யாத்ரன் 12

யாவும் நின் யாத்ரனாய்..

EPISODE 12




"ச்சீ.. என்ன பொண்ணு வளர்த்திருக்கா. இப்படியா அந்த பையன் கூட இருக்குறது. நாராசமா இருக்கு. இவளும் ஓடுகாலில்ல அதான் அவ பொண்ணும் அப்படியே இருக்கா"


"அந்த ஊருக்கு புதுசா வந்த பையனும் இவளும் அந்த கோயில்லதான் அடிக்கடி சந்திச்சுக்குவாங்களாம், முத்தம் மட்டும் இல்ல ஏதேதோ நடந்திருக்காம். பக்கத்து வீட்டு ஜெயா சொன்னா... பார்த்தீயா இந்த கூத்த"


"நம்ம ஊர் மானத்த வாங்கவே பொறந்திருக்கா, உடலாள சுத்தமில்லாதவள வச்சு எப்படி பரிகாரத்த பண்ண முடியும்"


ஊர் வாயை மூட முடியாது என்று சும்மாவா சொன்னார்கள்! காதில் விழாத குறையாக பல பேச்சுக்கள் சுபாஷின் காதில் விழுந்துவிட்டன.


அந்த மொத்த கோபமும் ஆத்திரமும் ஜான்சியின் மீது இறங்கியிருக்க, முகம் வீங்கி இதழோரத்தில் இரத்தம் கசிந்திருக்க, உடல் முழுக்க தழும்பு காயங்களோடு வீட்டின் மூலையில் சுருண்டுக் கிடந்திருந்தாள் அவள்.


"அந்த பொட்ட கழுதைய பெத்தவ நீதானேடீ, உன்ன மாதிரியே வந்திருக்கா ஓடுகாலியா.. ச்சீ.. தூ! கடவுளுக்காக அவள அர்ப்பணிக்க வச்சிருந்தா அந்த புனித காரியத்த விட்டுட்டு ஆம்பிள சுகம் தேடி போயிருக்கா. என்னடீ புள்ள வளர்த்திருக்க" 


என்று சுபாஷ் கொஞ்சமும் இரக்கமின்றி அர்ச்சனாவை அடித்து துன்புறுத்த, அவரின் கதறலும் அழுகையும் காதில் விழுந்தாலும் செவிடர்கள் போல் நின்றிருந்தனர் ஊர் மக்கள்.


"என்னை விடுங்க.. வலிக்குது. ஆஆ அம்மா..." அர்ச்சனா கதறித் துடிக்க, "அம்.. அம்மா.." என்று தன் தாயை வேதனையோடு பார்த்தவளுக்கு குற்றவுணர்ச்சி பிடுங்கித் தின்றது.


கை வலிக்கும் அளவிற்கு அடித்து ஓய்ந்துப் போனவர் கையிலிருந்த தடியை தூக்கியெறிந்துவிட்டு மூச்சு வாங்க இரு பெண்களையும் பார்த்தார்.


"மொதல்ல போய் ஊருக்கு வந்திருக்கானே அந்த வெளிநாட்டுக்காரன கவனிச்சுட்டு வரேன். அப்பறம் இருக்குடீ உங்களுக்கு. என் மானத்த வாங்கின இரண்டு நாய்களும் செத்து தொலைங்கடீ"


என நாக்கில் விஷத்தை தடவியது போல் கடிந்துவிட்டு வெளியேறியவர் நேராக சென்று நின்றது வரதனின் வீட்டிற்குதான்.


ஏற்கனவே தகவலறிந்து வனஜாவால் தலைகீழாகக் கிடந்திருந்த வீடு இப்போது சுபாஷின் வருகையில் மேலும் கலவரமானது.


யாத்ரனோ இதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் அமர்ந்திருந்தவன், "டேய் நாயே..." என்ற சுபாஷின் கத்தலில் விருட்டென நிமிர்ந்துப் பார்த்தான்.


கோபத்தில் சமையலறை பாத்திரங்களை போட்டு உடைத்துக்கொண்டிருந்த வனஜாவும் வேகமாக வந்து வெளியே எட்டிப் பார்க்க, பதறியபடி வந்தான் வரதன்.


"சுபாஷ் மாமா அது... கொஞ்சம் பொறுமையா இருங்க. நான் என்ன சொல்றேன்னா.." என்று வரதன் பிரச்சனையை பெருசுபடுத்த விரும்பாது சமாளிக்க முயற்சிக்க, சட்டைக் கையை மடித்துவிட்டவாறு அவரைப் பார்த்தான் யாத்ரன்.


அவனின் ஆறடி உயரமும் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் தோரணையும் இறுகிய முகமும் விட்டால் அடித்துக்கொள்வேன் என்பது போல்தான் பார்க்கும் அனைவரையும் தோன்ற வைத்தது.


"வரதா, இவன் உன் ஃப்ரென்டா போயிட்டதால தான் சும்ம இருக்கேன் இல்லன்னா என்ன நடக்கும்னு தெரியும்ல! இவன் இதுக்கு மேல ஊர்ல இருக்க கூடாது" என்று சுபாஷ் கடுங்கோபத்தில் கத்த, "இருந்தா என்ன பண்ணுவீங்க?" என்று கேட்டுக்கொண்டே அவரெதிரே வந்தான் அவன்.


தோழனின் மார்பில் கை வைத்து தள்ளிவிட்ட வரதனோ, "அமைதியா இரு யாத்ரா, தப்பு உன் மேல இருக்கு" என்று கோபமாக சொல்லிவிட்டு சுபாஷின் புறம் திரும்ப, அதற்குள் அவரோ யாத்ரனை அடிக்கப் பாய்ந்துவிட்டார்.


வயதில் பெரியவர் என்றெல்லாம் பார்க்கவில்லை யாத்ரன். ஏற்கனவே ஜான்சி அவரைப் பற்றி சொல்லி கேட்டதிலிருந்து அவர் மேல் கொலைவெறியில் இருந்தவன் இதுதான் வாய்ப்பென்று ஓங்கி அவர் கன்னத்திலேயே அறைந்திருந்தான்.


"அய்யோ கடவுளே! நடக்க கூடாதது எல்லா என் வீட்டுல நடக்குதே, எனக்கு லைட்டா நெஞ்சு வலிக்குற மாதிரி இருக்கே..." என்று வனஜா ஒருபக்கம் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு விழ போக, தாயை தாங்கிக்கொண்ட ருக்மணிக்கு 'இருக்குற பிரச்சனையில இவங்க வேற' என்றுதான் நினைக்கத் தோன்றியது.


"நீ எல்லா ஒரு அப்பனா! காசுக்காக பெத்த பொண்ணயே விக்க போனவன் நீ, இப்போ ஊர் பேருல பொண்ண கொலை பண்ண போற. வூ த ஹெல் ஆர் யூ டச்  மீ ஆங்..." 


என்று ஆங்கில கெட்ட வார்த்தைகளை மழை சாரல் போல் தெளித்த வண்ணம் சுபாஷை அவன் புரட்டியெடுக்க, தோழனை அமைதிப்படுத்துவதற்குள் வரதனுக்கு உயிரே போய்விட்டது.


ஆடவனின் கோபத்தை அடக்குவது ஏதோ ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போலல்லவா இருக்கிறது! 


"நிறுத்துடா! நிறுத்து..." என்று தொண்டைக் கிழிய கத்தியவன், உடை கசங்கி யாத்ரன் அடித்த அடியில் முகம் சிவந்துப் போய் மூச்சு வாங்க நின்றிருந்த சுபாஷை பாவமாகப் பார்த்தான்.


"நாளைக்கு காலையில நாங்க கெளம்பிருவோம், இவனால இனி உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. என்னை நம்புங்க" என்றவனின் வார்த்தைகளில் அத்தனை உறுதி.


விழிகள் சிவக்க ஆக்ரோஷத்தோடு அவனைப் பார்த்து நின்றவர், எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறிச் சென்றிருக்க, கை நரம்புகள் புடைத்து நிற்க மூச்சு வாங்க நின்றிருந்தான் யாத்ரன்.


"அப்போவே எனக்கு தெரியும், இவன் வீட்டுக்குள்ள நுழையும் போது அப்பாவோட ஃபோட்டோ ஃப்ரேம் ஆடிச்சு. இவனால பிரச்சனை வர போகுதுன்னு அவர் அப்போவே சொல்லியிருக்காரு. நாமதான் புரிஞ்சுக்கல வரதா..."


என்று ஒப்பாரி வைத்த வனஜாவை நோக்கி அவன் கோபத்தோடு ஒரு அடி வைக்க, தன் அம்மாவை இழுத்துக்கொண்டு அறைக்குள் சென்று மறைந்துக்கொண்டாள் ருக்மணி.


அங்கிருந்து வேகமாக தன் வீட்டிற்கு வந்த சுபாஷின் பார்வை அர்ச்சனாவை கட்டியணைத்து அழுதுக்கொண்டிருந்த மகளின் மீது அருவருப்போடு பதிந்தது.


"அந்த சனியன் தொலைஞ்சது. இருக்குற ஒருநாளாச்சும் ஒழுக்கமா இருடீ. என்ன நடந்தாலும் நாளைக்கு ராத்திரி பரிகாரம் இருக்கு. ஆத்தாளும் மகளும் ஏதாவது திட்டம் போட்டீங்கன்னா அவ கூட சேர்த்து நீயும் சாக வேண்டியிருக்கும் புரியுதா?"


பற்களைக் கடித்துக்கொண்டு சொல்லிவிட்டு பெரியவர் நகர்ந்திருக்க, எதுவும் செய்ய  முடியாத கையாலாகத் தனத்தோடு கண்ணீர் வடித்தாள் ஜான்சி.


அன்றைய நாள் கழிந்து அடுத்தநாளும் விடிந்துவிட்டது.


தன் லக்கேஜை காரின் பின்னால் போட்ட யாத்ரனின் பார்வை சுற்றி முற்றி அலைப் பாய, அவன் மனம் ஏனென்று தெரியாமல் தள்ளாடிக்கொண்டிருந்தது.


வனஜாவுக்கு மகன் செல்வதில் வேதனையாக இருந்தாலும் இன்னொருபுறம் யாத்ரன் திரும்பிச் செல்வதில் அப்பாடா என்றிருந்தது.


அக்கம்பக்கத்திலிருந்த ஊர் மக்களோ தங்களுக்குள் கிசுகிசுத்த வண்ணம் அவனை பார்ப்பதும் புரளி பேசுவதுமாக இருக்க, காரின் பின்சீட்டில் ஏறியமர்ந்தான் அவன்.


ஏனோ அவனையும் மீறி மனம் கனப்பது போல் இருந்தது. மெல்ல இடதுபக்க நெஞ்சை நீவி விட்டுக்கொண்டான் அவன்.


வரதனும் காரில் ஏறிக்கொள்ள, அடுத்தகணமே அந்த ஊரை விட்டு செல்ல ஆயத்தமானது அந்த நான்கு சக்கர வாகனம்.


"அந்த பொண்ண இப்படி விட்டுட்டு போக கூடாது வரதா" 


அவனின் குரலில் குற்றவுணர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனால், அதையெல்லாம் உணரும் நிலையில் இல்லை மற்றவன்.


"டுபாய் போய் சேருற வரைக்கும் எதுவும் பேசாத" என்ற வரதனின் வார்த்தைகள் அழுத்தமாக வர, மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு விழிகளை  மூடி தலையை பின்னே சாய்த்துக்கொண்டான் யாத்ரன்.


கண்ணிலிருந்து மறையும் வரை போகும் வாகனத்தை பார்த்திருந்த ருக்மணி, அடுத்த கணமே பாவாடையைத் தூக்கிக்கொண்டு ஜான்சியின் வீட்டிற்குதான் ஓடினாள்.


கால்களைக் கட்டிக்கொண்டு சிவந்து வீங்கிய முகமாக தரையை வெறித்துக்கொண்டு அறையில் அமர்ந்திருந்தாள் ஜான்சி.


அர்ச்சனாவோ உணர்ச்சிகளற்று சமையலறைக்குள் அடைந்திருக்க, உள்ளே நுழைந்த ருக்மணி நேராக தோழியின் முன் சென்று நின்றுக்கொண்டாள்.


"நீயும் அவரும் முத்தம் கொடுக்குற மாதிரி அந்த ஃபோட்டோல இருந்துச்சாமே, அது உண்மையா ஜான்சி?" 


அவளுக்கு அவள் பிரச்சனை!


தோழியின் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்திப் பார்த்தவள் எதுவும் பேசாமல் மீண்டும் தலையை கால்களுக்குள் புதைத்துக்கொள்ள, ருக்மணிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.


"கணபதி ஐயாவோட பையன் பார்த்த காரியம்தான்டீ இது, அம்மா சொல்லுச்சு. பரதேசி பய! அவன சும்மாவே விடக் கூடாது, காட்டுக்கு பக்கத்துல இருக்குற பேய் கோயில்ல போய் சாமிக்கு நேர்த்தி வைப்போம். அப்பறம் பாரு அவனோட கதிய.."


அவள் கணபதியின் மகனை போட்டுத் தள்ள ஒரு திட்டம் போட, உண்மையில் ஜான்சி இதற்கு வாய்விட்டு சிரித்திருக்க வேண்டும்.


ஆனால் அப்போது அவளிருக்கும் மனவேதனையில் அவளிதழில் விரக்திப் புன்னகைதான் தோன்றி மறைந்தது.


"இப்போ என்ன பண்ணி என்ன ஆக போகுது, எல்லாமே முடிஞ்சு போயிருச்சு. அவரும் கெளம்பிட்டாருல்ல! என்ன.. என்னை விட்டுட்டு போயிட்டாருல்ல" 


ஜான்சிக்கு அழுகையில் தொண்டை அடைத்தது. வார்த்தைகள் வர மறுத்தன.


ருக்மணி தோழியை ஆறுதலாக அணைத்துக்கொள்ள, சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தை நிமிர்ந்துப் பார்த்தாள் மற்றவள்.


"பரிகாரத்துக்கு நேரம் நெருங்குது" அவளுடைய குரல் உணர்ச்சிகளற்று போயிருக்க, இப்போது அதிர்ந்து விழித்தாள் ருக்மணி.


உண்மையில் இதைப் பற்றி சுத்தமாக மறந்துப் போயிருந்தாள் அவள். இவள் ஞாபகப்படுத்தியதும் ஏனென்று தெரியாத ஒரு பயம், வலி அவள் மனதைக் கவ்விக்கொண்டது.


"ஜா.. ஜானு..." பெருங்குரலெடுத்து அழுதுக்கொண்டே தோழியை கட்டியணைத்துக்கொண்டாள் ருக்மணி.


ஆனால், நண்பர்களை பிரிக்கப் போகிறோமே என்றெல்லாம் எண்ணி நேரமொன்றும் நிற்கவில்லை. காலில் பம்பரத்தைக் கட்டியது போல் வேகமாக ஓடியது.


சூரியன் தன்னை மேகங்களுக்குள் மறைத்துவிட்டு நிலவை சாட்சிக்காக அனுப்பி வைக்க, இறுதிப் பரிகாரம் நடந்த நாளை விட இன்று ஜகஜோதியாய் மின்னிக்கொண்டிருந்தது அந்த கிராமம்.


கோயில் ஏற்றியிருந்த தீபங்களின் வெளிச்சம் மக்களின் விழிகளை கூசச் செய்தது. கோயிலுக்கு உள்ளேயும் வெளியிலும் அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்க, ஊர் மக்கள் ஒன்றாய் கூடினர்.


அந்த கூட்டத்திற்கு நடுவே அரக்கு நிற புடவையில் பாதி முகத்தை முந்தானையால் மறைத்த வண்ணம் உடல் மரத்துப் போய் நின்றிருந்தள் ஜான்சி.


சுற்றி ஓதப்படும் மந்திரங்கள் எதுவும் காதில் விழவில்லை. உணர்ச்சிகளற்ற ஜடம் போல் நின்றிருந்தவளின் மூளை வேலை நிறுத்தம் செய்துவிட்டது போலும்!


அர்ச்சனாவின் நிலையை சொல்லவா வேண்டும்!


உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு அழுக கூட திராணியின்றி நின்றிருந்தார் அந்த தாய்.


பழி கொடுப்பதற்கு முன்னரான சடங்குகள் தொடர்ந்து நடந்தன.


திடீரென ஒரு சலசலப்பு!


"இந்த பரிகாரத்துக்கு ஆண் வாடையே படாத கன்னிப் பொண்ணுங்கதான் வேணும். ஆனா இவ அந்த பையன் கூட இருந்திருக்கா. எப்படி இவ சுத்தபத்தமானவளா இருக்க முடியும்?" 


என்ற ஒரு பெண்மணியின் குரல் சற்று சத்தமாகக் கேட்க, அதை மறுத்து பேசினார் சுபாஷ்.


"அவ ஒரு தப்பும் பண்ணல, இப்போவும் என் பொண்ணு கன்னி கலையாமதான் இருக்கா. நீங்க பரிகாரத்த ஆரம்பிங்க பூசாரி" என்றவரின் பேச்சை அந்த ஊர் மக்கள் இப்போது கண்டுகொள்ளவில்லை. 


அந்த பெண்மணி பேசியதை வைத்து காதுக்கு காது ஏதேதோ பேசிக்கொண்டவர்கள் அதிருப்தியோடு பூசாரியைப் பார்த்தனர்.


"ஆமா இவ மேல கரை படிஞ்சிருக்கு. இவ எப்படி பரிகாரம் பண்ண முடியும்?"


"இவள வச்சு பரிகாரத்த முடிச்சா அப்பறம் கடவுள் நம்ம ஊரையே சபிச்சிருவாரு"


"இவ நம்ம ஊருக்கே சாபம், மொதல்ல இவள நம்ம ஊரை விட்டே தள்ளி வைக்கணும். அதை விட்டுட்டு பரிகாரம் பூஜைன்னு..."


ஆளுக்காள் வாயிற்கு வந்ததை பேசிக்கொண்டே போக, வழக்கமாக பாதகமாக அமையும் இந்த புரளிகள் ஒருத்திக்கு சாதகமாக அமைந்தது என்றால் அது அதிசயம்தானே!


சுபாஷிற்கு ஊர் மக்களின் பேச்சால் அவமானத்தில் முகம் கறுத்துப் போனது.


அந்த கோபம் மொத்தத்தையும் திரட்டி ஜான்சியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தவர், "எல்லாருக்கும் சொல்லுடீ, வாய திறந்து சொல்லு! நீ கன்னித்தன்மையோட தான் இருக்கேன்னு" என அடித்தொண்டையிலிருந்து கத்த,  "ஜான்சி...." என்ற கணீர் குரலில் அந்த இடமே நிசப்தமானது.


**********

யாவும் நின் யாத்ரனாய்.. Episode 13 >>>

https://agnitamilnovels.blogspot.com/2026/04/13.html


என்னோட நான்கு ஆன்டி ஹீரோ கதைகளான 


தஷுரி

ரதியின் ரணதீரன்

கனவுகள் கனலாய் மாறுமா

வேல்விழி மொழிகள்


இந்த கதைகள Papr space Website appல April மாதம் வரைக்கும் ஃப்ரீயா படிக்கலாம்.. சோ மறக்காம ரீட் பண்ணிக்கோங்க.. 


Here's the link 👇

https://papr.space/sheha-zaki/696e0bb131a61076ffe69ad4


என்னோட கதைகள ஆடியோ நாவலா கேக்கணும்னா... 

Channel name - kadhaikulla polaama


இப்போ விழி தீயிலொரு தவம் நாவல் ஆடியோ வடிவுல இருக்கு.. 


Channel    link 👇

https://youtube.com/@kadhaikullapolaama7612?si=BwNNnPMl514OHY2Y


 





Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚