விழிகள் 08
லியோவைப் பார்த்ததும் அதிர்ந்துப் போய் யாழ்மொழி சிலை போல் நின்றுக்கொண்டிருக்க, அவனும் அவளையேதான் பார்த்துக்கொண்டிருந்தான்.
"யாழ், என்ன சிலை போல் நின்றுக்கொண்டிருக்கிறாய். எல்லோரும் உன்னைதான் பார்க்கிறார்கள், சொல்வது புரிகிறதா இல்லையா?" என்று பக்கத்தில் நடனமாடிக்கொண்டிருந்த அவளுடைய தோழி முட்டியால் அவளைக் குத்த, அதில் நடப்புக்கு வந்தவள் அவர்களோடு இணைந்து நடனமாட ஆரம்பித்தாள்.
லியோவின் பார்வையில் அவளுக்கு சற்று தடுமாற, அதை உணர்ந்தவனோ முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை இதழுக்குள் அடக்கிக்கொண்டான்.
முயன்று அவன் பக்கம் பார்வையைத் திருப்பாது நடனமாடி முடித்தவள், கூட்டத்தோடு கூட்டமாக அங்கிருந்து ஓடியே விட, சுற்றி முற்றிப் பார்த்தவன் யாரும் தன்னை பார்க்கவில்லை என்பதை உணர்ந்து மெல்ல யாழ்மொழி சென்ற திசைக்குச் சென்றான்.
அதேநேரம், இளவரசர் நந்தனிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தாள் இந்திரா.
"நடனத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை. சிறப்பு..." என்று அவன் சொல்ல, "நா.. நான் உங்களிடம் முக்கியமான விடயமொன்று சொல்ல வேண்டும்" என்றாள் அவள் தயங்கியவாறு.
"நீண்ட நேரமாக நீ எதையோ சொல்ல முயல்கிறாய், என்ன இந்திரா?" என்று இப்போது தீவிர முகபாவனையோடு நந்தன் கேட்டதும், "என்னுடன் வாருங்கள்" என்று அவனின் கரத்தைப் பற்றி தோட்டத்திற்கு அழைத்துச் சென்றாள் அவள்.
இதை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அரசர் வேந்தனோ திருப்தியாக புன்னகைத்துக்கொள்ள, நந்தனை தோட்டத்திற்கு அழைத்து வந்தவளோ கைகளைப் பிசைந்தவாறு நின்றிருந்தாள்.
"இதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனக்கு இந்த திருமணம்..." என்று இந்திரா ஆரம்பிக்க, "ஆங்... அதற்கு முன் நான் உனக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டும்" என்ற நந்தன் தன் விரலிலிருந்த ஒரு மோதிரத்தை கழற்றி அவளுடைய விரலில் போட்டு விட, அதை அதிர்ச்சியாகப் பார்த்தாள் அவள்.
"விலை மதிக்க முடியாத ஒரு அரிய வகை ரத்தினக்கல் இதில் பதிக்கப்பட்டிருக்கிறது. யாராலும் இதன் பெறுமதியை கணக்கிட முடியாது. உனக்காக இதை கொண்டு வந்தேன் இந்திரா, பிடித்திருக்கிறதா?" என்று ஹஸ்கி குரலில் அவன் கேட்க, இவளுக்கோ என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
"எதற்கு இத்தனை விலை கொடுத்து இதை எனக்காக..." என்று வார்த்தைகள் தடுமாற நின்றிருந்த இந்திரசேனா எதேர்ச்சையாகத் திரும்ப, அடுத்தகணம் அவளுடைய விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.
"வீரா..." என்று அவளுடைய இதழ்கள் முணுமுணுக்க, அங்கு பெரிய மரத்திற்கு பின்னால் குறும்புச் சிரிப்போடு அவளை ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தான் வீரா.
இந்திராவின் நிலை இவ்வாறு இருக்க, தனக்குத்தானே புலம்பியவாறு வராண்டாவில் நடந்துச் சென்றுக்கொண்டிருந்தாள் யாழ்மொழி.
"இப்போது இவனை யார் முதலில் விழாவுக்கு அழைத்தது? ஏதோ பெண்களையே பார்க்காதவன் போல் வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தான். இதில் ஆங்கிலேய உயர் அதிகாரியாமே! பதவிக்கேற்ப வேலையா செய்கிறான் இவன், ச்சே! இவனை சந்தித்திருக்கவே கூடாது"
என்று வாய்விட்டே புலம்பிக்கொண்டு அவள் செல்ல, திடீரென ஒரு வலிய கரம் அவளைப் பற்றியிழுக்க, ஒருகணம் ஸ்தம்பித்துப் போய்விட்டாள் யாழ்மொழி.
"யா.. யார் இது?" என்று பயத்தில் அவள் கத்தப் போக, உடனே வாயைப் பொத்திக்கொண்ட லியோ, "இப்போ எதுக்கு கத்துற? சும்மா பேச்சு மட்டும்தான். ஆனா முன்னாடி நின்னதுக்கு பயந்து நடுங்குற. என்னை பார்த்தா அவ்வளவு பயமா யாழ் உனக்கு?" என்று ஏளனப் புன்னகையோடுக் கேட்டான்.
"அது... நா.. நான் ஒன்றும் பயப்படவில்லை, முதலில் என்னை விடு! இது ஒன்றும் உன் அரண்மனை கிடையாது, என் அரண்மனை, சிறு சத்தம் காதில் விழுந்தாலும் உன் தலையை கொய்து விடுவார் அரசர்" என்று ஒற்றை விரலை நீட்டி மிரட்டலாக அவள் சொல்ல, அவளுடைய விரலை மடித்து அவன் முறுக்கவும், "ஆஆ..." என்று வலியில் கத்தச் சென்று பற்களைக் கடித்து வலியை பொறுத்துக்கொண்டாள் அவள்.
"ஏதோ நீ இளவரசி மாதிரி உன் அரண்மனைன்னு சொல்ற, ஓஹோ... அதனாலதான் தைரியமா நடுராத்திரி இளவரசி இந்திரசேனாவ கூட்டிக்கிட்டு வெளியில வந்தியா, நான் வேணா இதை அரசர் வேந்தன்கிட்ட சொல்லட்டுமா?" என்று கேட்டு அவன் இரு புருவங்களை ஏற்றி இறக்க, விழி விரித்து அவனைப் பார்த்தவளோ பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டாள்.
"வேண்டாம், தன்னை மறந்து என் அரண்மனை என்று சொல்லிவிட்டேன். எனக்கு சித்தம் கலங்கிப் போய்விட்டது. ஹிஹிஹி... நமக்குள் இருக்கும் பிரச்சனைகளை இன்றே இந்த நொடியே மறந்து விடுவோம். இதற்குப் பிறகு தங்களின் முன்னால் வரவே மாட்டேன், என்னை நம்புங்கள்!" என்று அவள் அவனிடம் சமரசம் பேச, தன்னை மீறி அவளை ரசிக்கத் துடித்த மனதை கடிவாளமிட்டு அடக்கிக்கொண்டான் ஆடவன்.
'பரவாயில்லையே! அம்மணிக்கு பயம் இருக்கத்தான் செய்யுது. இருந்தாலும், உன்னை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் விட மாட்டேன். லியோ ஜார்ஜ், இந்த ஊருக்கு வந்திருக்குற உங்க உயரதிகாரி. அது உனக்கு எப்போவும் நியாபகம் இருக்கட்டும். ஒருவேள மறுபடியும் என்னை டென்ஷன் பண்ணேன்னா... நேரா அரசர்கிட்ட வந்து உண்மைய எல்லாம் சொல்லிடுவேன். புரியுதா?" என்று அவளின் தாடையைப் பற்றி தன் முகம் நோக்கி நிமிர்த்திக் கேட்க, அவனை முறைத்துப் பார்த்தாள் யாழ்.
இருவருக்கும் வெறும் நூலிடைவெளிதான். அவளை அத்தனை நெருக்கத்தில் தனிமையில் பார்த்தவனுக்கு ஒரு ஆண்மகனாக ஏதேதோ உணர்ச்சிகள் கிளர்ந்தெழ, அவனோ தன்னை மீறி அவளை மேலும் நெருங்கினான்.
இத்தனை நேரம் அவன் பேசிய பேச்சில் அவனை கோபமாக பார்த்துக்கொண்டிருந்த யாழ்மொழிக்கு இப்போது ஏதோ ஒன்று வித்தியாசமாகத் தோன்ற, பதறிப்போய் அவனிடமிருந்து வேகமாக விலகப் போனாள் அவள்.
ஆனால், அவன் விட்டால்தானே!
லியோவின் மற்ற கரம் யாழின் இடையை வளைத்து தன்னோடு நெருக்கிக்கொண்டிருக்க, எச்சிலை விழுங்கிக்கொண்டவளுக்கு இப்போது வேகமாக மூச்சு வாங்கியது.
"நா.. நான் போக வேண்டும், என்னை விடுங்கள் அதிகாரி" என்று திக்கித்திணறி வார்த்தைகளைக் கோர்த்து அவள் சொல்ல, ஏற்கனவே தேவதைப் போல் இருப்பவள் இப்போது அலங்காரத்தில் பேரழகியாக தெரிய, லியோவுக்கு தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
தன்னை மீறி அவளிதழை நோக்கி குனிந்தவன், கிட்டத்தட்ட அவளிதழோடு தன்னிதழை ஒற்றி விட, யாழ் திக்குமுக்காடி போய்விட்டாள் என்றால், "சார்..." என்று அதிர்ந்து விழித்தது ஜேம்ஸின் குரல்.
லியோவோ அப்போதே தான் செய்யும் காரியம் உணர்ந்து வேகமாக விலகியவன், பதற்றமாக யாழ்மொழியை பார்க்க, அவளோ அசையாமல் விழி விரித்தபடி அப்படியே நின்றிருந்தாள்.
"சார், வாட் இஸ் ஹேப்பனிங் ஹியர்?" என்று ஜேம்ஸ் அதிர்ச்சி குறையாத குரலில் கேட்க, அவனை இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தவன் வேகமாக அரண்மனையிலிருந்து வெளியேறி காரில் ஏறி அமர்ந்துக்கொண்டான்.
"ஊஃப்ப்..." என்று பெருமூச்சு விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவன், ஜேம்ஸை திரும்பிப் பார்க்க, அவனோ தன் உயரதிகாரியைதான் திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தான்.
"ஜேம்ஸ், இதை இப்போவே மறந்துரு. சும்மா எதையும் நீயா நினைச்சுக்காத புரிஞ்சதா! இது ஜஸ்ட் கிஸ்தான், இதுல வேற எதுவும் இல்ல" என்று சொல்லி அலட்சியமாக தோளைக் குலுக்கியவன், "காரை எடு!" என்றுவிட்டு அவன் பாட்டிற்கு ஜன்னல் வழியே வெறிக்கத் தொடங்க, தான் பார்த்த காட்சியிலிருந்து மீண்டு வரவே ஜேம்ஸிற்கு சில கணங்கள் தேவைப்பட்டன.
இதில் யாழ்மொழியின் நிலைதான் பரிதாபம்!
முதல் தடவை ஒரு ஆணின் ஸ்பரிசத்தையும் தொடுகையையும் உணர்ந்திருக்கிறாள். இந்த முத்தம் எல்லாம் அவள் நினைத்து கூட பார்த்ததில்லை.
ஏதோ மந்திரித்து விட்டது போல் அவள் தனதறை நோக்கி நடந்துச் செல்ல, இங்கு நந்தனோடு பேசிக்கொண்டிருந்த இந்திராவின் விழிகள் அதிர்ச்சியில் தெறித்து விடுமளவிற்கு விரிந்திருந்தன.
"என்ன நடந்தது இந்திரா, ஏதோ சொல்ல நினைக்கிறாய், ஆனால் ஏன் என்னிடம் சொல்ல இத்தனை தயக்கம்?" என்று அவன் புரியாமல் கேட்க, "அது... ஆங் மறந்தே போய்விட்டேன் இளவரசரே, தங்களை சந்திக்க வேண்டுமென்று என் பாட்டி சொல்லிக்கொண்டிருந்தார். அதை சொல்ல நினைத்து பின் ஏதேதோ யோசித்து..." என்று சமாளித்தவள், "சீக்கிரம் செல்லுங்கள், அவர் உங்களுக்காக அவருடைய அறையில் காத்துக்கொண்டிருக்கிறார்" என்று வாயிற்கு வந்த பொய்யை சொன்னாள்.
"பாட்டியா! இதைப் பற்றி அரசர் சொல்லவே இல்லையே..." என்று வாய்விட்டே கேட்டுக்கொண்டு நந்தன் அரண்மனைக்குள் நுழைய, வேகமாக வீராவை நோக்கிச் சென்றவள் அவனோடு மரத்திற்கு பின்னே ஒளிந்துக்கொண்டாள்.
"இங்கே எதற்கு வந்தாய் வீரா, காவலர்கள் யாராவது உன்னை சந்தித்தால் அவ்வளவுதான். இத்தனை தைரியம் ஆகாது உனக்கு?" என்று இந்திரா பதற்றமாகப் பேச, அலட்சியமாக தோளைக் குலுக்கியவாறு, "என்னை அழைச்சுட்டு வந்ததே காவலர்கள்தான், அரண்மனையில ஏதோ விழா, வேலைக்கு ஆள் தேவைன்னு கூப்பிட்டாங்க. அதான் இருக்குற எல்லா வேலையையும் விட்டுட்டு உன்னை பார்க்கலாம்னு அரண்மனை வேலைக்காரனா வந்துட்டேன். இல்லன்னாலும் நான் ஒன்னும் இளவரசன் இல்லைதான்.." என்று சொல்லி ஒற்றைக் கண்ணை சிமிட்டினான் அவன்.
இந்திராவிற்கு முகம் வெட்கத்தில் குப்பென்று சிவக்க, விழிகளில் காதல் மிதக்க அவனைப் பார்த்தவள், "தாங்கள் எனக்கு எப்போதும் இளவரசன்தான்" என்று சொல்ல, அவளின் நெற்றியோடு நெற்றி முட்டிய வீரா, "ஆமா... அதுதான் உன்னை கட்டிக்க போறவனா?" என்று கேட்டான் சந்தேகமாக.
அவன் கேட்ட விதத்தில் முறைத்துப் பார்த்தவள், "தங்களை நினைத்த மனம் ஒருபோதும் இன்னொரு ஆடவனை சுமக்காது" என்றாள் அழுத்தமாக.
பின் ஒரு பெருமூச்சுவிட்டு, "அவர்தான் ஆற்றுக்கு மறுபுறத்திலுள்ள குறுநில இளவரசர் நந்தன். என்னை அவருக்கு மணமுடித்து கொடுப்பதுதான் ஆசையே, ஆனால்..." என்று தயக்கமாக இழுக்க,"ஆனா, இந்த இளவரசி சாதாரணமா சந்தையில வேலைப் பார்க்குற ஒருத்தன காதலிக்க ஆரம்பிச்சிட்டா. அப்படிதானே! இதை கேள்விப்படும் போது அரசராலயே ஜீரணிக்க முடியாது" என்று சொல்லி சிரித்தான் வீரா.
ஆனால் அவனுடைய வார்த்தைகளிலுள்ள வலியை இந்திராவால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
அவனை பாவமாகப் பார்த்தவள், "தந்தை எப்போதும் என் ஆசையை மறுத்ததில்லை, நிச்சயமா என் காதலை ஏற்றுக்கொள்வார். என.. எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்று சொல்ல, வழக்கம் போல் தன் அலட்சிய புன்னகையை சிந்தியவன், "என்ன நடந்தாலும் நீ எனக்கானவ இந்திரசேனா, உன்னை அவ்வளவு சீக்கிரம் விட்டுர மாட்டேன்" என்று அவளுடைய இதழில் அழுந்த முத்தம் பதித்தான்.
அவளும் விழிகளை மூடிக்கொண்டு அவனின் இதழுக்குள் மூழ்கிவிட, திடீரென அந்த பக்கமாக காலடி சத்தம் கேட்கவும் வேகமாக அவளிடமிருந்து விலகிய வீரா தன்னவளின் கன்னத்தை கிள்ளி விட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓடி மறைந்திருந்தான்.
"இளவரசி, இங்கு தனிமையில் என்ன செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்? அரசர் தங்களை அழைத்து வர சொன்னார்" என்று அவளைத் தேடி வந்த அமைச்சர் சொல்ல, "வருகிறேன் அமைச்சரே!' என்று சிறு பதற்றத்தோடு சொன்னவள் ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டு தன்னை ஆசுவாசப்படுத்தியவாறு மீண்டும் அரண்மனைக்குள் நுழைந்துக்கொண்டாள்.
அடுத்தநாள், இந்திரசேனாவின் ஆடைகளை மடித்து வைத்துக்கொண்டிருந்த யாழ்மொழியோ ஒரு இடத்தையே வெறித்தவாறு நின்றிருக்க, காலையிலிருந்து அவளைதான் கவனித்துக்கொண்டிருந்தனர் அனைவரும்.
"என்ன ஆயிற்று இவளுக்கு, ஏன் வித்தியாசமாக நடந்துக்கொள்கிறாள்?" என்று இந்திரா சந்தேகமாகக் கேட்க, பக்கத்தில் இந்திராவின் கால்களை அழுத்தி விட்டுக்கொண்டிருந்த ராதாவுக்கும் அதே சந்தேகம்தான்.
"நானும் அதைதான் யோசிக்கிறேன் இளவரசி, நேற்றிரவு முழுக்க யாழ் உறங்கவே இல்லை. காலையில் எழுந்தவள் ஏதோ பிரம்மை பிடித்தவள் போல் அறைக்குள்ளேயே நடமாடிக்கொண்டிருந்தாள், நான்தான் அவளை குளியலுக்காக இழுத்துக்கொண்டு சென்றேன். எனக்கு என்னவோ நேற்றிரவு யாழ் எதையோ பார்த்து பயந்திருக்கிறாள் என்று தோன்றுகிறது" என்று ராதா தீவிர முகபாவனையோடு சொல்ல, "யாழ்..." என்று அழைத்தாள் இந்திரா.
"ஆங்.. சொல்லுங்கள் இளவரசி" என அப்போதுதான் விழித்தது போல அவள் மலங்க மலங்க விழிக்க, "கண்ணாடிக்கு முன்னே உள்ள முத்துக்கள்.." என்று மற்றவள் சொல்லி முடிக்கும் முன், "என்ன, முத்தங்களா! வேண்டாம் வேண்டாம்" என்று விழிகளை மூடி பதற ஆரம்பித்துவிட்டாள் யாழ்மொழி.
இந்திரசேனாவோ அவளை அதிர்ச்சியாகப் பார்த்தவள், "இப்போது நான் என்ன கேட்டுவிட்டேன் என்று இத்தனை அதிர்ச்சியாகிறாய்?" என்று புரியாமல் கேட்க, "அது... நான்... என்னை மன்னித்து விடுங்கள் இளவரசி" என்றுவிட்டு அறையிலிருந்து வேகமாக வெளியேறியவள் பணிப்பெண்கள் தங்கியிருக்கும் அறைக்குள் நுழைந்துக்கொண்டாள்.
"அவனின் முத்தத்திலிருந்து மீளவே முடியவில்லையே!" என்று வாய்விட்டு யாழ்மொழி எரிச்சலாக சொல்ல, "முத்தமா?" என்ற ராதாவின் குரல் பின்னால் அதிர்ச்சிக் குரலில் கேட்டது.
வேகமாகத் திரும்பிப் பார்த்தவள், "முத்தமா! நா.. நான் ஒன்றும் அப்படி சொல்லவில்லையே.. நா.. நான் என்ன சொன்னேன்? அய்யோ நேரத்திற்கு எதுவும் நியாபகத்திற்கு வேறு வர மறுக்கிறதே..." என்று என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாற, மற்றவளோ சலிப்பாக விழிகளை உருட்டினாள்.
"அதையெல்லாம் விடு யாழ், எனக்காக நீ ஒன்று செய்ய வேண்டும். என்னையும் அரண்மனையை விட்டு வெளியே குதிரையில் அழைத்துச் செல்வாயா? முடியாது என்று மட்டும் மறுத்து விடாதே!" என்று ராதா விழிகள் மின்ன கேட்க, வெளிப்படையாக தலையிலடித்துக்கொண்டாள் யாழ்மொழி.
அதேநேரம், இங்கு ஆங்கிலேய அதிகாரி ரொனேல்டின் அரண்மனையில், கத்தி கத்தி களைத்துப் போய், அழுது சிவந்து வீங்கிய முகத்தொடு அந்த இளம்பெண் உடலில் சக்தியற்று மஞ்சத்தில் கிடக்க, அவளிடமிருந்து விலகிப் படுத்தார் ரொனேல்ட்.
"நொட் செடிஸ்ஃபைட்!" என்று வாய்விட்டு சொன்னவர், எழுந்து ஆடைகளை போட்டவாறு அந்த இளம்பெண்ணை அலட்சியமாகப் பார்த்தார்.
அவளோ தன்னிலையை நினைத்து முகத்தை மூடிக்கொண்டு கதறியழ, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அறையிலிருந்து வெளியேறியவர் மற்ற அறைக்குள் நுழைய, அங்கு அவருக்காக காத்திருந்தான் வில்லியம்.
"தினமும் ஒரு பொண்ணு.. தினமும் என்ஜாய்மென்ட். எனக்கே உங்கள பார்க்க பொறாமையா இருக்கு சார்" என்று அவன் சொல்லி சிரிக்க, "அன்னைக்கு பேளஸ்ல அவள பார்த்ததிலிருந்து இப்போ எல்லாம் எனக்கு எதுவுமே திருப்தியா இல்லை வில்லியம். எனக்கு அவ வேணும்... அதுக்கு என்ன பண்ணணும்?" என்று நேரடியாக தன் மனதிலுள்ளதை கேட்டுவிட்டார் ரொனேல்ட்.
தன் மகளின் வயதிலிருக்கும் ஒரு பெண்ணை உடலுறவுக்காக கேட்கிறேன் என்ற வெட்கம் கொஞ்சம் கூட இல்லை அந்த வயதானவருக்கு.
"சாதாரண ஊர் பொண்ணா இருந்தா எதை பத்தியும் கவலைப்பட தேவையில்ல, பட் இவ பேளஸ்ல இருக்குறவ, கொஞ்சம் ரிஸ்க்தான். பட் நான் ட்ரை பண்றேன் சார். உங்களுக்காகன்னு இல்லை, ஃபார் மீ ஆல்சோ..."
என்று வில்லியம் கேலியாக இதழை வளைக்க, விழிகள் மின்ன பார்த்தார் ரொனேல்ட்.
************
விழிகள் 09 >>>
https://agnitamilnovels.blogspot.com/2025/09/09.html
'காலமெல்லாம் உன்னைத் தேடி' என்னோட டிரெக்ட் புக் இப்போ அமேசன் கிண்டல்ல yazhini mithra அப்படிங்குறா Available ஆ இருக்கு.. மறக்காம ரீட் பண்ணிக்கோங்க.. >>>
India link 👇
https://www.amazon.in/dp/B0FLYRBNZG
Usa link 👇
https://www.amazon.com/dp/B0FLYRBNZG
என்ட், மையவிழிப் பார்வையிலே நாவலும் இப்போ Agni tamil novels அப்படிங்குற பேருல Available ஆ இருக்கு... >>>
INDIA link👇
https://www.amazon.in/dp/B0FL2S9LYC
USA link 👇
https://www.amazon.com/dp/B0FL2S9LYC

Comments
Post a Comment