விழிகள் 29




துப்பாக்கி முனையில் இருந்தும் லியோவின் விழிகளில் கொஞ்சமும் பயத்திற்கான சாயல் இல்லை.


"அவ எங்க?" என்று ரொனெல்ட் கேட்க, நக்கலாக சிரித்தானே தவிர பதிலே சொல்லவில்லை அவன்.


அதில் கோபத்தின் உச்சகட்டத்திற்கே சென்றவர் துப்பாக்கியின் பின்புறத்தால் அவன் தலையில் ஓங்கி அடித்து, "இந்த இடம் முழுக்க தேடுங்க, அந்த பொண்ணு எனக்கு வேணும்" என்று அடித்தொண்டையிலிருந்து உறும, அடுத்தகணம் பல அதிகாரிகள் அவளை தேடி அலைந்தனர்.


ஒவ்வொரு குடிசைகளாக நுழைந்து யாழ்மொழியைத் தேட, அவள் இருந்தால்தானே!


ஒருகட்டத்திற்கு மேல் முடியாமல் ரொனேல்டின் முன்னே வந்து நின்றவர்கள், "அந்த பொண்ணு எங்கேயும் இல்லை சார், நாங்க எல்லா இடமும் தேடி பார்த்துட்டோம்" என்று மூச்சு வாங்கியவாறு சொல்ல, அவருக்கோ மொத்த கோபமும் லியோவின் மீதுதான் தாவியது.


"ஹவ் டேர் யூ..." என்று கோபத்தில் கத்தியவாறு மீண்டும் அவனை அடித்தவர், "இவன நம்ம ப்ரிசன்ல அடைச்சு வைங்க, இவன் வாயாலயே உண்மைய சொல்ல வைக்கிறேன்" என்று தனக்குள்ளேயே ஒரு திட்டத்தை தீட்டிக்கொண்டு வண்டியில் ஏறிக்கொண்டார்.


அடுத்த ஒருமணி நேரத்தில் அடிமைகளை அடைத்து வைக்கும் சிறைச்சாலையில் கைகள் இரண்டும் கட்டப்பட்டு தொங்க விடப்பட்டிருந்தான் லியோ. அவனுடைய உடலெங்கும் அடித்த அடியில் வீங்கிப் போய் காயமாகியிருக்க, இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.


வலியைத் தாங்க முடியாமல் அவன் மெல்ல மெல்ல சுயநினைவை இழக்க ஆரம்பிக்க, "இனாஃப்..." என்று கத்திய ரொனேல்ட் கையில் தடியோடு அவன் முன்னே வந்து நின்றார்.


"ஒழுங்கா நீயே சொல்லிரு லியோ, அவ எங்க? நான் நினைச்சா உன்னை என்ன வேணா பண்ணலாம், உன் உயிர் மேல ஆசை இருந்தா அவள எனக்கு கொடுத்துட்டு நீ ராஜா மாதிரி வாழலாம். பட் நீ அக்செப்ட் பண்ண மாட்டேங்குறியே! போயும் போயும் அந்த அடிமைக்காக வில்லியம கொன்னு என் மேல கைய வைச்சுட்ட. அவ்வளவு சீக்கிரம் உங்க ரெண்டு பேரையும் விட்டுருவேன்னு நினைச்சியா"


என்று கேட்டுக்கொண்டே  அவர் கையிலிருந்த தடியால் அவனை ஓங்கி அடிக்க, வலியில் கத்த கூட உடலில் தெம்பில்லை அவனுக்கு.


"ஒழுங்கா எங்கன்னு சொல்லிரு?" என்று மீண்டும் பற்களைக் கடித்துக்கொண்டு ரொனேல்ட் கேட்க, மெல்ல விழிகளை உயர்த்திப் பார்த்த லியோ விழிகளாலேயே அருகே வரும்படி கண்ணசைத்தான்.


அவரும் கேள்வியோடு விழிகளை சுருக்கியவாறு அவனை நெருங்க, "சொல்ல முடியாது, உன்னால முடிஞ்சத பார்த்துக்க" என்று அவன் சொன்னதும், இவருக்கோ கோபம் தலைக்கேறியது.


தன் வெறி அடங்கும் மட்டும் அவனை அடித்து தன் கோபத்தை அவர் தீர்த்துக்கொள்ள, சுற்றியிருந்த மற்ற அதிகாரிகளுக்கே அடிவயிறு கலங்கியதோடு சற்று லியோவை நினைத்து பரிதாபமாகவும் இருந்தது.


ஒருகட்டத்திற்கு மேல் அவருக்கே வெறுத்துப் போக, "இவனுக்கு சாப்பாடு தண்ணி எதுவும் கொடுக்க கூடாது. வலி பசின்னு எதுவும் தாங்கிக்க முடியாம அவனே உண்மைய சொல்லணும்" என்று உத்தரவாக கத்திவிட்டு அங்கிருந்து தன் ஆட்களோடு வெளியேறி இருக்க, மொத்தமாக சுயநினைவை இழந்து தொங்கிக்கொண்டிருந்தான் லியோ.


இவன் இங்கு வலியை அனுபவித்துக்கொண்டிருக்கும் அதேநேரம் கிராமத்திற்கு பின்னால் உள்ள காட்டுக்கு நடுவே பராமரிக்கப்படாது விட்டிருந்த பழைய இடிந்த கோயிலில் கால்களை கட்டி கதறியழுதுக்கொண்டிருந்தாள் யாழ்மொழி.


வீராவோ வெளியில் குறுக்கும் நெடுக்குமாக பதற்றமாக நடந்துக்கொண்டிருந்தவன், யாழ்மொழியின் அழுகை சத்தத்தில் அவளை பரிதாபமாகப் பார்த்தான்.


"யாழ், இப்போ அழுது எதுவும் ஆக போறதில்ல. இந்த நேரம்தான் நீ ரொம்ப தைரியமா இருக்கணும். சூரியன் உதிக்குறதுக்கு முன்னாடியே அந்த பெரிய கப்பல் இந்த தேசத்த விட்டு கெளம்பிரும். அதுக்குள்ள நீ அந்த கப்பல்ல ஏறியாகணும். நடுராத்திரியே நாம துறைமுகத்துக்கு போயிரலாம். யார் கண்ணுலயும் சிக்க கூடாது. அதான் முக்கியம்" 


என்று அவன் தீவிர முகபாவனையோடு சொல்லிக்கொண்டே போக, இல்லையெனும் விதமாக தலையாட்டினாள் அவள்.


"இல்லை என்னால் முடியாது, அவரை விட்டு என்னால் எப்படி வர முடியும். அவரை பார்க்கும் வரை நான் எங்கும் வருவதாக இல்லை" என்று அவள் அழுதவாறு அழுத்தமாக சொல்ல, சலிப்பாக விழிகளை உருட்டினான் வீரா.


"என்ன பேசுற யாழ்மொழி! இந்த கப்பல விட்டா மறுபடியும் துறைமுகத்துல இருந்து கப்பல் எப்போ கெளம்பும்னு தெரியல. அதுவரைக்கும் நீ இங்க இருக்குறது பாதுகாப்பே இல்ல. அரசரோட ஆதரவும் உனக்கு இப்போ இல்ல. அதனாலதான் சொல்றேன். அவரோட திட்டப்படி உன்ன அந்த கப்பல்ல பாதுகாப்பா போய் சேர்க்குறது என்னோட பொறுப்பு"


என்றவனின் வார்த்தைகளில் அத்தனை உறுதி.


யாழ்மொழிக்கு அவனை மறுத்து பேசவும் முடியவில்லை. தன்னவனுக்கு என்ன நடந்ததோ ஏது நடந்ததோ என்ற பயத்தில் அவள் தனக்குள்ளேயே அழுது கரைய, அதேநேரம் அரசரின் அரண்மனையில்...


"இந்திரா... மகளே..." என்ற ஆரவாரத்தோடு மகளின் அறைக் கதவைத் தட்டி விட்டு உள்ளே சென்றார் வேந்தன்.


"உன் விருப்பப்படியே ஏற்பாடு செய்துவிட்டேன் இந்திரா, இப்போது உனக்கு ஆனந்தமா?" என்று உற்சாகமாக பேசிக்கொண்டே சென்றவரின் வார்த்தைகள் வாடிய முகமாக வானத்தை வெறித்துக்கொண்டிருந்த மகளைப் பார்த்ததும் அப்படியே நின்றது.


கேள்வியாக புருவத்தை நெறித்தவர், "என்ன நடந்தது?" என்று புரியாமல் கேட்க, தந்தையை திரும்பி ஒரு பார்வைப் பார்த்தவள், எதுவும் பேசாமல் திரும்பிக்கொண்டாள்.


வேந்தனுக்கு எதுவும் புரியவில்லை. 


"உன்னிடம்தானே கேட்கிறேன். ஏன் இப்படி இருக்கிறாய் இந்திரா? யாராவது ஏதாவது கூறினார்களா. ஏன் அமைதியாக இருக்கிறாய்? வாயைத் திறந்து பதில் சொல்.." 


என்று சற்று குரலை உயர்த்தி வேந்தன் கத்தியதும் அவரை நேருக்கு நேராகப் பார்த்தாள் இந்திரா.


"என்ன பதிலை எதிர்பார்க்கிறீர்கள் தந்தையே? என் காதல் கைக்கூடியதை எண்ணி துள்ளிக் குதிக்க கூட முடியவில்லை என்பதையா என் உயிர் தோழியை தாங்கள் அரண்மனையை விட்டே ஒதுக்கியதை எண்ணி வேதனைப்படுவதை பற்றியா.. என்ன பதிலை சொல்ல சொல்கிறீர்கள்?" என்று இந்திரா ஆவேசமாகக் கேட்க, இப்போது அதிர்ந்து விழித்தார் வேந்தன்.


ஆனால் அந்த அதிர்ச்சி சில கணங்கள்தான்.  


மகளை கோப விழிகளோடுப் பார்த்தவர், "அவள் செய்த தவறுக்கு கிடைத்த தண்டனை அது" என்று அழுத்தமாக சொல்ல, "தவறுக்கும் மேலான தண்டனை அது தந்தையே! அவளின் நிலையை கொஞ்சமும் தாங்கள் யோசிக்கவில்லை. அவளுக்கு என்ன ஆனதோ ஏது ஆனதோ என்ற பதட்டம் மட்டுமே எனக்குள் இருந்துக்கொண்டே இருக்கிறது. இதன் பிறகு எத்தனை சந்தோஷங்கள் என் வாழ்வில் நிகழ்ந்தாலும் யாழ்மொழிக்கான இடம்  வெற்றிடமாக எனக்குள் இருந்துக்கொண்டே இருக்கும்" என்று பேசிக்கொண்டே சென்றவள் இறுதியில் வெடித்து அழுதேவிட்டாள்.


வேந்தனுக்கு இதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. 


விழிகளை அழுந்த மூடித் திறந்தவர், "யாழ்மொழியின் இடத்தில் நீயே இருந்திருந்தாலும் உனக்கும் அதே தண்டனைதான் இந்திரா. துரோகத்துக்கான தண்டனை இது. ஆனால்..." என்று சற்று நிறுத்த, தந்தையை அழுகையோடு நிமிர்ந்துப் பார்த்தாள் அவள்.


"இந்த தேசத்துடைய அரசன் நான், அவ்வளவு இலகுவாக என்னிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. அவளும் அவனும் திருமணம் செய்துவிட்டார்கள் அதுவும் உன் காதலனின் தலைமையில். ஊரிலுள்ள என் விசுவாசிகள் மூலம் கிடைத்த தகவல் அது. அதனால் நீ இப்போது அழுவதற்கு அவசியமில்லை.


அதுமட்டுமில்லாமல் இதைப் பற்றி தெரிந்தும் நான் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் மற்றவர்களும் இதை போன்ற ஒரு செயலை தைரியமாக செய்யத் துணிவார்கள். அது சாதகமாகவும் இருக்கலாம் பாதகமாகவும் சென்று முடியலாம். 


ஒரு அரசனாக என் கடமையைதான் நான் செய்திருக்கிறேன். இதற்குமேல் அவளின் பெயர் இந்த அரண்மனையில் ஒலிக்கக் கூடாது. புரிகிறதா.. விரைவில் உன் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கும்" என்று கறாராக சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறியிருந்தார் வேந்தன்.


போகும் தன் தந்தையைப் பார்த்திருந்த இந்திராவுக்கு இத்தனை நேரம் மனதிலிருந்த பெரிய பாரம் இறங்கிய உணர்வு.


அப்படியே தரையில் மண்டியிட்டு அமர்ந்தவள், "யாழ், உன்னுடன் இருக்க வேண்டிய நேரத்தில் நான் இல்லாமல் போய்விட்டேனே" என்று ஒருபக்கம் சந்தோஷம் என்றாலும் இன்னொரு புறம் வேதனையோடு நினைத்துக்கொள்ள, நேரம் சென்று சூரியனும் மெல்ல அஸ்தமிக்கத் தொடங்கியது.


தேசம் முழுவதும் இருள் சூழ, ஆங்கிலேய சிறைச்சாலையில் உணர்வின்றி கட்டப்பட்டிருந்த கயிற்றோடு தொங்கிக்கொண்டிருந்தான் லியோ.


திடீரென அவனின் கையை கட்டியிருந்த கயிறு அவிழ்க்கப்பட, தரையில் விழுந்தவனை வேகவேகமாக தட்டின இரு கரங்கள்.


"சார்... சார் கெட் அப்! கண்ணை திறந்து பாருங்க" என்ற ஜேம்ஸின் குரல் காதில் ஒலிக்கவும் கஷ்டப்பட்டு மெல்ல விழிகளைத் திறந்துப் பார்த்தான் லியோ.


அவன் பார்த்ததும் சந்தோஷத்தில் விழி விரித்த மற்றவன், "சார், நமக்கு ரொம்ப நேரமில்ல, ரொனேல்ட் சார் இங்க வரதுக்குள்ள நாம இங்க இருந்து போயாகணும்" என்று அவசரமாக சொல்ல, எழ முயன்றவனுக்கு மீண்டும் மீண்டும் தோல்வியே.


உடல் முழுவதும் இரத்தத்தில் மூழ்கி அவனிருந்த நிலையைப் பார்க்க ஜேம்ஸிற்கே மனம் கனத்தது.


"சார், சீக்கிரமா இங்கயிருந்து அவர கூட்டிட்டு போங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல அவர் வந்துருவாரு. எதையாச்சும் சொல்லி நான் சமாளிச்சுக்குறேன். சீக்கிரம் சார்" என்று சிறைச்சாலைக்கு பொறுப்பான அதிகாரி டேனியல் வெளியில் எட்டிப் பார்த்தவாறு பதற்றமாக சொல்ல, லியோவின் கரத்தை தன் தோளில் போட்டுக்கொண்டு அழைத்துச் சென்றான் மற்றவன்.


அவனோடு நடக்க முடியாமல் வலியை பொறுத்துக்கொண்டு நடந்தவனுக்கு தன்னவளின் ஞாபகம் வர, "யாழ்... யாழ்மொழி.." என்று திக்கிததிணறி சொல்ல, அதைப் புரிந்துக்கொண்ட ஜேம்ஸிற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.


எதுவும் பேசாமல் வேகமாக லியோவை தான் வந்த காரிலேற்றி அவன் மின்னல் வேகத்தில் பறக்க, அடுத்த ஐந்தே நிமிடத்தில் அங்கு தன் அதிகாரிகளோடு வந்தார் ரொனேல்ட்.


உள்ளே வேகமாக நுழைந்தவரைப் பார்த்த டேனியலுக்கு வயிற்றில் பயபந்து உருள, இங்கு ரொனேல்டிற்கு வெறுமையாக இருந்த சிறைச்சாலையை பார்த்ததும் பேரதிர்ச்சியாக இருந்தது.


கூடவே கோபமும் பன்மடங்கு அதிகரிக்க, கை முஷ்டியை இறுக்கி பற்களைக் கடித்தவாறு நின்றிருந்த ரொனெல்டின் அருகில் வந்த டேனியல், "சார் எனக்.. எனக்கு என்ன நடந்துச்சுன்னே தெரியல. கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் இங்கதான் இருந்தாரு. நான் சாப்பிட போன நேரத்துலதான்..." என்று ஏதேதோ சமாளிக்க முயன்றான்.


ஆனால் அப்போது ரொனேல்ட் இருந்த கோபத்திற்கு நிதானம் எங்கோ தொலைவில் பறந்திருக்க, தன் துப்பாக்கியை சுழற்றி அவன் நெஞ்சிலேயே சுட்டிருக்க, உயிரற்ற சடலமாக தரையில் விழுந்தான் அவன்.


சுற்றியிருந்த அதிகாரிகள் கூட இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.


அவர்கள் அதிர்ந்துப் போய் நின்றிருக்க, "அந்த லியோ என் முன்னாடி நிக்கணும். அதுவும் பொணமா.. அவனும் அந்த நாயும் உயிரோட இருக்க கூடாது. அவன் கண்டிப்பா ரொம்ப தூரம் போயிருக்க மாட்டான். இந்த தேசத்த விட்டு போயிருக்க வாய்ப்பில்ல, இதுக்குள்ளதான் இருக்கணும். எல்லா இடத்துலயும் தேடுங்க. ஒரு இடம் விடக் கூடாது.. சொன்னது புரிஞ்சதா.." என்று அவர் கத்த, உடனே தத்தமது துப்பாக்கியோடு ஊருக்குள் தேடத் துவங்கினர் அவரின் அதிகாரிகள்.


இங்கு இவ்வாறு இருக்க, ஜேம்ஸ் காரை வேகமாக செலுத்திக்கொண்டே, "சார், நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. இங்கிலேன்ட் கவர்மென்டுக்கு நான் நடந்தது எல்லாத்தையும் சொல்லி லெட்டர் அனுப்பிட்டேன். கண்டிப்பா அவங்க உங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பாங்க. நீங்க இங்க இருந்து பாதுகாப்பா போனா மட்டும் போதும்" என்று பதற்றமாக சொல்ல, லியோவுக்கு தன்னவளின் நினைவுகள் மட்டும்தான் உள்ளுக்குள்.


"யாழ்... எங்க இருக்கம்மா! யாழ்... யா..." என்று தன்னவளின் நினைவில் வலியில் முணங்கிக்கொண்டே அவன் அப்படியே மயங்கிப் போக, ஜேம்ஸிற்கு அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.


இதற்கு முன் நடந்தது எதுவுமே அவனுக்குத் தெரியவில்லை. இப்போது இருக்கும் நிலையில் யாழ்மொழியை எங்கு சென்று தேடுவதென்று கூட அவனுக்குத் தெரியவில்லை.


குழப்பத்தோடு தன் தனிப்பட்ட குவாட்டஸிற்கு அவனை அழைத்து வந்த ஜேம்ஸ், தன் உயரதிகாரியை அங்கு பாதுகாப்பாக வைத்து யாருக்கும் தெரியாமல் தனக்கு விசுவாசமானவர்கள் மூலமாக வைத்தியனையும் வரவழைத்தான்.


"ஜேம்ஸ், ஊர் முழுக்க லியோ சாரதான் தேடுறாங்க. அவர் இங்கதான் இருக்காருன்னு தெரியவே கூடாது" என்று ஒரு அதிகாரி சொல்ல, "ஆமா.. ஆனா சார் காதலிக்கிற அந்த பொண்ண எப்படியாச்சும் கண்டுபிடிக்கணும். அவ இப்போ அரண்மனையில இல்ல. அந்த ஊரை சேர்ந்த வைத்தியனும் அந்த பொண்ணு அங்க இல்லன்னு சொல்றான். இந்த நேரத்துல எங்கன்னு போய் தேடுறது. ஒன்னுமே புரியல..." என்றான் மற்றவன் யோசனையோடு.


இருவரும் குழப்பத்தோடு நின்றுக்கொண்டிருக்க, "யாழ்... யாழ்மொழி... ஆஆஆ..." என்ற சத்தம் அறையிலிருந்து பலமாகக் கேட்க, வேகமாக உள்ளே ஓடினர் இருவரும்.


"ஐயா, என்னை வைத்தியம் பண்ண விடுங்க. உங்க உடம்புல காயம் ரொம்ப ஆழமா இருக்கு" என்று அந்த ஊர் வைத்தியன் பயத்தில் பதற்றமாக சொல்ல, தன் அருகிலிருந்த மொத்தப் பொருட்களையும் தூக்கியெறிந்தான் லியோ.


"எனக்கு யாழ பார்க்கணும். நீ எங்க இருக்கம்மா? அய்யோ யாழ்..." என்று அவன் அரை மயக்கத்தில் எழுந்து ஆக்ரோஷமாகக் கத்த, வேகமாக அவனின் அருகே ஓடிய ஜேம்ஸ் அவனை கட்டுப்படுத்த முயன்றான்.


"சார் ப்ளீஸ் காம் டவுன்! நீங்க இங்க இருக்குறது யாருக்கும் தெரிய கூடாது. ப்ளீஸ் சத்தம் போடாதீங்க.." என்று அவன் சொல்ல, "எனக்கு அவள பார்க்கணும், யாழ்... யாழ்மொழி... என்னை அவகிட்ட கூட்டிட்டு போ ஜேம்ஸ், துறைமுகத்துல அவ எனக்காக காத்துட்டு இருப்பா" என்று கத்திக்கொண்டே மீண்டும் சுயநினைவின்றி விழுந்தவனைப் பார்த்து அதிர்ந்துப் போய்விட்டனர் மொத்தப் பேரும்.


நடக்கக் கூட முடியாமல் தன்னிலையை இழந்து லியோ படுத்த படுக்கையாக இருக்க, ஒற்றைப் புருவத்தை தூக்கிய வண்ணம் இடுப்பில் கைக்குற்றி யாழ்மொழியை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான் வீரா.


"நமக்கு நேரமில்ல யாழ், சொல்றத கேளு. இப்போவே நாம துறைமுகத்துக்கு போகணும். சொல்றது புரியுதா இல்லையா?" என்று அவன் கத்த, "இல்லை, அவர் இல்லாமல் நான் எங்கும் வர மாட்டேன். அவருக்கு ஏதோ ஆபத்து என்று மட்டும் என் மனம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. எனக்கு அதிகாரியை இப்போதே பார்க்க வேண்டும் அண்ணா" என்று பிடிவாதமாக சொன்னாள் அவள்.


வீராவுக்கு அவளின் செயலில் கோபத்தை அடக்குவது பெரும் பாடாகத்தான் இருந்தது.


**********

விழி தீயிலொரு தவம் 30

https://agnitamilnovels.blogspot.com/2026/01/30.html


விழி தீயிலொரு தவம் கதை ஆடியோ நாவலா என்னோட யூடியூப் சேனல்ல இருக்கு கேட்டுட்டு மறக்காம கமென்ட் பண்ணுங்க.. 

Channel name - kadhaikulla polaama

channel link 👇

https://youtube.com/@kadhaikullapolaama7612?si=BwNNnPMl514OHY2Y


And....


Teenage and kids கான ஒரு யூடியூப் சேனல்.. பெரியவங்க கூட பார்க்கலாம் 😁.. யாருக்குதான் கார்டூன்ஸ் கதைகள பார்க்குறது பிடிக்காது... Fairy tales கதைகள்ல இருந்து பேய் கதைகள் வரைக்கும் Visuals oda பார்க்கலாம்.. 😇

Channel name - Bundle of Tales

https://youtube.com/@bundle_of_tales?si=16UQTLk8uJ_ZKTVB


-Shehazaki 🙌

Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚