யாத்ரன் 15
யாவும் நின் யாத்ரனாய்..
EPISODE 15
பால்கெனியில் நின்று சிகரெட் புகையை ஊதித் தள்ளிக்கொண்டிருந்தான் யாத்ரன்.
கொழுந்துவிட்டு எரியும் மனதை அடக்க நீண்டநேரமாக முயற்சிக்கிறான் போல! இருந்தும் தோல்விதான்.
நடந்தது அனைத்தும் மீண்டும் மீண்டும் அவனின் மனக்கண் முன் தோன்றி மறைய, ஆத்திரம் எல்லையைக் கடந்தது.
சரியாக வரதனிடமிருந்து அழைப்பு வர திரையைப் பார்த்தவன் முதல் நான்கைந்து அழைப்புக்களை ஏற்காது துண்டிக்க, மற்றவன் மட்டும் அவனுக்கு சளைத்தவனா என்ன!
அவனும் பிடிவாதமாய் தொடர்ந்து அழைக்க, துண்டிக்கச் சென்றவன் பின் என்ன நினைத்தானோ அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
"டேய் யாத்ரா, ஆல் ஓகே? ஜான்சி எங்கடா, இன்னும் அவமேல கோபமாதான் இருக்கியா?" அவன் பதற்றமாகக் கேட்க, "அந்த சனியன் எங்க போய் தொலைஞ்சிருக்கோ எனக்கு தெரியல. நீ மொதல்ல கால் பண்றத நிறுத்து, இல்லன்னா நான் உன்ன ப்ளாக் பண்ணுவேன்" என்றான் யாத்ரன் கடுப்பாக.
அவனின் வார்த்தைகளில் இப்போது வரதனுக்கு கோபம் எகிறியது.
"என்னடா சனியன் பனியன்னு அந்த பொண்ண இப்படி பேசுற, எங்கன்னு தெரியாதுன்னு வேற சொல்ற. நீ என்ன நினைச்சுட்டு இருக்க. அவ பொய்தான் சொன்னா, நான் இல்லன்னு சொல்லல. ஆனா அது உன்ன கல்யாணம் பண்ணிக்குறதுக்காகதான் யாத்ரா. ஜான்சி என் ஊரு பொண்ணு, ஒழுங்கா போய் அவ எங்கன்னு பாரு!"
அவன் படபடவென பொரிந்துவிட்டு அழைப்பைத் துண்டித்திருக்க, அலைப்பேசியை அறைக்குள் தூக்கியெறிந்தான் அவன்.
ஏற்கனவே கோபத்தில் இருந்தவனுக்கு தோழனின் பேச்சால் மேலும் உள்ளுக்குள் எள்ளும் கொள்ளும் வெடிக்க, இதற்கு காரணமானவளோ யாருமில்லாத ஹாலில் தன்னந்தனியாக சொகுசு சோஃபாவில் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தாள்.
"யம்மாடி! புசுபுசுன்னு இருக்கு, சோஃபா செட்டே கட்டில் மாதிரி இம்புட்டு பெருசா இருக்கே!"
வாய்விட்டு சொல்லிக்கொண்டு அவள் அமர்ந்த நிலையிலேயே துள்ளிக்குதிக்க, வீட்டு வேலைக்காரர்களோ தங்களுக்குள் கிசுகிசுத்த வண்ணமாய் அவளை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தனர்.
அப்போதுதான் அவளுக்கு ஒரு விடயம் ஞாபகத்திற்கு வந்தது.
"என்ன இது, இன்னைக்கு முதலிரவுன்னு இங்க இருக்குறவங்களுக்கு தெரியுமா தெரியாதா? என்னை யாரும் அலங்காரம் கூட பண்ணலயே, இவர் வேற அறைக்குள்ள போய் கதவ சாத்திக்கிட்டவரு இப்போ வரைக்கும் வெளியிலயே வரல. என்ன பண்றது?"
தீவிரமாக யோசித்த ஜான்சிக்கு ஏற்கனவே பயணம் செய்த களைப்பு தூக்கத்தை வரவழைக்க, அதற்குமேல் எதுவும் யோசிக்காமல் சோஃபாவிலேயே உறங்கிப் போனாள்.
சில மணிநேரங்கள் கழிந்திருக்கும். சட்டென கண் விழித்தவளுக்கு மஞ்சள் நிற விளக்குதான் முதலில் விழிகளில் சிக்கியது.
அந்த சிறு வெளிச்சம் அத்தனை பெரிய ஹாலில் பட்டுத் தெறிக்க, சுற்றிமுற்றி பார்த்தவளுக்கு ஏனென்று தெரியாத ஒரு பயம் மனதைக் கவ்வியது.
திடீரென சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த பெரிய மணிக்கூட்டிலிருந்து டிக்டிக் என்ற சத்தம் சட்டென சற்று உரத்தே கேட்க, அதில் தூக்கி வாரிப்போட்டவளாக நடுநடுங்கிப் போய் நின்றாள் ஜான்சி.
அவளுடைய கால்கள் தானாக நகர்ந்து பயத்தில் மாடியிலிருக்கும் அறையை நோக்கி ஓடின.
அவளுடைய அதிர்ஷ்டம் சிறு இடைவெளியில் திறந்திருந்த அறைக்கதவைப் பார்த்ததும் அவளுக்காக திறந்து வைத்திருப்பது போல்தான் அவளுக்குத் தோன்றியது.
உடனே அந்த அறையை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தவள் கும்மிருட்டாக இருந்த அறைக்குள் கைகளை துலாவியபடி முன்னே செல்ல, திடீரென அவளுடைய கைகளில் ஏதோ பட்டுச் சென்றது.
"அவராதான் இருக்கும், அவரேதான்.."
தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு அவள் அந்த உருவத்தை இறுகப் பிடித்துக்கொள்ள, "ஆ..." என்ற அலறல் சத்தத்தில் அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தார் ராஜ்தீப்.
உடனே அவர் அறை மின்விளக்கை ஒளிரவிட, ஜான்சியின் பிடியிலிருந்த விதுஷாவோ அவளை மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க முறைத்துப் பார்த்திருந்தார்.
ஜான்சிக்கு இப்போது எப்படி சமாளிப்பதென்றே தெரியவில்லை.
"அது வந்து அத்தை... அது நான்..."
அவள் ஏதோ சமாளிக்க வர, அவளை வேகமாக உதறித் தள்ளியவர் அவளின் பின்னங்கழுத்தை பற்றி இழுத்துக்கொண்டே சென்று வெளியில் தள்ளி அறைக்கதவை சாத்திவிட்டார்.
அவர் தள்ளிவிட்ட வேகத்தில் அறை வாசலில் விழுந்தவள் பூட்டிய கதவை பாவமாகப் பார்த்துவிட்டு மீண்டும் சுற்றி முற்றி தன்னவனைதான் தேடினாள்.
'எங்கங்க இருக்கீங்க, என.. எனக்கு பயமா இருக்கு. இப்படிதான் என்னை தனியா விடுவீங்களா, எங்கங்க இருக்கீங்க?'
உள்ளுக்குள் மௌனமாக அழுத வண்ணம் சுற்றித் தேடியவளுக்கு அப்போதுதான் அங்கிருந்த இன்னொரு அறை விழிகளில் தென்பட்டது.
எழுந்து அந்த அறை பக்கம் சென்றவள் மெல்ல அந்த அறையைத் திறந்து உள்ளே செல்ல, சிறு வெளிச்சம் அறை முழுக்க பரவியிருந்தலில் 'அப்பாடா' என்றிருந்தது ஜான்சிக்கு.
அறை வாசலில் நின்றவாறு கட்டிலில் கைக்கால்களை விரித்து படுத்திருந்த உருவத்தை எட்டிப் பார்த்தாள் அவள்.
அது சாட்சாத் யாத்ரனேதான்.
அவளிடமிருந்து நிம்மதி பெருமூச்சு வெளியாக, அப்போதுதான் அறை முழுக்க நிரம்பியிருந்த சிகரெட் மணம் அவளுடைய மூக்கைத் துளைக்க, அவளுக்கு குடலை பிரட்டியது.
"ச்சீ.. மூச்சு விடவே முடியலயே! இவருக்கு இந்த பழக்கம்லாம் வேற இருக்கா?"
உதட்டைப் பிதுக்கிக்கொண்டு அவனைப் பார்த்தவள் அலங்கோலமாக இருந்த அறையை எரிச்சலாக பார்த்த வண்ணம் தான் அணிந்திருந்த பாவாடையை தூக்கிக் கட்டினாள்.
தான் கொண்டு வந்த துணிகளிலிருந்து பழைய துணியொன்றை கையிலெடுத்து அவள் அறையை அந்த நேரங்கெட்ட நேரத்தில் சுத்தப்படுத்த ஆரம்பிக்க, அதுவும் ஜான்சிக்கு துரதிஷ்டவசமாகிப் போனது.
வேகவேகமாக கீழே சிதறிக் கிடந்த பொருட்களை ஓதுக்கிவிட்டு கையிலிருந்த துணியால் அவள் தூசு தட்ட, தவறுதலாக டீபாயின் மீதிருந்த கண்ணாடியிலான ஷீல்ட் ஒன்று தரையில் விழுந்து சுக்குநுறாகியது.
"அடக்கடவுளே!" என்று அவள் நெஞ்சைப் பிடித்துக்கொள்ளும் அதேநேரம் கண்ணாடி நொறுங்கிய சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தமர்ந்தான் யாத்ரன்.
திருதிருவென விழித்த வண்ணம் நின்றுக்கொண்டிருப்பவளை முதலில் அதிர்ந்துப் பார்த்தவன் பின் நிதர்சனத்தை உணர்ந்தவனாக விழிகளில் அனல் தெறிக்கப் பார்க்க, ஜான்சியோ பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டாள்.
"அது வந்துங்க நான்..." அவள் ஏதோ சொல்ல வர, அவனுக்கோ அதையெல்லாம் கேட்கும் அளவிற்கு பொறுமையில்லை.
விருட்டென எழுந்து அவளை மின்னல் வேகத்தில் நெருங்கிய யாத்ரன் அவளின் முழங்கையைப் பற்றி தரதரவென இழுத்துச் செல்ல, தரையில் சிதறிக்கிடந்த கண்ணாடித் துண்டொன்று அவளுடைய பாதத்தை சரியாக பதம் பார்த்தது.
"ஆஆ... அம்மா!"
வலியில் அலறியவள் அவனுடைய கரத்தை உதறிவிட்டு அப்படியே கால் பாதத்தை பிடித்துக்கொண்டு தரையில் அமர்ந்துவிட, அவளின் அழுகையைப் பார்க்க யாத்ரனுக்கு பாவமாக இருந்திருக்க வேண்டும்!
ஆனால் இருந்த கோபத்தில் அவளின் அழுகை அவனின் கோபத்தை மேலும் தூண்டிவிட்டது என்னவோ உண்மை.
"ஏய் வாய மூடுடீ! இப்படி அழுது நாடகமாடிதான் மொத்த ஊரையும் ஏமாத்தி என்னை கல்யாணம் பண்ணியிருக்க. ச்சீ... உன்ன எப்படிப்பட்ட பொண்ணுன்னு நினைச்சிருந்தேன், ஆனா நீ ஒரு செல்ஃபிஷ். உன்னோட தேவைக்காக என்னை யூஸ் பண்ணியிருக்க. அந்த ஊர சேர்ந்தவதானே அவங்க புத்தி கொஞ்சம் கூடவா உனக்கு இல்லாம போகும்"
நாக்கில் விஷத்தை தடவியது போல் அவன் விட்ட வார்த்தைகள் அவளுடைய இதயத்தை குத்திக் கிழித்தது.
பாதத்தில் ஏற்பட்ட இரத்தக் காயத்தை விட வார்த்தைகளால் உண்டாகும் காயத்தின் வலி ஆழமாக இருக்க, விழிகளில் வலியோடு அவனைப் பார்த்தாள் ஜான்சி.
"என்.. என்னை மன்னிச்சிருங்க! நீங்க சொல்ற மாதிரி நா.. நான் சுயநலவாதிதான். உண்மை தெரிஞ்சா என்னை கொன்னுடுவாங்களோன்னு பயத்துல எங்க ஊர்க்காரங்களோட முட்டாள்தனத்தையும் உங்களயும் எனக்காக பயன்படுத்திக்கிட்டேன். இதுக்காக நீ.. நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்க தயாரா இருக்கேங்க. ஆனா என்னை இங்கயிருந்து போக மட்டும் சொல்லிராதீங்க"
என்று அவள் அழுகையோடு விம்மி விம்மி பேசிக்கொண்டே கையெடுத்து கும்பிட, கோபத்தில் அவளுடைய கரத்தை தட்டிவிட்டான் யாத்ரன்.
"நல்லா நடிக்கிறடீ! உன்ன பார்க்கவே அருவருப்பா இருக்கு. என் லைஃப் எப்படி இருக்கணும், என்னோட வைஃப் எப்படி இருக்கணும்னு எவ்வளவு கனவோட இருந்தேன் தெரியுமா! மொத்தத்தையும் நாசம் பண்ணிட்டியேடீ, யூ டோன்ட் டிசெர்வ் மீ, உனக்கு அது புரியுதா?"
அவனின் கோபம் எல்லை மீறிச் சென்றது. கொஞ்சமும் குறைந்தபாடில்லை.
மன்னிப்பு கேட்டு சமாளித்து விடலாம் என அவள் ஒரு எண்ணத்தில் இருக்க, அவனிடத்தில் இத்தகைய ஆக்ரோஷத்தையும் கோபத்தையும் அவள் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
"நா.. நான் உங்களுக்கு தகுதி இல்லாதவதான். ஆனா... ஆனா ஒரு நல்ல மனைவியா என்னால இருக்க முடியுங்க. தயவு செஞ்சு என்னை மன்னிச்சு ஏத்துக்கோங்க" என்று மீண்டும் ஜான்சி கெஞ்சிக்கொண்டே அவனின் கரத்தைத் தொடப் போக, தீச்சுட்டாற் போல் உதறிவிட்டான் அவன்.
"டோன்ட் டச் மீ, யூ டோன்ட் ஹேவ் எனி ரைட்ஸ் கொட் இட்!"
அவளை அருவருப்பா ஒரு பார்வைப் பார்த்தவன் குளியலறைக்குள் நுழையப் போக, அவனை அழைத்து நிறுத்தினாள் ஜான்சி.
விழிகளிலிருந்து ஓடும் விழிநீரை அழுந்தத் துடைத்தவள், "இன்னைக்கு முதலிரவு இல்லயா அப்போ?" என்று அழும் குரலிலேயே கேட்க, யாத்ரனுக்கு 'இவளை என்ன செய்தால் தகும்?' என்றுதான் நினைக்கத் தோன்றியது.
"ச்சீ..." என்று முகத்தை சுளித்தவன் குளியலறை கதவை அடித்துச் சாத்த, உதடு பிதுங்க மூடிய கதவைப் பார்த்தவள் அவனின் பெரிய கட்டிலில் ஓரமாக சென்று ஒருக்களித்து சுருண்டு படுத்துக்கொண்டாள்.
இத்தனை மென்மையான மெத்தையில் அவள் இதற்குமுன் உறங்கியதே இல்லை.
அதனாலயோ என்னவோ ஆழ்ந்த உறக்கத்திற்கு அவள் சென்றுவிட, அடுத்த சில நிமிடங்களில் தலையை நீரில் நனைத்து முயன்று கோபத்தை அடக்கிக்கொண்டு வெளியில் வந்தான் அவன்.
வந்ததும் தன் கட்டிலில் படுத்திருந்தவளைள் பார்த்தவனுக்கு அவளின் செயலில் எரிச்சல்தான் வந்தது.
வேகமாகச் சென்று அவளை தரையில் இழுத்துப் போடப் போனவன் கரத்தின் மேல் தலையை வைத்து சுருண்டு படுத்திருந்தவளைப் பார்த்துவிட்டு என்ன நினைத்தானோ!
கோபத்தில் காலை தரையில் உதைத்துவிட்டு வேறு வழியில்லாமல் மறுபுறம் சென்று படுத்துக்கொண்டான்.
அன்றைய இரவு அவனுக்கு தூங்கா இரவாகிப் போனது என்றால் அவளோ புசுபுசு மெத்தையில் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தாள்.
அன்றைய நாள் கழிந்து அடுத்த நாளும் விடிந்தது.
விடியற்காலை மொத்த வீடும் உறக்கத்தில் இருக்க, வேலைக்காரர்கள் கூட வராத அந்த பெரிய சமையலறைக்குள் தடுமாறிக்கொண்டிருந்தாள் ஜான்சி.
"இம்புட்டு பெரிய சமையல்கட்டா! மசாலாவ போட்டுட்டு உப்ப எடுத்து வரதுக்குள்ள சட்டிக்குள்ள இருக்குறது தீஞ்சிரும் போலயே... அய்யோ இப்போ என்ன பண்றது! இதெல்லா என்ன சாமான்னு கூட தெரியல. அடுப்பு கூட வித்தியாசமா இருக்கே! எல்லாரும் எழுந்துருக்குறதுக்குள்ள காபி வேற போடணும்"
சமைலறை நடுவே நின்று தனக்குத்தானே பேசிய வண்ணம் நின்றுக்கொண்டிருந்தவள் தனக்கு தெரிந்தது போல் சமையலறையிலிருக்கும் நவீன மெஷின்களை உபயோகப்படுத்த ஆரம்பித்தாள்.
என்ன செய்தாளோ ஏது செய்தாளோ!
அந்த வீடே அதிரும் வண்ணம் குண்டு போட்டது போல ஒரு சத்தம் கேட்க, அறைக்குள்ளிருந்த மொத்தப் பேரும் அடித்துப் பிடித்து அரைத்தூக்கத்தில் எழுந்தோடி வந்தனர்.
"வாட் ஹேப்பன்ட் ஹியர், என்ன சத்தம் இது? கெமி... கெமி..."
விதுஷா கத்திக்கொண்டே சமையலறை நோக்கி ஓடி வர, கட்டிலில் படுத்திருந்தவளை காணாத போதே தன் மனைவியின் வேலைதான் என உறுதி செய்தவன் போல வேகமாக வந்தான் யாத்ரன்.
"பட்டிக்காடு ஏதோ பண்ணி வச்சிருக்கு" அவன் சொல்லி முடித்ததும்தான் சமையலறை மூலையில் காதுகளை பொத்திக்கொண்டு பயந்தபடி அமர்ந்திருந்தவளை கண்டனர் பெரியவர்கள் இருவரும்.
"இவள யாரு இதுக்குள்ள விட்டா, ஏய் எழுந்துரு... கெட் அப்!" என்ற விதுஷாவின் அதட்டலில் எழுந்து நின்றவளின் உடல் அப்போதும் நடுங்கிக்கொண்டிருக்க, உள்ளே எட்டிப் பார்த்தனர் மூவரும்.
அங்கு திண்ணையிலிருந்த காஃபி மெஷினைதான் உடைத்திருக்கிறாள் போல!
"அது வெடிக்குற அளவுக்கு அப்படி என்னம்மா பண்ண?" என்று ராஜ்தீப் உள்ளே எட்டிப் பார்த்த வண்ணம் புரியாமல் கேட்க, அவளுக்கு பதில் சொல்ல நா எழவே இல்லை.
"யாத்ரா இது எல்லாமே உன்னோட தப்புதான். இப்படி ஒருத்திய வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்க. ச்சே! ஐ நெவர் எக்ஸ்பெக்ட் திஸ் ஃப்ராம் யூ.. "
ஏற்கனவே அவள்மேல் கடுப்பில் நின்றிருந்த ஆடவனுக்கு தாயின் வார்த்தைகளில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போலத்தான் இருந்தது.
அவன் அவளை தீப்பார்வைப் பார்க்க, அவளுடைய விழிகளிலிருந்து விழிநீர் அருவியாய் ஓடியது.
*********
யாவும் நின் யாத்ரனாய்.. EPISODE 16 >>>
https://agnitamilnovels.blogspot.com/2026/04/16.html
ஒரு ஹேப்பீ நியூஸ் 😃
SM site நடந்த ஆன்ட்டீ ஹீரோ நாவல் போட்டியில நான் எழுதின 'காதல் போர் முழக்கம்' நாவல் இங்க எத்தனை பேர் வாசிச்சிருக்கீங்கன்னு எனக்கு தெரியல..
ஒரு வெறித்தனமான ஆன்ட்டீ ஹீரோ நாவல் அது... April 14th தமிழ் புத்தாண்டு அன்னைக்கு 'காதல் வேட்கை' அப்படிங்குற பேருல புத்தகமா ரிலீஸ் ஆகியிருக்கு..
ராவண் And வேதா இப்போ புத்தக வடிவில் 😘 ஆணாதிக்கத்துக்கும் பெண்ணியவாதிக்கும் இடையில நடக்குற காதல் போர்னு கூட இந்த கதைய சொல்லலாம்..
புத்தகம் வாங்க தொடர்புகொள்ள வேண்டிய எண் 👉 9952076258 / 7200308492
-Sheha zaki

Comments
Post a Comment