விழிகள் 10




வீராவோடு பேசிவிட்டு யாழ்மொழி சந்தையிலிருந்து வெளியேறப் போக, சில பேரின் கத்தல்களைக் கேட்டு வேகமாகத் திரும்பிப் பார்த்தாள்.


அங்கு சில ஆங்கிலேய அதிகாரிகள் வலுக்கட்டாயமாக சில பேரை இழுத்துக்கொண்டு போக, அதை புரியாமல் பார்த்துக்கொண்டு நின்றிருந்தவளுக்கு ஒரு பக்கம் கோபம் கூட எகிறியது.


"எங்க நிலமை எப்போ மாறுமோ தெரியலம்மா, அந்த வெள்ளைக்காரனுங்களோட அராஜகம் அதிகரிச்சுட்டே போகுது. அவனுங்களோட கட்டுமான வேலைக்காக எங்க மக்கள துன்புறுத்தி காசு கூட கொடுக்காம வேலை வாங்குறாங்க. இதையெல்லாம் அரசராலேயே எதிர்த்து கேள்வி கேக்க முடியாம இருக்கும் போது சாதாரண மக்கள் எங்களால என்னதான் பண்ண முடியும்?" என்று ஒரு பெண்மணி பக்கத்திலிருந்து சொல்ல, அவரை பரிதாபமாகப் பார்த்தாள் யாழ்.


அந்த ஆங்கிலேயர்களோ வர மறுத்தவர்களை மிரட்டி அடித்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல, அதைப் பார்த்தவாறு அங்கிருந்து நகர்ந்தவள் அதே யோசனையோடு வீதியோரமாக நடந்துச் சென்றாள்.


திடீரென அவள் பின்னால், "ஹ்ர்ம் ஹ்ர்ம்..." என்ற செருமல் சத்தம் கேட்க, பட்டென்று திரும்பிப் பார்த்தவளின் விழிகள் பிதுங்கி விடுமளவிற்கு விரிந்தன.


அவளெதிரே மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியவாறு லியோ நின்றிருக்க, உடனே அதிர்ச்சியிலிருந்து சாதாரண முகபாவனைக்கு மாறி, "அட தாங்கள் இங்கேயே வந்துவிட்டீர்களா, நல்லது நல்லது" என்றாள் யாழ்மொழி புன்னகையோடு.


அவனோ அவளை உறுத்து விழித்தவன், "ஆமா... யார் அது, ஒருவேள அதுதான் நீ சொன்ன உன்னோட காதலனா?" என்று கேட்க, "என்ன?" என்று புரியாமல் கேட்டாள் அவள்.


"அதான் சந்தையில ஒருத்தன் கூட பேசிக்கிட்டு இருந்தியே, அவன்தான் உன் காதலனா?" என்று லியோ மீண்டும் கேட்க, சில கணங்கள் அவனை விழிகளை சுருக்கி குழப்பமாகப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அப்போதுதான் மூளைக்கு உரைத்தது.


சுதாகரித்த அடுத்தகணம், "இல்லை இல்லை, அவர் என் காதலன் கிடையாது" என்று யாழ்மொழி பதற்றமாகச் சொல்ல, "இல்லையா! நான் கூட அவன்தான் உன் காதலன்னு நினைச்சேன். அப்போ அவன் இல்லன்னா வேற யாரு?" என்று கூரிய பார்வையோடுக் கேட்டான் லியோ.


யாழ்மொழிக்கு என்ன பதில் சொல்லி சமாளிப்பதென்றே தெரியவில்லை. 


"ஹிஹிஹி... அது.. அவரை நீங்கள் சாதாரணமாக பார்த்து விட முடியாது. அவரின் அழகைக் காண இரு கண்கள் போதாது அதிகாரி" என்று வாய்க்கு வந்த பொய்யை அவள் சொல்லி சமாளிக்கப் பார்க்க, "ரெண்டு கண்ணே போதாதா! அப்போ... அவ்வளவு பெரிய உருவமா என்ன?" என்று கைகளை விரித்து அவன் செய்து காட்டிய விதத்தில் அவனை முறைத்துப் பார்த்தாள் யாழ்மொழி.


"தங்களின் பேச்சு எல்லை மீறி செல்கிறது, என் காதலனைப் பற்றிய பேச்சை விடுங்கள். என்னை எதற்காக வரச் சொன்னீர்கள்? முதலில் அதை கூறுங்கள்" என்று அவள் கடுப்பாகக் கேட்க, "என் பின்னாலயே வா..." என்று சொன்னவாறு பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு முன்னே நடக்க ஆரம்பித்தான் லியோ.


"அரண்மனையிலிருந்து வெளியில் வர நான் எத்தனை போராட்டம் செய்ய வேண்டி இருக்கிறது என்று தங்களுக்கு தெரியாது. அதையெல்லாம் தங்களுக்கு சொல்லி புரிய வைக்கவும் என்னால் முடியாது. என் அவல நிலையை யார்தான் அறிவார்? சாதாரண பணிப்பெண் என்னை, இப்படி துன்புறுத்துவது நியாயமா?" என்று புலம்பிக்கொண்டே அவள் நடந்து வர, ஆடவனுக்கு அதைக் கேக்கவே எரிச்சலாக இருந்தது.


"ஷட் அப்! ஒரு வார்த்தை பேசினேன்னா நான் உன்னை ஷூட் பண்ணிருவேன்" என்று லியோ கத்தியதும், பயத்திலேயே அவள் வாயை இறுக மூடிக்கொள்ள, இருவரும் அவனின் காருக்கு அருகே வந்து நின்றனர்.


லியோவோ காருக்குள்ளிருந்து பெரிய அழுக்கு துணிகள் கொண்ட ஒரு மூட்டையை கையிலெடுத்தவன், அவள் கைகளில் திணிக்க, அதை அதிர்ச்சியாகப் பார்த்தாள் யாழ்மொழி.


"என்ன இது?" என்று அதிர்ச்சி குறையாத குரலில் பதற்றமாக அவள் கேட்க, "என்னோட ட்ரெஸ்தான், இதை நல்லா துவைச்சு இன்னும் டூ டேய்ஸ்ல.. ஐ மீன் ரெண்டே நாள்ல கொண்டு வந்து கொடு. கொட் இட்!" என்று கட்டளையாகச் சொன்னான் அவன்.


சில கணங்கள் அவன் சொன்னதை சுதாகரிக்க கூட முடியாமல் சிலை போல் நின்றிருந்தவள், உணர்ந்த மறுகணம் அழாத குறையாக அவனை ஒரு பார்வைப் பார்த்தாள்.


"ஏற்கனவே எனக்கு அரண்மனையில் ஏகப்பட்ட வேலைகள் குவிந்து கிடக்கின்றன. இளவரசியை பாதுகாப்பதிலேயே எனக்கு நேரம் போய்விடும். இதில் இது வேறா, என்னைப் பார்த்தால் பாவமாக இல்லையா? இல்லை, அத்தனை பெரிய ஆங்கில அரண்மனையில் உடைகளை கழுவுவதற்கு கூட ஆட்கள் இல்லையா?" என்று அவள் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு கேட்க, "அதெல்லாம் ஆளுங்க இருக்காங்க, ஆனா எனக்கு அவங்களோட வேலை பிடிக்கல. நான் சொன்ன மாதிரி நீ எனக்கு துவைச்சு கொடுக்குற" என்றான் அவன் அழுத்தமாக.


யாழ்மொழிக்கு பிபி ஏகத்துக்கும் எகிறியிருந்தது.


"இதற்கெல்லாம் கடவுள் தங்களை தண்டிக்காமல் விட மாட்டார். ஒரு சிறு பெண்ணை போய் இத்தனை கொடுமை செய்ய இந்த ஆங்கிலேய அதிகாரிக்கு எப்படிதான் மனம் வருகிறதோ?" என்று திட்டிக்கொண்டே அவள் முன்னே நடந்துச் செல்ல, "சின்ன பொண்ணு மாதிரியா நீ நடந்துக்குற, பண்றது பூரா திருட்டுத்தனம்" என்று பதிலுக்கு கத்தினான் லியோ.


திரும்பி அவனை மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க முறைத்துப் பார்த்தவள் விறுவிறுவென்று முன்னே நடந்துச் செல்ல, கண்ணிலிருந்து மறையும் பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை இட்டவாறு அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த லியோ காரிலேறி அமர்ந்துக்கொண்டான்.


"ஊஃப்...." என்று அவன் பெருமூச்சு விட்டவாறு ஜேம்ஸை பார்க்க, "கேட்டா எதுவுமே இல்லன்னுதான் சொல்ல போறீங்க. சோ, நான் எதையும் கேக்க மாட்டேன் சார்" என்றுவிட்டு திரும்பிக்கொண்டான் ஜேம்ஸ்.


சரியாக வேலைக்கென மக்களை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு வந்த அதிகாரிகள், "சார், நீங்க சொன்னத பண்ணியாச்சு. நம்ம இடத்துக்கு இவங்கள அழைச்சுட்டு போறோம். நாளைக்கே இந்த கூட்டத்த வச்சு வேலைய ஆரம்பிச்சிரலாம்" என்று சொல்ல, லியோவின் இதழ்களோ ஏளனமாக வளைந்தன.


"கோ அஹெட்..." என்று அதிகாரமாக அவன் சொல்ல, அதேநேரம் அவனைக் கடந்து மின்னல் வேகத்தில் சென்றது வில்லியமின் கார்.


அதை புருவ முடிச்சுகளோடு பார்த்தவன், "ஜேம்ஸ் அந்த கார ஃபாலோவ் பண்ணு" என்று உடனே சொல்ல, ஜேம்ஸ் காரை உயிர்ப்பிக்க அதுவோ ஆரம்பித்த பாடில்லை.


"சார், ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது" என்று அவன் முயற்சித்தவாறு சொல்ல, "ஷீட்! இந்த கார விட அந்த குதிரை வண்டியே பரவாயில்ல" என்றான் லியோ கடுப்பாக.


இவனின் கோபத்தை தாங்காததினாலோ என்னவோ உடனே வண்டி ஆரம்பித்து விட, "தேங்க் காட்! ஸ்டார்ட் ஆகிருச்சு" என்று பெருமூச்சு விட்ட ஜேம்ஸ் உடனே வில்லியமின் கார் சென்ற திசைக்கு வண்டியை பறக்க விட்டான்.


போகும் வழியில் தெருவோரமாக கிடந்த மூட்டையை கவனித்த லியோ, "ஸ்டாப் த கார்!" என்று வேகமாக வண்டியிலிருந்து இறங்கி அந்த மூட்டையினருகே சென்றான்.


அது யாழ்மொழிக்கு லியோ கொடுத்த உடைகள் அடங்கிய மூட்டைதான். தெருவோராமாக அனாதையாக அது கிடக்க, ஏதோ ஒன்று அவனுக்கு புலப்படுவது போலிருந்தது.


"ஜேம்ஸ் நம்ம பேளஸ்க்கு வண்டிய விடு!" என்று சொல்லிக்கொண்டே அவன் காரில் ஏறிய மறுகணம் முழு வேகத்தில் காரை செலுத்தினான் மற்றவன்.


ஆங்கிலேய அரண்மனை வாசலில் காரை நிறுத்தியதுமே அவனின் விழிகள் சுற்றி நோட்டமிட, அங்கு வில்லியமின் கார் வந்ததற்கான அடையாளமே இல்லை.


அதை யோசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தவன் மற்ற அதிகாரிகளின் முன் சென்று நிற்க, இவனைப் பார்த்ததுமே மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றனர் அவர்கள்.


"வெயார் இஸ் வில்லியம்?" என்று அவன் அழுத்தமான குரலில் கேட்க, சில பேரோ தெரியாது என்பது போல் தலையசைத்தார்கள் என்றால், "அவரு ஆஃபீசர் ரொனேல்டோட குவாட்டஸுக்கு போனதா தகவல் வந்துச்சு" என்றான் ஒருவன் மாத்திரம்.


'ஆஃபீசர் ரொனெல்டோட குவாட்டஸா!' என்று தனக்குள்ளேயே கேள்வியைக் கேட்டவாறு சில கணங்கள் அப்படியே நின்றிருந்தவனுக்கு அப்போதுதான் எல்லாமே புரிய, நெற்றி நரம்புகள் புடைத்தெழுந்தன அவனுக்கு.


விழிகள் சிவக்க, கை முஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்தியவன், "ஜேம்ஸ் கெட் டவுன், இதுக்கப்பறம் நான் பார்த்துக்குறேன்" என்று அழுத்தமாக சொல்ல, அவனின் கோபத்தில் சிவந்த முகத்தை அதிர்ச்சியாகப் பார்த்தவாறு காரிலிருந்து இறங்கினான் மற்றவன்.


லியோவோ ஓட்டுனர் சீட்டில் அமர்ந்துக்கொண்டவன் மின்னல் வேகத்தில் காரை செலுத்த, அடுத்த பத்தே நிமிடங்களில் புழுதி பறக்க  ரொலேட்டின் குவாட்டஸின் முன் நின்றது அவனின் கார்.


தடாலடியாக உள்ளே நுழைந்தவனை ஹாலில் அமர்ந்திருந்த வில்லியம் புரியாமல் பார்க்க, லியோவோ அவனை எல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் உள்ளே இருந்த அறையொன்றிற்குள் நுழைந்தான்.


அங்கு கையில் மதுபான குவளையோடு தான் வரைந்திருந்த ஓவியத்தை ரொனேல்ட் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்க, அதைக் கவனித்தவனின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.


அங்கு அந்த ஓவியப் பலகையில் யாழ்மொழியின் உருவம்தான் அத்தனை அழகாக வரையப்பட்டிருக்க, "ஆஃபீசர் ரொனேல்ட்" என்ற லியோவின் குரலில் சட்டெனத் திரும்பிப் பார்த்தார்.


"வெல்கம் லியோ, என்ன திடீர்னு வந்திருக்க. டூ யூ சீ தட், ரொம்ப அழகா இருக்கால்ல லைக் ப்ரின்ஸஸ்! பட் யூ நோ வாட், ஷீ இஸ் ஜஸ்ட் அ செர்வன்ட்" என்று சொல்லி அவர் சிரிக்க, "ஓ..." என்று மட்டும் சொன்னவனின் காதில் சட்டென அந்த சத்தம் கேட்டது.


"என்னை தயவு செய்து விட்டு விடுங்கள், நான் போக வேண்டும்" என்ற யாழின் கத்தல்கள் காதில் விழுந்ததும் உடனே திரும்பிப் பார்த்தான் லியோ.


"இன்னும் இவ கத்துறத விடல்லையா? பார்க்க அழகா இருக்கா ஆனா ரொம்ப அடமன்ட். என்ட் வாட்ஸ் ரோங் வித் யூ லியோ, இஸ் தெயார் எனிதிங் இம்பார்டென்ட்?" என்று ரொனேல்ட் கேட்க, ஒருகணம் யாழ்மொழி அடைக்கப்பட்டிருக்கும் அறை இருக்கும் திசையைப் பார்த்தவன், மேலும் கீழும் இறுகிய முகமாக தலையசைத்தான்.


"யெஸ் சார், இந்த கன்ட்ரீலயிருந்து நாம ரீசன்ட்டா நிறைய பொருட்கள எக்ஸ்பார்ட் பண்ணியிருக்கோம். ஆனா, அரசர் சொன்ன வீதத்த விட நாம எக்ஸ்பார்ட் பண்ணியிருக்குற வீதம் ரொம்ப அதிகமா இருக்கு. இது பத்தி அரசர் வேந்தனுக்கு தெரிஞ்சா நமக்குதான் பிரச்சனை" என்று லியோ வேறு ஏதோ ஒன்றைப் பற்றி பேசி திசைத் திருப்ப, அலட்சியமாக தோளைக் குலுக்கியவாறு அந்த அறையிலிருந்து வெளியேறிவர் வில்லியமுக்கு எதிரே அமர்ந்துக்கொண்டார்.


"தட்ஸ் ஆல் மை ப்ளேன் லியோ, இதை பத்தி முன்னாடியே உன்கிட்ட நான் இன்ஃபார்ம் பண்ணியிருக்கணும். அரசர் சொன்ன அந்த பர்சென்டேஜ் எல்லாம் நமக்கு பத்தாது, அதான் நாமளே எடுத்துக்க வேண்டியதா போச்சு. ஒருவேள அரசருக்கு தெரிஞ்சா வீ ஹேவ் டூ அட்டேக் த பேளஸ். இல்லன்னா, நாம பொழைக்க முடியாதுல்ல" என்று அவர் சொல்வி வில்லியமுக்கும் மதுவை ஊற்றிக் கொடுக்க, "கரெக்டா சொன்னீங்க சார்" என்று அதை வாங்கி  விஷம புன்னகையோடு குடித்தான் மற்றவன்.


"ஐ கான்ட் வெயிட் வில்லியம், கத்தி கத்தி அவளே களைச்சு போய் அடங்கிருவா, அப்போதான் நம்ம வேலைய ஆரம்பிக்கணும்" என்று அவர் சொல்லி ஒற்றைக் கண்ணை சிமிட்ட, வில்லியமுக்கும் அவளை ருசித்துப் பார்க்கும் வெறி அதிகரித்துக்கொண்டே சென்றது.


ஆனால், லியோவுக்கு ஒரு பக்கம் தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் இன்னொரு பக்கம் ஏனென்று தெரியாத ஒரு பதட்டம் அவனை சூழ்ந்துக்கொண்டது.


தினமும் இங்கு ஒரு பெண் சித்திரவதை செய்யப்படுவது அவன் அறியாமலில்லை. ஆனால், இன்று அதே இடத்தில் யாழ்மொழியைப் பார்த்ததும் அவனால் நிலைக்கொள்ள முடியவில்லை.


இந்த உணர்வுக்கான அர்த்தம் அவனுக்கே தெரியவில்லை. கேட்டால் காதல் இல்லை என்பான்!


ரொனெல்டும் வில்லியமும் அனுபவிக்கப் போகும் சுகத்திற்காக இப்போதே மதுவை அருந்தி இன்பத்தில் மூழ்கியிருக்க, "அப்போ நான் கெளம்புறேன் சார்" என்று விட்டு அங்கிருந்து வெளியேறிய லியோ காருக்கே அருகே நின்று சுற்றி முற்றி நோட்டமிட்டான்.


குவாட்டஸின் வாசலில் மூன்று அதிகாரிகள் நின்றுக்கொண்டிருக்க, தனக்குள் ஒரு திட்டத்தை தீட்டியவாறு அவர்களுக்கு அருகே சென்றவன், "நீங்க எல்லாம் வேலையில கவனமாதான் இருக்கீங்களா, உங்கள பார்த்தா நம்ம பிரிட்டிஷுக்கு நேர்மையா இருக்குற மாதிரி தெரியலயே" என்று கோபமாகப் பேச, அந்த அதிகாரிகளோ பதறிவிட்டனர்.


"என்னாச்சு சார், நா.. நாங்க என்ன பண்ணோம்?" என்று அவர்கள் பதற்றமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள, "இப்போ நான் காருக்கு பக்கத்துல வரும் போது யாரோ அந்த பக்கமா ஓடுறத பார்த்தேன், ஆனா நீங்க மூனு பேரும் ஏதோ டூருக்கு வந்த மாதிரி ஜாலியா பேசிக்கிட்டு இருக்கீங்க. மொதல்ல போய் அது யாருன்னு பாருங்க, அவன பிடிச்சிட்டு வரலன்னா ஐ வில் கில் யூ!" என்று அடித்தொண்டையிருந்து கத்தினான்.


உயரதிகாரியான அவனின் பேச்சை மறுக்க முடியாமல் அவர்களும் துப்பாக்கியை தயார் நிலையில் வைத்தவாறு அவன் காட்டிய திசைக்கு ஓட, அடுத்தகணம் மின்னல் வேகத்தில் செயற்பட்டான் லியோ.


அந்த குவாட்டஸின் பின் வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்தவன் அழைத்து வரும் பெண்களை அடைத்து வைக்கும் ரொனேல்டின் அறையை நோக்கி வேகமாகச் செல்ல, அதேநேரம் அந்த அறைக்குள் உதவிக்காக கத்தி கத்தி களைத்துப் போய் தரையில் அமர்ந்திருந்தாள் யாழ்மொழி.


அழுது சிவந்த முகத்தோடு கால்களைக் கட்டிக்கொண்டு எப்படி தப்பிப்பதென்று கூட தெரியாமல் பயத்தோடு அமர்ந்திருந்தவளுக்கு எந்த ராஜகுமாரனாவது தன்னை காப்பாற்றி செல்ல மாட்டானா என்ற ஏக்கம் மேலோங்கி இருந்தது.


'ஒவ்வொரு கதைகளிலும் இளவரசியை காப்பாற்ற ராஜகுமாரன் குதிரையில் வருவான். ஆனால், அனைத்தும் கட்டுக்கதைகளே! என்னை காப்பாற்ற எந்த இளவரசனும் வரப் போவதில்லை, இவர்களின் பசிக்கு இரையாகப் போகிறேன். இப்போது என்னாசெய்வது, கடவுளே' 


என்று மானசீகமாக அவள் தனக்குள் பேசிக்கொள்ள, அவளுடைய உடலோ பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தது.


சரியாக அவளிருக்கும் அறைக் கதவு திறக்கப்பட, திடுக்கிட்டு நிமிர்ந்துப் பார்த்தவளின் விழிகள் கலங்கியிருந்ததாலோ என்னவோ வாசலில் நின்றிருந்த உருவமும் சற்று கலங்கிப் போய் தெரிய, விழிகளைக் கசக்கிவிட்டு மீண்டும் உற்றுப் பார்த்தாள்.


அது சாட்சாத் லியோவேதான்.


அவனைப் பார்த்ததுமே அவளுடைய கோபம் ஏகத்துக்கும் எகிற, வேகமாக எழுந்து வந்தவள் அவனின் சட்டையை கொத்தாகப் பற்றிக்கொள்ள, திகைத்துப் போய்விட்டான் ஆடவன்.


**************

மறக்காம உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க.. 😍😍😍


'காலமெல்லாம் உன்னைத் தேடி' என்னோட டிரெக்ட் புக் இப்போ அமேசன் கிண்டல்ல yazhini mithra அப்படிங்குறா Available ஆ இருக்கு.. மறக்காம ரீட் பண்ணிக்கோங்க.. >>>

India link 👇

https://www.amazon.in/dp/B0FLYRBNZG


Usa link 👇

https://www.amazon.com/dp/B0FLYRBNZG


என்ட், மையவிழிப் பார்வையிலே நாவலும் இப்போ Agni tamil novels அப்படிங்குற பேருல Available ஆ இருக்கு... >>>

INDIA link👇

https://www.amazon.in/dp/B0FL2S9LYC


USA link 👇

https://www.amazon.com/dp/B0FL2S9LYC



Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚