விழிகள் 02




"சார், வரிப் பணத்தை அதிகரிச்சதுலயிருந்து மக்களுக்கு நம்ம மேல ரொம்ப கோபம். எப்போடா நம்மள தாக்கலாம்னு இருக்காங்க. இதுல நாம மார்கெட்க்கு தனியா வந்திருக்கோம், எதுக்கும் நம்ம ஆஃபீசர்ஸ்ஸ..." என்று தயக்கமாக ஆரம்பித்த ஜேம்ஸின் வார்த்தைகள் லியோவின் பார்வையில் சட்டென நின்றன.


"வாட் ஹேப்பன்ட் சார்?" என்று அவன் சிறு பயத்தோடுக் கேட்க, "இப்போ நாம தனியா இருக்கோம், இந்த மக்கள்ல யாரு வேணா நம்மள அட்டேக் பண்ணலாம். நூறு பேரா இருந்தாலும் தனி ஆளா உயிர் போற அந்த நிமிஷம் வரைக்கும் சமாளிக்கணும். அதுதான் ஒரு ஆஃபீசரோட செல்ஃப் கான்ஃபிடன்ட். பட், பயப்பட தேவையில்ல. மக்களோட கண்ணுல எங்க மேல இருக்குற பயத்தைதான் நான் பார்க்குறேன்..." என்றான் லியோ அழுத்தமாக.


அதற்குமேல் மற்றவன் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. அவனோடு சேர்ந்து நடக்க, அங்கிருந்த ஒரு பழக்கடைக்கு முன் நின்றான் லியோ.


"ஹவ் மச் இஸ் திஸ்?" என்று ஜேம்ஸ் கேட்க, ஆங்கிலேயர்களை பார்த்ததும் அந்த வியாபாரியோ நடுங்க ஆரம்பித்து விட்டார்.


"ஐயா.. என்ன வேணும். அய்யோ! இவங்க பாஷை கூட எனக்கு தெரியாதே..." என்று அந்த பழ வியாபாரி தோளிலிருந்த துண்டை கையில் வைத்து தடுமாற ஆரம்பிக்க, அதேநேரம் இந்திரசேனாவோடு சந்தைக்குள் நுழைந்திருந்தாள் யாழ்மொழி.


"இளவரசி, அரசரின் ஆட்கள் எப்போது வேண்டுமானாலும் நம்மை காணலாம். முகத்தை மறைத்துள்ள துணியை மட்டும் விலக்கி விட வேண்டாம்! ஆமாம்... எதற்காக சந்தைக்கு வந்தீர்கள்?" என்று பேசிக்கொண்டே அவள் செல்ல, மற்றவளிடமோ பதிலே இல்லை.


"இளவரசி..." பதில் வராததில் திரும்பி இந்திரசேனாவை அவள் கேள்வியாக நோக்க, சுற்றி முற்றி யாரையோ தீவிரமாக தேடிய வண்ணம் வந்துக்கொண்டிருந்தாள் அவள்.


"யாரைத் தேடுகிறீர்கள்?" என்று யாழ் புரியாமல் கேட்க, திடீரென யாரோ அவளை அழைப்பது போல் ஒரு உணர்வு!


"அய்யோ யாரோ நம்மை கண்டுவிட்டார்கள் போல! இளவரசி ஒளிந்துக்கொள்ளுங்கள்" என்று பதற்றமாக சொல்லிக்கொண்டு யாழ் இந்திரசேனாவின் புறம் திரும்ப, அவள் அங்கு இருந்தால்தானே!


'கடவுளே! இது என்ன சோதனை? இளவரசி எங்கே சென்றுவிட்டார்கள்? இப்போ.. இப்போது நான் என்ன செய்வேன்? முடிந்து விட்டது, அரசர் என்னை தூக்கிலிடப் போகிறார். அவ்வளவுதான்' என்று கத்தக் கூட முடியாமல் மானசீகமாக புலம்பிக்கொண்டு அங்குமிங்கும்  இந்திரசேனாவை தேடியவாறு நடந்தாள்  யாழ்மொழி.


ஆனால் கண்ணிற்கு எட்டிய தூரம் வரை அவளைக் காணாததில் இவளுக்குதான் உடல் உதறத் தொடங்கியது.


"யாரும்மா நீ? மூஞ்ச மறைச்சுக்கிட்டு இங்க தடுமாறிக்கிட்டு இருக்க, ஒருவேள திருடியா நீ... எல்லோரும் இங்க வாங்க, இந்த பொண்ணு இங்க எதையோ திருட முயற்சி பண்றா, எல்லாரும் வாங்க..." என்று ஒருவன் கத்த, "என்ன, நான் திருடியா! இல்லை இல்லை. கடவுளே என்னை காப்பாற்று" என்று அங்கிருந்து ஓடியவள் அப்போதுதான் பழ வியாபாரியின் அருகே சென்று மூச்சு வாங்கியவாறு நின்றுக்கொண்டாள்.


"அப்பாடா! எப்படியோ தப்பிவிட்டோம்" என்றுக்கொண்டே திரும்பியவள், அவர் நடுங்குவதைப் பார்த்து "ஏதாவது உதவி வேண்டுமா ஐயா?" என்று கேட்டு வம்பை தானாக முன் சென்று விலைக்கு வாங்கினால் என்றுதான் சொல்ல வேண்டும்.


"அம்மா, நீங்க யாரு என்னன்னு தெரியல. தயவு செஞ்சு இவங்ககிட்ட இருந்து காப்பாத்துங்கம்மா. ஏதோ கேக்குறாரு, எனக்கு புரியவே இல்ல. என.. எனக்கு பயமா இருக்கு" என்று அவர் நடுங்கியபடி சொல்ல, "அவ்வளவுதானே, இதோ நான் உதவி செய்கிறேன்" என்று அங்கு நின்றிருந்த லியோவின் புறம் வேகமாகத் திரும்பினாள் யாழ்மொழி.


அவனோ தன் கழுகுப் பார்வையால் மறைத்திருந்த அவளுடைய முகத்தையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருக்க, விழி பிதுங்க நின்றுவிட்டாள் பெண்ணவள்.


'ஆங்கிலேயர்களா! இவர்கள் பேசும் மொழியின் பெயர் கூட எனக்கு தெரியாதே! அய்யோ... மானமே போய்விட்டது. ஏற்கனவே திருடி பட்டத்தை வாங்கி விட்டாயிற்று. இப்போது இது வேறா... நம் கதை முடிந்துவிட்டது' என்று உள்ளுக்குள் புலம்பியவாறு அவள் நின்றுக்கொண்டிருக்க, முதல் தடவை விழிகள் பேசுவதை ஆச்சரியமாகப் பார்த்தான் லியோ.


'கண்கள் கூட பேசுமா?' என்ற கேள்வி அவனுக்குள் எழ, ஒரு அடி அவளை நோக்கி வைத்ததும்தான் தாமதம் அங்கிருந்து தப்பித்து ஓடப் போனாள் யாழ்.


"ஹேய் ஸ்டாப்!" என்று கத்திக்கொண்டு தன்னை மீறி அவளை நோக்கி அவன் வேக நடையிட்டு செல்ல, அவளோ பக்கத்தில் கொட்டுவதற்காக எச்சில் நீரை கொண்டு சென்றுக்கொண்டிருந்த ஒருவரின் கரத்தை ஓடும் வேகத்தில் தட்டிவிட்டாள். 


அவ்வளவுதான்!


அந்த மொத்த எச்சில் நீரும் லியோவின் சட்டையை நனைத்து விட, "கடவுளே!" என்று தலையில் கை வைத்துக்கொண்டவள் கால் பிடறியில் பட சந்தைக்குள் ஓட ஆரம்பித்தாள்.


"சார்..." என்ற ஜேம்ஸின் கத்தல்கள் எதுவும் அவன் காதில் கேட்கவில்லை. 


"யூ ப்ளடி..." என்று கத்திக்கொண்டு  உச்சகட்ட கோபத்தில் லியோ அவளை துரத்த ஆரம்பிக்க, அங்கிருந்த ஒரு சுவற்றுக்கு பின் மறைந்துக் கொண்டவளுக்கு மூச்சு விடக் கூட சிரமமாக இருந்தது.


"ஊஃப்ப்...." என்று பெருமூச்சு விட்டவள், "எப்படியோ அந்த வெள்ளைக்கார துரையின் கண்ணிலிருந்து மறைந்து விட்டோம். ஆனால்... ஆனால் எப்படி இளவரசியை தேடுவது" என்று வாய்விட்டே புலம்பிக்கொண்டு திரும்ப, அவளிடமிருந்து சற்று தள்ளி பதற்றமாக கைகளைப் பிசைந்த வண்ணம் நின்றிருந்தாள் இந்திரசேனா.


"இளவரசி, எங்கே சென்றீர்கள்? உங்களை காணாமல் பயந்தே போய்விட்டேன். எனக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுக்காமல் விட மாட்டீர்கள் போல, முதலில் வாருங்கள், இங்கிருந்து போகலாம்" என்று படபடவென பொரிந்துக்கொண்டே சென்றவள், முகத்தை மறைத்திருந்த முந்தானையை தூர வீசிவிட்டு அங்கு கொடியில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு முந்தானையை யாருக்கும் தெரியாமல் எடுத்து முக்காடு போல் போட்டுக்கொண்டாள்.


இந்திரசேனாவோ பின்னால் யாரையோ திரும்பித் திரும்பி பார்த்த வண்ணம் செல்ல, அவளை இழுக்காத குறையாக வேகமாகச் சென்றாள் யாழ்மொழி.


ஆனால் அந்த ஒருவன் குடிசைக்கு பின்னே மறைந்திருந்து இந்திராவையே பார்த்துக்கொண்டிருக்க, அவனுடைய விழிகளில் ஏனென்று தெரியாத வலி அப்பட்டமாகத் தெரிந்தது.


இங்கு சுற்றி முற்றி மூச்சு வாங்கியவாறு தேடிக்கொண்டிருந்த லியோவின் விழிகளுக்கு தரையில் கிடந்த முந்தானை தென்பட, அதை கையிலெடுத்துக்கொண்டவன் காலை கோபமாக தரையில் உதைக்க, ஜேம்ஸிற்கு பயத்தில் அடி வயிறு கலங்கியது.


"என்னாச்சு சார்? அந்த பொண்ணு..." என்று அவன் மெல்ல ஆரம்பிக்க, "ஷட் அப்!" என்று அந்த இடமே அதிர கத்தியவன் தன்னை குனிந்துப் பார்த்துவிட்டு விழிகள் சிவக்க நின்றிருந்தான்.


***********


இந்திரசேனாவும் யாழ்மொழியும் அரண்மனைக்குள் மெல்ல நுழைந்து யாரும் பார்க்காதவாறு அறைக்குள் நுழையப் போக, 'ஹ்ர்ம் ஹ்ர்ம்..' என்ற செருமல் சத்தம் பின்னாலிருந்து கேட்டது.


இரு பெண்களும் அதிர்ந்துப் போய் எச்சிலை விழுங்கியவாறு மெல்ல திரும்பிப் பார்க்க, அவர்களை முறைத்தவாறு நின்றிருந்தார் அரசர் வேந்தன்.


"தந்தையே, தாங்கள் இங்கு..." என்று இந்திரசேனா ஏதோ பேச வர, "எதுவும் பேசாதே இந்திரா! உனக்கு எச்சரித்தும் என்னை மதியாமல் மீண்டும் எந்த பாதுகாப்பும் இன்றி அரண்மனையை விட்டு வெளியே சென்றிருக்கிறாய். இதற்கு நீதான் காரணமா யாழ்?" என்று மகளை திட்டிவிட்டு யாழ்மொழியின் புறம் திரும்பிக் கேட்டார்.


அவரின் சிவந்த விழிகளைப் பார்த்தவளுக்கு நா எழவில்லை.


"அது... அரசே, நா.. நான் இளவரசியிடம்..." என்று அவள் திக்கித்திணறி பேச, "அவளுக்கு எதுவும் தெரியாது, நான்தான் அவளை வற்புறுத்தி அழைத்துச் சென்றேன்" என்று அவளைக் குறுக்கிட்டு சொன்னாள் இந்திரசேனா. 


அரசர் வேந்தனுக்கு மகளை முறைப்பதைத் தவிர வேறு என்ன செய்வதென்று தெரியவில்லை.


"காவலர்களே..." என்று கத்தியவர் அவர் பக்கத்தில் வந்து நின்ற ஒரு காவலனின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்.


"இரு பெண்கள் வெளியே செல்வதைக் கூட அறியாமல் இருக்கும் அளவிற்கு சொன்ன வேலையில் கவனம் இல்லை. அப்படிதானே! இதற்குப் பிறகு இளவரசி அரண்மனையை விட்டு வெளியேறினால், உங்களின் தலைகள் என் வாலுக்கு இரையாகி விடும்" என்று கடுங்கோபத்தில் வேந்தன் பேச, அந்த காவலர்களோ உடல் நடுங்க அங்கிருந்து சென்றனர்.


"தந்தை..." என்று மீண்டும் இந்திரசேனா ஏதோ பேச வர, "எதுவும் பேசாதே! உன் அறைக்குச் செல்" என்றவர் யாழ்மொழியின் புறம் திரும்பி, "நீ... உன்  தகுதி என்னவோ அதை புரிந்து நடந்துக்கொள்" என்றுவிட்டு செல்ல, யாழ்மொழியின் முகமோ அவமானத்தில் கறுத்துவிட்டது.


"தந்தை பேசியதை மனதில் வைத்துக்கொள்ளதே யாழ்" என்று ஆறுதலாக சொல்லிவிட்டு இந்திரசேனா சென்றுவிட, தன் அறைக்குள் சென்று படுக்கையில் விழுந்தவளுக்கு இப்போது அந்த ஆங்கிலேய அதிகாரியின் நினைவுதான்.


"என்ன கண்கள் அது! விட்டால் கண்ணாலேயே எரித்து விடுவான் போல, இருந்தாலும் இவள் சொன்னதில் குத்தமே இல்லை, பெண்களை மயக்கும் அழகுதான். ஆனால், நீ மட்டும் மயங்கிவிடாதே யாழ்! அதன் பிறகு ஆங்கிலேய சிறையோ அரண்மை சிறையோ ஏதோ ஒன்று உறுதி, அது மட்டும் புரிகிறது" 


என்று வாய்விட்டு சொல்லி சிரித்துக்கொண்டவள் அப்படியே நடந்ததை நினைத்தவாறு உறங்கிப் போக, சந்தையில் விட்டுச் சென்ற யாழ்மொழியின் முந்தானையை கையில் வைத்துக்கொண்டு யோசனையோடு அமர்ந்திருந்தான் லியோ ஜார்ஜ்.


"ஹவ் டேர் இஷ் ஷீ... என் மேல அதை கொட்டி விட்டது மட்டுமில்லாம என்கிட்ட இருந்து தப்பிச்சு போயிட்டா. ஐ கான்ட் டோலரேட் திஸ்" என்று பற்களைக் கடித்துக்கொண்டான் அவன்.


ஆனால், அந்த கண்கள்! 


அவனுடைய நினைவுகளுக்குள் மீண்டும் மீண்டும் வர, தலையை உலுக்கி சிந்தனையை கலைத்தவன் முயன்று தூக்கத்தை வரவழைத்துத் தூங்கினான்.


சில நிமிடங்கள் கழிந்திருக்கும். அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல, சரியாக வெளியில் கத்தி கூச்சலிடும் சத்தம் மற்றும் துப்பாக்கி சத்தம் பலமாகக் கேட்க, அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தான் லியோ.


மூச்சு வாங்கியவாறு சுற்றிமுற்றி பார்த்தவன் வேகமாக பால்கெனிக்கு சென்று பார்க்க, அங்கு புரட்சியாளர்கள் சிலர் முகத்தை மறைத்துக்கொண்டு ஆங்கிலேய அதிகாரிகளை தாக்கிக்கொண்டிருந்தனர்.


உடனே டீபாயிற்கு மேலிருந்த தன் துப்பாக்கியை எடுத்து வந்தவன், தன் பயிற்சி வீண் போகவில்லை என்பது போல கிட்டத்தட்ட இரு இந்திய புரட்சியாளர்களை சுட்டு அங்கேயே வீழ்த்தியிருக்க, மற்றவர்களோ பயந்து காட்டு வழியாக ஓடிவிட்டனர்.


"ஆஃபீசர்ஸ், சுத்தி எல்லா இடமும் தேடுங்க, புரட்சி பண்றவங்க தெரிஞ்சா யோசிக்காம சுட்டுருங்க. கொட் இட்!" என்று அடித் தொண்டையிலிருந்து அவன் கத்த, வேகமாக துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் சிலர் நுழைய அரண்மனையை சுற்றி தேடினர் இன்னும் சிலர்.


"லூசர்ஸ்..." என்று இறந்துக் கிடந்தவர்களைப் பார்த்து லியோ கேலியாக இதழை வளைக்க, அன்றைய நாள் கழிந்து அடுத்த நாளும் விடிந்தது.


அப்போதுதான் எழுந்து குளித்து முடித்து தயாராகிக்கொண்டிருந்த யாழ்மொழியோ நேற்று நடந்ததை ராதாவிடம் விழிகளை உருட்டிய வண்ணம் சொல்லிக்கொண்டிருந்தாள்.


"நிஜமாகத்தான் சொல்கிறாயா யாழ், அந்த ஆங்கிலேயனிடமிருந்து தப்பித்தாயா?" என்று ராதா விழிகளை பெரிதாக விரித்து ஆச்சரியத்தோடுக் கேட்க, "என்னை என்னவென்று நினைத்து விட்டாய் ராதா, அவன் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு சொடக்கு போடும் நேரத்தில் தப்பித்து விட்டேன் என்றால் பார்.. பாவம்! சாக்கடை நீரில் முங்கி எழுந்தது போல் நின்றிருந்தான். ஆனால்... அவள் சொன்ன அளவுக்கு அப்படி ஒன்றும் அழகில்லையே!" என்றாள் அவள் வேண்டுமென்று.


"என்ன சொல்கிறாய்! நிஜமாகவா..." என்று சிறு அதிர்ச்சியோடு வந்தன மற்றவளின் வார்த்தைகள்.


"ஆம் ராதா, கண்களை வேண்டுமானால் சொல்லலாம். அப்பப்பா! வாள் போன்ற அவனுடைய விழிகள் சற்று என்னை மயக்கத்தான் செய்தது. அடுத்து உதடுகள், சரியாக கவனிக்கவில்லை ஆனால் நம் உதடுகளை விட சிவப்பாக அழகாக..." என்று யாழ் இழுக்க, "சரியாக கவனிக்கவில்லை என்று சொன்னாய்?" என்று சந்தேகமாகக் கேட்டாள் ராதா.


"ஹிஹிஹி... கவனிக்கவில்லை தான். அட இளவரசியை அலங்காரம் செய்வதற்கான நேரம் நெருங்கி விட்டது. விட்டால் ஒரு நாள் முழுதும் பேசிக்கொண்டே இருப்பாய்.  வா வா.. ஆக வேண்டிய வேலைகளை பார்" என்று பேச்சை திசை திருப்பிவிட்டு அவள் அங்கிருந்து இந்திரசேனாவின் அறைக்குச் செல்ல, இளவரசியோ அறை ஜன்னல் வழியே தோட்டத்தில் நடக்கும் குதிரைப் பயிற்சிகளை பார்த்துக்கொண்டிருந்தாள்.


அவளுடைய பார்வைதான் அங்கு இருந்ததே தவிர சிந்தனை முழுவதும் அந்த ஒருவனைப் பற்றிதான்.


"வீரா... வீரா..." என்ற அவனுடைய பெயரை அவள் மெல்ல முணுமுணுக்க, "யார் அது?" என்று பின்னாலிருந்து வந்த யாழ்மொழியின் குரலில் பதற்றமாக திரும்பிப் பார்த்தாள் அவள்.


"அது... யாரைப் பற்றி கேட்கிறாய் யாழ்?" என்று இந்திரசேனா வார்த்தைகளில் தடுமாற்றத்தோடு கேட்க, "நீங்கள்தான் வீரா வீரா என்று யாரையோ அழைத்தீர்கள், அதைதான் யார் என்று கேட்டேன்" என்றுக்கொண்டே அவளுக்கான ஆடைகளையும் அணிகலன்களையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள் மற்றவள்.


இந்திரசேனாவுக்கு  இவளை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை. 


யாழ்மொழியோ அவளை சந்தேகமாகப் பார்க்க, சட்டென  மற்றவளுக்கு ஒரு யோசனை தோன்றியது.


"அய்யோ யாழ்! கீழே தோட்டத்தில் குதிரைப் பயிற்சி நடக்கின்றதல்லவா! அந்த வீரர்களை பார்த்துதான் வீரா வீரா என்றேன். அவ்வளவுதான்" என்று வாயிற்கு வந்த பொய்யை சொல்லி அவள் சமாளித்து விட, அடுத்து எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த குதிரை பயிற்சியை ஆர்வமாகப் பார்த்தாள் யாழ்மொழி


"பணிப்பெண்கள் குதிரைகளை தொடக் கூடாதென்பது அரசர் கட்டளை. ஆனால்... குதிரை சவாரி போக வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை இளவரசி, எப்போதுதான் நிறைவேறுமோ?" என்று குதிரைகளை ஏக்கமாகப் பார்த்தபடி அவள் சொல்ல, தோழியை குறும்பாகப் பார்த்தாள் இந்திரசேனா.


"நீ இந்த அரண்மனையின் பணிப்பெண் என்பதையும் தாண்டி என் தோழி யாழ்மொழி, உன் ஆசையை நான் எப்படி நிறைவேற்றாமல் போவேன்?" என்று இளவரசி இரு புருவங்களையும் ஏற்றி இறக்க, அதிர்ச்சியாக விழி விரித்தவளுக்கு தானாக கிடைக்கும் வாய்ப்பை விடத் தோன்றவில்லை.


அடுத்த அரைமணி நேரத்தில் இளவரசியின் உத்தரவோடு வழக்கம் போல் விழிகள் மட்டும் தெரியும் வண்ணம் முகத்தை மறைத்துக்கொண்ட யாழ்மொழி, குதிரையில் ஏறிச் செல்ல, அதேநேரம் ஆங்கிலேய அரண்மனையிலிருந்து காரில் வெளியேறினான் லியோ ஜார்ஜ். 


***********


நானும் என் பெஸ்ட் ஃப்ரென்டும் சேர்ந்து அமேசன் கிண்டிலுக்காக மித்ரயாழினி அப்படிங்குற பேருல டிரெக்ட் புக்ஸ் எழுதுறோம்.. எங்க புது முயற்சின்னு கூட இதை சொல்லலாம்.. 😁😁 


இப்போ நாங்க எழுதியிருக்குற கதைதான் 'காலமெல்லாம் உன்னைத் தேடி'

Happy Reading 😘 


India link 👇

https://www.amazon.in/dp/B0FLYRBNZG


Usa link 👇

https://www.amazon.com/dp/B0FLYRBNZG


இது கதைய பத்தின ஒரு சின்ன Overview... 👇


1800 இல் வாழ்ந்த இளவரசி மித்ரயாழினி 2025 இன் கால அலைகளைத் தொட, காலம் கடந்து காதல் கொள்கிறாள்.


ஆரம்பத்தில், அவளின் அன்பை புரிந்து கொள்ளாத நிகழ்கால காதலன் யாதவ்

அவளை ஏற்காமல் உதாசீனம் செய்கிறான். காலம் மீண்டும் சுழல, அவளை இழந்த வலியை உணர்கிறான்.


காலத்தை மீறி காதலைத் தேடும் காதலர்களின் பயணம்,

இளவரசியின் இதயத்தையும் கடந்தகால ரகசியங்களையும் தொட்டு மீள்கிறது.


இருவரும் மீண்டும் இணையப்போகும் அந்தச் சந்திப்பு, அவர்களின் காதலை இணைக்குமா? அல்லது நிரந்தரமாய் பிரிக்குமா?


இருவருக்குமிடையிலான காதல், காமம், நகைச்சுவை, பிரிவு, வலி, துரோகம், மர்மங்கள், த்ரில்லர் என கலந்த நாவலே காலமெல்லாம் உன்னைத் தேடி...


🍁மையவிழிப் பார்வை நாவல் இப்போ கிண்டல்ல Available ஆ இருக்கு... 


INDIA link👇

https://www.amazon.in/dp/B0FL2S9LYC


USA link 👇

https://www.amazon.com/dp/B0FL2S9LYC

Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚