விழிகள் 05
இந்திரசேனா சொன்னதைக் கேட்டு யாழ்மொழி அதிர்ந்துப் போய் நிற்க, அவளோ கண்ணீர் வடித்தபடி ஜன்னல் வழியே வெளியே வெறித்துக்கொண்டு நின்றிருந்தாள்.
"இப்போது எதற்கு அழுகுறீர்கள் இளவரசி, அரசருக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்து நான்தான் அழ வேண்டும்" என்று அவள் சொல்ல, தோழியை நிமிர்ந்து பாவமாகப் பார்த்தாள் மற்றவள்.
"சரி விடுங்கள், மனதை பறி கொடுத்த பிறகு செய்வதற்கு எதுவுமில்லை. ஆனால், இதை அரசர் ஏற்றுக்கொள்வார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?" என்று யாழ்மொழி கூரிய பார்வையோடுக் கேட்க, விழிகள் கலங்க நின்றிருந்த இந்திராவுக்கு நிஜமாகவே அதற்கான பதில் தெரியவில்லை.
"இளவரசர் நந்தனுக்கும் உங்களுக்கும் திருமணம் பேசி முடிவு செய்துவிட்டார்கள், இப்போது சென்று நீங்கள் காதலிப்பதை சொன்னால்... அதுவும் சாதாரண மக்களில் ஒருவனை நீங்கள் காதலிப்பதாக சொன்னால் அவர் ஏற்றுக்கொள்வார் என்பது சந்தேகம்தான். அப்படி இருக்கையில் இது எந்த வகையில் சாத்தியமாகும் என்று எண்ணுகிறீர்கள் இளவரசி, எனக்கு என்னவோ இது சரியான முடிவாக தோன்றவில்லை" என்று தன் கருத்தை அவள் சொல்லி முடிக்க, இந்திரசேனாவோ பதறியேவிட்டாள்.
"யாழ், வீராவை மறந்து விடு என்று மட்டும் சொல்லாதே! நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன், என்னால் முடியவில்லை. எனக்கு இந்த ராஜ்ஜியம், ஆடம்பரம், பணம் எதுவுமே வேண்டாம். அவனோடு வாழ்ந்தால் மட்டும் போதும் என்று தோன்றுகிறது" என்று அவள் சொல்ல, தன் இளவரசியை வாயைப் பிளந்துக்கொண்டு பார்த்தாள் யாழ்மொழி.
"என்ன, நீங்கள் தெரிந்து பேசுகறீர்களா, இல்லை தெரியாமல் பேசுகிறீர்களா! காதலுக்காக ராஜ்ஜியத்தை உதறி தள்ளுவதா! இப்போது தான் நிஜமாகவே எனக்கு மயக்கம் வருவது போலிருக்கிறது. இருந்தாலும், உங்களின் வாழ்க்கை என்னை போன்ற பல பேரின் கனவு, இப்போது வந்த ஒருவனுக்காக மொத்தத்தையும் உதறுவேன் என்று கூறுவது மடத்தனமாக இல்லையா?" என்று சொல்லி விட்டுதான் சுதாகரித்தவள், "அய்யோ இளவரசி, எல்லை மீறி பேசிவிட்டேன். மன்னித்து விடுங்கள்! ஏதோ ஒரு ஆசேத்தில் ஏதேதோ பேசிவிட்டு.. ச்சே!" என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டாள்.
ஆனால், இந்திரசேனாவோ விரக்தியாகப் புன்னகைத்தாள்.
"நீ இதுவரை யாரையாவது காதலித்திருக்கிறாயா?" என்று தோழியின் விழிகளை நேருக்கு நேராகப் பார்த்து அவள் கேட்க, யோசனையோடு இல்லையெனும் விதமாக தலையசைத்தாள் யாழ்மொழி.
"காதலித்து பார் புரியும்" என்று மட்டும் சொன்னவள் அங்கிருந்து நகரப் போக, வேகமாக சென்று இந்திராவின் முன்னே நின்றுக்கொண்டவள், "இதற்கு என்ன அர்த்தம்?" என்று கேட்டாள் குழப்பத்தோடு.
"காதலித்தால் மட்டுமே அந்த உணர்வை புரிந்துக்கொள்ள முடியும். தன்னவனுக்காக என்ன வேண்டுமானாலும் மனம் செய்யத் துடிக்கும். அத்தனை அழகான ஒரு உணர்வு, அதை உன்னால் இப்போது புரிந்துக்கொள்ள முடியாது" என்று இந்திரா சொல்லிவிட்டு செல்ல, தலையை சொரிந்துக்கொண்டாள் யாழ்மொழி.
"இவர்கள் காதலித்ததே தவறு என நான் இவர்களை தடுக்க முயன்றால், என்னையும் சேர்ந்து காதலிக்க சொல்கிறார்களே! ஓஹோ.. என்னையும் கூட்டுக்களவாணியாக மாற்றப் பார்க்கிறார்களோ... இருக்கலாம் இருக்கலாம். காதலாவது மண்ணாவது! இருக்கும் பிரச்சனையில் இது வேற" என்று சலிப்பாக விழிகளை உருட்டியவாறு தன் வேலைகளை கவனிக்கச் சென்றாள் அவள்.
அடுத்த இரண்டு நாட்கள் கழிந்த நிலையில், ஊரே மன்னர் எடுத்திருக்கும் முடிவைப் பற்றி அறிந்து பரபரப்பாக இருந்தது.
மக்களுக்கிடையில் கிட்டத்தட்ட மன்னருக்கு எதிரான புரட்சி வெடிக்க காத்திருக்க, சந்தையில் கூட்டமாக நின்றிருந்தனர் மக்கள் கூட்டம்.
"இது மண்ணுல எங்களுக்கும்தானே உரிமை இருக்கு, இந்த மண்ணோட வளங்கள அந்த வெள்ளைக்காரனுங்களுக்கு கொடுக்க மன்னர் எப்படி சம்மதிப்பாரு? இதை என்னால கொஞ்சம் கூட ஏத்துக்க முடியல..." என்று ஒரு பெண்மணி கத்த, "ஆமா ஆமா, இந்த வளங்கள் நமக்கு சொந்தமானது. காசுக்காக மன்னர் எடுத்த முடிவு நாம ஆமோதிக்கவே கூடாது. இதுக்கு எதிரா நாம புரட்சி பண்ணணும்" என்று குரல் கொடுத்தான் ஒருவன்.
"வெள்ளைக்காரங்களோட அராஜகத்த ஏற்கனவே தாங்க முடியல. இதுல இந்த உரிமைகளையும் தூக்கி கொடுத்தா நாம எங்கதான் போறது, சொந்த மண்ணுலயே அடிமையா வாழ்ந்துட்டு இருக்கோம், இன்னும் எத்தனை காலத்துக்கு இது நீடிக்குமோ தெரியல. அவனுங்கள துரத்துறது விட்டுட்டு உரிமைய தூக்கி கொடுக்குறதா. அரசரோட செயல நாங்க வன்மையா கண்டிக்குறோம்"
என்று ஆளாளுக்கு கோபமாகப் பேச, இதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த வீராவோ எல்லோர் முன்னும் வந்து நின்றான்.
"கொஞ்ச நேரம் எல்லாரும் அமைதியா இருங்க, அரசர் பண்ணத என்னாலயும் ஏத்துக்க முடியலதான். ஆனா, எனக்கென்னவோ அரசர் விருப்பப்பட்டு பண்ண மாதிரி தெரியல. இந்த வெள்ளைக்காரனுங்களோட வற்புறுத்தலா இல்லன்னா மிரட்டலா கூட இருக்கலாமே!" என்று அவன் சொல்ல, "ஏன் வீரா, நம்மள பாதுகாக்குறது அரசரோட கடமை. நமக்காக அவங்கள எதிர்த்து நின்னிருக்கலாமே!" என்று பதிலுக்கு கேட்டான் ஒருவன்.
வீராவோ விரக்தியாகப் புன்னகைத்தவன், "அவங்கள எதிர்த்து நிக்குற படை பலமும் ஆயுத பலமும் நம்ம அரசர்கிட்ட இருந்திருந்தா எப்போவோ அவங்கள அடிச்சி விரட்டியிருக்கலாம். ஆனா, அந்த வெள்ளைக்காரனுங்க கிட்ட ஆயத பலம் ஜாஸ்தி, அவங்க நினைச்சா அவங்களோட நாட்டுலயிருந்து ஆயுதங்கள இறக்குமதி பண்ணலாம். ஒருவேள அவங்களோட ஒப்பந்தத்துக்கு அரசர் சம்மதிச்சிருக்கலன்னா நஷ்டம் நமக்குதான். நம்ம நிலத்தையே அழிச்சிருவானுங்க" என்று தெளிவாக சொல்லி முடித்தான்.
அவனுக்கு முன்னே இருந்த மக்களோ ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள, "இப்போதான் புரியுது வீரா, இவனுங்கள சீக்கிரம் நாட்டை விட்டு ஓட விடணும். வரிப்பணமும் அதிகரிச்சிக்கிட்டே போகுது, கொடுக்கலன்னா தண்டிக்கிறாங்க. இல்லன்னா நம்ம வீட்டு பொண்ணுங்களையே தூக்கிட்டு போறானுங்க" என்று வேதனையோடு சொன்னார் கூட்டத்திலிருந்த பெரியவர்.
"அவனுங்களுக்கு எதிரா நாம புரட்சி பண்ணிக்கிட்டே இருக்கணும், பண்ணணும்..." என்று அழுத்தமாக சொன்னான் வீரா.
அன்றிரவு, ஆங்கிலேய அரண்மனையிலுள்ள பாரில் அமர்ந்திருந்தனர் சில அதிகாரிகள், லியோ உட்பட.
வில்லியமோ கையிலிருந்த பெரிய க்ளாள் ஜாரிலிருந்த மதுவை குவளையில் ஊற்றி அதை வாயில் சரிக்க, ஆளாளுக்கு தத்தமது குவளைகளில் ஊற்றி மூக்கு முட்ட குடித்தனர்.
"அரசரோட அரண்மனையில எவ்வளவு அழகான பொண்ணுங்க, வாவ்! பார்த்துட்டே இருக்கலாம்னு தோனுச்சு அதுவும் அந்த ஒரு பொண்ணு. இந்த ட்ரிங்க்ஸோட அவளும் பக்கத்துல இருந்தா, இட் வில் பீ ஃபீல் லைக் ஹெவென்" என்று வில்லியம் யாழ்மொழியை நினைத்தவாறு சொல்ல, "ரியலி! அப்போ எடுத்துக்க வேண்டியதுதானே" என்று கேலியாக சொல்லி சிரித்தனர் மற்றவர்கள்.
லியோவோ அவன் பேசுவதை அமைதியாகக் கேட்டவாறு மதுவை அருந்திக்கொண்டிருக்க, வில்லியமோ சிரித்தவாறு இல்லை எனும் விதமாக தலையசைத்தான்.
"அரண்மனையில வேலை பார்க்குற பொண்ணு, அவ்வளவு சீக்கிரம் கை வச்சிர முடியாது. வில் சீ..." என்ற வில்லியமைப் பார்த்து போதையில் சிரித்தான் லியோ.
அவன் சிரிப்பதை முதல் முறை பார்க்கின்றனர் மொத்தப் பேரும். போதை தலைக்கேறியதில் அவன் தன்னை மீறி சிரிக்க, "சார், வாட் ஹேப்பன்ட்?" என்று சற்று மரியாதையாகவே கேட்டான் வில்லியம்.
"யூ நோ வாட், நான் பார்த்த பொண்ண நீ பார்த்திருந்தா இப்படி பேச மாட்ட. வாவ்! எவ்வளவு அழகான கண்கள் தெரியுமா... ஒரே பார்வைதான், க்ரிஸ்ட்டிய கூட நான் மறந்துட்டேன்" என்று போதையில் அவன் குளறியபடி பேசிக்கொண்டு போக, அவனை அதிர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தனர் மற்ற அதிகாரிகள்.
"வூ இஸ் ஷீ?" என்று அவனையே குறுகுறுவெனப் பார்த்தவாறு வில்லியம் கேட்க, "ஐ டோன்ட் நோ, பட் ஷீ இஸ் பியூட்டிஃபுல்" என்று மனக்கண் முன் தோன்றிய அவளுடைய முகத்தையே பார்த்தவாறு சொன்னான் லியோ.
"சாருக்கு போதை ஏறிடுச்சுன்னு நினைக்கிறேன்" என்று ஜேம்ஸ் தன் பக்கத்திலிருந்தவனின் காதில் கிசுகிசுக்க, தள்ளாடியபடி அறைக்கு நடந்துச் சென்றான் லியோ.
அன்றைய நாள் கழிந்து அடுத்த நாளும் விடிந்தது.
லியோவோ நேற்றிரவு அதிகமாக குடித்ததில் உண்டான தலைவலியில் நெற்றியை நீவி விட்டவாறு தன் ஆஃபீஸ் அறையில் அமர்ந்திருக்க, அப்போது உள்ளே வந்த ஜேம்ஸ் அவனை அடக்கப்பட்ட சிரிப்போடு பார்த்தான்.
அதை கவனித்தவன் விழிகளை நிமிர்த்தி அவனை ஒரு பார்வைப் பார்த்து, "வாட்?" என்று காட்டமாகக் கேட்க, "நேத்து ராத்திரி போதையில நீங்க ஒரு பொண்ண பத்தி சொன்னீங்கல்ல சார், அது அந்த பொண்ணுதானே!" என்று சிரித்தவாறுக் கேட்டான் ஜேம்ஸ்.
"வாட்?" இப்போது அவனுடைய குரல் அதிர்ச்சியோடு ஒலித்தது.
மற்றவனும் அவன் பேசியது அத்தனையையு ஒன்று விடாமல் சொல்லி முடிக்க, அதிர்ந்துப் பார்த்தவன் உள்ளுக்குள் தன்னைத்தானே திட்டிக்கொண்டு ஒரே நொடியில் தன் முகபாவனையை கோபமாக மாற்றினான்.
"இல்ல சார், அது.. நேத்து ராத்திரி நீங்க..." என்று அவனின் கோபமான முகத்தைப் பார்த்ததும் ஜேம்ஸிற்கு வார்த்தைகள் தடுமாற, "வாட் ரப்பிஷ்! போய் வேலைய கவனி" என்று மற்றவன் அடித் தொண்டையிலிருந்து கத்தினான்.
அதற்குமேல் அவன் அங்கு இருப்பானா என்ன!
விட்டால் போதுமென்று ஜேம்ஸ் ஓடியிருக்க, 'நான் அப்படி பேசினேனா என்ன, ச்சே! இனி குடிக்கவே கூடாது' என்று ஒரு முடிவு எடுத்தவனாக சலிப்பாக விழிகளை உருட்டினான் லியோ.
கிட்டத்தட்ட ஒரு வாரம் கழிந்திருக்க, அன்று வீராவின் தலைமையில் புரட்சியாளர்கள் ஆங்கிலேய அரண்மனையை தாக்கக் கிளம்பினர்.
"இன்னைக்கு இவனுங்கள சும்மா விடக் கூடாது வீரா, இன்னும் விட்டா நம்ம மண்ணுல இருக்குற எல்லாத்தையும் அவனுங்களுக்கு சொந்தமாக்கிருவானுங்க" என்று ஒருவன் சொல்ல, "அவனுங்கள தாக்குங்க, ஆனா அவங்க துப்பாக்கியால சுடும் போது நீங்களும் கவனமா இருங்க. சொல்றது புரியுதா?" என்று எச்சரித்தான் வீரா.
"ம்ம்.. புரியுது வீரா" என்று எல்லோரும் சொல்லிக்கொள்ள, மரத்திற்கு பின்னே சிலர் மறைந்து நின்றுக்கொண்டிருக்க, சிலர் மரத்திற்கு மேலே ஏறி கிளைகளுக்கு நடுவே மறைந்திருந்து தாக்க ஆரம்பித்தனர்.
ஆங்கிலேய அரண்மனையில் கண்ணாடிகளை கற்களால் வீசி அவர்கள் உடைக்க, வீராவோ ஈட்டியை ஒரு அதிகாரியின் மேல் குறி வைத்து செலுத்தினான்.
"ஆஃபீஸர்ஸ், நம்மள சுத்தி புரட்சியாளர்கள் இருக்காங்க. இன்னைக்கு ஒருத்தரும் ஊர் போய் சேர கூடாது, எல்லாரையும் தாக்குங்க" என்று வில்லியம் கத்த, ஆங்கிலேய அதிகாரிகள் துப்பாக்கியை தயார்படுத்தி சுட ஆரம்பித்தனர்.
"அவங்க சுட ஆரம்பிச்சிட்டாங்க, யாரும் மறைஞ்சிருக்குற இடத்துலயிருந்து வெளியில வராதீங்க" என்று கத்திய வீரா, ஆங்கிலேயர்களின் துப்பாக்கி குண்டுகளிலிருந்து தப்பித்து ஒரு பெரிய கல்லிற்கு பின்னே மறைந்துக்கொண்டவாறு ஈட்டியால் குறி வைத்து தாக்க, இந்த குறியும் தப்பவில்லை.
சரியாக ஒரு அதிகாரியின் வயிற்றை கிழித்துக்கொண்டு அந்த ஈட்டி செல்ல, இதை தன் அறை பால்கனியிலிருந்து முகம் சிவக்க பார்த்துக்கொண்டிருந்தான் லியோ.
"ஹவ் டேர் இஸ் ஹீ..." என்று பற்களைக் கடித்தவன், தன் கையிலிருந்த துப்பாக்கியில் புல்லட்டை செலுத்தி கீழே செல்ல போக, அவனின் மூளைக்குள் ஒரு மின்னல் வெட்டியது.
உடனே விஷம சிரிப்போடு கட்டிடத்தின் மாடிக்கு சென்று மேல் இருந்து கீழே துப்பாக்கியால் குறி வைத்த லியோ, அங்கிருந்த புரட்சியாளன் ஒருவனை குறி வைத்து சுட்டிருந்தான்.
அவனோ வலியில் அலறிக்கொண்டு தரையில் விழுந்து விட, எல்லாருக்கும் அத்தனை அதிர்ச்சியாக இருந்தது.
மாடியில் நின்றிருந்தவனுக்கு கீழே மறைந்து நின்றிருந்தவர்கள் நன்றாகத் தெரிய, ஒவ்வொருவரையும் அவன் சுட்டுத் தள்ள, வீராவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
மரங்களுக்கிடையே மறைந்திருந்து வேகமாக அவனுக்கு அருகில் ஓடி வந்த பாலா, "நம்ம ஆளுங்கள பாதிப்பேர கொன்னுட்டாங்க வீரா, இப்போ என்ன பண்றது?" என்று பதற்றமாகக் கேட்க, "பாலா, இதுக்கு மேல இங்க இருக்குறது பாதுகாப்பு இல்லை. நான் இவனுங்கள திசை திருப்புறேன். நீ இங்க இருந்து எல்லாரையும் அழைச்சுக்கிட்டு போயிரு!" என்றான் மற்றவன் தீவிரமான குரலில்.
"வீரா, என்ன சொல்லுற? அவனுங்ககிட்ட நீ தனியா சிக்கினா நிஜமாவே உன்னையும் கொன்னுடுவாங்க" என்று பாலா பயத்தோடு சொல்ல, "அதை நான் பார்த்துக்குறேன். எப்படியாச்சும் அவனுங்கிட்ட இருந்து தப்பிச்சு நம்ம இடத்துக்கு வந்துடுறேன். நான் சொன்னதை மட்டும் நீ பண்ணு!" என்று வீரா முகத்தை மறைத்துக்கொண்டு அவர்களை நோக்கிச் சென்றான்.
லியோவோ விழிகளை சுருக்கி வேறு யாராவது புரட்சியாளர்கள் இருக்கின்றார்களா என பார்த்துக்கொண்டிருக்க, ஆங்கிலேய அதிகாரிகளின் விழிகளுக்கு பட காட்டு வழியே ஓடினான் வீரா.
உடனே லியோ அவனுக்கு குறி வைத்து சுட, வீராவோ அதிகாரிகளின் துப்பாக்கி தாக்குதலிலிருந்து தப்பித்து ஓடி மறைந்திருந்தான்.
ஆனால், இந்த முறை லியோ விடவில்லை. கோபத்தில் காலை தரையில் உதைத்தவன், வேகமாக அரண்மனையிலிந்து வெளியேறி வீராவை துரத்தியவாறு காட்டுப் பாதைக்குள் ஓட, இதற்கிடையில் பணிப்பெண்கள் உறங்கிக்கொண்டிருக்கும் அறையில் ரகசியமாக நுழைந்தது ஒரு உருவம்..
யாழ்மொழியோ நன்றாக உறங்கிக்கொண்டிருக்க, மெல்ல அவளை நெருங்கிய அந்த உருவம் படுத்திருந்தவளை மெல்ல தட்டி எழுப்ப, விழிகளைத் திறந்தவளோ அதிர்ச்சியின் உச்சகட்டத்தில் கத்தப் போனாள்.
உடனே அவளின் வாயைப் பொத்திய இந்திரசேனா, "யாழ், நான் தான். பயப்படாதே! என்னுடன் வா..." என்று ஹஸ்கி குரலில் சொல்லி அவளை அந்த அறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்ல, அதிர்ச்சியிலிருந்து வெளிவரவே யாழ்மொழிக்கு சில நிமிடங்கள் பிடித்தன.
"இளவரசி, என்ன இது?" என்று மேலிருந்து கீழ் அவளை அதிர்ச்சியாகப் பார்த்தவாறு யாழ்மொழி கேட்க, முகம் மட்டும் தெரிவது போல் தலைக்கவசத்துடன் கூடிய நீண்ட கவுன் போல் ஒரு பெரிய ஆடையை அணிந்திருந்த இந்திரா பாவம் போல் தோழியைப் பார்த்தாள்.
"எனக்கு இப்போதே வீராவை பார்க்க வேண்டும் போலிருக்கிறது யாழ், அவனுக்கு ஏதோ ஆபத்து என்று மனம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. எனக்கு உன்னை விட்டால் வேறு யாருமில்லை. அதுமட்டும் இல்லாமல் அரண்மனையிலிருந்து வெளியே செல்ல எனக்கு ஒரு ரகசிய வழி தெரியும். இருவரும் சேர்ந்து சென்று பார்த்து விட்டு வரலாம், நான் அணிந்திருப்பது போல் உனக்கும் ஒரு ஆடையை தயாராகத்தான் வைத்திருக்கிறேன். ஹிஹிஹி..."
என்று இந்திரா தன் திட்டத்தை சொல்லி அசடுவழிய, ஸ்தம்பித்துப் போய்விட்டாள் யாழ்மொழி.
**********
விழிகள் 06 >>>
https://agnitamilnovels.blogspot.com/2025/08/06.html
'காலமெல்லாம் உன்னைத் தேடி' என்னோட டிரெக்ட் புக் இப்போ அமேசன் கிண்டல்ல yazhini mithra அப்படிங்குறா Available ஆ இருக்கு.. மறக்காம ரீட் பண்ணிக்கோங்க.. >>>
India link 👇
https://www.amazon.in/dp/B0FLYRBNZG
Usa link 👇
https://www.amazon.com/dp/B0FLYRBNZG
என்ட், மையவிழிப் பார்வையிலே நாவலும் இப்போ Agni tamil novels அப்படிங்குற பேருல Available ஆ இருக்கு... >>>
INDIA link👇
https://www.amazon.in/dp/B0FL2S9LYC
USA link 👇
Comments
Post a Comment