விழிகள் 20




லியோவோ படபடவென பேசிக்கொண்டே  சென்றவன் அடுத்து யாழ்மொழி பார்த்த பார்வையில் மனம் பிசைய அதற்குமேல் அவளின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் முகத்தை திருப்பிக்கொண்டான்.


ஜேம்ஸ்ஸிற்கு அவர்கள் பேசிக்கொள்வது புரியாவிட்டாலும் இருவருக்குமிடையில் ஏதோ பிரச்சனை என்று மட்டும் அவனால் நன்றாகவே உணர முடிந்தது.


யாழ்மொழியொ விழிநீரை துடைத்தெறிந்து விட்டு அவனை அழுத்தமாகப் பார்த்தவள், "காதல் இல்லாமல்தான் என்னுடன் பழகினீர்களா, காதல் இல்லாமல்தான் எனக்கு அன்று முத்தம் கொடுத்தீர்களா? ஏன் அந்த ஆங்கிலேய அரண்மனையிலிருந்து என்னை காப்பாற்றியது கூட காதலே இல்லாமல்தானா?" என்று தன் கேள்விக் கனைகளைத் தொடுக்க, அவனோ பதிலுக்கு அலட்சியமாக தோளைக் குலுக்கினான்.


"உன் கூட பழகின ஒரே காரணத்துக்காகதான் நான் உன்னை காப்பாத்தினேன், என்ட் முத்தம் கொடுத்துக்குறது நான் வளர்ந்த சூழல்ல சகஜமான ஒன்னு. அதை நீ காதல்னு எடுத்துப்பேன்னு எனக்கு தெரியல. என்னோட பதவி அதிகாரம் என்னன்னு உனக்கு நல்லாவே தெரியும், அப்படிப்பட்ட பதவில இருக்குற நான் உன்னை மாதிரி ஒரு பணிப்பெண்ண காதலிப்பேன்னு நீ எப்படி நினைக்கலாம்" 


என்று அவன் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளின் மனதை முள்ளாய் கிழிக்க, தொண்டை வரை வந்த கதறலை கட்டுப்படுத்திக்கொண்டாள் யாழ்மொழி.


விழிகளை அழுந்த மூடித் திறந்தவள், "என்னுடைய முதல் காதலே தாங்கள்தான் அதிகாரி, ஆனால்.. வலியும் தாங்களே" என்றுவிட்டு கண்ணீரோடு அந்த இடத்தை விட்டு நகர, லியோவோ ஒருகணம் அவளின் செயலில் ஸ்தம்பித்துப் போய்விட்டான்.


கத்துவாள், சண்டை போடுவாள் என அவன் ஒன்று நினைத்திருக்க, அவளோ அமைதியாக நகர்ந்ததும் அவனுக்குள் குற்றவுணர்ச்சி பிடுங்கித் தின்றது.


அவளின் வார்த்தைகளும் அந்த அழுத்தமான பார்வையும் அவனை கொல்லாமல் கொன்றுவிட, தலையை அழுந்தக் கோதி உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியவன், "சீக்கிரம் வண்டிய எடு!" என்று இறுகிய குரலில் சொன்னவாறு காரில் ஏறிக்கொண்டான்.


யாழ்மொழியோ நடை பிணம் போல் அரண்மனைக்கு வந்து சேர்ந்தவள் யாருடனும் எதுவும் பேசவில்லை. 


அறைக்குள் சென்று கட்டிலில் ஒருக்களித்து படுத்திருந்தவளின் விழிகளிலிருந்து விழிநீர் ஓட, அப்போதும் அவளால் அவனை வெறுக்க முடியவில்லை. 


'அப்போது எல்லாம் அவ்வளவுதானா! அவருடைய விழிகளில் நான் கண்ட உணர்வு அத்தனையும் பொய்யா? காதல் இத்தனை வலியை கொடுக்குமென்று தெரிந்திருந்தால் அந்த திசைக்கும் சென்றிருக்க மாட்டேன். இப்படி என் மனதை காயப்படுத்தி விட்டீர்களே!' 


என்று மானசீகமாக தன்னவனோடு பேசியவளுக்கு உள்ளுக்குள் சுள்ளென்று தைக்கும் காதல் வலியை அனுபவிப்பதற்கு இறப்பது மேலென தோன்றியது.


அதேநேரம் ரொனேல்டின் அரண்மனையில் அதிகாரிகள் பலர் கூடியிருந்து கலந்துரையாட, லியோவோ எந்த பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபடாமல் ஏதோ ஒரு இடத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.


"இந்த நாட்டுல இருந்து பல பொருட்கள நம்ம நாட்டுக்கு ஏற்றுமதி பண்றோம், இந்த பொருட்களுக்கான கேள்வி நம்ம சந்தையில ரொம்ப அதிகமா இருக்கு. இந்த நேரம் இதோட விலைய அதிகரிச்சா நம்மளோட இலாபம் இன்னும் அதிகரிக்கும்" என்று பேசிக்கொண்டே சென்ற ரொனெல்டின் பார்வை லியோவின் மீது படிய, அவனை புருவ முடிச்சுகளோடு பார்த்தார்.


"ஆஃபீசர் லியோ.." என்று அவர் இரண்டு தடவைக்கு மேல் அழைத்ததும் தான் நடப்புக்கு வந்தவன், அவரை புரியாமல் பார்க்க, "வாட் ஆர் யூ திங்கிங் அபௌட்? நான் பேசினது உனக்கு காதுல விழுந்துச்சா? உன்னோட கவனமே இங்க இல்லயே லியோ, உன்னோட கவனம் எப்போவுமே சிதறினது கிடையாது. வாட் இஸ் ரோங் வித் யூ?"  என்று கூரிய பார்வையோடுக் கேட்டார் அவர்.


"ஆங்.. தட்.. தட்ஸ் நத்திங் சார்" என்று சிறு தடுமாற்றத்தோடு அவன் சொல்ல, அலட்சியமாக தோளைக் குலுக்கியவாறு மீண்டும் பேச்சை ஆரம்பித்தார் ரொனெல்ட்.


"தெயார் ஆர் லொட் ஆஃப் திங்க்ஸ் வீ ஹேவ் டூ சார்ட் அவுட் இன் அவர் கன்ட்ரி. சோ... எங்கள்ல யாராச்சும் ஒருத்தர் நம்ம நாட்டுக்கு திரும்ப போய் அதை சரி பண்ணிட்டு வரணும். அதுக்காக யார் தயாரா இருக்கீங்கன்னு நீங்களே டிஸ்கஸ் பண்ணி எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க" என்று ரொனேல்ட் சொன்னதும், லியோவோ தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.


மற்றவர்களோ தங்களுக்குள் கிசுகிசுக்க, "நான் போறேன்" என்று ஒரு கையை மட்டும் உயர்த்தி அவன் சொன்னதும், மொத்தப் பேரின் பார்வையும் இப்போது அவனின் புறம் திரும்பியது.


"ஆஃபீசர் லியோ, நிஜமாதான் சொல்றியா?" என்று அவர் சந்தேகமாகக் கேட்க, "ஆமா சார், நான் போறேன், ஐ டிசைட் இட்" என்றான் லியோ தீர்க்கமான பார்வையோடு.


"அப்போ சரி, நாளைக்கே அதுக்கான அர்ரேன்ஜ்மென்ட்ஸ்ஸ நான் ஆரம்பிக்குறேன். பீ ரெடி மை பாய்" என்று உற்சாகமாக சொன்ன ரொனேல்ட் கூட்டம் முடிந்ததற்கு சார்பாக மதுக்குவளையை உயர்த்திக் காட்ட, மற்றவர்களும் கரகோஷத்தோடு தத்தமது மதுக்குவளையை மேலே உயர்த்தினர்.


ஆனால், மருந்துக்கும் முகத்தில் புன்னகையின்றி ஏனென்று புரியாத வலியோடு லியோ அமர்ந்திருக்க,  அந்த கூட்டத்திற்குள் தனக்குள் ஒரு திட்டத்தை தீட்டியவாறு விஷமப் புன்னகையோடு மதுக் குவளையை வாயில் சரித்தான் வில்லியம்.


அடுத்து வந்த நாட்கள் யாழ்மொழி அரண்மனையை விட்டு வெளியில் வரவே இல்லை. உண்ணாமல் சரியாக உறங்காமல் வாடிய முகமாக இருந்தவளை சுற்றியிருந்தவர்களும் கவனிக்க, அது இந்திராவின் விழிகளில் சிக்காமலா போகும்!


அன்று இந்திராவுக்கு தேவையான ஆடைகளையும் அலங்காரங்களையும் யாழ்மொழி தயார் செய்துக்கொண்டிருக்க, அவள் எடுத்து வைத்த ஆடையையும் அவளையும் பார்த்த இளவரசியோ வாய்விட்டு சிரித்துவிட்டாள்.


"யாழ், என்ன இது? காதலித்த பிறகு உன் ரசனை இப்படி போகுமென்று நான் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை. இப்படி மட்டும் நான் வெளியில் சென்றால் ஊரே என்னை பார்த்துதான் சிரிக்கும்" என்று சிரித்துக்கொண்டே அவள் சொல்ல, அப்போதுதான் தான் எடுத்து வைத்ததை கவனித்தவள் தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக அசடுவழிந்தாள்.


அவள் தெரிவு செய்திருந்த சேலைக்கும் சட்டைக்கும் அந்த அலங்காரங்களுக்கும் கொஞ்சமும் பொருத்தமில்லை. 


"உங்கள் நேரத்தை வீணடித்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள் இளவரசி" என்று தயக்கமாக யாழ்மொழி சொல்ல, "காதலில் பிரச்சனை  என்றால்தான் இப்படி நடந்துக்கொள்ள தோன்றும், என்ன நடந்தது யாழ்? ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்?" என்று தோழியை கூர்மையாகப் பார்த்தபடி கேட்டாள் இந்திரா.


"ஒன்றுமில்லை இளவரசி, காதல் என்றாலே வலிதானே! தாங்கள் அறியாததா?" என்று ஒரு மாதிரி குரலில் விரத்திப் புன்னகையோடுக் கேட்டவள், மீண்டும் வேலையைத் தொட, ஏதோ ஒன்று இந்திராவுக்கு சரியாகத் தோன்றவில்லை.


"நீ கடந்த சில நாட்களாக அரண்மனையில் இருந்து வெளியிலேயே செல்லவில்லை, அதை நானும் கவனிக்க தான் செய்கிறேன். காதலில் பிரச்சனைகள் வராமல் இருக்காது யாழ்மொழி, அவர்களோடு சற்று பேசினாலே அத்தனையும் தீர்ந்துவிடும். வீணாக யோசித்துக்கொண்டு இருக்காதே.. இப்போதே நாம் வெளியில் செல்லலாம், நீ உன்னவரை சந்தித்து பேசு" 


என்று இந்திரா சொல்ல, தனது பிரச்சனையை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திணற ஆரம்பித்தாள் யாழ்மொழி.


"இல்லை. அது இளவரசி... அவருக்கு..." என்று என்ன சொல்லி சமாளிப்பதென்று தெரியாமல் கைகளைப் பிசைந்தவாறு அவள் தடுமாற, எதையும் கேட்பதாக இல்லை இந்திரா.


"என் காதல் இத்தனை தூரம் கைக்கூட காரணமே நீ தான் யாழ், நீ ஒரு பிரச்சனையில் இருக்க உன்னை விட்டுவிடுவேனா நான். இதுதான் நீ எனக்கு செய்த உதவிக்கு நான் செய்யும் கைம்மாறு. சீக்கிரம் தயாராகு!" என்றுவிட்டு வேகவேகமாக தயாராகியவள் யாழ்மொழியை இழுத்துக்கொண்டே சென்றிருக்க, வேறு வழியில்லாமல் அவள் இழுத்த இழுப்பிற்கு சென்றாள் மற்றவள்.


ஏனோ லியோ பேசியதை சொல்லி அவனைப் பற்றி எண்ணத்தை மாற்ற காதல் மனம் விடவில்லை. ஏதோ ஒரு சிறு நம்பிக்கை அவள் மனதிலிருக்க, அமைதியாக தோழியோடு சென்றாள் அவள்.


குதிரையும் காற்றைக் கிழித்துக்கொண்டு வேகமாக செல்ல, சுற்றி முற்றி பார்த்துக்கொண்டே வந்தவளோ அவன்  இங்கு இருக்கவே கூடாது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாலும் இன்னொரு புறம் அவனைப் பார்க்க வேண்டுமென்ற ஏக்கமும் சூழ்ந்துக்கொண்டது.


இந்திராவின் குதிரை சந்தைக்கு பக்கத்தில் நிற்க, "இங்குதானே அந்த ஆங்கிலேய அதிகாரிகள் வரி வசூலிக்க வருவார்கள், கண்டிப்பாக உன்னவரும் இங்குதான் இருக்க வேண்டும்" என்று சொல்லிக்கொண்டு அவள் குதிரையிலிருந்து இறங்க, யாழ்மொழியும் இறங்கி சுற்றி முற்றி தேடிப் பார்த்தாள்.


சரியாக பாலாவோடு பேசியவாறு வெளியில் வந்த வீரா தன்னவளைக் கண்டதுமே புன்னகையோடு அவளை நோக்கி வர, "வீரா..." என்று உற்சாகமாக அழைத்தாள் இந்திரா.


"தேசத்து இளவரசி இந்த சந்தைக்கு முன்னால நின்னு என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க" என்று அவன் கேலியாகக் கேட்க, "யாழ்மொழிக்கும் அவளுடைய காதலனுக்கும் இடையில் சிறு பிரச்சனை வீரா, நம் காதலுக்காக போராடிய யாழ்மொழியை நாம்தானே சேர்த்து வைக்க வேண்டும்" என்றாள் விழிகள் மின்ன.


வீராவோ யாழ்மொழியை திரும்பி ஒரு பார்வைப் பார்த்தவன், இந்திராவின் கரத்தைப் பற்றி அவளிடமிருந்து சற்று தள்ளி அழைத்து வைத்தான்.


"இதெல்லா தெரிஞ்சுதான் பண்றியா இந்திரா, அந்த வெள்ளைக்காரன் நம்மள அடிமை மாதிரி நடத்துறான். அவன போய் இவ காதலிக்கிறா. இதோட விளைவு தெரிஞ்சுமா இதுக்கு நீ... ச்சே! அவன் இவள ஏமாத்துறதா கூட இருக்கலாமே" என்றவனுடைய வார்த்தைகள் சிறு பயத்தோடு ஒலிக்க, "வீரா, யாழ்மொழி முட்டாள் அல்ல, அவள் எது செய்தாலும் அது தப்பாக இருக்காது. அவளை மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது" என்று அழுத்தமாக சொன்னாள் அவள்.


"எனக்கு என்னவோ இது சரியா தோனல, அவ சின்ன பொண்ணு இந்திரா" என்று அவன் சொல்ல, "அவளுடைய வாழ்க்கையை முடிவு செய்ய அவளுக்கு முழு உரிமை இருக்கிறது, தந்தை கூறியதை பற்றி தெரிவித்து நான் அனுப்பிய கடிதம் உனக்கு கிடைத்ததா வீரா, என்ன முடிவு செய்தாய்?" என்று கேட்டாள் இந்திரா யோசனையோடு.


"அது... நா..." என்று புருவ முடிச்சுகளோடு யோசித்தவனின் பார்வை யாழ் நின்றிருந்த இடத்தை நோக்க, அங்கு அவள் இருந்தால்தானே!


"யாழ் எங்க?" என்று அவன் கேட்டதும்தான் பட்டென்று திரும்பியவள் அங்கு தோழி இல்லாததைப் பார்த்து அதிர்ந்து விழிக்க, அதேநேரம் இங்கு ஒரு தூணிற்கு பின்னே மறைந்திருந்தாள் யாழ்மொழி.


அவளுடைய விழிகளிலிருந்து கண்ணீர் அருவியாய் ஓட, சந்தை வியாபாரிகளோடு காரில் சாய்ந்து பேசிக்கொண்டிருந்த லியோவையே அவள் இமை மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.


ஏனோ அவள் மனம் ஏங்க காதல் மனம் அவன் பேசிய வார்த்தைகளால் கதறித் துடித்தது. 


"எங்க நிலைமையையும் புரிஞ்சுக்கோங்க ஐயா, இதுக்கு மேல வரி விதிச்சா எங்களாலயும் என்னதான் பண்ண முடியும்?" என்று அந்த ஏழை வியாபாரி கிட்டத்தட்ட அழும் நிலையில் பேச, அமைதியாக நின்றிருந்தவனுக்கு அவர் பேசியது காதில் விழவே இல்லை. 


ஏதோ ஒரு திசையை நோக்கி மனம் உந்த, உடனே தன்னவள் நின்றிருந்த இடத்தை நோக்கி அவன் திரும்பவும், யாழ்மொழியோ தூணிற்கு பின்னே உடனே மறைந்துக்கொண்டாள்.


தன் மனதின் போராட்டத்தை எண்ணி அவனுக்கே எரிச்சலாக இருந்தது.


'ச்சே! அவள மறக்க நினைச்சாலும் முடிய மாட்டேங்குதே!' என்று நெற்றியை நீவி விட்டுக்கொண்டவனுக்கு ஏனோ தன்னவள் தன்னை சுற்றி இருப்பது போலவே உள்ளுக்குள் தோன்ற, மீண்டும் அதே திசையைப் பார்த்தவனின் புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டன.


அதேசமயம் தூணிற்கு பின்னே மறைந்து நின்றிருந்த யாழ்மொழியின் நிலையோ பரிதாபம்!


முகத்தை மூடிக்கொண்டு அவள் கதறியழ, 'மானங்கெட்ட மனசு இத்தனை தூரம் அவன் பேசியதற்கு பிறகும் அவனை இப்படி காண வேண்டுமா?' என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டது அவளுடைய மனசாட்சி.


"வேண்டாம் யாழ், அவர்தான் காதலே இல்லை என்று விட்டாரே! அதற்குமேல் என்ன இருக்கிறது? அவரைக் காணுவது இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும்" என்று கண்ணீரைத் துடைத்தவாறு அவள் திரும்ப, சரியாக அவளவனின் மார்பிலேயே மோதி நின்றாள்.


"கடவுளே..." என்று நெற்றியை தடவியவாறு நிமிர்ந்துப் பார்த்தவளுக்கு எதிரில் நின்றிருந்த லியோவைப் பார்த்ததுமே அதிர்ச்சியையும் தாண்டி அழுகை முட்டிக்கொண்டு வர, விழிகளிலிருந்து கண்ணீர் தானாக ஓட ஆரம்பித்தது.


லியோவுக்கும் அவளைப் பார்த்ததுமே தன் மொத்த ஏக்கத்திற்கு பதில் கிடைத்தது போலிருக்க, இருந்தும் முகபாவனையை உடனே மாற்றியவன், "இங்க ஒளிஞ்சிருந்து என்ன பண்ற?" என்று கேட்டான் இறுகிய குரலில்.


அவளோ பதிலெதுவும் சொல்லாமல் அவனையே பார்த்துக்கொண்டிருக்க, வழக்கம் போல் அவளின் பார்வையில் தடுமாறியவன், "அது... அது வந்து... நான் நாளைக்கு என் நாட்டுக்கு போறேன். திரும்பி வருவேனா என்னன்னு தெரியல. அதான்..." என்று எங்கோ பார்த்துக்கொண்டு சொல்ல, யாழ்மொழியோ இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.


அழுகை தொண்டையை அடைக்க, கீழுதட்டைக் கடித்து அதை அடக்கிக்கொண்டவள், "ம்ம்... ஆனால் என் கேள்விக்கு மட்டும் எனக்கு பதில் தெரிந்தால் போதும் அதிகாரி. தங்களுக்கு என் மேல் துளியும் காதல் இல்லையா?" என்று குரல் தழுதழுக்க கேட்க,  அந்த கேள்விக்கு அவனிடமே பதில் இல்லை.


ஒத்துக்கொள்ள அவனுடைய மனம் தடுத்தது என்றால், அதை மறுப்பதற்கு அவளுடைய பார்வையும் கண்ணீரும் தடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.


அவளின் விழிகளை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் அவன் திணற, அவனின் தடுமாற்றமே அவள் எதிர்பார்த்த பதிலை அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்தது.

 

குறும்பாக இதழ் வளைத்து சிரித்த யாழ்மொழி, "தேசம் திரும்பும் வரை தங்களுக்காக காத்திருப்பேன் அதிகாரி" என்றுவிட்டு  அவனின் பதிலை எதிர்பார்க்காது அங்கிருந்து நகர்ந்திருக்க, போகும் அவளை வெறித்துப் பார்த்திருந்தவனின் இதழ்களோ தன்னை மீறி மெல்ல புன்னகைத்தன.


***************

தென்றல் தீண்டும் தாரகை.. எங்களோட நெக்ஸ்ட் டிரெக்ட் புக் இப்போ கிண்டல்ல Available ஆ இருக்கு.. 🙌 இந்த book பத்தி சொல்லனும்னா,

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கதாநாயகன் ஆரன் பெரும் இன்னல்களை சந்தித்துக்கொண்டிருக்க, அவனை சந்திக்கக் கூடாத இடத்தில் காண்கிறாள் கதாநாயகி ஐரா ஸ்மிரித்தி.

காலம் அவனோடு அவளை நெருக்கமாக்க, இவனோ வேறு ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறான். ஒரு முக்கோண காதல் ஆரம்பமாக, அடுத்து அடுத்து என்று இதயங்கள் நொறுங்க, பிரச்சனைக்கு மேல் பிரச்சனைகளோடு நகரும் இக்கதைக்களம்.

இத்தனையும் தாண்டி துரோகமும் தலை தூக்க, அதையும் ஏற்று இணையுமா இவர்களின் காதல்?

Happy reading 😍 

IN link 👇

https://www.amazon.in/dp/B0FVF3NGM2


USA link 👇

https://www.amazon.com/dp/B0FVF3NGM2

Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚