அகல்கவி 19

 



அகல்கவி சிலையமுதே 19



சங்கரபாண்டியின் வீட்டில்,


மொத்தக் குடும்பமும் பெரியவரின் வீட்டில் கூடியிருக்க, சோஃபாவில் மித்ரா அழுதபடி அமர்ந்திருந்தாள் என்றால் அவளை தேற்றியபடி அவள் பக்கத்தில் அமர்ந்திருந்தார் மேகலை.


சங்கரபாண்டியோ அவளை விடாது முறைத்துத் தள்ள, மற்றவர்களோ ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு அமைதியாக நின்றிருந்தனர்.


"அதான் குடும்ப மானத்த வாங்கிட்டு யாரை பத்தியும் கவலைப்படாம ஓடினால்ல, இப்போ மட்டும் எதுக்குலே வந்திருக்கா? ஒழுங்கா போகச் சொல்லு.. இல்லான்னா பிரச்சனையாகிரும்" 


என்று சங்கரபாண்டி அடித்தொண்டையிலிருந்து உரும, குற்றவுணர்ச்சியாலும் தந்தையின் வார்த்தைகளாலும் தலை குனிந்தவாறு குலுங்கிக் குலுங்கி அழுதாள் மித்ரா. 


"சரிங்க விடுங்க, நம்ம பொண்ணு திரும்பி வந்துட்டால்ல எனக்கு அது போதும். நடந்தத மறந்துட்டு அவள ஏத்துக்கலாங்க" என்ற மேகலைக்கு தாய்ப்பாசம் கண்ணை மறைக்க, பெரியவருக்கோ ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.


"ம்மா.. வேணாம்மா, நான் பண்ணது தப்புதான். எனக்கு புரியுது.. இங்கயிருந்து போன ரெண்டே நாள்ல உங்கள பார்க்க வந்திருப்பேன். ஆனா குற்றவுணர்ச்சி விடல, இப்போ கூட உங்க முகத்த எப்படி பார்ப்பேன்னு ரொம்ப பயமா இருந்துச்சு. என்னை பார்த்தா அப்பா கோபப்படுவாருன்னு எனக்கு நல்லாவே தெரியும். உங்கள இதுக்குமேல கஷ்டப்படுத்த எனக்கு பிடிக்கலம்மா. கௌத்தம் இந்த ஊருக்கு ஒரு வேலையா வந்தாரு.. என்னால உங்கள பார்க்காம இந்த ஊரை விட்டு போக மனசு வரல. அதான்.. அவர்கிட்ட கூட சொல்லாம வந்துட்டேன்" 


மித்ரா வார்த்தைகள் திக்கித்திணற சொல்லி முடிக்க, "ச்சீ.. பண்றதெல்லா பண்ணிட்டு வியாக்கியானம் பேசுறியா" என்று கத்தினார் சங்கரபாண்டி.


"அண்ணே விடுங்க, அதான் நம்ம பாப்பா திரும்பி வந்திருக்குல்ல. அதுவும் அவள பார்த்தாலே தெரியுது எந்த குறையும் இல்லாம அந்த பையன் வச்சிருக்கான்னு. இதுக்குமேல என்னண்ணே வேணும்? கோபத்த விட்டுத்தள்ளிட்டு பொண்ண ஏத்துக்கோங்க.." என்று ஒரு பக்கம் முத்துப்பாண்டி சொல்ல, "ஆமாங்க.. இருக்குற ஒரே பொண்ணு, இவ மேல கோபத்த வச்சுக்கிட்டு என்னங்க பண்ண போறோம் வாழ்க்கையில?" என்றார் மேகலை மகளை அணைத்தபடி.


சங்கரபாண்டி எதுவும் பேசாமல் தரையை வெறித்துக்கொண்டிருக்க, இத்தனைநேரம் வாசலோடு நின்று நடப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த யுவனோ மித்ராவைய் பார்த்தவாறு சங்கரபாண்டியின் அருகே வந்தான்.


"மாமா... உங்களுக்கு மித்ராமேல எந்தளவுக்கு கோபம் இருக்கணுமோ அதே அளவு எனக்கும் இருந்திருக்கணும். ஆனா சின்னவயசுலயிருந்து அவ கூடவே வளர்ந்ததாலோ என்னவோ இப்போ அவள பார்த்ததும் அவளுக்கு எதுவும் ஆகல நல்லா இருக்கான்னு ஒரு நிம்மதிதான் மனசுக்குள்ள தோனுச்சு.. அந்த நொடி கோபம்லாம் எங்கேயோ போயிருச்சு.


எனக்கே இப்படி இருக்குன்னா கண்டிப்பா உங்களாலயும் அவமேல கோபத்த காமிக்க முடியாது மாமா.. உங்க ஈகோவ விட்டுத் தள்ளிட்டு அவ கூட பேசுங்க.." என்று அவன் சிறு புன்னகையோடு அழுத்தமாக சொல்லி முடிக்க, சடாரென நிமிர்ந்து யுவனை வலி நிறைந்த ஒரு பார்வைப் பார்த்தாள் மித்ரா.


அந்த பார்லையில் ஒரு பக்கம் குற்றவுணர்ச்சி இன்னொரு பக்கம் மன்னிப்பு என்று யுவனுக்கு உணர, சரியாக "மித்ரா..." என்ற குரலில் மொத்தப் பேரும் வாசலைப் பார்த்தனர்.


அங்கு ஆறடி உயரத்திர் ஒரு ஆண்மகன் திருதிருவென விழித்தவாறு வாசலையே மறைத்த வண்ணம் நின்றுக்கொண்டிருக்க, அவனைப் பார்த்ததுமே மித்ரா எழுவதற்குள் அவன் யாரென்று புரிந்துக்கொண்டான் யுவன்.


உடனே, "அட வாங்க கௌத்தம்.. என்ன வாசல்லயே நின்னுட்டு இருக்கீங்க.. உள்ள வாங்க.." என்று அவன் அழைக்க, தயங்கியபடி உள்ளே வந்தவனை நிமிர்ந்துப் பார்த்தார் சங்கரபாண்டி.


மித்ராவோ கண்ணீரைத் துடைத்தபடி எழுந்து நின்றுக்கொள்ள, என்ன பேசுவதென்று தெரியாது பெக்கபெக்கவென விழித்துக்கொண்டு நின்றிருந்தனர் மற்ற அனைவரும்.


கௌத்தமுக்கும் அத்தனை தயக்கம். சொல்லாமல் கொல்லாமல் வந்த மனைவியை முறைத்துப் பார்த்தவன் கைகளைப் பிசைந்தபடி நின்றிருக்க, "உக்காருங்க தம்பி.." என்றார் சங்கரபாண்டி பட்டென்று. 


அவரின் பெரிய மீசையும் தோற்றமும் அடி வயிற்றை கலக்கினாலும் அதை மறைத்துக்கொண்டு அமர்ந்துக்கொண்டவன் மித்ராவைப் பார்க்க, அவளோ தயக்கமாக அவனருகே அமர்ந்துக்கொண்டாள்.


"இப்படிதான் சொல்லாம கொல்லாம வருவியா.. டோன்ட் யூ ஹேவ் எனி சென்ஸ், இவ்வளவுநாள் சும்மாதானே இருந்த. இப்போ மட்டும் எங்கயிருந்து இத்தனை பாசம்?" மித்ராவின் காதருகே அவன் கடிந்துக்கொள்ள, "என்ன தம்பி சத்தம்?" என்று மிரட்டலாகக் கேட்டார் பெரியவர்.


அதில் திடுக்கிட்டவன், "அது.. அது வந்து சார்.. ஒன்னுஇல்ல சும்மாதான்.." என்று பயந்துப்போய் திணற, "சாரா.." என்று மீண்டும் அதட்டலாக வந்தன அவருடைய கேள்வி.


"அண்ணே, பாலும் பழமும் சாப்பிட்டு வளர்ந்த உடம்பு.. உங்க குரல்ல கொஞ்சம் பயப்படுதுல்ல.. அமைதியா பேசுங்க.." என்று முத்துப்பாண்டி வேறு சிரிப்பை அடக்கிக்கொண்டு சொல்ல, "மாமான்னு கூப்பிடுங்க. சாரு மோரெல்ல எங்க குடும்பத்துக்கு ஆகாது" என்றார் சங்கரபாண்டி மீசையை முறுக்கிவிட்டவாறு.


மித்ராவுக்கு தன் தந்தை இத்தனை தூரம் இறங்கி வந்ததே போதுமென்று இருக்க, விழிகள் சந்தோஷத்தில் கலங்கின.


உடனே கௌத்தமை இழுத்துக்கொண்டு சென்று அவள் சங்கரபாண்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க, "நல்லா இருங்க" என்று மட்டும் சொன்னவர், "நீ பண்ணிட்டு போன காரியத்த என்னால மன்னிக்க முடியலதான். ஆனா மறக்க முயற்சி பண்றேன்.." என்றவர் அங்கிருந்து நகர்ந்திருந்தார்.


"மித்ரா கெளம்பலாமா?" என்று கௌத்தம் அவளுடைய காதைக் கடிக்க, அது மேகலையின் காதிலும் சரியாக விழுந்தது போலும்!


"தம்பி, அது... மித்ரா ஒரு ரெண்டுநாள் எங்ககூட இருக்கட்டுமே, ரொம்பநாளைக்கப்பறம் பொண்ண பார்த்திருக்கோம். ரெண்டுநாள்தான்.." என்று அவர் தயங்கித் தயங்கிக் கேட்க, மித்ராவும் தன் கணவனை பாவமாகப் பார்க்க, அவனோ விழிகளை சலிப்பாக உருட்டினான்.


"ரெண்டுநாள்தான், ஆனா என்னால இருக்க முடியாது. ஐ  ஹேவ் அ லொட் ஆஃப் வர்க். சோ.. டூ டேய்ஸ்க்கு அப்பறம் வந்து நானே கூட்டிட்டு போறேன்" என்றுவிட்டு கௌத்தம் வெளியேறப் போக, "அய்யோ என்ன தம்பி வீட்டுக்கு வந்து சாப்பிடாம போறீங்க, கொஞ்சநேரம் இருங்க, விருந்தே ரெடி பண்றோம், இருந்து சாப்பிட்டுட்டு போங்க" என்றார் பொன்னி வேகமாக.


"இல்ல வேணாம்.. நான் போகணும்" என்று ஒட்டாத தன்மையோடு பேசிவிட்டு அவன் வெளியேற, மித்ராவும் வற்புறுத்தவில்லை. 


கௌத்தம் வெளியறியதும் சோஃபாவில் தொப்பென்று வசதியாக அமர்ந்துக்கொண்ட மித்ரா, "அம்மா ரொம்பநாளைக்கப்பறம் வந்திருக்கேன், எனக்கு நல்லா சாப்பிடணும் எனக்கு பிடிச்சதெல்லா பண்ணும்மா ப்ளீஸ்.." என்று சொல்ல, "என்னடீ ஏதோ அந்த வீட்டுல உனக்கு சாப்பாடே கொடுக்காத மாதிரி பேசுற, அதான் மாப்பிள்ள பெரிய ஆளாச்சே, நான் நினைச்ச மாதிரி உனக்கொரு வாழ்க்கை அமைஞ்சிருக்கு" என்றார் மேகலை சாரதாவை ஓரக்கண்ணால் பார்த்தவாறு.


ஆனால் தாயின் வார்த்தைகளில் மித்ராவின் முகம் இறுக உடனே தன் முகபாவனையை மாற்றிக்கொண்டவள் சாரதாவை பார்த்துவிட்டு, "அத்தை..." என்று சந்தோஷமாக அழைத்தவாறு அவரை நோக்கிச் செல்ல, முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார் அவர்.


"நீங்க கவலைப்படாதீங்க அக்கா, அத்தை சீக்கிரம் பேசுவாங்க.." என்ற அகல்யாவின் குரலில் பட்டென்று திரும்பியவள் விழிகள் மின்ன ஓடிச்சென்று அவளை அணைத்து அழ ஆரம்பிக்க, தன் தமக்கையை அணைத்துக்கொண்டவளுக்கும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.


அப்போதுதான் அகல்யாவின் கழுத்திலிருந்த தாலியை கவனித்த மித்ரா, அவள் பின்னால் நின்றிருந்த யுவனை கேள்வியோடு பார்க்க, அவனோ அகல்யாவின் தோளைப் பற்றி தன்னோடு அணைத்துக்கொண்டான். 


அதிலேயே அவளுக்கு புரிந்துப் போக, ஏனென்று தெரியாத ஒரு வலி அவளுக்குள். 


"உங்க ரெண்டு பேரையும் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு" வலியை உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு அவள் சொல்ல, யுவனோ அகல்யாவின் முகத்தை புன்னகையோடு பார்த்தான் என்றால், அவளும் அவனைதான் ஆழ்ந்த பார்வைப் பார்த்தாள்.


அன்று முழுக்க மித்ரா வீட்டிலுள்ளவர்களுடன் சிரித்துப் பேசி வயிறார உண்டு நிம்மதியாக உறங்க அடுத்தநாளும் விடிந்தது.


பறவைகள் கீச்சிடும் சத்தம் காதில் ஒலிக்க, "மாமா.. மாமா.." என்று கத்திக்கொண்டே முத்துப்பாண்டியின் வீட்டிற்குள் ஓடி வந்தாள் மித்ரா.


"என்னம்மா யார தேடிட்டு இருக்க?" என்று பொன்னி அப்போதுதான் சமையலறையிலிருந்து வெளியில் வந்தபடிக் கேட்க, "அது.. யுவா மாமாவ அத்தை" என்றாள் அவள் சுற்றிமுற்றி பார்த்தபடி.


பொன்னியும் சில கணங்கள் யோசித்துவிட்டு, "யுவா தம்பி மாடியில இருக்குற அறையிலதான் இருக்கும், ஆங்.. உள்ள போறதுக்கு முன்னாடி.." என்று சொல்லி முடிக்கவில்லை அதற்குள் வேகமாக அறையை நோக்கி அவள் ஓட, அதேநேரம் யுவனின் அறையில்..


யுவனுக்கான சட்டையை அயர்ன் செய்துக்கொடுத்துவிட்டு அகல்யா வெளியேறப் போக, "அய்யய்யோ அகலு,  இந்த சட்டையில ஏதோ கறை பட்டிருக்கு. ச்சே!" என்றான் அவன் சலித்தபடி.


தலையிலடித்துக்கொண்டவள், "இருங்க நான் பார்க்குறேன்.." என்றுவிட்டு டீபாயின் மீதிருந்த தண்ணீர் க்ளாஸில் தன் முந்தானையை நனைத்து கறையை துடைக்க முயல, அதுவோ இப்போதுதான் அப்பட்டமாக தெரியவே ஆரம்பித்துவிட்டது.


சட்டையை அணிந்திருந்த யுவனோ அதை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு தன் மனைவியை ஒற்றை புருவத்தைத் தூக்கி ஒரு பார்வைப் பார்க்க, அதில் நாக்கைக் கடித்துக்கொண்டவாறு, "சாரி மாமா.." என்று அசடுவழிய சிரித்தவளைப் பார்த்தவனுக்கு ஏனோ கோபப்பட தோன்றவில்லை.


தன்னை மீறி அவளை ரசித்தவன், "நீ இப்போலாம் என் கண்ணுக்கு ரொம்ப அழகா தெரியுற அகலு" என்று கிறக்கமான குரலில் சொல்லிக்கொண்டே அவள் முகத்தில் தவழ்ந்துக்கொண்டிருந்த முடிக்கற்றையை காதோரம் ஒதுக்கிவிட, ஜன்னல் வழியே வந்த சூரிய வெளிச்சம் வேறு முகத்தில் பட்டுத் தெறிக்கவும் தேவதையாய் தெரிந்தாள் அவன் மனைவி.


அவனுடைய வார்த்தைகளில் அவளுக்கு வெட்கம் பீறிட, யுவனோ மேலும் அவளை நெருங்கி அவளிதழை நோக்கி குனிந்தான். 


அகல்யாவுக்கு இதயம் படுவேகமாக அடித்துக்கொண்டது. இருந்தும் கால்கள் நகர மறுக்க அவள் அப்படியே சிலைபோல் நின்றுக்கொள்ள, சரியாக கதவைக் கூட தட்டாமல் கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் மித்ரா.


இதை சற்றும் எதிர்பார்க்காத யுவனோ பதறியபடி அவளிடமிருந்து விலகி நிற்க, இதை மித்ராவும் எதிர்பார்க்கவில்லை.


"சா.. சாரி மாமா, ஏதோ பழக்கத்துல..." என்று சங்கடத்தோடு சொன்னவள் அங்கிருந்து வெளியேறியிருக்க, அகல்யா திருதிருவென விழித்தாள் என்றால் யுவனோ வெளிப்படையாக தலையில் அடித்துக்கொண்டவாறு மித்ராவை தேடிச் சென்றான்.


அவளோ கைகளை பிசைந்தபடி தயக்கத்தோடு திரும்பி நின்றிருக்க, "அது மித்ரா.. என்.. என்ன விஷயமா வந்த? ஏதாச்சும் முக்.. முக்கியமான விஷயமா?" என்றவனுக்கு வார்த்தைகள் தந்தியடித்தன.


அதை உணர்ந்தவளாக அவனை திரும்பிப் பார்த்தவள், "அப்படிலாம் இல்ல மாமா.. சும்மாதான் பார்க்க வந்தேன், என்னை மன்னிச்சிருங்க.. நான் ஒன்னு வேணும்னு.." என்றவளுக்கும் அத்தனை சங்கடமாக இருக்க, "சரி விடு.. நீயும் எதிர்பார்க்கலல்ல" என்றான் யுவன் வெட்கப் புன்னகையோடு.


அதை ஆச்சரியமாகப் பார்த்தவள், "நீங்க சந்தோஷமா இருக்கீங்களா மாமா?" என்று ஒரு மாதிரிக் குரலில் கேட்க, "எனக்கென்ன, நல்லா இருக்கேன் மித்தும்மா" என்று சாதாரணமாக சொன்னான் யுவனாதித்.


அதில் ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவள், "ஏனோ தெரியல மாமா.. இப்போ உங்கள பார்க்கும் போது மிஸ் பண்ணிட்டேனோனு தோனுது" என்று விரக்திக் குரலில் சொல்ல, ஒருகணம் அதிர்ந்துவிட்டான் ஆடவன்.


"என்.. என்ன சொல்ற மித்ரா? உனக்கென்ன, கௌத்தம் நல்லா பெரிய இடத்து ஆளு, உன்ன நல்லாதானே பார்த்துக்குறாரு. அப்பறம் என்ன?" என்று அவன் புரியாமல் கேட்க, விழிகள் கலங்க ஒரு இடத்தை வெறிக்க ஆரம்பித்தாள் மித்ரா.


"அவர் வீட்டுல எனக்கு எந்த குறையும் இல்ல எல்லா வசதியும் இருக்கு. ஆனா ஒன்ன தவிர.. அங்க பாசம் காட்ட ஒருத்தரும் இல்ல மாமா.. கௌத்தமா இருந்தாலும் பணம் வேலைன்னேதான். இங்க எல்லா சாப்பிடும் போது ஒன்னா சிரிச்சு பேசிக்கிட்டு சாப்பிடுவோம்ல, ஆனா அவங்க வீட்டுல நான் சாப்பிட்டேனான்னு கேக்க கூட ஆளுங்க இருக்க மாட்டாங்க. 


பக்கத்துல உக்கார்ந்து யாருமே பாசமா பேச மாட்டாங்க மாமா. அங்க இருக்கும் போது தினமும் பைத்தியமே பிடிக்குற மாதிரி இருக்கும். தனியா எங்கேயாச்சும் வெளியில போகலாம்னா அதுக்கும் விட மாட்டாங்க. அந்த குடும்பத்துக்குன்னு சில ரூல்ஸ். இதைதான் சாப்பிடணும், இவ்வளவுதான் சாப்பிடணும், இப்படிதான் சிரிக்கணும், தூங்கணும்னு அவங்க ப்ரோக்ராம் பண்ண மாதிரி இருக்கணும்"


என்று அவள் சொல்லிக்கொண்டே போக, அவளின் வார்த்தைகளிலிருந்த வலியை அவனாலும் உணர முடிந்தது.


அவள் அழுவதை பொறுக்க முடியாமல் யுவன் மித்ராவை ஆறுதலாக அணைத்துக்கொள்ள , சரியாக மித்ராவை தேடி மாடிக்கு வந்த பொன்னியின் விழிகளில் இது சிக்க, திகைத்துவிட்டார் பெரியவர்.



*********


இனி என்னோட கதைகள அமேசன் கிண்டலில் படிக்கலாம்.. என்னோட அத்தனை கதைகளும் available ஆ இருக்கு..  


INDIA LINK 👇👇

https://www.amazon.in/stores/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%95%E0%AE%BF/author/B08ZYCHG6C?ref=ap_rdr&shoppingPortalEnabled=true


USA LINK 👇👇

HTTPS://WWW.AMAZON.COM/S?K=SHEHAZAKI&CRID=3JUFX3LM7QXE7&SPREFIX=SHEHAZAKI%2CAPS%2C393&REF=NB_SB_NOSS



-Sheha zaki



Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚