விழிகள் 13




யாழ்மொழி தன் தோழியோடு இவ்வாறு பேசிக்கொண்டிருக்க, அதேநேரம் ஆங்கிலேய அரண்மனையிலுள்ள பார் வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் மதுக்குவளையை கையில் வைத்து சுழற்றியவாறு யோசனையோடு  அமர்ந்திருந்தான் லியோ.


"அவ கூப்பிட்டா நான் போகணுமா, இந்த ஊரை சுத்தி பார்க்கணும்னு நான் கேட்டேனா என்ன! நான் போக போறதில்ல" என்று தனக்குத்தானே அவன் சொல்லிக்கொள்ள, ஆனால் மனம் விடியலை எதிர்பார்த்து துடித்தது.


"என்னாலயே என்னை புரிஞ்சுக்க முடியலையே! சரியான இம்சை" என்று கடுப்பாக விழிகளை அழுந்த மூடித் திறந்தவன், கையிலிருந்த மதுவை வாயில் சரிக்க, சரியாக அவனெதிரே வந்து அமர்ந்தான் வில்லியம்.


போத்தலிலிருந்த மதுவை க்ளாஸில் ஊற்றியவாறு, "ஆஃபீசர் லியோ, என்ன இன்னைக்கு பார்ல இருக்கீங்க. உங்க பழைய காதலியோட நினைப்பா?" என்று கேலியாகக் கேட்க, மற்றவனோ அவனை உறுத்து விழித்தான்.


"தட் இஸ் நொன் ஆஃப் யூவர் பிஸ்னஸ் வில்லியம்" என்று லியோ அலட்சியமாக சொல்லிவிட்டு எழப் போக, "க்ரிஸ்டிய பத்தி ரீசன்ட்டா நான் ஒன்னு கேள்விப்பட்டேன். அவங்களுக்கு சார் மைக்கேலோட ஏற்பாடு பண்ணியிருந்த என்கேஜ்மென்ட்ட நிறுத்திட்டாங்களாம், ஐ டோன்ட் நோ வை, உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா சார்?" என்று வேண்டுமென்றே அவனின் பழைய நினைவுகளைத் தூண்டிவிட்டான் அவன்.


லியோவுக்கு பழைய சம்பவங்கள் மீண்டும் உள்ளுக்குள் தோன்றி மறைய, கை முஷ்டியை இறுக்கி கோபத்தைக் கட்டுப்படுத்தியவன், "எனக்கு சம்பந்தமே இல்லாத ஆளுங்கள பத்தி நான் யோசிக்கவும் மாட்டேன், கெயார் பண்ணவும் மாட்டேன். தட் இஸ் நொட் மை பிஸ்னஸ் கொட் இட்!" என்று சொல்லிவிட்டு நகர, அடுத்து வில்லியமின் கேள்வியில் அவனுடைய கால்கள் சட்டென நின்றன.


"உங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஆளுங்கள பத்தி உங்களுக்கு எந்த கவலையும் இல்லன்னா, தென் வை டிட் யூ வொர்ரி அபௌட் தட் இந்தியன் கேர்ள்? அது உங்களுக்கு தேவையே இல்லாததுதானே ஆஃபீசர் லியோ" என்று அவன் கேட்ட விதத்தில், விழிகளை கூர்மையாக்கிப் பார்த்தான் மற்றவன்.


"இதுக்கான ரீசன் ஆஃபீசர் ரொனேல்ட் கிட்ட நான் அப்போவே சொல்லிட்டேன். மறுபடியும் நீ என்ன தெரிஞ்சுக்கணும்?" என்று கேட்டுக்கொண்டே ஒவ்வொரு அடியாக முன் வைக்க, "என்னால அதை நம்ப முடியல சார், நீங்க எங்க பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரா நடந்துக்குறதா எனக்கு சந்தேகமா இருக்கு. ஐ கென் ப்ரூவ் இட்" என்றான் வில்லியம் வன்மத்தோடு.


அடுத்தகணம் அவனே எதிர்பார்க்காதது போல் உச்சகட்ட கோபத்தில் அவனின் குரல் வளையைப் பிடித்த லியோ, அவனின் தலையை அங்கு மதுபானங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி மேசையில் சாற்றி, "ஹவ் டேர் யூ... உன்னால முடிஞ்சா பண்ணு, வில் சீ" என்று சொல்ல, அவனின் பிடியிலிருந்து விலக முடியாமல் மூச்சுக்கு சிரமப்பட ஆரம்பித்தான் வில்லியம்.


போதையிலிருந்த லியோவிற்கு எதுவுமே புரியவில்லை. நிதானமில்லாததில் அவனின் கோபமும் கை மீறிப்போக, சரியாக அவனைப் பார்க்க வந்த ஜேம்ஸிற்கு அதைப் பார்த்ததும் திக்கென்று இருந்தது.


"சார்... ஸ்டாப் திஸ்!" என்று கத்தியவாறு ஓடிச் சென்றவன் வில்லியமிடமிருந்து லியோவை பிரித்தெடுத்து இழுத்துக்கொண்டு செல்ல, மூச்சை இழுத்துவிட்டு இருமியவாறு விழிகளில் கோபம் கொப்பளிக்க லியோவைப் பார்த்தான் வில்லியம்.


ஜேம்ஸ் அவனின் அறைக்கு இழுத்து வந்து கட்டிலில் படுக்க வைத்தவன், தான் கொண்டு வந்த கடிதத்தை அங்கிருந்த டீபாயின் மேல் வைத்துவிட்டு செல்லப் போக, எதேர்ச்சையாக அவனின் விழிகளில் சிக்கியது அந்த முந்தானை.


அதைப் பார்த்ததும் சில கணங்கள் யோசித்தவனுக்கு அப்போதுதான் அது யாருடையது என்று மூளைக்கு உரைக்க, "அடப்பாவி!" என்று வாயில் கை வைத்தவாறு லியோவைப் பார்த்தவன் பின் அடக்கப்பட்ட சிரிப்போடு அங்கிருந்து வெளியேறிருந்தான்.


"யாழ்... யாழ்மொழி... உன்னை அவ பக்கத்துல கூட நெருங்க விட மாட்டேன்டா" என்று போதையில் குளறியபடி அவன் அப்படியே உறங்கிப் போக, அடுத்த நாளும் விடிந்தது.


காலையில் எழுந்ததும் ஹேங்கோவரில் தலை பயங்கரமா வலிக்க, "ஸ்ஸ்.. ஆஆ..." என்று முணங்கிக்கொண்டே எழுந்தமர்ந்தவனின் விழிகளில் டீபாயின் மேல் காற்றுக்கு ஆடிக்கொண்டிருந்த கடிதம் தென்பட்டது.


சோம்பல் முறித்தவாறு எழுந்துச் சென்று அந்த கடிதத்தைப் பார்த்தவனின் விழிகள் ஆச்சரியத்தில் விரிய, "க்ரிஸ்டி..." என்று அதே ஆச்சரியக் குரலில் அவளுடைய பெயரை முணுமுணுத்தன அவனுடைய இதழ்கள்.


உடனே கடிதத்தைப் பிரித்து வாசித்துப் பார்த்தவனின் புருவங்கள் முடிச்சிட, சில கணங்கள் தரையை வெறித்தவாறு நின்றிருந்த லியோ திடீரென என்ன நினைத்தானோ! 


அவளுக்கான பதில் கடிதத்தை எழுதிவிட்டு அதை புன்னகையோடுப் பார்த்தான். அவனுடைய நினைவலைகள் மூன்று வருடங்களுக்கு முன் அவளுடனான சந்திப்பை நினைத்துப் பார்த்தன.


பிரிட்டிஷ் அரசாங்கத்தில் இவன் வேலையிலிந்த அதேவேளை புதிதாக அரசாங்க செயலாளராக  சேர்ந்தவள்தான் க்ரிஸ்டி. யாருடனும் அதிகமாக பழகாத லியோ போகப் போக அவள் மேல் காதல் வயப்பட்டிருக்க, க்ரிஸ்டியும் அவனுடன் நெருங்கி பழக ஆரம்பித்தாள்.


ஒரே வீட்டில் ஒன்றாய் திருமணம் செய்யாமலேயே ஆரம்பித்த அவர்களுடைய காதல் வாழ்க்கை வருடங்கள் செல்ல அவளுக்கு சலிப்பு தட்டியது போலும்! 


கொஞ்சம் கொஞ்சமாக அவனிடமிருந்து விலக ஆரம்பித்தவள் அதே அரசாங்கத்தில் பணி புரியும் மைக்கேலோடு பழக ஆரம்பிக்க, லியோவுக்கும் அந்த விடயம் தெரிய வந்தது.


பிரிவின் வலியில் மனமுடைந்துப் போனவனுக்கு சரியாக இந்த நாட்டுக்கு உயரதிகாரியாக வருவதற்கான வாய்ப்பு கிடைக்க, உடனே அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டான்.


ஆனால், அந்த நொடி அவனின் மொத்த வாழ்க்கையும் இங்கிருக்கும் சாதாரண இந்தியப் பெண்ணால் தலை கீழாக மாறப் போவதை அவன் அப்போது உணர்ந்திருக்கவில்லை.


அத்தனையும் நினைத்துப் பார்த்தவன், தலைமுடியை அழுந்தக் கோதி உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியவாறு அடுத்த பத்தே நிமிடங்களில் குளித்து முடித்து தயாராகி கடிதத்தை எடுத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியேறினான்.


ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்த ஜேம்ஸ் லியோவைக் கண்டதுமே மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று, "சார் எங்கேயாச்சும் போகணுமா, கார ஸ்டார்ட் பண்ணவா?" என்று கேட்க, அவனின் கரத்தில் கடிதத்தை வைத்தான் லியோ.


"இந்த லெட்டர அனுப்பி விடு! என்ட்... ஒரு முக்கியமான வர்க் இருக்கு. அதை நானே பார்த்துக்குறேன், நீ வேற வேலை இருந்தா பாரு" என்றுவிட்டு வேகமாக வெளியேறி காரை எடுத்துக்கொண்டு சென்று விட, ஜேம்ஸ்ஸிற்கு எதுவுமே புரியவில்லை.


போகும் அவனை குழப்பத்தோடு பார்த்தவாறு நிற்க, அதேநேரம் தான் சொன்ன இடத்தில் குதிரையோடு காத்திருந்தாள் யாழ்மொழி. 


'வருவாரா இல்லையா என்றே தெரியவில்லையே, ஒருவேளை நான்தான் வீணாக கற்பனை செய்துக்கொண்டு இருக்கிறேனா! ம்ஹூம்... அவர் வருவதற்கு வாய்ப்பே இல்லை, அரண்மனைக்கு திரும்ப வேண்டியதுதான்' 


என்று மானசீகமாக புலம்பியவாறு அவள் அங்கிருந்து நகர்ந்துச் செல்ல, திடீரென பின்னால் கேட்ட சத்தத்தில் விருட்டென திரும்பிப் பார்த்தாள் அவள்.


லியோவோ முழு வேகத்தோடு காரில் வந்தவன் அவள் திரும்பிய மறுகணம் அவளை மோதுவது போல் கொண்டு சென்று காரை நிறுத்த, யாழ்மொழிக்கு இதயம் பயத்தில் உறைந்தே விட்டது.


எச்சிலை விழுங்கியவாறு சிலை போல் நின்றிருந்தவளின் விழிகள் பிதுங்கி விடுமளவிற்கு விரிந்திருக்க, அவளின் முகபாவனைகளை உள்ளுக்குள் ரசித்தவாறு காரிலிருந்து இறங்கினான் அவன்.


"ஊஃப்ப்..." பெருமூச்சொன்றை விட்டு நெஞ்சை நீவி விட்டவாறு அவள் தன்னை ஆசுவாசப்படுத்த முயற்சிக்க, "என்ன பயந்துட்டியா! வாய் மட்டும்தான்" என்று கேலியாக வந்தன அவனின் வார்த்தைகள்.


அதில் போலியாக முறைத்துப் பார்த்தவள், "அடுத்தவர்களை துன்புறுத்தி சுகம் காணுவதில் இந்த ஆங்கிலேயர்களுக்கு அலாதி பிரியம் போல" என்று சட்டென சொல்லிவிட, "அன்னைக்கு உன்னை அவங்ககிட்ட  இருந்து காப்பாத்தினதே நீ சொல்ற அதே ஆங்கிலேயன்தான்" என்றான் லியோ பதிலுக்கு.


அதை நினைத்துப் பார்த்தவளின் இதழ்கள் புன்னகையில் விரிய, "அது என்னவோ உண்மைதான். சரி செல்லலாமா?" என்றுக்கொண்டே குதிரையில் ஏறிக்கொண்டாள் யாழ்மொழி.


"நான் உன் கூட வரேன்னு சொல்லவே இல்லையே, வர மாட்டேன்னு சொல்லதான் வந்தேன்" என்று காரில் ஒற்றைக் காலை மடக்கி சாய்ந்தவாறு அவன் சொல்ல, "அதை சொல்லதான் இத்தனை தூரம் வந்தீர்களா! என்ன ஒரு புத்திசாலித்தனம். சரி வந்துவிட்டீர்கள் தாங்கள் செய்த உதவிக்கான பரிகாரத்தையும் செய்து விடுகிறேன். வேண்டாம் என்று மட்டும் மறுக்காதீர்கள் அதிகாரி" என்று விழிகளை சுருக்கி கெஞ்சலாகக் கேட்டாள் அவள்.


மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியவாறு சில கணங்கள் அவளைப் பார்த்திருந்தவன், பின் காரிலேறி அமர்ந்து "நீ முன்னாடி போ, நான் வரேன்" என்று சொல்லி காரை உயிர்ப்பிக்க, அவளுக்கு இதுவே போதுமென்றுதான் தோன்றியது.


புன்னகையோடு குதிரையை முன்னோக்கி செலுத்தி அவள் வேகமாகச் செல்ல, அவளை பின்தொடர்ந்து வந்துக்கொண்டிருந்தவனுக்கு காற்றில் பறக்கும் அவளின் நீண்ட சுருள் கூந்தலின் அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.


திடீரென லியோ வந்துக்கொண்டிருந்த கார் சட்டென நிற்க, அவன் வருகிறானா என திரும்பிப் பார்த்த யாழ்மொழியின் விழிகள் கார் நிற்பதைப் பார்த்து சந்தேகத்தில் சுருங்கின.


குதிரையோடு மீண்டும் காரை நோக்கி அவள் வர, "ஷீட்!" என்று ஸ்டீயரிங்கை ஓங்கிக் குத்தியவன் காரிலிருந்து இறங்கி கார் கதவை கோபமாக காலால் உதைத்தான்.


"என்ன அதிகாரி, தங்களின் வாகனத்திற்கு என்னவாகி விட்டது? அய்யோ பாவம்! எங்களின் மாட்டு வண்டி இல்லை குதிரைகளின் மீது சவாரி செய்வது போல வருமா?" என்று கேலியாகக் கேட்டு அவள் சிரிக்க, மூக்கு விடைக்க அவளை முறைத்துப் பார்த்தான் லியோ.


"அதுக்கு என்னை இப்போ என்ன பண்ண சொல்ற, உன் கூட உன் குதிரையில சவாரி பண்ண சொல்றியா?" என்று அவன் கடுப்பாகக் கேட்க, "அதற்கென்ன, தாராளமாக சவாரி செய்யலாமே!" என்றவளின் இதழ்கள் குறும்பாக புன்னகைத்தன.


லியோவோ அவள் சொன்னதைக் கேட்டு ஒருகணம் அதிர்ந்து விழித்தான். பின் தன் முகபாவனையை மாற்றி தலையை சரித்து அவளைப் பார்த்தவாறு, "உனக்கு பிரச்சனை எதுவும் இல்லன்னா எனக்கு சம்மதம்தான்" என்று சொல்ல, வேகமாக இல்லை எனும் விதமாக தலையசைத்தாள் யாழ்மொழி.


அவனும் அவளை நோக்கி வந்து குதிரையில் ஏறிக்கொள்ள, இருவரின் உடல்களும் தாராளமாக உரசிக்கொண்டது. 


காற்றிலாடும் அவளின் கூந்தல் அவனின் முகத்தை வருட, யாழ்மொழிக்கு பெயரறியாத உணர்வுகள் எல்லாம் உள்ளுக்குள் கிளற ஆரம்பித்தன. ஒருவித கூச்சத்தில் நெளிந்தவளின் முகம் செந்தாமரையாய் வெட்கத்தில் சிவந்திருக்க, லியோவிற்கும் கிட்டத்தட்ட அதே நிலைதான்.


குதிரையும் மெல்ல நகர ஆரம்பிக்க, "இப்படி ஒரு பொண்ணு கூட ஹோர்ஸ் ரைடிங் ஐ மீன் குதிரை சவாரி பண்றது மொதல் தடவை, என் கூட இருக்குற மத்த ஆஃபீசர்ஸ்க்கு இது தெரியவே கூடாது, என் மானமே போயிரும். என்ட், நான் ஒன்னும் ஆசைப்பட்டு இப்படி உன் கூட வரல. ஊரை சுத்தி காட்டுறேன்னு சொன்ன அதனாலதான்..." என்று அப்போதும் வீராப்பாக பேசிக்கொண்டிருந்தான் லியோ.


அவனைத் திரும்பிப் பார்த்து அவள் புன்னகைக்க, சிறு இடைவெளியில் தெரியும் அவளின் மை தீட்டிய மீன் விழிகளின் அழகில் சொக்கித்தான் போனான் ஆடவன். 


ஏனெற்று தெரியாத தடுமாற்றத்தோடு அவன் பார்வையைத் திருப்பிக்கொள்ள, "தாங்கள் எம் மொழியை நன்றாக பேசுகிறீர்கள், மொழிகளை கற்பதில் அத்தனை ஆர்வமோ?" என்று கேட்டாள் யாழ்மொழி.


"ம்ம்..." என்று எங்கோ பார்த்தபடி அவன் சொல்ல, "அப்படியானால் என்னைப் பற்றியும் தெரிந்துக்கொள்ளலாமே. நானும் ஒரு மொழிதான், யாழ்மொழி" என்ற அவளின் வார்த்தைகளில் அர்த்தம் பொதிந்திருந்தது. 


சட்டென அவளைத் திரும்பிப் பார்த்தவனுக்கு அவள் விழிகளில் தெரியும் குறும்பில் சிரிப்பு வர, போலியாக அவளை முறைத்தவாறு, "எங்க போறோம்?" என்று ஒரு கேள்வியை கேட்டு வைத்தான்.


உடனே குதிரையை நிறுத்தியவள், "அதானே! நாம் எங்கு செல்கிறோம். சிறு வயதிலிருந்து அரண்மனைக்குள்ளேயே இருந்து விட்டேன். அவ்வளவாக வழிகள் எதுவும் தெரியாது" என்று பாவம் போல் சொல்ல, "என்ன, நீதானே ஊரை சுத்தி காட்டுறேன்னு கூப்பிட்ட. இப்போ தெரியாதுன்னா என்ன அர்த்தம்?" என்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கக் கத்தினான் லியோ.


"அது... நான்... ஹிஹிஹி..." என்று என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் அசடுவழிய, "உன்னை.." என்று அவன் பற்களைக் கடித்துக்கொள்ள, சரியாக காலுக்கு குறுக்கே ஓடிய பூனைக்கு பயந்து தன் இரு கால்களைத் தூக்கி கனைக்க ஆரம்பித்தது குதிரை.


"அதிகாரி, ஜாக்கிரதை!" என்று யாழ் கத்த, அவனோ பிடிமானத்திற்கு பின்னாலிருந்து அவளை அணைத்துக்கொண்டான்.


குதிரை நிதானத்திற்கு வந்தும் அவனின் ஸ்பரிசத்திலும் நெருக்கத்திலும் யாழ்மொழியால் நிதானத்திற்கு வரவே முடியவில்லை. 


அவளிடையை வளைத்து அவன் அணைத்திருந்த விதத்தில் அவளுக்கு பயத்தில் வேகமாக மூச்சு வாங்க, "ஊஃப்ப்..." என்று நிம்மதி பெருமூச்சு விட்டவாறு அவளை கவனித்தவனுக்கு ஆரம்பத்தில் எதுவுமே புரியவில்லை.


சில கணங்களில் நிதர்சனம் புரிய, உடனே அவளிடையைப் பற்றியிருந்த கரத்தை அவன் விலக்க, மெல்ல அவனை நோக்கித் திரும்பிப் பார்த்தாள் யாழ்.


இருவரின் முகங்களும் அருகருகே இருக்க, இருவரின் இதழ்களுக்கும் நூலிடைவெளிதான்.  


"ஐ கான்ட் கன்ட்ரோல் மை செல்ஃப்" என்று உடல் சூடேற சொன்னவனின் மூச்சுக்காற்று அவளுடைய நெற்றியில் பட்டுத் தெறிக்க, "அப்படியென்றால் என்ன?" என்று அடுத்து யாழ் கேட்ட கேள்வியில் அவனின் மொத்த உடல் சூடும் தணிந்துவிட்டது.


தலையை அழுந்தக் கோதி உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியவன், "அது... ஒன்னுஇல்ல" என்று விட்டு எதேர்ச்சையாகத் திரும்ப, அவனுடைய விழிகளில் பட்டது அந்த அழகிய காட்சி.


"அந்த இடத்துக்கு போ யாழ்" என்று அவன் சொன்னதும், யாழ்மொழியின் பார்வையும் அந்த திசைக்குத் திரும்ப, குதிரையின் கால்கள் அந்த திசையை நோக்கி நகர்ந்தன.


***********

என்னோட மற்ற கதைகளை படிக்க 👇 (kobo app)

India link >>

https://www.kobo.com/in/en/search?query=sheha+zaki&ac=1&acp=sheha+zaki&ac.author=sheha+zaki&sort=Temperature&fclanguages=ta


Usa link >>>

https://www.kobo.com/ww/en/search?query=sheha+zaki&ac=1&acp=sheha+zaki&ac.author=sheha+zaki&sort=Temperature&fclanguages=ta


'காலமெல்லாம் உன்னைத் தேடி' என்னோட டிரெக்ட் புக் இப்போ அமேசன் கிண்டல்ல yazhini mithra அப்படிங்குறா Available ஆ இருக்கு.. மறக்காம ரீட் பண்ணிக்கோங்க.. >>>

India link 👇

https://www.amazon.in/dp/B0FLYRBNZG


Usa link 👇

https://www.amazon.com/dp/B0FLYRBNZG


என்ட், மையவிழிப் பார்வையிலே நாவலும் இப்போ Agni tamil novels அப்படிங்குற பேருல Available ஆ இருக்கு... >>>

INDIA link👇

https://www.amazon.in/dp/B0FL2S9LYC


USA link 👇

https://www.amazon.com/dp/B0FL2S9LYC





Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚