விழிகள் 07
யாழ்மொழி சொன்னதைக் கேட்டு லியோ இறுகிப் போய் நின்றுக்கொண்டிருக்க, அவளோ இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது எனத் தெரியாமல் திருதிருவென விழித்துக்கொண்டு நின்றிருந்தாள்.
சரியாக, "யாழ்... யாழ்மொழி, இந்த பக்கம்" என்று இந்திரா கையை அசைத்து தோழியை அழைக்க, விருட்டென திரும்பிப் பார்த்தவள் இந்திராவை அதிர்ச்சியாகப் பார்த்துவிட்டு உடனே திரும்பிப் பார்த்தாள்.
அவனோ விழிகளை சுருக்கி தூரத்தில் நின்றிருந்தவளை பார்த்தவாறு ஒரு அடி முன்னே வைக்க, வேகமாக யோசித்த யாழ் கீழே கிடந்த மண்ணை வாரி அவனின் முகத்தில் தூவி விட்டு, "முன்னே ஓடுங்கள்... ஓடுங்கள்..." என்று கத்தியவாறு இந்திராவை நோக்கி வந்தாள்.
மற்றவளும் அணிந்திருந்த ஆடையைத் தூக்கிக்கொண்டு வேகமாக ஓட, "ஆஆ... யூ ப்ளடி... உங்கள விட மாட்டேன்" என்று கத்திக்கொண்டே வேகமாக கண்ணைக் கசக்கிவிட்டு அவள் சென்ற திசையை பார்த்தவனுக்கு கோபம் உச்சத்தை தொட்டிருந்தது.
இரு பெண்களும் எப்போதோ ஓடி மறைந்திருக்க, வந்த ரகசிய வழியாகவே அரண்மனைக்குள் நுழைந்து விட்டனர் இருவரும்.
அணிந்திருந்த ஆடையை கழற்றி எரிந்த யாழ், தன் அறை வாசலில் நின்று நிம்மதி பெருமூச்சு விட்டவாறு இந்திராவை முறைத்துப் பார்த்தாள்.
"இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும் இளவரசி, இப்போதுதான் போன உயிரே வந்தது போல இருக்கிறது" என்று வேகமாக அடித்துக்கொள்ளும் இதயத்தை அமைதிப்படுத்த யாழ் படாத பாடுபட, "எனக்கு உன்னை விட்டால் வேறு யார்தான் இருக்கிறார்கள்?" என்று பாவமாக பேச வந்தவளை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்தாள் மற்றவள்.
"உங்களுக்கு என்னை விட்டால் வேறு யாருமில்லை. ஆனால் எனக்கு என்னை விட்டால் வேறு யாருமில்லை" என்று அழாத குறையாக யாழ் சொல்ல, "ஏன் உனக்காக நான் இருக்கிறேனே?" என்றாள் இந்திரா வேகமாக.
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க முறைத்துப் பார்த்தவள், "வேண்டாம் இளவரசி போய் விடுங்கள், நானே தற்கொலை செய்யும் வரை விட மாட்டீர்கள் போல" என்றுவிட்டு பணிப்பெண்கள் தங்கும் அறைக்குள் நுழைந்து விட, அதன் பின் இந்திராவும் தனதறையை நோக்கிச் சென்றுவிட்டாள்.
அதேநேரம், ஆங்கில அரண்மனைக்கு வந்த லியோவிற்கு அத்தனை நெருக்கத்தில் பார்த்த யாழ்மொழியின் முகம்தான் மீண்டும் மீண்டும் ஞாபகத்திற்கு வந்துக்கொண்டே இருந்தது.
இதில் அவள் சொன்னதை நினைக்கும் போது உள்ளுக்குள் யாரோ ஈட்டியால் குத்துவது போல் அவனுக்கு வலிக்க, ஜன்னலின் அருகே சென்று வானத்தை வெறித்தவாறு நின்றுக்கொண்டான்.
"நிஜமாவே அவ காதலிக்கிறாளா, அவள பார்த்தா அந்த மாதிரி தெரியல்லையே! ஒருவேள பொய் சொல்லியிருப்பாளோ... ச்சே ச்சே இருக்காது. இருந்தாலும் திஸ் இஸ் நொன் ஆஃப் மை பிஸ்னஸ், தென் வை ஆம் ஐ வொர்ரீட் அபௌட் திஸ்? சுத்த பைத்தியக்காரத்தனமா இருக்கு"
என்று வாய்விட்டே சொன்னவனுக்கு சட்டென பழைய காதலியின் நினைவு வர, முகம் பாறை போல் இறுகியது.
'லியோ, வீ ஆர் நொட் டூகெதர் எனிமோர். நான் உன் ஃப்ரென்ட் ஸ்மித் கூட ரிலேஷன்சிப்ல இருக்கேன். என்ட், உன்னை மாதிரி ஃபீலிங்ஸே இல்லாத ஒருத்தன் கூட என்னால இதை கன்டினியூ பண்ண முடியல. ஐ ஹோப் யூ அன்டர்ஸ்டேன்ட். நம்ம என்கேஜ்மென்ட்ட ப்ரேக்அப் பண்ணிக்கலாம். திஸ் இஸ் நொட் அ பிக் டீல்'
என்ற க்ரிஷ்டியின் இறுதி வார்த்தைகள் அவனின் சிந்தனைக்குள் ஓட, விழிகளை அழுந்த மூடித் திறந்து உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டான்.
"யாழ்மொழி... என்னை யாரும் மறுபடியும் ஏமாத்த முடியாது. அரண்மனையில வேலை பார்க்குற ஒரு சாதாரண பொண்ணுகிட்ட ஹையர் ஆஃபீசர் லியோ ஜார்ஜ் மயங்குறதா, வாய்ப்பே இல்லை. இந்த இந்தியன் பீபளே நம்மளோட ஸ்லேவ்ஸ். அவங்கள நமக்கு ஈக்குவலா பக்கத்துல உக்கார வைக்கணும்னு நினைக்க கூடாது. மறுபடியும் அவ முன்னாடி வரட்டும். அப்போ இருக்கு அவளுக்கு"
என்று கடுப்பாக முணுமுணுத்தவன், நீண்ட நேரம் விட்டத்தை வெறித்தவாறு விழித்திருக்க, எப்படியோ அன்றைய நாள் கழிந்து அடுத்த நாளும் விடிந்தது.
அன்று,
ராதா முகத்தை உம்மென்று வைத்தவாறு அமர்ந்திருக்க, தோழியை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு கண்டுகொள்ளாதது போல் தன் நீண்ட கூந்தலுக்கு சாம்பிராணி பிடித்துக்கொண்டிருந்தாள் யாழ்மொழி.
"இப்போதெல்லாம் என்னிடமே மறைக்க ஆரம்பித்துவிட்டாய் அல்லவா! நான்தான் எனக்கென்று இருக்கும் ஒரே நண்பி நீதான் என்று பிதற்றிக்கொண்டிருக்கிறேன். ஒழுங்கு மரியாதையாக நேற்றிரவு எங்கு சென்றாய் என்ற உண்மையை சொல்லிவிடு! இல்லையெனில்..." என்று ராதா கோபமாகக் கேட்க, "இளவரசி அழைத்தார்கள் என சென்றிருந்தேன், அவ்வளவுதான்" என்று சமாளிக்க முயன்றாள் மற்றவள்.
ஆனால், ராதா எதையும் கேட்பதாக இல்லை.
"அப்படியா சரி! காய்கறி முத்தினால் சந்தைக்குக்கு வந்துதானே ஆக வேண்டும்" என்று முறைத்தவாறு சொல்லிவிட்டு அவள் முகத்தை திருப்பிக்கொள்ள, ஏனோ யாழ்மொழிக்கு தோழியை அப்படி காண முடியவில்லை.
மெல்ல நெருங்கியவள் சுற்றி முற்றி யாராவது இருக்கின்றார்களா என பார்த்துவிட்டு, "இளவரசியோடு அரண்மனையை விட்டு வெளியில் சென்றிருந்தேன் ராதா, ஊரை சுற்றிப் பார்க்க. அவர்கள் அழைக்கும் போது என்னால் மறுக்க முடியவில்லை. அதனால்தான்..." என்று பாதி பொய்யும் பாதி மெய்யுமாக சொல்ல, ராதாவோ ஆச்சரியமாகப் பார்த்தாள்.
"கொடுத்து வைத்தவள் யாழ் நீ! இளவரசிக்கு உன் மேல் தனிப் பிரியம்" என்று சிறு பொறாமையோடு அவள் சொல்ல, 'என் உயிர் பயத்தில் ஊசழாடுவதை நான் அல்லவா அறிவேன்!' என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டவள், "ஹிஹிஹி..." என்று அசடுவழிந்தாள்.
சரியாக அங்கு ஓடி வந்த மற்ற பணிப்பெண்களில் ஒருத்தி, "முக்கியமான செய்தி, நாளை அரசர் வேந்தனின் பிறந்தநாள். அரண்மனையில் ஏதோ விசேஷம் நடக்கின்றதாம், அதில் நாட்டியம் கற்றுக்கொண்டவர்கள் சிறப்பு நிகழ்ச்சியை நிகழ்த்த வேண்டுமென்று அரசரின் கட்டளை. யாழ் தயாராக இரு!" என்று சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு சென்றுவிட, அதிர்ந்து விழித்தாள் யாழ்மொழி.
"அய்யோ கடவுளே! இது என்ன புது சோதனை? அத்தனை பேருக்கு மத்தியில் நடனமா? முடியாது முடியாது.. முடியவே முடியாது" என்று அவள் பதற ஆரம்பிக்க, "நீண்ட நாட்கள் கழித்து உன் நடனத்தை காணப் போகிறேன், நீ பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. உன்னுடன் இணைந்து இன்னும் சில பெண்கள் நடனமாடப் போகிறார்கள். பிறகு ஏன் இந்த தயக்கம்? உன்னால் முடியும் யாழ்" என்று தோழியின் கரத்தை ஆறுதலாகப் பற்றினாள் ராதா.
ஆனால், யாழ்மொழிக்கு எதுவும் மூளைக்கு ஏறவில்லை. இப்போதே தான் நடனமாடப் போவதை நினைத்து பயத்தில் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டாள் அவள்.
இங்கு இவ்வாறு இருக்க, தன் ஆங்கிலேய அரண்மனையிலுள்ள ஆஃபீஸ் அறையில் அமர்ந்திருந்த லியோவின் முன் வந்து நின்றான் ஜேம்ஸ்.
"சார்..." என்று அவன் தயக்கமாக அழைக்க, கையிலிருந்த காகிதமொன்றை படித்தவாறு அமர்ந்திருந்த லியோவோ, "ம்ம் சொல்லு ஜேம்ஸ்" என்றான் நிமிர்ந்தும் பார்க்காமல்.
"டுமோர்ரோ கிங் வேந்தன்ஸ் பர்த்டே, பேளஸ்ல ப்ரோக்ரேம் நடக்குதாம், நம்ம ஆஃபீசர்ஸ்ல ரெண்டு பேர இன்வைட் பண்ணியிருக்காங்க" என்று ஜேம்ஸ் சொல்ல, "ஐ டோன்ட் ஹேவ் டைம். நீ யாரையாச்சும் கூட்டக்கிட்டு போ. ஐ டோன்ட் மைன்ட்" என்றான் லியோ அலட்சியமாக.
"ரியலி... ஓகே சார்" என்று சொல்லி விட்டு ஜேம்ஸ் வெளியேறப் போக, திடீரென மற்றவன் என்ன நினைத்தானோ!
வேகமாக நிமிர்ந்துப் பார்த்தவன், "ஜேம்ஸ்... ஜேம்ஸ்..." என்று கத்தி அழைத்தவாறு அறையிலிருந்து வெளியேறிச் செல்ல, சத்தம் கேட்டு நின்று திரும்பிப் பார்த்தான் ஜேம்ஸ்.
"அது... என்னை இன்வைட் பண்ணியிருக்கும் போது நான் போகாம இருக்குறது தப்பு. சோ, நான் போறேன், நீ என் கூட வா" என்றுவிட்டு ஆஃபீஸ் அறைக்குள் சென்றுவிட, தலையை சொரிந்தவாறு புரியாமல் பார்த்தான் மற்றவன்.
அடுத்தநாள், காலையிலிருந்தே அரண்மனை பரபரப்பாக இருந்தது. அலங்காரங்களை செய்வதிலும் விருந்தை தயார் படுத்துவதிலும் எல்லோரும் பம்பரம் போல் சுழன்றுக்கொண்டிருக்க, இந்திராவின் அறைக்குள் பதற்றமாக இருந்தாள் யாழ்மொழி.
"பயத்தில் கற்றுக்கொண்டதெல்லாம் மறந்து விடும் போல இருக்கிறது. கடவுளே, நான் என்ன செய்வேன்? ஒருவேளை நான் தடுமாறி கீழே விழுந்துவிட்டால், இல்லை இல்லை நினைக்கும் போதே அவமானமாக இருக்கிறதே! அய்யோ..." என்று புலம்பிக்கொண்டே அவள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துக்கொண்டிருக்க, இந்திராவோடு சேர்த்து மற்ற பணிப்பெண்களும் பக்கென்று சிரித்துவிட்டனர்.
திடீரென கதவைத் தட்டி விட்டு அரசர் வேந்தன் உள்ளே நுழைய, பணிப்பெண்களோ ஒதுங்கி நின்றுக்கொண்டார்கள் என்றால், தந்தையை புன்னகையோடுப் பார்த்தாள் இந்திரா.
"பிறந்தநாள் வாழ்த்துக்கள் தந்தையே! தங்களை காண நானே வருவதாக இருந்தேன், ஆனால் அதற்குள் தாங்கள் தரிசனம் கொடுத்துவிட்டீர்கள்" என்று அவள் சொல்ல, மகளின் தலையை வாஞ்சையோடு வருடியவர், "மகளைக் காண நான் எதற்கு காத்திருக்க வேண்டும்? தோன்றியது, உடனே வந்துவிட்டேன். ஆங்... முக்கியமான விடயம், இன்று சற்று நன்றாகவே அலங்காரம் செய்துக்கொள் இந்திரா" என்றார் குறும்புச் சிரிப்போடு.
தந்தையின் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை உணராதவள், "புரியவில்லை தந்தையே!" என்று அவரை குழப்பமாக நோக்க, "இளவரசர் நந்தன் இன்று விழாவுக்கு வருவதாக இருக்கிறார், ஏற்கனவே என் மகள் தேவதைதான். அவருடைய பார்வைக்கு இன்னும் என் மகள் பேரழகியாக தெரிய வேண்டாமா!" என்றார் வேந்தன்.
அதைக் கேட்ட இந்திராவின் முகமே இருண்டுப் போக, விழிகள் கூட சட்டென கலங்கி விட்டன.
அதை இமை சிமிட்டி அடக்கிக்கொண்டவள், வரவழைக்கப்பட்ட புன்னகையோடு தந்தையைப் பார்க்க, யாழ்மொழியோ அவளின் மனதிலிருப்பதை உணராமல் இல்லை.
தன் இளவரசியை வேதனையோடு அவள் பார்த்துக்கொண்டு நிற்க, அறையிலிருந்து வெளியேறப் போன அரசர் வேந்தன் சட்டென நின்று, "யாழ்மொழி..." என்று அழைத்தவாறு அவளை திரும்பிப் பார்த்தார்.
உடனே பதறிப்போனவளாக, "சொல்லுங்கள் அரசரே!" என்று பணிவாக அவள் சிரம் தாழ்த்த, "நடனத்திற்கு அனைவரும் தயார் அல்லவா! எந்த தவறும் நிகழக் கூடாது" என்று கட்டளையாக சொல்லிவிட்டு சென்றார் அவர்.
அதைக் கேட்ட மற்ற பெண்களோ வாய்விட்டு சிரித்துவிட, யாழ்மொழியின் நிலைதான் பரிதாபம்!
அன்று விழாவுக்கான நேரம் நெருங்க, விருந்தினர்கள் ஒவ்வொருவராக அரண்மனைக்குள் வரத் தொடங்கினர்.
பூக்களாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு அரண்மனை கோலாகலமாக இருக்க, அரசர் வேந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு ஊர் மக்களுக்கும் இலவச உணவுகள் உடை என்பன வழங்கப்பட்டன.
சரியாக அந்த வெள்ளை நிற கார் அரண்மனைக்கு முன் நிற்க, தான் அணிந்திருந்த கோட்டை சரிசெய்தவாறு காரிலிருந்து இறங்கினான் லியோ. கூடவே ஜேம்ஸும் இறங்க, சுற்றி முற்றி பார்த்தவாறே அரண்மனைக்குள் நுழைந்தனர் இருவரும்.
"வாவ்! இந்த பேளஸ் ரொம்ப அழகா இருக்கு" என்று ஜேம்ஸ் அலங்காரங்களை ரசித்தவாறு சொல்ல, "ஆங்..." என்று கேட்டவாறு லியோ சுற்றி முற்றி எதற்காக தேடுகிறோம் என்று தெரியாமலேயே யாழ்மொழியைத் தேடிக்கொண்டிருக்க, திடீரென வாசலில் சலசலப்பு சத்தம் கேட்டது.
எல்லோரும் அந்த திசைக்கு திரும்பிப் பார்க்க, அங்கு இளவரசர் நந்தன் தன் ஆட்களோடு உள்ளே வர, அரசர் வேந்தனும் ஆரவாரமாக மருமகனை வரவேற்றார்.
பரிசுப்பொருட்களும் இனிப்புகளும் பரிமாற்றப்பட, இதை மேலிருந்து சிறிய ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்த இந்திராவுக்கு தன் காதலை எப்படி தந்தையிடம் சொல்வதென்றே தெரியவில்லை.
'வீராவை காதலிக்கிறேன் என்று நான் தந்தையிடம் எப்படி சொல்வேன், சாதாரண ஒருவனை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? நாம் வேண்டுமானால் இளவரசர் நந்தனிடம் பேசிப் பார்க்கலாமா? அவர் நம்மை புரிந்துக்கொள்ளலாம் அல்லவா!'
என்று தனக்குள் யோசித்துக்கொண்டவள் ஒரு முடிவு எடுத்தவளாக தந்தையின் அருகே சென்று நிற்க, அப்போதுதான் அவளை விழிகளை கூர்மையாக்கிப் பார்த்தான் லியோ.
'ஏதோ பழக்கப்பட்ட முகம் மாதிரி தெரியுதே, ஆனா எங்க?' என்று தீவிரமாக அவன் யோசித்துக்கொண்டு நிற்க, "மிகவும் அழகாக இருக்கிறீர்கள் இளவரசி இந்திரசேனா" என்று வருங்கால மனைவியை ரசித்துக்கொண்டு சொன்னான் நந்தன்.
"நன்றி, தங்களும் அழகாகத்தான் இருக்கிறீர்கள்" என்ற இந்திரசேனாவின் குரல் அவர்களுக்கு பின்னே நின்றிருந்த லியோவின் காதிற்கு ஒலிக்க, "ஐ கொட் இட். அன்னைக்கு யாழ் கூட இருந்தது இளவரசிதான். யெஸ் ஐ நோ... இருடீ உன்னை இதை வச்சே என்ன பண்றேன் பாரு, பட் நவ் வெயார் ஆர் யூ மை ஸ்வீட்ஹார்ட்?" என்று விஷமமாக சிரித்தவனுக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சியாக இருந்தாலும் சீண்டிப் பார்க்க மனம் ஏங்கியது.
அரசர் வேந்தனும் மற்றவர்களும் அந்த இடத்தை விட்டு சென்றுவிட, "நா.. நான் உங்களிடம் ஒரு முக்கியமான விடயம் பற்றி பேச வேண்டும்" என்று இந்திரசேனா மெல்ல பேச்சை ஆரம்பிக்க, நந்தனோ அவளை கேள்வியாகப் பார்த்தான்.
ஆனால் விழா ஆரம்பமாக நடனத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையை நோக்கி வரத் தொடங்கினர் பெண்கள். லியோவோ யாழ்மொழியை சுற்றி முற்றி தேடியவாறு எதேர்ச்சையாக நடனத்திற்காக நின்றிருந்த பெண்களைப் பார்க்க, அடுத்தகணம் அவனுடைய விழிகள் தெறித்து விடுமளவிற்கு விரிந்தன.
அரக்கு நிறத்தில் பரதநாட்டியத்திற்கான சேலை அணிந்து அலங்காரத்தோடு யாழ்மொழி நின்றிருக்க, அதிர்ந்துப் போய் வாயைப் பிளந்தவாறு பார்த்துக்கொண்டிருந்த லியோவோ அவளுடைய அழகில் சொக்கித்தான் போனான்.
நாட்டியத்திற்கான இசை வாசிக்கப்பட, யாழ்மொழியோ உள்ளுக்குள் பயத்தை மறைத்தவாறு உடலை வளைத்து விழிகளில் நயத்தோடு நடனமாடினாள்.
நடனமாடும் அனைத்து பெண்களின் சலங்கை சத்தமும் அந்த இசையோடு இணைந்து அந்த அரண்மனையிலுள்ள அத்தனை பேரையும் மயக்க, அவள் நடனமாடும் அழகை தன்னை மறந்த நிலையில் பார்த்துக்கொண்டிருந்தான் லியோ.
யாழ்மொழியோ நடனமாடியவாறு எதேர்ச்சையாக லியோவை பார்த்துவிட, அங்கு அவனை எதிர்பார்க்காது அப்படியே சிலையாகி விட்டாள் அவள்.
'இவனா... அய்யோ என் கால்கள் நகரக் கூட மறுக்கின்றதே, ஏற்கனவே பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கும் என்னை ஏன் கடவுளே மேலும் சோதிக்கிறாய்? இவன் வேறு நம்மை வெறித்து வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறான். பயத்துடன் சேர்த்து வெட்கம் வேறு வந்து தொலைக்கிறதே'
என்று தனக்குள்ளேயே பேசியவாறு அவள் அப்படியே நின்றிருக்க, யாழ்மொழியின் ஒவ்வொரு முகபாவனைகளையும் விழிகளாலேயே தனக்குள் பதித்துக்கொண்டான் லியோ.
*************
விழி தீயிலொரு தவம் 08
https://agnitamilnovels.blogspot.com/2025/09/08.html
'காலமெல்லாம் உன்னைத் தேடி' என்னோட டிரெக்ட் புக் இப்போ அமேசன் கிண்டல்ல yazhini mithra அப்படிங்குறா Available ஆ இருக்கு.. மறக்காம ரீட் பண்ணிக்கோங்க.. >>>
India link 👇
https://www.amazon.in/dp/B0FLYRBNZG
Usa link 👇
https://www.amazon.com/dp/B0FLYRBNZG
என்ட், மையவிழிப் பார்வையிலே நாவலும் இப்போ Agni tamil novels அப்படிங்குற பேருல Available ஆ இருக்கு... >>>
INDIA link👇
https://www.amazon.in/dp/B0FL2S9LYC
USA link 👇
https://www.amazon.com/dp/B0FL2S9LYC
Comments
Post a Comment