும் நீ அவன் கூட இருக்குற மாதிரி நீ அவனுக்கு ஊட்டி விடுற மாதிரி இருக்காது விது. அவன் அதைதான் எதிர்பார்த்திருக்கான். உன்மேல இருக்குற கோபத்தால என்னையும் அவன் பக்கத்துல நெருங்க விடல. இப்போ யோசிச்சு பயனில்ல"


மகனுடனான விரிசலுக்கான காரணம் விதுஷாவுக்கு நன்றாவே புரிந்தது. ஆனால், காலம் சென்றுவிட்டது.


காலத்தை பின்னோக்கி கடத்த முடியுமென்றால் செய்வாரோ என்னவோ!


அதேநேரம் க்ளப்பில் அடுத்தடுத்தென்று மதுக்குவளைகளை வாயில் சரித்துக்கொண்டிருந்தான் யாத்ரன்.


'நீ அப்படி பேசியிருக்க கூடாது யாத்ரா, தப்பு, ரொம்ப பெரிய தப்பு. கோபம் வரும் போது எங்க நான் வார்த்தைய விட்டுருவேனோன்னு அவங்கள விட்டு தள்ளியே இருந்தேன். ஆனா இன்னைக்கு... நா.. நான் ஏன் இப்படி நடந்துக்கிட்டேன்? ச்சே! பைத்தியம் புடிக்கிற மாதிரி இருக்கு' 


அரை போதையில் தனக்குள்ளேயே புலம்பிக்கொண்டிருந்தான் அவன். ஏதோ ஒன்று வெறுமையான உணர்வு அவனுக்குள்.


அந்த உணர்வு கொடுக்கும் வலி அவனுக்குள் கோபத்தை தூண்ட,  தன்னைத்தானே வெறுத்தான் யாத்ரன்.


சரியாக, "ஹேய் யாத்ரா, வந்ததுலயிருந்து ஒரு மாதிரியா இருக்க, கம்.. நான் உன்ன சரிபடுத்துறேன்" என்று குழைந்துக்கொண்டே அவனின் க்ளப் தோழியொருத்தி அழைக்க, அவனோ மறுத்து தலையசைத்தான்.


"நொட் இன்டர்ஸ்டட்" என்றுவிட்டு அவன் திரும்பிக்கொள்ள, அந்த யுவதியோ அவனை விட்டபாடில்லை.


"ஹேய் கம் ஆன்! அதான் நான்..." அவள் அவனின் கரத்தைப் பற்றியிழுக்க, "இன்டரஸ்ட் இல்லன்னு சொன்னேன்" என்றவனின் வார்த்தைகள் அழுத்தமாக வந்தன.


அந்த பெண்ணோ கப்சிப்பென்று வாயை மூடிக்கொண்டு பின்னே நகர, திடீரென ஒரு குரல் கேட்டது.


"அதான் வேணாம்னு சொல்றான்ல, கிடைக்குற கேப்ல கடா வெட்ட வேண்டியது. போம்மா... அவனுக்கு இப்போ ஒரு நல்ல நண்பன்தான் தேவை. சொந்தமென்ன பந்தமென்ன போனால் என்ன வந்தால் என்ன..." என்று பாடிக்கொண்டே யாத்ரனின் அருகே வந்தமர்ந்தான் வரதன்.


யாத்ரன் எதுவும் பேசவில்லை. மதுவை வாயில் சரித்த வண்ணம் எங்கோ வெறித்துக்கொண்டிருக்க, "என்னாச்சு?" என்று அவன் முகத்தை கூர்மையாகப் பார்த்த வண்ணம் கேட்டான் மற்றவன்.


"தெரியல. அவ என்னை விட்டு போகணும்னு நினைச்சேன். ஆனா விட்டு வந்ததுலயிருந்து நான் நானாவே இல்ல வரதா" என்றவனின் வார்த்தைகளில் அத்தனை குழப்பம் நிறைந்திருக்க, 'இதுதான் லவ்வுன்னு இவனுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன்?' உள்ளுக்குள் நினைத்து மானசீகமாக தலையிலடித்துக் கொண்டான் வரதன்.


"டேய் யாத்ரா, நான் ஒன்னு சொல்லட்டுமா, உனக்கு ஜான்சிய பிடிச்சிருக்கு. ஆனா நீ ஏத்துக்க மாட்டேங்குற அவ்வளவுதான்" என்று மற்றவன் கெஞ்சாத குறையாக சொல்ல, "இல்ல, அதுக்கு வாய்ப்பே இல்ல.. நான் அவள என் வைஃப்பா ஏத்துக்கல. நீயா ஏதாவது சொல்லி இன்னும் என்னை குழப்பாத!" என்றான் யாத்ரன் எரிச்சலாக.


வரதனுக்கு அய்யோ என்றிருந்தது. சலிப்பாக விழிகளை உருட்டிக்கொண்டான் அவன்.


"அதுமட்டுமில்ல வரதா, நா.. நான் ஒரு பொண்ண லவ் பண்றேன். அப்படி இருக்குறப்போ ஜான்சிய என்னால எப்படி ஏத்துக்க முடியும்?" என்று அவன் தன் கனவு தேவதையை நினைத்தபடி சொல்ல, மற்றவனுக்கோ தூக்கி வாரிப்போட்டது.


"எதே? யா.. யாருடா அது?" வார்த்தைகள் தந்தியடிக்க யாரென்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் கேட்டான் அவனுடைய தோழன்.


"அது... அது வந்து... என் கனவுல அடிக்கடி ஒரு ப்ரின்ஸஸ் வருவான்னு சொல்வேன்ல, அவளதான் நான்..." என்று அவன் இழுத்த இழுப்பில் இப்போது வரதனுக்கு தலை சுற்றிவிட்டது.


தோழனின் கையிலிருந்த மதுக்குவளையை பிடுங்கி மடமடவென இவன் வாயில் சரித்துவிட்டு தலையைத் தாங்கிய வண்ணம் அமர்ந்திருக்க, அவனை புரியாமல் பார்த்தான் யாத்ரன்.


"என்னாச்சு வரதா?" எதுவுமே தெரியாதது போல இவன் கேட்ட விதத்தில் வரதனுக்கு சுர்ரென்று கோபம் எகிற, "உன்னெல்லா... அவள நீ ஊர்ல விட்டுட்டு வந்ததுக்கு பதிலா நீ ஒரு நல்ல மென்டல் ஹாஸ்பிடல் போயிருக்கலாம். முட்டாள் முட்டாள்" என்று கத்திக்கொண்டே போனான்.


ஒற்றைப் புருவத்தை தூக்கி முறைத்து பார்த்துவிட்டு யாத்ரன் முகத்தை திருப்பிக்கொள்ள, "உன் ப்ரைன் என்ன எக்ஸ்பயரி ஆகிருச்சா? கனவுல வர்ற பொண்ண காதலிக்கிறேன்னு சொல்ற, புரிஞ்சிருக்கு.. எனக்கு கன்ஃபார்மா புரிஞ்சிருக்கு. உனக்கு பில்லி சூனியம் வச்சிக்காங்க. அதான் நீ இப்படியெல்லா நடந்துக்குறா. கோயிலுக்கு போய் விபூதி அடிச்சா எல்லா சரியாகிரும்"  என்று பொரிந்துக்கொண்டே சென்றவனுக்கு கோபம்தான் அடங்கியபாடில்லை.


"ஷட் அப் யூ இடியட்! என்னோட ஃபீலிங்ஸ் உனக்கென்ன அறிவுகெட்டதனா இருக்கா? ஆரம்பத்துல நானுமே இந்த ட்ரீம்ஸ்ஸ வெறுத்தேன், ஆனா இப்போ... ஐ லவ் தட், அந்த நினைவுகள நான் ரொம்ப லவ் பண்றேன்" 


யாத்ரன் விழிகளில் காதலோடு சொல்லிக்கொண்டு போக, எங்கேயாவது போய் முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது மற்றவனுக்கு.


பெருமூச்சுக்களை இழுத்துவிட்டு தன்னை நிதானப்படுத்தியவன் பொறுமையை இழுத்துப் பிடித்து பேச ஆரம்பித்தான்.


"யாத்ரா, யாரோ கனவுல வர்ற பொண்ணுக்காக நிஜத்துல உன்ன காதலிக்கிற ஜான்சிய விட போறியா? இது முட்டாள்தனமா இல்லையா? நீ தப்பு பண்றடா" என்று வரதன் வார்த்தைகளில் அழுத்தத்தோடு சொல்ல, புருவ முடிச்சுகளோடு தரையை வெறித்திருந்தான் மற்றவன்.


ஏனோ அவன் மனம் மதில் மேல் பூனையாய் தத்தளித்தது. 


உணர்ச்சிக் குவியலில் தத்தளித்தவனுக்கு மூச்சுக்கே சிரமப்படுவது போலிருக்க, அதற்குமேல் அங்கிருக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.


போகும் தன் தோழனை வரதன் பரிதாபத்தோடு பார்த்து நிற்க, போர்டிகாவில் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் யாத்ரன்.


அவன் வந்த நேரம் வீடே மயான அமைதி. ஆனால், ஜான்சியின் வளவள பேச்சு மட்டும் எங்கோ தூரத்திலிருந்து ஒலிப்பது போல அவனுக்குள் ஒரு உணர்வு.


விழிகளை அழுந்த மூடித் திறந்தவன் உடையைக் கூட மாற்றாது அப்படியே கட்டிலில் சரிய, தூக்கம் ஆழத்திற்கு செல்லச் செல்ல அந்த கனவுலகத்துக்குள் நுழைந்தான் யாத்ரன்.



************


என்னோட நான்கு ஆன்டி ஹீரோ கதைகளான தஷுரி, ரதியின் ரணதீரன்,

கனவுகள் கனலாய் மாறுமா, வேல்விழி மொழிகள் Papr space தளத்துல இருக்கு.. 


Here's the link 👇

https://papr.space/sheha-zaki/696e0bb131a61076ffe69ad4



🍁என்னோட கதைகள ஆடியோ வடிவுல கேக்கணும்னா இதோ என்னோட யூடியூப் சேனலுக்கான லிங்க்..  (இப்போ காதல்போதையடா நீ எனக்கு நாவல் ஆடியோ வடிவுல போயிக்கிட்டு இருக்கு)


Channel name - kadhaikulla polaama


channel link 👇

https://youtube.com/@kadhaikullapolaama99?si=ZIbEQ6qPd-b7cg-b



🍁கதைகள் பற்றிய அப்டேட்ஸ்ஸ உடனே தெரிஞ்சுக்கணும்னா என்னோட  wtsapp channel link

👇

https://whatsapp.com/channel/0029Va4TuVo17En3RyHQMj2v



-Shehazaki 🙌

Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚