விழிகள் 17




சில நிமிடங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. 


ஆற்றில் நீராடும் அன்னங்களை ரசித்துப் பார்த்தவாறு இருந்த யாழ்மொழியின் மனதில் ஏனென்று தெரியாத ஒரு ஏக்கம்.


அதைப் பார்த்தவாறு, "இந்த தேச மக்களுக்கு சுதந்திரம் என்பது கனவாகவே போய்விடுமோ தெரியவில்லை" என்று வலி நிறைந்த வார்த்தைளை அவள் கொட்ட, "கனவ நினைக்கலாம், முடிஞ்சா முயற்சி பண்ணுங்க" என்றான் லியோ ஏளனமாக.


அவனைத் திரும்பி விரக்திப் புன்னகையோடு பார்த்தவள், "அதிகாரமும் பலமும் தங்களிடம் இருக்கும் தைரியமோ! எத்தனை காலத்திற்கு என்று பார்க்கலாம், போகும் போது எதைதான் கொண்டு செல்ல போகிறோம்" என்று சிறு சிரிப்போடு சொல்ல, "இருக்குறப்போ ராஜ வாழ்க்கை வாழுறோமே, தட் இஸ் ஐ வோன்ட்" என்று அழுத்தமாக வந்தன அவனின் வார்த்தைகள்.


"பிறரின் வலி தங்களுக்கு இன்பமா! என்ன ஒரு மிருகத்தனம்" என்று அவள் கோபத்தோடு சொல்ல, "ஓ காட்! இப்போ எல்லாம் என்மேல இருக்குற பயமே போச்சு உனக்கு. முன்னாடி எல்லாம் திணறுவ, இப்போ எங்கள எதிர்த்தே கேள்வி கேக்குற. என் முன்னாடி  வார்த்தைகளால புரட்சி பண்ற ஒரு பொண்ண இப்போதான் பார்க்குறேன்" என்றவனோ பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை இட்டவாறு அவள் பக்கத்தில் வந்து நின்றுக்கொண்டான்.


அவனை அண்ணாந்துப் பார்த்தவள், "பக்கத்தில் அமரலாமே" என்று கேட்க, சிறிதுநேரம் யோசித்தவன் சுற்றிமுற்றி பார்த்துவிட்டு, "நான் யாருன்னு உனக்கு தெரியுமா தெரியாதா?" என்று ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினான். 


"இதில் என்ன இருக்கிறது? ஓஹோ.. இப்போது புரிகிறது. என்னை போன்ற பணிப்பெண்ணின் பக்கத்தில் உயரதிகாரி அமருவது தங்களுக்கு சிறு அவமானம்தான்" என்று யாழ்மொழி சொல்ல, "ரொம்பதான் தைரியம்! உன் காதலன் உன்னை என் கூட பார்த்தா தப்பா நினைக்க மாட்டானா?" என்று விழிகளை சுருக்கிக் கேட்டான் லியோ.


அதில் மெல்லிய புன்னகை சிந்தியவள், "தங்களிடம் ஒரு பொய் சொல்லிவிட்டேன் அதிகாரி. நான் இதுவரை எந்த ஆணையும் காதலித்ததில்லை. அன்று தங்களிடமிருந்து தப்பிப்பதற்காக அவ்வாறு கூறிவிட்டேன்" என்று சொல்லி முடிக்க, "வாட்?" என்று அவளை விழி விரித்துப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் தன்னை மீறிய ஒரு இதம் பரவிய உணர்வு.


"நிஜமாதான் சொல்றியா" என்று லியோ மீண்டும் கேட்க, அவளோ அதே சிரிப்போடு தலையாட்டி வைக்க, அவனையும் மீறி அவனின் இறுகிய இதழ்களில் சிறு புன்னகை தோன்றி மறைந்தது.


ஆனால் சட்டென யாழ்மொழியின் முகம் இறுக, கைகளைப் பிசைந்தவாறு அவனெதிரே எழுந்து நின்றாள்.


"நான் காதலிக்கவில்லை, ஆனால் இளவரசி இந்திரசேனா ஒருவனை காதலிக்கிறார்கள். அவனோ அவர்களின் ஆட்சி அந்தஸ்த்திற்கு ஈடே இல்லாத சந்தையில் வேலைப் பார்க்கும் சாதாரண ஒருவன்" என்று திக்கித்திணறி சொல்லி முடிக்க, "ப்ரின்சஸ் ஒரு சாதரண ஒருத்தனா காதலிக்கிறாங்களா! இட்ஸ் இன்ட்ரஸ்ட்டிங்" என்று நாடியை நீவி விட்டவாறு சொன்னான் லியோ.


"அவன்... அவன் வேறு யாருமல்ல. தாங்கள் கைது செய்து வைத்திருக்கும் வீரா" என்று யாழ் சொல்லி முடித்த மறுகணம், அதிர்ந்துப் போய் அவளைப் பார்த்தவனின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது.


அவன் பற்களை நரநரவென்று கடிக்கும் சத்தம் அவளுடைய காதிற்கே கேட்க, யாழ்மொழியின் உடல் பயத்தில் நடுங்க ஆரம்பித்தது.


"நா.. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்..." என்று தடுமாற ஆரம்பித்தவளின் இரு தோள்களைப் பற்றி தன் அருகே இழுத்தவன், அவள் விழிகளை நேருக்கு நேராகப் பார்த்து "இப்போ எல்லாமே புரியுது, கொஞ்சம் நல்லா பேசினதும் உனக்காக எல்லாமே பண்ணுவேன்னு நினைச்சிருக்க, உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்" என்று ஆக்ரோஷமாகக் கத்தினான்.


பெண்ணவளுக்கோ அவனின் கோப விழிகளை இத்தனை அருகே பார்த்து மூச்சு விடவே பயமாக இருந்தது.


"நா.. அது... அப்படி எல்லாம் இல்லை. நீங்கள்..." என்றவளின் வார்த்தைகள் தந்தியடிக்க, சுற்றிமுற்றி பார்த்துவிட்டு அவளை இழுத்துக்கொண்டு சென்று பின்சீட்டின் கார் கதவைத் திறந்து தள்ளிவிட்டவன் தானும் உள்ளே ஏறிக்கொண்டான்.


அவளோ பயந்தபடி கார் கதவை திறக்க முயற்சிக்க, அவளை இருக்கையோடு சாற்றியவன், "என்னை கொல்ல வந்தவன அவ்வளவு சீக்கிரம் விட்டுருவேன்னு நினைச்சியா, அவன கொன்னு இங்க நாய தூக்கி போடுற மாதிரி தூக்கி போட்டாதான் இந்த புவர் இந்தியன் பீபளுக்கு எங்க மேல பயம் இருக்கும்" என்றான் பற்களைக் கடித்தபடி.


யாழ்மொழியின் விழிகளிலிருந்து அவளையும் அறியாமல் விழிநீர் ஓடியது. 


அதை புறங்கையால் துடைத்தவள், "பிறக்கும் போதே தாயை இழந்துவிட்டேன், பத்து வயதில் அமைச்சராக அரசரிடம் வேலைப் பார்த்த என் தந்தையை எதிரி நாட்டு மன்னர் படுகொலை செய்ய அவரையும் அப்போதே இழந்துவிட்டேன். சிறுவயதிலிருந்து அரண்மனையில்தான். பாசத்திற்காக ஏங்கிய எனக்கு எல்லாமுமாக மாறிப் போனது இளவரசி இந்திரசேனா. 


தங்களின் தகுதியையும் மறந்து எனக்கு பாசத்தை கொட்டிய இளவரசியின் கண்ணீரை என்னால் தாங்க முடியவில்லை. இதுவரை அவர்களுக்காக நான் எதையும் செய்ததில்லை. அவர்களின் காதலையாவது மீட்டிக்கொடுக்க வழி இருக்காதா என ஏங்குகிறேன் அதிகாரி" என்று திக்கித்திணறி அழுத வண்ணமாய் பேசி முடிக்க, அவளையே உறைந்துப் போய் பார்த்துக்கொண்டிருந்தான் லியோ.


யாழ்மொழியோ அவனிடம் கையெடுத்துக் கும்பிட்டு, "தயவு செய்து அவன் செய்த தவறை மன்னித்து விடுங்கள், இல்லை அவனை கொலை செய்யதான் போகிறீர்கள் என்றால், இளவரசிக்காக அந்த தண்டனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். வீராவின் தவறுக்காக என்னை கொலை செய்யுங்கள்" என்று கதறியழுத வண்ணமாக கெஞ்ச, இதை ஆடவனோ சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.


'பாசம் காட்டிய இளவரசியின் காதலுக்காக இவள் தன் உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்து விட்டாளா!' என்ற கேள்வி அவனை அதிர வைக்க, ஸ்தம்பித்துப் போய் வார்த்தைகள் இன்றி அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான் லியோ.


அதுவும் சில கணங்கள்தான். 


உடனே முகபாவனையை மாற்றியவன் இறுகிய முகமாக, "கெட் டவுன், கார்லயிருந்து இறங்கு" என்று அடித்தொண்டையிலிருந்து கத்த, அவளுக்கு ஒருகணம் எதுவுமே புரியவில்லை.


அவனை அதிர்ந்துப் போய் அவள் பார்த்துக்கொண்டிருக்க, "இறங்குன்னு சொன்னேன்" என்று மீண்டும் கத்தியவன்  கார் கதவைத் திறந்து அவளை காரிலிருந்து வெளியே தள்ளிவிட, தரையில் விழப் போய் கால்களை ஊன்றி நின்றுக்கொண்டாள் யாழ்மொழி.


அவனோ அதன் பிறகு ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.


முன்சீட்டில் வந்தமர்ந்தவன் அவளை விழிகள் சிவக்க ஒரு பார்வை பார்த்துவிட்டு, புழுதி பறக்க மின்னல் வேகத்தில் காரை செலுத்த, போகும் அவனை மிரண்டுப் போய் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.


இருந்த ஒரு வழியும் கை விட்டு போன உணர்வு..  ஏமாந்த நிலையில் கலங்கிய விழிகளை அழுந்தத் துடைத்தவள் தளர்ந்த நடையாக அரண்மனையை நோக்கிச் செல்ல, இங்கு லியோவோ மொத்த வேகத்தோடு காரை செலுத்திச் சென்று ஆங்கில சிறைச்சாலையின் முன் நிறுத்தினான்.


"சார்..." என்று வாசலிலிருந்த சில அதிகாரிகள் அவனைப் பார்த்ததும் மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்க, யாரையும் கண்டுகொள்ளாமல் வேக நடையிட்டு உள்ளே சென்றவன் வீராவை அடைத்து வைத்திருந்த  சிறையை நெருங்க, அங்கு அவனின் கதறல் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.


வீராவின் மேலிருந்த தன் மொத்த கோபத்தையும் பழி தீர்த்துக்கொள்வதற்காக வில்லியம் அவனை அடித்து துன்புறுத்த, வலியில் கதறித் துடித்தான் வீரா.


ஏற்கனவே உணவும் நீரும் இல்லாமல் சோர்ந்துப் போயிருந்த அவனுக்கு வலியில் கத்துவதற்கு கூட உடலில் தெம்பில்லை.


"வில்லியம்..." என்ற லியோவின் கர்ஜனையில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தவன் அவனின் வருகையை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பது அவனின் முகத்திலேயே அப்பட்டமாகத் தெரிந்தது.


"சார்... நீங்களா! நீங்க எப்படி.." என்று அவன் தடுமாற, "என்னோட பர்மிஷன் இல்லாம எந்த தைரியத்துல நீ இந்த மாதிரி பண்ணுவ?" என்று லியோ கத்த, உடனே கையிலிருந்த தடியை பதறியபடி தூக்கிப் போட்டான் வில்லியம்.


"சார், இவன் நம்மளோட கைதி, உங்ககிட்ட மன்னிப்பு கேக்க வைக்கணும்னு உங்களுக்காகதான் சார் நான்..." என்று அவன் ஏதோ சொல்ல வர, அடுத்து லியோ பார்த்த பார்வையில் அவனோ கப்சிப்பென்று வாயை மூடிக்கொண்டான்.


அவனை தீப்பார்வைப் பார்த்தவன் வீராவின் அருகே சென்று அவனின் கைக்கால்களை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட, விழிகளைக் கூட திறக்க திராணியின்றி முயன்று நிமிர்ந்துப் பார்த்தான் அவன்.


"சார் என்ன பண்றீங்க, அவன் உங்கள கொல்ல வந்திருக்கான். நமக்கு எதிரா புரட்சி பண்றவன் அவன். வீ ஷுட் நொட் லெட் ஹிம் கோ" என்று உயரதிகாரியின் செயலில் உண்டான அதிர்ச்சியில் வில்லியம் பதற்றமாகக் கத்த, "திஸ் இஸ் நொன் ஆஃப் யூவர் பிஸ்னஸ்" என்று அழுத்தமாக சொல்லிவிட்டு வீராவை தூக்கி நிறுத்தினான் லியோ.


"ஆஃபீசர்ஸ்..." என்ற அவனின் கத்தலில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சில அதிகாரிகள் வேகமாக ஓடி வந்து வீராவை பிடித்துக்கொள்ள, "அவனோட இடத்துக்கு கொண்டு போய் விட்டுருங்க" என்று லியோ சொன்னதும் மற்றவனுக்கு கோபம் உச்சத்தை தொட்டது.


"நோ சார், நீங்க இப்படி பண்ண கூடாது. அவன கொல்லணும், இப்போவே கொல்ல..." என்று மீண்டும் வில்லியம் கோபமாகக் கத்த, அவனே எதிர்பார்க்காதது போல் அவனை நோக்கி தன் துப்பாக்கியை குறி வைத்தான் லியோ.


"இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின... உன் தலை சிதறிடும்" என்று ஒவ்வொரு வார்த்தைகளாக அழுத்தி நிதானமாக அவன் சொல்ல, அதிகாரிகளோ வீராவை தாங்கிப் பிடித்த வண்ணம் அழைத்துச் சென்றனர்.


பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டவன் அதற்குமேல் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. 


அவனிடமிருந்து பார்வையைத் திருப்பி போகும் வீராவை வெறித்துப் பார்த்திருந்த லியோ திடீரென என்ன நினைத்தானோ, "வெயிட்!" என்று குரல் கொடுத்துவிட்டு அவர்களின் அருகே செல்ல, வீராவோ உடல் முழுக்க காயத்தோடு அவனை கேள்வியாகப் பார்த்தான்.


"எல்லாமே யாழ்மொழிக்காக தான். மைன்ட் இட்" என்று அமைதியான குரலில் அழுத்தமாக சொல்லி அந்த இடத்தை விட்டு அவன் நகர்ந்திருக்க, வீராவுக்கு எதுவுமே புரியவில்லை.


ஆனால் யாழ்மொழியின் பெயரை அவன் குறிப்பிட்டது மட்டும் அவன் மூளைக்கு உரைத்திருக்க, அதற்குமேல் யோசிக்க முடியாமல் முழு மயக்கத்திற்கு சென்று விழிகளை மூடிக்கொண்டான் அவன்.


அதிகாரிகளோ அவனைத் தாங்கிய வண்ணம் அழைத்துச் செல்ல, வீராவை உயிருடன் விட்டதை வில்லியமால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.


கோபத்தில் காலை தரையில் உதைத்துவிட்டு அவன் அங்கிருந்து வெளியேற, சிறைச்சாலையிலிருந்து ஆங்கிலேய அரண்மனைக்கு வந்து சேர்ந்தான் லியோ.


இவனைப் பார்த்ததும் ஜேம்ஸ் ஏதோ சொல்ல வர, அதைக் குறுக்கிட்டு "என்னோட பர்மிஷன் இல்லாம யாரும் ஆஃபீஸ் ரூமுக்கு வரக் கூடாது" என்று கட்டளைப் பிறப்பித்தவாறு ஆஃபீஸ் அறைக்குள் நுழைந்து கதவை அடித்து சாத்தினான் அவன்.


ஏனென்று தெரியாத கோபம் அவனுக்குள்.


"இல்ல.. நான் அவளுக்காக இது எதையும் பண்ணல. அவளுக்காக பண்ற அளவுக்கு ஷீ இஸ் நத்திங் டூ மீ" என்று  வாய்விட்டே கத்தியவனுக்கு, 'பின்ன எதுக்காக உன்ன கொல்ல வந்தவன விட்ட?' என்ற மனசாட்சியின் கேள்விக்கு பதிலே இல்லை.


"அந்த யாழ்மொழி யாரு, அவ எனக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்ல. அப்படி இருக்குறப்போ அவளோட அழுகைய ஏன் என்னால தாங்கிக்க முடியல, அவளோட வலிய ஏன் என்னால பார்த்துக்கிட்டு இருக்க முடியல. அவ தண்டைய அனுபவிக்குறேன்னு சொன்னப்போ ஏன் எனக்குள்ள வலிச்சது? ஏன்... ஏன்.. ஏன்..." 


என்று தனக்குத்தானே அதை கேட்டு பைத்தியம் பிடித்தவன் போல் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக்கொண்டிருந்த லியோவுக்கு பதில் தெரிந்தும் அதை ஏற்க மறுத்தது மனம்.


ஒருகட்டத்திற்கு மேல் தலை வெடிப்பது போலிருக்க, அறையிலிருந்த மொத்த பொருட்களையும் தூக்கியெறிந்தவன் ஒரு ஆழ்ந்த பெருமூச்சோடு தனக்குள் ஒரு முடிவெடுத்துக்கொண்டான்.


"அந்த தப்ப மட்டும் பண்ணவே மாட்டேன்" என்றவனின் வார்த்தைகள் அழுத்தமாக வர, "சார்..." என்று அழைத்து கதவைத் தட்டினான் ஜேம்ஸ்.


வேகமாக சென்று லியோ கதவைத் திறக்க, கலைந்த முடி கசங்கிய சட்டை என நின்றிருந்தவனின் கோலத்தை அதிர்ச்சியாகப் பார்த்தவனுக்கு அடுத்து அறை இருந்த கோலத்தைப் பார்த்து பேரதிர்ச்சியாக இருந்தது.


"சார்..." அவனின் குரல் அதிர்ச்சியோடு ஒலிக்க, "சீக்கிரம் என்ன விஷயம்னு சொல்லிட்டு போ!" என்று முகத்திற்கு அடித்தாற் போல கத்தியவனின் கோபத்திற்கு பயந்தே கடிதத்தை அவனிடம் நீட்டினான் ஜேம்ஸ்.


கடிதத்தின் உறையிலிருந்த பெயரைப் பார்த்தவனின் முகத்தில் இத்தனை நேரமிருந்த கடுமை மறைந்து மென்மை குடிகொண்டது. 


காரணம், சாட்சாத் அவனுடைய பழைய காதலியேதான்.


வேகமாக பிரித்த அந்த கடிதத்தை முழுதாக வாசித்தவனின் இதழ்கள் தன்னையும் அறியாமல் புன்னகையில் லேசாக விரிய, உடனே அவளுக்கான பதில் கடிதத்தை அத்தருணமே எழுதினான்.


ஊர் சந்தைக்கு அருகே கொண்டு சென்று காரில் இருந்து வீராவை அதிகாரிகள் இறக்கிவிட, தூரத்திலிருந்து அதைக் கண்டுகொண்ட பாலாவுக்கு அதிர்ச்சியுடன் கூடிய சந்தோஷமாக இருந்தது.


"வீரா..." என்று கத்திக்கொண்டு அவன் தோழனை நோக்கி ஓட, அப்போதுதான் அவன் ஓடும் திசையைப் பார்த்த மற்றவர்களுக்கும் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.


"ஏம்மா, உன் புள்ள சாகல, உயிரோடதான் வந்திருக்கான். சீக்கிரம் வா.." என்ற ஒருத்தியின் குரலில் பதறியடித்துக்கொண்டு வந்த வீராவின் தாய் வைதேகிக்கு மகனிருந்த தோற்றத்தைப் பார்த்ததும் பெற்ற மனம் பற்றியெறிந்தது


மொத்த ஊர் மக்களும் அவரை தேற்றி வீராவுக்கான உதவிகளை செய்ய, அன்றிரவு அரண்மனை தோட்டத்திலிருந்த குளத்திற்கு அருகே அமர்ந்து அழுது கரைந்தாள் யாழ்மொழி.


வீராவை எப்படி காப்பாற்றுவது என்றே தெரியவில்லை அவளுக்கு. எதுவும் செய்ய முடியாத தன் கையாலாகாத தனத்தை எண்ணி அவள் முகத்தை மூடி அழுது கரைய, இத்தனை நேரம் அறையிலிருந்த ராதா தோழியை காணாமல் அவளைத் தேடி வந்தாள்.


யாழ்மொழியின் காதலைப் பற்றி தெரிந்ததிலிருந்து அவளுடன் பேசுவதற்கு மனமே இல்லை அவளுக்கு. 


தூரத்திலிருந்து சிறிது நேரம் வெறித்துப் பார்த்தவள் எதுவும் பேசாமல் அறைக்கே திரும்பிச் சென்றிருக்க, அழுது அழுது அந்த குளத்திற்கு அருகிலேயே உறங்கிப் போயிருந்தாள் யாழ்மொழி.


அடுத்தநாள் விடிந்ததும், "யாழ்... யாழ்மொழி எழுந்திரு!" என்ற இந்திரசேனாவின் குரல் காதில் விழ, அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தவளின் முன்னே புன்னகையோடு அமர்ந்திருந்தாள் இந்திரா.


***********




Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚