யாத்ரன் 14

யாவும் நின் யாத்ரனாய்..

EPISODE 14




ஹோமகுண்டத்தின் நெருப்பு கொழுந்துவிட்டு எரிய, அதற்கு போட்டியாக அந்த ஊர் தெய்வ சிலையின் முன்னே நின்றிருந்த யாத்ரனின் மனம் உலைக்களமாய் கொதித்துக் கொண்டிருந்தது.


விட்டால் எரித்து விடுவேன் எனும் தோரணையில் முகம் சிவக்க கை முஷ்டியை இறுக்கிக்கொண்டு அவன் நின்றிருந்த விதத்தைப் பார்த்ததும் ஜான்சியின் முதுகுத்தண்டு பயத்தில் சில்லிட்டது.


'கடவுளே...' என்று இருக்கும் அத்தனை கடவுள்களையும் தன் துணைக்கு நாடினாள் அவள்.


அவன் விழிகளில் குறும்புத்தனத்தையும் அக்கறையையும் பார்த்து பழகியவளுக்கு இந்த வெறுப்பும் கோபமும் என்னவோ புதிதுதான்.


ஆனால், பாவம்.. சற்று சுயநலமாக யோசிக்க வேண்டிய நிலை அவளுக்கு.  


புரோகிதர் மந்திரங்களை சொல்லிக்கொண்டே கருப்புமணிகள் கோர்க்கப்பட்ட அந்த மாங்கல்யத்தை அவனிடம் நீட்ட, சுற்றியிருந்த ஊர் மக்களின் முகத்தில் மருந்துக்கும் புன்னகையில்லை.


மாறாக, விழிகளில் கோபம் மிதக்க, பாறை போல் இறுகிப் போயிருந்தது அத்தனை பேரின் முகமும்.


இதில் சுபாஷின் நிலையை சொல்லவா வேண்டும்!


நடப்பதை பார்க்க விரும்பாது எரிச்சலோடு  அவர் முகத்தை திருப்பிக்கொள்ள, மனம் குளிர நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தார் அர்ச்சனா.


எந்த மேளதாள சத்தங்களும் இல்லை. வெறுமென புரோகிதரின் மந்திரங்கள் மட்டுமே அந்த இடத்தை நிரப்பின.


கையிலிருந்த மாங்கல்யத்தை பார்த்துவிட்டு சுற்றி ஒரு பார்வைப் பார்த்தான் யாத்ரன்.


"நான்தான் அப்போவே சொன்னேனே, கேட்டியா நீனு! இப்போ அனுபவி ராஜா.." என்று சொல்வது போல் இருந்தது வரதனின் பார்வை.


கோபத்தோடு தோழனைப் பார்த்தவன் வேறுவழியில்லாமல் அவள் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டிவிட்டான்.


அவர்கள் மீது பூக்களோ அர்ச்சதைகளோ தூவப்படவில்லை. ஆனால், பெண்ணவளின் மனம் விடுதலை அடைந்த சந்தோஷத்தில் மிதந்துக்கொண்டிருந்தது.


ஏனென்று தெரியாமல் பலமான காற்று வீசி சுற்றியிருந்த மரங்கள் வேகமாக ஆட, அந்த மரத்திலிருந்த பூக்கள் அவர்கள் மீது தாராளமாக விழுந்தன. 


அதைப் பார்க்கும் போது இயற்கையே அவர்களை வாழ்த்துவது போல் ஜான்சிக்கு தோன்றியது.


ஆனால், அந்த மகிழ்ச்சி சில கணங்கள்தான். 


சிறு சந்தோஷத்தோடு விழிகளை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்தவளின் மொத்த புன்னகையும் யாத்ரனின் விழிகளில் தெரிந்த ஆக்ரோஷத்தைப் பார்த்ததும் அப்படியே வாடிப்போக, அந்த நொடி அவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது.


'இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கி விட்டேனோ...' 


யாத்ரன் ஒன்றும் முன்கோபக்காரன் அல்ல. ஆனால் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழிக்கு ஏற்றவன் அவன்.


எப்போதாவது வெளிப்படும் அவனுடைய கோபம் சுற்றியிருப்பவர்களை சுழற்றியடிக்காமல் விடாது என்றுதான் சொல்ல வேண்டும். 


இப்போது அந்த கோபத்தில் சிக்கி இருப்பது என்னவோ ஜான்சிதான். அதுவும் வழிய சென்று மாட்டியிருக்கிறாள், சும்மா விட்டு விடுவானா என்ன!


திருமணம் முடிந்த கையோடு மகளின் உடைமைகளை சுபாஷ் வெளியில் தூக்கியெறிந்திருக்க, பிரிவின் வலியில் தாயை அணைத்து அழுது கரைந்தவளோ தனக்கு தேவையான ஒருசில உடைகளையும் பாஸ்போர்டையும் எடுத்துக்கொண்டாள்.


வரதனோ அடுத்தநாள் காலையில் மூவருக்கும் டுபாய் செல்வதற்கான டிக்கெட்டை பதிவு செய்தவன், அன்றே தோழனையும் அவன் மனைவியையும் அழைத்துக்கொண்டு ஊரை விட்டே புறப்பட்டிருந்தான்.


யாத்ரனோ ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை, நடப்பது நடக்கட்டும் என்பது போல் நின்றுக்கொண்டிருக்க, பெண்ணவளுக்கு புலி பதுங்குவது  பாய்வதற்கு என்று மட்டும் நன்றாக புரிந்துக்கொள்ள முடிந்தது.


ஆனால் தன்னை மீறிய ஒரு குருட்டு நம்பிக்கை. 


'நான்கைந்து நாட்களில் கோபம் தானாக குறைந்துவிடும்' அவள் ஒன்று மனதில் நினைத்து தன்னைத்தானே தேற்றிக்கொண்டாள். 


ஆனால், விதி தன் விளையாட்டை வேறு விதமாக ஆடத் தொடங்கியிருந்தது.


ஊரை விட்டு வெளியேறி ஏர்போர்ட் செல்லும் வரை ஒரு ஹோட்டலில் தங்கிக்கொண்டவர்கள் அடுத்தநாள் சரியான நேரத்திற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னே சென்று நின்றுக்கொண்டனர்.


ஜான்சிக்கு அந்த ஏர்போர்ட் கூட எட்டாவது அதிசயமாகத்தான் கண்களுக்கு தெரிந்தது. 


வாயைப் பிளந்த வண்ணம் சுற்றி முற்றி ஆச்சரியமாகப் பார்ப்பதில் தீவிரமாக இருந்தவள் யாத்ரனின் கோபத்தை எல்லாம் மறந்தே போய்விட்டாள்.


அவனும் ஏதோ அசிங்கத்தை பார்ப்பது போல் அவளை விட்டு ஒதுங்கியே இருக்க, வரதனுக்கு ஒருபக்கம் ஜான்சியின் செயலில் கோபம் இருந்தாலும் இன்னொரு புறம் யாத்ரனின் எதிர்வினையை நினைத்து அவளைப் பார்க்க பாவமாகவும் இருந்தது.


இப்படியே விமானம் செல்லத் தயாராகும் நேரமும் வந்தது.


வாழ்க்கையில் முதல் தடவை ஊரைவிட்டு வெளியேறியிருக்கிறாள். அவளுடைய முதல் பயணமும் இதுதான்.  அதுவும் விமானப் பயணம். 


அவளின் துரதிஷ்டம் ஜன்னல் சீட்டில் யாத்ரன் அமர்ந்திருக்க, வாயைத் திறந்து அதைக் கேட்கத்தான் தைரியமில்லை அவளுக்கு.


ஆசையோடு தன் இருக்கையிலிருந்து ஜன்னல் வழியே தெரிபவைகளை எட்டி எட்டி பார்த்த வண்ணமாய் அவள் இருக்க, ஆடவனோ இவளை திரும்பியும் பார்க்கவில்லை.


கை முஷ்டியை இறுக்கிக்கொண்டு ஜன்னல் வழியே தெரியும் அழகை ரசிக்க முயன்றாவது தன் கோபத்தை கட்டுப்படுத்த முயன்றான். ஆனால் அனைத்தும் தோல்வியே!


வெடிக்க காத்திருக்கும் குண்டு போல் அவனிருக்க, ஏதோ ஃபேமிலி பிக்னிக் செல்வது போல் தன் முதல் பயணத்தை மனதார ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தாள் ஜான்சி.


சில மணித்தியாலங்களின் பின், டுபாயில் வந்திறங்கியது அந்த விமானம்.


விமானம் தரையிறங்கிய கொஞ்ச நேரத்தில் அறிவிப்பு வந்ததுமே எல்லோரும் எழுந்து வெளியேற ஆரம்பிக்க, தன் பக்கத்திலிருந்தவளை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை இவன்.


அவன் பாட்டிற்கு எழுந்து காதில் ஹெட்செட்டை அடித்துக்கொண்டு வெளியே செல்ல, "என்னங்க.. என்னை விட்டுட்டு போகாதீங்க! இதை கழட்டி விடுங்க.. என்னங்க.." என்று பயத்தில் கத்தத் தொடங்கினாள் ஜான்சி.


"டேய் யாத்ரா... டேய் நில்லுடா" வரதனும் தோழனை நோக்கி கத்திய வண்ணம் தன் சீட் பெல்ட்டை கழற்றிவிட்டு வேகமாக அவளருகே வந்து அவளுடைய சீட்பெல்டை கழற்ற உதவி செய்தான்.


அடுத்தகணம் வேகமாக யாத்ரனின் பின்னே அவள் ஓட, ஆடவனோ வீடு போய் சேரும் வரை அவளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.


வரதனுக்கு இதைப் பற்றி இவனிடம் இப்போது பேசுவது  வீண் என்று மட்டும் புரிய, அவனும் வாயே திறக்கவில்லை.


ஏர்போர்ட்டிலிருந்து வீடு நோக்கி கேப்பில் சென்றனர் மூவரும். 


அவளுடைய முட்டை விழிகள் மேலும் ஆச்சரியத்தில் விரிந்து டுபாய் மாநகரத்தையே வியந்துப் பார்த்தன. அங்கிருந்த அனைத்தும் அவளுக்கு புதிதுதான். 


'எம்புட்டு அழகா இருக்கு, இதென்ன ரோடா இல்லன்னா பளிங்கு கல்லா? சின்ன மண்ணு தூசு கூட கண்ணுக்கு தெரியலயே, இவ்வளவு பெரிய டீவியா! வீட்டுல டீவி இல்லாதவங்க கூட இங்க வந்து டீவி பார்க்கலாம் போலயே, இந்த ஊர்க்காரங்களுக்கு ரொம்ப நல்ல மனசு'


அங்கிருக்கும் ஒவ்வொன்றையும் பார்க்கப் பார்க்க அவளுக்குள் பல ஆச்சரியமான கேள்விகள் எழ, அவளே அதற்கு பதிலையும் தேடிக்கொண்டாள்.


அடுத்த சில நிமிடங்களிலேயே யாத்ரனின் வீட்டின் முன்னே வண்டி நிறுத்தப்பட்டது.


"டேய் யாத்ரா நீ ஒன்ன நல்லா..." அவன் தோழன் சொல்ல வருவதை காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை.


அந்த பெரிய கேட்டின் வழியே தன் லக்கேஜை மட்டும் எடுத்துக்கொண்டு உள்ளே விறுவிறுவென்று சென்றுவிட, ஜான்சிக்கு பக்கென்று இருந்தது.


"என்னங்க.. என்னங்க.." என்று இவள் மீண்டும் பயத்தில் கத்திக்கொண்டு கார் கதவை திறக்க தெரியாமல் தடுமாற, 'இவ வேற..!' என்று தலையிலடித்துக்கொண்ட வரதனோ, அவளுக்காக கார் கதவைத் திறந்துவிட்டான்.


அவளுடைய உடை மூட்டையை அவளுடைய கைகளில் திணித்தவன், "இங்க பாரு ஜான்சி, தப்பு உன்மேல இருக்கு. அவனோட கோபம் நியாயம்தான். இதோட விளைவ நீதான் அனுபவிக்கணும் சோ தயாரா இரு" என்று நண்பனை பற்றி தெரிந்தே அலெர்ட் செய்ய, அவளோ விழிகளில் தீர்க்கத்தோடு அவனைப் பார்த்தாள்.


"அண்ணா அவர் என்னை என்ன திட்டினாலும் பொறுத்துக்க தயாராதான் இருக்கேன். கல்லானாலும் புருஷன் புல்லானாலும் புருஷன்னு வாழுறவ நானு" என்று வீர வசனம் பேசிவிட்டு அந்த பெரிய கேட்டிற்குள் நுழைந்த ஜான்சிக்கு இப்போது பயத்தில் அடி வயிறு கலங்க ஆரம்பித்துவிட்டது.


முயன்று தைரியத்தை வரவழைத்தவள் வாசற்கதவிலிருந்து தொலைதூரம் தள்ளியிருந்த பெரிய வீட்டை நோக்கி பயந்தபடி நடந்துச் சென்றாள்.


வீட்டு ஹாலில் ராஜ்தீப்பும் விதுஷாவும் ஏதோ கலந்துரையாடியபடி அமர்ந்திருக்க, சட்டென  வீட்டிற்குள் நுழைந்த மகனைப் பார்த்ததும் இருவருக்கும் அதிர்ச்சிதான்.


ஆனால் அந்த அதிர்ச்சி ஒருசில கணங்களில் விதுஷாவுக்கு கோபமாக மாற, "யாத்ரா ஸ்டாப்! என்னை கொஞ்சம் கூட மதிக்ககே கூடாதுன்னு முடிவுல இருக்கியா நீ" என்று அவன் வந்ததும் வராததுமாய் கத்த, கோபத்தை அடக்கிக்கொண்டு நின்றவன் தாயை உறுத்து விழித்தான்.


ராஜ்தீப் வழக்கம் போல் எதுவும் பேசவில்லை. தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல அலைப்பேசியை நோண்டியவாறு அமர்ந்திருந்தார் அவர்.


"என்ன முறைக்கிற, இப்போலாம் உன்னோட நடவடிக்கையே சரியில்ல. உன் பாட்டுக்கு போயிட்ட, எத்தனை முறை உனக்கு கால் பண்ணேன், கொஞ்சமாச்சும் எங்கமேல அக்கறை இருக்கா உனக்கு? இதெல்லா..."


பேசிக்கொண்டே சென்றவரின் வார்த்தைகள் வீட்டினுள் தன் உடை மூட்டையை நெஞ்சோடு அணைத்தபடி வந்த சிறு பெண்ணைப் பார்த்ததும் அப்படியே நின்றன.


'யார் இந்த பொண்ணு, அவ பாட்டுக்கு வீட்டுக்குள்ள நுழையுறா?' என்ற கேள்வியோடு விதுஷா அவளை பார்த்துக்கொண்ட நிற்க, அலைப்பேசியிலிருந்து நிமிர்ந்து பார்த்த ராஜ்தீப்பிற்கும் அதே குழப்பம்தான்.


ஜான்சியோ அந்த ஆடம்பரமான வீட்டை சிறு பயத்தோடும் ஆச்சரியத்தோடும் பார்த்தாள். 


வீட்டிற்குள் செய்யப்பட்டிருந்த அலங்காரம் அவளுடைய விழிகளைப் பறிக்க, மாடிப்படிகளுக்கு அருகே நின்றிருந்த யாத்ரனைப் பார்த்ததும் அவளிடமிருந்து 'அப்பாடா' என்று நிம்மதி பெருமூச்சு வெளியானது.


"இந்த மாதிரி வீட்டையெல்லா நான் கீதா அக்கா வீட்டு டீவிலதான் பார்த்திருக்கேன். அப்பப்போ கனவுல கூட... ஆனா இப்போ என் புகுந்த வீடே இப்படி இருக்கும்னு நான் நினைச்சும் பார்க்கல. எல்லாமே கனவு மாதிரி இருக்கு" 


சுற்றி முற்றி பார்த்தபடி ஆச்சரியம் குறையாத குரலில் சொன்னவள், விதுஷாவைப் பார்த்ததும் புன்னகையோடு அவருக்கருகே சென்றாள்.


"நீங்கதான் அவரோட அம்மாவா, வணக்கம் அத்தை" அவள் சொல்லிக்கொண்டே பொத்தென்று அவர் காலில் விழ, இரண்டடி பின்னே நகர்ந்தவருக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.


"ஹேய் ஸ்டாப்! வூ ஆர் யூ? யாருக்கு யார் அத்தை, மொதல் நீ.. நீ யாருன்னு சொல்லு. உன்ன பார்க்கவே ஒரு மாதிரியா இருக்கு"


அவளை மேலிருந்து கீழ் அளவிட்டவாறு எரிச்சலோடு சொன்னவர் வெறுமென அவளுடைய ஆடையை வைத்தே தகுதியை முடிவு செய்துவிட்டார் போலும்!


விதுஷாவின் கத்தலில் ஜான்சிக்கு தூக்கி வாரிப்போட்டது. 


கைகளைப் பிசைந்தவாறு பின்னே நகர்ந்தவள், "என்னங்க, நா.. நான் யாருன்னு சொல்லுங்க! நான்தான் நீங்க தொட்டு தாலி கட்டின பொண்டாட்டின்னு சொல்லுங்க" என்று திக்கித்திணறியபடி சொல்ல, யாத்ரனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை காற்றில் பறந்துக்கொண்டிருந்தது.


அவள் பேசியதைக் கேட்ட இரு பெரியவர்களுக்கும் மூளைக்கு உரைக்கவே சில நிமிடங்கள் பிடிக்க, இப்போது அதிர்வது அவர்களின் முறையானது.


ராஜ்தீப்பின் இதழ்கள் தன்னை மீறிய புன்னகையில் விரிய, "ஓஹோ.. இந்த வீட்டு மருமகளா! பரவாயில்லயே விது, நம்ம பையன் காரியத்துல கண்ணாதான் இருக்கான். கங்கிராட்ஸ் யாத்ரா" என்றார் கேலியாக.


விதுஷாவோ கணவரை ஏகத்துக்கும் முறைத்துப் பார்த்தவர், 'நீங்க பெத்திருந்தா புரிஞ்சிருக்கும்' என உள்ளுக்குள் பொறுமிக்கொண்டார். அவரால் இதை கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


அவர் யாத்ரனை வைத்து பல கனவுகளோடு இருக்க, 'குறுக்க இந்த கௌஷிக் வந்தா!' என்பது போல தடையாக அல்லவா வந்து நிற்கின்றாள் இவள்.


ஆடவனோ இதற்குமேல் முடியாமல் மாடிப்படிகளில் தாவி குதித்து தனதறையை நெருங்கியவன் உள்ளே நுழைந்து கதவை அடித்துச் சாத்தியிருக்க, அந்த அறைக் கதவை பாவமாகப் பார்த்துவிட்டு விதுஷாவை பயந்தபடி பார்த்தாள் ஜான்சி.


"அது... உங்க கோபம் எனக்கு புரியுது. பெத்த புள்ள திடுதிப்புன்னு கல்யாணம் பண்ணிட்டு வந்தா யாராலயும் தாங்கிக்க முடியாதுதான். ஆனா என்ன பண்ண முடியும்! எங்க வயசு அப்படி, தெரியாத்தனமா எல்லை மீறிட்டோம். அதனாலயே எனக்கு இவர கட்டி வச்சு ஊரை விட்டு ஒதுக்கி வச்சிட்டாங்க. ஆனா... நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அத்தை, நான் நல்ல மருமகளா எல்லா வீட்டு வேலையும் பார்த்து உங்களுக்கு நல்ல பேர் வாங்கி கொடுப்பேன். ஆனா அதுக்கு முன்னாடி ஒன்னு கேக்கணும்"


மூச்சு விடாமல் பேசி முடித்துவிட்டு அவள் கேள்வியாக நிறுத்த, விதுஷாவின் புருவங்கள் முடிச்சிட்டன.


"அது.. ப்ளேன்ல ஏறினதுலயிருந்து ரொம்ப நேரமா அடக்கிட்டு இருக்கேன். எங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா..."


அவள் கெஞ்சாத குறையாக சொல்லிக்கொண்டே சிறு விரலை தூக்கிக் காண்பிக்க, ராஜ்தீப் பக்கென்று சிரித்துவிட்டார்.


விதுஷாவுக்குதான் இதை எப்படி கையாள்வது என்று கூட தெரியவில்லை.


"கெமி..." என்று பெருங்குரலெடுத்து கத்தியவர் பதறியபடி ஓடி வந்து நின்ற வேலைக்கார பெண்ணிடம் ஜான்சியை விழிகளால் காட்டி, "அவள அழைச்சுட்டு போய் வாஷ்ரூம்ம காமி" என்று பற்களைக் கடித்துக்கொண்டு சொன்னார்.


ஜான்சியோ தன் அத்தையை நன்றியுணர்ச்சியோடு பார்த்தவள் அந்த வேலைக்கார பெண்ணின் பின்னாலேயே சென்றாள்.


"சரி விடு விதுஷா, கால்கட்டு போட்டா திருந்துவாங்கன்னு சொல்வாங்க, உன் பையன் இப்போவாச்சும் திருந்துரானானு பார்ப்போம்" என்று அவர் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்திருக்க, பூட்டிய அறைக்கதவை விழிகளை கூர்மையாக்கிப் பார்த்த விதுஷாவின் மனதிற்குள் பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன.


**********


யாவும் நின் யாத்ரனாய்.. EPISODE 15

>>>

https://agnitamilnovels.blogspot.com/2026/04/15.html


காதல்போதையடா நீ எனக்கு நாவல் இப்போ என்னோட யூடியூப் சேனலான Kadhaikulla polaama சேனல்ல ஆடியோ நாவலா இருக்கு.. மறக்காம ட்ரை பண்ணி  பாருங்க.. 

👇

https://youtube.com/@kadhaikullapolaama99?si=ZIbEQ6qPd-b7cg-b


என்ட்,  என்னோட மற்ற ஆன்ட்டி ஹீரோ நாவல்களை Papr space Website ல வாசிக்கலாம்.. 👇

https://papr.space/sheha-zaki/696e0bb131a61076ffe69ad4



Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚