விழிகள் 15




யாழ்மொழியோ பயத்தில் விழிகளை மூடிக்கொள்ள, சிறிய இடைவெளியில் நிறுத்தப்பட்ட காரிலிருந்து இறங்கினான் வில்லியம்.


"ஆர் யூ அஃப்ரைட் ஆஃப் மீ, ஹாஹாஹா..." என்று கேட்டு அவன் பேய் போல் சிரிக்க, பட்டென விழிகளைத் திறந்தவள் அவனை அங்கு எதிர்பார்க்காது அதிர்ந்துப் பார்த்தாள்.


"என்னை பார்த்து பயப்படுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" என்றுக்கொண்டே அவளை அவன் நெருங்க, எச்சிலை விழுங்கியவாறு இரண்டடி பின்னே நகர்ந்தாள் அவள்.


அதைப் பார்த்து நக்கலாக சிரித்தவன், "அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுருவேன்னு நினைச்சியா, வாய்ப்பு வரும் வரைக்கும் காத்திருக்கேன், வந்ததும் உடனே பிடிச்சிக்குவேன், என்ட் ஐ கான்ட் வெயிட் டூ ஹேவ் யூ. கவுன்ட் யூவர் டேய்ஸ் யாழ்மொழி" என்று ஆங்கிலத்தில் ஏளனப் புன்னகையோடு பேசிவிட்டு மீண்டும் காரில் ஏறி பறந்திருக்க, பெண்ணவளோ பெக்கபெக்கவென விழித்துக்கொண்டு நின்றிருந்தாள்.


"அவன் என் பெயரை சொன்னது மட்டும்தான் எனக்கு புரிந்தது, அதுவும் சரியான உச்சரிப்பே இல்லை. ஏதேதோ உளறிவிட்டு செல்கிறான். சரியான மடையனாக இருப்பான் போல!" என்று அவள் பாட்டிற்கு திட்டிவிட்டு அரண்மனையை நோக்கிச் செல்ல, அதேநேரம் இங்கு நந்த இளவரசனின் முன் இறுகிய முகமாக நின்றிருந்தாள் இந்திரா.


"திருமணத்தை மேலும் தாமதப்படுத்த வேண்டாம். புரோகிதரை இன்றே வரவழைத்து நல்ல முகூர்த்த நாளை கேட்டு திருமண வேலைகளை ஆரம்பித்து விடலாம் இளவசர் நந்தன்" என்று அரசர் வேந்தன் சொல்ல, "என் யோசனையும் அதுவே, இந்திராவை கரம் பிடிக்க நானும் காத்துக்கொண்டுதான் இருக்கிறேன்" என்று வருங்கால மனைவியை ரசித்தபடி சொன்னான் அவன்.


ஆனால், அவனின் பார்வையை உணர்ந்தும் நிமிர்ந்தே பார்க்கவில்லை இந்திரசேனா. அவளுடைய முகத்தில் மருந்துக்கும் புன்னகை இல்லை. அதை நந்த இளவரசனும் கவனிக்காமலில்லை.


"என்ன நடந்தது இந்திரா, உன் முகமே சரியில்லை" என்று அவன் அவளை கூர்ந்துப் பார்த்தபடிக் கேட்க, அப்போதுதான் மகளின் முகத்தை உற்றுப் பார்த்தார் வேந்தன்.


"இந்திரா..." என்று அவர் அழைத்ததும் நிமிர்ந்த பெண்ணவளின் விழிகள் இரண்டும் கலங்கிப் போயிருக்க, இரு ஆண்களுக்கும் ஒருகணம் எதுவுமே புரியவில்லை.


"இந்..." என்று நந்த இளவரசன் ஏதோ சொல்ல வர, அவனைக் குறுக்கிட்டு, "என்னை மன்னித்து விடுங்கள், எனக்கு இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை" என்றாள் அவள் பட்டென்று.


அவள் சொன்னதை கிரகிக்கவே அவனுக்கு சில நிமிடங்கள் பிடிக்க, வேந்தனுக்கோ கோபம் உச்சத்தை தொட்டது.


வேகமாக எழுந்தவர், "இந்திரா..." என்று கோபம் அதிர்ச்சி என கலந்து சத்தமிட, தந்தையை திடுக்கிட்டுப் பார்த்தவளுக்கு பயத்தில் கைக்கால்கள் நடுங்கத் தொடங்கின.


மின்னல் வேகத்தில் மகளை நெருங்கி அவர் பார்த்த பார்வையில் கீழுதட்டைக் கடித்து கைகளைப் பிசைந்தபடி நின்றிருந்த இந்திராவுக்கு நா எழவில்லை. 


"உண்மைய சொல் இந்திரா, எதற்கு சம்மதமில்லை என்கிறாய்? யாராவது உன்னை குழப்பி விட்டார்களா, எதற்கு இந்த திருமணத்தில் உனக்கு உடன்பாடு இல்லை சொல்!" என்று அவர் அடித்தொண்டையிலிருந்து கத்த, "அது... அது வந்து தந்தையே, யாரும் இதற்கு காரணம் இல்லை. நான்தான்... எல்லாமே என்னால்தான். என்னை மன்னித்துவிடுங்கள்!" என்று கையெடுத்துக் கும்பிட்டாள் அவள்.


"அரசரே சற்று பொறுங்கள், இந்திரசேனாவிடம் நான் பேசிப் பார்க்கிறேன்" என்ற நந்தன் இந்திராவின் எதிரே வந்து நின்று அவளின் விழிகளை நேருக்கு நேராகப் பார்க்க, அவனின் பார்வையை எதிர்க்க முடியாமல் பார்வையை திருப்பிக்கொண்டாள் பெண்ணவள்.


"நீ சம்மதம் சொன்னதால்தானே அரசர் இந்த திருமணத்தை முடிவு செய்தார், இப்போது வேண்டாம் என்றால் என்ன அர்த்தம்? பதில் சொல் இந்திரா, என்னை பிடிக்கவில்லையா, இல்லையென்றால், திருமணமே பிடிக்கவில்லையா?" என்று அவன் இறுகிய குரலில் கேட்க, "உங்களை காயப்படுத்தியதற்கு மன்னித்து விடுங்கள் இளவரசே, தங்களை பிடிக்காமல் இல்லை. நான் மனதை பறி கொடுக்காமல் இருந்திருந்தால் நிச்சயமாக நம் திருமணம் நடந்திருக்கும்" என்றவளின் வார்த்தைகளில் இரு ஆண்களும் திகைத்துப் போய்விட்டனர்.


"இந்திரா..." என்ற வேந்தனின் குரல் அதிர்ச்சியோடு ஒலிக்க, தந்தையை பார்க்க சங்கடப்பட்டு அந்த இடத்தை விட்டு தன் அறையை நோக்கி ஓடினாள் அவள்.


அவளை நோக்கி செல்லப் போன அரசரை தடுத்த நந்தன், "இதற்குப் பிறகு பேசி பயனில்லை, நான் வருகிறேன்" என்றுவிட்டு அரண்மனையிலிருந்து வெளியேறி இருக்க, இடிந்துப் போய் அப்படியே இருக்கையில் அமர்ந்த வேந்தனுக்கு மகளின் வார்த்தைகளில் ஆசையெல்லாம் நிராசையான உணர்வு.


யாழ் அரண்மனைக்குள் நுழையும் போதே எல்லோரும் பரபரப்பாக தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொள்ள, அதை புருவ முடிச்சுகளோடு பார்த்தவாறு வராண்டாவில் நடந்து சென்றுக்கொண்டிருந்தவளின் கரத்தைப் பற்றி இழுத்தாள் ராதா. 


"யாழ், எங்கு சென்றிருந்தாய், அரண்மனையில் நடப்பது உனக்கு தெரியுமா தெரியாதா?" என்று தோழி பதற்றமாகக் கேட்க, "என்ன நடந்தது?" என்று புரியாமல் கேட்டாள் யாழ்மொழி.


"இளவரசி திருமணத்தை நிறுத்தி விட்டார்களாம் அவர்கள் யாரையோ காதலிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால்... இளவரசியுடன் அதிகம் இருப்பது நீதான், அவர்களைப் பற்றி உனக்கு தெரியாமல் இருக்காது. உண்மையை சொல் யாழ், யார் அது? அவர்கள் காதலிப்பது நிஜம்தானா?" 

என்று ராதா கோபமாகக் கேட்க, யாழ்மொழிக்கு கிட்டத்தட்ட தலையே சுற்றி விட்டது.


"என்ன சொல்கிறாய் ராதா, கடவுளே! என்ன காரியம் செய்துவிட்டார்கள். நான் இப்போதே இளவரசியை சந்திக்க வேண்டும்" என்று யாழ் ராதாவின் அழைப்பைக் கூட காதில் வாங்காமல் வேகமாக இந்திரசேனாவின் அறையை நோக்கி செல்ல, அவளோ ஜன்னல் வழியே வானத்தை வெறித்தபடி கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள்.


"இளவரசி..." என்ற யாழ்மொழியின் குரலில் வேகமாகத் திரும்பியவள் ஓடிச் சென்று அவளை அணைத்து கதறியழ, "ஏன் இவ்வாறு செய்தீர்கள், விளைவு தெரிந்துமா தங்களால் உண்மையை சொல்ல முடிந்தது?" என்று தழுதழுத்த குரலில் கேட்டாள் மற்றவள்.


"தந்தையை பற்றி அறிந்துதான் நான் யாரென்று சொல்லவில்லை யாழ், அவன் யாரென்று தெரிந்தால் நிச்சயமாக அவனை கொன்றே விடுவார். ஏதோ ஒரு தைரியத்தில் தான் காதலிப்பதை சொல்லிவிட்டேன். ஆனால் இப்போது அவரை எப்படி சந்திப்பது என்று தெரியவில்லை. இதையெல்லாம் விட இனி என்னால் அரண்மனையை விட்டு வெளியிலேயே செல்ல முடியாது. கண்டிப்பாக தந்தை பாதுகாப்பை பலப்படுத்தி இருப்பார்" என்று இந்திரா கண்ணீரோடு பேசிக்கொண்டே போக, யாழ்மொழிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.


"இளவரசி, நான் வீராவை சந்தித்தேன்" என்றவள் தான் பார்த்ததையும் அவனோடு பேசியது மொத்தத்தையும் கூறி முடிக்க, ஒருகணம் அதிர்ந்தவள் பின் யோசனையோடு தரையை வெறித்தாள்.


"வீராவை பற்றி நான் நன்கு அறிவேன், அவன் நினைத்ததை முடிக்காமல் விட மாட்டான். அதுமட்டும் இல்லாமல், இதிலிருக்கும் ஆபத்தையும் அவன் அறியாமல் இல்லை. ஆனால், எனக்கு பயமாக இருக்கிறது யாழ், அவனுக்கு ஏதாவது நேர்ந்தால் நான் என்ன செய்வேன்?" 


என்று தன்னவனின் உயிரை நினைத்து அவள் பதற்றமாக சொல்ல, ஆனால் யாழ்மொழியின் சிந்தனையோ லியோவிற்கு ஏதாவது நேர்ந்திடுமோ என்ற யோசனையைதான் தத்தெடுத்திருந்தது.


அன்று முழுக்க அவளால் எதிலும் முழுதாக ஈடுபட முடியவில்லை. வீராவை பற்றி இந்திரா சொல்லி அறிந்துக்கொண்டவளுக்கு லியோவை இழந்து விடுவோமோ என்ற பயம் மனதிலிருக்கும் காதலை உணர வைக்க ஆரம்பித்தது.


"அவன்  நம் நாட்டை கைப்பற்றி இருக்கும் அதிகாரி, அவனுக்கு என்ன நேர்ந்தால் உனக்கென்ன?" என்று மூளை கேள்வி கேட்க, "இல்லை, அவருக்கு எதுவும் நேர நான் விட மாட்டேன், ஏனென்றால் நா.. நான்..." என்று துடித்த மனதிற்கு அந்த துடிப்பிற்கான காரணம் புரியத் தொடங்கியது.


அந்த நொடி யாழ்மொழி தன்னை நினைத்தே அதிர்ச்சியில் உறைந்துப் போய் விட, அதிர்ச்சி ஆச்சரியம் பயம் தன்னை நினைத்தே கோபம், காதல் என பல விதமான உணர்ச்சிகள் அவளை சூழந்துக்கொண்டன.


அன்றிரவு அறைக்குச் செல்லாமல் நிலவை வெறித்தவாறு யாழ்மொழி வராண்டாவில் நின்றுக்கொண்டிருக்க, தோழியைத் தேடி வந்தாள் ராதா.


"யாழ், அப்படி என்ன யோசனை? வெளியில் சென்று வந்ததிலிருந்து உன் முகமே சரியில்லை. ஏதாவது பிரச்சனையா என்ன?" என்று கேட்டுக்கொண்டே அவளை நெருங்கியவள் தோழியின் தோளைப் பற்றி தன் பக்கம் திருப்ப, விழிகள் கலங்க நின்றிருந்தாள் அவள்.


"என்ன நேர்ந்தது யாழ், எதற்காக அழுகிறாய்? இப்போதே காரணத்தை சொல்ல போகிறாயா இல்லையா?" என்று  ராதா காட்டமாகக் கேட்க, "எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை ராதா, நான் தவறு செய்கிறேன் புரிகிறது ஆனால் மனம் அதை ஏற்க மறுக்கிறதே!" என்றவளின் வார்த்தைகளில் அத்தனை வலி.


"என்ன! என்ன சொல்கிறாய் நீ? எனக்கு எதுவுமே புரியவில்லை" என்று மற்றவள் பதற்றமாகக் கேட்க, "அது... நான்... நான் காதலிக்கிறேன் ராதா" என்று திக்கித்திணறி அவள் சொல்லி முடிக்க, அதிர்ந்து விழித்த ராதா  பின் உடனே முகபாவனையை மாற்றிக்கொண்டாள்.


"ஓஹோ.. இதுதான் சங்கதியா! இதற்கு ஏன் இத்தனை தயக்கம் யாழ்மொழி? நீ காதலிப்பது எனக்குமே ஆச்சரியம்தான். ஆனால் நமக்கென்று எந்த உறவு இருக்கிறது? நாம் தான் நம் வாழ்க்கையை தேடிப் போக வேண்டும். இருந்தாலும் கள்ளி, என்னிடமே மறைத்து விட்டாயே! சரி சொல், யார் அது? நம் அரண்மனையிலா இல்லை.. வெளியிலா?" என்று ஒற்றைக் கண்ணை சிமிட்டி குறும்பாகக் கேட்டாள் அவள்.


"அது ராதா.. அரண்மனையில்தான்" என்று யாழ்மொழி பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொள்ள, "அட நிஜமாகவா! யார் அது, என் கண்களுக்கு இந்த காதல் ஜோடிகள் சிக்கவே இல்லையே. சீக்கிரம் யாரென்று சொல்" என்ற மற்றவளுக்கு அத்தனை ஆர்வம்.


ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவள், "ஆம் அரண்மனையில்தான், அதுவும் ஆங்கிலேய அரண்மனையில். நம்ம ஊருக்கு வந்திருக்கும் உயரதிகாரியை தான் ராதா" என்று சொல்லி முடிக்க, இதயம் துடிப்பது ஒரு நொடி நின்றுப் போளவளாக உறைந்துப் போய் நின்றிருந்தாள் அவளின் தோழி.


"யாழ்..." என்றவளின் குரல் அதிர்ச்சி குறையாமல் ஒலிக்க, தன்னை சுதாகரித்த மறுகணம் கொஞ்சமும் யோசிக்காமல் தோழியின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள் ராதா.


இதை கொஞ்சமும் எதிர்பார்க்காதவளாய் யாழ்மொழி கன்னத்தைப் பொத்திக்கொண்டு திகைத்துப் பார்க்க, "எத்தனை பெரிய தவறை செய்திருக்கிறாய் என்று புரிகிறதா யாழ்? நம்மை அடிமைப்படுத்திருக்கும் ஒரு ஆங்கிலேயனை காதலிக்கிறாய். இது மட்டும் அரசருக்கு தெரிந்தால் உன்னை கொல்வது உறுதியோ இல்லையோ ஊர் மக்கள் உன்னை கல்லால் அடித்தே கொன்று விடுவார்கள். ச்சீ... எனக்கே இதை நினைத்தால் அசிங்கமாக இருக்கிறது" என்று அவளோ அருவருக்கும் குரலில் பேசினாள்.


யாழ்மொழி இந்த எதிர்வினையை கொஞ்சம் எதிர்பார்க்கவில்லை. இதயம் அவளின் வார்த்தைகளில் சுக்கு நூறாக உடைய, "ராதா, என்.. என்னை மன்னித்து விடு! எனக்கு வேறு வழி தெரியவில்லை. என்னை மீறி காதலித்து விட்டேன். உண்மையை சொல்லப்போனால் நான் காதலிப்பது அவருக்கே தெரியாது. இன்று சந்தைக்கு சென்ற போது புரட்சியாளர்கள் அவரை கொல்லப் போவதாக திட்டம் தீட்டியதை நான் அறிந்தேன், அவருக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற பயம என் காதலை எனக்கு உணர்த்திவிட்டது. எனக்.. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை"


என்று தேம்பித் தேம்பி அழுதுக்கொண்டே அவள் தன் மனதிலுள்ளதை சொல்லி முடிக்க,  அதேநேரம் ஆங்கிலேய அரண்மனை வளாகத்துக்குள் தனி ஆளாக நுழைந்தான் வீரா.


அவனுடைய கரத்தில் கூரிய நீண்ட வாள் இருக்க, அந்த கும்மிருட்டில் மெல்ல பதுங்கிச் சென்று அரண்மனையை சுற்றி காவலுக்கு நின்றிருந்த அதிகாரிகளின் வாயைப் பொத்தி தாக்கினான் அவன்.


ஆனால் முணங்கல் சத்தமும் சிறு சலசலப்பு சத்தமும் தூரமாக நின்றிருந்த அதிகாரிகளின் காதில் விழ, "ஹேய் ஆர் யூ, சம்வன் இஸ் ஹியர்" என்று கத்திக்கொண்டே அவர்கள் வர, உடனே அரண்மனையை சுற்றி ஒரு இடத்தில் பதுங்கிக்கொண்டான் வீரா.


"இங்கேயே இருந்தா கண்டிப்பா மாட்டிப்போம், செத்தாலும் பரவாயில்ல ஆனா சாகுறதுக்கு முன்னாடி அந்த அதிகாரிய கொன்னதா தான் நான் இருக்கணும்" என்று தனக்குள் சபதம் எடுத்துக்கொண்டவன் வேகமாக யார் கண்ணிலும் சிக்காமல் திறந்திருந்த பெரிய ஜன்னல் வழியே அரண்மனைக்குள் நுழைந்துக்கொண்டான்.


அவன் நுழைந்த அறையிலோ சிறு விளக்கு மட்டும் எரிய, சுற்றி பல புத்தகங்களும் கோப்புகளும் அடுக்கப்பட்டிருந்தன.


"இதென்ன  அறைன்னு கூட தெரியலயே! இம்புட்டு பெருசா இருக்கு" என்று யோசித்துக்கொண்டே சுற்றி முற்றி பார்த்தவனின் விழிகளில் அப்போதுதான் மேசையில் உறங்கிக்கொண்டிருந்த லியொ தென்பட்டான்.


அவனைப் பார்த்ததும் வீராவின் விழிகள் மின்ன, "மீன் தானா வந்து வலையில சிக்கிருச்சு" என்றவாறு வாளின் பிடியை இறுகப் பிடித்துக்கொண்டு மெல்ல அவனை நோக்கி ஒவ்வொரு அடியாக முன் வைத்து சென்றான்.


அவனை நோக்கி இவன் வாளை ஓங்கும் அதேநேரம் மறுகணம் அதிகாரிகள் தரையில் கிடப்பதைப் பார்த்து மற்ற அதிகாரிகளோ எச்சரிக்கை செய்யவென உடனே எச்சரிக்கை ஒலியை எழுப்பினர்.


இரண்டு காட்சிகளுக்கான நேரமும் ஒரே சமயத்தில் இடம்பெற, பட்டென்று விழிகளைத் திறந்த லியோ தன்னை நோக்கி வரும் வாளை பார்த்துவிட்டு மின்னல் வேகத்தில் எழுந்து மேசை மீதிருந்த துப்பாக்கியை தட்டியெடுத்து வீராவை குறி வைத்து சுட்டான்.


அந்த புல்லட் வீராவின் தோளிலேயே பாய்ந்திருக்க, ஆக்ரோஷமாக அவனை நோக்கி வந்தவன், "ஹவ் டேர் யூ ட்ரை டூ கில் மீ! இனிமே நீ வாழ்க்கை பூரா எங்க சிறையிலதான்" என்று அடித்தொண்டையிலிருந்து கத்திக்கொண்டு அவனை அடிக்க, பற்களைக் கடித்து வலியை பொறுத்தவாறு கால்களை ஊன்றி நின்றுக்கொண்டான் வீரா.


ஆனால், அதுவம் சில நிமிடங்கள்தான். விழிகள் சிவக்க அவனைப் பார்த்த வீராவுக்கு வலியின் உச்சகட்டத்தில் விழிகள் சொருகி மயக்கம் வர அப்படியே தொப்பென்று தரையில் விழுந்தான்.


மொத்த அதிகாரிகளும் லியோவின் அறைக்குள் பதற்றமாக நுழைய, "இதுதான் நீங்க பாதுகாக்குற லட்சணமா, ஜஸ்ட் ஒரு சாதாரண அடிமை அரண்மனைக்குள்ள நுழைஞ்சிருக்கான். அது கூட தெரியாம நீங்க எல்லாம் என்ன வேலை பார்க்குறீங்க" என்று கோபத்தில் தரையை நோக்கி புல்லட்களை இறக்கினான் லியோ.


மொத்தப் பேரும் எச்சிலை விழுங்கியவாறு நிற்க, அடுத்து அவன் பார்த்த பார்வையில் அதற்கு மேல் அங்கு நிற்பார்களா அவர்கள்!  


உடனே வீராவை தூக்கிக்கொண்டு அதிகாரிகள் சென்றுவிட, "டேம்ன் இட்!" என்று கோப மூச்சுகளை விட்டவாறு நின்றிருந்தான் அவன்.


************

Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚