விழி தீயிலொரு தவம் 01
ஆண்டு 1890...
அந்த குறுநிலத்தில் வாழும் மக்களின் மனதில் ஆங்கிலேயரின் அடிமைத் தனத்தால் பயமும் வலியும் போட்டி போட, மக்களுக்கு ஆதரவாக அரண்மனையில் ஆங்கிலேய அதிகாரிகளின் முன் கோபத்தோடு நின்றிருந்தார் அரசர் வேந்தன்.
"இதை என்னால் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. தங்களின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மக்களின் நிலையை யோசித்து பேசுங்கள்!" என்று அவர் நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு பேச, அவரை கேலிப் புன்னகையோடு பார்த்தான் ஆங்கிலேய அதிகாரி ரொனேல்ட்.
"நாங்க இந்த ஊர்ல நிறைய நல்ல திட்டங்கள செய்துக்கொண்டு வரோம். அதுக்காக நீங்களும் உங்க மக்களும் டேக்ஸ் ஐ மீன் வரிப்பணத்தை செலுத்துறது கடமை அரசர் வேந்தன்" என்று அவன் சொல்ல, வேந்தனின் விழிகள் சிவந்தன.
ஒரு அடி முன்னே வைத்தவர் அப்போதுதான் அவர்களின் படைப்பலத்தையும் ஆயுதப் பலத்தையும் யோசித்துப் பார்த்தார். போர் தொடங்கினால் கண்டிப்பாக ராஜ்ஜியம் வீழ்வது உறுதி.
கை முஷ்டியை இறுக்கிக்கொண்டு அவர் கையாலாகாத தனத்தோடு நின்றிருக்க, மாடியில் ஒளிந்திருந்து நடப்பதை விழிகளை சுருக்கி பார்த்துக்கொண்டிருந்தாள் யாழ்மொழி.
"என்ன இது, நம் நாட்டில் இருந்துக்கொண்டு அரசரையே எதிர்த்து பேசுகிறார்கள். ச்சே! ஒருநாள் இல்லை ஒருநாள் மொத்தப் பேரும் நாட்டை விட்டு ஓடத்தான் போகிறார்கள்" என்று மனதிற்குள் பொறுமிக்கொண்டவள், முதுகில் உணர்ந்த தொடுகையில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.
"நாளை இளவரசியை பெண் பார்க்க இளவரசர் வருவதாக அன்றே அரசர் சொன்னதை மறந்து விட்டாயா என்ன! இன்று அவர்களை தயார்படுத்த வேண்டும் யாழ்.. சீக்கிரம் வா! அத்தனை பேர் அவர்களுக்கு சேவை செய்ய காத்திருந்தாலும் இளவரசி இந்திரசேனாவின் விழிகள் உன்னைத் தான் தேடும்" என்று பணிப்பெண் தோழிகளில் ஒருத்தி சிரிப்போடு சொல்லிவிட்டு முன்னே வேகமாக செல்ல, அவளுக்கு குறையாத வேகத்தோடு அந்த பெரிய அறையை நோக்கிச் சென்றாள் யாழ்மொழி.
அரசர் வேந்தனின் அமைச்சர் ஒருவரின் மகள்தான் யாழ்மொழி. பிறக்கும் போதே தாய் இறந்திருக்க, தந்தையும் இறந்ததும் அரண்மனையிலேயே வளர்க்கப்பட்டாள். அதனாலேயே இந்திரசேனாவுக்கு அவள் மேல் ஒரு பணிப்பெண் என்பதையும் தாண்டி தோழியாக அத்தனை பிரியம்.
அங்கு இளவரசி இந்திரசேனாவுக்கான அலங்கார ஏற்பாடுகள் வேகமாக நடைபெற, சந்தனத்தை பன்னீரில் கலக்கி அவளுடைய கைக்கால்களில் தேய்த்துவிட்டாள் யாழ்.
"நாளைதானே பெண் பார்க்கும் படலம், இன்றே அலங்காரத்தை ஆரம்பித்து விட்டீர்கள்" என்று இந்திரசேனா கேலியாகக் கேட்க, "நாளை தேவதை போல் மின்னதான் இந்த ஏற்பாடுகள் இளவரசி" என்ற யாழை உதட்டைப் பிதுக்கிக்கொண்டு பார்த்தாள் மற்றவள்.
"ஆனால் யாழ், அலங்காரம் இல்லாமலேயே தேவதை போல் மின்னுகிறாய் நீ. பத்திரமாக இருந்துக்கொள்! நாளை வரும் இளவரசன் நீதான் மணப்பெண் என்று நினைத்துவிடப் போகிறான்" என்று இந்திரசேனா சொல்லி சிரிக்க, வெட்கப் புன்னகையோடு தலை குனிந்துக்கொண்டாள் அவள்.
அடுத்தநாள், தேவதைப் போல் இளவரசன் நந்தனின் முன் நின்றிருந்தாள் இந்திரசேனா. தடல்புடலாக விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, பணிப்பெண்களோடு பணிப்பாக வேலை செய்துக்கொண்டிருந்தவளின் சிந்தனை எங்கோ இருந்தது.
"என்னை தேடியும் எனக்காக பிறந்த ராஜகுமாரன் வருவானோ?" என்று அவள் வாய்விட்டு கேட்டுவிட, "ச்சே ச்சே! ராஜகுமாரன் அல்ல யாழ், அவனும் ஏதாவது ஒரு அரண்மனையில் பணியாளாக வேலை செய்பவனாக இருக்கலாம்" என்று கேலியாக சொல்லி சிரித்தாள் அவளோடு இருக்கும் ராதா.
தோழியை முறைத்துப் பார்த்தவள் அன்றைய நாளை தன் இளவரசனை பற்றிய யோசனையோடு கழிக்க, அன்றிரவு கூட அவளுக்கு தூங்கா இரவாகித்தான் போனது.
அடுத்தநாள், அந்த குறுநிலத்திலிருந்த ஆங்கிலேய அரண்மனையே பரபரப்பாக இருந்தது.
"இஸ் ஹீ அர்ரைவ்ட் ஆர் நாட்? வீ ஆர் வெயிட்டிங் சோ லாங்..." என்று வில்லியம் மற்ற அதிகாரிகளிடம் சொல்லிக்கொண்டிருக்க, வெளியில் மக்களின் கதறல் சத்தம் கேட்ட வண்ணமாய் இருந்தது.
விறுவிறுவென்று வெளியில் வந்தவன், "இன்னும் டென் மினிட்ஸ்ல சார் இங்க வந்துடுவாரு. எந்த சத்தமும் கேக்க கூடாது. ஃபினிஷ் தெம்!" என்று உரக்கக் கத்த, வரிப்பணத்தை செலுத்தாத அந்த மக்களை கதறக் கதற அடித்தனர் அந்த அதிகாரிகள்.
அதை திருப்தியாகப் பார்த்தவன் விஷம புன்னகையோடு உள்ளே செல்ல, அரண்மனையில் இந்திரசேனாவின் அறையில் இருந்த யாழ்மொழியோ இளவரசியிடம் ஏதோ சொல்ல வருவதும் பின் தயங்குவதுமாக தடுமாறிக்கொண்டிருந்தாள்.
இந்திரசேனாவும் அதை கவனிக்காமல் இல்லை.
"யாழ், நீ ஏதோ சொல்ல முயற்சி செய்கிறாய் என்று மட்டும் தெரிகிறது. எதுவாக இருந்தாலும் மனம் விட்டு கேட்டு விடு! என்னிடம் சொல்வதற்கு என்ன தயக்கம்?" என்று அவள் கேட்டதும், அசடுவழிந்தவாறு அவளை ஒரு பார்வைப் பார்த்தாள் யாழ்.
"இளவரசி... ராஜகுமாரன் ராஜகுமாரிகளுக்கு மட்டும்தானா? எங்களை போன்ற பணிப்பெண்களுக்கு இல்லையா?" என்று கேட்ட யாழ்மொழியின் குரலில் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்துக்கொண்டிருக்கும் ஏக்கம் தெரிய, அதைப் பார்த்த இளவரசி இந்திரசேனாவுக்கு லேசாக இதழ்கள் விரிந்துக்கொண்டன.
"ஏன் கிடையாது யாழ்? உன் உலகில் நீயும் இளவரசி தான். எந்த ராஜகுமாரன் உன் அழகை கொத்திச் செல்ல காத்துக்கொண்டு இருக்கின்றானோ? எனக்கே உன் அழகை கண்டு சற்று பொறாமையாகத் தான் இருக்கின்றது" என்று இந்திரசேனா ஒரு பெருமூச்சை விட்டுக்கொள்ள, விரக்தியாகப் புன்னகைத்தாள் அந்த அரண்மனையின் பணிப்பெண்.
"என்னைப் பார்த்து பொறாமையா? ஹாஹாஹா... வேண்டாம் இளவரசி, என்னைப் போன்ற பணிப்பெண்ணுக்கு ஆசைகள் வேண்டாம்" என்று சொன்னவளின் விழிகளிலிருந்து விழிநீர் கசிந்து தரையில் பட்டுத் தெறித்தது.
அதைப் பார்த்த இந்திரசேனாவுக்கு மனம் கனக்க, தரையில் அமர்ந்திருந்தவளின் கரத்தைப் பற்றி இழுத்து தான் அமர்ந்திருந்த மெத்தையின் மீது அமர வைத்தாள்.
"அய்யோ இளவரசி, என்ன காரியம் செய்கிறீர்கள்! எவராவது பார்த்தால் என் கால்களை வெட்டினாலும் வெட்டி விடுவார்கள்" என்று பதறிக்கொண்டு அவள் எழப் போக, "கொஞ்சம் பொறு! எதற்கு இந்த பதற்றம்?" என்று சிரித்தவாறுக் கேட்டாள் இந்திரசேனா.
அவளோ விழிகளில் சங்கடத்தோடு நோக்க, "உன் சங்கடத்திற்கு அர்த்தமே இல்லை, என்னை பொருத்தவரை அனைவரும் சமம்தான். ஆனால் என்ன, அதிகார பதவி அடிப்படையில் இந்த ஏற்றத் தாழ்வுகள். இருந்தாலும் நீ கவலைப்பட தேவையில்லை, நீ இங்கு வேண்டுமானால் பணிப்பெண்ணாக இருக்கலாம், ஆனால் உனக்காக வரும் ராஜகுமாரன் உன்னை ராணி போல் வைத்துக்கொள்ள போகிறான்" என்று அவளுக்கு புரிய வைத்தாள் இந்திரா.
"அப்படியென்றால், அவன் எனக்காக எப்போது வருவான்?" என்று கேட்டபடி யாழ்மொழியோ கன்னத்தில் கை வைத்தவாறு தன் ராஜகுமாரனை பற்றிய கனவில் மிதக்க, அதேநேரம், அந்த ஆங்கிலேய அரண்மனையின் முன்னே அந்த வெள்ளை நிற கார் நிறுத்தப்பட்டது.
அங்கு சுற்றியிருந்த அதிகாரிகள் அனைவரும் அந்த காரிற்கு முன் நெஞ்சை நிமிர்த்திய வண்ணம் நிற்க, காரிலிருந்து தன் முதல் அடியை வைத்து அந்த ஊருக்குள் நுழைந்தான் லியோ ஜார்ஜ்.
பாறை போன்ற இறுகிய முகமும் அவனுடைய சீருடையும் விறைப்பான தோற்றமும் முன்னே நின்றிருந்தவர்களின் வயிற்றில் பயபந்தை உருள வைக்க, "சார்..." என்று மரியாதை நிமித்தமாக செல்யூட் அடித்தனர் மற்ற அதிகாரிகள்.
"வெல்கம் சார்" என்று வில்லியம் கரத்தை நீட்டியவாறு சொல்ல, அதை கண்டுகொள்ளாதது போல் வேக நடையிட்டு உள்ளே சென்றான் அவன்.
அவனின் உதாசீனத்தால் வில்லியமின் முகம் கறுக்க, சரியாக அவனுடைய பார்வையில் ஏகப்பட்ட அந்த கிராமத்தை சேர்ந்த இந்தியர்கள் உடலில் காயங்களோடு உணர்வற்று தரையில் கிடக்கும் காட்சி தெரிந்தது.
ஆனால், அந்த ஆங்கிலேயனோ அதை அலட்சியமாக ஒரு பார்வைப் பார்த்துவிட்டு தன் ஆஃபீஸ் அறைக்குள் நுழைந்துக்கொண்டான்.
'உயரதிகாரி லியோ ஜார்ஜ்' என்ற அவனுடைய பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்க, அதை தன் அக்மார்க் புன்னகையோடு தடவி விட்டுக்கொண்டவன் தன் இருக்கையில் அமர்ந்த அடுத்தகணம், அவன் முன்னே வேகமாக வந்து நின்றனர் இரு ஆங்கிலேய அதிகாரிகள்.
"சார்..." என்ற அவர்களின் குரலிலேயே லேசான பயம் எட்டிப் பார்க்க, "நோ மோர் எக்ஸ்கியூஸஸ் மிஸ்டர் ஜேம்ஸ், டெக்ஸ் இனிமே கரெக்ட்டா வசூலிக்கப்படணும். கொடுக்க முடியலன்னா தண்டனை கடுமையா இருக்கணும். திஸ் இஸ் மை ஆர்டர்" என்றவனின் குரலில் அதிகாரமும் கட்டளையும் ஓங்கி ஒலித்தது.
"நாங்க எங்க கடமைய சரியாதான் பண்றோம். ஆனா, சில மக்கள் எங்கள எதிர்க்குறாங்க, இல்லன்னா புரட்சி பண்றாங்க. வீ கான்ட் ஹேன்டல் தட் சிட்டுவேஷன்" என்று பக்கத்திலிருந்த வில்லியம் சொல்ல, புருவ முடிச்சுகளோடு அவனைப் பார்த்தான் லியோ.
"டெக்ஸ் அவங்க நமக்கு கொடுத்தே ஆகணும், ஒருவேள நமக்கு எதிரா புரட்சி பண்றாங்கன்னா, யோசிக்க தேவையில்ல ஷூட் தெம். நம்மள பார்க்குறப்போ அவங்க கண்ணுல பயம் மட்டும்தான் தெரியணும். கொட் இட்!" என்றான் அவன் அழுத்தமாக.
"பட் சார்.. ஏற்கனவே இந்த ப்ளேஸ்ஸோட கிங் நம்ம மேல கோபத்துல இருக்காரு. இந்த மாதிரி பண்ணா அவங்க கோபத்தை ட்ரிக்கர் பண்ணுற மாதிரி இருக்காதா?" என்று ஜேம்ஸ் தயக்கத்தோடுக் கேட்க, இருக்கையிலிருந்து எழுந்து அந்த அதிகாரியின் எதிரே வந்து நின்றான் லியோ.
ஒற்றைக் காலை மடக்கி மேசையில் சாய்ந்துக்கொண்டவன், "இந்த நாட்டுக்குள்ள நாம வரதுக்கு முன்னாடி இதை எல்லாம் நாம யோசிச்சுதான் வந்தோமா மிஸ்டர் ஜேம்ஸ்? இவங்களால நம்ம கன்ட்ரிக்கு நிறைய அட்வான்டேஜஸ் இருக்கு, வீ டோன்ட் நீட் எனிவன்ஸ் பர்மிஷன்ஸ் டூ இம்போஸ் அவர் ரூல்ஸ்" என்று சொல்லி இதழை கேலியாக வளைத்தான்.
வில்லியமும் ஜேம்ஸும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள, "கோ அஹெட்!" என்றுவிட்டு மீண்டும் தன் இருக்கையில் சென்று அமர்ந்தவன் கையிலிருந்த ஃபைலில் முகத்தை புதைத்துக்கொள்ள, அந்த அதிகாரிகளும் அந்த அறையிலிருந்து வெளியேறினர்.
அடுத்தநாளே, மொத்த ஊருக்கும் புதிய ஆங்கிலேய உயரதிகாரி வந்த விடயம் காட்டுத் தீ போல் பரவ, அரண்மனையிலிருந்த யாழ்மொழியின் காதிற்கும் அந்த தகவல் சென்றது.
பணிப்பெண்களோடு தங்களுக்கான அறையில் அமர்ந்திருந்தவள், "வரிப்பணத்தை அதிகரிக்கப் போவதாக தகவல் வந்திருக்கிறது, இவர்கள் அட்டூழியங்கள் அளவிற்கு மீறி சென்றுக்கொண்டிருக்கிறது. பேசாமல் நானும் புரட்சி குழுவில் இணையலாம் என்று நினைக்கிறேன்" என்று கோபமாகச் சொல்ல, மற்ற தோழிகளோ வாய்விட்டு சிரித்தனர்.
"யார் நீயா! சாதாரண பல்லியை பார்த்தாலே விழுந்தடித்துக்கொண்டு ஓடுவாய். நீ புரட்சி குழுவில் இணையப் போகிறாயா? நகைச்சுவை வேண்டாம் யாழ்" என்று ராதா கேலியாக சொல்ல, "கொஞ்சம் அமைதியாக இருங்கள், இப்போது ஆங்கிலேய அரண்மனைக்கு வந்திருக்கும் புதிய உயரதிகாரியை யாராவது பார்த்திருக்கின்றீர்களா? அந்த வெள்ளையனின் அழகை மெச்ச வார்த்தைகளே இல்லை என்று பேசிக்கொள்கிறார்களே! அதைப் பற்றி யாருக்காவது தெரியுமா?" என்று கேட்டாள் அவர்களில் ஒருத்தியான சீதா.
யாழ்மொழியின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.
"என்ன, நிஜமாகவா! நான் இப்படி எல்லாம் கேள்விப்படவே இல்லையே! எங்களின் தேச மக்களின் அழகை விட அழகா அவன்? வெறும் நிறத்தை வைத்து சொல்கிறார்கள் போலும் ஹாஹாஹா..." என்று யாழ் அலட்சியமாக சொல்லி சிரிக்க, "என் உழவுத்துறை அமைச்சின் படி அந்த ஆங்கிலேயனை பார்த்தால் எந்த பெண்ணும் மயங்காமல் இருக்க மாட்டார்களாம்! எனக்கு இப்போதே பார்க்க வேண்டும் போல இருக்கிறது" என்றாள் சீதா விழிகளில் ஆசை மிதக்க.
மற்ற பெண்கள் ஆச்சரியமாக அவளை பார்த்துக்கொண்டிருக்க, "ஆசையா! பிடித்து சிறையில் போட்டால்தான் உனக்கு புத்தி வரும் போல. அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தென்று சொல்வார்கள். அவன் நம் நாட்டை கைப்பற்றி இருக்கும் ஆங்கிலேய அதிகாரி, அதை மறந்து விடாதீர்கள். அவன் மேல் ஆசைப்படுவது நம் நாட்டிற்கு செய்யும் துரோகம்" என்ற யாழ்மொழியின் வார்த்தைகள் அழுத்தமாக ஒலித்தன.
"அது யாழ்.. அவள் விளையாட்டுக்காக தானே..." என்று பேச வந்த ராதாவின் பேச்சைக் கேட்க அவள் அங்கு இருக்கவே இல்லை.
அறையிலிருந்து வெளியேறி வராண்டாவில் நடந்துச் சென்றவள் அங்கிருந்த ஜன்னல் வழியே தெரிந்த நிலவை வெறிக்கத் தொடங்க, அதேநேரம் தன் அறையிலிருந்து அதே நிலவைதான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் லியோ.
"க்ரிஸ்டி..." என்ற பெயரை விழிகள் சிவக்க முணுமுணுத்தான்.
நடந்த கசப்பான சம்பவங்களின் விம்பங்கள் அவனுடைய நினைவடுக்கில் தோன்றி மறைய, விழிகளை அழுந்த மூடித் திறந்து உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டான் லியோ ஜார்ஜ்.
'அவள மறந்துரு லியோ.. இனி அவ உன் லைஃப்ல இல்ல. துரோகி!' என்று மட்டும் தனக்குள் சொல்லிக்கொண்டவன் கட்டிலில் சென்று விழுந்தும் தூக்கம்தான் வந்தபாடில்லை.
அன்றைய நாள் கழிந்து அடுத்தநாளும் விடிய, வழக்கமான தன் வேலைகளை செய்துக்கொண்டிருந்தாள் யாழ்மொழி.
"இளவரசி, அசையாமல் இருங்கள், இல்லையென்றால் விரல்களை வெட்டி விடப் போகிறேன்" என்று மெல்ல இளவரசியின் நகங்களை அழகாக வெட்டி விட்டவாறு அவள் சொல்ல, இந்திரசேனாவோ ஏதோ ஒரு தீவிர யோசனையில் இருந்தாள்.
நிமிர்ந்துப் பார்த்த யாழ்மொழி, "எதற்கு இந்த தீவிர யோசனை?" என்று புன்னகையோடுக் கேட்க, "அது...நகரை ரகசியமாக வலம் வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன, அதனால்.." என்று இந்திரசேனா குறும்புச் சிரிப்போடு இழுக்க, அவளை அதிர்ச்சியோடுப் பார்த்தாள் மற்றவள்.
"இளவரசி, அரசருக்கு மட்டும் தெரிந்தால் அவ்வளவுதான்" என்று யாழ் பயந்த குரலில் சொல்ல, மற்றவளோ தோழியை அழுத்தமாகப் பார்த்தாள்.
"இளவரசியின் பிடிவாதத்தை வெல்ல முடியுமா என்ன?" என்று விழிகளை உருட்டியவள் யாருக்கும் தெரியாமல் இந்திரசேனாவை சந்தைக்கு அழைத்துச் செல்ல, அதேநேரம் சாதாரண உடையில் ஜேம்ஸ்ஸோடு அதே சந்தைக்குள் நுழைந்தான் லியோ.
*************
விழிகள் 02 >>>
https://agnitamilnovels.blogspot.com/2025/08/02.html
மையவிழிப் பார்வை நாவல் இப்போ கிண்டல்ல Available ஆ இருக்கு...
INDIA link👇
https://www.amazon.in/dp/B0FL2S9LYC
USA link 👇
https://www.amazon.com/dp/B0FL2S9LYC
என்னோட மற்ற கதைகளை வாசிக்க.. (kobo writing life App)👇
India link >>
USA link >>>
Comments
Post a Comment