விழிகள் 12
யாழ்மொழி நடந்தது அத்தனையையும் சொல்லி முடிக்க, ராதாவோ அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டாள்.
"என்ன சொல்கிறாய் யாழ், ஆங்கிலேய அதிகாரிகள் உன்னை கடத்தினார்களா.. அய்யோ! கேட்கும் போதே என் மனம் பதறுகிறது. அந்த நிலைமையில் உன் மனநிலை எப்படி இருந்திருக்குமென்று யோசிக்கும் போதே என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த கடவுள்தான் உன்னை காப்பாற்றி இருக்கிறார்" என்று ராதா தலைக்கு மேல் கையெடுத்துக் கும்பிட, யாழ்மொழிக்கு லியோவின் ஞாபகம்தான் வந்தது.
"ஆம் ராதா, என் உயிருக்கும் மேலான கற்பை பாதுகாத்தவர் கடவுள்தானே ராதா! ஆனால், இளவரசி கதைகளில் வரும் ராஜகுமாரனைப் போல வருவார் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை" என்று அவள் உணர்ச்சி பூர்வமாக சொல்ல, ராதாவோ தோழியை குறும்புப் புன்னகையோடு உற்றுப் பார்த்தாள்.
"ராஜகுமாரனா, இல்லை உன் ராஜகுமாரன் என்று சொல்கிறாயா?" என்று அவள் அர்த்தப் புன்னகைப் புரிந்தவாறுக் கேட்க, அவளை அதிர்ச்சியாகப் பார்த்த யாழ்மொழிக்கு முகம் குப்பென்று சிவந்தது.
"அது... அது நான் அப்படி சொல்லவே இல்லையே! என்னை காப்பாற்றினார் அவ்வளவுதான், எங்களுக்கு இடையில் வேறெதுவும் இல்லை" என்று அவள் பதற்றமாக சொல்ல, "இப்போது நான் எதுவுமே சொல்லவில்லையே யாழ், ஆமாம்... ஏன் உன் முகம் இப்படி சிவந்திருக்கிறது? இருந்தாலும் அவர் ஒரு ஆங்கிலேயன், காதல் எனும் வலையில் விழுந்துவிடாதே! ஜாக்கிரதை" என்ற தோழியை முறைத்துப் பார்த்தாள் யாழ்.
"நீயாக எதையும் கற்பனை செய்துக்கொள்ளாதே! போய் உறங்கு, நீண்ட நேரம் விழித்திருந்தால் இப்படிதான் சிந்திக்கத் தோன்றும்" என்று போலி முறைப்போடு சொல்லிவிட்டு தன் படுக்கையில் விழுந்த யாழ்மொழியின் நினைவுகள் முழுக்க லியோவின் முகம்தான் விம்பங்களாக வந்து சென்றன.
"என் ராஜகுமாரனா!" என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்டவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்திருக்க, அன்றைய இரவு அவளுக்கு தூங்கா இரவாகவே கழிந்தது.
அன்றைய நாள் கழிந்து அடுத்த நாளும் விடிந்தது.
இந்திரசேனாவோ தோட்டத்தில் அமர்ந்து புத்தகமொன்றை படித்துக்கொண்டிருக்க, அவளுக்கு பக்கத்தில் பூக்களை வைத்து மாலை செய்துக்கொண்டிருந்த யாழ்மொழியோ ஏதோ சொல்ல வருவதும் பின் தயங்குவதுமாக தடுமாறிக்கொண்டிருந்தாள்.
விழிகளை மட்டும் உயர்த்தி தோழியைப் பார்த்த இந்திரா, "ஏதோ சொல்ல முயல்கிறாய், ஆனால் என்னவென்றுதான் தெரியவில்லை" என்று கூரிய பார்வையோடு சொல்ல, "அது... அதெல்லாம் ஒன்றும் இல்லை இளவரசி. வழக்கமாக என்னை வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு சந்தைக்கு செல்வீர்கள், ஆனால் இப்போதெல்லாம் வெளியில் செல்வதையே வெகுவாக குறைத்து விட்டீர்களே, என்ன திடீர் மாற்றம்?" என்றாள் மற்றவள்.
அவளின் கேள்வியில் விரக்தியாகப் புன்னகைத்தவள், "என்னால் வீராவுக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது என்று நினைக்கிறேன் யாழ். ஏனென்று தெரியவில்லை, பயமாக இருக்கிறது. தந்தைக்கு தெரிந்தால் அவனை ஏதாவது..." என்று அதற்குமேல் பேச முடியாமல் வார்த்தைகளை நிறுத்தினாள்.
அவளையும் மீறி விழிகள் கலங்க, அழுகை தொண்டையை அடைத்தது.
"போராடினால்தானே காதல் கைக்கூடும், தாங்கள் விருப்பப்பட்டவரோடு இணைய முடியும் இளவரசி. இப்போதே பயந்தால் எப்படி? தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையென்றால் யாருக்கும் தெரியாமல் வெளியில் செல்லலாம். என்ன சொல்கிறீர்கள்?" என்று அவள் கேட்டு இரு புருவங்களை ஏற்றி இறக்க, அவளை ஆச்சரியமாகப் பார்த்தாள் இந்திரா.
வேகமாக விழிகளைத் துடைத்தவாறு, "யாழ், நிஜமாகவே இது நீதானா? நானே அழைத்தாலும் வர முடியாதென்று அத்தனை அலுச்சாட்டியம் செய்வாய், ஆனால் இப்போது நீயாக அழைக்கிறாய். என்ன காரணம்?" என்று ஆச்சரியம் குறையாத குரலில் அவள் கேட்க, "அது... நான்... சந்தைக்கு..." என்று என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறினாள் மற்றவள்.
இந்திராவோ விழிகளை சுருக்கி அவளை புரியாமல் பார்த்துக்கொண்டிருக்க, "அது... ஆங் தங்களின் காதலுக்காகத்தான் இளவரசி. என்னை விட்டால் தங்களுக்கு வேறு யார் இருக்கிறார்கள்? நான்தானே அனைத்துமாக இருந்து தங்களின் மனதைக் கவர்ந்தவரோடு சேர்த்து வைக்க வேண்டும்" என்று விழிகளை உருட்டி கைகளை அசைத்து அவள் பேசிய விதத்தில் மற்றவளுக்கு பக்கென்று சிரிப்பு வந்துவிட்டது.
"ஏதோ சொல்கிறாய், நம்புகிறேன் உன்னை" என்று சிரித்தவாறு சொன்ன இந்திரா, "வா வா, விரைவாக செல்லலாம்" என்று அழைத்துக்கொண்டு செல்ல, யாழ்மொழிக்கு லியோவைக் காண மனம் துடித்தது.
இந்திராவை விடவும் ஆர்வமாக தயாராகியவள் வழக்கத்திற்கு மாறாக கண்ணாடியில் பல தடவை தன்னை பார்ப்பதும் அலங்கரிப்பதுமாக இருக்க, மற்ற பணிப்பெண்களோ இதை கவனிக்காமல் இல்லை.
தங்களுக்குள் அவர்கள் கிசுகிசுத்துக்கொள்ள, அதைக் கவனித்தவளோ, "பொறாமை!" என்று உதட்டை சுழித்தவாறு சொல்லிவிட்டு இளவரசியைத் தேடிச் சென்றாள்.
இந்திராவும் மாற்றுடையில் தயாராக இருக்க, அடுத்த பத்து நிமிடங்களில் அரண்மனையிலிருந்து வெளியேறிய இரு பெண்களும் சந்தையை நோக்கி நடந்துச் செல்ல, யாழ்மொழியின் விழிகளோ அலைப் பாய்ந்துக்கொண்டே இருந்தன.
அவளுடைய விழிகள் சுற்றி முற்றி எதையோ தேடிக்கொண்டே வர, சந்தைக்குள் நுழைந்ததுமே தன் நண்பர்களோடு சிரித்துப் பேசிக்கொண்டிருந்த வீராவை கவனித்ததும் இந்திராவின் இதழ்கள் மெல்ல புன்னகைத்தன.
"வீரா..." என்று அவளிதழ்கள் மெல்ல முணுமுணுக்க, மன உந்துதலில் அவளிருக்கும் திசைக்கு யோசனையோடு திரும்பிப் பார்த்தான் வீரா.
தன்னவளைப் பார்த்ததுமே அவனுடைய விழிகள் ஆச்சரியத்தில் விரிய, கால்கள் தானாக நகர்ந்து அவளை நோக்கி வந்தன.
அப்போதுதான் சுற்றியிருக்கும் மக்கள் கூட்டத்தை உணர்ந்தவன், சட்டென நின்று விழிகளால் ஒரு திசையை காண்பித்து வருமாறு சொல்லிவிட்டு வேகமாக செல்ல, "யாழ், இங்கேயே காத்திரு, விரைவில் வந்துவிடுவேன்" என்றுவிட்டு இந்திரா அவன் காட்டிய திசைக்கு ஓடினாள்.
"எங்கு சென்றான், இந்த பக்கமாகத்தானே வரச் சொன்னான்! இப்போது... இங்கு வெறும் குடிசைகளாக இருக்கிறது. அவனை எங்கு சென்று நான் தேடுவது?" என்று நெற்றியை நீவி விட்டுக்கொண்டவாறு அவள் சுற்றிமுற்றி தன்னவனைத் தேட, திடீரென குடிசைக்குள்ளிருந்து ஒரு வலிய கரம் அவளைப் பிடித்து குடிசைக்குள் இழுத்தெடுத்தது.
இந்திரசேனாவோ பயத்தில் உறைந்துப் போய் சிலையாகி விட, அதேநேரம் யாழ்மொழியோ சந்தையிலிருந்து வெளியே வந்து லியோவைதான் தேட ஆரம்பித்தாள்.
'யாழ், உன் போக்கே சரியில்லை. போயும் போயும் அந்த ஆங்கிலேய அதிகாரியை போய் தேடிக்கொண்டிருக்கிறாய். ராதா சொல்வது போல் இது நல்லதிற்கில்லைதான்' என்று மூளை எச்சரிக்க, 'அது.. ஆங் அவர் என்னை காப்பாற்றினார் அல்லவா! அதற்காகத்தான் வேறெதுவும் இல்லை' என்று சமாளிக்க முயன்றது மனம்.
ஆனால், தான் என்ன உணர்கிறோம் என யாழ்மொழி அறியாமல் இல்லை. அதன் விளைவுதான் அவளாகவே லியோவைத் தேடி சந்தைக்கு வந்தது.
இடுப்பில் கைக்குற்றி தேடியவளின் மனம், அவன் இல்லை என்று அறிந்ததுமே வெறுமையாக உணர, சோர்ந்த முகத்தோடு திரும்பியவளின் காதில் லியோவின் குரல் கேட்டது.
"ஜேம்ஸ், ஸ்டார்ட் த கார், வீ ஹேவ் டூ கோ அவர் பேளஸ் சூன்" என்று லியோ சொல்லிக்கொண்டே காருக்கு அருகே செல்ல, உடனே சத்தம் கேட்ட திசைக்கு திரும்பிப் பார்த்த யாழ்மொழியோ வேகமாக அவனை நோக்கி ஓடினாள்.
ஜேம்ஸ் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்ததும் லியோ கார் கதவைத் திறக்கப் போக, வேகமாக வந்து அந்த கதவை மூடிவிட்டு மூச்சு வாங்க நின்றிருந்தாள் பெண்ணவள்.
"நீயா..." என்று சிறு அதிர்ச்சியோடு லியோ அவளைப் பார்க்க, "தங்க.. தங்களை சந்திக்கதான் ஓடி வந்தேன். இத்தனை நேரம் இங்குதான் இருந்தீர்களா, இது தெரியாமல் நான் உங்களை..." என்று பேசிக்கொண்டே சென்றவளை குறுக்கிட்டான் ஆடவன்.
"ஹேய் வெயிட்! வாட்... நீ என்னை எதுக்காக பார்க்கணும்? ஆமா... இப்போ உனக்கு என்ன வேணும்?" என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்திய வண்ணம் அவன் கேட்க, அசடுவழிந்தவாறு திருதிருவென விழித்தவளுக்கே அதற்கான பதில் தெரியவில்லை.
"முன்பெல்லாம் தங்களை தவறாக எண்ணியிருந்தேன். ஆனால் என்னை நீங்கள் காப்பாற்றியதிலிருந்து தங்களை பற்றிய என் எண்ணமே மாறி விட்டது" என்று புன்னகையோடு யாழ் சொல்லிக்கொண்டே போக, "தெரியாம உன்னை காப்பாத்திட்டேன், இதுக்கப்பறம் இந்த மாதிரியான நல்ல காரியம்லாம் பண்ண மாட்டேன். என் முன்னாடி இப்படி இழிச்சிட்டு நிக்காம போயிரு. இட்ஸ் இர்ரிடேட்டிங்" என்று பற்களைக் கடித்தான் லியோ.
அவளோ பாவமாக முகத்தை வைத்துக்கொள்ள, அவன் பாட்டிற்கு காரில் ஏறி கதவை அடித்துச் சாத்தினான்.
உடனே ஏதோ ஒன்று ஞாபகம் வந்தவளாக, "பொறுங்கள் அதிகாரி, தாங்கள் உதவி செய்ததற்கு நான் ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டுமல்லவா! கொடுப்பதற்கு என்னிடக் பொற்காசுகளோ விலையுயர்ந்த பொருட்களோ கிடையாது. ஆனால், நான் வேண்டுமானால் உங்களுக்கு ஊரை சுற்றி காண்பிக்கட்டுமா?" என்று விழிகள் மின்ன கேட்க, அவளை விழிகளை கூர்மையாக்கிப் பார்த்தான் அவன்.
யாழ்மொழிக்கு அவனின் பூனை விழிகளைப் பார்க்கப் பார்க்க திகட்டவில்லை. தன்னை மீறி அவள் அவனை ரசிக்க ஆரம்பிக்க, அவளின் பார்வையிலிருந்த ஏதோ ஒன்று லியோவின் மனதை சற்று அசைத்துப் பார்த்தது.
உடனே அவளின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் அவன் முகத்தை திருப்பிக்கொள்ள, இருவரையும் மாறி மாறி புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான் ஜேம்ஸ்.
"ஜேம்ஸ், காரை எடு!" என்று அவன் கத்தியதும், உடனே ஜேம்ஸ்ஸும் காரை உயிர்ப்பித்து செல்ல ஆரம்பிக்க, பதறிவிட்டாள் யாழ்மொழி.
"அதிகாரி நாளை இதே இடத்தில் உங்களுக்காக காத்திருப்பேன், மறுக்காமல் வந்து விடுங்கள்" என்று அவள் சத்தமாகக் கத்த, கார் ஜன்னல் வழியே அவளை எட்டிப் பார்த்த லியோ அவளை முறைத்து விட்டு திரும்பிக்கொண்டான்.
"இடியட்!" என்று அவன் பற்களைக் கடிக்க, ஜேம்ஸ்ஸிற்கு யாழ்மொழியின் புன்னகையும் லியோவின் விழிகளில் தெரிந்த பதட்டமும் எதையோ ஒன்றை உணர்த்துவது போலிருந்தது.
இங்கு இவ்வாறு இருக்க, திடீரென தன் கரத்தைப் பற்றி இழுத்ததில் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற இந்திரசேனாவுக்கு தன்னை சுதாகரிக்கவே சில நிமிடங்கள் தேவைப்பட்டன.
"வீரா, என்ன விளையாட்டு இது? என் உயிரே போய்விட்டது" என்று பதற்றமாக சொன்னவள் அப்போதுதான் அந்த சிறிய குடிசையை சுற்றி முற்றி பார்த்துவிட்டு, "கடவுளே, யாராவது நம்மை இந்த நிலையில் பார்த்தால் அவ்வளவுதான், முதலில் இங்கேயிருந்து வெளியில் செல்லலாம்" என்று அவனை விட்டு விலகப் போக, ஆடவன் விட்டால்தானே!
அவளிடையை வளைத்து தன்னோடு நெருக்கிக்கொண்டவன், "பயப்படாத இந்திரா! யாரும் வர மாட்டாங்க, ஆமா... கொஞ்சநாளா என்னை பத்தி யோசிக்காத இளவரசி இப்போ என்ன திடீர்னு இந்த சாதாரண வியாபாரிய பார்க்க வந்திருக்கீங்க? இப்போதான் என் நியாபகமே வந்துச்சா?" என்று பாதி வலி பாதி கோபம் என கலந்துக் கேட்க, பெண்ணவளின் முகமே அவனுடைய வார்த்தைகளில் இருண்டுவிட்டது.
"ஏன் இப்படி வார்த்தைகளால் என்னை காயப்படுத்துகிறாய்? என் நிலைமையில் இருந்திருந்தால் உனக்கு புரிந்திருக்கும்" என்று அவள் முகத்தைத் திருப்பிக்கொள்ள, அவள் நாடியைப் பிடித்து தன் முகம் நோக்கித் திருப்பினான் வீரா.
"உன்னை புரிஞ்சுக்காம இல்லை இந்திரா, ஆனா எத்தனை நாளைக்கு இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம்னு தெரியல. நான் ஒன்னு மட்டும் கேக்குறேன் சொல்லு, ஒருவேள அரசர் என்னை வேணாம்னு சொல்லிட்டா நீ என்ன பண்ணுவ?" என்று அவன் தன் சந்தேகத்தைக் கேட்க, "என்னால் உன்னைத் தவிர வேறு எவரையும் மணக்க இயலாது வீரா, எத்தனை இளவரசர்கள் வந்தாலும் நான் உன்னுடையவள்" என்றவளின் வார்த்தைகளில் அத்தனை உறுதி.
"ஆனா... அரசரா தன்னோட இளவரசிக்கு என்னை மாதிரி ஒருத்தன கட்டிக்கொடுக்க அவர் விரும்ப மாட்டாரு. ஒருவேள உண்மை தெரிஞ்சா என்னை கொலை கூட பண்ணலாம்" என்று வலி நிறைந்த பார்வையோடு அவன் சொல்ல, அவனை அதிர்ந்துப் பார்த்தவளின் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது.
"நாம இணைவோமா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை. இந்த ஜென்மத்தில் இளவரசி இந்திரசேனா சாதாரண சந்தை வியாபாரியான வீராவிடம் மனதை பறிகொடுத்து விட்டாள். அவ்வளவுதான்" என்று இந்திரா அழுத்தமாக சொல்ல, அவளை விழிகளில் காதல் மிதக்கப் பார்த்தவன் அடுத்தகணம் அவளிதழை கவ்வியிருந்தான்.
அவளும் பிடிமானத்திற்காக அவனின் பின்னந்தலை முடியைப் பற்றி வருட ஆரம்பிக்க, நடப்பை மறந்து அவளுக்குள் மூழ்கிக்கொண்டே சென்றவனின் கரங்கள் மெல்ல அவள் மேனியில் எல்லையை மீறத் தொடங்கியது.
புதிய சுகத்தில் உண்டான களிப்பில் விழிகளை மூடி மேலும் அவனோடு அவள் நெருங்கிக்கொள்ள, அவளிதழலிலிருந்து மெல்ல அவள் கழுத்தில் முகத்தைப் புதைத்தான் வீரா.
அவனுடைய இதழ் தேகத்தில் பட அவளோ கூச்சத்தில் நெளிய, இருவருக்கும் உடல் சூடாக உணர்ச்சிகள் கிளர்ந்தெழுந்தன.
உணர்ச்சிகள் தாறுமாறாக சுரக்க, தங்களை மறந்த நிலையில் பிணைந்திருந்தவர்கள் திடீரென கேட்ட யாழ்மொழியின் குரலில் பதறிக்கொண்டு விலகி நின்றனர்.
இருவரின் இதயமும் படுவேகமாகத் துடிக்க, மூச்சு வாங்கியவாறு நின்றிருந்தவர்களை எச்சிலை விழுங்கியவாறு பார்த்துக்கொண்டிருந்தாள் யாழ்மொழி.
"யாழ்..." என்ற இந்திராவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்ன, "எவரிடமும் நான் பார்த்ததை சொல்ல மாட்டேன்" என்றவளோ முகத்தை மூடிக்கொண்டு வெளியே ஓடியேவிட்டாள்.
"அய்யோ! பார்த்துட்டாளே, மானமே போச்சு" என்று வீரா தலையை சொரிந்தவாறு சிறு தயக்கத்தோடு தன்னவளைப் பார்க்க, முகம் சிவக்க நின்றிருந்தவளை அவனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
மீண்டும் அவனுடைய பார்வை மாற அவளை நோக்கி ஒரு அடி வைத்ததும், இரண்டடி பின்னால் நகர்ந்தவள், "கடவுளே போதும், அவள் பார்த்தது போதாதென்று ஊரே பார்க்க வேண்டுமா?" என்று ஆடையை சரி செய்தவாறு முறைப்போடுக் கேட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டாள்.
வீராவோ பின்னந்தலையில் அடித்து சிரித்துக்கொள்ள, அன்றிரவு, விட்டத்தை வெறித்தவாறு உறங்கிக்கொண்டிருந்த யாழ்மொழிக்கு தன்னவன் வருவானா இல்லையா என்ற கேள்விதான் மூளைக்குள் சுழன்றுக்கொண்டிருந்தது.
அவள் பக்கத்திலிருந்த ராதாவோ, "என்ன யாழ், தூங்காமல் எதைப் பற்றி இத்தனை தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்க, "அந்த வெள்ளையனைப் பற்றிதான் ராதா, நாளை ஊரை சுற்றிக் காண்பிக்க நான் சந்தைக்கு அருகே வரச் சொன்னேன், வருவாரா இல்லையா என்று தெரியவில்லை" என்று சாதாரணமாக சொல்லிவிட்டு திரும்பிப் படுத்துக்கொண்டாள் மற்றவள்.
ஆனால், ராதாவுக்குதான் தோழி சொன்னதைக் கேட்டு இதயமே நின்றுவிட்டது.
***********
என்னோட மற்ற கதைகளை படிக்க 👇 (kobo app)
India link >>
Usa link >>>
'காலமெல்லாம் உன்னைத் தேடி' என்னோட டிரெக்ட் புக் இப்போ அமேசன் கிண்டல்ல yazhini mithra அப்படிங்குறா Available ஆ இருக்கு.. மறக்காம ரீட் பண்ணிக்கோங்க.. >>>
India link 👇
https://www.amazon.in/dp/B0FLYRBNZG
Usa link 👇
https://www.amazon.com/dp/B0FLYRBNZG
என்ட், மையவிழிப் பார்வையிலே நாவலும் இப்போ Agni tamil novels அப்படிங்குற பேருல Available ஆ இருக்கு... >>>
INDIA link👇
https://www.amazon.in/dp/B0FL2S9LYC
USA link 👇
https://www.amazon.com/dp/B0FL2S9LYC
Comments
Post a Comment