விழிகள் 03




"எத்தனை நாட்கள் கனவு கண்டிருப்பேன், குதிரையில் இது போல் பயணிக்க வேண்டும் என்று. இன்று நம் இளவரசியால் நிறைவேறி விட்டது. இப்படி பயணிக்கும் போது ஏதோ வீராங்கனை போல் என்னை நானே உணர்கிறேனே, இந்த உணர்வு மிகவும் பிடித்திருக்கிறது" 


என்று வெட்கப்பட்டவாறு யாழ்மொழி தனக்குத்தானே பேசிக்கொண்டு குதிரையில் மிக வேகமாக செல்ல, லியோவோ கையிலிருந்த ஃபைலில் முகத்தைப் புதைத்தவாறு வந்துக்கொண்டிருந்தான்.


திடீரென அவன் வந்துக்கொண்டிருந்த காரோ ஒரு இடத்தில் சட்டென நின்று விட, ஜேம்ஸுக்கு அடி வயிறு கலங்க ஆரம்பித்து விட்டது.  


'அய்யோ என்னாச்சு, நேரத்துக்கு போகலன்னா சும்மா விட மாட்டாரே, இன்னைக்கு நாம செத்தோம்...' என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டே ஜேம்ஸ் லியோவை திரும்பிப் பார்த்தான்.


அதேநேரம், குதிரையை ஓட்டிக்கொண்டு வந்த யாழ்மொழிக்கு அதை எப்படி கட்டுப்படுத்துவது என்றே தெரியவில்லை.


"ஏய் நில்! உனக்கு நான் கட்டளை இடுகிறேன், குதிரையே நில்!" என்று அவள் கையிலிருந்த கயிற்றையும் இழுத்துக்கொண்டு கத்த, அதுவோ இவளின் பேச்சை எல்லாம் கேட்பதாக இல்லை.


"என் வார்த்தைகளை மதிக்கவே கூடாது என்கிற முடிவில் இருக்கிறாயா? தயவு செய்து நின்று விடு, உன் காலில் வேண்டுமானாலும் விழுகிறேன். இனி வாழ்க்கையில் குதிரை சவாரிக்கு ஆசைப்படவே மாட்டேன். கடவுளே என்னை காப்பாற்று!" என்று வாய்விட்டே புலம்பிக்கொண்டு வந்தவளின் விழிகள் தான் போகும் வழியில் நின்றுக்கொண்டிருந்த காரைப் பார்த்ததும் அதிர்ச்சியில் விரிந்துக்கொண்டன.


அதேநேரம் இங்கு, "சார்..." என்று அழைத்த ஜேம்ஸின் குரலில் அத்தனை பயம் தெரிய, லியோவோ விழிகளை மட்டும் உயர்த்தி அவனை ஒரு பார்வைப் பார்த்தான்.


"வாட்?" என்று அவன் கேட்ட விதமே சற்று கடுமையாக இருக்க, "அது... வண்டி சட்டுன்னு நின்னுருச்சு. நா.. நான் என்னன்னு பார்க்குறேன் சார்" என்று அவன் திட்டுவதற்கு முன் அடித்துப் பிடித்து காரிலிருந்து இறங்கி வண்டியை ஆராய ஆரம்பித்தான் அவன்.


லியோவோ எரிச்சலாக விழிகளை சுழற்றியவன் காரிலிருந்து இறங்கப் போக, அதேநேரம் அவனை மோதுவது போல் வேகமாக வந்தது யாழ்மொழியின் குதிரை.


அவனோ விழி விரித்துப் பார்த்தவன், "வாட் த ஹெல்..." என்று கத்திக்கொண்டு உடனே கதவை சாற்றிக்கொள்ள, அந்த குதிரையோ கிட்டத்தட்ட அவனை நெருங்கிவிட்டு வேறு திசையை நோக்கித் திரும்பி ஓடியது.


"சார், ஆர் யூ ஓகே? தேங்க் காட் அது நம்மள மோதல" என்று மற்றவன் பெருமூச்சு விட, லியோவுக்கு கோபம் எக்குத்தப்பாக எகிறியது.


அவன் பற்களை கோபத்தில் கடித்துக்கொள்ள, சரியாக "சார், வண்டி ரெடி போகலாம்" என்று குரல் கொடுத்தான் ஜேம்ஸ்.


"அந்த குதிரைய ஃபாலோவ் பண்ணு!" என்றவனின் கட்டளைக்கு அவனிடம் மறுபேச்சு இல்லை.


ஜேம்ஸோ வேகமாக அந்த குதிரையை பின்தொடர்ந்து சென்று அதன் முன்னால் வண்டியை நிறுத்த, பெரிய சத்தத்தோடு காலைத் தூக்கிக்கொண்டு கனைத்தவாறு அந்த குதிரையும் நின்றது.


லியோவோ கார் ஜன்னல் வழியே அந்த குதிரைக்கு சொந்தமானவளை எட்டிப் பார்க்க, விழிகள் மட்டும் தெரிந்தவாறு முகத்தை மறைத்திருந்த யாழ்மொழிக்கு ஜன்னல் வழியே தெரிந்த அவன் முகத்தைப் பார்த்ததும் சர்வமும் அடங்கி விட்டது.


'இவன்... அவன் அல்லவா! அவ்வளவுதான், வசமாக சிக்கிக்கொண்டோம்' என்று இதயம் படபடக்க யாழ் அவனையே பார்த்துக்கொண்டிருக்க, விழிகளை சுருக்கி அவளை உற்றுப் பார்த்த லியோவுக்கும் அந்த முகத்தை மறைத்திருப்பவள் யாரென்று நன்றாகவே புரிந்துப் போனது.


"யூ..." என்று அதிர்ச்சியும் கோபமும் கலந்து கத்தியவனுக்கு அன்று சந்தையில் நடந்தது அனைத்தும் ஞாபகத்திற்கு வர, விழிகளோடு சேர்த்து முகமும் கோபத்தில் சிவந்தது.


அடுத்த நிமிடம் அவன் காரிலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தவள், உடனே குதிரையிலிருந்து பாய்ந்து இறங்கி ஓடப் போக, மின்னல் வேகத்தில் அவளை நெருங்கி அவள் கரத்தைப் பற்றியிழுத்தான் லியோ ஜார்ஜ். 


"என் கரத்தை விடு..." என்று கத்தியவாறு யாழ்மொழியோ அவனின் மார்பிலேயே மோதி நிற்க, அவளின் காந்த விழிகளை கோபம் கொப்பளிக்க பார்த்தவனின் இதழ்கள் கேலியாக வளைந்தன.


"அன்னைக்கு நீ தானே என்கிட்ட வம்பு பண்ண?" என்று அவன் கேட்ட விதத்தில், 'இவனுக்கு நம் மொழி தெரியுமா?' என்று அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டாள் பெண்ணவள்.


"உன்கிட்டதான் கேக்குறேன், டெல் மீ!" என்று லியோ கத்தி அவளைப் பிடித்திருந்த தன் கரத்தில் அழுத்தம் கொடுக்க, அப்போதுதான் நடப்புக்கு வந்தவளாக அவனின் பிடியிலிருந்து விடுபட முயற்சித்தாள் யாழ்.


ஆனால் அந்த ஆறடி ஆண்மகனின் பிடியிலிருந்து அந்த சிறு பெண்ணால் ஒரு இன்ச் கூட அசைய முடியவில்லை.


"நீ பண்ண காரியத்துக்கு ஐ வோன்ட் டூ ப்ரேக் யூவர் ஃபேஸ்" என்று பற்களைக் கடித்துக் கொண்டு சிவந்த விழிகளோடு சொன்னவன், அவள் முகத்தை மறைத்திருந்த துணியை விலக்கப் போக, அவள் விட்டால்தானே!


"இல்லை... என்னை விடுங்கள்! என்னை காப்பாற்ற யாரும் இல்லையா? கடவுளே!" என்று திமிறிக்கொண்டு அவள் கத்த, ஆடவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஒரே நொடியில் அவள் முகத்தை மறைத்திருந்த துணியை விலக்கி தூர எறிந்தான்.


ஆனால் அடுத்தகணம் அவள் மேலிருந்த மொத்த கோபமும் அவள் முகத்தை மறைத்திருந்த துணி விலகியதுமே மாயமாக, அவளுடைய அழகில் சொக்கிப்போய் விட்டான் லியோ.  


தன்னை மறந்து அவன் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, அவளைப் பற்றியிருந்த அவனுடைய கரமும் தளர்ந்தது. 


மிரட்சியாக அவனைப் பார்த்துக்கொண்டிருந்த யாழ்மொழிக்கு அதுவே சரியான சந்தர்ப்பமாகத் தோன்ற, உடனே பற்றியிருந்த கரத்தை உதறிவிட்டவள் அவனிடமிருந்து தப்பித்து ஓட, அப்போதுதான் நடப்புக்கு வந்தான் லியோ.


"ஸ்டாப் யூ இடியட்!" என்று அவன் கத்திக்கொண்டு துரத்தப் போக, "சார், இட்ஸ் கெட்டிங் லேட்" என்ற ஜேம்ஸ் அவனைப் பிடித்து இழுத்துக்கொண்டு காரை நோக்கிச் சென்றான்.


யாழ்மொழியோ திரும்பித் திரும்பி அவனையே பார்த்துக்கொண்டு ஓட, தன் கண்ணிலிருந்து மறையும் வரை அவளையே பார்த்திருந்தவனுக்கு ஏனோ அவளுடைய முகம் மனதிற்குள் ஆழமாக பதிந்துப் போனது.


இங்கு சந்தைக்குள் மூச்சிரைக்க ஓடிச் சென்றவள், அங்கிருந்த ஒரு குடிசையில் மூச்சு வாங்கியவாறு சாய்ந்து நிற்க, அவளுடைய உடலோ வெடவெடத்தது.


அந்த நடுக்கமும் பதற்றமும் குறையவே சில நிமிடங்கள் எடுக்க, பயத்தில் உடல் முழுக்க வியர்வையால் நனைந்துப் போயிருந்தது அவளுக்கு.


'ஊஃப்ப்... விட்டால் கண்களாலேயே என்னை எரித்து விடுவான் போல, என்ன பார்வை அது! இன்னும் சிறிது நேரம் அவனின் பிடியில் இருந்திருந்தால் அவன் மீதே மயங்கி சரிந்திருப்பேன், எங்கேயிருந்து வந்த தைரியமோ? எப்படியாவது அரண்மனைக்கு சென்று விட வேண்டும்' 


என்று தனக்குள்ளேயே யோசித்து ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டவள், அந்த இடத்திலிருந்து நகர்வதற்காக ஒரு அடி முன்னே வைக்க, அவளின் எதிரே வந்து நின்றது ஒரு அரவம்.


விழிகளை சுருக்கி யோசித்தவள் மெல்ல நிமிர்ந்துப் பார்க்க, அவளெதிரே நின்றிருந்தான் அந்த ஒருவன். 


கிட்டத்தட்ட ஆறடி உயரம் இருக்கும். முரட்டு மீசையும் தலையில் ஒரு தலைபாகையோடு யாழையே குறுகுறுவென்று பார்த்த வண்ணம் அவன் நின்றிருக்க, அவனை  அதிர்ச்சியாகப் பார்த்தாள் யாழ்மொழி.


"யார் நீ?" என்று அவள் சிறு பயத்தோடுக் கேட்க, "நான் யாரா இருந்தா உனக்கென்ன? உன்னை பார்த்தா சந்தையில வேலை பார்க்குற பொண்ணு மாதிரி தெரியல்லையே, அரண்மனை பணிப்பெண்ணோ?" என்று நாடியை நீவி விட்டவாறுக் கேட்டான் அவன்.


"ஆம் பணிப்பெண்தான். எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்ய முடியுமா? என்னை அரண்மனைக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும், சில ஆங்கிலேயர்களின் விழிகளுக்கு சிக்கவே கூடாது. இந்த உதவியை மட்டும் செய், நீ என்ன கேட்டாலும் நான் கொடுக்கிறேன்" என்று அவள் தானே முன் வந்து சொல்ல, "என்ன கேட்டாலுமா?" என்று அந்த வார்த்தையை அழுத்தமாகக் கேட்டான் அவன்.


"ஆம், இந்த யாழ் கொடுத்த வாக்கை மீற மாட்டாள். என்னை ஆங்கிலேயர்களின் விழிகளில் சிக்காமல் அரண்மனைக்கு பக்கத்தில் அழைத்துச் சென்றால் மட்டும் போதும். முடியுமா?" என்று யாழ்மொழி விழிகளில் எதிர்பார்ப்போடுக் கேட்க, 'நான் கேட்டதுக்கு அப்பறம் ஏன் தான் என்கிட்ட உதவி கேட்டேன்னு நினைக்க போற!' என்று உள்ளுக்குள் நினைத்தவாறு அவளை அழைத்துக்கொண்டு சென்றான் அவன்.


"இந்த கோனி பைய தலையில போட்டுக்கோ! யாராச்சும் உன்னை என் கூட பார்த்தாங்கன்னா தப்பா பேசுவாங்க" என்று அவன் சொல்ல, அவன் சொன்னது போல் தலையில் போட்டுக்கொண்டவள், சுற்றி முற்றி லியோ வருகிறானா என பார்த்தவாறு அவன் பின்னாலேயே சென்றாள்.


"இந்த வெள்ளைகாரனுங்களுக்கு இவ்வளவு பயமா நீ! அரண்மனையில அரசர் பக்கத்துல வேலை பார்க்குற, எங்க சந்தையில வேலை பார்க்குற பொண்ணுங்களே அவனுங்கள தைரியமா எதிர்த்து நிப்பாங்க" என்று அவன் கேலியாக சொல்லி சிரிக்க, "நான் என்ன அரசரோடு சேர்ந்து போருக்கா செல்கிறேன், சாதாரண பணிப்பெண் நான். இருந்தாலும், என்னை குறைத்து மதிப்பிடாதே! வாள் பயிற்சிகளையும் போர் பயிற்சிகளையும் பார்த்து வளர்ந்தவள் நான். என்னிடம் ஜாக்கிரதையாகவே இருந்துக்கொள்!" என்றாள் இல்லாத தைரியத்தை வரவழைத்தபடி.


அவளின் வார்த்தைகளைக் கேட்டு சட்டென நின்றவன், திரும்பி அவளை மேலிருந்து கீழ் ஒரு பார்வைப் பார்க்க, "ஹிஹிஹி..." என்று அசடுவழிய சிரித்து வைத்தாள் யாழ்மொழி.


சந்தையிலிருந்து அரண்மனை வாயிலுக்கு அழைத்து வந்தவன், "அப்பாடா! மிக்க நன்றி..." என்றுவிட்டு நகரப் போனவளை அழைத்து நிறுத்தினான்.


"என்ன உன் பாட்டுக்கு போற, என்ன கேட்டாலும் தருவேன்னு சொன்ன" என்று அவன் சொல்ல, "அரண்மனையை பார்த்ததும் மறந்தே விட்டேன். என்ன வேண்டும், சீக்கிரம் கேள்!" என்று ஏதோ பெரிய கொடை வள்ளல் போல் கேட்டாள் அவள்.


"கேட்கத்தானே போகிறேன்" என்று நிறுத்தியவன் சில கணங்களின் பின், "இளவரசி" என்று சொல்ல, "இல்லை.. புரியவில்லை" என்று தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா என்ற சந்தேகத்தோடு கேட்டாள் யாழ்.


"எனக்கு இந்த ராஜ்ஜியத்தின் இளவரசி வேண்டும்" என்று அவளுக்கு புரியும்படி சொன்னவன், அங்கிருந்து அவன் பாட்டிற்கு செல்ல, யாழ்மொழிக்குதான் அவன் கேட்டதில் சர்வமும் அடங்கிவிட்டது.


"என்ன! இளவரசியா... ஏய் விளையாடுகிறாயா நீ, எதைக் கேட்கிறாய் என்று உனக்கு புரிகிறதா இல்லையா? அதை யாரிடம் வந்து கேட்கிறாய் என்று தெரிகிறதா? அதுவும் சந்தையிலிருந்து அரண்மனைக்கு அழைத்து வந்த உதவிக்கு பரிகாரமாக தங்களை கேட்கிறான் என நான் சென்று இளவரசியிடம் சொன்னால் அவர்கள் வந்துவிடுவார்களா என்ன! அரசர் என்னை தூக்கிலிடுவது உறுதி" என்று யாழ்மொழி படபடவென பொரிந்துக்கொண்டே போக, "என் பேர உன் இளவரசிகிட்ட சொல்லு, அவங்களே வருவாங்க" என்று சிரிப்போடு சொன்னவனின் வார்த்தைகளில் அத்தனை உறுதி.

                                             

"நீர் என்ன பக்கத்து ராஜ்ஜியத்தின் இளவரசரோ, நீ அழைத்ததும் அவர்கள்  ஓடி வருவதற்கு? முதலில் உன் பெயரை சொல்!" என்று யாழ்மொழி கோபமாகக் கேட்க, சற்று நின்று திரும்பிப் பார்த்தவன், "வீரா" என்றான் புன்னகையோடு.


யாழ்மொழியின் விழிகள் சந்தேகத்தோடு சுருங்க, மின்னல் வேகத்தில் அந்த இடத்திலிருந்து சென்று மறைந்திருந்தான் வீரா.


அதேநேரம், இங்கு மீட்டிங்காக ஆங்கிலேயர்களின் இன்னொரு மாளிகைக்கு சென்றுக்கொண்டிருந்த லியோவின் நினைவு முழுவதும் யாழ்மொழியின் முகம்தான் விம்பங்களாக ஓடிக்கொண்டிருந்தன.


"சார் அந்த பொண்ணு உங்ககிட்ட இருந்து ரெண்டு தடவை தப்பிச்சிருக்கா.  ஷீ இஸ் சோ க்ளெவர்" என்று ஜேம்ஸ் சொல்ல, "ம்ம்" என்று மட்டும் சொன்னவன் முயன்று அவளுடைய நினைவுகளிலிருந்து தன் சிந்தனையை திருப்பிக்கொண்டான்.


சரியாக ஜேம்ஸின் கார் அந்த மாளிகையின் வாயிலில் நிற்க, முகத்தில் கடுமை குடிகொள்ள விறைப்பாக நின்றவன் வேக நடையோடு உள்ளே சென்றான்.


"குட் மோர்னிங் சார்" என்ற அங்கிருந்த இரண்டு அதிகாரிகள் அவனை அழைத்துக்கொண்டு ஒரு அறைக்கு அழைத்துச் செல்ல, அங்கு மதுக்குவளையை கையில் வைத்து சுழற்றியவாறு அமர்ந்திருந்தார் ரொனேல்ட்.


"ஹெலோ மை பாய், இந்தியா வந்ததுக்கு அப்பறம் என்னை பார்க்க இப்போ தான் வர தோனுச்சா? ஹவ் இஸ் இந்தியா? கம், கம் என்ட் ஹேவ் யூவர் சீட்" என்று அவர் சொல்ல, இறுகிய இதழ்களுக்கிடையில் பூத்த சிறு புன்னகையோடு அவரெதிரே அமர்ந்துக்கொண்டான் லியோ.


"என்ன விஷயமா என்னை வர சொன்னீங்க சார்?" என்று அவன் வேறு பேச்சில்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வர, "தட் இஸ் லியோ! ஐ நோ அபௌட் யூ. பட் இருந்தாலும் கொஞ்சம் என்ஜாய் பண்ணணும்" என்றுக்கொண்டு அவன் பக்கமிருந்த குவளையில் மதுவை ஊற்றினார் அவர்.


அதை அவன் எடுக்கப் போக, சட்டென ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்க, திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான்.


அங்கு இரண்டு அதிகாரிகள் இந்தியப் பெண்ணொருத்தியை கதறக் கதற இழுத்துக்கொண்டு செல்ல, அதை அதிர்ச்சியாகப் பார்த்தவனோ அதே அதிர்ச்சியோடு திரும்பி ரொனேல்டை பார்த்தான்.


"வாட்ஸ் ஹேப்பனிங் ஹியர், வூ இஷ் ஷீ?" என்று அவன் விழிகளை சுருக்கி சந்தேகத்தோடுக் கேட்க, "ஷீ இஸ் ஜஸ்ட் அன் இந்தியன் கேர்ள். என்னை திருப்திபடுத்த அழைச்சுட்டு வந்திருக்காங்க. நீ அதை கண்டுக்காத! இட்ஸ் ஆல் ஃபன் லியோ, லெட்ஸ் ஸ்டார்ட் த டிஸ்கஷன்" என்றார் அவர் சாதாரணமாக.


ஏனோ ஒரு தடவை திரும்பிப் பார்த்த லியோ விழிகளை அழுந்த மூடித் திறந்து விட்டு, "ஓகே சார்" என்று பேச்சை ஆரம்பிக்க, சில சட்டதிட்டங்கள் பற்றியும் வரி தொடர்பாகவும் அவர்களுக்கிடையில் உரையாடல் சென்றது.


"டெக்ஸ்ஸ நாம இன்னும் இன்க்ரீஸ் பண்ணணும் லியோ, ஐ திங் பொண்ணுங்களுக்கான டெக்ஸ் அதிகமா இருக்கணும் ஹாஹாஹா..." என்று அவர் சொல்லி சிரிக்க, "நான் இங்க வந்ததுமே டெக்ஸ்ஸதான் இன்க்ரீஸ் பண்ணேன். பட் இந்த புவர் இந்திய பீபளுக்கு அதை கொடுக்க முடியல. வாட் டு டூ? டெக்ஸ் இஸ் தெயார் ரெஸ்பான்சிபிளிட்டி" என்றான் அவன் அழுத்தமாக.


"தட்ஸ் மை பாய் லியோ.. ஆமா, இங்க வந்ததுலயிருந்து நீ எதையும் என்ஜாய் பண்ண மாதிரி எனக்கு தெரியல. நீ வேணா அந்த இந்தியன் கேர்ள டேஸ்ட் பண்ணிக்கோ, ஐ டோன்ட் மைன்ட் இட்" என்று வெட்கமே இல்லாமல் அவர் சொல்ல, "நோ நீட் சார்" என்றவனுக்கு யாழ்மொழியின் முகம்தான் மீண்டும் மனக்கண் முன் வந்தது.


கூடவே அவள் செய்த சேட்டைகளும் ஞாபகத்துக்கு வர, "இடியட்!" என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டான் லியோ.


**********


'காலமெல்லாம் உன்னைத் தேடி' என்னோட டிரெக்ட் புக் இப்போ அமேசன் கிண்டல்ல yazhini mithra அப்படிங்குறா Available ஆ இருக்கு.. மறக்காம ரீட் பண்ணிக்கோங்க.. >>>

India link 👇

https://www.amazon.in/dp/B0FLYRBNZG


Usa link 👇

https://www.amazon.com/dp/B0FLYRBNZG


என்ட், மையவிழிப் பார்வையிலே நாவலும் இப்போ Agni tamil novels அப்படிங்குற பேருல Available ஆ இருக்கு... >>>

INDIA link👇

https://www.amazon.in/dp/B0FL2S9LYC


USA link 👇

https://www.amazon.com/dp/B0FL2S9LYC

Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚