விழிகள் 30
யாழ்மொழியோ பிடிவாதமாக நிற்க, இடுப்பில் கைக்குற்றி அவளை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான் வீரா.
அவனின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் பறந்துக்கொண்டிருந்தது.
"இங்க பாரு யாழ், உன்னை எப்டியாச்சும் காப்பாத்துவேன்னு நான் வாக்கு கொடுத்திருக்கேன். ரொம்ப நேரம் இங்க இருக்க முடியாது, அவங்க உன்ன கண்டுபிடிச்சிருவாங்க. என்னை நம்பு! நம்ம திட்டப்படிதான் எல்லாமே நடக்கும். அவர் கண்டிப்பா வருவாரு"
என்று அவன் சொல்லி புரிய வைக்க முயல, அப்போதும் அவளுடைய முகம் தெளிவடையவில்லை.
விழிகளை அழுந்த மூடித் திறந்து, "யாழ், அவர் சொன்ன வார்த்தைய நீ மீற போறியா. அவர நீ பார்க்கணும்னா அதுக்கு நீ உயிரோட இருக்கணும். எல்லா அதிகாரிகளும் உன்ன தேடிட்டு இருக்காங்க. அவங்க கையில நீ சிக்க கூடாது. நான் சொல்றத கொஞ்சம் புரிஞ்சுக்கோ" என்று அழுத்தமான குரலில் சொல்ல, சில கணங்கள் தீவிரமாக யோசித்துவிட்டு மெல்ல தலையாட்டி வைத்தாள் யாழ்மொழி.
உடனே வீரா அவளை யார் கண்ணிலும் சிக்காமல் துறைமுகத்தை நோக்கி அழைத்துச் செல்ல, சுயநினைவு இல்லாமல் கிடப்பவனை பாவமாகப் பார்த்திருந்தான் ஜேம்ஸ்.
அப்போதுதான் லியோ இறுதியாக சொன்ன வார்த்தைகள் அவனுக்கு ஞாபகத்திற்கு வர, "துறைமுகத்துல காத்துக்கிட்டு இருப்பான்னா என்ன அர்த்தம்? சார் எதை பத்தி பேசுறாரு.. ஒருவேள..." என்று ஆழமாக யோசித்தவனுக்கு ஏதோ ஒன்று புலப்படுவது போல இருந்தது.
உடனே அவனுக்கு விசுவாசமான இன்னொரு அதிகாரியை பாதுகாப்புக்கு வைத்துவிட்டு அவனும் துறைமுகத்துக்கு செல்ல, பாரதத்திலிருந்தது சுரண்டப்பட்ட வளங்கள் மற்றும் பொருட்கள் அடங்கிய இரண்டு கப்பல்கள் இன்னும் சிறிது நேரத்தில் செல்வதற்காக காத்துக்கொண்டிருந்தன.
இந்திய அடிமைகள் சிலரும் அதிகாரிகள் சிலரும் அங்கு பரபரப்பாக இருக்க, அங்கு கட்டப்பட்டிருந்த பெரிய தூண்களுக்கு பின்னே மறைந்திருந்து நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தான் வீரா.
"யாழ், என் பின்னாடியே இரு, இப்போதான் நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்" என்று அவன் சொல்லிக்கொண்டே பதுங்கியவாறு அவளை அழைத்துச் செல்ல, யாழ்மொழியின் விழிகள் தன்னவனை மட்டும்தான் தேடிக்கொண்டிருந்தது.
"எப்போது வருவீர்கள் அதிகாரி, தங்களை காணும் வரை உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருப்பது போலிருக்கிறது" என மானசீகமாக பேசிக்கொண்டு அவன் இழுத்த இழுப்பிற்கு அவள் செல்ல, வீராவின் விழிகளில் சிக்கியது கப்பலில் ஏற்றுவதற்காக வைத்திருந்த பெரிய பெட்டிகள்.
திடீரென அவனே எதிர்பார்க்காதது போல பின்னாலிருந்து, "வீரா..." என்ற குரல் கேட்க, இருவருமே தூக்கி வாரிப்போட்டவர்களாக திரும்பிப் பார்த்தனர்.
அங்கு அவர்களுக்கெதிரே அவனின் ஊரை சேர்ந்த, ஆங்கிலேயர்களுக்கு கீழே வேலைப் பார்க்கும் அடிமை ஒருவரே நின்றுக்கொண்டிருக்க, "ஓ.. நீங்கதான! நான் ரொம்ப பயந்துட்டேன். நான் சொன்னது இந்த பொண்ணுதான்" என்று சாதாரண குரலில் சொன்னான் அவன்.
யாழ்மொழிக்கு அப்போதுதான் நிம்மதி பெருமூச்சே வெளியேற, "தம்பி, இங்க வெள்ளைக்காரனுங்க சுத்திட்டே இருப்பானுங்க. யாரோட கண்ணுலயாச்சும் சிக்கினா அவ்வளவுதான். உடனே நான் சொல்ற மாதிரி பண்ணுங்க. பொட்டபுள்ள வேற, சீரழிச்சு போட்டுருவானுங்க" என்று பதற்றமாக சொல்லிக்கொண்டே வேகமாக அவர்களுக்கு அருகே வந்தார் அவர்.
உடனே சுற்றிமுற்றி பார்த்தவாறு முன்னே இருந்த பெட்டியைத் திறந்தவர் உள்ளே இருந்த பொருட்களை ஒரு ஓரமாக தூக்கியெறிய, "என்.. என்ன செய்கிறீர்கள்? யாராவது பார்த்துவிட்டால்..." என்று பதற்றமாக சொன்னாள் யாழ்மொழி.
"இல்லைம்மா யாரும் உன்னை பார்த்துர கூடாதுன்னுதான் நான் இப்படி பண்றேன். நீ இந்த பெட்டிக்குள்ள இரு, எல்லா பெட்டிகளோட சேர்த்து இதையும் கப்பல்ல ஏத்திருவாங்க அதுக்கப்பறம் கவலைப்பட தேவையில்ல. கப்பலுக்குள்ள சுத்தப்படுத்துற வேலையில இருக்குற எங்க ஆளு ஒருத்தன் உனக்கு தேவையானத பார்த்துப்பான்"
என்று அந்த மனிதர் தன் திட்டத்தை சொல்ல, அவரின் இந்த முயற்சியை வீரா சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
"நீங்க இத்தனை பெரிய சிரமத்தை எடுத்து எனக்கு உதவி பண்ணுவீங்கனு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல அண்ணே! ரொம்ப நன்றி" என்று அவன் கையெடுத்துக் கும்பிடாத குறையாக நன்றியுணர்ச்சியோடு சொல்ல, யாழ்மொழிக்குதான் இப்போது பதற்றம் மேலோங்கி இருந்தது.
"அண்ணா, இது எனக்கு பெரும் உதவிதான். ஆனால்... ஆனால் அவர் இன்னும் வரவே இல்லையே! நீங்கள்தானே சொன்னீர்கள் அவர் எனக்காக இங்கு காத்திருக்கிறார் என்று. ஒருவேளை என்னிடம் பொய் சொன்னீர்களா?"
என்று விழிகளில் பயத்தோடும் பதற்றத்தோடும் அவள் கேட்க, இருபக்கமும் சலிப்பாக தலையாட்டினான் வீரா.
"ஆமா சொன்னேன்தான். ஐயா என்கிட்ட எதை சொன்னாரோ அதை சொன்னேன். அவர் கண்டிப்பா உனக்காக வருவாரு. இப்போ தயவு செஞ்சு பிடிவாதம் பிடிக்காத! சத்தம் போட்டு கூட பேச முடியாத நிலைமையில இருக்கோம். தயவு செஞ்சு..." என்று வீரா அவளின் அருகே வர, கோபத்தோடு பின்னே நகர்ந்தாள் யாழ்மொழி.
"இல்லை, நீங்கள் என்னை ஏமாற்றுகிறீர்கள். அவர் வர போவதில்லை. என்னை மீண்டும் நிர்க்கதியாக்கி விட்டாரா அவர்!" என்று தலையைத் தாங்கிய வண்ணம் அவள் ஏதேதோ பிதற்றிக்கொண்டு போக, யாழ்மொழியின் தோள்களைப் பற்றி ஆக்ரோஷமாக குலுக்கினான் அவன்.
"உனக்கென்ன பைத்தியமா! நீயும் மாட்டிக்கிட்டு எங்க எல்லாரையும் மாட்டிவிட்டு சாக போறியா? இதை அவர் ஏத்துப்பாரா சொல்லு. கண்டிப்பா துரைக்கு தெரிஞ்சா இதை மன்னிக்கவே மாட்டாரு. சொல்றத கேளு யாழ்! உன்ன பாதுகாக்க அவர் ரொம்ப முயற்சி பண்றாரு, அதை வீணாக்காத, உன் காதல் மேல உனக்குதான் நம்பிக்கை இருக்கணும். நம்பிக்கை இல்லன்னா அங்க உறவே இல்ல. நீ என்ன தொலைதூரத்துக்கு போனாலும் உன்னோட காதல் உன்னை தேடி வரும் அவர் திரும்பி வருவாங்குற நம்பிக்கை உனக்கு இருக்கா இல்லயா அதை சொல்லு..."
என்று வீரா பேசி முடித்துவிட்டு அவளை கூர்மையாகப் பார்க்க, திடீரென ஒரு குரல் கேட்டது.
"ஹேய்.. யூ ஃபாத் ஆஃப் யூ... வாட் ஆர் யெ டூயிங் ஹியர்.. டெல் மீ.." என்று துப்பாக்கியை நீட்டிக்கொண்டு அங்கிருந்த ஒரு ஆங்கிலேய அதிகாரி கத்த, வீராவும் அந்த பெரியவரும் பயத்தில் உறைந்தே போய்விட்டனர்.
பெட்டிக்கு பின்னே நின்றிருந்த யாழ்மொழி அந்த ஆங்கிலேயனின் விழிகளுக்கு தென்படாமல் போனது அவர்களின் அதிர்ஷ்டவசமாகிப் போக, "ஐயா.. நாங்க இங்க வேலை பார்க்குறவங்கதான். எங்கள எதுவும் பண்ணிடாதீங்க. நாங்க எந்த தப்பும் பண்ணல நம்புங்க" என்று அவர் சைகையால் தன்னையும் வீராவையும் காட்டி பதற்றமாக சொன்னார்.
ஆனால், அந்த ஆங்கிலேயன் எதை புரிந்துக்கொண்டானோ!
"வாட்... " என்று ஆங்கிலத்தில் கத்திக்கொண்டு அவன் அவர்களை நோக்கி வர, "மாட்டிக்கிட்டோம்..." என்று பதற்றமாக நினைத்த வீராவுக்கு இதயம் துடிக்கும் சத்தம் காதிற்கே கேட்டது.
அவளை மறைப்பது போல் அவன் மெல்ல நகர, அந்த ஆங்கிலேயனின் பார்வையோ சந்தேகத்தில் சுருங்கியது. புருவங்களை நெறித்தவாறு அவன் மெல்ல வர, "ஆஃபீசர்..." என்ற ஜேம்ஸின் குரல் பின்னாலிருந்து கேட்டது
மூன்று பேரின் பார்வையும் அவனை நோக்க, "இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க, அங்க போய் எக்ஸ்போர்ட் பண்ற ப்ரொசீஜர்ஸ பாருங்க" என்று கடுமையான குரலில் அவன் சொன்னதும், வேறு வழியில்லாமல் அங்கிருந்து நகர்ந்தான் அந்த அதிகாரி.
உடனே அவர்களுக்கு அருகே ஜேம்ஸ் வர, மற்ற இருவருக்கும் போன பயம் மீண்டும் தொற்றிக்கொண்டது.
ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக அவர்களுக்கு பின்னே எட்டிப் பார்த்த ஜேம்ஸ் பயந்து நடுங்கிக்கொண்டிருந்த யாழ்மொழியைப் பார்த்து புன்னகையோடு விழிகளை அழுந்த மூடித் திறந்தான்.
அவன் சென்றதும் வீராவோ ஆச்சரியத்தோடு யாழ்மொழியை திரும்பிப் பார்க்க, நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டவள் மரப்பலகையினாலான அந்த வெற்றுப் பெட்டியில் சுருண்டு அமர்ந்துக்கொண்டாள்.
உடனே வீராவும் புன்சிரிப்போடு அவளைப் பார்த்தவாறு பெட்டியை மூடிவிட, கண்ணீரோடு எதிர்காலத்தை நோக்கி எதிர்பார்ப்பில்லாமல் காத்திருந்தாள் யாழ்மொழி.
அடுத்த சில நிமிடங்களிலேயே வைக்கப்பட்டிருந்த மொத்தப் பெட்டிகளும் கப்பலில் ஏற்றப்பட, வீராவின் நண்பன் ஏற்பாடு செய்திருந்த
கணபதியோ கப்பலை சுத்தப்படுத்தியவாறு பெட்டிகளை உற்றுக் கவனித்தான்.
"அந்த பொண்ணு இங்க எங்க இருக்கான்னு தெரியலையே, கண்டிப்பா எங்கேயாவது ஒளிஞ்சிருக்கணும். அவ எந்த பெட்டிக்குள்ள இருக்கான்னு தெரிஞ்சா மட்டும் போதும்" என்று தீவிரமாக யோசித்த வண்ணம் வேலை செய்துக்கொண்டே யாழ்மொழியை தேட ஆரம்பித்தான் அவன்.
மொத்த பெட்டிகளும் கப்பலில் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, சாதாரணமாக பார்ப்பது போல ஒவ்வொரு பெட்டிகளாக திறந்துப் பார்த்தான் அவன்.
நான்கைந்து பெட்டிகளைக் கடந்ததும் ஒரு பெட்டியைத் திறந்த கணபதிக்கு உள்ளே பயந்தபடி சுருண்டு இருந்தவளைப் பார்த்ததும் அதிர்ச்சியில் விழிகள் பெரிதாக விரிய, யாழ்மொழியோ அழுதபடி கையெடுத்துக் கும்பிட்டாள்.
உடனே சுற்றி முற்றி பார்த்துவிட்டு, "கவலைப்படாதம்மா! நான் வீரா தம்பியோட ஆளுதான்" என்றுவிட்டு வேகமாக மூடியவன், நிம்மதி பெருமூச்சு விட்டவனாக மீண்டும் வேலை செய்வது போல பாசாங்கு செய்ய, யாழ்மொழிக்குதான் தன்னவனை எதிர்பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது.
நங்கூரம் ஏற்றப்பட்டு கப்பல் மெல்ல நகர ஆரம்பிக்க, "நான் இப்போது என்ன செய்வேன், அவ.. அவர் கடைசி வரை வரவே இல்லையே! அவர் இல்லாமல் நான் எப்படி.. ஏன் ஏன் கடவுளே எனக்கு இத்தனை சோதனை? நான் என்ன பாவம் செய்தேன்? இப்படியே ஆழ் நீரில் குதித்து இறந்துவிட்டாலும் பரவாயில்லை என்று தோன்றுகிறதே" என்று மெல்லிய விசும்பலோடு அழுது கரைந்தவளுக்கு வீராவின் வார்த்தைகள்தான் ஞாபகத்திற்கு வந்தது.
மொத்த சிந்தனையையும் கலைத்து, "அதிகாரி என்னை ஒருபோதும் கை விட மாட்டார், நிச்சயமாக என்னை தேடி கடல் கடந்தும் வருவார், எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்று தனக்குத்தானே கூறிக்கொண்டவளின் வார்த்தைகளில் அத்தனை உறுதி.
தேசம் விட்டு கடல் கடந்து தன்னவனின் தேசத்தை நோக்கி அவள் பயணிக்க, இங்கு அறையில் தான் வரைந்திருந்த யாழ்மொழியின் ஓவியத்தை துப்பாக்கியால் தாறுமாறாக சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார் ரொனேல்ட்.
"ஆஆ... அவ எங்க இருக்கா. எனக்கு அவ வேணும். அவ வேணும்" என்று ஆக்ரோஷமாக கத்திக்கொண்டிருப்பவரை படுக்கையில் சக்தியிழந்து கிடந்திருந்த அடிமைப் பெண்ணொருத்தி ஏதோ ராட்சசனை பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
தன்னை முழுதாக போர்த்தி சுருண்டு படுத்துக்கொண்டிருந்தவளுக்கு எங்கு இந்த கோபத்தையும் தன் உடலில் காட்டிவிடுவானோ என்ற பயம் உள்ளுக்குள் உருள, கோபத்தில் அங்கிருந்த மது போத்தல் முழுக்க வாயில் சரித்தார் ரொனேல்ட்.
வேகமாக அவளை நோக்கி வந்தவர் அவள் எதிர்பார்த்தது போல தன் மொத்த கோபத்தையும் அவளுடைய உடலில் காண்பிக்க, கதறித் துடித்த அந்த அடிமைப் பெண்ணை காப்பாற்ற அந்த கடவுளால் கூட முடியவில்லை.
அடுத்தநாள் மெல்ல கண் விழித்த லியோ கொஞ்சம் கொஞ்சமாக நடப்பை உணர ஆரம்பிக்க, அந்த கணம் அவனின் மனக்கண்ணில் விம்பமாக ஓடியது என்னவோ யாழ்மொழியின் முகம் மட்டுமே.
"யாழ்... யாழ்மொழி..." என்று அவன் முணுமுணுத்தவாறு படுக்கையிலிருந்து இறங்கப் போக, எதேர்ச்சையாக அறையை கடக்கப் போன ஜேம்ஸோ உடனே பதறிப்போனவனாக வேகமாக வந்து அவனை தாங்கிக்கொண்டான்.
"சார், ஆர் யூ ஆல்ரைட்? இப்போ உங்களுக்கு பரவாயில்லையா?" என்று அவன் பதற்றமாகக் கேட்க, நெற்றியை நீவி விட்டவாறு சுற்றிமுற்றி பார்த்தவனுக்கு எதுவுமே புரியவில்லை.
"இது... இது குவாட்டஸ்தானே! நா.. நான் இங்க என்ன பண்றேன்? இப்போ நேரம் என்னாச்சு? யாழ்.. யாழ் எனக்காக வெயிட் பண்ணுவா, நான் போகணும்" என்று அவன் படபடவென பேசிக்கொண்டே போக, "சார் ப்ளீஸ் காம் டவுன்! அந்த பொண்ணு சேஃபா இருக்கா" என்று சற்று குரலை உயர்த்திச் சொன்னான் ஜேம்ஸ்.
உடனே லியோ அவனை ஆச்சரியமாக நிமிர்ந்துப் பார்க்க, அவனிடம் தண்ணீர் க்ளாஸை நீட்டியவாறு "மொதல்ல இதை குடிங்க சார், உங்க உடம்பு இன்னும் முழுசா குணமாகல" என்றான் மற்றவன்.
லியோ எந்த மறுப்பும் சொல்லவில்லை. உடனே தண்ணீர் க்ளாஸை வாங்கி மடமடவென குடித்தவன், "இப்போ சொல்லு ஜேம்ஸ்" என்று கேட்டு கூர்மையாகப் பார்க்க, அவனும் துறைமுகத்தில் நடந்ததை முழுதாக சொல்லி முடித்தான்.
அதைக் கேட்ட லியோவுக்கு முதலில் அதிர்ச்சியாக இருக்க, "வூ இஸ் த கேப்டன்?" என்று கேட்டதும், ஜேம்ஸ் யோசித்துவிட்டு ஒரு பெயரை சொன்னான்.
அந்தப் பெயரை கேட்டதும்தான் ஏனென்று தெரியாத நிம்மதி அவன் மனதில் பரவியது.
"சார்.. எப்படியும் அந்த பொண்ணு லண்டனுக்கு போய் சேர ஒரு மாசம் ஆகலாம். அதுவரைக்கும் அந்த பொண்ணு எப்படி..."
என்று தயக்கமாக ஜேம்ஸ் கேட்க, லியோவின் இதழ்கள் அர்த்தப் புன்னகை புரிந்தன.
"அங்க எல்லா ஏற்பாடும் பண்ணி வச்சுட்டேன், யாழ்மொழிக்கு அங்க எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனா..." என்று சட்டென நிறுத்தியவனின் விழிகள் கோபத்தில் சிவப்பேற அவனுடைய நெற்றி நரம்புகள் புடைத்தன.
"ரொனேல்ட்..." என்று பற்களைக் கடித்து கை முஷ்டியை இறுக்கிக்கொண்டவன், "நான் இங்க இருந்து போகும் போது அந்த ரொனேல்ட் உயிரோட இருக்க கூடாது. ஹேய் ஜேம்ஸ் கொஞ்சநாளா தமிழ் பேச கத்துக்குறல்ல, அதனால..." என்று தீவிரமாக முகபாவனையோடு கேட்டு தன் திட்டத்தை சொல்ல, அதைக் கேட்ட ஜேம்ஸிற்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த உணர்வு.
"இதுக்கு ஒத்துப்பாங்களா சார்? ஒருவேள ஒத்துக்கலன்னா..." என்று அவன் தயக்கமாக இழுக்க, "ஜஸ்ட் டூ வாட் ஐ சே ஜேம்ஸ், ஐ நோ இட்.." என்று அழுத்தமாக சொன்ன லியோவின் இதழ்கள் கேலியாக வளைந்தன.
**********
விழி தீயிலொரு தவம் கதை ஆடியோ நாவலா என்னோட யூடியூப் சேனல்ல இருக்கு கேட்டுட்டு மறக்காம கமென்ட் பண்ணுங்க..
Channel name - kadhaikulla polaama
channel link 👇
https://youtube.com/@kadhaikullapolaama7612?si=BwNNnPMl514OHY2Y
And....
Teenage and kids கான ஒரு யூடியூப் சேனல்.. பெரியவங்க கூட பார்க்கலாம் 😁.. யாருக்குதான் கார்டூன்ஸ் கதைகள பார்க்குறது பிடிக்காது... Fairy tales கதைகள்ல இருந்து பேய் கதைகள் வரைக்கும் Visuals oda பார்க்கலாம்.. 😇
Channel name - Bundle of Tales
https://youtube.com/@bundle_of_tales?si=16UQTLk8uJ_ZKTVB
-Shehazaki 🙌

Comments
Post a Comment