யாத்ரன் 19
யாவும் நின் யாத்ரனாய்..
EPISODE 19
'கடவுளே என் புருஷன் என்னை ஏத்துக்கணும்' என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு ஒரு எலுமிச்சம் பழத்தை தன் தலை மேல் சுற்றிக்கொண்டிருந்தாள் ஜான்சி.
நடு ஹாலில் அந்த நட்டநடு ராத்திரியில் இவள் செய்யும் செயலில் விதுஷாவுக்குதான் தூக்கி வாரிப்போட்டது.
'என்ன பண்றா இவ.. ஆத்தீ! ஒருவேள இவள ஏத்துக்கலன்னு வீட்டுக்கு சூனியம் கீனியம் வக்கிறாளோ?'
தனக்குள் பதறியவர் ஒரே ஓட்டமாக அறைக்குள் ஓடிச் சென்று ஒளிந்துக்கொள்ள, ஜான்சியோ எதையும் உணராமல் தன் பரிகாரத்தை முடிப்பதிலேயே குறியாக இருந்தாள்.
அன்றைய இரவு கழிந்து அடுத்தநாளும் விடிந்தது.
நேற்றிரவு பரிகாரம் செய்த எலுமிச்சம் பழத்தை கரங்களுக்குள் பொத்தி தலைமேல் உயர்த்தி கும்பிட்டவள் ஏதேதோ வாய்க்குள் முணுமுணுத்துவிட்டு அதைக்கொண்டே லெமன் ஜூஸ் தயாரிக்க, மகனின் அறைக் கதவை தட்டி உள்ளே நுழைந்தார் விதுஷா.
ஆஃபீஸுக்காக தயாராகிக்கொண்டிருந்தவன் வெளியே எட்டிப் பார்த்த வண்ணம் அறைக்குள் நுழைந்த தாயை புரியாமல் பார்த்து வைக்க, "யாத்ரா, வாட் த ஹெல் இஸ் ஹேப்பனிங் ஹியர்?" என்று கத்தினார் அவர்.
ஆடவனுக்கு வந்ததும் வராததுமாய் அவர் கேட்ட கேள்விக்கு அர்த்தம் சுத்தமாகப் புரியவில்லை.
"வாட்?" புருவ முடிச்சுகளோடு அவன் கேட்க, "நேத்து ராத்திரி..." என்று ஆரம்பித்தவர் தான் கண்ட காட்சியை சொல்லி முடித்துவிட்டு, "அந்த பொண்ணு இந்த வீட்டுல இருக்குறதே எனக்கு பயமா இருக்கு. ஓ காட்! ஷீ இஸ் ரியலி டேன்ஜரஸ்" என்றார் விழிகளை உருட்டிக்கொண்டு.
யாத்ரனோ இரு விரலால் நெற்றியை நீவி விட்டுக்கொண்டவன், "நான் பார்த்துக்குறேன்" என்றுவிட்டு திரும்பிக்கொள்ள, ஏதோ சொல்ல வந்தவர் சட்டென என்ன நினைத்தாரோ! எதுவும் பேசாமல் அறையிலிருந்து வெளியேறி இருந்தார்.
அவர் சென்ற அடுத்த ஐந்தே நிமிடங்களில் உள்ளே வந்தாள் ஜான்சி. அதுவும் கையில் அதே லெமென் ஜூஸோடு.
யாத்ரனோ வழமைப் போல அவளைக் கண்டுகொள்ளாமல் இருக்க, "என்னங்க... என்னங்க..." என்று மெல்ல அழைத்தாள் அவள்.
அவனோ அவளை திரும்பியும் பார்க்காமல், "என்ன..." என்று மட்டும் அதட்டும் குரலில் கேட்க, "அது.. இந்த ஜூஸ குடிங்க, வயித்துக்கு ரொம்ப நல்லது" என்றாள் ஜான்சி பதற்றத்தை மறைத்துக்கொண்டு.
அவனோ விழிகளை மட்டும் உயர்த்தி அவளை ஒரு பார்வைப் பார்த்தவன், "வேணாம்" என வெடுக்கென்று சொல்லிவிட்டு நகரப் போக, இவளுக்கோ பக்கென்று இருந்தது.
"அது... சாப்பாட்ட என்னைக்கும் தட்டி கழிக்க கூடாதுங்க. கடைசி காலத்துல வாய்க்கு பச்ச தண்ணி கூட கிடைக்காதுன்னு சொல்லுவாங்க. இதை மறுக்காம எடுத்து குடிங்க, வேணாம்னு சொல்லாதீங்க"
அவள் வற்புறுத்த, யாத்ரனின் விழிகள் சந்தேகத்தில் சுருங்கின.
மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியவாறு அவளை விழிகளைக் கூர்மையாக்கிப் பார்த்தவன், "என்ன கலந்திருக்க?" என்று கேட்டான் அதட்டலாக.
அதில் தூக்கி வாரிப்போட்டவளாக அவனைப் பார்த்தவள், "நா.. நான் என்ன கலக்க போறேன். சத்தியமா எதுவுமே இல்லங்க. என்னை நம்புங்க. தயவு செஞ்சு இதை குடிங்க" என்று பயத்தை மறைத்துக்கொண்டு சொல்ல, யாத்ரனோ ஒரு அடி அவளை நோக்கி முன்னே வைத்தான்.
அதில் இரண்டடி பின்னே நகர்ந்தவள், "எதுவுமே கலக்கலங்க, ஜூஸு போட்ட லெமென வச்சுதான் பரிகாரமே பண்ணேன். என்னை மன்னிச்சிருங்க" என்று கடகடவென உண்மையை உளறிவிட, அவளை கோபமாகப் பார்த்தவனின் பார்வை 'எதற்கு?' என்ற கேள்வியையும் தாங்கியிருந்தது.
"அது... அது வந்து... நாம சேரணும்னுதான்..." அவள் தயக்கமாக இழுக்க, "அப்போ என்னை வசியம் பண்ண ட்ரை பண்ணியிருக்க அப்படிதானே!" என்று கேட்ட யாத்ரன் இப்போது அவளை அனல் தெறிக்கப் பார்த்தவன்.
அந்த பார்வையில் அவளுக்கு உடல் உதற, பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டாள் ஜான்சி.
விழிகளில் விழிநீர் முட்டிக்கொண்டு நின்றது அவளுக்கு. அவன் இன்னொரு அடி வைத்தால் அழுதேவிடுவாள்.
முயன்று அழுகையை அடக்கிக்கொண்டு அவள் நிற்க, ஏனோ யாத்ரனுக்கு இப்போது கோபத்தை தாண்டி அவளுடைய முகபாவனையில் சிரிப்புதான் வந்தது.
அவள் கையிலிருந்ததை வாங்கி மடமடவென குடித்தவன் க்ளாஸை ஓரமாக வைத்துவிட்டு அவளை மெல்ல நெருங்க, இப்போது அதிர்வது ஜான்சியின் முறையாயிற்று.
"எது.. எதுக்கு பக்கத்துல வர்றீங்க..." அவள் பயந்தபடி கேட்டுக்கொண்டே பின்னே நகர்ந்து ஒருகட்டத்தில் கட்டில் கம்பில் மோதி மெத்தையிலேயே விழுந்துவிட, அவளை தொட்டும் தொடாதது போல் அவள் மேல் விழுந்தான் யாத்ரன்.
இருவருக்குமிடையில் சிறிய இடைவெளிதான். ஆனால், பெண்ணவளுக்கு இப்போது பயத்தையும் தாண்டி உணர்ச்சிகள் தாறுமாறாக போட்டிப் போட, 'இந்த பரிகாரத்துக்கு இம்புட்டு பவரா?' என்று அந்த நிலையிலும் நினைத்துக்கொண்டாள்.
யாத்ரனோ அவளுடைய விழிகளையே பார்த்தபடி அவளை நெருங்க, ஜான்சியின் விழிகளும் மூடிக்கொண்டன.
ஒருசில கணங்கள்தான். ஏதோ ஒன்று அவளை விட்டு விலகியது போலிருக்க பட்டென்று விழித்துப் பார்த்த ஜான்சி, முன்னே பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை இட்டவாறு முறைப்போடு நின்றுக்கொண்டிருந்தவனை திகைப்போடு பார்த்தாள்.
"உன் பரிகாரத்தோட பவர் நல்லா வேலை பார்க்குதுல்ல! ப்பாஹ்... சான்ஸ்ஸே இல்ல" கேலியாக சொன்னவன் மெத்தையில் அவளை இரு கரங்களால் அணை கட்டுவது போல நெருங்கி, "இந்த டகால்டி வேலையெல்லா என்கிட்ட வச்சுக்காத! உன் ஊர்ல இருக்குற முட்டா பீஸுங்க வேணா இதை நம்புவாங்க. புரியுதா? மறுபடியும் ஏதாச்சும் பண்ணேன்னா... நான் என் ஸ்டைல்ல உனக்கு ஒரு பரிகாரத்த பண்ண வேண்டியிருக்கும்" என்றான் மிரட்டல் தொனியில்.
ஜான்சியோ விதிர்த்துப் போய் அவனை இமை வெட்டாமல் சிலை போல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
யாத்ரன் மிரட்டிவிட்டு அறையிலிருந்து வெளியேறியிருக்க, 'ஊஃப்ப்...' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டவளுக்கு அவனின் நெருக்கத்தில் உண்டான பதற்றம்தான் குறைந்தபாடில்லை.
இப்படியே ஒருசில நாட்கள் கழிந்திருக்க, அன்று...
வீட்டிற்குள்ளேயே அலங்காரத்திற்காக செய்திருந்த நீர்வீழ்ச்சிக்கு பக்கத்தில் நின்றுக்கொண்டு அதை சுற்றி சுற்றி ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஜான்சி.
"என்ன இது, வெளியில இருக்க வேண்டியதெல்லா உள்ள இருக்கு. பணக்காரங்க தான்யா இப்படியெல்லா பண்ணுவாய்ங்க.. அதுவும் அருவி கூட..."
அவள் தீவிரமாக யோசித்த வண்ணம் அந்த செயற்கை தோட்டத்தை ஆர்வமாக பார்த்துக்கொண்டிருக்க, "ஹ்ர்ம் ஹ்ர்ம்..." என்ற செருமல் சத்தம் பின்னாலிருந்து கேட்டது.
உடனே திரும்பிப் பார்த்தவள், எதிரே விதுஷா நின்றுக்கொண்டிருப்பதை பார்த்ததும் "சொல்லுங்க அத்தை, ஏதாச்சும் வேணுமா?" என்று பதற்றமாக கேட்க, "சம்பளம் கொடுக்காத வேலைக்காரியாவே மாறிட்ட போல" என்றவரின் வார்த்தைகளில் ஏளனம் தவழ்ந்தது.
"அப்படி சொல்லாதீங்க அத்தை, எங்க வீட்டு வேலைய நாமதானே பண்ணணும்" அவள் வெகுளியாய் சொல்ல, இருபக்கமும் சலிப்பாக தலையாட்டியவர், "என்கூட வா!" என்றுவிட்டு முன்னே சென்றார்.
ஜான்சியோ புரியாமல் பார்த்தவள், "எங்க அத்தை?" என்று கேட்டுக்கொண்டே அவர் பின்னால் ஓட, வீட்டிலிருந்து வெளியேறி காரின் பின்சீட்டில் ஏறிக்கொண்டவர், "உனக்கு மெடிக்கல் செக்கப் பண்ணணும், என்னால ரிஸ்க் எடுக்க முடியாது. நீ இருந்த இடத்த என்னால நம்ப முடியாது என்ன வியாதியோட இருக்கியோ! சீக்கிரம் வந்து வண்டில ஏறு" என்றார் வேகமாக.
தன்னை குனிந்து ஒருதரம் பார்த்தவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
"அத்தை இப்படியேவா?" அவள் சிறு தயக்கத்தோடு கேட்க, "நாம என்ன டூருக்கா போறோம், ஹாஸ்பிடலுக்குதானே!" என்ற விதுஷாவின் வார்த்தைகள் எரிச்சலோடு வந்தன.
அதற்குமேல் மறுப்பு கூறாமல் காரில் சென்றமர்ந்தவள் அந்த நொடி அனைத்தையும் மறந்து டுபாய் அழகை ஜன்னல் வழியே ரசிக்க ஆரம்பித்தாள்.
இந்த வீட்டிற்குள் நுழைந்து இத்தனை நாட்கள் கழித்து இன்றுதான் முதல் தடவை வெளியே செல்கிறாள்.
கிராமத்தில் அதுவும் கூண்டுக்கிளி போல் வளர்க்கப்பட்டவளுக்கு அந்த உலகமே எட்டாம் அதிசயமாகத்தான் இருந்தது.
அவளோ விழிகளை விரித்து ஒவ்வொன்றையும் ஆச்சரியமாக பார்த்துக்கொண்டு வர, குரலை செருமிவிட்டு மீண்டும் பேச்சை ஆரம்பித்தார் விதுஷா.
"ஆமா... உன்னால குழந்தை பெத்துக்க முடியாதுன்னு டாக்டர் சொன்னாரா? எப்போ உனக்கு தெரிய வந்துச்சு?"
அவர் கேட்டதும், உடனே மறுப்பாக தலையாட்டினாள் ஜான்சி.
"டாக்டர் எல்லா இல்ல அத்தை, எங்க ஊர் பூசாரி சொன்னாரு. நான் வயசுக்கு வந்தப்போ தான் அந்த உண்மைய சொல்லியிருக்காரு. நான் பொறக்கும் போதே சாபத்தோட பொறந்திருக்கேன், என்னால குழந்தை பெத்துக்க முடியாதுன்னு. இதுக்கு பரிகாரம் கூட இல்லயாம் அத்தை"
அவள் இந்த கதையை சொல்லிக்கொண்டு போக, அவளை 'ஙே' என பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவருக்கு எங்கேயாவது சென்று முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது.
அடுத்த கொஞ்ச நேரத்திலேயே விதுஷாவின் கார் ஹாஸ்பிடல் வளாகத்துக்குள் நுழைந்தது.
அன்றைய பாதி நாள் ஜான்சியின் முழு உடல் பரிசோதனைக்காகவே சென்றுவிட, மொத்த ஹாஸ்பிடலையும் புரட்டி எடுத்துவிட்டாள் அவள்.
சூரிய அஸ்தமனத்துக்குள்ளயே இருவரும் வீடு வந்து சேர, அழாத குறையாக வீட்டுக்குள் நுழைந்தாள் ஜான்சி.
விதுஷாவோ தன் வேலை முடிந்ததென அவர் பாட்டிற்கு அறையை நோக்கிச் செல்ல, "அத்தை..." என்றழைத்து நிறுத்தினாள் அவள்.
"அது... அது வந்து.. எனக்கு ஏதாச்சும் பெரிய வியாதி இருக்கா அத்தை? எதுவுமே சொல்லாம போறீங்களே" அடி வயிற்றில் பயபந்து உருண்டாலும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தில் கேட்டாள் அவள்.
அவளை கூரிய பார்வைப் பார்த்தவர், "வியாதி இருக்குமோன்னு பயத்துலதான் உன்னை அழைச்சுட்டு போனேன். பட் ஒரு உண்மை தெரிஞ்சிருக்கு" என்று சொல்ல, ஜான்சியோ புரியாமல் பார்த்தாள்.
"உன்னால குழந்தை பெத்துக்க முடியும், உன் ஊர் முட்டாளுங்க உன்ன ஏமாத்தி வச்சிருந்திருக்காங்க"
அவர் சொல்லிவிட்டு சென்றிருக்க, ஜான்சியால் அவர் சொன்னதை நம்பவே முடியவில்லை.
எத்தனை வருடங்கள் தன் குறையை நினைத்து புலம்பி தள்ளியிருப்பாள். ஆனால் இன்று...
நீண்ட நாட்கள் கழித்து ஆனந்தத்தில் அவளுடைய விழிகள் கலங்க எதேர்ச்சையாக திரும்பியவள் பின்னால் நின்றிருந்த யாத்ரனைப் பார்த்ததும் திடுக்கிட்டாள்.
அவனோ இத்தனை நேரம் அவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தான். இருந்தும் கண்டுகொள்ளாதது போல் செல்ல, போகும் அவனை பார்த்துக்கொண்டு நின்றிருந்தவளுக்கு அன்று அவன் இதழ் முத்தம் கொடுத்ததுதான் ஞாபகத்திற்கு வந்தது.
சட்டென அவளுடைய முகம் வெட்கத்தில் சிவக்க, அவளுடைய கரங்கள் அவளுடைய வயிற்றை தடவி விட்டுக்கொண்டன.
அடுத்தநாளும் விடிந்தது.
"வயிறு கொஞ்சம் பெருசா தான் இருக்கு .நேரா பார்க்கும் போது தெரியல. ஆனா இப்படி பார்க்கும் போது தெரியுதே.. அப்போ ஒருவேள... அதுவா இருக்குமோ? அப்போ வயித்துக்குள்ள அய்யோ... எனக்கு வெக்க வெக்கமா வருதே இதை எப்படி நான் அவர்கிட்ட சொல்லுவேன்"
அறையிலிருந்த ஆளுயர கண்ணாடிக்கு முன்னே நின்று அணிந்திருந்த டாப்பை சற்று உயர்த்தி வயிற்றை உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஜான்சி.
அவளே கேள்வி கேட்டு பின் அவளாகவே ஒன்றை யூகிப்பதுமாக தனியாக பேசிக்கொண்டு நின்றிருந்தவளை கட்டிலில் அமர்ந்திருந்த யாத்ரனோ கவனிக்காமலில்லை.
அலைப்பேசியை நோண்டியவாறு ஓரக்கண்ணால் அவளை பார்த்துக்கொண்டிருந்தவன், 'நல்லாதானே இருந்தா, தலையில டப்பா கிப்பா ஏதாச்சும் விழுந்திருச்சோ?' என உள்ளுக்குள் நினைத்தவாறு அவள் பின்னால் சென்று நின்றான்.
"என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" சற்று கடினமான குரலிலேயே அவன் கேட்க, உடனே திரும்பிப் பார்த்தவள் பெருவிரலை தரையில் தேய்த்தவாறு அநியாயத்திற்கு வெட்கப்பட்டு தொலைத்தாள்.
"அது... அது வந்துங்க..." சொல்ல வருவதும் பின் வெட்கப்பட்டு முகத்தை மூடிக்கொள்வதுமாக அவள் தடுமாற, யாத்ரனுக்கு அய்யோ என்றிருந்தது.
"ஓ காட்!" இடுப்பில் கைக்குற்றி எரிச்சலோடு விழிகளை சுழற்றியவன், திரும்பிச் செல்லப் போக, "என்னங்க..." என்று அழைத்து நிறுத்தினாள் ஜான்சி.
ஒற்றைப் புருவத்தை தூக்கிய வண்ணம் என்னவென்று அவன் பார்க்க, அடுத்த அவள் சொன்ன வார்த்தைகளில் ஆடவனுக்கு மயக்கம் வராத குறைதான்.
"வாட்! கம் அகைன்" என்று கேட்டவனுக்கு அதிர்ச்சியில் வார்த்தைகள் கூட வர மறுத்தன.
"நான் முழுகாம இருக்கேங்க, பாருங்க வயிறு கூட பெருசாகியிருக்கு. அன்னைக்கு முத்தம் கொடுத்தீங்கல்ல அதான்... அய்யோ என்னை அப்படி பார்க்காதீங்க வெக்க வெக்கமா வருது"
அவள் சொன்னதைக் கேட்டு தலையை இரு கரங்களால் தாங்கிய வண்ணம் அவன் அப்படியே அமர்ந்துக்கொள்ள, "என்னாச்சுங்க?" என்று வெகுளியாகக் கேட்டாள் அவள்.
"அது ஒன்னும் பாப்பா வயிறு கெடையாது, உன் தொப்பைடீ மென்டல். நேத்து ராத்திரி நீ சாப்பிட்ட பிரியாணிதான் உள்ள குட்டி போட்டிருக்கு. இந்த பட்டிக்காட்ட டுபாய்க்கு கூட்டிட்டு வந்தேன் பாரு என்னை சொல்லணும். அய்யோ! இவள எப்படி தலை முழுகுறதுன்னு நான் பார்த்துக்கிட்டு இருந்தா, இவ முழுகாம இருக்க ப்ளான் பண்றா. அதுவும் முத்தமாமே முத்தம்! முட்டாள் முட்டாள்"
தாறுமாறாக திட்டிவிட்டு யாத்ரன் அறையிலிருந்து வெளியேறி கதவை அடித்துச் சாத்தியிருந்தான்.
"அப்போ அன்னைக்கு முத்தம் கொடுத்ததுக்கு உடனே குழந்தை உண்டாகாதோ, ச்சே! இது தெரியாம அவருக்கு ஆசைக் காட்டி மோசம் பண்ணிட்டியே ஜான்சி. வயித்துக்குள்ள பாப்பா வரதுக்கு இன்னும் எத்தனை நாளாகுமோ?"
அப்போதும் அவனின் கோபத்திற்கான காரணம் புரியாமல் வெகுளியாய் தனக்குள்ளேயே நினைத்துக்கொண்டாள் அவள்.
************
யாவும் நின் யாத்ரனாய்.. EPISODE 20 >>>
Https://agnitamilnovels.blogspot.com/2026/04/20.html
'kadhaikulla polaama' யூடியூப் சேனல்ல இப்போ காதல்போதையடா நீ எனக்கு நாவல் ஆடியோ நாவலா போயிக்கிட்டு இருக்கு..
கிட்டத்தட்ட 8 அத்தியாயங்கள் பதிவிட்டாச்சு.. இதுவரைக்கும் கேக்காதவங்க கேக்க ஆரம்பிங்க.. கண்டிப்பா ரோஹனையும் மாயாவையும் உங்களுக்கு பிடிக்கும்
👇👇
https://youtube.com/@kadhaikullapolaama99?si=ZIbEQ6qPd-b7cg-b

Comments
Post a Comment