யாத்ரன் 20

 யாவும் நின் யாத்ரனாய்..

 EPISODE 20





ஏற்கனவே தாமதமாகி விட்டது. பதறிப் பதறி தயாராகிக் கொண்டிருந்தவனுக்கு அப்போதுதான் காலை நடைப் பயிற்சி முடிந்து அலைப்பேசியை சோஃபாவில் விட்டது ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது.


நெற்றியில் வெளிப்படையாக அடித்துக்கொண்டவன் வேகமாக அறையிலிருந்து வெளியேறி அதை எடுக்கப் போக, விதுஷாவோ மகனைப் பிடித்துக்கொண்டு அவனின் அவசரம் புரிராமல் வழவழக்க ஆரம்பித்துவிட்டார்.


அதேநேரம் யாத்ரன் இருப்பதை அறியாது அறைக்குள் நுழைந்தாள் ஜான்சி.


"இந்த வீட்டுல தொலைஞ்சு போனா கூட கண்டுபிடிக்க வருஷ கணக்காகும் போல. எத்தனை ரூமு, எத்தனை படிக்கட்டு. ஸப்பாஹ்... முடியல. அதுவும் ஒரு பால் க்ளாஸ வச்சுக்கிட்டு லோலோன்னு அலைய வேண்டியதா இருக்கு. ச்சே!" 


புலம்பிக்கொண்டே அறைக்குள் நுழைந்தவள் உள்ளே யாரும் இல்லாததைப் பார்த்து மானசீகமாக தலையிலடித்துக்கொண்டாள்.


"அச்சச்சோ! அவர் போயிட்டாரு போலயே, என்ன சொல்லாம கொல்லாம கெளம்பிட்டாரு?" என்று அவள் வாய்விட்டு கேட்க, 'என்னைக்கு அவன் சொல்லிட்டு போயிருக்கான், இஷ்டத்துக்கு கதையடிக்குற' என பதிலுக்கு கேலி செய்தது அவளுடைய மனசாட்சி.


அதை ஓரந் தள்ளியவள் சலிப்பாக தலையாட்டியவாறு வெளியேறப் போக, கீழே விரித்திருந்த உயர்ரக கார்பட்டில் வழுக்கி விழுந்தவளின் மீது க்ளாஸிலிருந்த மொத்த பாலும் கொட்டியிருந்தது.


"அச்சச்சோ... என்ன இப்படி ஆகிருச்சு" என்று தலையிலேயே கை வைத்துக்கொண்டவள் உடனே அறையிலிருந்த குளியலறைக்குள் புகுந்து கழுவிவிட்டு வர ஆடையோ நனைந்து உடலோடு ஒட்டிப் போயிருந்தது.


"இப்படி வெளியில போனா மானமே போயிரும், என் வீட்டுக்காரரு எப்போ வேணா என்னை ரூம்ம விட்டு துரத்துவாங்குற பயத்துல என் ட்ரெஸ்ஸு மூட்டைய அடுத்த ரூம்லதான் வச்சிருக்கேன். அய்யோ இப்போ என்ன பண்றது?"


அடுத்து என்ன செய்வதென்று தெரியாது புலம்பிய வண்ணம் நின்றுக்கொண்டிருந்தவளுக்கு ஒரு யோசனைத் தோன்ற, அடுத்தகணமே அதை செய்துவிட்டு சாவகாசமாக அமர்ந்திருந்தாள் ஜான்சி


ஆனால் கதவை தாழ்பாள் போடாமல் விட்டது அவள் தவறாகிப் போக, எப்படியோ தாயிடமிருந்து தப்பித்து அறைக்குள் சடாரென நுழைந்தான் யாத்ரன்.


உள்ளே நுழைந்தவனுக்கு பாதி முட்டி வரையேயான தன் ஷர்ட்டில் அறைக்குள்ளிருந்த சுழலும் நாற்காலியில் ஒய்யாரமாக அமர்ந்து அணைத்து வைக்கப்பட்டிருந்த லேப்டாப்பில் டைப் செய்வது போல பாவனை செய்துக்கொண்டிருந்தவளைக் காண அதிர்ச்சியாக இருந்தது.


அவளோ அவன் வந்ததையும் அறியாமல், "யூ கம்.. ஓகே ஓகே ஐ கோ.. கால் மீ கால்... வெயார் யூ.. ஓஹோ ஓகே ஓகே" என வாயிற்கு வந்த ஆங்கிலத்தை பேசி அவனைபோல  நடித்துக் காட்டிக்கொண்டிருந்தாள்.


வாசலில் நின்றவாறு அவளைப் பார்த்திருந்த யாத்ரனோ தன்னை மீறி அவளுடைய பாவனைகளை ரசிக்க ஆரம்பித்தான்.


மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியவாறு அவன் வாசலில் சாய்ந்து நிற்க, ஊசி துளைக்கும் பார்வையில் விருட்டென திரும்பிப் பார்த்தாள் ஜான்சி.


அடுத்தகணம் அவளுக்கு தூக்கி வாரிப்போட, பதறியடித்துக்கொண்டு எழுந்தவள் அணிந்திருந்த சட்டையை கிழித்து விடாத குறையாக நெளிந்துக்கொண்டே மேலும் கீழே இழுத்துவிட்டாள்.


"மேடம் என்ன பண்றீங்க?" கேலியாகக் கேட்டுக்கொண்டே அவன் அவளருகில் வர, "அது... அது வந்து..." திக்கித்திணறி சொன்னவளின் பார்வை அங்கு பால்கனியில் காய விட்டிருந்த தன் சேலை மீது படிந்தது.


ஆனால், யாத்ரனின் பார்வையோ அவளுடலைதான் ஒரு ஆண்மகனாக அளவிட்டுக் கொண்டிருந்தது.


முட்டி வரையேயான தன் ஷர்ட்டில் தேவதையென காட்சியளித்தவள் அவனுடைய உணர்ச்சிகளை தாராளமாக தூண்டிவிட்டாள்.


பெண்களுடன் பழகாதவன் இல்லை அவன். அவனோடு நெருங்கும் பெண்களிடம் என்னதான் நெருங்கி பழகினாலும் ஒருகட்டத்திற்கு மேல் அவர்களிடம் எல்லை மீற மாட்டான்.


ஆனால், இவளிடம் மட்டும் ஏனென்று தெரியாத ஒரு ஆர்வம் அவனுக்குள் எழுந்தது.


மறைக்க மறைக்க ஆர்வம் தூண்டுமே அதனாலா இல்லை அவள் கழுத்தில் அவன் கட்டியிருந்த மாங்கல்யத்தினால் உண்டான உரிமையினாலா என்றுதான் தெரியவில்லை.


நடப்பை மறந்து அவன் அவளை நெருங்க, ஜான்சிக்கு கால்கள் செயலிழந்து விட்டது போலிருந்தது.


'செல்..' என்று மூளை எச்சரித்தாலும் மனம் அவனின் நெருக்கத்தை விரும்பி அவளுடைய கால்களை அசைய விடாமல் செய்தது.


இருவரின் மூச்சுக்காற்றும் கலக்கும் தூரம் அது. அவனின் சூடான மூச்சுக்காற்று அவளின் நெற்றியில் மோத, அந்த உஷ்ணத்தை உணர்ந்தவளோ தலையை குனிந்துக்கொண்டாள்.


அவளின் நாடியை பற்றி மெல்ல அவள் முகத்தை நிமிர்த்திய யாத்ரனின் மறுகரம் அவளின் இடையை வளைத்து அவனருகே இழுத்துக்கொண்டது.


அதையுணர்ந்து அவள் அதிர்வதற்குள் அடுத்த அதிர்ச்சியாக அவனுடைய இதழ் அவளிதழை உரச, ஜான்சிக்கு மூச்சே நின்றுவிட்டது.


தன் ஷர்ட்டை இறுக்கிப் பிடித்துக்கொண்டு அவள் விழிகளை மூடிய வண்ணம் நின்றுக்கொண்டிருக்க, இதழை கவ்வச் சென்றவன் கனவில் தோன்றும் அந்த இளவரசியின் விம்பம் மனக்கண் முன் வர திடுக்கிட்டு விலகி நின்றான்.


ஜான்சி பட்டென்று விழிகளைத் திறக்க, அவள் முகமோ வெட்கத்திலும் சங்கடத்திலும் சிவந்துப் போயிருந்தது.


ஆனால், யாத்ரனோ இதை எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு வேகமாக மூச்சு வாங்கியது.


அதற்குமேல் அங்கு நிற்காமல் தன் பொருட்களை எடுத்துக்கொண்டு அவன் அறையைவிட்டு வெளியேறியிருக்க, வெட்கப்பட்டு புன்னகைத்துக்கொண்டாள் அவள்.


கிட்டத்தட்ட நேரம் மாலையை நெருங்கியிருந்தது. 


தன் முன்னே இருந்த கணினியில் எதையோ தீவிரமாக தட்டச்சு செய்துக்கொண்டிருந்த யாத்ரனின் அலைப்பேசி அலற, நிதானமாக அலைப்பேசி திரையைப் பார்த்தான்.


அதில் வரதனுடைய பெயரைக் கண்டதும் உடனே அழைப்பைத் துண்டித்தவன், 'ச்சே!' என எரிச்சலாக முணுமுணுத்தவாறு மீண்டும் வேலையில் கவனம் செலுத்தப் போக, மீண்டும் அவனுடைய அழைப்பு வந்தது.


கோபத்தோடு அழைப்பையேற்ற யாத்ரன், "அதான் கட் பண்றேன்ல, மறுபடியும் எதுக்கு எடுத்துக்கிட்டே இருக்க. யூ ப்ளடி ****!" என்று கத்த, "டேய் யாத்ரா வெயிட், நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்" என்று அவசரமாக சொன்னான் வரதன்.


"வாட்?" அவன் என்னதான் சொல்கிறான் என்பதை அறிய யாத்ரன் சற்று அமைதியாக, "அது... என்னை மன்னிச்சிருடா! இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க போற? ஜான்சி நீ எதிர்பார்த்த மாதிரி இல்லன்னாலும் அவ ரொம்ப நல்லவடா, அதுமட்டுமில்லாம ஷீ லவ்ஸ் யூ! இப்போ கிடையாது. நீ ஊர்ல இருக்கும் போதே.." என்று நிறுத்தினான் மற்றவன்.


யாத்ரனுக்கு இது அதிர்ச்சிதான். கூடவே, எங்கோ ஒரு மூளையில் சிறு கர்வம் கலந்த சந்தோஷமும் எழுந்தது.


ஆனால், அனைத்தும் சில கணங்கள்தான். 


அவனுடைய கோபமும் ஈகோவும் அவனின் மனதை மறைக்க, "சோ வாட்?" என்று அலட்சியத்தோடு வந்தது அவனுடைய குரல்.


"என்னடா இப்படி சொல்ற? அந்த பொண்ணு உன்ன லவ் பண்றா. இதை விட வேற என்ன வேணும் உனக்கு?" தோழனின் வார்த்தைகளிலிருந்த அலட்சியத்தில் வரதனுக்கு கோபம் எட்டிப் பார்க்க, "சரியாதானே கேக்குறேன், அவ என்னை காதலிச்சா அப்படிங்குற ஒரே காரணத்துக்காக நான் ஏத்துக்க முடியுமா? அவளுக்கு முன்னாடி பல பேர் என்னை காதலிச்சிருக்காங்க. அதுக்காக வாழ்க்கை கொடுன்னா முடியுமாடா சொல்லு?" என்றான் யாத்ரன்.


இவனுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பதென்றே மற்றவனுக்கு புரியவில்லை.


"இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க போற, சேர்ந்து வாழ்ந்தா ரெண்டு பேருமே சந்தோஷமா இருக்கலாம்லடா" முடிந்த அளவுக்கு அவனுக்கு புரிய வைக்க முயன்றான் வரதன்.


ஆனால், எதையும் கேட்கும் நிலையில் இல்லை யாத்ரன்.


பதில் கூட சொல்ல விரும்பாது அவன் அழைப்பைத் துண்டித்திருக்க, சரியாக அவனுடைய கேபினுக்குள் நுழைந்தாள் அதே ஆஃபீஸில் பணி புரியும் ரேஷ்மா.


"ஹேய் யாத்ரா..." என்று கொஞ்சும் குரலில் சொல்லிக்கொண்டே அறைக்குள் நுழைந்தவள், அவனின் மேல் மொத்தமாக சாயாத குறையாக அவனை நெருங்கி நின்றாள்.


"ஹ்ர்ம் ஹ்ர்ம்.. ஹாய் ரேஷ், வர்க் பண்ணாம இங்க என்ன பண்ற?" யாத்ரன் கேட்டுக்கொண்டே இருக்கையோடு மெல்ல தள்ளிச் செல்ல, அப்போதும் அவனை நெருங்கி வந்தவள், "நான் ரொம்ப நாளா உன்கிட்ட கேட்டுட்டு இருக்கேன், ஆனா நீ எதுவுமே சொல்ல மாட்டேங்குறியே" என்றாள் குழைந்த வண்ணம்.


யாத்ரனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.


அசடுவழிந்தவாறு, "அது.. லவ்வு மேரேஜு எல்லா எதுக்கு ரேஷ்மா, சும்மா ஜாலியா இருந்துட்டு போலாமே! வேணா.. ஷெல் வீ கேட்ச் அப் டூநைட்" என்று கேட்டான் யாத்ரன்.


அவளோ அவனின் சட்டைக் காலரைப் பற்றியிழுத்து, "அதெல்லா எனக்கு போதாது யாத்ரா..." என்றுக்கொண்டே அவனை மேலும் நெருங்க, மீண்டும் யாத்ரனின் மனக்கண் முன் அந்த இளவரசியின் விம்பமும் குரலும் கேட்க ஆரம்பித்தது.


"யாத்ரா..." தூரத்தே ஒலித்த அந்த ஒரு அழைப்பில் தன்னை நெருங்கி வந்தவளை தள்ளிவிட்டவன், "சா.. சாரி ரேஷ்மா, நான் வேணும்னு..." என்று திணறிபடி கேபினிலிருந்து வெளியேறி வாஷ்ரூமுக்குள் நுழைந்துக்கொண்டான்.


ஓடும் நீரில் முகத்தை அடித்துக் கழுவியவன், திண்டில் இரு கரங்களையும் ஊன்றி முன்னே இருந்த கண்ணாடியில் தன்னை வெறித்துப் பார்த்தான்.


"ஜான்சிய என்னை மீறி கிஸ் பண்ண போகும் போதும் இப்படிதான் ஆச்சு. இப்போவும்... என்ன நடக்குது இங்க? அந்த ப்ரின்ஸஸ் என்னை கூப்பிட்ட மாதிரி... ச்சே!"


எதுவுமே செய்யத் தோன்றவில்லை அவனுக்கு. சில கணங்கள் அப்படியே நின்றிருந்தவன் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.


"ஒருவேள.. ஒருவேள நான் ட்ரீம்ல வர்ற அந்த ப்ரின்ஸஸதான் நெஜமாவே காதலிக்கிறேனா? அதனாலதான் என்னால..."


தனக்குள்ளேயே பேசிக்கொண்டு சென்றவனின் இதழ்கள் புன்னகையில் விரிய விழிகளில் முகத்தைக் கூட காணாத அந்த கனவு தேவதையை நினைத்து காதல் மிதந்தது.


அந்த இளவரசியைப் பற்றி தெரிந்துக்கொள்ள முயற்சித்தவன் ஒன்று மட்டும் அறியவில்லை.


கனவில் வரும் தேவதைக்காக நிஜ தேவதையை இழக்கப் போகிறான் என்று.


அன்று,


"வாவ் விது, செம்மையா இருக்கு. நம்ம அன்னிவெர்சரி பார்ட்டீக்கு இந்த முறை நிறைய பேர இன்வைட் பண்ணலாம். என்ட், ஐ ஹேவ் அன் அனதர் ஐடியா"


ராஜ்தீப் யோசனையோடு சொல்ல, காய்ச்சலால் சோர்ந்துப் போயிருந்த விதுஷாவோ போர்வையால் தன்னை முழுதாக போர்த்திய வண்ணம் கணவனை கேள்வியாகப் பார்த்தார்.


"அது... யாத்ராக்கு கல்யாணமாகி ரொம்ப நாளாகுது. அன்னைக்கே அவங்களோட மேரேஜ ரிஜிஸ்டர் பண்ணிட்டு ரிசெப்ஷன் வச்சிடலாம் என்ன சொல்ற?" அவர் ஆர்வமாகக் கேட்க, ஜான்சியோ துள்ளி குதிக்காத குறைதான்.


ஏற்கனவே விதுஷாவுக்காக செய்து வைத்திருந்த கஷாயத்தை எடுத்து வந்தவள், "அத்தை இதை குடிங்க, சீக்கிரம் உடம்பு குணமாகும்" என்று சொல்ல, "ச்சீ ச்சீ.. இதெல்லா வேணாம், டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாம நான் எதுவும் சாப்பிட மாட்டேன்" என்று மறுத்தார் அவர்.


"அய்யோ அத்தை, எங்க பாட்டி காலத்துல எல்லா ஊருக்குள்ள ஹாஸ்பிடலே இருக்காது. அப்போ இந்த கசாயம்தான் மருந்தே. அந்த மருந்த விட இது நல்லாவே உடம்ப குணப்படுத்தும். குடிங்க" 


படபடவென பேசியவள் விதுஷா மறுத்தும் வற்புறுத்தி அவளுடைய வாயில் ஊற்றிவிட, அவளை முறைத்துக்கொண்டே விழுங்க முடியாமல் விழுங்கினார் அவர்.


ஏதோ ஃபேக்டரி போல இயங்கிக் கொண்டிருந்த வீட்டிற்கு இப்போதுதான் உயிர் வந்தது போலிருந்தது ராஜ்தீப்பிற்கு.  


அவர் விதுஷாவை அர்த்தம் பொதிந்த பார்வைப் பார்க்க, அவரோ எந்த உணர்ச்சியையும் முகத்தில் பிரதிபலிக்கவில்லை.


சரியாக ஏதோ ஒரு எண்ணிற்கு அவசரமாக அழைத்த வண்ணம் வீட்டிற்குள் நுழைந்த யாத்ரன், யாரையும் கண்டுகொள்ளாமல் அறைக்குள் செல்லப் போக அவனை அழைத்து நிறுத்தினார் ராஜ்தீப்.


"யாத்ரா, ஐ நீட் டு டோக் டூ யூ" அவர் சொன்னதும் சட்டென நின்றவன் நிமிர்ந்தும் பார்க்காமல், "சொல்லுங்க" என்றான் அலைப்பேசியை நோண்டிய வண்ணம்.


அவனின் செயலில் ஜான்சிக்கே ஒரு மாதிரியாகிப் போனது. 


"எங்களோட அன்னிவெர்சரி வருது, சோ அன்னைக்கே உன்னோட ரிசெப்ஷனையும் வைக்கலாம்னு நாங்க ப்ளான் பண்ணியிருக்கோம். வாட் டு யூ சே?" அவர் கேட்டுவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்க, விழிகளை மட்டும் நிமிர்த்திப் பார்த்தவனின் முகம் பாறைப் போல் இறுகியிருந்தது.


"என்னோட லைஃப்ல என்ன நடக்கணும்னு முடிவு பண்ற ரைட்ஸ்ஸ உங்களுக்கு யார் கொடுத்தது? யூ காய்ஸ் என்ஜாய் யூவர் டே, விருப்பமே இல்லாம நடந்த இந்த கல்யாணத்துக்கு இது ஒன்னுதான் கேடு"


வாய்க்கு வந்ததை பேசிவிட்டு அவன் நகர்ந்து விட, போகும் தன்னவனை விழிகளில் வலியோடு வெறித்துப் பார்த்தாள் ஜான்சி. 



*********

யாவும் நின் யாத்ரனாய்.. 

EPISODE 21 👇👇

https://agnitamilnovels.blogspot.com/2026/05/21.html


Papr space Website ல என்னோட மற்ற கதைகள் இருக்கு டியர்ஸ்... மறக்காம போய் ரீட் பண்ணி பாருங்க...

👇

Https://papr.space/sheha-zaki/696e0bb131a61076ffe69ad4 


என்ட் காதல்போதையடா நீ எனக்கு நாவல் இப்போ ஆடியோ வடிவுல என்னோட சேனல் Kadhaikulla polaama சேனல்ல இருக்கு.. கிட்டத்தட்ட 9 அத்தியாயங்கள் பதிவிட்டாச்சு... 

👇

Https://youtube.com/@kadhaikullapolaama99?si=ZIbEQ6qPd-b7cg-b 


Just try it out 🙌


Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚