யாத்ரன் 13



யாவும் நின் யாத்ரனாய்..


EPISODE 13



விமான நிலையத்தை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த காரில் அமர்ந்திருந்த யாத்ரனின் பார்வையோ ஒரு இடத்தையே நிலைகுத்தி நின்றிருந்தது.


ஊருக்குள் நுழையும் போது அவனுக்குள் இருந்த உற்சாகம் வேறு. ஆனால் இப்போது...


அப்போது இருந்த உணர்வுக்கு மாறாக ஏனென்று புரியாத வலியிலும் குற்றவுணர்ச்சியிலும் தத்தளித்துக்கொண்டிருந்தான் அவன்.


ஜான்சியின் மீது அவனுக்கு காதலெல்லாம் இல்லை. அவளை காப்பாற்ற முடியவில்லையே என்ற   குற்றவுணர்ச்சி மாத்திரமே அவனுக்குள்.


மனதின் ஓலத்தை கேட்ட முடியாமல் விழிகளை மூடி சாய்ந்துக்கொண்டவனுக்கு இரவில் சரியான தூக்கம் இல்லாததாலோ என்னவோ, அடுத்தகணமே உறக்கம் தழுவியது.


அவன் ஆழ்ந்த உறக்கத்தை நோக்கி நகர நகர அவனுடைய கனவின் விம்பங்கள் அவன் மனக்கண் முன் தெரிய ஆரம்பித்தன.


"யாத்ரா.." 


தன் கையிலிருந்த குட்டி சிலையின் பின்னே இருந்த பெயரை முணுமுணுத்தன அந்த இளவரசியின் இதழ்கள். 


'யார் அவன்?' என்ற கேள்வியில் அவளுடைய முகம் யோசனையை தத்தெடுக்க, இந்த கண்ணாம்பூச்சி ஆட்டத்தை விரும்பியே ஆடிக்கொண்டிருந்தான் அவன்.


தூணிற்கு பின்னே மறைந்திருந்து அந்த அழகியை அவன் ரசிக்க முற்பட, அவனுக்கு முதுகு காட்டிக்கொண்டு நின்றிருந்தவளுக்கு அவனின் அவஸ்தை புரியுமா என்ன!


"இளவரசி, கையில் என்ன.. முதலில் அதை வைத்துவிட்டு என்னுடன் வாருங்கள். அமைச்சர் இறந்ததால் அவர் மனைவி உடன்கட்டை ஏற தயாராக இருக்கிறாராம். தகவல் வந்தது. தங்களின் உதவி தேவை"


ஒரு பணிப்பெண் வேகமாக வந்து அவளை அழைத்துச் செல்லப் போக, வெடுக்கென்று கரத்தை உதறிவிட்டாள் அவள்.


அவளுடைய முகம் முயன்று அலட்சியத்தை வெளிப்படுத்தினாலும் வார்த்தைகளில் கோபம் தெறித்தது.


"அவர்களே தயாராக இருக்கையில் நான் எதற்கு? உதவ முயன்றேன் ஆனால் கட்டாயப்படுத்த எனக்கு விருப்பமில்லை. ஒருவேளை அவர்கள் உதவி கேட்டும் அதை செய்ய முடியாத கையறு நிலையில் நான் நின்றிருந்தாள் என் உயிரையே நான் மாய்த்திருப்பேன். ஆனால் இப்போது... நடப்பது நடக்கட்டும்"


அந்த அழுத்தமான வார்த்தைகளில் பெருங்கோபம் அடங்கியிருந்தது.


அதை உணர்ந்து அவளிடம் வசை கேட்க விரும்பாமல் அந்த பணிப்பெண் நகர்ந்துவிட, பின்னால் கேட்ட சலசலப்பு சத்தத்தில் சட்டென திரும்பிப் பார்த்தாள் அவள்.


அந்த சத்தம் வந்தது என்னவோ யாத்ரன் நின்றிருந்த தூணிற்கு அருகில்தான். 


அவளுடைய கால்கள் நகந்து அந்த திசைக்கு சென்று பார்க்க, பக்கத்திலிருந்த குளத்தினுள் பொத்தென்று ஏதோ விழுந்தது போல கேட்ட சத்தம் அவளுக்குள் சந்தேகத்தை கிளறியது.


"யார் அது..." என்ற மிரட்டல் தொனியோடு குளத்திற்கு அருகே சென்ற இளவரசி விழிகளை சுருக்கி குளத்து நீரை உற்றுப் பார்த்தாள்.


எதுவும் புலப்படவில்லை அவளுக்கு.  


சரியாக அவளின் நேரத்திற்கு தலைக்கு மேல் பறந்த பறவையொன்று நீருக்குள் கற்களை போட்டுவிட்டு செல்ல, அவளிதழ் புன்னகையில் விரிந்தது.


"இதன் வேலைதானா..." தனக்குள் நினைத்துக்கொண்டு நீரில் தெரியும் தன் கலங்கிய முகத்தை அவள் வருட, மூச்சைப் பிடித்துக்கொண்டு குளத்தில் மூழ்கியிருந்தவனுக்குதான் அது அவஸ்தையாகிப் போனது.


ஏதோ அவளுக்கு அருகில் இருப்பது போல இருந்த உணர்வு அவனுக்குள் பல உணர்ச்சிகளை பெருக்கெடுக்க, கடவுள் தரிசனம் கிடைத்ததாய் ஆனந்தத்தில் மூழ்கியிருந்தான் யாத்ரன்.


ஆனால், கனவுலத்தை தாண்டிய நிஜ உலகத்திலிருக்கும் ஆடவனோ மங்கலான நீரின் வழியே வழக்கம் போல் அந்த இளவரசியின் முகத்தை காண முயற்சித்துக்கொண்டிருந்தான்.


மெல்ல மெல்ல குளத்து நீரைத் தாண்டி அந்த அழகியின் மங்கலான முகம் அவனுக்கு தெளிவாக தெரிய ஆரம்பிக்க, அவ்வளவுதான்.


அவனின் துரதிஷ்டம் கார் குழியில் ஏறி இறங்கியதில் உண்டான குலுக்கலில் பட்டென்று விழிகளைத் திறந்துப் பார்த்தான் யாத்ரன்.


தலை வேறு பயங்கரமாக வலிக்க, தலையைத் தாங்கிக்கொண்டே சுற்றி முற்றிப் பார்த்தான்.


"என்னாச்சுடா?" அவனின் பதற்றமான முகத்தைப் பார்த்து வரதன் கேட்ட கேள்வியை கண்டுகொள்ளாமல், "ஷீட்!" என்று காரின் சீட்டில் ஓங்கிக் குத்தினான் அவன்.


"ஸ்டாப் த கார்!" 


அடுத்து அவன் சொன்னதைக் கேட்டதும் ஓட்டுனர் வண்டியை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்க்க, வரதனுக்கும் உள்ளுக்குள் கேள்வி எழுந்தது.


ஆனால் அவனை காக்க வைக்காது காரிலிருந்து வேகமாக இறங்கிய யாத்ரன், "நான் அவள காப்பாத்துறேன்னு வாக்கு கொடுத்திருக்கேன் வரதா. ஐ ஜஸ்ட் ஃபீல் கில்ட்டி. ஐ அம் சாரி, ஐ ஹேவ்  டூ கோ..." என்றுவிட்டு தன் பொருட்களைக் கூட எடுக்காது அவன் பாட்டிற்கு எதிர்திசையில் விரைந்துச் சென்றான்.


வரதனுக்கு சில கணங்கள் அவன் சொல்லிவிட்டு சென்றதை கிரகிக்கவே முடியவில்லை.


ஆனால் நடப்பை உணர்ந்த மறுகணம் காரிலிருந்து இறங்கியவன், "உனக்கென்ன பைத்தியமாடா மென்டல், ஏன்டா நீயே ஆபத்த தேடி போற" என்று அடித்தொண்டையிலிருந்து கத்த, யாத்ரன் எதையும் காதில் வாங்கிக்கொள்வதாக இல்லை.


தோழனின் பிடிவாதத்தைப் பற்றி அறியாதவனா அவன்!


'சரியான மண்ட கோளாறு புடிச்சவன், லூசுப் பய' என வாய்விட்டு முணுமுணுத்தவன் காரிலேறிவிட்டு ஓட்டுனரைப் பார்க்க, அவரோ 'வண்டியை ஆரம்பிப்பதா இல்லயா?' என்ற கேள்வியோடு வரதனின் முகத்தையேதான் பார்த்துக்கொண்டிருந்தார்.


பொறுமையை இழுத்துப் பிடித்து விழிகளை அழுந்த மூடித் திறந்தான் வரதன்.


"அந்த நாய் பின்னாடியே போங்க, வேற வழி" என அடக்கப்பட்ட கோபத்தோடு சொல்லிவிட்டு வெளிப்படையாக அவன் நெற்றியில் அடித்துக்கொள்ள, கட்டளை கிடைத்ததுமே எதிர்திசையில் வீராப்பாய் சென்றுக்கொண்டிருந்தவனின் பக்கத்தில் சென்று காரை நிறுத்தினார் ஓட்டுனர்.


"டேய் வரதா கொஞ்சம் விட்டிருந்தா நானே கால் பண்ணி ஏர்போர்ட்டுக்கு போவோம்னு சொல்லியிருப்பேன். ஆனா நீ... உன் தியாகத்த மறக்கவே மாட்டேன் டியூட்" 


அவன் உற்சாகமாக சொல்லிவிட்டு காரில் ஏறிக்கொள்ள, மற்றவனுக்குதான் எங்கேயாவது போய் முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.


அப்போது புறப்பட்டவன்தான் நடுவில் கார் டயர் பன்ச்சர் அது இது என்று பல தடைகளைக் கடந்து எப்படியோ ஊருக்கு வந்து சேர்ந்து விட்டான்.


முட்டியில் கைககளை ஊன்றி மூச்சு வாங்கியவாறு நின்றிருந்த யாத்ரனுக்கு அவள் உயிருடன் இருப்பதை பார்த்ததும்தான் உயிரே திரும்பி வந்தது போலிருந்தது.


'ஊஃப்ப்...' புறங்கையால் அவன் நெற்றியை வியர்வையைத் துடைத்துக்கொள்ள, மின்னல் வேகத்தில் அவனை நெருங்கி அவனின் சட்டைக் காலரை கொத்தாகப் பற்றினார் சுபாஷ்.


"எல்லா உன்னாலதான்டா நாயே, நீ மட்டும் வராம இருந்திருந்தா எல்லாமே நல்லபடியா முடிஞ்சிருக்கும். என் வீட்டு பொண்ணு மனசையே கலைச்சிருக்க உன்ன..." 


உச்சகட்ட கோபத்தில் அவனின் முகத்தில் அவர் ஓங்கிக் குத்தப் போக, அதைத் தடுத்து அவர் கரத்தை உதறிவிட்டவன் முழு பலத்தோடு அவரை தள்ளிவிட்டான்.


ஜான்சிக்கு யாத்ரனைப் பார்க்க ஏதோ தன்னைக் காக்க வந்திருக்கும் ராஜகுமாரனாகத்தான் தெரிந்தது. அந்த உணர்வு அவளின் விழிகளிலிருந்து விழிநீரை ஊற்றெடுக்க, இமை சிமிட்டி அடக்க முயன்றாள் அவள்.


"சுபாஷ் நிறுத்து, இப்போ சண்டை போடுறதுக்கான நேரம் இல்ல. பரிகாரத்த முடிக்கணும். ஆனா..."


பூசாரியின் தயக்கத்தில் இப்போது கேள்வியாக புருவங்களை நெறிப்பது சுபாஷின் முறையானது.


"ஆனா என்ன சாமி, அவ கன்னித்தன்மையோடதான் இருக்கா. இவங்க பேச்ச கேட்டு என் பொண்ண சந்தேகப்பட..."


அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஜான்சியின் கீச் குரல் அந்த இடத்தில் ஒலிக்க, மொத்தப் பேரும் ஒருசேர அவளைத் திரும்பிப் பார்த்தனர்.


"இந்த ஊர்காரங்க சொல்றது உண்மைதான், நா.. நான் கன்னித்தன்மையோட இல்ல. என்னை மன்னிச்சிருங்க!" 


வேறுவழியின்றி பொய் உரைத்தவள் அந்த பதற்றத்தை மறைக்க தலையை குனிந்துக்கொண்டாள்.


சுற்றியிருந்த அத்தனை பேருக்கும் பேரதிர்ச்சியாக  இருக்க, சுபாஷ் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. 


ஆனால் யாத்ரனோ மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டி பார்த்துக்கொண்டிருந்தவன், ஜான்சியின் வார்த்தைகளைக் கேட்டு "ஓஹோ.. அப்படியா! ஆனா... அப்படின்னா என்ன, ஜான்சிக்கு ஏதாச்சும் வியாதியா என்ன?" என்று பக்கத்திலிருந்தவனிடம் கேட்டான்.


அந்த ஊர்க்காரனோ அவனை மேலிருந்து கீழ் ஒரு மார்கமாகப் பார்த்தவன், மெல்ல அவனின் காதருகே நெருங்கி கிசுகிசுக்க, வாயடைத்துப் போய்விட்டான் மற்றவன்.


"ஆத்தீ... ஊமை மாதிரி இருந்துக்கிட்டு என்ன வேலையெல்லா பார்த்திருக்கா. கேடிதான் போல" 


அவன் ஆச்சரியம் குறையாத குரலில் சொல்லிவிட்டு மீண்டும் நடப்பதை வேடிக்கைப் பார்க்கத் தொடங்க, இப்போது மொத்தப் பேரின் பார்வையும் யாத்ரனின் புறம் திரும்பியது.


"வாட்?" 


அத்தனைப் பேரின் பார்வையிலிருந்த வித்தியாசம் அவனுக்குள் பல கேள்விகளை எழுப்ப, அவனுடைய புருவங்களோ முடிச்சிட்டன.


'என்ன நடக்குது இங்க?' அவன் உள்ளுக்குள் தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கும் போதே அவனருகே வேகமாக ஓடி வந்தாள் ஜான்சி.


"என்னங்க, இதுக்கு காரணம் நீங்கதான்னு சொல்லுங்க, எதுன்னாலும் பார்த்துக்கலாம்னு சொன்னீங்களே, இப்போ எதுக்கு மசமசன்னு நின்னுட்டு இருக்கீங்க சொல்லுங்க.." 


அவளுடைய வார்த்தைகள் காதில் விழுந்தாலும் அதை கிரகிக்க அவனுக்கு பல கணங்கள் எடுத்தன.


"தயவு செஞ்சு இல்லன்னு மட்டும் சொல்லிடாதீங்க, நான் சொன்னது பொய்யுன்னு தெரிஞ்சா கொன்னுடுவாங்க"


அவனை மேலும் நெருங்கி அவன் காதில் கிசுகிசுக்க, நடப்பதை உணர்ந்த மறுகணம் யாத்ரனின் விழிகள் பிதுங்கி விடுமளவிற்கு விரிந்துக்கொண்டன.


இப்போது அதிர்ச்சியில் சிலையாகி நிற்பது என்னவோ ஆடவனின் முறையானது.


சுபாஷிற்கு இதை ஜீரணிக்கவே முடியவில்லை.


மின்னல் வேகத்தில் மகளை நெருங்கி அவள் பின்னந்தலை முடியை கொத்தாகப் பற்றி இழுத்தவர் அவளுடைய கன்னத்தில் தாறுமாறாக அறைந்தார்.


சாதாரண மனநிலையில் இருந்திருந்தால் யாத்ரன் அவரை தடுத்திருப்பானோ என்னவோ!


ஒருசிலர் சுபாஷை பிடித்து இழுக்க, அவரோ இன்று மகளை கொன்று போட முடிவாக இருப்பது போல் அவளுடைய கழுத்தை நெறிக்கத் துவங்கிவிட்டார்.


ஜான்சிக்கு மூச்சு திணறியது. பக்கத்திலிருந்தவனை அடித்து நடப்புக்கு கொண்டு வர அவள் முயற்சிக்க, அதற்குள் குரல் கொடுத்தார் பூசாரி.


"சுபாஷ் நிறுத்து, எல்லாமே நடந்து முடிஞ்சிருச்சு. இப்போ அடிச்சு அவ சுத்தமானவன்னு நிரூபிச்சிர முடியுமா என்ன, இதுக்கு மேல இந்த பரிகாரத்த தொடர முடியாது" 


அவர் முடிவாக சொல்லிவிட, மூச்சு வாங்கியவாறு மகளை எரிக்கும் பார்வை பார்த்து நின்றார் பெரியவர்.


ஜான்சிக்கு எங்கு இப்போதே இறந்து விடுவோமோ என்ற பயம் கண்ணில் அப்பட்டமாகத் தெரிந்தது.


அவர் கழுத்தை விட்டதுமே இருமத் தொடங்கியவள் தந்தையைப் பார்க்கப் பயந்துக்கொண்டு ஓரக்கண்ணால் தன்னவனைப் பார்த்தாள்.


ஆனால் சுபாஷிற்கும் மேல் ஆத்திரத்தோடு விழிகளில் அனல் தெறிக்க அவளை பார்த்துக்கொண்டிருந்தான் யாத்ரன். 


அந்த பார்வையில் அவளுடைய முதுகுத்தண்டு சில்லிட, எச்சிலை விழுங்கிக்கொண்டவள் உடனே தலையை குனிந்துக்கொள்ள, நடப்பதை அதிர்ந்து பார்த்துக்கொண்டிருந்த அர்ச்சனாவோ சட்டென யாத்ரனின் காலில் பொத்தென்று விழுந்தார்.


"தம்பி, பரிகாரம் முடிஞ்சிருச்சுன்னு கூட என்னால சந்தோஷப்பட முடியலயே! என் பொண்ணோட வாழ்க்கை போச்சே... நீங்கதான் தம்பி அவளுக்கு வாழ்க்கை கொடுக்கணும். முடியாதுன்னு சொல்லி என் பொண்ண ஏமாத்திடாதீங்க" 


அவர் வராத கண்ணீரை வரவழைத்து காலைப் பிடித்துக்கொண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, "வாட் த ஹெல்..." என்று கத்தி கால்களை உதறினான் யாத்ரன்.


அவருக்கு எப்படியாவது தன் மகளை இவன் தலையில் கட்டி வைத்து ஊரை விட்டு அனுப்பி வைத்தால் போதும். அதனாலயே கிடைத்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டார் அவர்.


அர்ச்சனாவின் முழங்கையைப் பற்றியிழுத்த சுபாஷின் விழிகள் கோபத்தை கக்க, "என்ன காரியம்டீ பண்ற, உனக்கு எவ்வளவு தைரியம்டீ இருக்கணும்?" என்று அடித்தொண்டையிலிருந்து உறுமினார்.


அவர் மனைவி வாயை திறப்பதற்குள் குறுக்கிட்ட பூசாரியின் வார்த்தைகளைக் கேட்ட பெரியவருக்கு தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா என்றுதான் நினைக்கத் தோன்றியது.


"அவ இப்போ இன்னொருத்தன் கூட கலந்துட்டா, இவ பண்ண காரியத்தால ஊருக்கு கலங்கம் ஏற்பட்டுருச்சு. அதனால இந்த பையனுக்கே அவளுக்கு கட்டி வைச்சு இந்த ஊரை விட்டே ஒதுக்கி வைக்க போறோம். இனி இந்த ஊருக்கும் இவளுக்கும் எந்த தொடர்பும் இருக்க கூடாது" 


பூசாரி இட்ட கட்டளை மற்றவர்களுக்கு சாதகமாக இருந்ததோ என்னவோ ஜான்சி மற்றும் அர்ச்சனாவின் முகத்தில் எதையோ சாதித்த தேஜஸ் மின்னியது.


'அப்பாடா!' இருவரும் ஒருசேர நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொள்ள, யாத்ரனோ எந்த பதிலும் பேசவில்லை.


முகம் பாறை போல் இறுகிப் போயிருக்க, மனமோ உலைக்களமாக கொதித்துக்கொண்டிருந்தது.


அவன் நினைத்தால் உண்மையை ஒரே நொடியில் உடைத்துவிடலாம், ஆனால் ஒரு உயிரை காப்பாற்ற எண்ணி அவன் அமைதியாக இருக்க, அதுவே அவனுக்கு ஆப்பாகிப் போனது என்னவோ உண்மைதான்.


"கங்கிராஜூலேஷன் டியூட், அட்வான்ஸ் ஹேப்பி மேர்ரி லைஃப்" 


இத்தனை நேரம் அமைதியாக இருந்த வரதனின் குரல் அவன் காதிற்கருகே கேலியாக ஒலிக்க, கை முஷ்டியை கோபத்தில் இறுக்கிக்கொண்டவனுக்கு பார்வையால்  ஜான்சியை எரிக்க மட்டும்தான் முடிந்தது.


ஆனால், தான் நினைத்தது நடக்கப் போகும் சந்தோஷத்தில் திளைத்தவள் அதையெல்லாம் அப்போது கண்டுகொள்ளவில்லை.


அவன் கோபத்தின் உச்சத்தைப் பற்றி முன்னரே தெரிந்திருந்தால் பரிகாரத்துக்கே சம்மதம் சொல்லி இருப்பாளோ என்னவோ!



**********


யாவும் நின் யாத்ரனாய்.. EPISODE 14 >>>

https://agnitamilnovels.blogspot.com/2026/04/14.html


என்னோட யூடியூப் சேனல் இங்க நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும்.. 


Kadhaikulla polaama சேனல்ல இப்போ விழி தீயிலொரு தவம் கதை முழு ஆடியோ நாவலா இருக்கு.. மறக்காம கேளுங்க..


என்ட், நெக்ஸ்ட் ஆடியோ நாவல் காதல்போதையடா நீ எனக்கு கதைதான் ஆடியோவா வர போகுது.. 


கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்..  So stay tuned ❤


Kadhaikulla polaama 👇

https://youtube.com/@kadhaikullapolaama99?si=ZIbEQ6qPd-b7cg-b



Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚