விழிகள் 21



அடுத்தநாள் மனம் முழுக்க பாரத்தோடு லியோ தன் நாட்டிற்கு திரும்பியிருக்க, அவனின் நினைவுகளால் வாடிப் போனாள் யாழ்மொழி என்றுதான் சொல்ல வேண்டும்.


'நிச்சயமாக அவர் என்னைத் தேடி வருவார், ஒருவேளை வராமல் போனால்... அவருடைய நினைவுகளே போதும் நான் வாழ' என்று மட்டும் தனக்குள் நினைத்துக்கொண்டவள் அவனுடைய நினைவுகளோடு நேரத்தைக் கடத்த, அதேநேரம் தன் அறை ஜன்னல் வழியே தோட்டத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் இந்திரா.


"வீராவை நான் திருமணம் செய்தால் தந்தை ஆட்சியையே விட்டு விடுவதாக சொல்கிறார் என்றால், ஒரு போதும் தன்மானத்தை இழக்க மாட்டேன் என்று விதாண்டாவாதம் செய்கிறான் அவன். நானும் என்னதான் செய்வது, இருவருக்குமிடையில் சிக்கித் தவிப்பது என்னவோ நான்தான்' 


என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தவள் சட்டென அறைக் கதவு தட்டப்படும் சத்தத்தில் திரும்பிப் பார்த்தாள்.


வேகமாக சென்று அவள் கதவைத் திறக்க, உள்ளே வந்த அரசர் வேந்தனோ அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துக்கொள்ள, அவருக்கு பக்கத்தில் தரையில் அமர்ந்துக்கொண்ட இந்திரா தந்தையின் மடியில் தலையை சாய்த்துக்கொண்டாள்.


"நான் சொன்னதைப் பற்றி சிந்தித்தாயா இந்திரா?" என்ற வேந்தனின் கேள்விக்கு அவளிடம் அமைதி மட்டுவே நிலவ, ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவர், "ஒரு தந்தையாக என் மகள் ஒரு இளவரசனை கரம் பிடிக்க வேண்டுமென்றுதான் நான்  ஆசைப்படுவேன், அதில் என்ன தவறு இருக்கிறது?  எப்டியிருந்தாலும் எனக்குப் பிறகு நீதான் ஆட்சியை பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும். அதனால்தான் நீ காதலிப்பவன் ஒரு சாதாரண சந்தை வியாபாரி என்று தெரிந்ததும் என் பதவியையே அவனுக்கு கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள தயாராக இருக்கிறேன். இத்தனை தூரம் நான் இறங்கி வந்தும் நீ அமைதி காப்பது சரியா?" என்றார் கேலிப் புன்னகையோடு.


தந்தை தன் மீது கொண்டிருக்கும் பாசத்தில் மனம் நெகிழ்ந்த பெண்ணவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வர, "என் மீது உங்களுக்கு கோபம் இருக்கின்றது, அதனால்தான் இத்தகைய முடிவை எடுத்து என்னை சங்கடப்படுத்துகிறீர்கள்" என்று தழுதழுத்த குரலில் சொல்ல, வாஞ்சையோடு மகளின் தலையை வருடினார் அவர்.


"உன் மீது கோபம் என்றால், உன் காதல் விவகாரம் தெரிந்ததுமே உன்னை அரண்மனையை விட்டு வெளியேற்றி இருப்பேன். ஆனால், எனக்கே இருக்கும் ஒரே மகள் நீ, உன் தாயிற்கு கொடுத்த வாக்குபடி உன்னை நல்லபடியாக கரை சேர்க்க வேண்டியது என் பொறுப்பு. காதலும் திருமணமும் உன் விருப்பமாக இருக்கலாம் ஆனால், எவரும் உன் முதுகுக்கு பின்னே தரம்குறைவாக பேசிவிடக் கூடாது இந்திரா. என் முடிவைப் பற்றி அவனிடம் பேசு, நல்ல பதிலோடு என்னை வந்து பார் புரிகிறதா?" 


என்று வேந்தன் சொல்லிவிட்டு மகளின் நெற்றியில் பாசத்தோடு முத்தமிட்டவர் அந்த அறையை விட்டு வெளியேற எத்தனித்து பின் என்ன நினைத்தாரோ!


சட்டென்று நின்றவர் மகளைத் திரும்பிப் பார்த்து, "இந்திரா, இன்னொரு விடயம். இப்போதெல்லாம் யாழ்மொழியின் நடவடிக்கையே சரியில்லை. அவள் ஆங்கிலேயர்களோடு அடிக்கடி பேசுவதை சிலர் பார்த்திருக்கின்றனர். ஒருவேளை என் காதிற்கு அவளைப் பற்றி தவறாக ஏதேனும் செய்தி மட்டும் கிடைத்தால் அவளை  கொல்லவும் தயங்க மாட்டேன்" என்று காட்டமாக சொல்ல, அதிர்ந்துப் பார்த்தாள் அவள்.


வேந்தனோ அந்த இடத்தை விட்டே சென்றிருக்க, நெற்றியை நீவி விட்டுக்கொண்டவளுக்கு இப்போது முழுக்க முழுக்க யாழ்மொழியைப் பற்றிய சிந்தனைதான் உள்ளுக்குள் சூழ்ந்துக்கொண்டது.


இப்படியே கிட்டத்தட்ட ஒரு வாரம் கழிந்த நிலையில், யாழ்மொழியை அழைத்துக்கொண்டு இந்திரா வீராவை சந்திக்க செல்ல, சோர்ந்த முகத்தோடு எந்தவித பிடிமானமும் இல்லாதது போல் அவளோடு சென்றாள் மற்றவள்.


"அய்யோ யாழ், உன் முகத்தை காண சகிக்கவே இல்லை, சோகமாக இருக்கிறாய் சரிதான், அதற்காக இப்படிதான் முகத்தை வைத்துக்கொள்வாயா?" என்று இந்திரா எரிச்சலாக சொல்ல, 


"இளவரசி தங்களுக்கு தெரியாததா? இங்கு ஒவ்வொரு இடத்தைக் காணும் போதும் அவருடைய நினைவுதான் என்னை பாடாய்படுத்தி எடுக்கிறது. அப்படி இருக்கையில், இதில் எங்கு நான் சிரிக்க? முதலில் தேசம் திரும்பியதுமே அவரிடம் திருமணத்தைப் பற்றி பேச வேண்டும், இதற்குமேல் தாமதிக்க கூடாது. ஆனால் அரசர் எப்படி ஏற்றுக்கொள்வார் என்றுதான் தெரியவில்லை" என்ற யாழ்மொழிக்கு உள்ளுக்குள் குழப்பமும் பயமும் சூழ்ந்துக்கொண்டது.


தோழியை பாவமாகப் பார்த்தவள், தந்தை தன்னிடம் பேசியதை மறைத்து "ஒருவேளை அரசரோ மக்களோ உன் காதலை ஏற்க மறுத்தால், உன்னவரோடு இந்த தேசத்தை விட்டே சென்றுவிடு, சந்தோஷமாக அவரோடு வாழ், யாருக்காகவும் காதலை மட்டும் விட்டுக்கொடுக்காதே! இந்த வார்த்தைகளுக்கு மறுப்பேச்சு வேண்டாம் யாழ், சொல்வது புரிகிறதா?" என்று அழுத்தமாக சொல்ல, "என்ன! நான் பிறந்த தேசத்தை விட்டு செல்வதா, அது எப்படி முடியும் இளவரசி? அதுவும் தங்களை விட்டு என்னால் எப்படி..." என்றவளின் குரல் கமறியது.


இந்திராவின் விழிகள் கூட சற்று கலங்க, "என்னாலும் உன்னை காணாமல் இருக்க முடியாது தான் யாழ், ஆனால் உன் காதல் விவகாரம் தெரிந்தாலே இங்கு எந்தளவு பிரளயம் வெடிக்குமென்று சொல்ல முடியாது. ஒருவேளை இவர்களுக்காக நீ காதலை விட்டுக் கொடுத்தாலும், பழையதை மறக்காமல் உன் வார்த்தைகளாலேயே கொன்று விடுவார்கள். நான் சொல்வதை கேட்பாய் அல்லவா! அவர் உன்னை அழைத்தால் கேள்விகளின்றி அவரோடே சென்றுவிடு அவ்வளவுதான்" என்றாள் முடிவாக.


யாழ்மொழிக்குதான் இது என்ன சோதனை என்று தோன்றியது.


எந்த பதிலும் சொல்லாமல் அவள் அமைதியாக இருக்க, "யாழ், இங்கேயே காத்திரு. நான் வீராவோடு பேசிவிட்டு வருகிறேன்" என்றுவிட்டு இந்திரா அவனின் வீடு இருக்கும் குடிசையை நோக்கிச் சென்றாள்.


அப்போதுதான் சந்தையிலிருந்து வந்திருப்பான் போலும்!


"அம்மா, எவ்வளவு நேரம், எனக்கு பசிக்குது. சீக்கிரம்" என்று வீரா தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கூப்பாடு போட்டுக்கொண்டிருக்க, "பொறுமையே இல்ல இப்போலாம் உனக்கு" என்று எரிச்சல் பட்டவாறு திரும்பிய வைதேகிக்கு வாசலில் நின்றிருந்தவளைப் பார்த்ததும் தூக்கி வாரிப்போட்டது.


"அம்மா..." என்று அவர் பயத்தில் வீராவையும் அவளையும் மாறி மாறிப் பார்க்க, உடனே திரும்பிப் பார்த்த வீராவின் இதழ்கள் புன்னகைத்தன.


"அட இளவரசி, நம்ம வீட்ட தேடி வந்திருக்காங்க, அம்மா, அவளுக்கும் சேர்த்தே கஞ்ச ஊத்துங்க" என்ற வீராவின் வார்த்தைகளைக் கேட்டவாறு இந்திரா அவன் பக்கத்தில் சாதாரணமாக வந்தமர, வைதேகிக்கு பதற்றத்தில் வியர்க்க ஆரம்பித்துவிட்டது.


"என்ன பேசுற வீரா, மொதல்ல எழுந்து அவங்களுக்கு பாய விரிச்சு கொடு, இளவரசி தரையில் உட்கார்ந்து இருக்குறத யாராவது பார்த்தாங்கன்னா நம்மள கொன்னுடுவாங்க" என்று பெரியவர் பயந்தபடி சொல்ல, "அதெல்லாம் எதுவும் தேவையில்லை அம்மா, ஒரு முக்கியமான விடயத்தைப் பற்றி சொல்லிவிட்டு செல்லதான் நான் வந்ததே" என்று அவள் சொல்ல, மற்ற இருவரும் கேள்வியாக நோக்கினர்.


"தந்தைக்கு நம் திருமணத்தில் எந்த பிரச்சனையும் இல்லை வீரா, ஆனால் அவருடைய விருப்பம் ஒன்றே நீ ஆட்சியை ஏற்க வேண்டும். நான் சொல்வது எதையும் கேட்பதாக இல்லை அவர். விரைவாக உன் பதிலை சொல்" என்று அவள் அவனின் பதிலை ஆர்வமாகக் கேட்க, 


வீரா சலிப்பாக விழிகளை உருட்டினான் என்றால், வைதேகிக்கு தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா என்ற சந்தேகமே எழுந்துவிட்டது.


"இந்திரா, இது கொஞ்சமும் நியாயமில்ல, நான் எப்படியோ அப்படியே என்னை ஏத்துக்குதுதானே முறை, ஒரு சாதாரண பழ விக்கிறவன போய் நாட்ட ஆழ சொல்றது முட்டாள்தனம். எனக்கு இதுல கொஞ்சமும் உடன்பாடு இல்ல" என்று அவன் முடிவாக சொல்ல, "இளவரசி, நான் இப்படி சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. எனக்குன்னு இருக்குறது இவன் மட்டும்தான். ஒருவேள உங்க மேல ஆசைப்பட்டுட்டான்னு அரசர் வேற ஏதாவது திட்டத்தோட..." என்று அதற்குமேல் பேசாமல் சங்கடத்தோடு தலை குனிந்துக்கொண்டார் வைதேகி.


இந்திராவுக்கு அவர்கள் சொல்ல வருவது நன்றாகவே புரிந்தது.


"இல்லை அம்மா, தாங்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. என் தந்தை கொடுத்த வாக்கை என்றும் மீற மாட்டார். அவரைப் பொறுத்தவரை என்னை ஒரு இளவரசனுக்கு மணம் முடித்து கொடுக்க வேண்டும் அவ்வளவே! சாதாரண பழ வியாபாரியாக நீர் என்னை மணப்பதை விட இந்த நாட்டு அரசனாக நீர் என்னை மணக்க வேண்டுமென்று எண்ணுகிறார். அதில் என்ன தவறு இருக்கிறது?


இத்தனை தூரம் தந்தை எனக்காக பேசுகிறார் என்றால் நாமும் அவர் ஆசையை மதிக்க வேண்டுமல்லவா வீரா? தயவு செய்து புரிந்துக்கொள்!" என்று அவள் பேசிக்கொண்டே போக, தன் முன்னே இருந்த உணவுத் தட்டை தூக்கியெறிந்தான் அவன்.


"போதும், இதோட நிறுத்து! அதான் எனக்கு இந்த பதவில எல்லாம் ஆசை இல்லன்னு சொல்றேன்ல, ஆட்சிய கொடுத்து என்னை அடிமை மாதிரி வச்சுக்கலாம்னு பார்க்குறாரா? இங்க பாரு, நான் இந்த சந்தையில வேலைப் பார்க்குற ஒருத்தன்னு தெரிஞ்சே தானே உன் மனச பறிகொடுத்த, இதே வியாபாரியாதான் நான் உன்னை கட்டிப்பேன். உன்னால முடியாதுன்னா அரசரோட ஆசைப்படி ஒரு இளவரசனையே நீ கட்டிக்கோ! எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல" 


என்று வாய்க்கு வந்ததை கோபத்தில் அவன் பேசிவிட, தன்னவனை அதிர்ந்துப் பார்த்தவளுக்கு அவனின் வார்த்தைகளில் விழிகள் கூட கலங்கிவிட்டன.


"என்ன பேசுற வீரா?" என்று வைதேகி மகனை அதட்ட, தன்னவனின் நாடியைப் பற்றி தன் முகம் நோக்கித் திருப்பியவள், "நிஜமாகவே உனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையா வீரா" என்று கேட்டாள் தழுதழுத்த குரலில்.


ஆனால் அப்போது அவனுக்கு இருந்த கோபத்திற்கு அவளுடைய கலக்கமான முகமும் குரலும் அவனின் மூளைக்குள் பதியவே இல்லை. 


"ஆமா, எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, போதுமா?" என்று முகத்திற்கு அடித்தாற் போல் சொன்னவன் அவளின் கரத்தை உதறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட, "அவன தப்பா எடுத்துக்காதம்மா, அவன் ஏதோ கோபத்துல பேசிட்டான்" என்ற வைதேகிக்கும் மகனின் செயலில் ஒரு மாதிரியாகிப் போனது.


"பரவாயில்லை அம்மா, நான் வருகிறேன்" என்று குரல் கமற சொன்னவள் முட்டிக்கொண்டு வந்த அழுகையை அடக்கிக்கொண்டு அங்கிருந்து வெளியேற, இதற்கிடையில் இந்திராவுக்காக காத்துக்கொண்டு நின்றிருந்த யாழ்மொழிக்கு லியோவின் நினைவுதான்.


அவனை முதன் முதலாக சந்தித்தது இந்த சந்தையில் அல்லவா!


அந்த நினைவுளை மீட்டிப் பார்த்தவாறு அவள் நின்றிருக்க, திடீரென பின்னால் கேட்ட குரலில் சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.


அவளெதிரே வில்லியம் விஷமப் புன்னகையோடு நின்றுக்கொண்டிருக்க, அவனைப் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் பக்கென்று இருந்தது.


மூளை எச்சரிக்கை செய்ய, வேகமாக அங்கிருந்து நகரப் போனவளின் முன்னே கை நீட்டி தடுத்தவன், "வெயிட்! இப்போ எதுக்கு என்னை பார்த்து இவ்வளவு பயப்படுற, நான் ஒன்னும் அவ்வளவு மோசமானவன் கிடையாது, முன்னாடி நடந்ததுக்கு என்னை மன்னிச்சிரு" என்று முன்னரை விட தமிழிலில் சற்று தெளிவாகவே பேச, யாழ்மொழிக்கு அத்தனை ஆச்சரியமாக இருந்தது.


அவனை மேலும் கீழும் அவள் ஆச்சரியமாகப் பார்க்க, "ஐ அன்டர்ஸ்டேன்ட், இங்க இருக்கணும்னா உங்க மொழிய தெரிஞ்சுக்குறது ரொம்ப அவசியம். அப்போதானே ஐ கென் டோக் டூ யூ. என்ட், நீயும் ஆஃபீசர் லியோவும் லவ்.. ஐ மீன் காதலிக்கிறீங்கன்னு எனக்கு தெரியும்" என்றான் வில்லியம்.


அவன் பேசுவது பாதி புரிந்தும் புரியாமலும் இருந்தாலும் ஒரு சில வார்த்தைகளை மட்டும் வைத்து அவன் சொல்ல வருவதை அறிந்துக்கொண்டாள் யாழ்மொழி.


"நானும் அதிகாரியும் காதலிப்பது தங்களுக்கு தெரியுமா?" என்று ஆச்சரியத்தோடுக் கேட்டவள், "அவர் எப்போது தேசம் திரும்புகிறார், நலமாக இருக்கிறார் அல்லவா" என்று விழிகளில் ஆர்வத்தோடுக் கேட்க, அவளுடைய வெகுளியான குணத்தை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டான் அவன்.


"அவர் உன்ன பத்தி என்கிட்ட சொன்னாரு. ஐ அம் சோ ஹேப்பி, நீ அவருக்கு பொருத்தமா இருப்ப. உனக்கு ஏதாச்சும் சொல்லணும்னு சொல்லு, நான் லெட்டர்.. அது கடிதம்ல எழுதி அனுப்புறேன். பதில் கடிதம் வந்ததும் உனக்கு கொடுக்குறேன்" என்று அவன் பொய்யாக அவளுக்கு ஆசையைக் காட்ட, யாழ்மொழியோ சந்தோஷத்தில் துள்ளி குதிக்காத குறைதான்.


"உண்மையிலேயே இதை நான் எதிர்பார்க்கவே இல்லை, அவரோடு பேசுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தாலே போதும். அதுவுமில்லாமல் முன்னர் நடந்ததை வைத்து நான் தங்களை தவறாக நினைத்திருந்தேன். இப்போது... அத்தனையும் மாறிவிட்டது. இந்த உதவியை மறக்கவே மாட்டேன்" என்று யாழ்மொழி உணர்ச்சி பூர்வமாக பேசிக்கொண்டே போக, உள்ளுக்குள் வில்லத்தனமாக புன்னகைத்தான் வில்லியம்.


'இந்த பொண்ண ஏமாத்துறது இவ்வளவு ஈஸியா, ச்சே! இது தெரிஞ்சிருந்தா முன்னாடியே இவள ஏமாத்தி நம்ம ஆசைய தீர்த்து இருக்கலாம்' என தனக்குள் நினைத்துக்கொண்டவன், ஒரு தலையசைப்போடு அங்கிருந்து சென்றுவிட, சரியாக வீராவின் குடிசையிலிருந்து தோழியைத் தேடி வந்தாள் இந்திரா.


"இளவரசி..." என்று ஆர்வமாக அவள் அழைக்க, இந்திராவின் முகமோ இருண்டுப் போயிருந்தது.


"என்ன நடந்தது, ஏதாவது..." என்று யாழ்மொழி யோசனையோடு இழுக்க, "ஒன்றுமில்லை யாழ், அரண்மனைக்கு செல்லலாம். எனக்கு களைப்பாக இருக்கிறது" என்று படபடவென சொன்னவள் தோழியின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் குதிரையை நோக்கிச் சென்றாள்.


யாழ்மொழிக்கு எதுவுமே புரியவில்லை. போகும் அவளை புருவ முடிச்சுகளோடு பார்த்தவள் அமைதியாக அவளோடு செல்ல, இங்கு தன்னைத்தானே நொந்துக்கொண்டான் வீரா.


'ச்சே! அவ உனக்காக அத்தனையையும் தூக்கி போட தயாரா இருக்கா. ஆனா நீ அவ மனச நோகடிச்சிட்ட வீரா. இது ரொம்ப தப்பு. ரொம்ப ரொம்ப தப்பு. என் மேல கோபத்துல இருப்பா, இனி என்னை தேடி கண்டிப்பா வர மாட்டா. ஆனா, நான் எப்படியாச்சும் இந்திராவ சந்திக்கணுமே. நம்ம ஆளுங்கள்ல ஒருத்தன் அரண்மனையில காவலாளியா இருக்கான்ல' 


என்று நாடியை நீவி விட்டவாறு யோசித்த வீராவோ தனக்குள் ஒரு திட்டத்தைப் போட, அவனின் இதழ்கள் கேலியாக வளைந்தன.


***********

தென்றல் தீண்டும் தாரகை.. எங்களோட நெக்ஸ்ட் டிரெக்ட் புக் இப்போ கிண்டல்ல Available ஆ இருக்கு.. 🙌 இந்த book பத்தி சொல்லனும்னா,

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கதாநாயகன் ஆரன் பெரும் இன்னல்களை சந்தித்துக்கொண்டிருக்க, அவனை சந்திக்கக் கூடாத இடத்தில் காண்கிறாள் கதாநாயகி ஐரா ஸ்மிரித்தி.

காலம் அவனோடு அவளை நெருக்கமாக்க, இவனோ வேறு ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறான். ஒரு முக்கோண காதல் ஆரம்பமாக, அடுத்து அடுத்து என்று இதயங்கள் நொறுங்க, பிரச்சனைக்கு மேல் பிரச்சனைகளோடு நகரும் இக்கதைக்களம்.

இத்தனையும் தாண்டி துரோகமும் தலை தூக்க, அதையும் ஏற்று இணையுமா இவர்களின் காதல்?

Happy reading 😍 

IN link 👇

https://www.amazon.in/dp/B0FVF3NGM2


USA link 👇

https://www.amazon.com/dp/B0FVF3NGM2

Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚