யாத்ரன் 11
இருவரும் கிட்டத்தட்ட நெருக்கமாக நின்றிருந்தனர்.
இருவரின் நெஞ்சிக்கூட்டும் ஒருசேர மூச்சுக்காக ஏறி இறங்க, ஜான்சிக்கு அவனுடைய பார்வையில் இதயம் படுவேகமாய்த் துடித்தது.
இதுவரை உணர்ந்திராத உணர்ச்சிகள் எல்லாம் அவளுக்குள் ஊற்றெடுக்க, "இதுக்கே பயந்தா எப்படி, இன்னும் என்னவெல்லாமோ பண்ண வேண்டியிருக்கு" என்ற யாத்ரனின் குறும்பான பேச்சில் விழிகளை சுருக்கிப் பார்த்தவள், "இதை இப்படி வந்துதான் சொல்வீங்களா?" என்று கேட்டாள் மெல்லிய குரலில்.
"அது... எங்க ஊர்ல நாங்க இப்படிதான்" என்று சொன்னவன், 'இது மட்டும் டுபாய் ஷேக்கு தெரிஞ்சா என் தலைய வெட்டுறது கன்ஃபார்ம்' என்று மனதில் கேலியாக நினைக்காமல் இல்லை.
ஜான்சிக்கு இது எல்லாமே புதிதான்.
யாத்ரன் அவளை விட்டு விலகி நிற்கப் போக, "அது.. நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும். அது என்னன்னா... காதலிக்கிறத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?" என்று ஒரு ஆர்வத்தில் அவள் கேட்டுவிட்டு அவனின் பதிலை ஆர்வமாகப் பார்த்தாள்.
அந்த கேள்வியில் புருவங்களை நெறித்து சில கணங்கள் யோசித்தவன், "அது நம்ம உடலுக்குள்ள உருவாகுற சம்திங் ஹார்மோன் தட்ஸ் இட், சுத்த வேஸ்ட் ஆஃப் டைம்னு சொல்லலாம். பட் இட் ஃபீல் மேக் சம்வன் ஸ்பெஷல். சொல்லப்போனா எனக்கும் உன்ன பிடிக்கும். ஐ லவ் யூ..." என்று அவன் பழகிய நண்பர்களை மனதில் வைத்து சகஜமாக சொல்ல, அதை அறிவாளா இந்த கிராமத்து பெண்!
அவளின் முட்டை விழிகளை மேலும் பெரிதாய் விரித்துக்கொண்டவள், "என்ன.. நீங்க என்னை லவ் யூவா.. நெஜமாதான் சொல்றீங்களா?" என்று ஆச்சரியக் குரலில் கேட்க, "ம்ம்..." என்ற யாத்ரனோ அவளின் கன்னச் சிவப்பை அப்போதுதான் கவனித்தான்.
ஏற்கனவே வெட்கத்தில் இருந்த ஜான்சியின் கன்னங்கள் இப்போது இவன் காதலிப்பதாக சொன்னதைக் கேட்டு சிவந்துப் போயிருக்க, பெருவிரலால் அவள் கன்னத்தை மெல்ல வருடினான் அவன்.
"மேக்கப்பே இல்லாம ப்ளஷ் ஆகுறத இன்னைக்குதான் பார்க்குறேன்" என்றவனின் ஆச்சரியக் குரலில் மெல்ல இதழ் பிரித்து சிரித்தவள் அவனின் வருடலில் உடல் கூசிப் போனாள்.
அவள் பார்வையோ அவனின் விழிகளையும் இதழையும் மாறி மாறிப் பார்க்க, ஒரு ஆடவனாக அவனின் உணர்ச்சிகள் பேயாட்டம் போடாவிட்டால்தான் ஆச்சரியமே!
அவனுக்குமே ஒரு ஆணாக உணர்ச்சிகள் எழ மெல்ல அவளிதழை நோக்கி குனிய, ஜான்சியோ பயத்தில் உடனே விழிகளை மூடிக்கொண்டாள்.
கிட்டத்தட்ட இருவரின் இதழ்களும் ஒன்றோடு ஒன்று உரசும் நிலைக்கு சென்றுவிட அப்போதுதான் அவளுடைய மூளைக்கு அந்த ஒரு விடயம் சட்டென உரைத்தது.
பட்டென்று விழிகளைத் திறந்தவள் தலையை பின்னே இழுத்துக்கொண்டு, "நா.. நான் வீட்டுக்கு போகணும்" என்று வேகமாக சொல்ல, அவளை ஆழ்ந்த பார்வைப் பார்த்த யாத்ரன், அவளின் முகபாவனையில் முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை முயன்று அடக்கிக்கொண்டான்.
அவளை விட்டு விலகி நின்றுக்கொண்டவன், பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை இட்ட வண்ணம் "போ..." என்று சொல்ல, விட்டால் போதுமென்று அங்கிருந்து ஓடியேவிட்டாள் ஜான்சி.
செய்யப் போன காரியத்தை எண்ணி தன்னைத்தானே கடிந்துக்கொண்டவளோ அவன் தன்னை காதலிப்பதாக நினைத்து கனவில் மிதக்க, ஆடவனோ "அட ச்சே! என்ன காரியம் பண்ற யாத்ரா. போயும் போயும் இந்த வில்லேஜ் கேர்ள்கிட்ட.. ஒழுங்கா காப்பாத்துற வேலைய மட்டும் பாரு' என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டான்.
ஆனால், விதி ஏற்கனவே தன் விளையாட்டை ஆரம்பித்திருந்ததை யாத்ரன் அப்போது அறிந்திருக்கவில்லை.
அடுத்தநாளே ஜான்சி வீட்டிலிருந்த தன் பாஸ்போர்ட்டை யாருக்கும் தெரியாமல் கொண்டு வந்து யாத்ரனிடம் கொடுக்க, அவளை தன்னோடு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை அன்றே ஆரம்பித்திருந்தான் அவன்.
அவன் ஒன்றும் உத்தமன் அல்ல. ஆனால் ஒரு உயிர் பறிபோகப் போவதை அறிந்தும் அவனால் கண்டுகொள்ளாமல் விட முடியவில்லை.
அதுமட்டும் அல்லாமல் அந்த இடத்தில் ஜான்சியை தவிர யார் இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பான்.
ஆனால், பெண்ணவள் அதை காதலாக நினைத்ததுதான் தவறாகிப் போனது.
ஒருவேளை பின்னால் வரும் நாட்களில் அவனாலயே தான் காயப்படப் போவதை அறிந்திருந்தால் பரிகாரமே மேல் என தப்பிக்கும் முயற்சியை கை விட்டிருப்பாளோ என்னவோ!
அன்றிரவு,
லேப்டாப்பில் தீவிரமாக எதையோ டைப் செய்துக்கொண்டிருந்தவனை தலையைத் துவட்டியவாறு பார்த்துக்கொண்டிருந்த வரதனுக்கு அதற்குமேல் பொறுமை இல்லை.
"என்னடா பண்ற?" அவன் வாய்விட்டு கேட்டுவிட, "ஜான்சிய எங்க கூட கூட்டிட்டு போறதுக்கு அவளுக்கும் டிக்கெட் புக் பண்றேன் டியூட், சன்டே நைட்தான் பரிகாரம் நடக்கும், அதே சன்டே ஈவினிங்தான் ஃப்ளைட். சோ... நாம அந்த நாள் விடியுறதுக்குள்ள பொண்ண தூக்குறோம் ச்சே ச்சே அந்த பொண்ண கூட்டிட்டு போறோம்" என்று அடுக்கடுக்காய் தன் திட்டங்களை அடுக்கிக்கொண்டே போனான் மற்றவன்.
ஆனால் வாயில் ஈ போகாத குறையாக அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த வரதனுக்கு தலை சுற்றாத குறைதான்.
கையிலிருந்த டவலை தூக்கியெறிந்தவன், "ஆர் யூ அவுட் ஆஃப் யூவர் மைன்ட் யாத்ரா, என்ன நினைச்சுட்டு இருக்க நீ? தேவையில்லாத விஷயத்துல தலையிடாதன்னு முன்னாடியே சொல்லிட்டேன். ஆனா நீ... ச்சே! சொல்றத கேளுடா, வீணா பிரச்சனையில சிக்கிக்காத. ஒரு வாரத்துல நாம போக போறோம், அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியை இரு" என்று கத்திக்கொண்டே போக, சலிப்பாக விழிகளை உருட்டினான் மற்றவன்.
"ஷட் அப் வரதா! அதான் நான் பார்த்துக்குறேன்னு சொல்றேன்ல. எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிட்டேன். சோ, நோ வொர்ரீஸ். யாருக்கும் தெரியாம அவள இங்கயிருந்து கூட்டிட்டு போயிரலாம். நாம டுபாய் போனதுக்கப்பறம் யாரால நம்மள என்ன பண்ணிட முடியும்?"
அலட்சியமாக சொன்னவன் அவன் சொன்னதை காதிலும் வாங்கவில்லை.
"எதையாச்சும் பண்ணி தொலை! பிரச்சனையில சிக்குவல்ல அப்போ புரியும்" என்று மட்டும் சாபம் விட்டு அவன் திரும்பி படுத்துக்கொள்ள, 'ஏதோ புருஷன்கிட்ட கோச்சிக்கிட்ட பொண்டாட்டி மாதிரி நடந்துக்குறான்' என மனதில் நினைத்து சிரித்துக்கொண்டான் யாத்ரன்.
அடுத்த இரண்டு நாட்களில்,
"நீயும் என் கூட வர்றதுக்கான எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டேன். சன்டே நைட் ஐ மீன் பூஜை ராத்திரி நடக்குதுன்னா மதியானம் அஞ்சு மணிக்கு ஃப்ளைட். அந்த நாள் விடியகாலையிலயே நாம ஊரை விட்டு கெளம்பி ஒரு இடத்துல ஸ்டே பண்ணிட்டு ஏயார்போர்ட் போறோம் சொல்றது புரியுதா?"
என்று கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் அவளுக்கு புரியும்படி சொல்லிவிட்டு யாத்ரன் அவள் முகத்தைப் பார்க்க, ஜான்சியின் முகமோ யோசனையை தத்தெடுத்திருந்தது.
"அது.. முதல் தடவ வீட்ட விட்டு வர போறேன். நல்ல நேரங்காலம் பார்க்காம எப்படி வர்றது. நல்ல நேரம் பார்க்காம ஒரு காரியம் பண்ணா அது எப்படி வெளங்கும்?" என்றவளின் வெகுளித்தனமான பேச்சு அவனை ரசிக்க வைத்திருக்க வேண்டும்.
அதற்கு மாறாக யாத்ரனின் பிபியை மேலும் எகிற வைத்தது தான் உண்மை.
"முட்டாள் முட்டாள்! உன் நல்ல நேரம் மதியத்துல இருந்தா அந்த வெட்ட வெளிச்சத்துல உன் மூட்டைய தூக்கிட்டு வருவியா என்ன! பட்டிக்காடு... மூட நம்பிக்கையால சாக போறேன்னு உன்ன காப்பாத்த ட்ரை பண்ணா மூடநம்பிக்கைக்கு மேல ஒரு மூட நம்பிக்கை. ஃப்ளைட் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா, நீ நினைச்ச நேரத்துக்கு கெளம்ப மென்டல்!"
என்று கத்திக்கொண்டே போனவன் இடுப்பில் கைக்குற்றி தன்னை ஆசுவாசப்படுத்த முயற்சித்தான்.
"ஊஃப்... ரிலாக்ஸ் யாத்ரா!" என தனக்குத்தானே சொல்லி நிதானத்திற்கு வந்தவன் தன் முன்னே மிரண்டுபோய் நின்றுக்கொண்டிருந்தவளிடம் பொறுமையை இழுத்துப் பிடித்து பேச்சை ஆரம்பித்தான்.
"லுக், அந்த நேரம் நீ கெளம்பினாதான் யாருக்கும் விஷயம் தெரிய வராது. அவங்களுக்கு தெரிய வரதுக்குள்ள நாம ஊரை விட்டே போயிருப்போம். சாக இருந்த நீயும் சேஃப், உன்னை காப்பாத்த ட்ரை பண்ண நானும் சேஃப்" அழுத்தமாக சொன்னவன், "ஓகே லீவ் தட், மொதல்ல நீ என்ன படிச்சிருக்க, என்ன வேலை பார்க்க தெரியும்? அதை பத்தி சொல்லு" என்று கேட்டான் கூரிய பார்வையோடு.
"என்ன பேசுறீங்க, பொண்ணுங்கள படிக்கவும் விட மாட்டாங்க. வேலைக்கு போகவும் விட மாட்டாங்க. வீட்டு ஆம்பிளைங்க கையில காசு நிலைக்காது. உங்களுக்கு தெரியாதா?"
அவனுக்கு தெரியாத ஒன்றை தான் தெரிந்து வைத்த மிதப்பில் அவள் சொன்ன விதத்தில், ஒற்றைப் புருவத்தை தூக்கிப் பார்த்தான் யாத்ரன்.
'திருத்தவே முடியாது' என்று மெல்ல முணுமுணுத்தவன் அதற்குமேல் அவளிடம் பேச்சை வளர்க்கவில்லை.
இப்படியே நேரமும் காலில் சக்கரத்தை கட்டியது போல வேகமாக ஓடியது.
இன்னும் இரண்டே நாட்களில் மகன் செல்லவிருப்பதை அறிந்து வனஜா முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருக்க, ருக்மணிதான் என்ன நடக்குமோ என்ற பயத்தோடும் குழப்பத்தோடும் சுற்றிக்கொண்டிருந்தாள்.
இரு ஆடவர்களும் தத்தமது லக்கேஜ்களை தயார்படுத்தி வைக்க, பரிகாரம் நடக்கவிருக்கும் நாளுக்கு முந்தைய நாள் ஜான்சியை வைத்து கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பூசாரி மந்திரங்களை ஓதி பூஜையை நடத்த சுபாஷ் உட்பட மற்ற ஊர்க்காரர்களோ ஒரு உயிரை பறிக்கப்போகும் குற்றவுணர்ச்சி கொஞ்சமுமின்றி தீவிர பக்தியோடு பூஜையில் இருந்தனர்.
ஆனால் ஒரு தாயின் மனம்தான் உள்ளுக்குள் மௌனமாய் அழுதுக்கொண்டிருந்தது. எங்கு கண்ணீர் வடித்தால் அதற்கும் கணவன் ஏதாவது சொல்லி விடுவானோ என பயந்தே அழுகையை இமை சிமிட்டி அடக்கிக்கொண்டிருந்தார் அர்ச்சனா.
ஆனால், ஜான்சியோ வழக்கத்திற்கு மாறாக சற்று உற்சாகமாகவே இருந்தாள். அவள் முகத்திலிருந்த தெளிவும் மெல்லிய புன்னகையும் தோழியின் பக்கத்திலிருந்த ருக்மணிக்கு புதிதாகத்தான் இருந்தது.
"ஜானு, ஏதோ உனக்கு ஆயுசு நீடிக்க பூஜை பண்ண மாதிரி சிரிச்சுட்டு இருக்க, நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியும்ல" என்று ருக்மணி ஹஸ்கி குரலில் கேட்க, அப்போதும் பதிலுக்கு சிரித்துதான் வைத்தாள் ஜான்சி.
"ம்ம் தெரியுமே! ஆனா நான்தான் இருக்க மாட்டேனே! நாளைக்கு விடியுறதுக்கு முன்னாலயே நான் போயிருவேன். அதுவும் அவங்க கூட வெளியூருக்கு... என் வாழ்க்கையே மாற போகுது" என்றவளின் வார்த்தைகளில் என்றும் பார்த்திராத ஒரு சந்தோஷம் மிதந்தது.
"எதே!" என்ற ருக்மணியின் கத்தலில் சுற்றியிருந்தவர்கள் திரும்பி அவளைப் பார்க்க, அசடுவழிந்தவாறு மீண்டும் தோழியின் காதைக் கடித்தாள் அவள்.
"என்னடீ சொல்ற, என்கிட்ட சொல்லவே இல்ல" என்று அதிர்ந்த குரலில் கேட்ட ருக்மணி தோழியின் முகத்திலிருந்த சந்தோஷத்தைப் பார்த்துவிட்டு, "ஏதோ நல்லதுக்குதான். இந்த நேரம் அவர் ஊருக்கு வரணும் உன்ன காப்பாத்தணும்னு இருந்திருக்கு. எப்படியோ நீ நல்லா இருந்தா போதும்" என்றாள் மனதார சந்தோஷத்தோடு.
ஜான்சிக்கு அந்த வார்த்தைகளே போதுமானதாக இருந்தது.
விழிகளில் நன்றியுணர்ச்சியோடு தோழியைப் பார்த்துவிட்டு திரும்பியவளின் முகம் தந்தையையும் அவரை சுற்றி அமர்ந்திருந்த ஊர் மக்களையும் பார்த்து கேள்வியாக சுருங்கியது.
சுபாஷின் கையில் கணபதி மகனின் அலைப்பேசி இருக்க, அதில் என்ன இருந்ததோ!
தன் கையிலிருந்த அலைப்பேசியின் திரையைப் பார்த்துவிட்டு மகளைப் பார்த்த சுபாஷின் விழிகள் அதிர்ச்சியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கோபத்தில் சிவந்தன.
அடுத்தகணம் இரண்டே எட்டுக்களில் அவளை நெருங்கியவர், "பொட்ட கழுதைக்கு ஆம்பிள சுகம் கேக்குதா..." என்று கத்திக்கொண்டே அவள் கன்னத்தில் ஓங்கி அறைய, அடியின் தாக்கத்தில் தரையில் சுருண்டு விழுந்தாள் ஜான்சி.
நடப்பதை கிரகிக்கவே அவளுக்கு சில கணங்கள் எடுத்தன. ஏன் எதற்கென்று எதுவுமே புரியவில்லை.
அவள் சுதாகரிப்பதற்குள் தரையில் கிடந்தவள் மீது அவர் நான்கைந்து உதைகளை விட்டிருக்க, அர்ச்சனாவை தவிர சுற்றியிருந்த ஊர்க்காரர்கள் ஒருவரும் தடுக்க முன்வரவில்லை.
சட்டென, "சுபாஷ்..." என்றழைத்த பூசாரி, "வீட்டுக்கு போய் அவள கவனிச்சிக்க, கடவுள் சன்னிதானத்துல கரை படக் கூடாது" என்று மனசாட்சியே இல்லாமல் சொல்ல, தலையை முடியை கொத்தாகப் பற்றி மொத்த ஊர் மக்களும் பார்க்க தரதரவென வீட்டிற்கு இழுத்துச் சென்றார் அந்த பெரியவர்.
***********
யாவும் நின் யாத்ரனாய்.. EPISODE 12
https://agnitamilnovels.blogspot.com/2026/04/12.html
சந்தோஷமான செய்தி.. 😍😍😍
என்னோட ஆறாவது நாவல் லவ் ஆர் ஹேட் மீ கதை இங்க நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும்.. பக்கா ஆன்ட்டி ஹீரோ நாவல் அது.. 😉
அந்த கதை இப்போ 'ராட்சதனின் மென்னோவியமே..' அப்படிங்குற பேருல இன்னைக்கு புத்தகமாக ரிலீஸ் ஆகியிருக்கு 😃😃😃
யாதவ் என்ட் ரித்வி இப்போ புத்தக வடிவில்... 😘
புத்தகம் வாங்க தொடர்புகொள்ள வேண்டிய எண் 👉 9952076258 / 7200308492


Comments
Post a Comment