யாத்ரன் 17

யாவும் நின் யாத்ரனாய்..

EPISODE 17




"யாத்ரா இதெல்லா ரொம்ப அதிகம்டா, இளவரசிக்கு பெண் பார்க்கும் படலம் நடக்க போகுதுன்னு சொல்றேன். நீ என்னடான்னா சிரிச்சுட்டு இருக்க" 


அவனின் உற்ற தோழன் வர்மன் கேட்ட கேள்விக்கும் அதே புன்னகையைதான் சிந்தினான் யாத்ரன். 


"பார்க்கட்டும், அதுக்கென்ன வர்மா? இப்போ நான் காதலிக்கிறேன்னு தெரிஞ்சா மட்டும் அரசரும் இளவரசியும் ஒத்துக்குவாங்களா ஹாஹாஹா..." 


அவன் கேலியாக சொல்வது போல் இருந்தாலும் அதில் ஆழமான வலி புதைந்திருந்தது.


"அப்போ உனக்கு இதுல எந்த பிரச்சனையும் இல்ல அப்படிதானே, ஒருவேள இளவரசிய காதலிக்கிறேன்னு நீ ஊர் பூரா சொல்லிட்டு திரிஞ்சதெல்லா விளையாட்டா தானா?" என்று சிறு கோபத்தோடுக் கேட்டான் வர்மன்.


அதில் பதறியவனாக, "இல்லை, நான் அப்படி சொல்லல. அவங்கள நான் நிஜமா காதலிக்கிறேன். ஆனா என்னோட காதல் எதிர்பார்ப்பில்லாதது வர்மா, அவங்களுக்கு நான் எந்த வகையிலும் தகுதி இல்லாதவன். அப்படி இருக்குறப்போ நான் இந்த காதல்ல எதையும் எதிர்ப்பார்க்க விரும்பல. தூரத்துலயிருந்து அவங்கள பார்க்குறதே எனக்கு போதும்" என்றான் யாத்ரன்.


அவனுடைய வார்த்தைகளில் காதல் அளவுகடந்து வெளிப்பட்டது.


"ஒருதலை காதல இப்படி கூட சொல்லலாமா? ஏதோ பண்ணி தொலை" என கடுப்பாக சொல்லிவிட்டு வர்மன் நகரப் போக, அவர்களுக்கருகே ஓடி வந்தான் பாலா.


"அண்ணா, கேள்விப்பட்டீங்களா? நாளைக்கு பக்கத்து ராஜ்ஜியமான நகுல தேசத்தோட அரசர் ராஜேந்திரன் நம்ம ராஜ்ஜியத்து மேல போர் தொடுக்க போறாராம். இப்போதான் செய்தி வந்துச்சு. ஊர் மக்களே பயந்து போய் இருக்காங்க" 


அவனுடைய குரல் பதற்றமாக ஒலிக்க, "ஜோதி..." என்று முணுமுணுத்தபடி பதறிக்கொண்டு கனவில் மட்டுமல்ல தூக்கம் கலைந்து எழுந்தமர்ந்தான் நிகழ்கால யாத்ரன்.


வழக்கம் போல் அவனுக்கு மூச்சு வாங்க, நெற்றி வியர்வையை துடைத்துவிட்டு ஏசி குளிரை சற்று கூட்டி வைத்தான்.


"ரொம்ப நாளைக்கப்பறம் இந்த ட்ரீம் வந்திருக்கு. இன்னைக்கும் அந்த இளவரசியோட முகம் தெரியலன்னாலும் அந்த ஆளு சொன்ன நேம்ஸ்ஸ வச்சு நாம ஏன் ரிசேர்ச் பண்ண கூடாது? நகுல தேசம்... அரசர் ராஜேந்திரன்..."


அந்த பெயர்களை சொல்லிப் பார்த்தவன் உடனே லேப்டாப்பை எடுத்து தேட ஆரம்பித்தான்.


அவன் யூகித்தது சரியே! 


அவன் எதிர்பார்த்து தேடியது லாப்டாப் திரையில் பெரிய விளக்கத்தோடு இருக்க, "ஐ கொட் இட்!" என்று கத்தியவன் அந்த தகவல்களை ஆர்வமாக வாசிக்க ஆரம்பித்தான்.


அந்த மன்னராட்சி காலப்பகுதியில் நகுல தேசம் என்று ஒன்று இருந்ததாகவும் அதை ஆட்சி செய்த மன்னர்களில் ராஜேந்திரன் என்ற மன்னர் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.


ஆனால் அந்த அரசர் பல தேசங்களை கைப்பற்றியதாக குறிப்பிடப்பட்டிருந்ததே தவிர அந்த இளவரசி ஜோதியைப் பற்றி எந்தவொரு தகவல்களும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கவில்லை.


அந்த ஆர்டிகலை முழுதாக வாசித்து முடித்தவனுக்கு வெறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.


"அவ்வளவுதானா! இதுல அந்த ப்ரின்ஸஸ பத்தி எதுவுமே மென்ஷன் பண்ணில்லயே! அப்பறம் நான் எப்படி தெரிஞ்சுக்குறது ஓ காட்!" 


நெற்றியை நீவிவிட்டவாறு யோசித்தவனுக்கு அப்போதுதான் ஒரு விடயம் மூளைக்கு உரைத்தது.


"நான் இதுவரைக்கும் தெரிஞ்சுக்காத இந்த கிங் பத்தி என் ட்ரீம்ல வந்திருக்குன்னா கண்டிப்பா அந்த ப்ரின்ஸஸ் கூட உண்மையாதான் இருக்கணும். அப்போ அதுல இருக்குற நான்..."


தீவிரமாக யோசித்த யாத்ரனின் தலை சட்டென பயங்கரமாக வலிக்க, "ஸ்ஸ்.. ஆ..." என்ற கத்தலோடு தலையை தாங்கிக்கொண்டான் அவன்.


சரியாக அறைக்குள் நுழைந்த ஜான்சி வலியில் தலையைத் தாங்கிய வண்ணம் அவன் முகத்தை சுருக்கியிருப்பதைப் பார்த்து பதறியவளாக அவனருகே ஓடினாள்.


"என்னங்க... என்னங்க... என்னாச்சுங்க உங்களுக்கு? இதுக்குதான் நேரத்துக்கு சாப்பிடுங்கன்னு சொல்றேன். ராத்தியானா கப்பு மப்புன்னு எங்கேயோ போய் விடிஞ்சதுக்கப்பறம் வந்தா தலையில வியாதிதானே வரும்! அய்யோ..." என்று அவள் பதற்றத்தில் புலம்பிக்கொண்டே போக, இருக்கும் தலைவலியில் இவள் வேறு என்றுதான் அவனுக்கு நினைக்கத் தோன்றியது.


"மொதல்ல இங்கயிருந்து போ! இல்லன்னா தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க" அவன் அந்த வலியிலும் கோபத்தில் கத்த, அவளோ தன்னவனின் கோபத்தையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.


"தலை வலிக்குறப்போ கோபப்பட கூடாதுங்க, அப்பறம் உங்க தலை வெடிச்சிரும். கொஞ்சம் பொறுத்துக்கோங்க, உடனே வர்றேன்" என்றுவிட்டு அறையிலிருந்து வெளியேறி ஜான்சி அடுத்த பத்தே நிமிடங்களில் ஒரு கையில் உணவுத்தட்டும் மறு கையில் கசாயத்தோடும் வந்தாள்.


யாத்ரனோ அப்போதும் குறையாத தலை வலியோடு தலையைத் தாங்கிய வண்ணம் அமர்ந்திருக்க, அவன் பக்கத்தில் அமர்ந்தாள் அவள்.


உணவைப் பிசைந்து அவனின் வாயிற்கருகே கொண்டு வந்தவள், "ஏங்க மொதல்ல சாப்பிடுங்க, சில நேரங்கள்ல சாப்பிட்டா தலை வலி கம்மியாகும். இந்தா எடுங்க..." என்று சொல்லிக்கொண்டே உணவை எடுக்குமாறு விழிகளால் காட்ட, அவளை வெறித்துப் பார்த்தான் யாத்ரன்.


சிறு வயதிலிருந்து வேலையாட்களிடம் வளர்ந்தவனுக்கு ஜான்சியின் உரிமை கலந்த அன்பு புதிதாகத்தான் தெரிந்தது.


ஆனால் அடுத்தகணம் தன் முகபாவனையை மாற்றிக்கொண்டவன், "அதெல்லா வேணாம்னு சொல்றேன்ல, மொதல்ல இங்கயிருந்து போ..." என்று கடுமை நிறைந்த குரலில் கத்தி விரட்ட, அவளோ கேட்பதாக இல்லை.


"இல்லங்க, சாப்பிடுங்க. சரியாகும் என்னை நம்புங்க" அவள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவனுக்காக கெஞ்ச, ஏனோ அவள் கொடுக்கும் உணவை வாங்கிக்கொள்ள மனம் துடித்தது அவனுக்கு.


தனக்குள் எழும் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டவன் முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொள்ள, மீண்டும் அவனின் வாயிற்கருகே கொண்டு சென்று, "சாப்பிடுங்க" என்றாள் ஜான்சி.


அதற்குமேல் மறுக்க ஆடவனுக்குத் தோன்றவில்லை.


அவள் கொடுத்ததை வாங்கி விழுங்கிக்கொண்டவன் அமைதியாக தரையை வெறித்திருக்க, ஜான்சிக்கு இதுவே ஏதோ பெரிதாக சாதித்தது போல இருந்தது.


உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டவாறு அடுத்தடுத்து அவனுக்கு உணவுகளை ஊட்டி முடித்தவள் தான் கொண்டு வந்த கசாயத்தை அவனிடம் நீட்டினாள்.


உணவை வாங்கிக்கொண்டது போல அதையும் வாங்கி ஒரு மிடறு பருகியவனுக்கு முகம் அஷ்டகோணலாக சுருங்க அப்படியே வாயிலிருந்ததை துப்பினான் யாத்ரன்.


"என்ன கருமம்டீ இது?" அவன் உச்சகட்ட கோபத்தோடுக் கேட்க, "கசாயம், எனக்கு தலை வலின்னா அம்மா இதை பண்ணி கொடுப்பாங்க. பத்தே நிமிஷத்துல சரியாகிரும். மூக்க பொத்தி அப்படியே வாயில சரிச்சிருங்க. கசப்பு தெரியாது" என்றாள் ஜான்சி ஏதோ பெரிய மருத்துவிச்சி போல.


அவளை மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க கோபத்தோடு பார்த்தவன், கையிலிருந்த க்ளாஸை தரையில் விட்டெறிந்தான்.


உள்ளிருந்த கசாயம் மட்டுமல்ல அந்த க்ளாஸ் கூட சுக்கு நூறாக அறைக்குள் சிதறியது.


"கெட் அவுட்!" 


ஏற்கனவே அதிர்ச்சியில் நின்றிருந்தவள் அவனின் கத்தலில் அடித்துப் பிடித்து வெளியே ஓடியிருக்க, எரிச்சலோடு விழிகளை உருட்டினான் யாத்ரன்.


அன்று மாலை, 


"யாத்ரா, எவ்வளவு நாளைக்குதான் வேலைக்கு போகாம இருக்குறதா உத்தேசம்? லுக்,  என் ஃப்ரென்டோட கம்பனில ஒரு வேகென்சி இருக்கு. திஸ் இஸ் த லெட்டர்.  நாளைக்குன்னாலும் நீ இன்டர்வியூ அட்டென்ட் பண்ணலம். வாட் டூ யூ சே?" 


விதுஷா கூரிய பார்வையோடுக் கேட்க, அதை வாங்கிக்கொண்டவனுக்கும் அதை தட்டிக் கழிக்க தோன்றவில்லை.


"ம்ம், நான் போறேன்" அவன் சொல்லிவிட்டு எழுந்து செல்லப் போக, "யாத்ரா டேய்..." என்ற வரதனின் குரலில் வீட்டிலிருந்த மொத்தப் பேரும் திரும்பிப் பார்த்தனர்.


அவனைப் பார்த்ததும் யாத்ரனுக்கு கொலைவெறியே வர, முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்லப் போனவனை ஓடிச் சென்று தடுத்தான் மற்றவன்.


"என்னாச்சுடா, இப்படி நீ நடந்துக்குற அளவுக்கு நான் என்னடா பண்ணேன்?" என்று வரதன் சிறு ஆதங்கத்தோடுக் கேட்க, "எதுவுமே பண்ணல. துரோகி!" என்று அழுத்தமாக சொன்னவன், தோழன் பற்றியிருந்த கரத்தை கோபத்தோடு உதறிவிட்டான்.


அதில் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு இரண்டடி பின்னே நகர்ந்தவன், "நா.. நான் துரோகியா! முன்னாடியே ஹீரோயிஸம் காட்டாதேன்னு தலைப்பால அடிச்சுக்கிட்டேனே, நீயா போய் பிரச்சனையில சிக்கிகிட்டு இப்போ என்னை துரோகின்னு சொல்றியா பாவி!" என்று சிவாஜி பாணியில் பேசிக் காட்ட, யாத்ரனுக்கு பிபி எகிறியது.


"யூ ப்ளடி ****..." என்று கத்திக்கொண்டு ஒரு அடி முன்னே வைத்தவன், "ச்சே!" என்றுவிட்டு தனதறைக்கு விறுவிறுவென்று சென்றுவிட, "ஆன்ட்டி நீங்களாச்சும்..." என்றுக்கொண்டே விதுஷாவை நோக்கி திரும்பினான் வரதன்.


"உன்னாலதான் எல்லாமே இடியட்!" என்று கத்திவிட்டு அவர்களும் பதிலுக்கு முகத்தை திருப்பிக்கொண்டு செல்ல, 'என்னடா இது, குடும்பமா சேர்ந்து கார்னர் பண்றீங்க' என்று முணுமுணுத்தபடி வாசலை நோக்கி திரும்பியவனின் முன்னே வந்து நின்றாள் ஜான்சி.


"அண்ணே... உங்களுக்காக நான் இருக்கேன். நான் கேட்ட பார்சல்..." ஜான்சி அவனை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டு நிற்க, "க்கும்!" என்று நொடிந்துக்கொண்டவன் அவளிடம் தான் கொண்டு வந்ததை நீட்டினான்.


"ஆமா... இது எதுக்கு உனக்கு? ஏதாச்சும் கேவலமா ஒரு ப்ளான் போட்டிருப்ப, என்னன்னு சொல்லு!" அவன் ஒற்றைப் புருவத்தை தூக்கிய வண்ணம் கேட்க, "அது... அது ஒன்னு இல்லண்ணா. நீங்க.. நீங்க ருக்மணி கூட பேசினீங்களா? அவ எப்படி இருக்கா?" என்று கேட்டாள் பேச்சை மாற்றியபடி.


வரதனோ அவளை ஆழ்ந்த பார்வைப் பார்த்தவன், "வெயிட்!" என்றுவிட்டு உடனே ஒரு எண்ணிற்கு காணொளி அழைப்பு எடுக்க, அந்த புறம் மகனின் அழைப்பை ஏற்கத் தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார் வனஜா.


"அடியே ருக்மணி, இதை என்னடீ  பண்ணணும், டச்சு ஃபோனாமே டச்சு ஃபோனு! தொட்டா வேலையே செய்ய மாட்டேங்குது. கடவுளே... ருக்மணியே இங்க வாடீ!" தாயின் கத்தலில் அடித்துப் பிடித்து ஒடி வந்தவள் உடனே அலைப்பேசியை பிடுங்கியெடுத்து அழைப்பை ஏற்றாள்.


"அட ருக்மணி, உனக்கு இதெல்லா தெரியுமாடீ, எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு" ஏதோ மகள் விண்வெளிக்கு ராக்கெட் விட்டது போல அவர் பெருமைப்பட, காலரைத் தூக்கி விட்டுக்கொண்டாள் அவள்.


"அம்மா, என்னம்மா பண்றீங்க? ஒரு கால் பண்ணா அதை எடுக்குறதுக்கு இம்புட்டு நேரம்" அவன் பொருமிக்கொண்டான்.


"சும்மா திட்டாதடா வரதா! நீ பாட்டுக்கு இதை வாங்கி கொடுத்துட்டு போயிட்ட. இதை டச்சு பண்றதுக்குள்ள பெரிய போராட்டமே பண்ண வேண்டியதா இருக்கு. ஆனா உனக்கொன்னு தெரியுமா? ஊர்ல அம்மாவோட மவுசே இப்போ வேறடா வரதா. ஊர் பொம்பளைங்கள்லயே என்கிட்டதான் டச்சு ஃபோனு இருக்கு. பக்கத்து வீட்டு சுமிலாக்கு என்னை பார்த்தாலே வயிறு எரியுதுன்னா பாரேன்" என்ற தாயின் பேச்சில் தலையில் அடித்துக்கொள்ளாத குறைதான் அவன்.


"அய்யோ அய்யோ அய்யோ! ஃபோன ருக்மணிகிட்ட கொடுங்க" என்றவன் ஜான்சியிடம் அலைப்பேசியைக் கொடுக்க, தோழியைப் பார்த்ததும் விழிகள் கலங்கிவிட்டன அவளுக்கு.


"ஜானு, எப்படிடீ இருக்க? நீ இங்க இல்லாம எனக்கு நாளே போக மாட்டேங்குது" என்ற ருக்மணியின் குரல் தழுதழுக்க, "நா.. நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க ருக்கு? அம்மா.. அம்மாவும் அப்பாவும் எப்படி இருக்காங்க?" அழுகையை அடக்கிக்கொண்டு பேசினாள் மற்றவள்.


ஏதோ சொல்ல வாயெடுத்தவள் அதை தனக்குள் மறைத்துக்கொண்டு, "அவங்.. அவங்களுக்கென்ன? நல்லா இருக்காங்க. உன் வீட்டுக்காரரு உன்ன நல்லா பார்த்துக்குறாரா?" என்று கேட்டு தோழியின் பதிலை ஆர்வமாகப் பார்க்க, ஜான்சியின் முகம் சட்டென இறுகியது.


"அது... என் மேல கோபமாதான் இருக்காரு. ஆனா அவரு ரொம்ப நல்லவரு ருக்கு, உனக்குதான் தெரியுமே, ஊர்ல இருக்கும் போது எனக்காக போராடின ஒரே மனுஷன் அவருதான். சீக்கிரம் எல்லாமே சரியாகிரும். எனக்கு நம்பிக்கை இருக்கு" 


அவளுடைய வார்த்தைகளிலிருந்த வலியை ருக்மணி மட்டுமல்ல பக்கத்திலிருந்த வனஜாவும் உணரத்தான் செய்தார்.


மகளின் கையிலிருந்த அலைப்பேசியை தன் கைக்கு எடுத்தவர், "ஏதோ நம்ம ஊர்க்கார பொண்ணா போயிட்ட, அதனால சொல்றேன். நான் சொல்றபடி பண்ணேன்னா உன் புருஷன் உன் கையில" என்றுவிட்டு ஒரு சில பரிகாரங்களை சொன்னார். 


வனஜாவை பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த வரதனோ, 'இவள யாத்ரன் வீட்ட விட்டு துரத்த போறது கன்ஃபார்ம்' என்று சலிப்பாக நினைத்துக்கொண்டான். 


*********

யாவும் நின் யாத்ரனாய்..

 EPISODE 18 >>>

https://agnitamilnovels.blogspot.com/2026/04/18.html


ராகம் தேடும் ரதியவளோ (தொலைந்தேன் தெளிந்தேன்) 


காதல் வேட்கை (காதல் போர் முழக்கம்)


ராட்சதனின் மென்னோவியமே (லவ் ஆர் ஹேட் மீ)


என்னோட மூன்று கதைகள் நாகம்மை பதிப்பகத்தால புத்தகமா வெளியிடப்பட்டிருக்கு.. 


புத்தகம் வாங்க தொடர்புகொள்ள வேண்டிய எண் 👉 9952076258 / 7200308492


-Sheha zaki


Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚