விழிகள் 04




வீரா சொன்ன வார்த்தைகளை நினைத்தவாறு பிரம்மை பிடித்தது போல் அமர்ந்திருந்தாள் யாழ்.


"என்ன நேர்ந்தது யாழ், உன் முகமே சரியில்லை. என்னோடு இருப்பதை விட இளவரசி இளவரசி என்று அவர்களைத் தேடிதான் ஓடிக்கொண்டிருப்பாய். இப்போது எதையோ பறிகொடுத்தது போல் அமர்ந்திருக்கிறாய்?" என்று ராதா அவளின் பக்கத்தில் அமர்ந்தவாறுக் கேட்க, நெற்றியை நீவி விட்டுக்கொண்டாள் மற்றவள்.


"இப்போது உனக்கு என்னதான் வேண்டும் ராதா, ஒருவேளை இளவரசியின் மீது பொறாமையா என்ன?" என்று யாழ் கேலியாகக் கேட்டு இரு புருவங்களை ஏற்றி இறக்க,  "கடவுளே! சத்தமா பேசித் தொலையாதே, காவலர்களின் காதில் விழுந்தால் கூட ஆபத்துதான்" என்று அவளின் தோழியோ பதறித்தான் போனாள்.


"ஹாஹாஹா... பரவாயில்லையே, பயம் இருக்கத்தான் செய்கிறது" என்று யாழ் சொல்லி சிரிக்க, "நம் தகுதியைப் பற்றி யோசித்தாலே பயம் அவர்கள் மீது தானாக வந்துவிடும், இளவரசி மீது பொறாமைப்படும் இடத்தில் நாம் இல்லையடீ" என்று விரக்திப் புன்னகையோடு சொல்லிவிட்டு நகர்ந்தாள் அவள்.


தோழியின் வார்த்தைகளைக் கேட்டவளுக்கு யோசனையில் புருவங்கள் முடிச்சிட்டன. 


'அந்த வீரா மெய்யாகத் தான் சொன்னானா, அவனைப் பற்றி சொன்னால் இளவரசியே வந்து விடுவார்கள் என அத்தனை தைரியத்தோடு சொல்கிறான், அந்த அளவுக்கு அவனுக்குள் நம்பிக்கை இருக்கின்றது என்றால் நமக்குத் தெரியாத ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது. நம் கேள்விகளுக்கு பதில் இளவரசியிடம்தான் உள்ளது, ஆனால்... எப்படி கேட்பது? அய்யோ... கேட்காமல் இன்றிரவு எனக்கு தூக்கம் வராதே!' 


என்று தனக்குள் புலம்பித் தள்ளியவள் அன்றிரவு நிஜமாகவே தூக்கத்தை தொலைத்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்.


ஆனால், அதற்கு காரணம் இந்திரசேனா அல்ல, மாறாக அதிகாரி லியோ.


இன்று அவனின் பழுப்பு நிற விழிகளை அவள் நேருக்கு நேராகப் பார்த்திருக்க, அவனின் ஸ்பரிசமும் அந்த விழிகளுமே அவளுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகத்திற்கு வந்துக்கொண்டிருந்தது.


அதுவும் அவளின் முகத்தைப் பார்த்ததும் அவனின் விழிகளில் தெரிந்த அந்த உணர்விற்கு என்ன பெயரென்று அவளுக்கு சுத்தமாகத் தெரியவில்லை.


'அவன் கண்டுபிடித்து விட்டான். இனி தலை மறைவுதான். வெளியில் சென்று அவன் என்னை பார்த்துவிட்டால் அவ்வளவுதான். அரசர் சிறையில் தள்ளுவாரோ இல்லையோ இனி வாழ்நாள் முழுவதும் ஆங்கிலேயர்களின் சிறைதான் நமக்கு. இதில் அந்த வெளைக்காரனுக்கு நம் மொழி வேறு தெரிந்திருக்கிறது. இது என்ன புதுவிதமான சோதனையோ?' 


என்று தனக்குத்தானே அவள் எச்சரிக்கையோடு சொல்லிக்கொள்ள, ராதாவோ சற்று எம்பி விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்த தோழியை சந்தேகமாகப் பார்த்தாள்.


"இது சரியில்லை, என்றாவது ஒருநாள் என்னிடம் சிக்காமலா போகப் போகிறாய்" என்று அவள் கேலியாக சொல்ல, தோழியை முறைத்துப் பார்த்தவள் உதட்டை சுழித்துவிட்டு திரும்பிப் படுத்துக்கொண்டாள்.


அதேநேரம் மெல்லிய இசையை ஒலிக்கவிட்டு அறை கட்டிலில் சாய்ந்திருந்த லியோவின் சிந்தனையும் யாழ்மொழியை சுற்றியே சுழன்றுக்கொண்டிருக்க, எரிச்சலாக விழிகளை சுழற்றினான் அவன்.


"அப்படி ஒன்னும் பேரழகி இல்ல, ஆனா எந்த ஆம்பிளையா இருந்தாலும் ஒரு தடவை திரும்பி பார்க்காம போக மாட்டாங்க. நானும் அதனாலதான் பார்த்தேன், அதுல ஒன்னும் தப்பு கிடையாதே! அதுக்காக அவ ஒன்னும் அந்த அளவுக்கு வர்த் கிடையாது. ஷீ இஸ் நொட் மை டைப். அதுவும் ஒரு இந்தியன் புவர் கேர்ள்கிட்ட நான் மயங்குறதா வாய்ப்பே இல்ல" என்று அலட்சியமாக வாய்விட்டு சொன்னவன், வராத தூக்கத்தை வரவழைத்து தாமதமாகவே உறக்கத்தை தழுவினான்.


எப்படியோ அன்றைய நாள் கழிந்து அடுத்த நாளும் விடிந்தது.


அடுத்தநாள் காலையிலேயே அரசரை சந்திக்கவென்று ஆங்கிலேயரின் கார் அரண்மனை வளாகத்துக்குள் நுழைய, தோட்டத்தில் பூக்களைப் பறித்தவாறு சிரித்துப் பேசிக்கொண்டிருந்த பணிப்பெண்களோ பதறிவிட்டனர்.


"ஏய் வாருங்கள், அரண்மனைக்குள் சென்று விடலாம்" என்று பயந்தபடி சொன்னவர்கள் ஓரமாக இருந்த கதவின் வழியே அரண்மனைக்குள் ஓடிவிட, காரிலிருந்து இறங்கிய லியோ அவர்களை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் திரும்பிக்கொண்டான் என்றால், வில்லியம் மற்றும் ரொனேல்ட்டோ துகிலுரிக்கும் பார்வைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.


"வாவ்! அரசர் இப்படி நம்மள வெல்கம் பண்ணுவாருன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. ஐ அம் இம்ப்ரெஸ்ட்" என்று ரொனேல்ட் சொல்லிக்கொண்டிருக்கும் போதே இத்தனை நேரம் தோழிகள் சென்றதை கூட அறியாமல் பூக்களுக்கு  நடுவே இருந்த யாழ்மொழி புன்னகையோடு வெளியே வந்தாள்.


அவளைப் பார்த்த ரொனேல்ட் மற்றும் வில்லியமின் விழிகளில் ஆசை மிதக்க, எதேர்ச்சையாக திரும்பிப் பார்த்த லியோவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து பின் முறைத்துப் பார்த்தன.


'ஓஹோ.. இவ இங்கதான் இருக்காளா?' என்று அவன் யோசித்தவாறு அவளைப் பார்க்க, அப்போதுதான் சிகப்பு ரோஜா ஒன்றைப் பறித்துவிட்டு திரும்பிய யாழ்மொழிக்கு அங்கு தன்னையே பார்த்தவாறு நின்றிருந்த ஆங்கிலேயர்களைப் பார்த்ததும் தூக்கி வாரிப்போட்டது.


"வாவ்! ஐ ஹேவ் நெவர் சீன் அ பியூட்டிஃபுல் கேர்ள் லைக் ஹெர்" என்று ரொனேல்ட் தன் மகள் வயதிலிருக்கும் யாழ்மொழியை ஆசையோடு பார்த்துக்கொண்டிருக்க, வில்லியமுக்கும் அவளை அடைய வேண்டும் என்கிற எண்ணம் மனதில் ஆழமாகப் பதிந்துப் போனது.


ஆனால், அந்த இருவரின் பார்வையை எல்லாம் யாழ்மொழி கவனிக்கவில்லை. லியோவின் கோப விழிகளை மட்டும் பார்த்தவள் எச்சிலை விழுங்கியவாறு அப்படியே நின்றிருக்க, "யாழ்மொழி, அங்கு என்ன செய்துக்கொண்டு இருக்கிறாய்? சீக்கிரம் வா..." என்று அழைத்தாள் அவளின் தோழிகளில் ஒருத்தி.


யாழ்மொழியும் லியோவை ஒரு பார்வைப் பார்த்தவள், தன் தோழியை நோக்கி ஓடியே விட, சலிப்பாக தலையாட்டியவாறு நின்றிருந்தவனை நோக்கி வந்தனர் காவலர்கள்.


அவர்கள் காட்டிய திசை நோக்கி மூவரும் செல்ல, அங்கு அமர்ந்திருந்தார் அரசர் வேந்தன்.


"வாருங்கள் வாருங்கள்..." என்று அவர் வரவேற்க, அவருக்கு எதிரே இருந்த இருக்கைகளில் அமர்ந்துக்கொண்டனர் மூன்று பேரும்.


"தேங்க் யூ சோ மச் கிங் வேந்தன், ஐ மீன் ரொம்ப நன்றி! இத்தனை வரவேற்ப நாங்க எதிர்பார்க்கவே இல்ல" என்று ரொனேல்ட் சொல்ல, "ஆங்கிலேயர்களான நீங்கள் எங்களின் மொழியை கற்றுக்கொள்வதில் சந்தோஷமாக இருக்கிறது" என்றார் வேந்தன் சற்று கர்வத்தோடு.


"கத்துக்கதானே வேணும் அரசரே, எங்களோட திட்டத்த உங்ககிட்ட சொல்ல எந்நேரமும் ட்ரான்ஸ்லேட்டர் ஐ மீன் மொழி பெயர்ப்பாளர அழைச்சுட்டு இருக்க முடியாதே! அதுமட்டும் இல்லாம உங்க மக்களுக்கு அறிவு ரொம்ப கம்மின்னு நினைக்கிறேன், எங்களோட மொழிய புரிஞ்சுக்க கூட முடியல ஹாஹாஹா..." என்று லியோ கேலி சிரிப்போடு சொல்ல, மற்ற இருவரும் அவன் சொன்னதற்கு ஏளனமாக சிரித்து வைத்தனர்.


அவன் பேசிய விதத்தில் உண்டான கோபத்தை கை முஷ்டியை இறுக்கி கட்டுப்படுத்தியவர், "கலாச்சாரம் ஒழுக்கத்திற்கு என் மக்கள்தான் உங்கள் நாடுகளுக்கு உதாரணம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற வார்த்தைக்கேற்ப வாழ்பவர்கள். அறிவிற்கும் எந்த குறைச்சலும் இல்லை" என்று பதிலடி கொடுக்க, நக்கலாக சிரித்தான் லியோ.


"என்ன விடயமாக வந்திருக்கிறீர்கள், இதுவரை தாங்கள் சொன்னதற்கு அனைத்தும் இந்த தேசம் ஒத்துழைத்திருக்கிறதே, இதற்கு மேல் என்ன வேண்டும்?" என்று வேந்தன் சிறு கோபத்தோடுக் கேட்க, "எங்களுக்கு அவ்வளவு பெரிய ஆசை எல்லாம் இல்ல. மக்கள் மேல விதிச்சிருக்குற வரியை பத்தி இப்போ நாங்க பேச வரல. இது வேற" என்றான் வில்லியம்.


வேந்தனோ கேள்வியோடு நோக்க, "கடல் வழியான வியாபாரத்த பத்தி உங்களுக்கு நான் சொல்ல தேவையில்ல. அதுவும் உங்க நாட்டுல இருக்குற வளங்கள் எங்கேயுமே கிடையாது. ஐ ஹெவ் அன் ஐடியா இங்க இருந்து கப்பல் வழியா உங்க நாட்டுல உற்பத்தி செய்யப்படுற பொருட்கள எங்க நாடுகளுக்கு நாங்க ஏற்றுமதி செய்றோம். இதுல உங்களுக்கு கண்டிப்பா இலாபம் இருக்கு. உங்களுக்கும் உங்க மக்களுக்கும்தான் நல்லது. நான் சொல்றது புரியும்னு நினைக்கிறேன்" என்று தங்களின் திட்டத்தை விளக்கினார் ரொனேல்ட்.


அதைக் கேட்ட அரசர் வேந்தனுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அவரையே அறியாமல் ஒரு விதமான பயம் மனதிற்குள் உதித்தது.


"ஒருவேளை நான் சம்மதித்தாலும் இது போல் பல குறுநில ராஜ்ஜியங்கள் பாரதத்தில் இருக்கின்றன. அதை சேர்ந்த அரசர்களும் இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டுமே!" என்று வேந்தன்  சிறு பயத்தோடு கேட்க, "பாதி அரசர்கள் எங்க திட்டத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க. உங்க முடிவ சொல்லுங்க" என்று தீர்க்கமான பார்வையோடுக் கேட்டான் லியோ.


எச்சிலை விழுங்கிக்கொண்ட வேந்தனுக்கு இதை மறுக்க சில கணங்களே போதும். ஆனால், அரசர் மறுத்த கோபத்தில் வளங்களை அடைய படையெடுத்து விட்டால் அதை எதிர்த்து போரிடக் கூட போதிய படைப்பலம் அவரிடம் இல்லை. 


அந்த பயமே மனதிற்குள் ஓட, அவர்களின் கேலிப் புன்னகையைப் பார்த்தவர் வேறு வழியில்லாமல் சம்மதம் கூற, தாங்கள் கொண்டு வந்த பத்திரத்தை வேந்தனின் முன்னே வைத்தனர்.


"இருவருக்குமிடையிலான வியாபார ஒப்பந்தம். கையெழுத்து போடுங்க மிஸ்டர் வேந்தன்" என்று ரொனேல்ட் சொல்ல, அவரை சுற்றியிருந்த அமைச்சர்களுக்கே அரசரின் முடிவில் அதிர்ச்சியாக இருந்தது.


"ஒப்புக்கொள்கிறேன்" என்ற அரசர் வேந்தனுக்கு வார்த்தைகள் தொண்டையை அடைத்தது. 


வேறு வழியில்லாமல் தன் தேசத்தின் சின்னத்தை மைக்கொண்ட மயிலிறகால் அவர் வரைய, "அரசே, கொஞ்சம் இதைப் பற்றி சிந்தித்துவிட்டு..." என்று தடுப்பது போல் தயக்கமாக இழுத்தார் அமைச்சர். 


"அதற்கு அவசியமில்லை அமைச்சரே" என்றுவிட்டு அவரை நிமிர்ந்து ஒரு பார்வைப் பார்த்தவர், ஆங்கிலேயர்களை அழுத்தமாக பார்க்க, அவர் கையொப்பமிட்ட பத்திரத்தை கையிலெடுத்தான் லியோ.


"தேங்க் யூ சோ மச். ஐ மீன் ரொம்ப நன்றி அரசர் வேந்தன். இந்த ஒப்பந்தம் இருக்குற வரைக்கும் அரசருக்கும் பிரிட்டிஷ் கவர்மென்ட்டுக்கும் இடையில நல்ல உறவு இருக்கும்னு நான் நம்புறேன்" என்று சொல்லிக்கொண்டே அவன் தன் முழு உயரத்திற்கு எழுந்து நிற்க, ரொனேல்ட்டும் வில்லியமும் அங்கிருந்து நகர்ந்தனர்.


போகும் ஆங்கிலேயர்களை வெறித்துப் பார்த்திருந்த அமைச்சர் தர்மபாலன், "அரசரே, நீங்கள் அவசரப்பட்டு விட்டீர்களோ என்று தோன்றுகிறது. சிறிது சிந்தித்திருக்கலாம்" என்று சொல்ல, "இல்லை, மக்களின் நலன் என்று வரும் போது அதில் யோசிக்க எதுவுமே இல்லை. ஒருவேளை நான் ஒப்புக்கொள்ளாவிட்டால் ஆங்கிலேயர்களின் அராஜகம் மேலோங்கி சென்றிருக்கும். விரைவில் ராஜ்ஜியத்தை இந்த ஆங்கிலேயரிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும்" என்றார் வேந்தன் அழுத்தமாக.


அதேசமயம், அரண்மனையிலிருந்து வெளியேற எத்தனித்த லியோ ஏதோ ஊசித்துளைக்கும் பார்வையை உள்ளுக்குள் உணர, சட்டென திரும்பிப் பார்த்தான்.


இத்தனை நேரம் அவனை ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த யாழ்மொழி அவன் தன்னை பார்க்கிறான் என்பதை உணர்ந்ததும் உடனே திரும்பிக்கொள்ள, ஒரு அடி முன்னே வைத்தவன் அங்கு காவலர்கள் இருப்பதைப் பார்த்து விட்டு வாசலை நோக்கிச் சென்றான்.


'ஊஃப்... எப்படியோ தப்பித்து விட்டோம், இல்லையென்றால் அவ்வளவுதான்' என்று தூணில் சாய்ந்து அவள் பெருமூச்சு விட்டுக்கொள்ள, "அம்மணி யாரைப் பார்த்து இப்படி பயந்துப் போய் நிற்கிறீர்கள்? இளவரசி இந்திரசேனாவின் தோழியாக இருந்துக்கொண்டு இந்த வீணான பயம் எதற்கு?" என்ற இந்திராவின் குரல் பக்கவாட்டத்திலிருந்து கேட்டது.


யாழ்மொழியோ திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க, இளவரசி இந்திரசேனாவோ மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியவாறு தூணில் சாய்ந்து குறும்பாக சிரித்துக்கொண்டிருந்தாள்.


அவளைப் பார்த்ததுமே யாழ்மொழியின் முகம் இறுக, "அந்த தைரியத்தினாலோ என்னவோ அரசரைப் பற்றி அறிந்தும் தவறு செய்ய துணிந்து விட்டீர்களா இளவரசி?" என்று அவள் கேட்ட விதத்தில், தோழியை புரியாமல் பார்த்தாள் மற்றவள்.


"புரியவில்லை, எதுவாக இருந்தாலும் தெளிவாகக் கேள்!" என்று இந்திரசேனா சொல்ல, "வீரா" என்று அத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதிலாக சொன்னாள் யாழ்.


அந்த பெயரைக் கேட்டதுமே இந்திராவின் இதயம் படுவேகமாகத் துடிக்க, பதற்றத்தில் நெற்றியில் பூத்த வியர்வையை  புறங்கையால் துடைத்துக்கொண்டாள்.


"இளவரசி..." என்று யாழ் அழைத்ததும், அவளின் கரத்தைப் பற்றியவள் தனதறைக்கு அவளை இழுத்துக்கொண்டு செல்ல, யாழ்மொழியும் எந்த மறுப்பும் சொல்லவில்லை.


அறைக்குள் சென்றதுமே வேகமாக பெரிய கதவுகளை சாற்றிக்கொண்டவள், "வீராவை சந்தித்தாயா யாழ்?" என்று மூச்சு வாங்கியவாறுக் கேட்க, "ஆம்" என்றாள் மற்றவள் அழுத்தமான பார்வையோடு.


இந்திரசேனாவின் விழிகள் கலங்கிவிட்டன. யாழ்மொழியின் தீர்க்கமான பார்வையை சந்திக்க முடியாமல் அவள் தலை குனிந்து அழ ஆரம்பிக்க, அவளை சமாதானம் செய்யவென கரத்தை நீட்டியவள் பின் தயக்கமாக கரத்தை இழுத்துக்கொண்டாள்.


"என் கேள்விகள் தீரவில்லை இளவரசி. யார் இந்த வீரா, அவனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? எந்த தைரியத்தில் அவனுக்காக எல்லாவற்றையும் உதறிவிட்டு நீங்கள் வந்துவிடுவீர்கள் என்று சொன்னான், அவன் பெயரை சொன்னதும் தாங்கள் அழுவதற்கு என்ன காரணம்? இப்பொதே என் கேள்விகளுக்கு பதிலை சொல்லுங்கள்" 


என்று அடுக்கடுக்காய் அவள் கேள்விக்கணைகளைத் தொடுக்க, கண்ணீரைத் துடைத்தவாறு தோழியை நிமிர்ந்துப் பார்த்தாள் இந்திரசேனா.


அவளோ கேள்வியாக பார்த்துக்கொண்டிருக்க, யாழ்மொழியை கடந்து சென்றவள் அங்கு ஓவியப்பலகையை மூடியிருந்த சிவப்பு நிறத் துணியை விலக்கிவிட்டாள்.


அடுத்தகணம் அதில் வரையப்பட்டிருந்த ஓவியத்தைப் பார்த்தவளின் விழிகள் இரண்டும் தெறித்து விடுமளவிற்கு விரிய, "வீரா..." என்று அந்த பெயரை முணுமுணுத்தன அவளின் இதழ்கள்.


குறையாத அதிர்ச்சியோடு அவளைப் பார்த்த யாழ்மொழி, "இளவரசி..." என்று அதிர்ந்த குரலிலேயே அழைக்க, இந்திரசேனாவோ வரையப்பட்டிருந்த வீராவின் முகத்தை விரல்களினால் வருடினாள்.


"இவனைதானே சந்தித்தாய்?" என்று அவள் புன்னகையோடுக் கேட்க, திகைப்போடு தலையாட்டியவளுக்கு இந்திராவின் விழிகளில் அவனுடைய முகத்தைப் பார்க்கும் போது தெரியும் அந்த உணர்வு புதிதாகத்தான் இருந்தது.


கூடவே, ஏனென்று தெரியாத ஒரு பயம் அவளுக்குள் தோன்ற, "ஏன் இளவரசி, எப்படி இது..." என்று பதற்றமாகக் கேட்டாள் யாழ்மொழி.


"தெரியவில்லை யாழ், இரண்டு முறைதான் சந்தையில் சந்தித்திருப்பேன். அப்போதே அவன் மேல் காதலை வர வைத்துவிட்டான். அதன் பிறகு அவனைப் பார்ப்பதற்காகவே உன்னை அழைத்துக்கொண்டு செல்ல ஆரம்பித்தேன். அவனை நான் காதலிப்பதை இன்னமும் வார்த்தைகளால் சொல்வில்லை, தந்தை மேலுள்ள பயமே என்னை தடுக்க ஆரம்பித்தது ஆனால்..." என்று இந்திரா சட்டென நிறுத்த, "ஆனால் என்ன?" என்று கேட்டாள் மற்றவள்.


"ஆனால், அவனைக் காணாமல் என்னால் இருக்க முடியவில்லை. நானே மறுத்தாலும் அவனிடம் என் காதலை மறைக்க முடியவில்லை. என் கண்களும் செயல்களுமே காட்டிக் கொடுத்து விட்டன. என்ன செய்வதென்று தெரியவில்லை யாழ், ஆனால் ஒன்று மட்டும் உறுதி. நான் அவனை காதலிக்கிறேன், அவனில்லாத வாழ்க்கை வேண்டாம் எனக்கு" என்ற இந்திரசேனாவின் வார்த்தைகள் அழுத்தமாக வர, யாழ்மொழிக்கு தலை சுற்றாத குறைதான்.


************

Next Episode 👇https://agnitamilnovels.blogspot.com/2025/08/05.html


'காலமெல்லாம் உன்னைத் தேடி' என்னோட டிரெக்ட் புக் இப்போ அமேசன் கிண்டல்ல yazhini mithra அப்படிங்குறா Available ஆ இருக்கு.. மறக்காம ரீட் பண்ணிக்கோங்க.. >>>

India link 👇

https://www.amazon.in/dp/B0FLYRBNZG


Usa link 👇

https://www.amazon.com/dp/B0FLYRBNZG


என்ட், மையவிழிப் பார்வையிலே நாவலும் இப்போ Agni tamil novels அப்படிங்குற பேருல Available ஆ இருக்கு... >>>

INDIA link👇

https://www.amazon.in/dp/B0FL2S9LYC


USA link 👇

https://www.amazon.com/dp/B0FL2S9LYC


Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚