யாத்ரன் 21


யாவும் நின் யாத்ரனாய்...

EPISODE 21




"என்னங்க... என்னங்க..." என்ற ஜான்சியின் அழைப்பு காதில் விழுந்தாலும் கண்டுகொள்ளாதது போல் தன் நண்பனொருவனுக்கு அவசரமாக அழைத்துக்கொண்டிருந்தான் யாத்ரன்.


அவளோ கையில் பால் க்ளாஸோடு நின்றுக்கொண்டிருக்க, சில கணங்களில் யாத்ரனின் அழைப்பு மறுமுனையில் ஏற்கப்பட்டது.


"ஹேய் மேன், நான் சொன்ன விஷயம் என்னாச்சு?" யாத்ரன் ஆர்வத்தோடுக் கேட்க, மறுமுனையிலோ சில கணங்கள் அமைதிக்கு பின் பதில் வந்தது.


"அது... யாத்ரா, என் அங்கிள் ஒரு ஹிஸ்ட்ரி ப்ரொஃபெஸ்ஸர், நீ சொன்னதை பத்தி அவர்கிட்ட பேசினேன். பட்... அதை பத்தி எந்த ஹிஸ்ட்ரி ரெக்கார்டும் இல்லன்னு சொல்றாரு. அந்த இடத்த பல பேர் ரூல் பண்ணியிருக்காங்க. எல்லாரோட பேரும் ஹிஸ்ட்ரில ரெக்கார்ட் ஆகல. தடையமே இல்லாம அழிஞ்சவங்களும் இருக்காங்க" 


யாத்ரனுடைய தோழன் ஜோஷ்வா இதைப் பற்றி அவனுக்கு விளக்க, ஏமாற்றத்தில் முகம் கருத்தது அவனுக்கு.


"பட்  ஐ வோன்ட் டூ நோ அபௌட் தட் ஜோஷ்வா, வேற எந்த வழியும் இல்லயா?" அவன் கடைசி முயற்சியாகக் கேட்க, "நோ யாத்ரா, மே பீ காலங்காலமா அந்த ஊர்லயே இருந்தவங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு. அதை ட்ரை பண்ணி பாரு.  ஐ வில் கால் யூ பேக்" என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் ஜோஷ்வா.


கோபத்தில் காலை தரையில் உதைத்தவனுக்கு இருந்த ஒரு வழியும் இல்லாமல் போன உணர்வு!


நெற்றியை நீவி விட்டவாறு தீவிர யோசனையில் இருந்தவன் திடீரென காதில் விழுந்த குறட்டை சத்தத்தில் விருட்டென திரும்பிப் பார்த்தான்.


இத்தனை நேரம் பால் க்ளாஸோடு நின்றுக்கொண்டிருந்தவள் ஒருகட்டத்திற்கு மேல் முடியாமல் க்ளாஸை ஓரமாக வைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்திருக்க, அவளையும் மீறி உறங்கியிருக்கிறாள்.


புருவ முடிச்சுகளோடு அவளைப் பார்த்தவனுக்கு அப்போதுதான் ஒன்று மூளைக்கு உரைக்க, மெல்ல அவளருகில் சென்றான்.


"ஜான்சி..." அவன் ஒரு முறைதான் அழைத்திருப்பான், அந்த கணீர் குரலில் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தவளுக்கு ஆச்சரியம் உச்சத்தைத் தொட்டது.


"ஏங்க.. நீங்களா என்னை கூப்பிட்டீங்க?" அவள் பதறியடித்துக்கொண்டு எழுந்து நிற்க, யாத்ரனோ ஒருவித தயக்கத்தோடு அவளைப் பார்த்தான்.


"அது... ஜான்சி, நீ ஃப்ரீன்னா நாம வேணா வெளியில போலாமா, அன்னைக்கு கூட நீ கேட்டல்ல" தயங்கித் தயங்கி அவன் கேட்ட விதத்தில் அதிர்ந்தவள், "என்னங்க நீங்க, வான்னு உரிமையா கூப்பிட்டா நான் வராமலா இருக்க போறேன், போகலாங்க. இரண்டே நிமிஷம் தாங்க, ரெடியாகிட்டு வர்றேன்" என்றாள் தாள முடியாத சந்தோஷத்தோடு.


யாத்ரனும் வராத புன்னகையை வரவழைத்து தலையாட்ட, அரக்க பறக்க தயாராகிவிட்டு அவன் முன்னே வந்து நின்றாள் ஜான்சி.


அவளுக்கு அளவில்லாத ஆனந்தம். முதல் தடவை அவனாக அழைத்திருக்கிறான். 


இருவரும் ஒன்றாக வெளியேற, அப்போதுதான் ஒரு கேஸ் விஷயமாக விசாரணையிலிருந்து வந்த ராஜ்தீப் மற்றும் விதுஷாவுக்கு நடப்பதை நம்பவே முடியவில்லை.


"இவள ஏத்துக்கிட்டானா?" விதுஷாவின் குரல் அதிர்ச்சியில் ஒலிக்க, "நல்லதுதானே விது, எனக்கு என்னவோ இந்த பொண்ணுதான் அவனுக்கு பொருத்தமா இருப்பான்னு தோனுது. உன்னால கொடுக்க முடியாத பாசத்த அவளால கொடுக்க முடியுது. நல்லா யோசிச்சு பாரு புரியும்" என்றார் ராஜ்தீப்.


தன் கணவரின் இந்த வார்த்தைகளை அவர் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. 


விதுஷாவின் முகம் குற்றவுணர்ச்சியில் சோர்ந்துப் போக, இங்கு கார் ஜன்னல் வழியே இரவு நேர டுபாயின் அழகை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஜான்சி.


"ஏங்க இன்னைக்கு ஏதாச்சும் போதி மரத்து அடியில போய் நின்னுட்டு வந்தீங்களா என்ன?" அவள் சட்டென்று கேட்க, அவனுக்கு அதற்கான அர்த்தம் கூட புரியவில்லை.


"வாட்! அப்படின்னா..." யாத்ரன் காரை ஓட்டியவாறு கேட்க, "இல்லங்க, போதி மரத்துக்கு அடியில நின்னுட்டு வந்தா அறிவு கண்ணு திறக்கும்னு சொல்லுவாங்க அதான் கேட்டேன்" என்றவள் சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.


அப்போதுதான் அவனுக்கு அவள் சொல்ல வருவதே மூளைக்கு உரைக்க, முறைத்துப் பார்த்தவன் பின் தன்னை மீறி மெல்லிய புன்னகை சிந்த, பெண்ணவளுக்கு அதுவே கடவுள் தரிசனம் கிடைத்தது போல இருந்தது.


காதலோடு அவனுடைய புன்னகையை அவள் ரசித்துக்கொண்டிருக்க, யாத்ரனோ தான் வர வேண்டிய இடத்திற்கு வந்தது போல வண்டியை நிறுத்தினான்.


உடனே பார்வையைத் திருப்பி கார் ஜன்னல் வழியே வெளியே பார்த்த ஜான்சியின் விழிகள் தனக்கு நேரே வானத்தை தொடுவது போலிருந்த பர்ஜ் கலீஃபாவை பார்த்ததும் பிதுங்கி விடுமளவிற்கு விரிந்துக்கொண்டன.


"அடி ஆத்தீ! இதென்ன இம்புட்டு பெருசா இருக்கு" அவளுடைய குரல் ஆச்சரியத்தில் ஒலிக்க, அதேநேரம் சுற்றியிருந்த பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மக்களும் அதை வளைத்து வளைத்து படம் பிடித்துக்கொண்டிருந்தனர்.


யாத்ரனோ காரிலிருந்து இறங்கி அவள் பக்கத்திலிருந்த கதவைத் திறந்து விட, காரிலிருந்து இறங்கிய ஜான்சிக்கு எல்லாமே புதிதாகத் தெரிந்தது.


"ஏங்க, என்னையும் ஃபோட்டோ எடுக்குறீங்களா?" அவள் ஆர்வத்தோடு கேட்க, சட்டென யாத்ரனின் நினைவுகள் ஊரிலிருக்கும் போது அவளை புகைப்படமெடுத்து நடந்த கலவரத்தைதான் நினைத்துப் பார்த்தது.


அதில் பக்கென்று சிரித்தவன், "அன்னைக்கு ஃபோட்டோ எடுத்ததுக்கு ரொம்ப பேசின" என்று சொல்லிக்கொண்டே கேமராவை ஆன் செய்து அலைப்பேசி வழியே அவளைப் பார்க்க, "யாருன்னே தெரியாத ஒருத்தன் படம் பிடிச்சா எந்த பொண்ணா இருந்தாலும் கோபப்படதான் செய்வா, ஆனா இப்போ..." அவளுடைய கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தது.


அந்த சிவந்த கன்னங்களை ரசித்துப் பார்த்தவனின் பெருவிரல் கேமராவை க்ளிக் செய்ய, அந்த காட்சி அலைப்பேசியில் மட்டுமல்ல அவனுடைய ஆழ்மனதிலும் அழகாகப் பதிந்துப் போனது.


இருவரும் ஒரு இடத்தில் நின்றுக்கொள்ள, ஜான்சி அப்போதும் ஒவ்வொன்றையும் ஆச்சரியம் குறையாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் என்றால் யாத்ரனோ மெல்ல பேச்சை ஆரம்பித்தான்.


"ஜான்சி, நா.. நான் உன்கிட்ட ஒன்னு கேக்கலாமா?" அவன் கேட்க, "சொல்லுங்க.." என்றவளின் பார்வை மட்டும் அவன் மேல் பதியவே இல்லை.


"அது என்னன்னா... உன் ஊர்ல நிறைய ஹிஸ்டோரிக்கல் ஐ.. ஐ மீன் நிறைய ராஜாக்கள் ராணின்னு பழைய கதைகள் இருக்கும்ல, உனக்கு அப்படி ஏதாச்சும் கதை தெரியுமா ஜான்சி? அதுவும் முக்கியமா ரொம்ப தைரியமான இளவரசி அவங்க ரூல் பண்றப்போ அவங்களோட இடத்த இன்னொரு ராஜா அபகரிச்சு... சம்திங் லைக் தட்" 


தனக்கு நினைவில் இருப்பதை வைத்து தனக்கு தெரிந்தது போல அவன் சொல்லி முடித்து அவள் பதிலை ஆர்வமாக எதிர்பார்த்தான்.


ஜான்சியும் தன்னவனை புரியாமல் பார்த்தவள், புருவ முடிச்சுகளோடு சில கணங்கள் யோசிக்க, அவளுடைய நினைவுக்கு ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.


"ஆமாங்க தெரியும், ராணி ஜோதி. நீங்க ஊர்ல இருக்கும் போது கூட அவங்களோட பூஜை நடந்துச்சே! உங்களுக்கு நியாபகம் இருக்கா?" 


அவள் கேட்டதும்தான், யாத்ரனுக்கு அந்த ஒரு சம்பவமே ஞாபகத்திற்கு வந்தது. கூடவே, அன்று ருக்மணி சொன்ன கதையும்.


"யாஹ்...  ஐ நோ. அது.. அது யாரு? அவங்களோட கதை உனக்கு தெரியுமா?" என்று ஒருவித பதற்றத்தோடு கேட்டான் யாத்ரன்.


அவனின் இந்த அவசரத்திற்கான காரணம் புரியாவிடினும், "அந்த காலத்துல அவங்களோட ஆட்சி நடந்தப்போ எங்க ஊரு ரொம்ப செழிப்பா இருந்துச்சாம், ரொம்ப நல்லவங்க. ஆனா அவங்களுக்கு கல்யாணம் ஆகல, கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் நடந்தப்போதான் எந்தவித அறிவிப்பும் இல்லாம பக்கத்து ராஜ்ஜியத்துல இருந்த ராஜா ஒருத்தர் ராணி ஜோதியையும் அவங்க அப்பாவையும் கொன்னுட்டு ஊரையே கைப்பற்றி இருக்காருன்னு ஒரு தடவை என் பாட்டி சொன்னாங்க. இவ்வளவுதாங்க எனக்கு தெரியும்" என்று தனக்கு தெரிந்த கதையை கூறி முடித்தாள் அவள்.


யாத்ரனின் முகத்தில் அதிருப்தி மட்டுமே.


"அவங்க எப்படி இருப்பாங்கன்னு ஏதாச்சும் தடையம் இருக்கா? அதான் பழைய காலத்து பெயின்டிங்க்ஸ் ஃபோட்டோஸ் எல்லா இருக்குமே, அதை கேக்குறேன். நல்லா யோசிச்சு சொல்லு ஜானு, உன் ஊரை பத்தி உனக்குதானே தெரியும்" 


விழிகளை சுருக்கி அந்த இளவரசியின் முகத்தை பார்த்தே ஆக வேண்டுமென்ற ஆசையில் அவன் கெஞ்சாத குறையாகக் கேட்க, ஜான்சியோ தன் குட்டி மூளையை பிழிந்து யோசித்துப் பார்த்தாள்.


"இல்லங்க, அவங்க சம்பந்தப்பட்ட எல்லாமே அழிஞ்சு போச்சு. ஊர்ல பெரிய சிலை இருக்கு அந்த சிலை கூட அவங்களான்னு நிஜம் இல்ல. அவங்க இப்படிதான் இருப்பாங்கன்னு ஒரு கற்பனையில இந்த காலத்துல செதுக்கப்பட்டதுதான். ஏங்க இதையெல்லா கேக்குறீங்க, ஏதாச்சும் வரலாறு புத்தகம் எழுத போறீங்களா என்ன?" 


அவள் வெகுளியாக தன் சந்தேகத்தைக் கேட்க, "க்கும்!" என்று நொடிந்துக்கொண்டான் யாத்ரன்.


"சரி வா போகலாம்" சோர்ந்த குரலில் சொல்லிவிட்டு அவன் செல்ல, "அதுக்குள்ளயே போறோமா, இப்போதானே வந்தோம்" என்று பாவம் போல் கேட்டாள் அவள்.


"ராத்திரி ரொம்ப நேரம் வெளியில இருக்குறது வீட்டுக்கு ஆகாது அதான்.. வந்து கார்ல ஏறு!" என்று அவன் அவளுக்கு சளைக்காதவன் போல சொல்லிவிட்டு காரை நோக்கிச் செல்ல, போகும் அவனை வாயில் ஈ போகாத குறையாக பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் ஜான்சி.


அடுத்த இரண்டு நாட்கள் கழிந்த நிலையில்,


யாத்ரனின் வீட்டு வளாகமே அலங்கார விளக்குகளாலும் இயற்கை பூக்களாலும் மின்ன, பணக்காரர்கள் மற்றும் தொழில் நண்பர்கள் என அந்த இடத்தில் நிறைந்திருந்தனர்.


வீட்டிற்கு வெளியே புஃபே முறையில் இரவுணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அத்தனை அலங்காரத்தோடு சிறிய மேடையொன்றும் அமைக்கப்பட்டிருந்தது.


"என்ன மிஸஸ் விதுஷா, பையனுக்கு சொல்லாம கொல்லாம கல்யாணத்த பண்ணி வச்சுட்டீங்க போல! அந்த அளவுக்கு என்ன அவசரம். பொண்ணு யாரு?"


"ஆமா... பொண்ணு நம்ம ஆளுங்கதானே?"


"என்ன படிச்சிருக்கா, எங்க வேலை பார்க்குறா? ஒருவேள பையன் வர்க் பண்ற கம்பனியா?"


என்று ஆளாளுக்கு பல கேள்விக்கனைகளைத் தொடுக்க, விதுஷாவும் ராஜ்தீப்பும் தான் திணறிவிட்டனர்.


"ஓ காட்! இவங்கள சமாளிக்கிறதுக்குள்ள எனக்கு போதும் போதும்னு ஆகிருது. எங்க ராஜ் அவ? அவள பத்தி தெரிஞ்சேதான் ஸாரி வாங்கி கொடுத்தேன். அதை கட்டிட்டு வரதுக்கு கூட இவ்வளவு நேரமா?"


அவர் பொரிந்துத் தள்ள, அந்த திட்டல் காதில் விழுந்தது போல அவளுக்கு!


யாத்ரனின் பின்னே ஹீல்ஸைப் போட்டு நடக்க முடியாமல் நடந்தவாறு மெல்ல வந்தாள் ஜான்சி.


கோல்டன் நிற வேலைப்பாடுகளுடனான பட்டர் நிற ஷிஃபான் ஸாரியில் வந்தவளைப் பார்க்க விதுஷாவுக்கு மனம் கொஞ்சம் திருப்தியடைய, இருந்தாலும் சிறு பயம் அவருக்குள்.


கோட் சூட்டில் இருந்த தன் மகனின் அருகில் வேகமாக சென்றவர், "யாத்ரா, அவள யார் கூடவும் தனியா பேச மட்டும் விட்டுராத, இந்த ஃபங்ஷன் முடியுற வரைக்கும் என் மானத்த வாங்காம இருந்தா போதும்" என்று எச்சரிக்கும் குரலில் சொல்ல, அவனின் பார்வையோ பக்கத்தில் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தவளின் மீதுதான் பதிந்தது.


"சொன்னது புரிஞ்சதுல்ல!" அவன் அதட்டும் குரலில் கேட்க, "ம்ம்..." என்றாள் ஜான்சி.


"மொதல்ல ரிங் மாத்திக்குற ஃபங்ஷன முடிச்சுக்கலாம். எவ்ரிவன் இஸ் வெயிட்டிங் ஃபார் தட்" ராஜ்தீப் சொன்னதும் சலிப்பாக விழிகளை உருட்டிய யாத்ரன் சபை நாகரீகம் கருதி அதை மறுக்கவில்லை.


"வேணாம்னு சொன்னேன்ல, ச்சே!" எரிச்சலாக சொன்னபடி செல்லப் போனவனின் எதிரே வரதன் வந்து நிற்க, "உன்ன நான் கூப்பிடவே இல்லயே" என்றான் யாத்ரன் முகத்திற்கு அடித்தாற் போல.


"நீ கூப்பிடலன்னா என்ன, என் தங்கச்சி கூப்பிட்டா" என்று அவன் காலரை தூக்கி விட்டபடி சொல்ல, யாத்ரன் பார்த்த பார்வையில் 'ஹிஹிஹி...' என அப்பட்டமாக அசடுவழிந்தாள் ஜான்சி.


"ஊஃப்ப்... காம் டவுன் யாத்ரா" தனக்குத்தானே வாய்விட்டு சொல்லி நிதானப்படுத்திக்கொண்டு யாத்ரன் மேடைக்கு ஏற, "அண்ணே, ருக்மணிக்கு கால் பண்ணி வீடியோல அம்மாவுக்கும் காமிக்க சொல்றீங்களா, அவங்களும் என் கூட இருக்குற மாதிரி இருக்கும்" என்று கேட்டாள் அவள் ஆசையோடு.


வரதனுக்கும் அவளைப் பார்க்க பாவமாக இருந்தது.


புன்னகையோடு தலையாட்டியவன் உடனே தன் அன்னைக்கு அழைத்து சொல்ல, ஜான்சியும் மேடைக்கு ஏறினாள்.


அத்தனை காதலோடு அவள் அவனின் கரத்தைப் பற்றி மோதிரத்தை போட்டுவிட, ஆனால் யாத்ரனின் மனம் முழுக்க அந்த கனவு தேவதை மட்டுமே...



********





Tamil novel writers தளத்துல நடக்குற கனவு பட்டறை கதை தொழிற்சாலை A Novel Writing Contest 2026


நானும் இந்த போட்டியில ஜாய்ன் பண்ணியிருக்கேன்.. ஆனா என்ன இன்னும் ஒரு எபி கூட போடல.. 😶😶😶 


பட் இந்த போட்டியில ஜெயிக்கிறோமோ இல்லையோ போட்டிக்காக எழுதுற கதைய சொன்ன தேதிக்குள்ள முடிச்சிடணும்..  


உங்க சப்போர்ட் எனக்கு வேணும் டியர்ஸ்... 😍😍😍 


கதைப் பெயரு - 

    விழி கொல்லும் விஷமா நீ


ஆன்டீ ஹீரோ ஸ்டோரிதான்... இரண்டு வகையான காதல் முக்கோண காதல் துரோகம், ரொமேன்ஸ், ஃப்ளேஷ்பேக்னு எல்லாமே கலந்த ஒரு கலவை இது.. 


போட்டி கதை என்கிறதால போட்டி நடக்குற தளத்துல மட்டும்தான் கதை போடப்படும்.. எனக்கு எப்போவுமே உங்க ஆதரவ கொடுங்க போதும் 🙌

Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚