விழிகள் 09




"இத்தனை நாட்கள் வெளியில் இளவரசியோடு வந்திருக்கிறாய், உன் உயிர் தோழியை அழைத்துச் செல்ல உனக்கு தோன்றவே இல்லை. புரிந்துவிட்டது. அனைத்தும் புரிந்துவிட்டது" என்று ராதா தோழியின் இடையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு குத்தலாக சொல்ல, குதிரையை ஓட்டிக்கொண்டிருந்த யாழ்மொழியோ சலிப்பாக விழிகளை உருட்டினாள்.


"அய்யோ ராதா! நான் ஒன்றும் இளவரசியை அழைத்துக்கொண்டு வெளியில் வருவதில்லை, அவர்கள்தான் என்னை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு செல்வார்கள். இதையெல்லாம் உனக்கு சொன்னால் புரியாது" என வெடுக்கென்று சொன்னவள் சந்தையின் முன்னே குதிரையை நிறுத்திவிட்டு இறங்கிக்கொண்டு ராதாவையும் இறக்கிவிட்டாள்.


"சந்தைக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, அரண்மனையிலேயே நம் காலமும் நேரமும் செல்கிறது யாழ்" என்றுக்கொண்டே சந்தைக்குள் நுழைந்த ராதா விழிகள் மின்ன ஒவ்வொன்றையும் பார்த்தவாறு முன்னே செல்ல, யாழ்மொழியும் தோழியோடு நடக்க, சரியாக தூரத்தில் வைத்து யாழ்மொழியைக் கண்டுகொண்டான் அங்கு வரி வசூலிக்க வந்திருந்த வில்லியம்.


யாழ்மொழியைப் பார்த்ததும் அதிர்ந்து விழித்தவன், பின் விஷமப் புன்னகையோடு "வாவ்! பறவை நம்ம வலையில தானா வந்து சிக்குது, டேஸ்ட் பண்ணி பார்க்கணும்னு இப்போவே ஆசையா இருக்கே..."  என்று உள்ளுக்குள் நினைத்தவன் அவளை நோக்கிச் செல்ல, இந்த காமுகனைப் பற்றி அறியாமல் தோழியோடு அங்கு விற்றுக்கொண்டிருந்த பழங்களை பேரம் பேசிக்கொண்டிருந்தாள் பெண்ணவள்.


"என்ன இது, அரண்மனையில் நாங்கள் சாதாரண பணிப்பெண்கள்தான். இளவரசி அல்ல. இந்த மூன்று பழங்களுக்கு இத்தனை காசுகளா? பெண்கள் என்றதால் ஏமாற்றப் பார்க்குறீர்களா?" என்று யாழ்மொழி சொல்ல, "இங்க பாருங்கம்மா, இதுதான் விலை. வாங்குறதுன்னா வாங்குங்க, இல்லன்னா இடத்தை காலி பண்ணுங்க" என்று முடிவாக சொன்னார் அந்த பழ வியாபாரி.


அவரை பாவமாகப் பார்த்தவள், "சரி அப்போது இந்த பழம்..." என்று ஏதோ சொல்ல வர, சட்டென அவளுடைய தோளில் உணர்ந்த தொடுகையில் வெடுக்கென்று திரும்பிப் பார்த்தாள்.


அங்கு நின்றிருந்த வில்லியம்தான் அவளுடைய தோளில் கையை வைத்திருக்க, பயத்தில் வெடவெடத்துப் போய் அவனை விட்டுத் தள்ளி பாய்ந்து விலகி நின்றவள், மூச்சு வாங்கியபடி அவனைப் பார்த்தாள்.


"ஹேய் காம் டவுன், ஏன் என்னை பார்த்து இப்படி பயப்படுற?" என்று அவன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே அவளின் அருகே வர, அவன் பேசுவது புரியாமல் விழித்தவளைப் பார்த்து ஏளனமாக சிரித்தான் வில்லியம்.


"உனக்கு இங்லீஷ் தெரியாதுல்ல, ஓ ஐ அம் சாரி! எனக்கு தமிழ் அவ்வளவா தெரியாது. பட் தட் இஸ் நொட் அ பிக் டீல், எனக்கு தேவையானத நீ பண்ணுறதுக்கு லேங்குவேஜ் தேவையே இல்ல" என்று அரைகுறை தமிழில் பேசிக்கொண்டே அவளை மேலிருந்து கீழ் அவன் ஒரு மாதிரியாகப் பார்க்க, அந்த பார்வையில் கூசிப் போனாள் யாழ்மொழி.


"யார் நீ, உன் பார்வையே சரியில்லை. வா யாழ், நாம் இங்கேயிருந்து சென்று விடலாம்" என்று ராதா அவனைத் தள்ளிக்கொண்டு செல்லப் போக, கோபத்தில் ராதாவின் கன்னத்தில் அறைந்தவன் அவளை தரையில் தள்ளி விட்டான்.


"ராதா..." என்று யாழ்மொழி பயத்தில் கத்திக்கொண்டு தோழியை நோக்கி செல்லப் போக, அவள் கரத்தைப் பற்றியிழுத்தவன் பற்களைக் கடித்தபடி அவளைப் பார்த்தான்.


"உன்னை அழைச்சுட்டு வர சொல்லி சார் ரெனேல்ட் ஆர்டர் போட்டிருக்காரு. எங்க ஆர்டர மீறுற அளவுக்கு உனக்கு தைரியம் இருக்காதுன்னு நினைக்கிறேன்" என்று அவன் ஆங்கிலத்தில் கத்த, சுற்றியிருந்த மக்களோ பயந்துப் போய் அவனை தடுக்கக் கூட முன்வரவில்லை.


"என்னை விடு, தயவு செய்து விடு..." என்று யாழ்மொழி கிட்டத்தட்ட அழுதேவிட, அவளை நெருங்கி மூச்சை இழுத்து வாசம் பிடித்தான் வில்லியம்.


"வாவ்! வாசமே மயக்குது" என்று முணுமுணுத்தவாறு யாழின் கரத்தைப் பற்றி அவன் செல்லப் போக, சட்டென அவனை வழி மறைப்பது போல் வந்து நின்றான் வீரா.


"டேய் வீரா, வேணாம்டா..." என்று அவனின் நண்பன் பாலா கத்த, "சும்மா இருடா, நம்ம வீட்டு பொண்ணுன்னா நாம பார்த்துக்கிட்டு நிப்போமா என்ன..." என்று நண்பனைப் பார்த்து கத்தியவன், "துரை, யாரும் கேக்க மாட்டாங்கன்னு நினைச்சீங்களா, அந்த பொண்ண விடுங்க!" என்று வில்லியமைப் பார்த்து நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சொன்னான்.


"வாட்! வூ ஆர் யூ டூ சே தட்? தள்ளி போ, இல்லன்னா ஷூட் பண்ணிருவேன்" என்று சொல்லி கேலியாக சிரித்த அந்த வெள்ளைக்காரன் வீராவை தள்ளிவிட்டு செல்லப் போக, வில்லியமைப் பிடித்து தள்ளிவிட்டவன் யாழியை தன் பக்கம் இழுத்துக்கொண்டான்.


"டேய் பாலா, கயிற கொண்டு வா!" என்று வீரா கத்த, "ஹவ் டேர் யூ..." என்று முகம் சிவக்க கோபத்தில் கத்திக்கொண்டு எழுந்தவன், பக்கத்திலிருந்த தன் அதிகாரி ஒருவனின் கையிலிருந்த துப்பாக்கியை பிடுங்கி வீராவை சுடப் போக, அவனையும் அவனுடைய ஆட்களையும் பின்னாலிருந்து பிடித்துக்கொண்டனர் வீராவின் ஆட்கள்.


"லீவ் மீ! ஐ சேட் லீவ் மீ... இதுக்கு நீ கண்டிப்பா ரிக்ரெட் பண்ணுவ" என்று வில்லியம் அடித்தொண்டையிலிருந்து கத்த, "யாழ், இங்கயிருந்து போயிரு, இவங்கள நாங்க கவனிச்சிக்கிறோம்" என்றான் வீரா அழுத்தமாக.


"என்.. என்னால் யாருக்கும் சிரமம் தேவையில்லை அண்ணா" என்று அவள் தழுதழுத்த குரலில் சொல்ல, "அண்ணான்னு சொல்லிட்ட, அதுக்கு மேல எதையும் பேசாத! இதுக்கெல்லாம் கைமாறா நீ நிறையவே போராட வேண்டியிருக்கு" என்று சொல்லி அவன் ஒற்றைக் கண்ணை சிமிட்ட, அதற்கான அர்த்தத்தை புரிந்துக்கொண்டவளோ அதிர்ந்து விழித்தாள்.


"யாழ், அவர்தான் சொல்கிறார் அல்லவா! முதலில் நாம் அரண்மனைக்கு செல்வோம். இன்னும் ஒருகணம் நான் இங்கு நின்றால் கூட மயக்கம் போட்டு விழுந்தே விடுவேன்" என்று  ராதா தோழிய இழுத்துக்கொண்டு செல்ல, திரும்பி வில்லியமைப் பார்த்தவளுக்கு அவனின் பார்வையில் தெரியும் கோபத்தை பார்த்ததும் பகீரென்று இருந்தது.


உடனே அவள் திரும்பி ராதாவோடு குதிரையை நோக்கி ஓட, வீராவின் ஆட்களோ வில்லியமையும் அவனோடு வந்த அதிகாரிகளையும் கைக் கால்களைக் கட்டி தூக்கிக்கொண்டு சென்று சந்தையிலிருந்து சற்று தொலைவிலுள்ள ஒரு மரத்திற்கு கீழ் போட்டு விட்டு வந்தனர்.


நால்வரும் எவ்வளவோ முயற்சித்தும் எதுவும் செய்ய முடியாமல் சோர்ந்துப் போய் அப்படியே இருக்க, அதேநேரம் இங்கு ராதாவோடு வேகமாக குதிரையில் சென்றுக்கொண்டிருந்தவளை வழி மறைப்பது போல் வந்து நின்றது ஒரு கார்.


"மீண்டும் யாரடா?" என்று இரு பெண்களும் உடனே எட்டிப் பார்க்க, கார் ஜன்னல் வழியே யாழ்மொழியைப் பார்த்தான் லியோ ஜார்ஜ்.


"அய்யய்யோ இவனா! இன்று என் நிலை அவ்வளவுதான்" என்றவளுக்கு அன்று நடந்ததை எண்ணி இப்போது முகம் குப்பென்று சிவக்க, அவளுடைய வெட்கத்தில் சிவந்த முகத்தையே பார்த்தவாறு காரிலிருந்து இறங்கி அவர்களுக்கு பக்கத்தில் வந்து நின்றான் அவன்.


"யாழ்மொழி" என்று அவள் பெயரை அழுத்தி நிதானமாக உச்சரித்தவன் அவள் கரத்தைப் பற்றி தன்னை நோக்கி இழுக்க, "கடவுளே!" என்று கத்திக்கொண்டு  அப்படியே சரிந்து விழப் போனவளை தாங்கிப் பிடித்துக்கொண்டான் அவன்.


யாழ்மொழியோ பயத்தில் விழிகளை மூடிக்கொண்டிருந்தவள் மெல்ல ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்துப் பார்க்க, லியோவோ அவள் பார்த்ததுமே பட்டென அவளை தரையில் போட்டான்.


"அய்யோ அம்மா... ஏன் தங்களுக்கு இத்தனை வஞ்சகம் என் மேல்? நான் அப்படி என்ன தவறு செய்துவிட்டேன் அதிகாரி?" என்று இடையைப் பிடித்து வலியில் முணங்கியவாறு தரையில் அமர்ந்த நிலையில் அவள் கேட்க, "யாழ், இந்த அதிகாரியையும் உனக்கு தெரியுமா என்ன? அதுவும் நம் மொழியில் பேசினால் அவருக்கு எப்படி புரியும்?" என்று பதற்றமாகக் கேட்டாள் ராதா.


தோழியை முறைத்துப் பார்த்தவள், எழுந்து "உனக்கு இவனைப் பற்றி எதுவுமே தெரியாது ராதா, அமைதியாக இரு!" என்றுவிட்டு லியோவின் புறம் திரும்ப, "மரியாதை ரொம்ப குறையுதே!" என்றுக்கொண்டே கையிலிருந்த துப்பாக்கியை அவன் தரையில் சுட்டதும், அந்த குதிரையோ கால்களைத் தூக்கி கனைத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தது.


"யாழ் என்னைக் காப்பாற்று!" என்று ராதா கத்தும் சத்தம் காதில் விழ, "அய்யோ ராதா..." என்று நெஞ்சிலேயே கை வைத்துக்கொண்டவள், லியோவின் புறம் வேகமாகத் திரும்பி கோப மூச்சுக்களை விட்டவாறு முறைத்துப் பார்த்தாள்.


"ஏன் இப்படி? நான் என்ன பரிகாரம் செய்தால் என் வழியில் குறுக்கிடாமல் இருப்பீர்கள்?" என்று யாழ்மொழி கோபமாக கத்த, ஏதோ ஒரு கோழிக்குஞ்சு சிறு குரலில் கீச்சிடுவது போல்தான் தோன்றியது அந்த ஆறடி ஆண்மகனுக்கு.


"அம்மணி ரொம்பதான் கத்துறீங்க, சரி அரசர்கிட்ட நான் போய் எல்லா உண்மையையும் சொல்லிடுறேன். கூடவே, நீ அன்னைக்கு எனக்கு முத்தம் கொடுத்தல்ல அதையும்தான்" என்று லியோ ஏளனப் புன்னகையோடு மிரட்ட, திகைத்துப் போய் வாயில் கை வைத்துக்கொண்டவளுக்கு இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது என்றே தெரியவில்லை. 


அவனோ அலட்சியமாக தோளைக் குலுக்கியவாறு காரை நோக்கிச் செல்ல, வேகமாக வந்து அவனின் எதிரே வழி மறைப்பது போல் நின்றுக்கொண்டாள் அவள்.


"தயவு செய்து சற்று பொறுங்கள், அரசரிடம் சொல்லும் அளவிற்கு அப்படி என்ன நான் குற்றம் செய்துவிட்டேன்? சரி அரசருக்கு தெரியாமல் இளவரசியை அழைத்துக்கொண்டு வந்தது குற்றம்தான். அதற்காக இப்படியா?" என்று அவள் படபடவென பொரிந்துக்கொண்டே செல்ல, மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியவாறு அவளை உற்றுப் பார்த்தான் லியோ.


"இதே இடத்துக்கு நாளைக்கு வா, என்ன பண்ணணும்னு சொல்றேன்" என்றுவிட்டு அவன் பாட்டுக்கு காரில் ஏறிக்கொள்ள, "அது... நாளை அரண்மனையில் முக்கியமான வேலை இருக்கிறது, என்னால் அப்படி எல்லாம் வெளியில் அடிக்கடி வர முடியாது" என்று சமாளிக்க முயற்சித்தாள் அவள்.


ஆனால், யாழ் பேசியது எதுவும் அவன் காதில் விழவே இல்லை. 


அவளின் வார்த்தைகளை கண்டுகொள்ளாதவன் போல் லியோ காரில் அமர்ந்திருக்க, ஓட்டுனர் சீட்டில் அமர்ந்திருந்த ஜேம்ஸ்ஸோ பக்கத்திலிருந்தவனை வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான்.


"சார், ஐ திங் யூ ஆ இன்ட்ரஸ்டட் இன் ஹெர் ரைட்?" என்று அவன் சந்தேகமாகக் கேட்க, "வாட் ரப்பிஷ்! சும்மா உளறாத ஜேம்ஸ், அப்படியெல்லாம் எனக்கு தோனவே இல்ல.  என்னோட தகுதிக்கு அவளை எல்லாம் பக்கத்துல கூட வைக்க முடியாது. என்னை பார்த்து அவ பயப்படுறது பிடிச்சிருக்கு, அதான் சும்மா மிரட்டி பார்த்தேன். என்ட், அன்னைக்கு என்னை ரொம்ப டென்ஷன் பண்ணா, அதுக்கு பனிஷ்மென்ட் கொடுக்க வேணா! இதுக்கப்பறம் அவ அரண்மனையோட வேலைக்காரி மட்டுமில்ல, எனக்கும்தான்" என்று சொல்லி கேலியாக சிரித்தான் அவன்.


அன்றிரவு,


அறையிலிருந்த மொத்த பொருட்களையும் தூக்கிப் போட்டு உடைத்துக்கொண்டிருந்தான் வில்லியம். 


இன்று நடந்ததை அவனால் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியல. அவமானத்தில் முகம் கறுக்க, கையிலிருந்த பொருளை தன் விம்பம் தெரியும் கண்ணாடியில் விட்டெறிந்தான் அவன். 


"ஹவ் டேர் இஸ் ஹீ! என்னை கட்டிப் போட்டு மரத்துக்கு கீழ தரையில ஏதோ குப்பைய போடுற மாதிரி போட்டிருந்தான். அவன சும்மாவே விட மாட்டேன், ஐ வோன்ட் டூ கில் ஹிம்..என்ட் அந்த யாழ்மொழி... அவள மொத்தமா அனுபவிப்பேன். கவுன்ட் யூவர் டேய்ஸ் யூ போத்" என்று விழிகள் சிவக்க பற்களை அவன் கடித்துக்கொள்ள, அதேநேரம் தனதறையிலிருந்த லியோவோ அந்த சிறு விளக்கு வெளிச்சத்தில் கையிலிருந்த சில காகிதங்களை பார்த்துக்கொண்டிருந்தான்.


"அரசர் கொடுத்த அளவ விட அதிகமா இங்கயிருந்து காட்டனும் (Cotton) டீயும் நம்ம கன்ட்ரீக்கு எக்ஸ்பார்ட் பண்ணியிருக்காங்க. ஹவ் இஸ் தட் பாஸிபள்!  சார் ரொனேல்டோட கையெழுத்துதான் இதுல இருக்கு. அப்போ இது அவர் வேலைதானா... வாட் த ஹெல் இஸ் ஹேப்பனிங் ஹியர்?" 


என்று தனக்குள்ளேயே யோசித்துக்கொண்டவன் அந்த காகிதங்களை மூடி வைத்துவிட்டு விழிகளை மூடி தலையை பின்னே சாய்த்தான்.


அவனையும் மீறி அவனுடைய மனக்கண் முன் அன்று அத்தனை அலங்காரத்தோடு பார்த்த யாழ்மொழியின் முகமும் அவளுடைய இதழில் முத்தமிட்டதுமே விம்பங்களாக வந்து போக, பட்டென்று விழிகளைத் திறந்துக்கொண்டான் லியோ.


"ஓ காட்! ஷீ இஸ் சோ டேன்ஜரஸ்" என்று விழிகளை சலிப்பாக உருட்டிக்கொண்டவன், கட்டிலுக்கு சென்று வராத தூக்கத்தை வரவழைத்து உறங்க, அடுத்தநாளும் விடிந்தது.


அன்று யாழ்மொழியோ நேரத்திற்கு செல்லவென வேகவேகமாக ஆக வேண்டிய வேலைகளை செய்து முடிக்க, "என்ன யாழ், வேலைகள் பரபரப்பாக இருக்கிறது. எந்த ரயிலை பிடிக்க இத்தனை அவசரம்?" என்று கேலியாகக் கேட்டாள் இந்திரா.


"அது... நான்... அப்படி ஒன்றுமில்லை இளவரசி. சில பொருட்கள் வாங்க சந்தைக்கு செல்கிறேன். அவ்வளவுதான்" என்று அவள் வாய்க்கு வந்த பொய்யை சொல்ல, "சந்தைக்கா செல்கிறாய்! எனக்கும் வர ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் தந்தை என்னை ஏதோ வளங்கள் பற்றிய கலந்துரையாடலுக்காக வரச் சொல்லியிருக்கிறாரே!" என்று மற்றவள் சொல்ல, நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டாள் யாழ்மொழி.


"ஆனால் எனக்காக ஒரே ஒரு உதவி மட்டும் செய்வாயா யாழ், இதை வீராவிடம் கொடுக்க முடியுமா?" என்று தான் பார்த்துப் பார்த்து தன்னவனின் பெயரை நூலினால் பூ அலங்காரம் செய்த ஒரு துணியை இந்திரா நீட்ட, அதை வாங்கிக்கொண்டவள் குதிரையை எடுத்துக்கொண்டு சந்தையை நோக்கித்தான் சென்றாள்.


நேற்று நடந்த சம்பவத்தை நினைக்கையில் சிறு பயம் மனதைக் கவ்வினாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சந்தைக்குள் நுழைந்தவள் அங்கு பாலாவோடு காய்கறிகளை விற்றுக்கொண்டிருந்த வீராவின் அருகில் சென்றாள்.


"ஹ்ர்ம் ஹ்ர்ம்..." என்ற செருமல் சத்தத்தில் திரும்பிய வீரா, அங்கு யாழ்மொழியைப் பார்த்ததும் புன்னகையோடு, "அட நீயா! பரவாயில்லையே, ரொம்பதான் தைரியம் உனக்கு. ஆமா... உங்க இளவரசி என்ன பண்றா, இந்த வீரா அவளையே நினைச்சுக்கிட்டு இருக்கான்னு அவகிட்ட போய் சொல்றியா?" என்று கேட்டு சிரிக்க, சிரித்தவாறு தலையிலடித்துக்கொண்டாள் யாழ்.


"இளவரசியும் தங்களைதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் போல, அதனால்தான் இதை உங்களிடம் கொடுக்க சொன்னார்கள்" என்று இந்திரா கொடுத்ததை அவள் நீட்ட, அதை ஆர்வமாக வாங்கிப் பார்த்தவனுக்கு தன்னவளைப் நினைத்து விழிகள் காதலில் மிதந்தன.


"இந்திரா..." தன்னவளின் பெயரை மெல்ல முணுமுணுத்தவாறு நூலினால் அந்த துணியில் தைத்திருந்த அவனின் பெயரை விரல்களால் வருட, "இது சாத்தியமா அண்ணா, அந்த அரண்மனையில் பணிப்பெண்ணாக இருக்கும் எனக்கே எந்த மதிப்பும் இல்லை. தங்களுக்கு..." என்று தயக்கமாக இழுத்தாள் அவள்.


சட்டென நிமிர்ந்துப் பார்த்தவனின் விழிகளில் அதே வலி அப்பட்டமாகத் தெரிய, பின் உடனே முகபாவனையை மாற்றியவன், "இந்திராவுக்காக எதையும் பொறுத்துக்க தயாரா இருக்கேன், காதலிச்சு பாரு புரியும்" என்றவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் யாழ்மொழி.


"இதைதான் இளவரசியும் கூறினார்கள்" என்று ஆச்சரியம் குறையாத குரலில் அவள் சொல்ல, வீராவோ பக்கென்று சிரித்தான்.


ஆனால், இருவர் பேசிக்கொள்வதை தூரத்திலிருந்து வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன லியோவின் விழிகள்.


**************


'காலமெல்லாம் உன்னைத் தேடி' என்னோட டிரெக்ட் புக் இப்போ அமேசன் கிண்டல்ல yazhini mithra அப்படிங்குறா Available ஆ இருக்கு.. மறக்காம ரீட் பண்ணிக்கோங்க.. >>>

India link 👇

https://www.amazon.in/dp/B0FLYRBNZG


Usa link 👇

https://www.amazon.com/dp/B0FLYRBNZG


என்ட், மையவிழிப் பார்வையிலே நாவலும் இப்போ Agni tamil novels அப்படிங்குற பேருல Available ஆ இருக்கு... >>>

INDIA link👇

https://www.amazon.in/dp/B0FL2S9LYC


USA link 👇

https://www.amazon.com/dp/B0FL2S9LYC



Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚