யாத்ரன் 25

யாவும் நின் யாத்ரனாய்.. 

EPISODE 25






"சிறிய ராஜ்ஜியமே என்று மனதில் சுணுங்கிய எனக்கு இத்தனை பேரழகான இளவரசியா?" 

இதழில் விஷமப் புன்னகையும் விழிகளில் வன்மத்தோடும் அரசர் ராஜேந்திரன் நெருங்க, சிறு பயத்தோடு பின்னே நகர்ந்தாள் இளவரசி ஜோதி.

"என் கால் தூசுக்கு சமமான இப்படியொரு ராஜ்ஜியத்து இளவரசியை மணமுடிக்க நானே கேட்டுமே என்னை அவமானப்படுத்தினார் உன் தந்தை. இப்போது உன் தந்தையை கொன்று ராஜியத்தையும் கைப்பற்றிவிட்டேன், ராஜ்ஜியமும் எனக்கே இளவரசியும் எனக்கே.."

அவன் சொல்லிக்கொண்டு ஒவ்வொரு அடியாக அவளை நோக்கி வர, பெண்ணவளுக்கு என்ன செய்து தன்னை காத்துக்கொள்வதென்றே தெரியவில்லை.

சரியாக அவள் விழிகளில் பட்டது சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த வாள்.

அதைப் பார்த்தவள் வேகமாக அதையெடுப்பதற்காக ஓடப் போக, பாய்ந்து அவள் தலை முடியை கொத்தாகப் பற்றியவன் அவளுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

அந்த பலமான அடியில் அவளுடைய இதழோரம் வெடித்து இரத்தம் கசிய, அதை ரசித்துப் பார்த்த ராஜேந்திரனோ அவளின் இதழை நோக்கி குனிந்தான்.

சட்டென அவனுடைய பின்னந்தலையிவ் விழுந்த அடியில், "ஆஆ..." என்று கத்திக்கொண்டு தன் பிடியில் நின்றிருந்தவளை உதறிவிட்டவன், உடனே யாரென்று திரும்பிப் பார்க்க, கோபமும் பயமும் ஒருசேர மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்றிருந்தான் யாத்ரன்.

நடப்பது தெரிந்ததும் தன் ஒருதலைக் காதலுக்காக வந்திருக்கிறான் அவன். ராஜேந்திரனின் பலத்தை அவன் அறியாமலில்லை.

கைக்கால்கள் நடுங்கினாலும் தன்னவளைக் காக்க உயிரை பணயம் வைத்து நின்றான் அவன்.

"உன்னை பார்த்தால் சாதாரண வேலையாள் போல தெரிகிறது, நீ என்னை எதிர்த்து நிக்கிறாயா ஹாஹாஹா..." என்று கத்திக்கொண்டே யாத்ரனை அரசர் ராஜேந்திரன் ஓங்கி அடிக்க, தூரே சென்று விழுந்தான் அவன்.

சுவற்றில் மோதி விழுந்ததில் அவனுடைய முழங்கையில் பலமான அடி விழ, முயன்று எழுந்து நின்றவன், "உங்க அளவுக்கு இந்த சாதாரண சிற்பிகிட்ட பலம் இல்லதான். ஆனா, இளவரசிக்காக உங்கள எதிர்த்து நிக்கவும் தயாரா இருக்கேன். கெஞ்சி கேக்குறேன் அரசே, அவங்கள விட்டுருங்க" என்றான் கெஞ்சலோடு.

இளவரசி ஜோதிக்கு 'யார் இவன்?' என்ற கேள்விதான் உள்ளுக்குள் எழுந்தது.

"நீ கூறி நான் விடுவதா... முடியாது என்றால் உன்னால் என்ன செய்துவிட முடியும்?" எக்கத்தாளமாய் சொன்ன அரசன் இளவரசியின் புறம் திரும்ப, "அப்போ.. அப்போ அரசன்னு கூட பார்க்க மாட்டேன். என்னை மன்னிச்சிருங்க! எனக்கு வேற வழி தெரியல" என்றவன் தன் சிறிய கத்தியை கையிலெடுத்து சண்டைக்கு தயாராக நின்றான்.

ஆனால், அரசர் ராஜேந்திரனின் இதழ்கள் கேலியாக வளைந்தன.

"உன்னை இத்தனை தூரம் நான் பேச விட்டதே தவறு" என்ற அந்த அரசன் தன் இடையிலிருந்த வாளை உருவி கொஞ்சமும் யோசிக்காமல் அவனுடைய வயிற்றைக் கிழிக்க, அப்படியே தரையில் விழுந்து துடிக்க ஆரம்பித்தான் யாத்ரன்.

அந்த இளவரசியோ கதறலோடு அவனை நோக்கி ஓடி வர, அவள் முழங்கையைப் பற்றியிழுத்த ராஜேந்திரன் அவளுடைய வயிற்றிலும் வாளை சொருகினான். 

வலி தாங்க முடியாது கத்தியவள் அப்படியே தரையில் சரிய, இருவரின் உடல்களிலிருந்தும் இரத்தம் பீறிட்டு ஓடியது.

அந்த இடமே இரத்த வெள்ளமாய் இருக்க, கடைசி நொடிகளுக்காக துடித்துக்கொண்டிருந்த இரு உடல்களும் ஒருவரையொருவர்தான் பார்த்துக்கொண்டிருந்தனர்.

'நீதானா அது?' என்ற கேள்வி ஜோதியின் விழிகளில் தெரிய, 'தன்னால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே!' என்ற குற்றவுணர்ச்சியோடு தன் முன்னே துடித்துக்கொண்டிருந்தவளை பார்க்க முயன்றவனுக்கு விழிநீரால் அவளுடைய முகம் மங்கலாகத் தெரிந்தது.

விழிகளை சிமிட்டி அந்நிலையிலும் பார்க்க முயன்றான் யாத்ரன்.

கொஞ்சம் கொஞ்சமாக மங்கலான அவள் முகம் தெளிவடைய, அவனுடைய விழிகளோடு சேர்த்து மனதிலும் ஆழமாக பதிந்து போனது அவளின் வதனம். 

விழிகளை நேருக்கு நேராகப் பார்த்தபடி இருவரின் உயிரும் உடலை விட்டு பிரிய, பெரிய மூச்சோடு எழுந்தமர்ந்தான் யாத்ரன்.

அவனுடைய உடல் வியர்வையில் குளித்திருந்தது. எச்சிலை விழுங்கிக்கொண்டவன் வேகமாக கட்டிலிலிருந்து இறங்கி அறை பால்கனியைத் திறந்து நின்றுக்கொண்டான்.

அப்போதுதான் கதிரவன் தன் செங்கதிர்களோடு பூமியில் பரவ ஆரம்பித்திருப்பான் போல!

கதிரவனின் வெளிச்சம் அவன் முகத்தில் பட்டுத் தெறிக்க, விழிகளை அழுந்த மூடித் திறந்தான்.

வேக மூச்சுக்களை விட்டவாறு நின்றுக்கொண்டவனின் இதழ்கள், "அது நீதானா?" என்ற கேள்வியை முணுமுணுத்துவிட்டு புன்னகைக்க, விழிகள் கலங்கின.

கண்ணீர் கன்னத்தின் வழியே உருண்டோட, அவனால் தான் கண்டதை நம்பவே முடியவில்லை.

"ஜான்சி..." அவனுடைய இதழ்கள் மீண்டும் அவன் மனைவியின் பெயரைய் முணுமுணுத்தன.

ஆம், அவன் காதலித்த அந்த கனவு தேவதை சாட்சாத் ஜான்சியே..

இந்த இடத்தில் வேறொரு பெண்ணின் முகத்தை பார்த்திருந்தால் கூட இத்தனை சந்தோஷப்பட்டிருப்பானா என்றால் அது கேள்விக்குறிதான்

"ஜான்சி... அவளேதான். நா... நான் அவளதான் காதலிக்கிறேன். ஷீட்! பக்கத்துலயே வச்சுக்கிட்டு உன்ன தேடிட்டு இருந்திருக்கேனே, நான்தான்டீ முட்டாள்! இதை யார்கிட்ட சொன்னாலும் நம்ப கூட மாட்டாங்களே... எனக்.. எனக்கு இப்போவே உன்ன பார்க்கணும். இனி நீயே சொன்னாலும் நான் உன்ன விட்டு போக மாட்டேன். ரொம்பவே ஹர்ட் பண்ணிட்டேன்ல"

வெளிப்படையாக தலையில் அடித்துக்கொண்டவன் ஒரு முடிவெடுத்தவனாக அன்றிரவே இந்தியா செல்வதற்கான டிக்கெட்டை புக் செய்தான்.

வேகவேகமாக அவன் உடைகளை அடுக்கிக்கொண்டிருக்க, சரியாக அவனுடைய அலைப்பேசி அலறியது.

ராஜ்தீப்தான் அழைத்திருந்தார். திரையைப் பார்த்தவன் சில கணங்கள் யோசித்துவிட்டு அழைப்பையேற்று காதில் வைக்க, மறுமுனையில் சொன்ன செய்தியில் அவனுக்கு சர்வமும் அடங்கிவிட்டது.

அடுத்த பத்தே நிமிடங்களில் அந்த நகரத்திலேயே பிரபலமான மருத்துவமனையில் அவன் நின்றுக்கொண்டிருக்க, தலையைத் தாங்கிய வண்ணம் தளர்ந்துப் போய் அமர்ந்திருந்தார் ராஜ்தீப்.

தீவிர சிகிச்சை அறையில் விதுஷாவுக்கான சிகிச்சை நடந்துக்கொண்டிருக்க, யாத்ரனுக்குமே உள்ளுக்குள் அத்தனை பதட்டமாக இருந்தது.

அந்த ஏசி குளிரிலும் அவனுக்கு வியர்க்க ஆரம்பிக்க, புறங்கையால் நெற்றி வியர்வையை துடைத்துக்கொண்டவன் ராஜ்தீப்பிடம் பேசச் செல்வதும் பின் தயங்குவதுமாக தடுமாறிக்கொண்டிருந்தான்.

இதுவரை அவருடன் அவன் சகஜமாக பேசியது கூட கிடையாது. 

ஆனால் இப்படியொரு நிலையில் அப்போதும் ஈகோவை இழுத்துப் பிடித்து வைக்க முடியவில்லை அவனால். ஒரு முடிவெடுத்தவனாக அவர் பக்கத்தில் சென்றமர்ந்தான் யாத்ரன்.

"அம்மா.. அம்மாவுக்கு என்னாச்சு?" அவன் தயங்கித் தயங்கிக் கேட்க, பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்தவரின் விழிகள் கலங்கியிருந்தன.

ஆடவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

'இத்தனை காதலா?' என்று அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

"ஒரு முக்கியமான கேஸ். விக்டிம் எங்க டிபார்ட்மென்ட்லதான் இருந்தான். கொஞ்சம் கேர்லெஸ்ஸா இருந்துட்டோம். அவன் தப்பிச்சு போக ட்ரை பண்றப்போ அவன பிடிக்குறதுக்காக விது தான் முன்னாடி போயிட்டா. அவன் கையில ஒரு ஆஃபீசரோட பிஸ்டல் இருந்திருக்கு. ஷூட் பண்ணிட்டான்"

சம்பவத்தை நினைவுக் கூர்ந்து அழுகையை அடக்கிய குரலில் திக்கித் திணறியபடி அவர் சொல்லி முடிக்க, தலைமுடியை அழுந்தக் கோதி கோபத்தை கட்டுப்படுத்தினான் யாத்ரன்.

சில மணிநேரங்கள் சிகிச்சைக்குப் பின் வெளியில் வந்தார் மருத்துவர்.

"புல்லெட் வயித்து பக்கமா இருந்ததால அவங்கள காப்பாத்த முடிஞ்சது. கொஞ்சம் மேல ஷூட் பண்ணியிருந்தா, இட் வில் பீ வெர்ரி க்ரிட்டிக்கல். இப்போ ஆப்செர்வேஷன்ல இருக்காங்க, ஆஃப் அன் ஹவர்ல கான்சியஸ் வந்ததும் போய் பாருங்க" என்றுவிட்டு செல்ல, போன உயிர் திரும்பி வந்தது போல உணர்ந்தார் ராஜ்தீப்.

யாத்ரனுக்கு அத்தனை சந்தோஷம். அந்த மகிழ்ச்சி கண்ணீராக வெளிப்பட ராஜ்தீப்பை தன்னை மறந்து அணைத்துக்கொண்டான்.

"அம்மாக்கு ஒன்னு இல்லப்பா, இப்போதான் நிம்மதியா இருக்கு" என்று அவன் உணர்ச்சிகளை கொட்டிவிட, பெரியவரோ இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.

மனைவி உயிர் பிழைத்தது சந்தோஷம் என்றால் இது அதற்கும் மேல் ஆனந்தம் கலந்த அதிர்ச்சியாக இருந்தது.

அவனை அணைத்துக்கொண்டவர், "எனக்கும்தான்ப்பா..." என்று சொன்னதோடு அழுதேவிட, அவரின் குரலிலிருந்த தழுதழுப்பை உணர்ந்தவன் அப்போதுதான் தான் செய்வதை உணர்ந்தான்.

ஆனால் விலக முற்படவில்லை. சிறிய புன்னகையோடு அவருடைய அணைப்பில் அவன் நின்றிருக்க, அரைமணி நேரம் கடந்தது.

விதுஷா கண் முழித்ததாக தாதி வந்து சொன்னதுமே முதலில் செல்லப் போன யாத்ரன் பின் ராஜ்தீப் சிகிச்சை அறையை ஏக்கமாக பார்ப்பதை உணர்ந்து அவரை போகச் சொல்ல, தன் காதல் மனைவியைக் காண ஓடிச் சென்றார் பெரியவர்.

அவர் பேசிவிட்டு வரும் வரை சுவற்றில் ஒற்றைக் காலை மடக்கி சாய்ந்திருந்தவன் பெரியவர் வெளியில் வந்ததும் உள்ளே செல்லப் போய் பின் தயங்கி நின்றான்.

அன்று தாயிடம் அவன் பேசிய வார்த்தைகள்தான் அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது.

இப்போது எப்படி அவர் முகத்தைக் காணுவதென்ற குற்றவுணர்ச்சி அவனுக்குள்.

கைகளைப் பிசைந்தபடி அவன் அறை வாசலில் தயங்கி நிற்க, "யாத்ரா போப்பா, விது உன்னதான் கேட்டா, சீக்கிரம் போய் பேசு" என்று அவன் தோளில் ஆறுதலாக கையை வைத்து சொன்னார் ராஜ்தீப்.

அவருடைய வார்த்தைகளை கேட்டதும்தான் தயக்கமின்றி உள்ளே சென்றவன் விதுஷா விழிகளை மூடியிருப்பதைப் பார்த்து தயங்கித் தயங்கி உள்ளே சென்றான்.

"ஹ்ர்ம் ஹ்ர்ம்... மாம்..." அவன் மெல்ல அழைக்க, கஷ்டப்பட்டு விழிகளைத் திறந்துப் பார்த்தவரோ மகனைப் பார்த்ததும் புன்னகைக்க, அவனுக்கு அழுகைதான் வந்தது.

இத்தனைநேரம் அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்து வெளியில் வர, சிறு பிள்ளையாய் தாயிடம் அழுத வண்ணம், "ஐ அம் சாரிம்மா" என்று கேட்டான் கலங்கிய குரலில்.

விதுஷாவின் விழிகளிலிருந்தும் கண்ணீர் ஓடியது.

"நான்தான் யாத்ரா சாரி கேக்கணும், ஒரு அம்.. அம்மாவா நான் இருக்கல. என்.. என்னை மன்.. மன்னிச்சிரு! இது கூட எனக்கான பனிஷ்மென்ட்தான் போல..." அவர் குற்றவுணர்ச்சியோடு சொல்ல, அழுதுக்கொண்டே வேகமாக இல்லையென தலையாட்டினான் அவன்.

"நோ ம்மா, நான்தான், நான்தான் சாரி சொல்லணும். உங்களயும் ஹர்ட் பண்ணேன், அவளையும் ஹர்ட் பண்ணேன்" அழுகை தொண்டையை அடைக்கவும் அவன் வார்த்தைகளை நிறுத்திக்கொள்ள, "ஜான்சி..." என்று யோசனையோடு இழுத்தார் விதுஷா.

யாத்ரனோ தாயின் கரத்தை தன் விழிகளோடு பொத்திக்கொண்டு எதுவும் பேச முடியாமல் அப்படியே இருக்க, விதுஷாவும் எதுவும் பேசாமல் அமைதியாக அவனையே பார்த்திருந்தார்.

சில நிமிடங்கள் கடந்தன.

"யூ.. யூ லவ் ஹெர் ரைட்?" என்று அவர் கேட்டதும், அதே நிலையில் நின்றுக்கொண்டு தலையாட்டியவன், விழிகளைத் திறந்து, "ஆமா ம்மா, ஐ லவ் ஹெர்" என்றான் காதலோடு.

விதுஷாவோ சில கணங்கள் யோசித்தவர் பின் புன்னகையோடு, "நீ ஹேப்பியா இருந்தாலே போதும் எனக்கு" என்று மனதார சொல்ல, அவனுக்குமே அத்தனை சந்தோஷம்.

அன்றிரவு இந்தியா செல்வதற்கான டிக்கெட்டை கேன்சல் செய்தவன் அடுத்த நான்கைந்து நாட்கள் ராஜ்தீப்போடு சேர்ந்து விதுஷாவை கவனித்துக்கொண்டான்.

இத்தனை வருடங்கள் பேசிக்கொள்ளாத பலவற்றை பேசிக்கொண்டனர் அந்த தாயும் மகனும்.

அவனின் சிறுவயதில் உடன் இருக்க முடியவில்லையே என்ற ஒரு வலி மனதினோரத்தில் இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு நிகழ்கால சந்தோஷத்தை அனுபவித்தார் விதுஷா.

கிட்டத்தட்ட ஒரு வாரம் கழிந்துவிட்டது.

அதற்குமேல் காத்திருக்க முடியாமல் அன்றே தாய் தந்தையிடம் சொல்லிவிட்டு இந்தியாவை நோக்கி யாத்ரன் பயணத்தை ஆரம்பிக்க, அதேநேரம் ஜான்சியின் வீட்டில்...

கணவன் இங்கிருந்து சென்றதிலிருந்து உயிரற்ற ஜடம் போல் திரிந்துக்கொண்டிருந்தாள் அவள். 

அவளுடைய இயல்பு குணம் மரத்துப் போயிருக்க, அவளுடைய பழைய புன்னகை அவளிடம் இல்லை.

இதை அர்ச்சனாவும் ருக்மணியும் அறியாமல் இல்லை. ஆனால், அவளிடமிருந்து தெரிந்துக்கொள்வது தான் பெரும் பாடாக இருந்தது.

ஜான்சி ஜன்னல் வழியே வெளியே வெறித்தபடி நின்றிருக்க, மகளை சற்றுநேரம் கூர்மையாகப் பார்த்திருந்த அர்ச்சனா, மெல்ல பேச்சை ஆரம்பித்தார்.


***********


என்னோட கதைகள ஆடியோ வடிவுல கேக்கணும்னா இதோ என்னோட யூடியூப் சேனலுக்கான லிங்க்..  

இப்போ காதல்போதையடா நீ எனக்கு நாவல் ஆடியோ வடிவுல போயிக்கிட்டு இருக்கு... மாயா என்ட் ரோஹன் இப்போ ஆடியோ வடிவுல

Channel name - kadhaikulla polaama

channel link 👇


-Shehazaki 🙌


Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚