விழிகள் 06
இந்திரசேனா சொன்னதைக் கேட்ட யாழ்மொழிக்கு கிட்டத்தட்ட மயக்கமே வந்துவிட்டது.
"இளவரசி, நீங்கள் தெரிந்துதான் பேசுகிறீர்களா, காலையில் பல முறை யாருக்கும் தெரியாமல் அரண்மனையை விட்டு வெளியில் சென்றிருக்கிறோம். ஆனால் இன்று... என்னால முடியாது, அரசர் என்னை தூக்கிலிடுவாரோ இல்லையோ! நீங்கள் செய்யும் காரியத்தால் உண்டாகும் பயத்தில் நானே தற்கொலை செய்துக்கொள்வேன் போல!"
என்று அவள் படபடவென பொரிந்துக்கொண்டே போக, இந்திராவோ பாவமாகப் பார்த்தாள்.
"இப்படி சொல்லாதே யாழ், நான் மட்டும் இப்போது வீராவை பார்க்காவிட்டால் உறக்கமே செல்லாது. சிறிது நேரம்தான், வேகமாகச் சென்று பார்த்து பேசிவிட்டு உடனே வந்து விடலாம். முடியாது என்று மட்டும் சொல்லாதே! என்னால் உனக்கு எந்த பிரச்சனையும் வராது, என்னை நம்ப மாட்டாயா?" என்று இந்திரசேனா கேட்ட விதத்தில் யாழ்மொழியால் மறுக்கவும் முடியவில்லை.
"அய்யோ இளவரசி, உங்களை எப்படி நம்பாமல்... சரி வருகிறேன், முடியாது என்றால் விடவா போகிறீர்கள்!" என்று எரிச்சலாக முணுமுணுத்தவாறு இந்திரசேனா கொடுத்த ஆடையை அணிந்துக்கொண்டாள் மற்றவள்.
"இந்த ஆடையை எங்கிருந்துதான் கண்டுபிடித்தீர்களோ, மந்திரவாதி போல் இருக்கிறேன்" என்று யாழ் முணுமுணுக்க, "எப்படி இருந்தால் என்ன யாழ், யாருக்கும் நம்மை தெரியாமல் இருந்தால் போதும். சரி வா வா, காவலர்களின் கண்களுக்கு சிக்கும் முன் சீக்கிரமாக அந்த ரகசிய பாதையின் கதவுக்கு சென்றுவிட வேண்டும்" என்று தோழியை யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்றாள் இந்திரசேனா.
அவள் அழைத்துச் செல்லும் பாதையை கவனித்தவளுக்கு விழிகள் ஆச்சரியத்தில் விரிந்துக்கொண்டன.
அரண்மனையில் யாரும் பயன்படுத்தாத ஒரு அறைக்குள்ளிருந்த ரகசிய கதவைத் திறந்து படிக்கட்டுகள் வழியே கீழ் பகுதிக்கு செல்ல, அங்கு ஒரு பாதை அமைக்கப்பட்டு வெளியே செல்வதற்கான வழியும் இருந்தது.
"இங்கு இப்படி கூட வழிகள் இருக்கிறதா!எத்தனை வருடங்கள் இங்கு இருந்திருக்கேன், இதை நான் அறியவே இல்லையே!" என்று யாழ்மொழி அதிர்ச்சியில் வாயைப் பிளக்க, "அரச பரம்பரையில் இருப்பவர்கள் மாத்திரமே அறிந்து வைத்திருக்கும் ரகசியம். ஏதாவது ஆபத்து என்றால், அரசரும் அவரை சார்ந்தவர்களும் இது வழியாக தப்பித்து விடுவார்கள். அதற்காகத்தான்" என்ற இந்திரசேனா அந்த பாதையின் முடிவுக்கு கிட்டத்தட்ட அவளை அழைத்தே சென்றிருந்தாள்.
ஆனால் யாழ்மொழிக்குதான் இதெல்லாம் புதிதாக இருந்தது. பின் இருவரும் யாருடைய கண்ணிலும் சிக்காமல் ஊருக்குள் நுழைய, கிட்டத்தட்ட இரவு தாமதமாகியிருந்ததால் எல்லா வீட்டுக் கதவுகளும் பூட்டப்பட்டிருந்தன.
"இளவரசி, ஏதாவது பேய் பிசாசு இருக்கப் போகிறது. எனக்கென்றால் பயமாக இருக்கிறது. பேசாமல் அரண்மனைக்கே திரும்பி சென்று விடலாமா?" என்று யாழ் பயந்தபடிக் கேட்க, "அய்யோ யாழ், நான்தான் உன்னுடன் இருக்கிறேனே, அப்போது எதற்கு பயம்?" என்று சுற்றி முற்றி தன்னவனைத் தேடியபடிக் கேட்டாள் இந்திரா.
"நீங்கள்தான் என் பயமே!" என்று மெல்ல முணுமுணுத்தவள், "தங்களுக்கு வீராவின் வீடு எங்கு இருக்கிறது என்று தெரியும் அல்லவா!" என்று கேட்க, "இல்லை தெரியாது, இதற்கு பிறகுதான் தேட வேண்டும்" என்று மற்றவள் சொல்ல, யாழ்மொழிக்கு இவளை என்ன செய்தால் தகும் என்றுதான் நினைக்கத் தோன்றியது.
இரு பெண்களும் மறைந்தவாறு வீராவைத் தேடிச் செல்ல, இங்கு காட்டுப் பாதைக்குள் ஓட ஆரம்பித்த வீராவோ எப்படியோ ஊருக்குள் வருவதற்கான வழியைக் கண்டுபிடித்து ஊருக்குள் புகுந்து விட, அவனை விடாது துரத்தி வந்தான் லியோ.
தலைத் தெறிக்க ஓடி வந்த வீராவுக்கு தன் இடத்தைப் பார்த்ததும் கேலியாக இதழ்கள் வளைய, 'இதுக்கப்பறம் அவனால என்னை பிடிக்கவே முடியாது' என்று வாய்விட்டே சொல்லிக்கொண்டவன், அங்கிருந்த குடிசைகளுக்குள் ஓடி மறைந்திருக்க, மற்றவனுக்கு எந்த திசையில் செல்வது என்று கூட தெரியவில்லை.
கையிலிருந்த துப்பாக்கியை இறுக்கிப் பிடித்தவாறு அவன் மெல்ல செல்ல, இங்கு ஒரு கிணற்றுக்கு பின்னே மறைந்திருந்தவாறு எட்டிப் பார்த்த இரு பெண்களின் விழிகளுக்கும் அவனின் முகம் அந்த நடுநிசி இருட்டில் கொஞ்சமும் தெரியவில்லை.
"இளவரசி, யார் அவன் ஒருவேளை திருடனாக இருப்பானோ? கடவுளே என்னை உயிரோடு அரண்மனைக்கு கொண்டு சேர்த்து விடு, அப்படி மட்டும் நடந்தால் நான் உனக்கு படையல் போடுகிறேன்" என்று இரு கைகளை தலைக்கு மேல் உயர்த்தி யாழ்மொழி வேண்டிக்கொள்ள, இப்போது லேசாக இந்திராவுக்கும் பயம் எட்டிப் பார்க்கத்தான் செய்தது.
'என் ஆசைக்காக நானே இவளை வம்பில் சிக்க வைக்க போகிறேன். வீரா எங்கு இருக்கிறான் அவனை எப்படி சந்திப்பது என்று கூட தெரியவில்லை. இதற்கு நடுவில் இவன் வேறு, இவனால் என்ன ஆபத்து காத்திருக்கிறதோ...' என்று உள்ளுக்குள் யோசித்தவள், தோழியை அழைத்துக்கொண்டு மெல்ல கோயிலை நோக்கிச் செல்ல, வீராவும் மெல்ல கோயிலின் பின்புறம்தான் நின்றிருந்தான்.
இரு பெண்கள் கோயிலுக்குள் நுழைவதை லியோ கண்டுவிட, விழிகளை சந்தேகமாக சுருக்கியவன் வேகமாக அத்திசை நோக்கி வந்தான்.
அப்போதுதான் அவன் வருகிறானா இல்லையா என எட்டிப் பார்த்த வீராவுக்கு இந்திராவைப் பார்த்ததுமே அவள் தன்னவள்தான் என புரிந்துப் போக, ஒருகணம் ஸ்தம்பித்துப் போய் நின்றுவிட்டான்.
"இவ இந்த நேரத்துல இங்க என்ன பண்றா, அதுவும் இப்படி ஒரு சூழ்நிலையில. அரண்மனைய விட்டு வெளியில வந்திருக்கான்னா ஏதாவது பிரச்சனையா இருக்குமோ? ஆனா இப்போ இதையெல்லாம் பத்தி யோசிக்க நேரமில்ல. அந்த வெள்ளைக்காரன் கண்ணுல இந்திரா படக் கூடாது. அதுக்குள்ள எப்படியாச்சும் இவள காப்பாத்தணும்"
என்று தீவிரமாக யோசித்தவன் அவர்களையே மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருக்க, லியோவோ அதிரடியாக கோயிலுக்குள் நுழைந்தான். ஆனால், அங்கு யாருமே இல்லை.
ஏற்கனவே ஏதோ ஒரு நிழல் தங்களை நெருங்கி வருவதை கண்ட யாழ்மொழி வேகமாக இந்திராவை இழுத்துக்கொண்டு ஒரு பெரிய கோயில் தூணிற்கு பின்னால் மறைந்துக்கொள்ள, வீராவும் மெல்ல அவர்களை நெருங்கினான்.
'இன்னைக்கு விட போறதில்ல' என்று லியோவோ பற்களைக் கடித்தவாறு வீராவைத் தேட, அப்போதுதான் அவனை விழிகளை சுருக்கி உற்றுப் பார்த்த யாழ்மொழிக்கு அந்த ஆங்கிலேயன் யாரெனப் புரிந்தது.
"அய்யய்யோ! இவனா..." என்று அவள் அதிர்ந்துப் போய் வேகமாக இந்திராவைத் திரும்பிப் பார்க்க, அங்கு அவள் இருந்தால்தானே!
"இளவரசி..." என்று அதிர்ந்துப் போய் தேடிக்கொண்டே முன்னே சென்றவளின் கரத்தை ஒரு வலிய கரம் பிடித்திழுக்க, அவனின் மார்பிலேயே சென்று மோதி நின்றாள் யாழ்மொழி.
"ஆஆ..." என்று நெற்றியை தேய்த்து விட்டவாறு அவள் நிமிர்ந்துப் பார்க்க, யாழ்மொழி அதிர்ந்தாளோ இல்லையோ அந்த இடத்தில் அவளை எதிர்பார்க்காது லியோதான் அதிர்ந்துப் போய்விட்டான்.
"ஓடிவிடு யாழ்!" என்று மூளை எச்சரிக்க, அவனிடமிருந்து தப்பித்து ஓடப் போனவளை மீண்டும் பிடித்திழுத்தவன், அவளை சுவற்றில் சாய்த்து இரு பக்கமும் அணைக் கட்டிக்கொள்ள, பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டாள் அவள்.
அதேநேரம் இந்திராவின் வாயைப் பொத்தி வீரா தன்னோடு அணைத்திருக்க, இந்திசேனாவிற்கு நடப்பை உணரவே சில நிமிடங்கள் தேவைப்பட்டன.
"நான்தான் இந்திரா, பயப்படாத!" என்று அவன் மெல்ல காதில் கிசுகிசுக்க, தன்னை ஆசுவாசப்படுத்தியவாறு திரும்பி அவனைப் பார்த்தவள், "வீரா..." என்றழைத்தவாறு அவனை அணைத்துக்கொள்ள, இதை எதிர்பார்க்காதவனாய் சிலையாகிவிட்டான் அவன்.
"அந்த ஆங்கிலேய அதிகாரிக்கு பயந்து ஓடி வந்தவன் நீதானா வீரா, நிஜமாகவே நான் பயந்தே போய்விட்டேன். ஆனால், அவன் ஏன் உன்னை துரத்துகிறான்?" என்று அவனை அணைத்தவாறு அவள் கேட்க, அவனுக்குதான் பேச்சே வரவில்லை.
"அது... அது வந்து..." என்று அவனின் வார்த்தைகள் தடுமாற, "எதற்கு இத்தனை தடுமாற்றம்?" என்று கேட்டுக்கொண்டே நிமிர்ந்துப் பார்த்தவள் அப்போதுதான் அவனுடைய முகத்தைப் பார்த்துவிட்டு தான் செய்யும் காரியத்தை உணர்ந்தாள்.
நாக்கைக் கடித்துக்கொண்டவாறு மெல்ல அவனிடமிருந்து அவள் விலக, "இந்த நேரத்துல நீ இங்க என்ன பண்ற இந்திரா?" என்று கேட்டான் சந்தேகமாக.
"தங்களை பார்க்கத்தான்" என்று அவள் தயங்கியவாறு சொல்ல, ஒருகணம் அதிர்ந்து விழித்தவன் பின் குறும்பாகப் புன்னகைத்தான்.
"இளவரசிக்கு என்னை பார்க்க இந்த நடுராத்திரி அரண்மனைய விட்டு வெளியில வர்ற அளவுக்கு தைரியம் இருக்கா? ஆச்சரியமா இருக்கே முருகா..." என்று அவன் போலியாக ஆச்சரியப்படுவது போல் விழிகளை உருட்ட, அவனை முறைத்துப் பார்த்தவள் உதட்டை சுழித்தவாறு திரும்பி செல்லப் போனாள்.
உடனே அவளை இழுத்து தன்னோடு அணைத்துக்கொண்டவன், "இப்போ போக முடியாது இந்திரா, அந்த வெள்ளைக்காரன் என்னைதான் தேடிட்டு இருக்கான்" என்று ஹஸ்கி குரலில் சொல்ல, அப்போதுதான் யாழ்மொழியின் ஞாபகம் வந்தவளாக சுற்றி முற்றி தேட ஆரம்பித்தாள் அவள்.
வீராவோ தன்னவளை கேள்வியாகப் பார்க்க, "யாழ், எங்கே அவள்? என்னுடன் அல்லவா வந்தாள், நா.. நான் அவளை தொலைத்து விட்டேனா?" என்று நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு அவள் பதற, இங்கு லியோவின் பார்வைக்கு முன் நடுங்கியபடி நின்றுக்கொண்டிருந்தாள் யாழ்மொழி.
"நா.. நான் போக வேண்டும், என்னை விடு!" என்று அவள் செல்ல முயற்சிக்க, மேலும் அவளை நெருங்கி நின்றான் லியோ.
ஏனோ அவனின் நெருக்கத்தில் அவளால் மூச்சு விடக் கூட முடியவில்லை. மூச்சு விடக் கூட சிரமப்பட்டவளாக, அவள் அதிர்ந்துப் போய் நிற்க, "நீ இங்க என்ன பண்ற?" என்று அழுத்தமாகக் கேட்டான் அவன்.
"அது நா.. நான் இங்கு..." என்று என்ன சொல்வதென்று தெரியாமல் யாழ் தடுமாற, அவளை விழிகளை கூர்மையாக்கி சந்தேகமாகப் பார்த்தவன், "நீயும் புரட்சிகாரங்கள்ல ஒருத்திதான், இப்போ என்கிட்ட இருந்து தப்பிச்சவனும் கண்டிப்பா உன்னை சேர்ந்தவனாதான் இருக்கணும். இந்த நேரத்துல இங்க இருக்கேன்னா இதை தவிர வேற என்ன காரணம் இருக்க போகுது?" என்றான் கர்ஜிக்கும் குரலில்.
அவன் சொன்னதை கிரகிக்கவே அவளுக்கு சில நிமிடங்களாக உடனே சுதாகரித்தவள், "என்ன! புரட்சியா... சாதாரண பூச்சியைப் பார்த்தாலே பயந்து நடுங்கும் நான், புரட்சிக் குழுவில் இருக்கிறேனா? வாய் இருக்கிற என்று எதை வேண்டுமானாலும் பேசுவீரா?" என முயன்று தைரியத்தை வரவழைத்துப் பேசினாள்.
தலையை சற்று சரித்து அவளை ஆழ்ந்த பார்வைப் பார்த்தவன், "அப்போ இந்த நேரத்துல யாருக்கும் தெரியாம இங்க எதுக்காக சுத்திட்டு இருக்க? பாவமா முகத்த வச்சுக்கிட்டா எதையும் நம்பிருவேன்னு நினைச்சியா, நெவர்! என்னை ஏமாத்த முடியாது. உன்கூட இன்னொருத்தரும் இருந்தாங்க, வூ இஸ் தட்? யாருன்னு சொல்லு" என்று கிட்டத்தட்ட உறும, அவன் பேசியது பாதி புரிந்தும் புரியாமலும் இருந்தது அவளுக்கு.
மிரட்சியாக அவனைப் பார்த்த யாழ்மொழிக்கு உண்மையை சொல்லவும் முடியவில்லை, சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.
மீண்டும் தைரியத்தை வரவழைத்து அவனை முறைத்துப் பார்த்தவள், "நா.. நான் எதற்கு தங்களிடம் சொல்ல வேண்டும்? அது என் தனிப்பட்ட ரகசியம், முதலில் என்னை விட்டு தள்ளி நில்லுங்கள், நான் போக வேண்டும். நீங்கள் கேட்கும் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லை" என்றுவிட்டு அவனை கரத்தை தட்டிவிட, மின்னல் வேகத்தில் மீண்டும் அவளை சுவற்றில் சாய்த்து அவள் தாடையைப் பற்றி தன் முகம் நோக்கி நிமிர்த்தினான் லியோ.
"ஹவ் டேர் யூ... என்கிட்ட யாரும் இப்படி பேசினது கிடையாது. ஆஃப்டர் ஆல் ஒரு பொண்ணு அதுவும் யூ ஆர் ஜஸ்ட் அ சேர்வன்ட். நீ என்னை எதிர்த்து பேசுறியா!" என்று விழிகள் சிவக்கப் பேச, யாழ்மொழிக்கு பயத்தில் விழிகள் கலங்கி கண்ணீர் கன்னத்தின் வழியே உருண்டோடியது.
"என்னை விடு!" என்று உதடுகள் துடிக்க பயத்தோடு அவள் சொல்ல, அவளை நெருங்கி நின்றிருந்தவனுக்கும் அவளுக்கும் வெறும் நூலிடைவெளிதான்.
இருவரின் மூச்சுக்காற்றும் கலக்க, அவளின் முகத்தையே பார்த்திருந்த லியோவின் கோப முகம் அவளின் அழகில் மெல்ல மறைந்து மென்மையை தத்தெடுத்தது.
ஏனோ அவளின் விழிகளை விட்டு அவனால் பார்வையைத் திருப்ப முடியவில்லை. தன்னை மறந்த நிலையில் அவளையே லியோ பார்த்திருக்க, அவனின் முகத்தில் தெரியும் மாற்றத்தையும் அவளின் தாடையைப் பற்றியிருந்த அவனுடைய கரங்களில் உணர்ந்த தளர்ச்சியையும் உணர்ந்த யாழ்மொழிக்கு ஒரு யோசனைத் தோன்றியது.
உடனே அவனை தள்ளிவிட்டு ஓடப் போக, சுதாகரித்தவன் அவளைப் பாய்ந்து பிடித்து முழங்கையைப் பற்றியிழுத்து அவள் கரத்தை மடக்கி பின்னாலிருந்து அணைத்துக்கொண்டான்.
"கொஞ்சம் அசந்ததும் என்னையே ஏமாத்த பார்க்குறல்ல, சும்மா சொல்லக் கூடாது அழகு மட்டுமில்ல உனக்கு தைரியமும் ஜாஸ்திதான், இருந்தாலும் அவ்வளவு சீக்கிரம் என்கிட்ட இருந்து தப்ப முடியாது. உன்னால நான் ரொம்ப டென்ஷன் ஆகியிருக்கேன், இப்போ... புரட்சிக்காரங்க தப்பிச்சு ஓடுற நேரமா பார்த்து நீயும் திருட்டுத்தனமா இங்க நடமாடிக்கிட்டு இருக்க. ஒழுங்கா உண்மைய சொல்லிரு, இல்லன்னா..." என்று கிட்டத்தட்ட அவன் மிரட்ட, அவனின் பிடியில் உண்டான வலியில் முகத்தை சுருக்கியவளுக்கு பயத்தில் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
"அது... அது நான் என் காதலனை சந்திக்க வந்தேன். அவ்வளவுதான்" என்று அவள் இந்திராவை காட்டிக் கொடுக்காது தான் காதலிப்பதாக சொல்லிவிட, சில கணங்கள் அவளை வெறித்துப் பார்த்திருந்தவனுக்கு தான் என்ன உணர்கிறோம் என்றே தெரியவில்லை.
அவனோ மெல்ல அவளை விட்டு, "யார் அவன்?" என்று இறுகிய குரலில் கேட்க, "அது... சந்தையில் வேலை செய்யும் ஒருவன்தான். அவனைக் காணத்தான் அரண்மனையை விட்டு என் தோழியை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தேன். ஆங்... அவன் யாராக இருந்தால் தங்களுக்கு என்ன? தாங்கள் யாரை தேடி வந்தீர்களோ, அவனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று வெடுக்கென சொல்லி உதட்டை சுழித்தாள் யாழ்.
லியோ எந்த பதிலும் சொல்லவில்லை. இறுகிய முகமாக அவளைப் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு காரணமே இல்லாமல் மனம் வெறுமையாக இருப்பது போலிருந்தது.
அதேநேரம் வீராவோடு சேர்ந்து தூணிற்கு பின்னே மறைந்திருந்து எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த இந்திரா, "என் தேவைக்காக அழைத்து வந்து அவளை பிரச்சனையில் சிக்க வைக்க எனக்கு விருப்பமில்லை வீரா, நான் இப்போதே சென்று அவளை அழைத்துக்கொண்டு அரண்மனைக்கு திரும்புகிறேன். மறுபடியும் சந்திக்கலாம்" என்று புன்னகையோடு சொல்லிவிட்டு நகரப் போக, அவள் கரத்தைப் பற்றியிழுத்தான் வீரா.
அவளின் பின்னந்தலையைப் பற்றி அவளிதழில் அழுந்த முத்தத்தைப் பதித்து விட்டு விலகியவன், "மறுபடியும் பார்க்குற வரைக்கும் நியாபகம் இருக்கட்டும்" என்று சொன்னவாறு அந்த இடத்திலிருந்து ஓடி மறைந்திருக்க, வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைத்தவாறு தோழியைத் தேடிச் சென்றாள் அவள்.
************
விழி தீயிலொரு தவம் 07
https://agnitamilnovels.blogspot.com/2025/08/07.html
'காலமெல்லாம் உன்னைத் தேடி' என்னோட டிரெக்ட் புக் இப்போ அமேசன் கிண்டல்ல yazhini mithra அப்படிங்குறா Available ஆ இருக்கு.. மறக்காம ரீட் பண்ணிக்கோங்க.. >>>
India link 👇
https://www.amazon.in/dp/B0FLYRBNZG
Usa link 👇
https://www.amazon.com/dp/B0FLYRBNZG
என்ட், மையவிழிப் பார்வையிலே நாவலும் இப்போ Agni tamil novels அப்படிங்குற பேருல Available ஆ இருக்கு... >>>
INDIA link👇
https://www.amazon.in/dp/B0FL2S9LYC
USA link 👇
Comments
Post a Comment